எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 26, 2011

தெய்வமே, தெய்வமே!

 நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கிறது என்பது எவ்வளவு உண்மை எனப் புரிந்தது. ஏற்கெனவே அம்பத்தூரின் பொதுப் பிரச்னைகளால் அல்லல் தாங்காமல் இங்கிருந்து கிளம்பி வேறே எங்காவது போகலாம்னு நினைச்சோம். அதைச் சரியானபடி செயல்படுத்த முடியாமல் ஏதேனும் தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தன. ஆனால் இந்த புதன்கிழமை பெய்த மழை அதற்கு ஒரு முடிவு கட்டி விட்டது. அம்பத்தூரிலேயே இருக்கணும்; தற்போதைக்கு வீட்டை மட்டும் மாத்துங்க என்பது இறைவன் கட்டளை! முந்தாநாள் 24-ஆம் தேதி புதன் மாலை ஆறரை மணிக்கு ஆரம்பித்த மழை விடாமல் வியாழன் காலை ஐந்து மணி வரை அடித்து ஊற்றியது. என்ன தான் பாரதியை ரசித்தாலும்
"திக்குகள் எட்டும் சிதறி
தக்கத்தீம் தரிகிட, தக்கத்தீம் தரிகிட, தக்கத்தீம் தரிகிட" என்று பாடி ஆடும் அளவுக்கு விவேகம் எங்களிடம் சுத்தமாய் இல்லை. நானாவது கொஞ்சம் ஒன்பதரைக்கெல்லாம் போய்ப் படுத்துவிட்டேன். ரங்க்ஸ் காவல் காத்துக்கொண்டிருந்தார். ஒரு மணி வரையிலும் பெய்த மழையில் ஒண்ணும் பிரச்னை இல்லை; நான் எழுந்து கொண்டதும் அவர் அப்போத் தான் படுத்தார். கண் மூடித் திறக்கிறதுக்குள்ளாக என்பார்கள் அப்படி வந்தது தண்ணீர் வீட்டுக்குள்ளே. கொல்லையில் போய் அடைக்கலாம் என்பதற்குள் வாசல் வழி; வாசலில் அடைப்பதற்குள் கொல்லை வழி! எதுவும் செய்ய முடியவில்லை. :( இரவு ஒரு மணியிலிருந்து நல்லவேளையாக ஏற்கெனவே உயரமான இடங்களில் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்ததைத் தவிர மற்ற சாமான்களைப் பத்திரப் படுத்தினோம். பிரிட்ஜ், ஏசி, கணினி, இண்டக்ஷன் ஸ்டவ் ஆகியவற்றின் இணைப்பைத் துண்டித்தோம். கிட்டத்தட்டக் காலை ஏழரை வரைக்கும் நாற்காலியிலேயே அமர்ந்திருக்க நேர்ந்தது. கழிவறை போனால் கூட அந்தக் கழிவு நீர் திரும்பி வருமோ என்ற பயம். :(
 
Posted by Picasa
ஆறு மணிக்குப் பின்னர் மழை கொஞ்சம் விட்டது. ஏழரை மணிக்குப் பின்னர் தாற்காலிகமாய்த் தங்க வேறே வீடு பார்க்கப் போனால் திடீரென அம்பத்தூரில் வீடுகளே காலி இல்லை. :P உறவினர் ஒருவர் பூட்டி வைத்திருந்த முதல் தளத்தைத் திறந்து தருவதாய்ச் சொல்லி இருக்கிறார். அதன் பேரில் ஞாயிறன்று அங்கே போக எண்ணம்.உடனே தண்ணீரையும் இறைக்க முடியவில்லை. சாலையில் பத்துமணிக்குப் பின்னரே நீர் குறைய ஆரம்பித்தது. ஒன்பதரை மணியில் இருந்து இறைக்க ஆரம்பித்து எல்லாம் முடிந்து நேற்றுக் குளித்துச் சாப்பிடும்போது மூன்று மணி ஆகிவிட்டது. நேற்று மறுபடியும் மழை பயமுறுத்தவே, எங்க வீட்டில் வழக்கமாய்ச் செய்யும் பழக்கத்தின் பேரில், நான் தினமும் பயன்ப்டுத்தும் அம்மிக்குழவியைக்கன்னாபின்னாவென ஒரே ஒரு துணியைச் சுற்றிக் கொட்டும் மழையில் கோபத்தோடு போட்டுவிட்டு வந்தேன். நம்புகிறவர்கள் நம்பலாம். எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷம் முன்பு வரையிலும் கூடக் குழந்தை பிறக்கத் தாமதம் ஆகும் பெண்களை, யாருக்கானும் குழந்தை பிறந்ததும் நடைபெறும் புண்யாஹவசனத்தின் போது, அம்மிக்குழவிக்கு முதலில் குளிப்பாட்டி விட்டுத் துடைத்து, அலங்கரித்துப் பாலூட்டச்சொல்லுவார்கள். பின்னர் பிறந்திருக்கும் புதுக்குழந்தையைக் குளிப்பாட்டி அலங்கரித்து முறம் அல்லது சுளகில் போட்டுத் தொப்புளில் வெல்லக்கட்டியை வைத்துக் குழந்தை பிறக்காத பெண்களிடம் தருவார்கள். அந்தப் பெண் பிறந்த குழந்தையைச் சற்று நேரம் மடியில் வைத்திருந்து விட்டு வெல்லக்கட்டியை எடுத்துக்கொண்டு குழந்தையைத் தாயிடம் திரும்பத் தருவாள். அதன் பின்னர் அவளுக்குக் குழந்தை உண்டாகும் என்று கூறுவார்கள். கல் கூடக் கரையுமாம். அது போல் இப்போவும் அம்மிக்குழவியைக் கொட்டும் மழையில் நன்கு நனையுமாறும், வெயில் அடித்தால் காயும்படியும் போட்டால் வருணதேவன் குழந்தை நனைகிறதே என மனம் வருந்தித் தன் வலிமையைக் குறைத்துக்கொண்டு மழையின் வேகத்தையும், அளவையும் குறைத்துக்கொள்வானாம். ஆனால் இது அடிக்கடி மழை பெய்தால் மட்டுமே செய்யும் ஒன்று.

எங்க தெருவில் பாதிப்பு இல்லாத வீடே இல்லை. ஆனால் பலரும் மாடி கட்டி இருப்பதால் மழைக்காலம் ஆரம்பம் ஆனதுமே மாடிக்கு மாறிவிட்டனர். நாங்க மாடி கட்டவில்லை. இப்போ வீட்டையே இடிக்கணும்னு ஆகிவிட்டது! :( வேறே வழியே இல்லை.

Sunday, August 21, 2011

சிரிப்பாய்ச் சிரிக்கிறோம்!

கண்ணா, மணிவண்ணா, மாதவா, மதுசூதனா, ஸ்ரீதரா, வாசுதேவா! என்னதான் உன் திருவிளையாடலோ தெரியலை. பத்துவருஷமாத் தூங்கிட்டு இருந்த அம்பத்தூர் நரகாட்சியை இப்போப் பார்த்து எழுப்பி விட்டிருக்கியே அப்பா! இது நியாயமா! இது தர்மமா! ஏற்கெனவே இரண்டு பக்கமும் இடி போல் கட்டும் வீடுகளுக்கு வரும் சாமான்களால் மறைக்கப்பட்டிருந்த வீடு இப்போக் கொஞ்சம் தெரியுதேனு சந்தோஷப் பட்டோம்! அது பொறுக்கலையா உனக்கு?? பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்குப் பத்து வருஷம் முன்னாடியே வைப்புத் தொகையாக 7,500/- கட்டி அதை மறந்தும் போனோமே! அதைக் குறித்து யாரையானும் ஏதானும் கேட்டிருப்போமா!

