எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 30, 2018

இருமுடிகட்டு சபரிமலைக்கே!





இருமுடி கட்டிய பின்னர் நிவேதனம் செய்கிறார் குருசாமி.

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, மஹாநிவேதனம் சாதம், பருப்பு


தூப, தீப ஆராதனைகள் முடித்துக் கீழே கற்பூர ஆராதனை காட்டுகிறார்.


கற்பூர தீபம் ஸ்வாமிக்கே! நெய்யபிஷேஹம் ஸ்வாமிக்கே! ஸ்வாமியே சரணம் ஐயப்பா!


வெள்ளியன்று பையர் ஹூஸ்டனில் இருந்து வந்து சேர்ந்தார். அவர் மட்டும் தனியாக வந்திருப்பதால் ஒரே வாரம். அதுவும் சபரிமலைப் பயணத்துக்காகவே. இதுக்கு முன்னர் பத்து வருஷம் முன்னாடி இதே போல் போனார். அப்போ நம்ம ரங்க்ஸும் போனார். இப்போ இது திடீர்ப்பயணம்! மாலை போட்டுக்கொண்டது என்னமோ கார்த்திகை ஒன்றாம் தேதியே! அங்கேயே மாலை போட்டுக்கொண்டு அங்கேயே கோயிலில் தங்கி இருமுடியை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அங்கே குருவாயூரப்பன் கோயிலிலும், மீனாக்ஷி கோயிலிலும் இருமுடி இறக்குபவர்களுக்குத் தக்க ஏற்பாடுகள் செய்கின்றனர். அப்படித் தான் செய்து கொண்டிருந்தார். குஞ்சுலு பிறந்த வருஷம் கூட நாங்க போனப்போ அப்படித் தான் குருவாயூர் கோயிலில் இருமுடி இறக்கிவிட்டு வந்தார். ஆனால் குஞ்சுலுவுக்காகப் பிரார்த்தனை இருந்ததால் போன வருஷம் போக முடியாது என்பதால் இந்த வருஷம் மலைக்குப் போகலாம்னு முடிவெடுத்தார்.


ஆனால் அங்கே அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளினால் பல ஐயப்பன் சாமிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்றெல்லாம் சொன்னதால் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. அதோடு கேரள மழையினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்! சாலை வசதிகள் எப்படியோ என்றெல்லாம் யோசனை! அப்புறமா இங்கே ஐயப்ப சேவா சங்கத்தைத் தொடர்பு கொண்டோம். அவங்க மூலம் தகவல்கள் சேகரித்துக் கொண்டு பையருக்குத் தெரியப்படுத்தினோம். அவரும் அவ்வப்போது செய்திகளை ஆன்லைனில் பார்த்துக் கொண்டு வந்தார். அப்படியே ஆன்லைனில் தரிசனத்துக்கு நேரம் கேட்டப்போ டிசம்பர் 31 ஆம் தேதி காலை ஆறுமணிக்குக் கொடுத்திருக்காங்க. அதுக்கப்புறமாத் தான் டிக்கெட்டே வாங்கினார். எல்லா ஏர்லைன்ஸும் போட்டி போட்டுக்கொண்டு விலையை உயர்த்தி இருந்தன. அதனாலும் எல்லோரும் வர முடியலை! அவருக்கு மட்டும் ஃப்ரெஞ்ச் ஏர்லைன்ஸில் கிடைச்சது.

இன்னிக்கு இந்த ஊர் ஐயப்ப சேவா சங்கத் தலைவரைக் கூப்பிட்டு இருமுடி கட்டச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்படி குருசாமியும் வந்து இருமுடிக்கு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி இருமுடி கட்டினார். அதன் பின்னர் நிவேதனம் செய்து ஐயப்பனுக்கும் தீப ஆராதனை காட்டிப் பூஜையை முடித்துக் கொண்டு சாப்பிட்டு விட்டுப் பையர் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கார். நாளை தரிசனம் முடிந்து நாளை இரவு வரலாம். அதோடு இங்கே குடியிருப்பு வளாகத்தில் இன்றைய தினம் புது வருஷ வரவேற்பு நிகழ்ச்சிகள்! சாப்பாடு எல்லாம் இருக்கிறது. ஆனால் நாங்க சாப்பிட மாட்டோம். ஜனவரி 3 ஆம் தேதி மாமியார் ச்ராத்தம். அதனால் ஒரு மாசமாவே வெளியே சாப்பிடுவது இல்லை. உறவினர்கள் வேறே வராங்க! இரண்டு நாள் தான் தங்கப் போறாங்க என்றாலும் அவங்களைக் கவனிக்கணும். பின்னர் ச்ராத்தம்! அதன் பின்னர் 5 ஆம் தேதியே பையர் அம்பேரிக்கா கிளம்பறார். அதனால் ஆறு தேதி வரைக்கும், (இந்த வாரம் முழுவதும்) வேலை மும்முரம். அவ்வப்போது தலை காட்டுவேன். யாரும் கண்டுக்க மாட்டீங்க என்னும் நம்பிக்கையுடன்! இஃகி, இஃகி,   ஆங்கிலப் புத்தாண்டும் கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சிலர் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆகவே கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள். கொண்டாடினாலும் கொண்டாடாவிட்டாலும் அனைவருக்கும் புத்தாண்டு மனதுக்கு இனியதாகவும், அனைவர் வாழ்விலும் வளமும் அமைதியும் நிம்மதியும் சேர்க்கும்படியும் அமையப் பிரார்த்தனைகள்.

Thursday, December 27, 2018

வையாளி சேவை காண வாருங்கள்!



இந்தச் சுட்டியில் வையாளி சேவையை மட்டும் பார்க்கலாம். நம்பெருமாளைக் க்ளோஸ் அப்பில் காட்டுகையில் அவர் முகத்தைப் பார்த்தால் அதில் காணும் சிரிப்பு நம்மை பரவசப்படுத்தும். உண்மையில் அவரை ஓர் விக்ரஹமாக எண்ணத் தோன்றாது. நிஜம்மாகவே எதிரே நின்று பார்த்துச் சிரிப்பது போலவே இருக்கும். இந்த யூ ட்யூபிலும் க்ளோஸ் அப்பில் காட்டும்போது பாருங்கள்! பரவசம் அடையுங்கள்!

முந்தாநாள் எங்க ஊரில் வரும் கேபிள் தொலைக்காட்சியில் ஶ்ரீரங்கம் கோயிலில் நடந்த வேடுபறி நிகழ்ச்சி பார்த்தோம். ஆயிரக்கால் மண்டபத்துக்கு அருகே உள்ள பிரகாரத்தில் நடந்தது. முதலில் நம்பெருமாள் வையாளி சேவை கண்டருளினார். அதை எங்களால் முழுதும் பார்க்க முடியவில்லை.  வையாளி சேவை குறித்துப் பழம்பாடல் ஒண்ணு எங்கோ படிச்சது அரைகுறை நினைவு.

வையாளி நடையும், ஒய்யாரக் கொண்டையும் மெய்யாகவே சிறு பையனைப் போல் ஒய்யாரமாகவே ஐயன் வருகிற உல்லாச சேவை என் சொல்லுவேனடி”


இந்த வையாளி சேவைப்படம், சேர்த்தி வைபவத்தின் போது உள்ளது. இப்போதைய படம் கிடைத்தால் போடறேன். ஆனாலும் வையாளி சேவை என்றால் தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் ஏறிக்கொண்டு சுற்றிச் சுற்றி வருவார்.  நான்கு திசைகளிலும் சுற்றி வருவார். அதன் பின்னர் ஓர் இடத்தில் பெருமாளை நிறுத்திவிட்டு ஶ்ரீபாதம்தாங்கிகள் பல்லக்கைச் சுமந்து கொண்டு நிற்பார்கள். இனி அடுத்து வேடுபறி. இது திருமங்கை ஆழ்வாரைப் பெருமாள் ஆட்கொள்ளும் நிகழ்ச்சி. ஓர் திருடனாக வழிப்பறிக்கொள்ளை செய்து அதன் மூலம் அன்னதானம் செய்து வந்த திருமங்கை மன்னன் ஓர் கல்யாண கோஷ்டி காட்டிலே கடந்து கொண்டிருப்பதை அறிந்து அவர்களைக் கொள்ளை அடிக்க வருகிறான். கல்யாணப் பெண்ணும், மாப்பிள்ளையும் வேறு யாரும் இல்லை. பெருமாளும், மஹாலக்ஷ்மியும் தான்! அவர்களின் ஆடை, ஆபரணப் பெட்டிகளைக் கொள்ளை அடித்துத் தன் கூட வந்தவர்களிடம் கொடுத்தனுப்பிய திருமங்கை மன்னன் மணமக்கள் அணிந்திருந்த ஆபரணங்களையும் கழட்டித் தரச் சொல்ல தாயார் அனைத்து நகைகளையும் கழட்டிக் கொடுத்துவிட்டு நின்றாள்.

நாராயணனும் கழட்டுகிறார். ஆனால் காலில் உள்ள மெட்டி மட்டும் கழட்ட வரவில்லையாம். அந்தக் காலங்களில் மாப்பிள்ளைக்கும் திருமணம் ஆகிவிட்டது என்பதைக்குறிக்கக் காலில் மெட்டி அணிவிப்பார்கள். இதைத் தான் கால்கட்டு என்றார்களோ என்னமோ. அந்த மெட்டியைத் தான் கழட்ட முடியாதது போல் நம் பெருமாள் நடிக்க திருமங்கை மன்னனுக்குக் கோபம் வருகிறது. பெருமாள் கிட்ட வந்து அவனும் கழட்டப் பார்த்துக் கழட்ட முடியாமல் அவர் காலைத் தூக்கித் தன் பல்லால் அதைக் கழட்ட முயல்கிறான். கொடுத்து வைத்தவன். இந்தத் தருணத்திற்காகத் தானே காத்திருந்தார் பெருமாள்! உடனே குனிந்து அவன் காதில் ஓம் நமோ நாராயணாய! என்று ஓத திருமங்கை மன்னனுக்கு வந்தது யார் எனப் புரிகிறது. தான் இத்தனை பாக்கியம் செய்தவனா என்னும் எண்ணமும் ஏற்பட்டு அன்றில் இருந்து ஓர் ஆழ்வாராக மாறி ஊர் ஊராக எல்லா திவ்ய தேசங்களுக்கும் சென்று பெருமாளைப் போற்றித் துதிக்கிறார். இந்நிகழ்ச்சி தான் இங்கே ஶ்ரீரங்கத்தில் இராப்பத்து உற்சவத்தின் போது நடித்துக் காட்டப்பட்டது. 

திருமங்கை மன்னனின் வம்சாவளியைச் சேர்ந்தோர் இப்போதும் தெப்பக்குளம் நெடுந்தெருவிலிருந்து வாண வேடிக்கை, மேள,தாளத்துடன் ஓர் குழந்தையைத் திருமங்கை மன்னனாகப் பாவித்து வேடம் கட்டி அழைத்து வருகின்றனர். நம்பெருமாளைக் கம்புகளுடனும், வேல்களுடனும் சுற்றிச் சுற்றி வந்து கொள்ளை அடிப்பதாகப் பாவனை செய்து பின்னர் பெரும்பெட்டிகளைத் தூக்கிச் செல்கின்றனர். அதன் பின்னர் கால் மெட்டியைக் கழட்டும் காட்சி. திருமங்கை மன்னனைப் பெருமாள் ஆட்கொள்ளும் காட்சி. அதன் பின்னர் ஒவ்வொரு ஆழ்வாராக மரியாதைகள் செய்யப்பட்டுச் சென்றனர். அரையர்கள் வந்து சேவை சாதிக்க ஆரம்பித்தனர். அப்போது கொஞ்சம் நேரம் ஆகிவிட்டபடியால் நான் தூங்கச் சென்று விட்டேன்.

நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில்நம்ம ரங்க்ஸுக்கு ஒரு சந்தேகம். அது ஏன் பெருமாளின் பல்லக்கைத் தூக்கி வைத்துக் கொண்டே அவரைத் தாலாட்டிக் கொண்டே நிற்கின்றனர்? கீழேயும் வைப்பதில்லை. எத்தனை நேரம் தூக்கிக் கொண்டே நிற்கின்றனர்? ஆயக்கால் போட்டாவது நிறுத்தலாமே! என்பது. அப்போத் தான் எனக்கு ஒரு சமயம் திருவேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் சொன்னது நினைவில் வந்தது. அதோடு சமீபத்தில் வாட்சப்பிலோ, முகநூலிலோ கூடப் பகிர்ந்திருந்தனர். பெருமாளைத் தூக்குவது பாரம் என ஶ்ரீபாதம் தாங்கிகள் (பல்லக்குத் தூக்குபவர்கள்) நினைக்க மாட்டார்களாம். அப்படி நினைத்தால் அது அபசாரமாம். அதோடு இல்லாமல் அவர்கள் இந்தப் பல்லக்குத் தூக்க வேண்டிப் பயிற்சி எல்லாம் எடுத்துப்பாங்களாம். அது எப்படி எனில் முதலில் வலுவான உடல் கட்டமைப்பு உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவங்களுக்கு எந்தத் தோள்பக்கம் வசதி என்பதைக்கண்டறிவார்களாம்.  அவர்கள் உயரங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் பெருமாளின் பல்லக்கான "தோளுக்கு இனியானை"க் கொடுத்து அதைத் தூக்கிக் கொண்டு கொள்ளிடம்/காவிரி மணலில் நடக்கச் சொல்லிப்பயிற்சி! அப்போதே ஒவ்வொரு கதிக்கும் எவ்வாறு நடக்கவேண்டும் என்பதும் சொல்லிக் கொடுப்பார்களாம். அது என்ன கதி எனக் கேட்கிறீர்களா?

நம்பெருமாள் அதிகம் ஆரோகணிப்பது தோளுக்கு இனியானிலே தான். பல்லக்குத் தூக்குபவர்களையும் ஶ்ரீபாதம் தாங்கிகள் என்றே அழைப்பார்கள். புறப்பாட்டின் ஆரம்பத்தின் போது கருடன் எப்படிச் சிறகை விரித்துப் பறக்க ஆரம்பிக்கிறதோ அப்படி நடப்பார்களாம். இதை கருட கதி என்பார்களாம்.  சரி, புறப்பட்டுச் சட்டெனெ வெளியே வந்துவிடுவாரா? முடியாது அல்லவா? அப்போது ஒரு சிங்கம்  எப்படி குகையில் இருந்து வெளியே வந்து எதிரிகள் இருக்கிறார்களா என்பதைக் கவனித்துவிட்டு சிங்கநடை போட்டு குகையில் இருந்து வெளியேறுகிறதோ அது போல இருபக்கங்களிலும் பார்த்துவிட்டு சிங்க கதியில் நடப்பார்கள். அநேகமாய் கர்பகிரஹத்தில் இருந்து வெளியே எடுக்கைய்ல் சிம்ம கதியில் இருக்கும் என்பார்கள். இதை அடுத்து மேலும் கவனமாகச் செல்ல வேண்டும். வேட்டைக்குச் செல்லும் புலி முதலில் இரண்டு, மூன்று அடி எடுத்து வைத்துவிட்டுப் பின்னர் தயங்கி நிற்கும். மறுபடி முன்னே செல்லும். நிற்கும். பின்னர் செல்லும். அதன் பின்னர் வேட்டையின் மீது ஒரே பாய்ச்சல் தான். அது போல பெருமாள் இங்கே ஶ்ரீபாதம் தாங்கிகளால் சுமக்கப்பட்டு முதலில் கொஞ்ச தூரம் செல்வார்கள். நிற்பார்கள். பின்னர் மறுபடி செல்வார்கள். நிற்பார்கள். இதை வியாக்ர கதி என்பார்கள். 

இதை அடுத்துப் பெருமாள் மேலும் உலாவில் துரிதமாகக் கிளம்புவதை  ரிஷப கதி எனவும் நடுவே யானை போல் நடப்பதை கஜகதி எனவும் சொல்லுவார்கள். இப்படி எல்லாம் நடந்து கொண்டு தான் ஶ்ரீபாதம் தாங்கிகள் பெருமாளைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இது பெருமாளோடு மட்டும் நிற்காது. கூடவே அரையர் ஸ்வாமிகளும், அந்த ஆட்டத்திற்கு ஏற்றாற்போலவே பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் செல்ல, ஆலவட்டம் சுமப்போர், தீவர்த்தி சுமப்போர், குடை பிடிப்போர், வெள்ளித்தடி ஏந்துவோர் அனைவருமே இம்மாதிரியான கதிகளில் ஆடிக்கொண்டு தான் செல்வார்கள். செல்ல வேண்டும். புறப்பாடு முடிந்து திரும்பி வந்ததும் கர்பகிரஹத்தினுள் நுழைகையில் பாம்பு தன் புற்றுக்குள் திரும்பும்போது தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டுச் சட்டென உள்ளே நுழைவதைப் போல் நுழைவார்களாம். இதை சர்ப்பகதி என்பார்கள்.  உள்ளே நுழைந்ததும் பெருமாளை அவர் இருப்பிடத்தில் அமர வைப்பதை ஹம்சகதி என்பார்கள். அவ்வளவு அழகான நடையில் இருக்குமாம் அது.

இதே போல் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாள் வீதி உலா வரும்போதெல்லாம் அதற்கேற்ப நடைகள் மாறும். சேஷ வாஹனம், ஆனை வாஹனம், கற்பக விருக்ஷம், பசு வாஹனம் என ஒவ்வொரு வாஹனத்தின் போதும் ஶ்ரீபாதம் தாங்கிகள் அந்த அந்த வாஹனங்களுக்கு ஏற்ற நடையில் நடக்க வேண்டும். அதனால் தான் வையாளி சேவை நடக்கும் குதிரை வாஹனத்தில் பெருமாள் வீற்றிருக்கையில் முதலில் இரண்டு நடை வேகமாகக் குதிரையைப் போல் செல்வார்கள். பின்னர் இடப்பக்கம் ஒரு சுற்று, அதன் பின்னர் வலப்பக்கம் ஓர் சுற்று, பின் மீண்டும் இரண்டு நடை வேகமான நடை! இப்படிச் செல்வார்கள். இத்தனைக்கும் உண்டான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு இவர்கள் ஶ்ரீபாதம் தாங்கிகளாக நல்லபடி சேவை செய்வார்கள் என்பது நிர்வாகத்திற்குத் திருப்தி உண்டானால் தான் அவர்கள் ஶ்ரீபாதம் தாங்கிகளாக நியமனம் ஆவார்கள். 

Tuesday, December 25, 2018

கல்யாண சாப்பாடு சாப்பிடவா?

இப்போத் தான் சாப்பாடு பத்தி எழுதினேன்னா இன்னிக்கும் அதே தான்! போன வாரம் ஒரு கல்யாண வரவேற்புக்குப் போயிருந்தோம். திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் தாண்டி கரூர் பைபாஸ் சாலையில் இருந்தது அந்தக் கல்யாண மண்டபம். மிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மண்டபம். உள்ளே நுழையும்போதே வெளியே கூடாரம் போல் துணிகளால் அலங்கரிக்கப்பட்டித் தரை முழுவதும் சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. கீழே இறங்கினதும் எனக்கே நான் ஏதோ ராணியோனு நினைப்பு வந்துவிட்டது! ஆனால் ராணி இல்லை என்பதைக் கீழே கம்பளம் தடுக்கியதும் மண்டையில் ஏறியது. உள்ளே நுழையும்போதே ஜூஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வரவேற்க இரு பெண்மணிகள். அதிலே ஒருத்தரோட பிள்ளைக்குத் தான் திருமண வரவேற்பு. ஜுஸ் குடிங்கனு சொன்னாங்க. வேண்டாம்னு சொல்லிட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் ஹாலுக்குப் போனோம். ஹாலா அது! பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாண்டம்! சென்னையில் கூட இத்தனை பெரிய ஹால் பார்த்ததில்லை. அப்போ என்ன நினைப்பு வந்ததுன்னா, அட நாம சென்னையை விட்டு வந்தப்போ திருச்சியிலே என்ன இருக்குனு அங்கே போறாங்கனு எல்லோரும் நம்மளைக் கேட்டாங்களே, இந்த ஹாலைப் பார்த்தா என்ன சொல்லுவாங்க என நினைத்துக் கொண்டேன். நுழையும் இடத்திலேயே பஞ்சு மிட்டாய் கொடுத்துட்டு இருந்தாங்க. சாப்பிட ஆசையா இருந்தாலும் நம்மவர் என்ன சொல்வாரோ என்னும் எண்ணத்தில் கண்ணையும், மனசையும் அங்கே விட்டுட்டு உள்ளே போனோம். ஏழு மணிக்கு வரவேற்பு ஆரம்பம்னு போட்டிருந்தது. ஏழு மணிக்கு மேல் ஆகியும் இன்னும் பெண்ணும், மாப்பிள்ளையும் வரவில்லை. சற்று நேரம் உட்கார்ந்திருந்தோம். தெரிந்தவர்கள் யாரும் இல்லை. போரடிச்சது. திடீர்னு நம்ம ரங்க்ஸ் பஞ்சு மிட்டாய் வேணுமானு கேட்டார். வேணும்னு சொன்னதும் போய் இரண்டு வாங்கி வந்தார். அதைக் கொஞ்ச நேரம் மெதுவாச் சாப்பிட ஆரம்பித்தேன்.

திடீர்னு தூக்கிவாரிப்போட என்ன சப்தம்னு பார்த்தால் லைட் ம்யூசிக் குழுவினர் தங்கள் கச்சேரியை ஆரம்பிச்சுட்டாங்க! ரங்க்ஸ் ஏதோ கேட்க, நான் ஏதோ சொல்ல ஏதோ ஊமைப்படம் மாதிரி நடந்தது. அதுக்குள்ளே பெண்ணும், மாப்பிள்ளையும் வர அங்கே மேடையில் ஒரு ஃபோட்டோ செஷன் நடந்தது. அதைப் பார்க்கையிலேயே திடீர்னு எனக்கு ஏதோ தோன்ற நம்மவரைக் கிளப்பிக் கொண்டு மேடைக்கு அருகில் வந்து நின்றேன். ஃபோட்டோ செஷன் முடிஞ்சதும் முதல் ஆளாப் போய்ப் பரிசைக் கொடுத்துட்டுக் கீழே இறங்கினோம். அதுக்குள்ளாக மேடைக்கு அருகே வரிசை கட்டி நிற்க ஆரம்பித்த விருந்தினர் கூட்டம் வால் போல் நீண்டு கொண்டிருந்தது. இதை நினைவில் வைத்துத் தான் அவசரம் அவசரமாப் போய் யாரும் வரும் முன்னே கொடுத்துட்டு வந்தோம்.

அப்புறமாச் சாப்பிடணுமே! அது எங்கேனு கேட்டதுக்குக் கீழேனு சொன்னாங்க. கீழே இறங்கி வந்தோம். சாப்பிடும் கூடமும் ஒரே நேரத்தில் 200 பேருக்கு மேல் சாப்பிடலாம். அப்போத் தான் ஒரு வரிசை உட்கார்ந்திருக்கிறது! கழிவறைக்குப் போய்விட்டுக் கைகளைக் கழுவிக்கலாம்னு போனோம். இருந்தது ஒன்றே ஒன்று! கண்ணே கண்ணு! ஏற்கெனவே ஒருத்தர் குடியிருக்க 2 பேர் சீனியாரிடியில் இருந்தனர். வேறே இல்லையானு கேட்டதுக்கு ஒரு வேளை மாடியில் இருக்கலாம். ஆனால் அங்கேயும் ஒன்று தான் இருந்தாப்போல் நினைவுனு சொல்லவும் ஙே என விழித்தோம். வேறு வழியில்லாமல் காத்திருக்க எங்களுக்குப் பின்னால் வரிசை நீண்டது. ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு சாப்பிட வந்தால் அதுக்குள்ளாக ஒரு வரிசையில் இரண்டு பந்தி முடிஞ்சு இரண்டாம் பந்திக்கு இலை போடறாங்க. எங்களை ஏற்கெனவே பரிமாறி வைச்சிருந்த ஒரு வரிசையிலே போய் உட்காரச் சொன்னாங்க.

சரினு போய் உட்கார்ந்தோம். ஓர் வட இந்திய பால் சேர்த்த ஸ்வீட். பார்க்க ஸ்டஃப்ட் ஜாமூன் மாதிரி இருந்தாலும் அது இல்லை. வெங்காயப் பச்சடி, சில துண்டுகள் உ.கி. வறுவல், ஊறுகாய்.  போய் உட்கார்ந்ததும் முதலில் இடியாப்பம்னு கொண்டு வந்தாங்க. அதுக்குத் தொட்டுக்கத் தண்ணியா ஒரு பூண்டுக் குழம்பு. அதான் பாயானு சொல்வாங்களோ! தெரியலை! அதைச் சாப்பிட ஆரம்பிப்பதற்குள்ளாக ஒருத்தர் வெஜிடபுள் புலவ், அதைத் தொடர்ந்து ஏதோ கூட்டு வர, இன்னொருவர் கேட்காமலேயே சாம்பார் சாதத்தைப் போட்டுக் கொண்டு போனார். அதற்கு ஏதோ ஒரு கறி.  பின்னாலேயே ஒருத்தர் அடை, அவியல் எனக் கொண்டு வர, ஒருத்தர் உ.கி. போண்டா என்ற ஒன்றைக் கொண்டு போட்டார்.  எதைச் சாப்பிடுவது என யோசிப்பதற்குள்ளாகச் சப்பாத்தியும், சனாவும் வர ஒண்ணுமே புரியலை!

மெதுவாக உ.கி. போண்டாவைப் பிய்த்தால் அதிலே உ.கி.யே வைக்க மறந்திருக்காங்க போல! நம்ம ரங்க்ஸைக் கேட்டால் அவருக்கும் அப்படியே. அதை அப்படியே வைச்சுட்டு இடியாப்பத்தைப் பிய்க்கலாம்னு பார்த்தால் ரப்பர் மாதிரி இழுக்குது! அதை ஒருவழியாப் பிய்ச்சு ஒருவாய் போட்டுக்கலாம்னு நினைப்பதற்குள்ளாக ஒருத்தர் வந்து ரொம்பவே வினயமாகத் தயிர்சாதம்போடவானு கேட்டார். நம்ம ரங்க்ஸிடம் கேட்டார் முதல்லே. அவர் தான் காந்தியோட மறு அவதாரம் ஆச்சே! ஆகவே பொறுமை காத்தார். நமக்கெல்லாம் பொறுமை என்பதே இல்லை என்பதால் நான் அவரிடம் இதை எல்லாம் நாங்க சாப்பிட வேண்டாமா? இப்போ இலையிலே எங்கே தயிர்சாதத்தைப் போடுவீங்க? னு கோபமாக் கேட்டேன். மறைமுகமா எங்க தலையிலானு நினைச்சுண்டேன்.

அவர் என்ன நினைச்சுண்டாரோ போயிட்டார். அப்புறமா எங்க பக்கம் யாருமே வரலை. அப்பாடி கொஞ்சம் நிம்மதினு சாப்பிட முடிந்த உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தோம். சப்பாத்தி தென்னிந்திய முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததால் விரட்டி மாதிரி இருந்தது. ஆகவே அதையும் இடியாப்பத்தையும் ஒதுக்கிட்டு அடையைச் சாப்பிட்டால் முழுதும் கடலை மாவு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் போண்டாமாவிலேயே அடைனு வார்த்திருப்பாங்க போல! சரினு வெஜிடபுள் புலவை வெங்காயப் பச்சடியோட சாப்பிட்டுட்டு, சாம்பார் சாதத்தையும் சாப்பிட்டுவிட்டு மற்றவற்றை ஒதுக்கிட்டுத் தயிர்சாதம் கேட்டு வாங்கிக் கொண்டு சாப்பிட்டோம். பின்னர் கைகழுவிக் கொண்டு வெளியே வந்தால் பாதாம் பால்! அதில் பாதாமைத் தேட வேண்டி இருந்தது. கடைசியில் எல்லாம் முடிந்து வெளியே வந்தால் ஐஸ்க்ரீம், குலாப்ஜாமூனுடன். நாம தான் இதுக்கெல்லாம் பக்கியாட்டமாப் பறப்போமே! உடனே போய் ஐஸ்க்ரீமையும் ஜாமூனையும் வாங்கிக் கொண்டேன். ஜாமூன் கடலை எண்ணெய்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஐஸ்க்ரீம் நல்லா இருந்தது. அதைச் சாப்பிட்டுட்டு இன்னொரு கோர்ஸ் போகலாமானு யோசிச்சால் பக்கத்தில் ரங்க்ஸைக்காணோம். திடுக்கிட்டுப் பார்த்தால் வெளியே ஆட்டோவைத் தேடிக் கொண்டு நிக்கறார். அது சரியாப் போச்சு போ! என நினைத்துக் கொண்டு அரை மனசாகக் கிளம்பி வந்தேன். ஆட்டோ பிடித்து வீட்டுக்கு ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தோம்.வந்ததும் பசித்தது! :))))))))))

Sunday, December 23, 2018

களி சாப்பிடுங்க, அப்புறமா வரேன்!







திருவாதிரை கொண்டாடியாச்சு! இனி அடுத்து நம்ம ஆஞ்சுவிற்குத் தான்! ஜனவரி ஐந்தாம் தேதினு நினைக்கிறேன்.


Saturday, December 22, 2018

ஆடுகின்றானடி தில்லையிலே

Nataraja க்கான பட முடிவு


நட்சத்திரங்களிலே திருவோணத்துக்கும், திரு ஆதிரைக்கும் மட்டுமே திரு என்ற அடைமொழி. இரண்டுமே முறையே மகாவிஷ்ணுவுக்கும், சிவனுக்கும் உரிய நட்சத்திரங்கள். உடனே அவங்க அந்த நட்சத்திரத்திலே தான் பிறந்தாங்களா என்ற கேள்வி எழும். அப்படி எல்லாம் இல்லை. இந்த மார்கழி மாதப் பெளர்ணமி தினத்தன்று ஈசன் ஆனந்தத் திருநடனம் புரிந்ததாகவும், சிரவண மாதத்துத் திருவோணத்தன்று பெருமாள் தன் விஸ்வரூபத்தை மஹாபலிக்குக் காட்டியதாயும் ஐதீகம். அதனாலேயே இருவருக்கும் இந்த இரு நட்சத்திரங்கள் விசேஷமாய்ச் சொல்லப் பட்டிருக்கின்றது. பரிபாடல் என்னும் சங்ககால இலக்கிய நூலிலேயே இந்த ஆதிரைத் திருநாள் சிறப்பு பற்றியும், விழா பற்றியும் குறிப்பிட்டிருப்பதாய்த் தெரிய வருகின்றது.

சந்திரன் இந்த மாதம் திருவாதிரை நக்ஷத்திரக்கூட்டத்தின் அருகே காணப்படும்.பௌர்ணமி தினத்தன்று மிக அருகே காணப்படும் இந்த நக்ஷத்திரம் மற்றவற்றை விட ஒளி பொருந்தியது. ஆகவே இந்த நக்ஷத்திரக் கூட்டத்தைப் பார்க்கையில் திருவாதிரை நக்ஷத்திரம் இருப்பனவற்றிலேயே பெரிதாய் செக்கச் சிவந்த வண்ணத்தில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் என்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட நாளையே திருவாதிரை என்கிறோம். இந்த நக்ஷத்திரம் விண்ணில் ஒளி விடும் அந்த நேரம் தான் ஈசன் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை ஆரம்பித்த நேரமாகவும் கூறுவர். இறைவனின் ஆனந்த தாண்டவமே அந்த நக்ஷத்திர வடிவில் சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றது எனவும் கூறுவார்கள். இத்தகையதொரு காட்சியைத் தான் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் கண்டனர். அதுவே ஆருத்ரா தரிசனம் ஆகும்.

Nataraja க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது அடிமுடிகாணா ஜோதி ஸ்வரூபமாய் நின்ற எம்பெருமானின் திருநடனக் கோலம் காணும் நாளே ஆருத்ரா தரிசனம் ஆகும். ஆருத்ரா என்பது ஆதிரை நக்ஷத்திரத்தைக் குறிக்கும். திரு என்னும் அடைமொழியைச் சேர்த்துக்கொண்டு திருவாதிரை என்று சொல்கிறோம். விண்ணில் விண்மீன் குழுமத்தில் திருவாதிரை நக்ஷத்திரம் இருக்கும் குழுவை ஓரியன் என அழைக்கின்றனர். இதை வேட்டைக்காரன் என்றும் சொல்லுவதாய்த் தெரிய வருகிறது. மிருகசீர்ஷ நக்ஷத்திரமும் இந்தக் குழுமத்தில் இருக்கிறது. இந்த ஓரியன் குழுவின் நக்ஷத்திரங்கள் அனைத்தையும் பொதுவாய் வேட்டைக்காரன் என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த வேட்டைக்காரனின் இடதுபக்கம் அவன் தோள்பட்டை போல் இருப்பது மிருகசீர்ஷம் எனில் வலது தோள்பட்டையாக விளங்குவதே இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் ஆகும். செக்கச் சிவந்த நிறத்தில் காட்சி அளிக்கும் என்று தெரியவருகிறது. ஈசனின் நிறமும் செக்கச் சிவந்த வண்ணம் தானே?செந்தழல் வண்ணனுக்குரிய நக்ஷத்திரம் ஆன திருவாதிரையும் விண்மீன் குழுவிலேயே மிகப்பெரிய நக்ஷத்திரமாய்ச் சொல்லப் படுகிறது. மிகப் பிரகாசமான ஒளி பொருந்தியும் பரிமாணத்துக்கு ஏற்றவாறு ஒளி மாறும் தன்மையும் கொண்டுள்ளது என்றும் தெரியவருகிறது. பூமியிலிருந்து 430 ஒளி ஆண்டு தூரத்திலுள்ள இதன் அடிமுடியை எவரால் காண இயலும்?? பேரொளியும் அதனால் ஏற்பட்ட பெருவெப்பமும் கொண்ட இந்தத் திருவாதிரை நக்ஷத்திரம் விண்ணில் அசைந்தாடுவதானது எல்லாம் வல்ல அந்தக் கூத்தனே இந்த நக்ஷத்திர வடிவில் இவ்வுலகை இயக்க ஆடுவதை நினைவூட்டுகிறது.  இந்த நக்ஷத்திரத்தின் குணமே துடிப்புடனும் செயலாற்றல் கொண்டவர்களாயும், உறுதியும் திடமும் படைத்தவர்களாயும் நிலையான மனம் படைத்தவர்களாயும் இருப்பார்கள் என்பது பொதுவான கருத்து. ஏனெனில் ஈசன் அன்போடு படைக்கிறான். அன்போடு காக்கிறான். அதே சமயம் நமக்காக விஷத்தைக் கூட அருந்துகிறான். அவன் தலையிலே பாம்பையும் ஆபரணமாய்க் கொண்டிருக்கும் அதே சமயம் அமுத கிரணங்கள் உடைய பிறைச் சந்திரனையும் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரனாய்க் காட்சி அளிக்கிறான். ஒரு பக்கம் அமைதியின் வடிவாகவும் இன்னொரு பக்கம் அழிவைக் கொடுக்கும் ருத்ரனாகவும் காட்சி கொடுக்கிறான்.