அப்படி இருக்கிறச்சே இப்போப் பார்த்து ஏனப்பா எழுப்பினாய் தெரியலை! ஏற்கெனவே வந்துட்டு இருக்கும் லாரிகளால் பள்ளமாய்ப் போயிருக்கும் தெருவை இவங்க வேறே ஆறடிக்கும் மேல் தோண்டிப்போட்டுப் பள்ளங்களை உருவாக்கி, அதிலே லாரிகள், சைகிள்கள், இரண்டு சக்கர வண்டிகள், மனிதர்கள்னு மாட்டிக்கிறோமே போறாதா? மழையை வேறே நீ பிறக்கப் போறேனு அனுப்பி வைச்சிருக்கியே! மழை வேண்டாம்னு எல்லாம் சொல்லலைப்பா கண்ணா! மழை வேணும்தான். பார்க்கப் போனா நீ இப்போக் கொடுக்கும் மாரிமழையெல்லாம் எந்த மூலைக்கு! ஆனால் இந்தச் சாலைகளில் மழைநீர் செல்ல வழி ஏதப்பா? பள்ளம் எது,மேடு எதுனு ஏற்கெனவே தெரியாது. இப்போ உழுது போட்டிருக்கும் சாலையில் நாற்று நட ஆட்கள் நிற்பது கூடக் கஷ்டமே! எப்படியப்பா நடமாடுவோம்!

அது சரி, அது என்ன! இன்னிக்குத் தான் நீ இனிமேலே பிறக்கப் போறே, அதுக்குள்ளே நேத்து ராத்திரி ஏன் மழையை ஏவி விட்டாயாம்! கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கு மேலே அடிச்சுப் பெய்த மழையிலே வீட்டுக்குள்ளே எல்லாம் தண்ணீர், தண்ணீர், தண்ணீர். இந்த முப்பது வருடங்களில் கண்ணா, என்னப்பா, இத்தனை தண்ணீர் இது வரைக்கும் இந்த வீட்டுக்குள்ளே வந்ததில்லைப்பா. நேற்றுப் பக்கத்து அடுக்கு மாடிக் குடியிருப்புக்குத் தோண்டின பள்ளத்திலே நீர் தேங்கும்னு நினைச்சா, ஜலகண்டேஸ்வரர் வீட்டுக்குள்ளேயே குடியும், குடித்தனமுமா வந்தாச்சு. காலம்பர மூன்று மணி வரை ஒண்ணும் இல்லைனு கொஞ்ச நேரம் கழித்து எழுந்துக்கலாம்னு போய்ப் படுத்தால் சர, சர,சர, சரனு என்ன வேகம், என்ன வேகம்.

நாலு மணியிலே இருந்து தண்ணீரை ஏழு மணி வரை வாரிக்கொட்டினதில் வந்த அலுப்பிலும், களைப்பிலும் உனக்கு இன்னிக்கு ஒண்ணுமே கிடையாதுனு தான் நினைச்சேன். நல்லவேளையா/ (உனக்குத் தான்)ஏதோ பெயர் பண்ணிட்டேன். மழை பெய்தால் தண்ணீர் ஓடும்படியாகப் பண்ணிடு. எத்தனையோ அற்புதங்களைச் செய்யும் கண்ணா, உன்னால் இது கூடவா முடியாது.

புலம்பல்னு நினைக்காதீங்க. நிர்வாகச் சீர்கேட்டின் மேல் வந்த அலுப்பும், களைப்பும்! எல்லாரும் தண்ணீர் போகும் வாய்க்காலிலும், கால்வாய்களிலும் வீடுகள் கட்டிப் பட்டா வாங்கிட்டாங்க. ஏரிகளிலும் கட்டியாச்சு. அதை எல்லாம் யாரும் எதுவும் கேட்கலை. குறைந்த பக்ஷமாக இருக்கும் ஒரு சில ஏரிகளைத் தூர்வாரியாவது, அல்லது கரைகளைப் பலப்படுத்தி, உயர்த்தியாவது வைத்தால், தெருக்களை மேடு, பள்ளம் இல்லாமல் ஒழுங்காகப் பராமரித்தால் இந்தப் பிரச்னையாவது இல்லாமல் இருக்குமே! வேறென்ன கேட்கிறோம்! சுதந்திரம் வந்து 64 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் அடிப்படை வசதிகளே இல்லாமல் கேவலமான நிலையில் வாழ்கிறோமே என நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. :((((



கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம்

Wednesday, August 17, 2011

இளவரசி ஜான்சன் அவர்களே

இளவரசி ஜான்சன்

என்னுடைய சிதம்பர ரகசியம் தொடர் அப்படியே ஒரு வரி, ஒரு வார்த்தை, ஒரு கமா, புல் ஸ்டாப் விடாமல் உங்களோட வலைப்பக்கத்திலே காப்பி,பேஸ்ட் பண்ணி இருப்பதைப் பார்த்ததும் மனம் ரொம்பவே வருந்துகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே விரும்பத் தகாத நிகழ்வுகள். இது ரொம்பவே பாதிக்கிறது. ஏற்கெனவே என்னுடைய பிள்ளையார் தொடர்கள் மழலைகளில் வந்ததை ஒருத்தர் காப்பி,பேஸ்ட் பண்ணிப் போட்டிருந்தார். ஆனால் அவர் கடைசியில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருந்ததால் விட்டுட்டேன். நீங்க பெயரைக் குறிப்பிடாமல் இப்படிச் செய்யலாமா?????????????

அருமை நண்பர் வந்தார், வந்தாரே!

சங்கடஹர சதுர்த்திநண்பரோட கொண்டாட்டங்கள் எல்லாம் ஆரம்பம் ஆகப் போகுது. எனக்கு உயிர் நண்பர் இவர் ஒருத்தர் தான். இவரோட பேச நேரம், காலம் பார்க்க வேண்டாம். எப்போ வேணாப் பேசிக்கலாம்; நல்லா சண்டையும் போடலாம். எதுக்கும் ஒண்ணும் சொன்னதில்லை. நல்லா வாங்கிக் கட்டிப்பார். ஆனாலும் என்னைக் கைவிட்டதில்லை. இன்று அவருக்கு உகந்தநாள். மஹாசங்கடஹர சதுர்த்தி. ஆகவே இன்று வீட்டில் ஒரு கணபதி ஹோமம் நடந்தது. பிரத்யக்ஷமாய் வந்து காட்சி கொடுத்தார். நீங்களும் காண வேண்டுமானால் மேற்கண்ட சுட்டிக்குச் செல்லுங்கள்.