கற்பனைக்கெட்டாத அருட்பெருஞ்சோதியான எம்பெருமான் தன் கூத்தினாலேயே இவ்வுலகை இயக்குகிறார். நம் போன்ற சாமானியருக்கெல்லாம் புரியாத இந்த அற்புதக் கூத்தைச் செய்யும் எம்பெருமானை நடராஜராகக் காணும் நாளே திருவாதிரைத் திருநாள் ஆகும். எங்கும் நிறைந்த பரம்பொருள் தாமே எல்லாமுமாகி, எல்லாவற்றையும் காத்து, அழித்து, மறைத்து, மோக்ஷத்தை அளித்து என்று அனைத்தையும் நிகழ்த்துவதே நடராஜரின் தத்துவம் ஆகும். அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத இந்தத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. நமக்குத் தெரிந்ததெல்லாம் காலையில் நீராடி உடல் தூய்மையோடு உள்ளத் தூய்மையுடன் கோயிலுக்குச் சென்று நடராஜரை வழிபடுவ்துதான்.
அன்று காலை களி செய்து, எல்லாக் காய்களையும் போட்டுக் குழம்பு வைத்து வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காயுடன் நடராஜருக்குப் படைப்பதுதான் நமக்குத் தெரியும். ஆனால் இந்தக் களிக்கும் ஒரு கதை உண்டல்லவா? களி என்றாலே மகிழ்ச்சி தானே பொருள்?? அத்தகைய களியைத் தன் அடியாருக்குத் தந்தார் ஈசன்.

சோழநாட்டின் அரசர்களுக்கு முடிசூட்டுவது தில்லை வாழ் அந்தணர்களே ஆகும். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அதிக அளவில் திருப்பணிகளும் சோழ மன்னர்களால் செய்யப் பட்டது. சேந்தனாரின் காலம் சரிவரத் தெரியவில்லை எனினும் சில குறிப்புகள்கண்டராதித்த சோழனுக்கு முற்பட்டவர் என்றும், சில குறிப்புகளால் முதல் ராஜராஜ சோழன் காலம் எனவும் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தனார் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராய் விளங்கினார். பட்டினத்து அடிகள் துறவு மேற்கொண்ட பின்னர் அவரின் கட்டளைப்படி பட்டினத்தடிகளின் கருவூலத்து பொக்கிஷத்தைத் திறந்துவிட்டு எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம் அள்ளிக்கொள்ளச் செய்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட சோழமன்னன் சேந்தனாரைச் சிறையில் அடைத்தான்.

பொக்கிஷத்தைப் பகிர்ந்து கொடுத்த சேந்தனாரோ தம் வாழ்க்கையைக் கழிக்க விறகு வெட்டியே பிழைத்துவந்தார். அதை அறியாத மன்னன் சிறையில் அடைக்க, சேந்தனாரின் மனைவியும், மகனும் பிச்சை எடுக்கவேண்டியதாயிற்று. உறவினர் அனைவரும் கேலி செய்ய சேந்தனாரின் மனைவி தங்கள் குருவான பட்டினத்தாரை வேண்ட, அவரும் விநாயகரை வேண்டித் துதித்தார். மேலும் திருவெண்காட்டு ஈசன் மேல் தனிப்பாடலும் இயற்றித் துதித்தார்.

மத்தளை தயிருண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக் காணா நிமலனே அமலமூர்த்தி
செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண்காட்டுளானே"
என்று இறைவனைப் பட்டினத்தடிகள் வேண்ட. இறைஅருளாலும் பட்டினத்தடிகள் வேண்டுதல் மூலமாகவும்  சேந்தனாருக்கு விடுதலை கிடைத்தது. தில்லையம்பதி சென்று அங்கும் விறகு வெட்டிப் பிழைத்த சேந்தனார் அன்றாடம் தாம் சம்பாதிக்கும் பொருளில் இருந்து ஒரு சிவனடியாருக்கு உணவு சமைத்துப் போட்டுப் பின்னரே தாம் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார்.

மழைக்காலம் வந்துவிட்டது. வெட்டும் விறகெல்லாம் மழையில் நனைந்து போயிற்று. விற்க முடியவில்லை. ஈரவிறகை வாங்க யாருக்கும் இஷ்டமில்லை. யோசித்த சேந்தனார் சிவனடியார் எவருக்கேனும் உணவு பரிமாறவேண்டுமே என்பதால் பண்டமாற்று முறையில் விறகைக் கொடுத்து அரிசிமாவையும், வெல்லத்தையும் பெற்று வந்துக் களிசமைக்கச் சொன்னார். கொல்லையில் இருந்த கீரைத்தண்டோடு கொல்லையிலேயே கிடைத்த சில காய்களையும் போட்டுக் குழம்பும் சமைத்துச் சாப்பிட அடியாரைத் தேடிக் காத்திருந்தார். ஆனால் அடியாரே தென்படவில்லை. துன்பத்தோடு அமர்ந்திருந்த சேந்தனர் கண்களுக்கு ஒரு முதிய அடியார் தள்ளாட்டத்தோடு வருவது தெரிந்தது. பசியினால் விளைந்த தள்ளாட்டம் என்பது புரிந்து அவரை அழைத்துச் சென்று களியும், குழம்பும் உண்ணக் கொடுத்தார். பெரியவரும் திருப்தியாகச் சாப்பிட்டு விட்டு, "மிச்சம் இருப்பதையும் கொண்டா" என்று கேட்டு வாங்கிக் கொண்டு போயிவிட்டார்.
இங்கே தில்லை வாழ் அந்தணர்கள் திருவாதிரைத் திருநாளுக்கான ஏற்பாடுகள் செய்து வந்தார்கள். அப்போது கருவறையில் ஈசனருகே களியாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டு திகைத்தனர்.

உடனேயே மன்னனுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. மன்னனும் தீர விசாரித்துச் சேந்தனாரே இதன் மூலகர்த்தா என உணர்ந்து அவரைப் பிடித்துவருமாறு கட்டளையிடுகிறான். அப்போது நடராஜப் பெருமானின் திருத்தேரை இழுக்கும் அடியார்களில் ஒருவராய்ச் சேந்தனார் திருத்தொண்டு செய்து வந்தார். திடீரெனத் தேர் நின்று போக, அனைவரும் திகைத்தனர். மன்னன் தேரை நிலைக்குக் கொண்டு வர ஆட்களை அழைக்கத் தேர் இம்மியளவும் நகரவில்லை. அப்போது அசரீரியால் ஈசன், "சேந்தனாரே, நீர் திருப்பல்லாண்டு பாடும் தேர் நிலைக்கு வரும்" எனக் கூற சேந்தனார் முதலில் திகைத்தாலும் பின்னர் ஈசன் அருளால் திருப்பல்லாண்டு பாடி அருள தேரும் நிலைக்கு வந்தது.


மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி
யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.

மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்
செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.

Thursday, December 20, 2018

அடுத்த உற்சவம் நடராஜருக்கு!

ரத்னாங்கி சேவை க்கான பட முடிவு

ரத்னாங்கி சேவை. படத்துக்கு நன்றி கூகிளார்

நடராஜனும், ரங்க ராஜனும் என்றால்  நம்ம ஸ்ரீரங்கத்தில்
கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், சிதம்பரத்தில் கோவில் கொண்டிருக்கும்  நடராஜரையும்தான் சொல்வார்கள். சைவர்களின் கோயில் சிதம்பரம் என்றால், வைணவர்களின் கோயில் ஸ்ரீரங்கம் என்று எல்லாருக்கும் தெரியும். நமக்கெல்லாம் பிறப்பு, இறப்பு என்று இருக்கிற மாதிரி இவங்களுக்குக் கிடையாது.  அப்படி நினைக்கவும் கூடாது. சிவன் காலத்துக்கு எல்லாம் காலன் என்று சொல்லப் படும் காலகாலன் என்றால் விஷ்ணுவோ என்றால் எங்கும் பரவி, வியாபித்து, எல்லாரையும் படைத்துக் காத்து அருளுபவர். "ஷ்ரவண" என்று சொல்லப் படும் திருவோண நட்சத்திரத்தின் அதி தேவதையான விஷ்ணுவை நாம் ஆராதித்தோமானால் அந்த நட்சத்திரத்தையும் ஆராதித்த மாதிரி ஆகும். அது போல் சிவனை
ஆராதித்தோமானால் அவர் அதிதேவதையாக இருக்கும் "திருவாதிரை" நட்சத்திரத்தை ஆராதித்த மாதிரி ஆகும். இதில் சிவன் சற்றுச் சூடாகவும், விஷ்ணு சற்றுக் குளிராகவும் இருக்கிறார். எப்படின்னு பார்த்தால் இந்த உலகிலேயே குளிர்ச்சியும் இருக்கிறது. சூடும் இருக்கிறது. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஒன்றை வைத்துத் தான் மற்றது. வேறுபாடு கிடையாது. நம்ம உடம்பிலேயே இரண்டும் இருக்கிறது. சூடு மட்டும் அதிகம் ஆனால் "காய்ச்சல்" என்கிறோம். குளிர்ச்சி அதிகம் ஆனாலோ நாமே இருக்க மாட்டோமே!

ஆகவே இரண்டும் இருக்க வேண்டும்.குளிரின் சூட்சும ஆற்றல் விஷ்ணு என்றால், சூடின் சூட்சும ஆற்றல் சிவன் ஆவார். பனி படர்ந்த கைலையில் இருக்கும் சிவன் சூடாகத் தானே இருக்க வேண்டும்? பாற்கடலில் இருக்கும் மஹாவிஷ்ணுவோ அதற்கேற்பக் குளிர்ச்சியாக இருக்கிறார் அல்லவா? ஒரே பொருளின் இரண்டு பகுதிகளான இவர்கள் இருவரும் ஒருவரே! அவர்தான் சங்கரநாராயணன் என்று சொல்கிறோம். "உமையொரு பாகன்" என்றும், "அர்த்த நாரீஸ்வரர்" என்றும் சொல்கிறோம். என்னடா வென்று பார்க்கிறீர்களா? ச்யாமளனும் அவனே! ச்யாமளையும் அவளே! நாராயணனும் அவளே! நாராயணியும் அவனே! மாயனும் அவனே! மாயையும் அவளே! வைஷ்ணவனும் அவளே! வைஷ்ணவியும் அவனே!