Monday, August 15, 2011

மெளன ராகம் இசைத்த போராளிகள்! 1

நம் பாரதத் திருநாடு சுதந்திரம் பெற்று அறுபத்தி நான்காண்டுகள் ஆகின்றன. இந்தச் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர்களில் நாம் அறிந்த தேசத் தலைவர்கள் பலர் இருந்தாலும், முதன் முதல் நம் தமிழ்நாட்டின் திருநெல்வேலிச் சீமையிலேயே முதல் சுதந்திரக் குரலைக் கொடுத்த தமிழ் வீரன் இருந்தான் என்பதை நம்மில் பலரும் அறிய மாட்டோம். நம் நாட்டின் முன்னாட்பெருமை குறித்து பாரதி,

புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோ,
இன்னலொடு கண்ணீ ரிருப்பாகி விட்டனவே!

ஆணெலாம் பெண்ணாய் அரிவையரெ லாம்விலங்காய்
மானெல்லாம் பாழாகி மங்கி விட்டதிந்நாடே!

ஆரியர்கள் வாழ்ந்துவரும் அற்புதநா டென்பதுபோய்ப்
பூரியர்கள் வாழும் புலைத்தேச மாயினதே!

வீமாதி வீரர் விளிந்தெங்கு போயினரோ
ஏமாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே!"

என மனம் வருந்திப் பாடியுள்ளார். ஆனால் பாரதிக்கும் பல ஆண்டுகள் முன்னரே நம் நாட்டில் சுதந்திர வேட்கை கொண்டு, “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்; என்று மடியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாடி வருந்திய வீரத் திருமகன்களும், மகள்களும் இருந்திருக்கின்றனர். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் முக்கியமான போராட்டக்காரன் பாரதி. பாரதி மட்டுமா? தமிழ் நாட்டின் பல இளைஞர்கள், இளம்பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் பலரை நாம் அறிய மாட்டோம். தாங்கள் கொண்ட பணியிலேயே கருத்தாய் தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளாமல், வெளிச்சத்திற்குள் வராமல் மறைந்தவர்கள் பலர். மந்திரங்களுள் அஜபா மந்திரம் என ஒன்றுண்டு. வெளிப்படையாக ஜபிக்காமல் மனதிற்குள்ளாகவே ஜபிக்க வேண்டும். ஜபிக்க ஜபிக்க நாளாவட்டத்தில் மந்திரம் உள்ளேயே ஓடும். வெளி நாட்டத்தைக்குறைத்துக்கொண்டு உள் நோக்க உதவி செய்யும். அப்படி மெளனமாகத் தங்கள் இருப்பை வெளிச்சம் போட்டுக் காட்டாமல் மறைந்த வீரர்கள் பலருண்டு. அவர்களுள் சிலரை மட்டும் இங்கே பார்ப்போமா? முதலில் அனைவருக்கும் வெளியே தெரியாத பூலித் தேவன் பற்றிப் பார்ப்போம். பொதுவாக 1857-ல் ஏற்பட்ட சிப்பாய்க் கலகத்தையே முதல் சுதந்திரப் போராட்டம் எனப் படித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கும் முன்னால் நம் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தவர்களுள் முதன்மையானவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்த பாளையக்காரர் ஆன பூலித் தேவன் ஆவார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்டக் களத்தின் தகவல்களே முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப் பட்டுவிட்டது. நாமும் அதில் ஆர்வம் காட்டாமலே பொதுவாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட சிப்பாய்க் கலகத்திற்கு நூறாண்டுகளுக்கு முன்பே பூலித்தேவன் ஆங்கிலேயத் தளபதி இன்னிங்ஸ் என்பவரை எதிர்த்துக் குரல் கொடுத்தார். அவரோடு யுத்தமும் செய்தார். இங்கே அவரின் வாழ்க்கை வரலாற்றை விவரித்தால் கட்டுரை பெரிதாகிவிடும்.

திருநெல்வேலிச் சீமையில், “நெல்கட்டான் செவ்வல்” என்னும் சின்னஞ்சிறு பாளையத்தின் அதிபதியான பூலித்தேவர் வியாபாரம் செய்ய வந்தவர்கள் ஆள்வதா என்ற கோபத்தில் என் அப்பன், பாட்டன், பூட்டன் என தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வந்த இந்த பூமிக்கு எங்கிருந்தோ வந்த வெள்ளையனுக்கு ஏன் கப்பம் கட்டவேண்டும் என எதிர்த்துப் போரிட்டார். வீரபாண்டியக் கட்டபொம்மனும் கூட இவருக்குப் பின்னர் தான். சொல்லப் போனால் கட்டபொம்மன் அப்போது பிறக்கவே இல்லை. அதன் பின்னர் மூன்றாண்டுகள் கழிந்தே 1760- கட்டபொம்மன் பிறந்தான். கட்டபொம்மன் குறித்த என் கருத்து மாறுபட்டது. ஆகவே இங்கே கட்டபொம்மன் குறித்துச் சொல்லப் போவதில்லை. பூலித்தேவன் தன் வாழ்நாள் முழுதும் ஆங்கிலேயப் படைகளை எதிர்த்துப் போரிட்டதாய் எழும்பூர் ஆவணக்காப்பகங்களில் ஆவணங்கள் சொல்லுவதாய்த் தெரிய வருகிறது. இது வரைக்கும் இல்லாத அளவுக்கு சுமார் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட பூலித்தேவர், எல்லாப் போர்களிலும் கும்பினியாரை வெற்றி கொள்ளவே, கோபம் கொண்ட கும்பினியார் முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என எண்ணி, சுதேசிப் படை என்ற பெயரில் எல்லாப் பாளையக்காரர்களின் படைகளையும் வளைத்துப் போட்டுத் தமிழன் ஒருவனையே அதற்குத் தளபதியாக்கி பூலித்தேவனை வெல்ல அனுப்பி வைத்தார்கள். இவன் தான் மருதநாயகம் என்னும் கான்சாகிப். மருதநாயகம் ஒன்றும் பெரிய தியாகி எல்லாம் இல்லை. சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாற்போல் சேவகம் பண்ணியவர் தான். கான்சாகிபோடு மூன்றாண்டுகள் போர் புரிந்த பூலித்தேவன் கடைசியில் 1761-ல் தோல்வி கண்டார். ஆனால் கான்சாகிபின் கைகளில் மாட்டாமல் தப்பி ஓடி ஒளிந்து கொண்டு மீண்டும் படைகளை ரகசியமாய்த் திரட்டி வந்தார். கடைசியில் கான்சாகிபுக்கும் கும்பினியாருக்குமே சண்டை மூள கான்சாகிப் தூக்கில் போடப்பட்டான். தூக்கில் போடப் பட்டதால் தியாகியாகவும் ஆனான். ஆனாலும் அவன் இருக்கையில், நெல்கட்டும் செவ்வல், வாசுதேவன் நல்லூர், பானையூர் ஆகிய இடங்களில் உள்ள பூலித்தேவனின் கோட்டைகள், அனைத்தையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டான்.

கான்சாகிபின் மரணத்திற்குப் பின்னர் ஒளிந்திருந்த பூலித்தேவன் கடலாடியில் இருந்து வந்து பாளையத்தைக் கைப்பற்ற, கும்பினியாருடன் மீண்டும் போர் நடந்தது. ஆனால் இம்முறை பூலித்தேவனுக்குப் பெருத்த சேதம் ஏற்பட அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப் பட்டார் என ஒரு சாராரும்,மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் மறைந்தார் என ஒரு சாராரும் கூறுகின்றனர். கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட பூலித்தேவர் சங்கரன் கோயிலில் ஈசனை வழிபட வேண்டும் என்று கூறியதாகவும், அவ்வாறே அனுமதிக்கப்பட்ட அவர் கோயிலில் அம்மன் சந்நிதிக்கு அருகே மர்மமான முறையில் மறைந்ததாகவும் ஒரு கூற்று உண்டு. சங்கரன் கோயிலில் அம்மன் சந்நிதி அருகே பூலித் தேவன் அறை என்ற பெயரில் ஒன்று இன்றளவும் உள்ளது. ஆனால் பூலித்தேவன் கும்பினியார்களால் சிறையிலேயே கொல்லப்பட்டிருக்கவேண்டும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்த மர்மம் இன்னும் வெளிவரவில்லை.

இவருக்கு அடுத்த விடுதலைப் போராளி வீரமங்கை வேலு நாச்சியார்.

இவரும் தென்பாண்டி நாட்டைச் சேர்ந்தவரே. பெண்கள் அடக்கப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள், அவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைக்கவில்லை என நாம் அனைவரும் இன்றும் கூறிக்கொண்டிருக்கிறோம். பெண் இன்னும் விடுதலை பெறவில்லை என்றும் கூறுகிறோம். ஆனால் இவை எதையும் பற்றிக் குறை கூறாமல் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட போராளிகளுள் பூலித் தேவனுக்கு அடுத்தபடியாகக் கூறத்தக்கவர் வீரமங்கை வேலு நாச்சியார் ஆவார். இவரும் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடியவரே. போர்க்களம் சென்று போராடும் அளவுக்குத் திறமையும், வலிவும் உடையவர். இதிலிருந்தே பெண்கள் மனது வைத்தால் எதையும் செய்ய முடியும் என்பது புரிகிறதல்லவா? வீர மங்கை வேலு நாச்சியார் ராமநாதபுரம் சேதுபதி அரசரின் மகளாகப் பிறந்தவர். சிவகங்கைச் சீமையை ஆண்டு வந்த முத்துவடுகநாதருக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டு வெள்ளச்சி என்ற பெண்ணையும் பெற்றவர். முத்து வடுகநாதருக்கு சரியான ஆலோசனைகள் கூறும் நால்வரையும் காவல் தெய்வங்கள் என அழைப்பர். அத்தகையதொரு காவல் தெய்வங்கள் பட்டியலில் முதல் இடத்தில் அவரின் முதல் மனைவியான வேலுநாச்சியார் இடம் பெற்றார். மற்ற மூவரில் பெரிய மருது, சின்ன மருது என அழைக்கப்பட்ட மருது பாண்டியர்களும், முத்து வடுகநாதரின் பிரதானியான தாண்டவராயப் பிள்ளையும் ஆவார்கள். முத்துவடுகநாதரும் அவரின் இளைய மனைவியும் கும்பினிப் படைகளின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்படவே வேலு நாச்சியார் தம் மகளுடனும், தாண்டவராயப்பிள்ளை, மருது பாண்டியர்கள் துணையோடும், விருபாக்ஷி பாளையத்தில் போய் அடைக்கலம் பெற்றார்.

கம்பளத்து நாயக்கர்களைக் குடிமக்களாய்க் கொண்ட அந்தப் பாளையத்திலே பாதுகாப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்தது வீண் போகவில்லை. அங்கிருந்து ஆங்கிலேயருக்கு உதவிகள் புரிந்து பாளையக்காரர்களையும், ராமநாதபுரம், சிவகங்கை அரசர்களையும் தொந்திரவு செய்து கொண்டிருந்த ஆற்காட்டு நவாபை விரட்டி அடிக்க ஹைதர் அலியின் உதவியை வேலு நாச்சியார் நாடினார். உருதுவில் சரளமாகப் பேசும் அளவுக்குத் திறமை பெற்றிருந்த வேலு நாச்சியார், ஹைதர் அலியோடு தாண்டவராயப் பிள்ளையின் உதவியோடு தொடர்பு கொண்டு உதவிகள் பெற்று ரகசியமாக சிவகங்கையை விடுவிக்க முயற்சிகள் செய்து வந்தார். தாண்டவராயப் பிள்ளையின் முயற்சிகள் பலிக்காத வண்ணம் ஆற்காடு நவாப் போட்ட திட்டங்கள் பலித்தன. சுதந்திரத்திற்காகப் போராடும் கிளர்ச்சிக்கார மக்களைப் பிடித்துச் சிறையில் போட்டனர். இதனால் மனம் வருந்திய தாண்டவராயப் பிள்ளை மரணமடைய, வேலுநாச்சியார் மருது பாண்டியர் மூலம் ஹைதர் அலியின் உதவிகளைப் பெற்றார். மதுரைக்கு அருகே கோச்சடையில் ஆற்காட்டு நவாபின் படைகளோடு மோதி நவாபின் படைகளைத் தோற்கடித்தார். அதன் பின்னர் மானாமதுரையில் தங்கி இருந்த கும்பினிப் படைகளையும் விரட்டி அடித்தார். தம் படைகளை மூன்று பிரிவாகப் பிரித்த ராணி வேலு நாச்சியார் சிவகங்கைப் பிரிவுக்குத் தானே தலைமை தாங்கி நடத்தினார்.

திருப்பத்தூரிலிருந்த பிரிவுக்கு நன்னியம்பலம் என்பவரும், காளையார் கோயிலில் இருந்த பிரிவுக்கு மருது பாண்டியர்களும் தலைமை தாங்கி நடத்தி மும்முனைத் தாக்குதல் கொடுத்தனர். நவாப் படைகள் பின்வாங்க, நாச்சியார் எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன் சொந்த நாடான சிவகங்கைக்கு வெற்றிப் பெருமிதத்துடன் சென்றார். அவர் கூடவே அவர் மகள் வெள்ளச்சியும் சென்றார். வெள்ளச்சிக்கு முடி சூட்டிப் பெரிய மருதுவைத் தளபதியாகவும், சின்ன மருதுவைப் பிரதானியாகவும் ஆக்கித் தம் நன்றிக்கடனைத் தீர்த்தார். வெள்ளச்சிக்குத் திருமணம் ஆன சில நாட்களில் கும்பினிப் படை மீண்டும் படை எடுத்து வந்தது. ஆனால் அப்போது மருது பாண்டியர்களில் சின்ன மருதுவின் ஆலோசனைப் படி சமாதானம் செய்து கொண்டனர். வேலு நாச்சியார் அவரின் மகளான வெள்ளச்சியின் மரணத்தால் மனம் உடைந்தார் எனவும், அவர் உயிருடன் இருக்கையிலேயே அவர் மருமகன் பெரிய உடையணத் தேவரை அரசராக்கினார்கள் எனவும் கேள்விப் படுகிறோம். 1800-ஆம் ஆண்டு சந்தேகாஸ்பதமான சூழ்நிலையில் வேலு நாச்சியார் மரணம் அடைந்தார் என ஒரு குறிப்புச் சொல்கிறது. இன்னொரு குறிப்பு மகளைத் தொடர்ந்து பேத்தியும் மரணமடையவே இதயம் பாதிக்கப்பட்ட வேலு நாச்சியார் சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்றார் என்று கூறுகிறது. ஆனால் அதன் பின்னர் அவர் விருபாக்ஷி அரண்மனைக்கு வந்து சந்தேகத்துக்குரிய முறையிலேயே இறந்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆண் வாரிசு இல்லாத நாட்டை அரசே ஏற்று நடத்தலாம் என்ற வெள்ளையர்களின் சட்டப்படித் தங்களுடன் சேர்த்துக்கொள்ள வெள்ளையர்கள் செய்த சூழ்ச்சியாகவும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Saturday, August 13, 2011