சிவசக்தி பேதத்தில் புருஷ சக்திதான் திருமாலாக வணங்கப் படுகிறது. பொதுவாகப் பெண்களை வலப்பக்கமாய்ப் படுக்கச் சொல்வதுண்டு. பள்ளி கொண்டிருக்கும் எம் பெருமாளைப் பாருங்கள். வலப்பக்கமாய்த்தான் ஒருக்களித்துப் படுத்திருப்பார். இவர் நன்கு தூங்க, ஆடவல்லானோ ஆடிக் கொண்டிருக்கிறான். எப்படிப் பட்ட ஆட்டம்? ஆனந்தக் கூத்து ஒரு சமயம்,ஆக்ரோஷக் கூத்து ஒரு சமயம், அமைதியான நடனம் ஒரு சமயம்,
பக்தர்களுக்கு அருள ஒரு சமயம். நாமே பாருங்க, நமக்கு மனதுக்குப் பிடித்த ஒரு காரியம் நடந்தாலோ., அதிக மகிழ்ச்சியான மன நிலையிலோ ஆடலாம், பாடலாம்,. குதிக்கலாம் போல் இருக்குன்னு சொல்வோம். சிலபேர் ஆடிப்பாடிக் குதிக்கவும் செய்வோம். தூக்கமும் மன நிம்மதியில் தான் நல்லாத் தூங்கினேன்னு சொல்வோம்.

இந்த இடையறா ஆட்டமும் சரி, அந்த இடையறாத் தூக்கமும் சரி எதுக்கு? நம்மை உய்வித்து வாழ்வாங்கு வாழ வைக்கத்தான். காலை எப்போ வருது? மாலை எப்போ வருது? இரண்டும் எப்போ சேருது? எப்போ பிரியுது? யாராலும் சொல்ல முடியுமா? முதலில் மாலை வந்ததா? இரவு வந்ததா? அல்லது காலை வந்ததா? பகல் வந்ததா? பதில் சொல்ல முடியுமா? இரண்டும் ஒரே சமயம் வருகிறது, வந்தது போல் போகிறது. இருள் நீங்கினால் கவலை இல்லை. ஒளி வந்தால் களிப்பு, சந்தோஷம், மகிழ்ச்சி. ஆகவே கவலையற்ற நிலையை ஸ்ரீரங்கநாதனின் திருப்பள்ளியும், களிப்புற்ற நிலையை நடராஜரின் திரு நடனமும் நமக்கு உணர்த்துகின்றது. இரண்டுமே பொன்னரங்கம், பொன் சபை ஆகும். எங்கும் வியாபகமாய் இருக்கும் திருமால் ரங்கராஜனாய்த் திருவரங்கத்தில் கவலையற்ற நிலையில் திருப்பள்ளி கொண்டிருக்கிறார். "பூலோக வைகுண்டம்" எனப்படும் ஸ்ரீரங்கத்தில் டிசம்பர் மாதம்18ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை அன்று "வைகுண்ட ஏகாதசி"ப் பெருநாள் கொண்டாடப் பட்டது. சிதம்பரத்தில்  நடராஜரோ  நம் எல்லாருடைய
நலனுக்காகவும் களிப்புற்ற நிலையில் இடைவிடாது ஆடிக் கொண்டிருக்கிறார். டிசம்பர் 23-ம் தேதி ஞாயிறு அன்று "பூலோகக் கைலாயம்" என்று அழைக்கப் படும் சிதம்பரத்தில் "ஆருத்ரா தரிசனம்" நடைபெறுகிறது. அனைவரும் சிவ, விஷ்ணு பேதங்களை மறந்து, சிவசக்தி ஐக்கியத்தை நினைத்து ஒன்றில்லாமல் மற்றது இல்லை என்றப் பேருண்மையைப் புரிந்து கொண்டு இருவரையும் வணங்கி இறை அருள் பெறுவோமாக.
முத்தங்கி சேவையை விசேஷமாக சொல்வது ஏன்?

படத்துக்கு நன்றி கூகிளார் வாயிலாக மாலை மலர். ஆனால் கர்பகிரஹத்தில் நம்பெருமாள் இல்லை. யாகபேரர் மட்டும் பெருமாளின் காலடிப்பக்கம் ஓரமாக இருக்கார். எட்டிப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு வந்தேன்.


இன்னிக்குப் பெரிய ரங்குவின் முத்தங்கி சேவையைப் பார்க்கப்போனோம். கோயிலோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு மதியம் இரண்டு மணிக்குக் கிளம்பினோம். எங்கே ஆரம்பிச்சு எங்கே முடிகிறது என்பதே தெரியாமல் வரிசைகள், வரிசைகள், வரிசைகள். ஏதோ ஒரு வரிசையில் நின்றோம்.  யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாமல் கன்னாபின்னாவென அனைவரும் நிற்க அது 250 ரூ சீட்டுக்கான வரிசையானு சந்தேகமாவே இருந்தது. இருந்தாலும் பலரும் அங்கேயே நின்றதால் நாங்களும் நின்றோம். அது 250 ரூபாய்ச் சீட்டு வரிசையில் கொண்டு விட்டது. இதுக்கு நடுவில் நான் ஒரு பக்கம் போய்விட ரங்க்ஸ் என்னைத் தேடப் பின்னர் கண்டு பிடித்துக் கொண்டு போய்ச் சேர்ந்தேன். இரண்டரை மணிக்கு வரிசையில் நின்றதுக்கு நாலு மணிக்குத் தான் டிக்கெட்டே வாங்க முடிந்தது. நம்பெருமாள் ஆயிரக்கால் மண்டபத்தில் இருக்கார். அங்கே அப்போத் திரை போட்டுட்டாங்க என்பதால் பெரிய ரங்குவைப் பார்த்துட்டுப் பின்னர் வரலாம்னு போனோம். ரங்குவைப் பார்த்துட்டு வெளியே வரச்சேயே நாலே முக்கால் ஆயிடுச்சு. முகமும், பாத தரிசனமும் திவ்ய தரிசனமாகக் காட்சி அளிக்க உடலோடு ஒட்டிய முத்தங்கி, மஸ்லின் துணியால் போர்த்தப்பட்டுப் பெரிய பெருமாள் அரிதுயில் (அறிதுயில்?) கொண்டிருக்கார். தெரிந்தவர் ஒருத்தர் இருந்ததால் யாரும் விரட்டும் முன்னர் பெருமாளை நன்றாகப் பார்த்துக் கொண்டேன். நம்ம ரங்க்ஸ் தான் முகத்தையும், பாதத்தையும் தவிர்த்து வேறே எதுவும் பார்க்கலைன்னார்.

அங்கே இருந்து வந்து பரமபத வாசல் வழியாகத் தாயார் சந்நிதிக்கு வந்து சேர்ந்தால் அங்கேயும் 50 ரூ சீட்டுக்கே பெரிய வரிசை! வரிசையில் நின்றுசீட்டு வாங்கிக் கொண்டு தாயார் சந்நிதியில் திவ்ய தரிசனம் கிடைத்து மஞ்சள், பூப் பிரசாதம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தோம். அதுக்குள்ளே ஆயிரக்கால் மண்டபத்தில் கூட்டம். எனக்கும் அதிக நேரம் நின்றதால் கால்வலி. நம்ம ரங்க்ஸ் என்னால் இனிமேல் முடியாது. நம்பெருமாளை மட்டும் தனியாக இன்னொரு நாள் வந்து பார்த்துக்கலாம்னு சொல்லிட்டார். 250 ரூ டிக்கெட் வாங்கினவங்களுக்கு விஜயா வங்கி சார்பாக ஓர் பையில் அரை லிட்டர் குடிநீர் பாட்டில், ஒரு மைசூர்ப்பாகு, ஒன்பது பிஸ்கட்டுகள் அடங்கிய சன் ஃபீஸ்ட் பிஸ்கட் பாக்கெட், கல்கண்டு பாக்கெட், கீதை, ஸ்லோகங்கள் அடங்கிய புத்தகம், மஞ்சள் பொடி எல்லாம் கொடுத்தார்கள். பிஸ்கட்டுகள் தேங்காய் பிஸ்கட்டுகள். அங்கேயே பசியாக இருந்ததால் சாப்பிட்டு விட்டேன். மைசூர்ப்பாகை வீட்டுக்கு வந்து சாப்பிட்டேன். நெ.த.வை நினைத்துக் கொண்டு. நல்ல நெய் விட்ட (நிஜம்மாவே) மைசூர்ப்பாகு! ரசித்துச் சாப்பிட்டேன்.

கடந்த இரண்டு நாட்களாக சிடி யூனியன் வங்கி சார்பாக லட்டு, பிஸ்கட் போன்றவை அடங்கிய பைகள் கொடுக்கப்பட்டதுனு அங்கே கோயில் ஊழியர் ஒருத்தர் சொன்னார்.


திருவாதிரை பற்றிய சிறப்புப் பதிவுகளை வரும் நாட்களில் காணலாம். 

Tuesday, December 18, 2018

வைகுண்ட ஏகாதசிக்கான சிறப்புப் பதிவு!


வைகுண்ட ஏகாதசி 2012 அனுபவம்

இங்கே

ஶ்ரீரங்கம்

கோயிலில்

அனுபவம்  இது வரை!

அரையர் சேவை  வைகுண்ட ஏகாதசிப் பதிவுகள் இங்கே ஆரம்பிச்சுக் கீழே இவற்றில் முடிவடைகின்றன.

நம்மாழ்வார் மோட்சம்

ஆன்மிகப் பயணம் பக்கத்தில் வைகுண்ட ஏகாதசி குறித்த விபரங்கள் கிடைக்கும். நாங்க போயிட்டு வந்தது 2012 ஆம் ஆண்டில் அது குறித்த விபரங்களையும் கொடுத்திருக்கேன்.

No automatic alt text available.

பகல் பத்து ஒன்பதாம் நாள் அலங்காரம், நன்றி ரிஷபன்

இரண்டு நாட்களாக இரவில் அரங்கன் பகல்பத்து உற்சவம் முடிந்து மூலஸ்தானம் எழுந்தருளுவதைப் பார்த்து விட்டே படுத்துக்கப் போகிறேன். முந்தாநாள் ஒன்பதாம் திருநாளன்று அரங்கன் மூலஸ்தானம் போகப் பத்தரை மணி ஆகி விட்டது. மிகப் பொறுமையாகவும் மிக அழகாகவும் பல்லக்குத் தூக்குபவர்கள் (திருப்பாதம் தாங்கிகள்) தங்கள் சேவையைச் செய்கின்றனர். வேறே எங்கும் இத்தனை அழகான நடைமுறைகள் இருக்கானு தெரியலை. இருக்கலாம். எனக்குத் தெரியலை. இங்கேயோ அரங்கன் மேலும் நம்பெருமாள் மேலும் பாசமும், அன்பும் வைத்திருக்கும் மனிதக் கூட்டம். ஆகவே அவனுக்கு உகந்ததை அன்றி வேறே எதுவும் செய்ய மாட்டார்கள். எந்த நேரமும் அவனைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்னும் கவலை.
No automatic alt text available.

 மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் பழைய படம். முகநூல் பகிர்வு. நேற்றைய அலங்காரத்தில் பட்டுப்புடைவைக்கு ஊதா நிற பார்டரும் தலைப்பும். இது சிவப்பு நிறத்தில் இருக்கு. புதிய படம் கிடைச்சதும் பகிர்கிறேன்.


நேற்று மோகினி அலங்காரம். உண்மையிலேயே நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் மயக்குகிறார். பார்க்கப் பார்க்கப் பரவசம்.  நேற்று மாலை ஆறு மணிக்கே நேரலை ஒளிபரப்பு ஆரம்பிச்சிருந்தாலும் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டே உட்கார்ந்தோம். நேற்று கருடமண்டபம் அருகே பெருமாள் வந்து எல்லா ஆழ்வாராதிகளுக்கும் மரியாதை பண்ணி விட்டு ஆர்யபடாள் வாயில் வழியே ஒன்பது மணிக்கெல்லாம் உள்ளே போய்விட்டார். பின்னே! காலம்பர சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாமா? இன்னிக்குக் காலையில் ஐந்தரை மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு. மூன்றரை மணிக்கே முழிப்பு வந்தாலும் படுத்திருந்தேன். அப்புறமா நாலரை மணிக்கெல்லாம் எழுந்து வாசலில் விளக்கேற்றிக் கோலம் போட்டிக் காஃபி போட்டு வைத்துவிட்டுத் தொலைக்காட்சியில் உட்கார்ந்தேன். பெருமாள் அப்போது சந்தனு மண்டபத்தில் இருந்து இறங்கிப் பிராகாரம் சுற்றி வந்தார். அதன் பின்னர் சரியாக ஐந்தரை மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு. பெருமாள் எக்கச்சக்கமான கூட்டத்தோடு ரத்னாங்கி அணிந்து கொண்டு பாண்டியன் கொண்டை, கிளி மாலையுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்தார். ஆயிரக்கால் மண்டபத்தில் போய் இருந்து தரிசனம் கொடுப்பார். ஆனால் இன்னும் அங்கே போகவில்லை. பிரகாரம் சுற்றுகிறார். எக்கச்சக்கமான கூட்டம். நெரிசல் தாங்கலை. பெருமாள் இப்போது ஆயிரக்கால் மண்டபத்துக்கு அருகே வந்திருக்கார். எப்போ உள்ளே நுழைவார்னு தெரியாது. 


பெரிய பெருமாள் முத்தங்கி சேவை சாதிப்பார். போய்ப் பார்க்க ஆசை தான். ஆனால் கூட்டம் எப்படினு சொல்ல முடியலை! பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் ரங்கனே அழைப்பான். 

Sunday, December 16, 2018

மாதங்களில் நான் மார்கழி!

Madurai  பதிவின் சுட்டி!

மார்கழி பிறந்து விட்டது. எங்கும் கோயில்களில் தனுர் மாத வழிபாடுகள் சிறப்பாய் ஆரம்பித்து விட்டன. ஸ்ரீரங்கத்திலும் வருகிற 18 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசித் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன. மார்கழி மாதம் குறித்தும், திருப்பாவை, திருவெம்பாவை குறித்தும் ஏற்கெனவே பல பதிவுகள் எழுதி விட்டபடியால் அவற்றையே மீண்டும் இங்கே மீள் பதிவாக இட விருப்பம் இல்லை. எனக்குத் தெரிந்தவரை நான் மதுரையில் சிறுபெண்ணாக இருந்தபோது நடந்த சில மார்கழி மாத நினைவுகளை முன்னம் ஓர் காலத்தில் 2008 ஆம் ஆண்டில் மதுரைக்காரர்களால் சேர்ந்து நடத்தப்பட்ட வலைப்பதிவில் பகிர்ந்திருந்தேன். அந்த நினைவுகளை இப்போது எல்லோரும் அறியத் தருகிறேன்.

மீள் பதிவு கீழே!

Monday, December 29, 2008
மதுரையும், மார்கழி மாசமும்
மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தைப் போன வருஷம் டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.

உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.

பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.

மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.

எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.

சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((


திருப்பாவை விளக்கம் 2010

திருப்பாவைக்கோலங்கள் 2014

திருவெம்பாவை விளக்கம் 2011

Friday, December 14, 2018

இதுவும் ஒரு நியாயம் தான்! :(


zomato

 அநேகமாக இந்த வீடியோவைப் பார்க்காதவங்க இருக்க முடியாது. இதில் Zomato என்னும் குழுமம் சம்பந்தப்பட்டிருப்பதும் அனைவரும் அறிவோம். இந்தப் பெயரில் உணவுகளைத் தரமாகவும் சூடாகவும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே கொண்டு சேர்க்கவென்று குழுமம் ஒன்று 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஹரியானாவில் குருகாவ் என்னும் நகரில் ஆரம்பித்திருக்கின்றனர். இதன் தலைமை அலுவலகம் குருகாவ் தான். பின்னர் இந்தியா முழுதும் விரிவடைந்து, உலக அளவிலும் பெயர் சொல்ல ஆரம்பித்துள்ளது.

இதன் முக்கிய வேலையே நகரங்களில் உள்ள முக்கியமான நல்ல தரமான உணவு தயாரிக்கும் ஓட்டல்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வர முடியாமல் அல்லது ஓட்டலில் போய்ச் சாப்பிட்டு வருவதற்குக் கூட நேரமில்லாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் குறிப்பிடும் உணவை அதாவது வாடிக்கையாளர் விரும்பும் உணவை இணையம் மூலம் அந்தக் குறிப்பிட்ட ஓட்டலில் ஆர்டர் செய்தால் இந்த அமைப்பினர் அந்தக் குறிப்பிட்ட உணவை வாடிக்கையாளர் சார்பாக அவங்க குறிப்பிட்டிருக்கும் ஓட்டலில் சென்று உணவைப் பெற்று வந்து வாடிக்கையாளரிடம் சேர்ப்பது தான். இதில் அவர்கள் வாடிக்கையாளரிடம் இந்தச் சேவைக்காகக் குறிப்பிட்ட தொகையை உணவின் விலையோடு சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். 

இது வீட்டில் பெரும்பாலும் தனியாக இருக்கும் நபர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு உதவி என்னும் காரணத்தில் செய்யப்படுகிறது. அதோடு இல்லாமல் இப்போது பெரும்பாலான குடும்பங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால் இரவு உணவைச் சமைக்க நேரம் இல்லாமல் தவிக்கும் இல்லத்தரசிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் எனச் சொல்லப்படுகிறது. திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுச் சமைக்க முடியாமல் போனாலும் அவர்களுக்கும் இது உதவும். பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட  மற்றும்  Swiggy என்னும் இன்னொரு சேவைக் குழுவும் இதில் ஈடுபட்டிருக்கிறது. இவர்களின் சேவை குறித்துத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் வருகின்றன.

இவர்களில் முதலில் குறிப்பிட்ட  zomato குழுவின் ஊழியர்களில் ஒருவர் தான் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய உணவை எடுத்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு அதுவும் அவர்கள் கொடுத்திருக்கும் ஸ்பூனாலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப அதையே மிச்சத்தை மூடி அவர் எச்சல் செய்து சாப்பிட்ட ஸ்பூனையும் நாக்காலேயே நக்கித் துடைத்து வைக்கிறார். இதை எவரோ ஃபோட்டோ எடுத்து அது வாட்ஸப்பிலும், முகநூலிலும் பரவி விடவே zomato அந்த ஊழியரை வேலையை விட்டு நீக்கி விட்டதாகச் சொல்லி இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டதா என்றெல்லாம் தெரியவில்லை. அதோடு வாடிக்கையாளர் யார் எனவும் தெரிவிக்கவில்லை. இவை எல்லாம் தனிப்பட்ட விஷயம் என எடுத்துக் கொண்டாலும் ஊழியர் இப்படிச் செய்தது அநாகரீகம் என்பதோடு ஆரோக்கிய ரீதியாகக் கெடுதல்களை விளைவிக்கக் கூடியது என்பதை யாரும் உணரவில்லை. அந்த ஊழியருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். அவருக்குச் சாப்பிடக் கூட நேரம் கொடுக்காமல் வேலை வாங்கியதால் பசி தாங்க முடியாமல் இப்படிச் செய்தாராம். அப்படியே வைத்துக் கொண்டாலும் அவர் தனக்கெனத் தனியாக உணவுப் பொட்டலங்களை வாங்கி வைத்துக் கொண்டு அங்கேயே அந்த ஓட்டலிலேயே ஓரிடத்தில் அமர்ந்து சாப்ப்பிட்டுவிட்டுக் கிளம்பி இருக்கலாமே! வழியில் நிறுத்தி உணவை எடுத்துத் திருடிச் சாப்பிடுவதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட உணவை முழுவதும் சாப்பிட்டிருக்கலாமே! இதெல்லாம் எதுவும் செய்யாமல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை மூடி வைக்கிறார். இது பசியின் காரணமாகச் செய்வதா?

இவருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்துள்ளன.  குரல் கொடுப்பவர்களுக்கு இப்படி நேர்ந்திருந்தால் பொறுத்துக் கொண்டு அந்த உணவை வாங்கிச் சாப்பிட்டிருப்பார்களா? இப்போது மட்டுமல்ல எப்போதுமே நோய் பரவுவது எச்சில் மூலமும் தான் என்பது பல வகைகளில் நிரூபணம் ஆகி உள்ளது. வீட்டில் உள்ளவர்களே ஒருத்தருக்கொருத்தர் எச்சில் உணவைப் பகிர்ந்து கொள்வதே சரியில்லை என்னும்போது இப்படி யாரோ ஒருத்தர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் இருந்து பிறழ்ந்து வாடிக்கையாளரின் உணவிலிருந்து எடுத்துச் சாப்பிடுவது எந்த வகையில் நியாயம்? வரவர எதற்குத் தான் ஆதரவு என்றில்லாமல் போய்விட்டது! தவறு செய்பவர்களை ஆதரிப்பதே இப்போதைய நியாயமாக மாறி வருகிறது.

இப்படி இருந்தால் நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லிக் கொடுப்போம்? பள்ளியில் இன்னொருத்தர் உணவை நீ எடுத்துச் சாப்பிடு என்றா? உன் இஷ்டத்துக்கு நீ இருக்கலாம்  அதை யாரும் கேட்க மாட்டார்கள் என்றா? ஏற்கெனவே பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளோ மற்ற ஒழுக்கங்களைச் சுட்டிக்காட்டும் படிப்போ, அதைக் குறித்த தகவல்களோ, பெரியோர்களைப் பற்றிய சரித்திரங்களோ இல்லாமல் பார்த்துக் கொண்டாச்சு! அதோடு நீதிமன்றங்கள் வேறே தப்புச் செய்யலாம் எனத் தீர்ப்புக் கொடுத்தாச்சு. நாமெல்லாம் சொல்வதைக் கேட்டால் இப்போதைய குழந்தைகள் நாம் நம் சிறு வயதில் பெரியவங்களோட அராஜகத்துக்கு அடிமைகளாகவே இருந்திருக்கோம் என்றே நினைப்பார்கள்.அநியாயங்கள் எல்லாமே நியாயம் என ஆகி வருகிறது. இது தான் கலி முத்திவிட்டது என்பதன் அடையாளமோ?