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையான ஆண்டாள் அவதரித்த திருநாள் ஆடிப்பூரம் ஆகும். ஆண்டாளின் இயற்பெயர் கோதை ஆகும். திருமாலின் மூன்று சக்திகளாய்க் குறிப்பிடப் படும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி என்ற மூவரும் சேர்ந்து ஓருருவாய் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததாய் ஐதீகம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கே முதல் மரியாதை. கருவறையில் ஆண்டாள் வலப்புறம் இருக்க இடப்புறம் கருடாழ்வாரோடு பெருமாள் காட்சி அளிப்பார். இந்த அமைப்பு வேறெந்தப் பெருமாள் கோயிலிலும் காண முடியாத ஒன்றாகும். எம்பெருமானின் பல்வேறு ஆயுதங்களும் அவரின் சங்கும் எம்பெருமானின் அம்சங்களாகவே போற்றப்படுகின்றன. அந்த அம்சங்கள் யாவும் சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்றவை பூமியில் ஆழ்வார்களாக அவதரித்துப் பெருமானின் புகழை இனிய தமிழ்ப்பாமாலைகளால் பாட பார்த்தாள் பிராட்டி! தான் மட்டும் என்ன சளைத்தவளா? அவளும் பூமியில் அவதரித்தாள். எம்பெருமானைத் தவிர வேறொருவரை மனதாலும் நினைக்க இயலாது என்பதை அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே உறுதிபடத் தெரிவித்தாள். தான் சூடிக்களைந்த மாலையையே ரங்கமன்னாருக்கும் அளிக்க அவனும் மிகவும் உவப்புடன் அதை அணிந்து கொண்டான்.ஆனால் இதை ஒரு நாள் நேரில் பார்த்த பெரியாழ்வாரோ மனம் நொந்து போய் அந்த மாலையை ரங்கமன்னாருக்குச் சாற்றவில்லை. ஆனால் என்ன அதிசயம்! அன்றிரவே ரங்கன் ஆழ்வாரின் கனவில் வந்து ஆண்டால் சூடிக்கொடுத்த மாலையே தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெளிவுபடக் கூறினான். மேலும் கோதை யார் எனவும், அவள் தனக்கெனவே, தன்னைத் துதிக்கவும், பாமாலைகளால் வாழ்த்திப் பாடவுமே அவதரித்தவள் என்பதையும் தெளிவாக்கினான். பெரியாழ்வார் தாம் துளசி வனத்தில் கண்டெடுத்த குழந்தைச் செல்வம் சாட்சாத் தாயாரின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டு எம்பெருமானையே மனதால் ஆண்ட அவளைத் தம் வாயால் அன்று முதல் ஆண்டாள் என்றே அழைக்க ஆரம்பித்தார். ஆண்டாளும் தினமும் பெரியாழ்வார் கட்டிக்கொடுக்கும் மாலையைத் தான் சூடிக்கொண்டே ரங்கனுக்கு அனுப்பி வைத்தாள். அதோடு மட்டுமா? ரங்கனுக்கும் தனக்கும் திருமணம் நடப்பதாயும் கனவு கண்டாள்! அதுவும் எப்படி!

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட க் கனாக்கண்டேன் தோழீ நான்!

என ஆரம்பித்துக் கடைசியில் தன் திருமணம்

மத்தளம் கொட்ட வரிசங்கங்கள் நின்றூத
முத்துடைத் தாமநிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்று ரங்கனின் கரம் பற்றுவதையும், அவன் தன் கால்களைத் தூக்கி அம்மி மேல் வைப்பதையும் சப்தபதியில் தான் அவனுடன் சென்றதையும் இவ்வாறு குறிப்பிடுகிறாள்.

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ நான்!

என்றும் கூறும் ஆண்டாள், அவள் காலத்திலேயே சகோதரர்கள் உடனிருக்கத் தான் பொரியிட்டதையும் கூறுவது

வரிசிலை வாள்முகத்து என்னைமார்தாம் வந்திட்டு
எரிமுகம் பார்த்தென்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கை மேல் என் கை வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!

திருமணச் சடங்குகள் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையிலும் மாறாமல் இருப்பதையும் இந்தப் பாடல் சுட்டிக் காட்டுகிறது. ஆண்டாள் தமிழை மட்டும் ஆளவில்லை. அனைவர் மனதையும் ஆண்டாள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மதுரைக் கள்ளழகரிடம் விண்ணப்பமும் வைக்கிறாள். அதற்காக அவருக்கு அக்கார வடிசில் சமைத்துப் படைப்பதாகவும் ஆசை காட்டுகிறாள். அதுவும் எவ்வளவு! எல்லாம் நூறு தடாவாம்.

நாறு நறும் பொழில் மாவிரும் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் பராவி வாய் நேர்ந்து வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ!

ஆஹா! தடான்னா என்ன சும்மாவா! பெரிய பெரிய அண்டாக்கள். அதிலே நூறு தடா வெண்ணெய் காய்ச்சி, நூறு தடா அக்கார வடிசில். இதிலே முக்கியமாய்க் கவனிக்க வேண்டியவை என்னன்னா, மதுரை, திருநெல்வேலி போன்ற தென் மாவட்டங்களில் எனக்குத் தெரிந்து அண்டாக்களில் தான் சமைப்பார்கள். இதுவும் ஆண்டாள் காலத்திலேயே வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. அது போகட்டும்! இந்தப் பிரார்த்தனையை வாய்மொழியாக நேர்ந்து கொண்டதோடு இல்லாமல் பாமாலையாகவும் பொறித்து வைத்த ஆண்டாளுக்குத் தன் காலத்தில் இதை நிறைவேற்ற முடியவில்லை. அவளுக்கு எப்படியோ ரங்க மன்னார் தன்னை ஏற்றுக்கொண்டானேனு சந்தோஷம். ஓட்டமாய் ஓடிவிட்டாள். தன் மனதுக்கினியவளிடம் அவள் பிரார்த்தனையை நினைவும் செய்யவில்லை அந்த வடபத்ரசாயி!

ஆனால் இதற்கெனப் பொறுப்பு வேறொருத்தரிடம் கொடுக்கப் பட்டுவிட்டது என்பதும், அதுவும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அவரால் நிறைவேற்றப்பட்டதையும் நாம் அறிய வருகிறோம். ஆம். ஸ்ரீராமாநுஜர் அவதரித்து, உபதேசம் பெற்றுத் தம் கொள்கைகளைப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் திருமாலிருஞ்சோலைக்கும் சென்றிருந்தார். அங்கே ஆண்டாளின் வாய்மொழிப் பிரார்த்தனையையும், அது நிறைவேறாமல் இருந்ததையும் அறிந்து கொண்டவர் அவளுக்காகத் தாம் அதை நிறைவேற்றி வைக்கிறார். அத்துடன் அதை மறந்தும் விட்டார். அதன் பின்னர் சில திவ்ய தேசங்கள் சென்று ஆண்டாளின் ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறார். அங்கே சந்நிதிக்குள் நுழைகிறார் ஸ்ரீராமாநுஜர். ஜலங், ஜலங், ஜலங், சலங்கைச் சத்தம், க்ணிக், க்ணிக், க்ணிக், மெட்டி ஒலி. ஓர் அழகான விக்கிரஹம் போன்ற பெண்ணுரு இளநகையுடன் நடந்து வருகிறது. பெண்ணா? விக்கிரஹமா?? கோயிலில் பூஜை செய்யும் பட்டாசாரியார்களில் இருந்து அனைவரும் திகைப்புடன் பார்க்க, கருவறையில் அர்ச்சாவதாரமாக இருந்த ஆண்டாளைக் காணவில்லை.

அவள் தான் நடந்து வருகிறாள். அதுவும் ஸ்ரீராமாநுஜரைப் பார்த்து, “என் அண்ணாரே!” எனக் கூப்பிட்ட வண்ணம் வருகிறாள். அனைவருக்கும் வியப்பு.. இப்படி ஆண்டாளாலேயே அண்ணன் என அழைக்கப்பட்டதால் ஆண்டாள் ஸ்ரீராமானுஜரை முன்னிறுத்தி, “பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே “கூறப்படுகிறாள். இப்படிப் பல வகையிலும் சிறப்புப் பெற்ற ஆண்டாளை ரங்க மன்னார் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதாயும் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வருமாறும் கட்டளையிட்டானாம். அதன்படி ஸ்ரீரங்கம் சென்றனர் இருவரும். அங்கே சந்நிதிக்குச் செல்லும் போதே ஆண்டாள் திடீரென ஒளிமயமாகக்கருவறையில் ஐக்கியம் ஆகப் பெரியாழ்வார் பரிதவித்துப் போனாராம். ஒரு சிலர் காவிரிக்கரையிலேயே குளிக்கையில் ஆண்டாள் மறைந்ததாகவும் சொல்கின்றனர். ஆனால் எப்படியோ ஆண்டாள் ஸ்ரீரங்கத்தில் பெருமானோடு ஐக்கியமானது குறித்துச் சந்தேகமே இல்லை. பெண்ணைப் பெருமாளிடமே ஒப்படைத்தாலும் பெண்ணைப் பெற்றவருக்கு மன வருத்தம் இருக்குமே. புலம்புகிறார்.

ஒருமகள் தன்னை உடையேன்,
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன்
செங்கண்மால் கொண்டு போவானோ’

என்றெல்லாம் புலம்பினாராம் ஆண்டாளின் பிரிவாற்றாமை தாங்காமல். அதன் பின்னர் ரங்க மன்னாரிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாராம். தன் மகளை ஊரறிய, உலகறிய ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லையேல் பலரும் பலவிதமாய்ப் பேசுவார்கள் எனக் கெஞ்சினாராம். மாமனார், மாப்பிள்ளை ஹோதா அந்தக் காலத்தில் மட்டுமில்லாமல் எந்தக் காலந்த்திலும் உண்டு போலும்! :D பின்னர் மனமிரங்கிய ரங்கன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து ஒருபங்குனி உத்திரத் திருநாளில் கோதையைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம். அதோட போச்சா! அங்கேயே தங்கிவிட்டான் வீட்டோடு மாப்பிள்ளையாக!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது.

பல்வேறு காரணங்களால் தாமதமான ஆடிப்பூரப் பதிவு. :( மன்னிக்கவும்.

Thursday, August 11, 2011

”த.ம.அ. 10ம் ஆண்டு நிறைவு - மரபுப் பதிவுகள்: முளைக்கொட்டு உற்சவம்

ஆடி பிறந்தால் அழைத்து வரும் என வழக்குச் சொல் அல்லது சொலவடை உண்டு. ஆடிமாதம் பிறந்ததுமே ஒவ்வொரு பண்டிகையாக அது அழைத்துவரும் என்பதையே அவ்வாறு கூறுகின்றனர். ஆடி மாதம் முதல் மூன்று தினங்கள் நதிகள் அனைத்துக்குமே மாதவிலக்கு ஏற்படும் எனவும் அந்த முதல் மூன்று நாட்கள் நதிகளில் குளிக்கக் கூடாது எனவும் சொல்வார்கள். விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் மலைகளில் விழும் மழை நீர் வெள்ளப் பெருக்காகப் புது வெள்ளம் வரும் அல்லவா? அந்தப்புது வெள்ளத்தில் குளிக்க வேண்டாம் என்பதற்காகவும் இருக்கலாம். அடுத்து வரும் தினங்களில் ஆடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகையில் எல்லாக் கோயில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடை பெறும். சில கோயில்களில் ஆடிப்பூர நக்ஷத்திரத்தன்று நடத்துவார்கள். சில கோயில்களில் ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும். சிலர் சாகம்பரியாக அன்னையைக் காய், கனிகளால் அலங்கரிப்பார்கள். சிலர் முளைப்பாரி என்னும் முளைக்கொட்டால் அம்மனை வழிபடுவார்கள். மதுரையின் முளைக்கொட்டு உற்சவம் குறித்து இப்போது பார்ப்போம்..



மதுரை மீனாக்ஷி கோவிலில் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அங்கே ஒவ்வொரு மாதமும் அன்னைக்கு விழாதான். என்றாலும் இப்போது நாம் பார்க்கப்போவது முளைப்பாரி உற்சவம் பற்றி மட்டுமே. மதுரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றுவார்கள் இந்த உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் படுகிறது. அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் முளைக்கொட்டு உற்சவம் நடக்கும். எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் எனலாம். மதுரை எப்போதுமே ஒரு பெரிய கிராமம் என்றே பெயர் பெற்றது. ஆகையால் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு அவளுக்கு முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.



ஆனால் இதற்கான ஏற்பாடுகள் கிராமங்களில் எல்லாம் பங்குனி, சித்திரை மாதங்களிலேயே ஆரம்பிப்பார்கள். சிலர் நோன்பும் இருப்பது உண்டு. முளைப்பாரி அல்லது முளைக்கொட்டு போடுவதற்கு வயதுக்கு வந்த, வராத சிறுபெண்களில் இருந்து குழந்தைப்பேறு இழக்கும் தகுதியை அடைவதற்கு முன்னர் உள்ள பெண்கள் வரை போடலாம் என்று சிலர் கூற்று. ஆனால் பொதுவாக எல்லாப் பெண்களுமே முளைப்பாரி போட்டு நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதற்கென விரதம் இருப்பதால் சுத்தம், ஆசாரம் கடைப்பிடிக்கப்படும். முளைப்பாரியைச் சில கிராமங்களில் அனைத்து வீட்டினருக்கும் பொதுவாகவும் போடுவார்கள். அப்போது பிள்ளையார் கோயில், பஜனை மடம் போன்ற பொது இடங்களில் எல்லாப் பெண்களும் கூடி முளைப்பாரி போடுவதுண்டு. ஆனால் நகரங்களில் அவரவர் வீடுகளில் போட்டு ஆடிப் பெருக்கன்றோ அல்லது முளைப்பாரி உற்சவம் முடிவு நாளன்றோ ஆற்றில் விட்டுக் கரைப்பார்கள். மதுரையில் நாங்கள் வீட்டிலேயே முளைப்பாரி போடுவோம். முளைப்பாரி போடும் நாளன்று விடிகாலையிலிருந்தே சிறு பெண்கள், சிறுமிகள் போன்றோர் சிறு பானையை எடுத்துக்கொண்டு பல வீடுகளிலும் முளைப்பாரிக்கான தானியங்களைச் சேகரிப்பதும் உண்டு. இன்று பெரும்பான்மையாக அம்மாதிரியான ஒரு நிகழ்வைப் பார்க்கவே முடிவதில்லை.