Tuesday, December 11, 2018

நெஞ்சு பொறுக்குதிலையே!

பாரதி க்கான பட முடிவு


பாரதிக்கு அஞ்சலி!

நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் -- இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் -- இந்த
மரத்தில் என் பார்; அந்தக் குளத்தில் என்பார்,
துஞ்சுது முகட்டில் என்பார் -- மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு) 1

மந்திர வாதிஎன்பார் -- சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங்கள் -- இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே -- ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்
அந்த அரசியலை -- இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்
(நெஞ்சு) 2

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் -- ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டு ஒருவன் -- வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பால் எவனோசெல்வான் -- அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற்பார்
எப்போதும் கைகட்டுவார் -- இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு) 3

நெஞ்சு பொறுக்கு திலையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் -- ஒரு
கோடிஎன்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான் -- அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் -- பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
(நெஞ்சு) 4

சாத்திரங்கள் ஒன்றுங்காணார் -- பொய்ச்)
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றாயிருந்தாலும் -- ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்;
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் -- தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவர்;
ஆத்திரங் கொண்டே இவன்சைவன் -- இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார்.
(நெஞ்சு) 5

நெஞ்சு பொறுக்கு திலையே -- இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் -- அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே -- நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே -- இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே.
(நெஞ்சு) 6

எண்ணிலா நோயுடையார் -- இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் -- பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் -- பத்து
நாலா யிரங்கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே -- இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்.

நன்றி தமிழ் விர்சுவல் பல்கலைக்கழகப் பக்கம். 

Friday, December 07, 2018

நான் யாருக்கு ரசிகை?

//பெரும்பாலானோர் அடித்து பாய்ந்து எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்றும் அதை பார்க்கலைன்னா வாழ்க்கையே வீண் என்றும் புளகாங்கிதமடையும் சில உலக விஷயங்கள் (ஆஸ்தான நாயகனின் சினிமா முதல் நாள் முதல் காட்சி ,கிரிக்கெட் கால்பந்து ) சிலரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லையே ? ஏன் ?//

 உண்மையிலேயே நான் கேட்க நினைத்த கேள்வி. அதென்னமோ எனக்கு இந்த சினிமாவுக்கு அடிச்சுப் பிடிச்சுண்டு போறவங்களைப் பார்த்தால் எப்போவுமே சிரிப்பு வரும். சின்ன வயசிலேயே! ஆனால் அப்போல்லாம் சினிமா பாஸ் கிடைச்சால் தான் போவோம். அது வேறே! ஆனால் அதுக்காகப் போறவங்களைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க முடியுமா? அதே போல் எங்க உறவினர் ஒருத்தர் எழுபதுகளில் கிரிக்கெட் மாட்ச் பார்க்க மதுரையிலிருந்து அலுவலகத்துக்கு லீவ் போட்டுவிட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்னையில் சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் பார்க்கவெனவே வந்திருந்தார். ஙே! என்று தோன்றியது எனக்கு! இத்தனைக்கும் மத்தியதரக்குடும்பம் தான். இரு தங்கைகள் திருமணத்துக்குத் தயார் நிலையில்! இரண்டு தம்பிகள் படித்துக் கொண்டிருந்தனர். அந்த நிலையிலும் இவ்வளவு செலவு செய்து கொண்டு வருவது என்பது அதிகமாகவே தோன்றியது. அவர் மதுரையிலிருந்து சென்னை வந்து போன செலவு என்னைப் பொறுத்தவரை அப்போ மொத்தச் செலவு ஐநூறுக்குள் ஆகி இருக்கும். அது இருந்தால் ஒரு மாசம் குடும்பத்தை ஓட்டலாமே என நினைச்சேன்! ஒருவேளை நான் சரியில்லையோ என்றும் தோன்றும்! :))))


இந்த சினிமா நடிகர்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்து ரசிகர்களுக்கு தெய்வமாக இருக்காங்கனு நினைக்கிறேன். அவருக்குப் பின்னர் ஜிவாஜி, எம்ஜார் (எ.பி. இல்லை), ஜெமினி! அதன் பின்னர் கமல், ரஜினி, சிவகுமார், மோகன். மோகன் முந்துவார் போல இருக்கையில் பாவம்! எதிலோ மாட்டிக்கொண்டு வெளிவரமுடியவில்லை. இப்போ விஜய், சூர்யா, அஜித். அதன் பின்னர் தனுஷ்! இவரோடு சொல்லும்படி யார் இருக்காங்கனு தெரியலை. என்னென்னமோ பெயரில் நடிகர்கள்! சிவ கார்த்திகேயன். விஜய் ஆன்டனி, விஜய் சேதுபதி! இரண்டு பேரும் யார்னே தெரியலை! ஆனால் பெயர்கள் அடிபடும். நகைச்சுவைனு எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் என்.எஸ்.கே. டி.ஏ.மதுரம், அதுக்கு முன்னாடி யாருனு தெரியலை. பின்னர் டி.ஆர்.ராமச்சந்திரன் தங்கவேலு, எம்.சரோஜா, சந்திரபாபு போன்றோர். பின்னர் நாகேஷ், மனோரமா ஜோடி. இவர்களோடு சொல்லத் தக்கவிதத்தில் ஒய்.ஜி.மகேந்திரா, சோ, ரமாப்ரபா ஆகியோரைச் சொல்லலாம். பின்னர் கவுண்டமணி, செந்தில், கோவைசரளா. பின்னர் வந்தவர்களில் வடிவேலுவும், பார்த்திபனும் இணைந்து வரும் காமெடிகள் பரவாயில்லை ரகம். அதன் பின்னர் வந்தவை எதுவும் சொல்லிக்கிறாப்போல் இல்லை.  இப்போ விவேக், சந்தானம் ஆகியோர் இருந்தாலும் பெண்களில் நகைச்சுவை நடிகைனு யாரும் இருப்பதாய்த் தெரியலை. அதோடு இப்போதைய காமெடி எல்லாம் ரசிக்கும்படியும் இல்லை. கவுண்டமணி, செந்தில் காலத்திலேயே நிறம், உயரம், பருமன் ஆகியவற்றைக்குறித்துப் பழித்துப் பேசும் சொற்கள், அறச்சொற்கள் வந்துவிட்டன.  இப்போதைய காமெடியில் எப்படி இருக்கோ தெரியலை.

எல்லோரும் நான் ஜினிமாப் பார்க்க மாட்டேன்னு சொல்லிண்டே ஜினிமா பத்தியும் ஜிவாஜி பத்தியும் சொல்றதுக்குக் கிண்டல் பண்ணறாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதுக்காக ஜினிமாவே பார்க்காமலா இருப்பாங்க? எத்தனை விமரிசனம் எழுதிட்டேன்!  ஆனாலும் இந்த நடிகர் தான் ஒசத்தி, நான் அவங்க விசிறி என்பதெல்லாம் இல்லை.  இந்த நடிகர் தான் பிடிக்கும், இவர் பிடிக்காதுனு எல்லாம் இல்லை. நல்ல சினிமாவுக்கு ரசிகையே தவிர்த்து ஆதரிச நடிகர், நடிகைனு யாரும் இல்லை. சிலருக்கு நான் ஜிவாஜியைப் பத்தி விமரிசனம் பண்ணினாக் கோபம் வருது! ஹிஹிஹி, எனக்கு அதைப் பார்த்துச் சிப்புச் சிப்பா வருது! அதே மாதிரி தான் ரஜினி, விஜய் ஆகியோர் படம் வெளிவந்தா கட் அவுட்டுக்குப் பாலபிஷேஹம் என்பதெல்லாம் ரொம்பவே ஓவர்! இதிலே விஜய் ரசிகர்கள் சர்க்கார் படத்திலே இலவசங்களைக் கிண்டல் பண்ணி எடுத்திருப்பதால் இலவசப் பொருட்களை எல்லாம் உடைச்சு படத்துக்குத் தங்கள் மேலான ஆதரவைக் காட்டினாங்க. என்ன கிடைச்சதுனு தெரியலை! அதுக்கு பதிலா விஜய் பெயரில் ஏதேனும் நல்ல விஷயங்களை ஆரம்பிச்சுச் செய்திருக்கலாம்.  இப்போ ஏதோ ஒருபடத்துக்கு ஆரம்பவிழாவன்னிக்கு ரசிகர்கள் எல்லாம் கையில் கற்பூரம் ஏத்தி வரவேற்பதாய்க் காட்டினாங்க முகநூலில்! இதெல்லாம் ரொம்பவே ஓவரா இல்லையோ! எந்த நடிகரும் அவங்க சொத்திலேயோ, வாங்கற பணத்திலேயோ நமக்கு ஏதும் செய்யப் போறதில்லை. நமக்காக அவங்க வாங்கற பணத்தைக் குறைச்சுக்கவும் போறதில்லை. அவங்களை தெய்வமாக் கும்பிடறதிலே நமக்கென்ன லாபம்! ஒண்ணும் புரியலை எனக்கு! படம் நல்லா இருக்கா! ஓகே நல்லா இருக்கு! ஒரு தரம் பார்க்கலாம். அதுக்காக அடிச்சுப் பிடிச்சுண்டு டிக்கெட்டை அதிக விலை கொடுத்துப் பார்ப்பதில் என்ன கிடைக்கும்? அதுக்குனு ஏதாவது அவார்டா தரப் போறாங்க? அல்லது அந்த நடிகர் தான் தன் சம்பளத்தில் ரசிகர்களுக்குப் பங்கு கொடுக்கப் போறாரா? எதுவும் இல்லை!

அப்புறமா ஏன் இப்படி முதல்லேயே பார்க்கணும்னு வெறியோட அலையறாங்கனு எனக்குப் புரியலை!  இப்போல்லாம் நம்ம நாட்டில் சினிமா தியேடரில் சினிமா பார்த்தே எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டன. எப்போவானும் தொலைக்காட்சியில் பார்ப்பது! இல்லைனா அம்பேரிக்கா போனால் அங்கே பார்ப்பது தான்! அங்கே பார்த்தது தான் அதிகம்! அங்கேருந்து வந்தப்புறமா இங்கே எந்தப் படமும் பார்க்கலை. அதிரடி நான் பார்க்காத படம் இருக்கானு கேட்டு இருக்காங்க! இந்த "பா" வரிசை படங்களில் பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பாவை விளக்கு இதெல்லாம் பார்த்ததில்லை. அதோடு இல்லை. முன்னே வந்த எஸ்.பாலசந்தர் (வீணை) படங்களிலே "பொம்மை" பார்க்கலை. யூ ட்யூபில் தேடினாலும் கிடைக்கலை! நெல்லை அதுக்கு விமரிசனம் எழுதச் சொல்லிக் கேட்டிருந்தார். யாரானும் யூ ட்யூப் லிங்க் அனுப்பி வைங்க! அதிலே ஜேசுதாஸ் முதல் முதலாப் பாடின பாடல் "நீயும் பொம்மை! நானும் பொம்மை!" பாட்டு வருமே! சீக்கிரமா அனுப்பி வைங்க! புண்ணியமாப் போகும்!

Tuesday, December 04, 2018

அன்பா?? பாசமா? ஆசையா?

கொஞ்ச நாட்கள் முன்னர் எங்கள் ப்ளாகில் புதன்கிழமைப் பதிவில் இந்த அன்பு, காதல்,பாசம், நேசம், ஆசை பத்தி ஒவ்வொருத்தரும் விவரிச்சிருந்தாங்க. நானும் ஏதோ எனக்குத் தோன்றியதைச் சொல்லி இருந்தேன்.  அது பத்தி இன்னும் விரிவா எழுதி இருந்திருக்கலாமோ என்னும் நினைவு மனதில் இருந்து கொண்டே இருந்தது. அது ஒரு புறம் இருக்க இப்போக் கொஞ்சநாட்களாகப் பழைய சில பதிவுகள் ட்ராஃப்ட் மோடில் இருப்பதைப் பார்த்தப்போ இந்தப் பதிவு ஒன்று எழுதி வைச்சிருந்தது கண்களில் பட்டது. இது ஒரு முடிவடையாத விஷயம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அவரவர் அனுபவங்களின் அடிப்படையில். ஆனாலும் நாம் இப்போச் சில நாட்கள் முன்னர் பேசினதுக்கு இது சம்பந்தம் இருப்பதால் அதைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்துச் சிலவற்றை நீக்கி, சிலவற்றைச் சேர்த்து வெளியிடுகிறேன்.

எதுக்கு எப்போ இந்தப் பேச்சு ஆரம்பிச்சதுனு தெரியலை. ஆனால் என் சிநேகிதி
 கவிநயா, அன்பாக இரு, பாசமாக இராதே என்று சொல்லப் போக அதுக்கு திவா அவர் வழியில் விளக்கி இருக்கார். (திவா என்ன விளக்கினார் என்பது எந்தப் பதிவில் என்றும் தெரியலை.) ஆனால் அதுக்கு வல்லியோ பாசம் தான் அன்பாக விரிவடையணும்னு சொல்லி இருக்காங்க. ஒரு வகையில் அதுவே உண்மை. கணவன், மனைவிக்கு இடையில் உடனேயே பாசம் எங்கே வருது??? முதல்லே வருவது ஆசைதானே? ஆசையே பாசமாக மாறுகிறது. வயசு ஆனால் அதுவே அன்பாக மாறுகிறது. ஒரே கணவன், மனைவி தான். ஆனால் சிறுவயசில் ஆசைதான் முன்னிற்கும். குழந்தைகள் பிறந்ததும் தான் மனைவிக்கும், கணவனுக்கும் பாசமே ஏற்படும். வயது ஆக, ஆக ஒருவருக்கொருவர் உடல் கவர்ச்சியை மீறிய அன்பாக மாறுகிறது. என்றாலும் இவற்றில் எல்லாம் எதிர்பார்ப்பு இல்லாமல் அன்போ, பாசமோ, காதலோ வருவதில்லை.

இந்த அன்பே முதலில் வச்சுக்கணும்னாக் கொஞ்சம் கஷ்டமே, என் போன்ற சாமானியர்களுக்கு. அன்பு ஒரு ஊற்றுத் தான் தோண்டத் தோண்ட வரும் நீர் போல் அன்பும் கொடுக்கக் கொடுக்கக் குறையாது தான். ஆனால் அது ஆரம்பத்திலேயே பிரவாகம் எடுத்து ஓடக் கூடாது.ஓடவும் முடியாது. நதியானது ஆரம்பத்தில் ஒரு சிறு ஊற்றாகத் தான் தோன்றுகிறது. எல்லா நதிகளுக்கும் ஆதாரமே சிறியதொரு ஊற்றுத் தான். எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் நீர் அதிலிருந்து பொங்கி வரும். அந்த நீரும் உடனேயே நதியாக மாறிப் போவதில்லை. மெல்ல, மெல்ல அல்லது வேகமாய்க் கீழே விழுந்து, அருவியாய் மாறிக் (இதைக் கணவன், மனைவியின் ஆரம்பக் காலக் காதலுக்கு உவமையாகச் சொல்லலாமோ?)குதித்துக் கும்மாளமிட்டுப் பல்வேறு தடைகளையும், மலைகளையும் தாண்டித் தான் சமவெளிக்கு வருகிறது. பெரிய நதியாக அகண்ட பிரம்மாண்டமான நதியாக மாறிப் பின்னர் அதுக்கு அப்புறமாவே கடலிலும் கலக்கிறது.

அன்பும் அப்படித் தான். வீட்டில் முதலில் சின்ன ஊற்றுப் போல் கிளம்பும் அன்பானது மெல்ல, மெல்ல அக்கம்பக்கம், சுற்று வட்டாரம், உறவு வட்டம் என விரிவடைந்து நாடு, நகரங்களையும் தாண்டி பிரம்மாண்டமான பிரபஞ்சத்தையும் நேசிக்கும் அளவுக்கு விரிவடைய வேண்டும். அத்தகையதொரு அன்பைக் கொடுக்கும் மனதை ஆண்டவன் நமக்கு அருளவேண்டும். ஆனால் அது உடனே வருமா என்றால் வராது. பல சோதனைகளையும், தடைகளையும் தாண்டித் தான் விரிவடையவேண்டும். நதி எவ்வாறு மலைகளையும், மடுக்களையும், மேடுகளையும், பள்ளங்களையும் தாண்டிச் சமவெளிக்கு வந்து பின்னர் தன் பல்வேறு கரங்களையும் நீட்டிக் கொண்டு விரிவடைந்து பாய்ந்து சுற்றுவட்டாரங்களைச் செழிப்படையச் செய்கிறதோ, அவ்வாறே வாழ்க்கையின் சோதனைகளே ஒருவரின் அன்பு வட்டத்தை விரிவடையச் செய்யும். இதற்குப் பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் பிடிக்கும்.

ஆன்மீகத்தின் அன்பு என்பதை வேறுவிதமாய்ச் சொல்லுகின்றனர்.

"ஆசைகள் அறுமின், ஆசைகள் அறுமின்!
ஈசனோடாயினும் ஆசைகள் அறுமின்!" என்றே வாக்கு. சகலத்தையும் துறந்து தான் என்பதையும் மறந்து பரப்பிரும்மத்தில் ஐக்கியம் அடைவதே, அல்லது அதனோடு ஒன்றாய்க் கலப்பதே ஆன்மீகத்தின் எல்லை. ஒரு விதத்தில் பார்த்தால் இப்படி ஈசனோடும் ஆசைகள் அறுப்பது என நினைப்பதே ஓர் ஆசையாகி விடும்.  இந்த அன்பு, பாசம் என்னும் விஷயத்தில் நாமெல்லாம் குருவாய்க் கொண்டாடும் வியாசர் கூட விதிவிலக்கில்லை. தன் பிள்ளையான சுகருக்கு உபநயனம் செய்விக்கவேண்டும் என்று எண்ணுகின்றார். சுகரோ பிரம்மஞானி! பிறந்தப்போவோ சகலத்தையும் அறிந்தவர். அனைத்திலும் பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்றையும் காணாதவர். அவர் என்ன பண்ணினார்னா தன் தந்தை உபநயனம் என்னும் கட்டுக்குள்ளே தன்னைக் கட்டப் போவதை அறிந்து அனைத்தையும் துறந்து, தந்தையின் அன்பையும், பாசத்தையும் துறந்து சென்றுவிட்டார். பிள்ளையைக் காணாத வியாசரோ, மரமே, சுகரைக் கண்டாயோ?? புல்லே சுகரைக் கண்டாயோ?, நீரே, சுகர் எங்கே? மலையே சுகர் எங்கே? எனத் தேடுகிறார். எல்லாமும் இதோ, இதோ, இதோ இருக்கேனே என்கின்றதாம். அப்படி அனைத்திலும் சுகர் நிறைந்து நின்றார். நிற்க முடிஞ்சது அவரால். மனிதனாகப் பிறக்கும் முன்னேயே கிளிக்குஞ்சாக இருந்தப்போவே நேரடியாக ஈசனிடமிருந்தும், அன்னையிடமிருந்தும் தான் பெற்ற பிரம்ம ரகசியத்தைத் தான் மறக்காமல் இருக்கவேண்டும் என்றும், தன் மறுபிறவியிலும் போனபிறவியில் இருந்த கிளிக்குஞ்சு பிறவி மறக்காமல் அதே கிளி முகத்துடன் தோன்ற வேண்டும் எனவும், தாயின் கர்ப்பத்தில் தோன்றாமல் பிறவி எடுக்கவும் வரம் கேட்டுக் கிளிமுகத்தோடு தோன்றியவர் சுகர்.

எல்லோரும் சுகரைப் போல் பற்றற்று இருக்க முடியுமா!

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
என்கிறார் வள்ளுவப் பெருமான். இங்கே அன்பு என்பது மனைவி கணவனிடத்தும், கணவன் மனைவியிடமும் செலுத்தும் அன்பை மட்டும் குறித்து அல்ல என நினைக்கிறேன்.அதே போல் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, மற்ற உறவு, நட்பு ஆகியோரிடம் காட்டும் அன்பு எனப் பரந்து விரிந்ததாய்த் தான் இருக்கும்.அப்போது தான் அத்தகைய இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் இருக்கும்.  இங்கே பண்பையும், பயனையும் இந்தப் பிறவிக்குச் செல்வமும் மறுமைக்கு மோட்சமும் எனக் கொள்ளலாம் என நினைக்கிறேன். பொதுவான கருத்து கணவன், மனைவி இருவரும் ஒத்த கருத்துடையவராகி அவர்கள் செய்ய வேண்டிய நல்லறங்களைச் சேர்ந்து செய்து பிறர்க்கும் உதவுமாறு இருந்தால் அத்தகைய இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உள்ளது எனக் கொள்ளலாம்.

மற்றக் காதல், நேசம், பாசம், ஆசை பத்திப் பின்னர் பார்ப்போம். இதில் காதல் தான் நேசமாக ஆகிறது என நினைக்கிறேன். முதலில் ஆசை தோன்றிக் காதலாகிப் பின்னர் நேசமும், பாசமும் வருமோ! தெரியலை.
*********************************************************************************

இன்னிக்கு ரங்குவை ரொம்பநாள் கழிச்சுப்பார்க்கப் போனோம். கூட்டம் இல்லை. ஆனால் மழை விட்டு விட்டுப் பெய்வதால் முதலில் வேண்டாம்னு இருந்தோம். ஆனால்பின்னர் பளீரென வெயில் அடிக்க சரினு அவசரம் அவசரமாக் கிளம்பினோம். திரும்பி வரும்போது மழையில் மாட்டிக் கொண்டோம். வீட்டுக்குத்திரும்பிடலாம்னு நினைச்சா திடீர்னு மழை! வீட்டுக்கு வந்ததும் நின்னாச்சு! கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து நடந்து வருகிறது. ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பம். பெரிய ரங்குவைச் சரியாப் பார்க்கவிடலை. கூட்டம் இல்லைனாலும் பட்டாசாரியார்கள் விரட்டறாங்க. நம்பெருமாள் எப்போதும் போல் சிரிப்புடன் காணப்பட்டார். ஆச்சு இன்னும் இரண்டு நாளில் அவரும்மும்முரமாக வேலையில் ஆழ்ந்துடுவார். பாட்டரி கார் ஓடவில்லை. மழை காரணம் என்கிறார்கள். அப்போத் தானே முக்கியத் தேவை! ரங்குவைப் பார்க்கணும்ங்கற ஆசையே இன்னும் போகலையே! நான் எதை எப்போ விடப் போறேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!