முளைப்பாரி போடும் விதம்:


இதற்கெனத் தனி மண் குடம், அல்லது பானை இருத்தல் நல்லது. பானை அல்லது குடத்தின் அடிப்பகுதியைக் கவனமாக உடைத்து எடுத்துவிட்டு அடியில் கம்பால் சதுரமாய்க் கட்டி அல்லது ஓலைப் பாயைப் போட்டுவிட்டு, வாய்ப்பகுதி தரையில் இருக்குமாறு வைப்பார்கள். இப்போதெல்லாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் எவர்சில்வர் குடங்கள், பானைகளில் போடுவதாய்க் கேள்விப் படுகிறோம். ஆனால் நான் இன்னமும் நேரில் பார்க்கவில்லை. முதலில் பானையில் கரம்பை எனப்படும் மண்ணை நிரப்புவார்கள். அதன் மேல் இயற்கை உரங்களான சாணி, சாம்பல், ஆட்டுப் புழுக்கை போன்றவற்றைப் போடுவார்கள். இல்லாதவர்கள் ஆர்கானிக் உரம் எனக் கிடைப்பதைப் போடலாம். இதன் பின்னர் விதைகளைத் தூவ வேண்டும். பொதுவாகப் பச்சைப்பயிறே பெரும்பாலானவர்கள் முளைப்பாரிக்கு விடுவார்கள். என்றாலும் தட்டைப் பயிறு, சிறு பயிறு, சோளம்,கம்பு போன்றவையும் சில கிராமங்களில் போடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். ஊரின் செழிப்பைப் பொறுத்தும் சில கிராமங்களில் முளைக்கொட்டு அமையும். அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு. படரும் கொடிகளின் விதைகளை எப்போதுமே போட்டுப் பார்த்ததில்லை. விதைகளைப் போட்டதும் மேலேயும் கொஞ்சம் மண்ணைத் தூவ வேண்டும். இதை முளைக்கொட்டு அல்லது முளைப்பாரி என்பார்கள்.



முளைப்பாரி அல்லது முளைக்கொட்டுப் பானைக்குக் காலை, மாலை இருவேளையும் வீட்டுப் பெண்கள் வழிபாடு நடத்துவார்கள். அந்நிய மனிதர்கள் சுத்தமாக இருந்தால் மட்டுமே வீட்டிற்குள் வர முடியும். இப்போல்லாம் தெரியாது. தினமும் பாடல், ஆடல், கோலாட்டம், கும்மி என முளைப்பாரிக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டுப் பெண்கள் கூடிப் பாடி ஆடுவார்கள். இதிலே போட்டியும் நடக்கும். யார் வீட்டு முளைக்கொட்டு நல்ல உயரமாக வளர்கிறது என்றெல்லாம் பார்ப்பார்கள். சிலர் முளைப்பாரி உயரமாக வந்தால் நினைத்தது நடக்கும் என வேண்டிக்கொள்வதும் உண்டு. ஆனாலும் முளைப்பாரி உயரமாக வளர்ந்தால் தான் அந்த வருஷம் விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பது பொதுவானதொரு நம்பிக்கை. ஊர் செழித்தால் தான் நாம் செழிப்பாக இருப்போம் என்பதால் பொதுவானதொரு இடத்தில் முளைப்பாரி போட்டுக் கடைசி நாளன்று ஊர் மக்கள் அனைவருமாக முளைப்பாரியை எடுத்துச் சென்றுப் பொதுக்கிணற்றிலோ, அல்லது ஆற்றிலோ கரைப்பதும் உண்டு.

முன்பெல்லாம் முளைப்பாரி ஊர்வலம் மிகப் பெரியதாக இருக்கும். கூச்சமில்லாமல் பெண்கள் தங்கள் தலையில் முளைப்பாரியைத் தூக்கி வருவார்கள். இப்போதெல்லாம் பார்க்க முடிகிறதில்லை. இந்த உற்சவம் மதுரையில் ஆரம்பிக்கையில் அம்மனுக்கு மட்டுமே கொடியேற்றுவார்கள். ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப் படும். பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தருவாள். வரும் முளைப்பாரிகளை எல்லாம் அம்மனுக்கு எதிரே வைத்திருப்பார்கள். பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கடைசி நாள் கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைப்பதோடு அம்மனுக்கு உற்சவம் முடியும்.

Tuesday, August 09, 2011

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??


ஆவணி அவிட்டம்:

இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும். வரும் ஞாயிறு அன்று இதைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

நன்றி:தெய்வத்தின் குரல்!

டிஸ்கி: ஸ்ரீநியின் வேண்டுகோளை அடுத்து இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.


இங்கே

Saturday, August 06, 2011

அடுப்புப் போட்டாச்சு, சமைக்க வாங்க! சாப்பிடலாம்!

Posted by Picasa
இந்த முறை ஊருக்குப் போனபோது மாரியம்மன் கோயிலில் பால் காய்ச்ச வேண்டி மடைப்பள்ளிக்குச் சென்றேன். அங்கே உள்ள மண் அடுப்பைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். இங்கே உள்ள இளம்பெண்களுக்கு இந்த அடுப்பைப் பற்றித் தெரிந்திருக்க நியாயம் இல்லை. களிமண்ணைப் பிசைந்துக் கைகளால் போடப் பட்ட அடுப்பு இது. இம்மாதிரி அடுப்பைத் தான் எங்க மாமியார் வீட்டிலேயும் நானும், என் மாமியாருமாப் போடுவோம். ஹிஹிஹி, முக்கியமான இடங்களில் அவங்க தான் போடுவாங்க, நானும் கூடமாட உதவி செய்திருக்கேன். இங்கே பார்க்கும் இந்த அடுப்பில் இரண்டு முக்கிய அடுப்புகளும், நடுவில் ஒரு கொடி அடுப்பும் இருக்கின்றன. வலப்பக்கமும் இடப்பக்கமும் விறகுகளை நிறைய வைத்து எரித்துப் பெரிய அளவுச் சமையலைச் சமைக்க வேண்டியும், நடுவில் உள்ள துவாரத்தின் மூலம் வரும் வெப்பம் குறைவான ஜூவாலையின் மூலம் நிதானமாய்ச் சமைக்க வேண்டியவற்றையும் சமைக்கலாம். இதுவே இன்னும் கொஞ்சம் பெரிய வாய் உள்ளதும், பெரிய அடுப்புகளை வைக்கிறாப் போலவும், கொடியும் இன்னும் பெரிதாகவும் இருக்கும். கூடவே இன்னும் இரண்டொரு அடுப்புகளும் இருக்கும். அப்படி இருந்தால் அது கோட்டை அடுப்பு. ஒரே சமயம் வெண்கலப்பானைகளிலோ, அடுக்குகளிலோ, தவலைகளையோ வைத்துச் சமைக்கும்படி கல்யாணச் சமையல் செய்யப் பயன்படும் அடுப்பே கோட்டை அடுப்பு.

அநாயாசமாகப் பெரிய அடுக்குகளை வைத்துச் சமைத்து இறக்கலாம். இந்த அடுப்பிலும் மடைப்பள்ளியில் சமையல் சில நாட்கள் கூடச் சமைக்கும்படி இருக்கும். அதற்காகப் போடப் பட்டது. வீட்டில் எனில் ஒரு அடுப்பு முக்கியச் சமையலுக்கும், கொடி அடுப்பு ஒன்றுமாக இருக்கும். இந்த அடுப்பில் தான் தினசரி சமைப்போம். சமைத்ததும் அடுப்பைக் கழுவ முடியாது. விறகை இழுத்துத் தள்ளி அணைத்தாலும் உள்ளே இருக்கும் கரி கனன்று கொண்டிருக்கும். கரியை உடனே அணைக்க மாட்டார்கள். மேலும் அணைத்தாலும் மண் அடுப்பு சூடாகவே இருக்கும். ஆகவே விடிகாலையில் தான் அடுப்பை மெழுக வேண்டும். நீர் விட்டுக் கழுவ முடியாது. களிமண் இல்லையா? கரைஞ்சு போயிடுமே! பசுஞ்சாணியால் மெழுக வேண்டும். முதலில் உள்ளே இருக்கும் கரியையும் சாம்பலையும் எடுத்துச் சுத்தம் செய்ய வேண்டும். கரியை வெளியே எடுத்துக் கழுவிக் காய வைத்துக் கொண்டால் கரி அடுப்புக்குப் பயனாகும். சாம்பலோ தோட்டத்தில் செடிகளுக்குப் போடலாம். அநேகமாய் அவரைக் கொடி, பாகல் கொடி, கீரைச் செடிகளுக்கு இந்தச் சாம்பலைப் போடுவார்கள். இத்தனையையும் சுத்தம் செய்தபின்னர் அடுப்பைச் சாணி போட்டு மெழுக வேண்டும். மெழுகாமல் மறுநாள் சமைக்கக் கூடாது. மெழுகினதும், சிலர் அக்ஷய என எழுதுவார்கள் என்கின்றனர். ஆனால் நாங்கள் கோலம் மட்டும் போடுவோம். அரிசி மாவினால் கோலம் போடுவது கட்டாயமாய்க் கருதப் படும். சிராத்தம் மற்றும் துக்க காரியங்கள் நடக்கையில் மட்டுமே அடுப்பில் கோலம் இருக்காது. மற்ற தினங்களில் கோலம் கட்டாயம். இப்போ இந்த அடுப்பும் இல்லை. அடுப்பில் கோலம் போடுபவர்களும் இல்லை.

எனக்கு இந்த அடுப்பு மாமியார் வீட்டுக்கு வந்து தான் பழக்கம். எங்க அம்மா வீட்டில் வெந்நீருக்கு மட்டும் இம்மாதிரி ஒரு மண் அடுப்பு உண்டு. மற்றச் சமையலுக்கு அம்மா இரும்பு அடுப்பில் சமைப்பாள். ஆனால் நான் சமைக்கப் பழகியது எல்லாம் குமுட்டியில் தான். இரும்புக் குமுட்டியில் சமைத்துப் பழகினேன். மண்ணிலும் குமுட்டி உண்டு. இரும்புத் தகட்டில் சின்ன ஓட்டைகளோ அல்லது கம்பிகளாகவோ போட்டுக் கொண்டு மண்ணால் அடுப்பைப் போட்டுவிட்டு நடுவில் தீ எரிய வரும் ஓட்டையில் அந்தத் தகட்டைப் பதித்துவிட்டு மேலே பாத்திரம் வைக்க வேண்டி நாலு பக்கமும் குமிழாக எழுப்பி விடுவோம். கீழே உள்ள வாயில் தேங்காய் நார் அல்லது, விராட்டியில் லேசாக எண்ணெய் ஊற்றிக் கொண்டு, மேலே இரும்புத் தகடு இருக்குமிடத்தில் கரியைப் போட்டுவிட்டு விசிறியால் விசிறினாலோ அல்லது காற்று வரும் திசையில் வைத்தாலோ அடுப்புப் பிடித்துக் கொள்ளும். ஆனால் காற்று வரும் திசை தென் திசை எனில் அடுப்பின் வாயை தென் திசை நோக்கி வைக்க மாட்டோம்.

அப்போது எங்க அம்மா வீட்டில் ஜனதா ஸ்டவ்னு ஒண்ணு இருந்தது. ஸ்டவ் அதுவும் ஜனதா ஸ்டவ் அப்போத் தான் பிரபலம் அடைந்து கொண்டு வந்தது. அதுவும் அந்த ஸ்டவ் பாடி, ஆடி, ஜோசியம் எல்லாம் சொல்ல ஆரம்பிச்சதும் இன்னும் அதிகம் பிரபலம் ஆனது. ஸ்டவ் நகர்ந்துக்கறது என்றெல்லாம் சொல்வாங்க. சும்மாவே கவலைப்படும் அப்பாவும், அம்மாவும் ஸ்டவ் நகர்ந்துக்கறச்சே அதிலே என்னைச் சமைக்க விடுவாங்களா?? கல்யாணம் ஆகி வந்து மாமியார் வீட்டில் விறகு அடுப்புச் சமையலுக்கு அப்புறம் சென்னைக் குடித்தனத்தில் தான் ஸ்டவ் அடுப்பு. அங்கே சமைச்சது உம்ராவ் னு ஒரு ஸ்டவ் அடுப்பு. இது வட மாநிலங்களில் மட்டுமே பிரபலம்னு நினைக்கிறேன். பம்ப் ஸ்டவ் புழக்கத்தில் இருந்தாலும் அப்போதெல்லாம் ஒரிஜினல் ஸ்பிரிட் போட்டே அதைப் பற்ற வைப்பார்கள். ஸ்பிரிட் சுலபமாய்க் கிடைக்காது. லைசென்ஸ் வேணும்னு நினைக்கிறேன். சரியாத் தெரியலை. அப்புறமா அந்தப் பழக்கமெல்லாம் போய் நான் பம்ப் ஸ்டவ் பயன்படுத்தினப்போ மண்ணெண்ணை விட்டுத் தான் பற்ற வைச்சேன். காஸ் கல்யாணம் ஆனதுமே வாங்கியாச்சு என்றாலும் சில சமயம் அதிகத் தேவைகளுக்கு ஸ்டவும் தேவைப்படும். இப்போ எல்லாரும் ஆச்சரியப்படும்படியான ஒரு செய்தி. நான் காஸ் வாங்கியப்போ சிலிண்டர் டெபாசிட் 50 ரூ. சிலிண்டரில் காஸோடு சேர்த்து 16 ரூயும் சில்லறையும். அடுப்பு ஒரு ஐம்பது ரூபாய் . எல்லாம் சேர்த்து 150 ரூக்குள் ஆச்சு. 16 ரூபாயில் இருந்து பத்தொன்பது ஆனப்போ பயங்கரமாக் கோபம் வந்தது. இப்போ???? (((