எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 25, 2020

நள வீம பாக சாஸ்திரத்தில் இருந்து சில குறிப்புகள்!

வாழைக்காய் பொறிக்கறி

பத்து வாழைக்காய்களை எடுத்துக் காம்புகளை யறுத்து மேற்புறணியைச் சீவி ஒரு அங்குலப் பிரமாணம் துண்டு துண்டாக அறுத்து ஒரு சட்டியில் சலம் விட்டு அதில் அஞ்சு நிமிஷம் வரைக்கும் வைத்திருந்து பின்பு ஒரு மண் பாத்திரத்திலாவது வெண்கலப் பாத்திரத்திலாவது கொட்டி அதில் வடிகட்டிய நல்ல சலம் போதுமான மட்டில் விட்டு சிறிய கரண்டியளவு உப்பும் போட்டு அடுப்பின் மேல் வைத்து மெதுவாகிற பரியந்தம் வேகவிட்டுச் சலத்தை நிறுத்திவிட்டு ஒரு தட்டிற்கொட்டிக் கொண்டு  ஒரு சட்டியை அல்லது வாயகலமுள்ள பாத்திரத்தை அடுப்பின் மேல் வைத்துக் காற்பலம் நெய் விட்டுப் பத்து முளகாய் கிள்ளிப் போட்டு ஒரு சிறிய கரண்டியளவு உளுத்தம்பருப்புச் சேர்த்து வாசனையுண்டாகின்ற வரைக்கும் வறுத்து வுடனே வெந்த காய்களை அதிர்ச்சேர்த்து ஒரு கரண்டிப் பொரிமாவும் ஒரு கரண்டி உப்பும் பெய்து வொரு இரும்புக்கரண்டியால் எல்லாவற்றையும் வொன்றாகக் கலந்து விட்டு இரண்டு நாழி பரியந்தம் அடுப்பின் மேல் வைத்துப் பின்பு இரக்கி வேண்டியமட்டும் சுடுகையோடு சாப்பிட வேண்டும்.

வாழைக்காய் வறல்
வாழைக்காயின் மேற்புரணியைச் சீவி பில்லை பில்லையாக அறுத்து அரைமுளகாயும் உப்பும் கலந்து காயுடன் பிசரி அதை ஒரு பாத்திரத்தை அடுப்பேற்றி நெய் விட்டுக் காயும்போது பெய்து வருத்தெடுத்துக் கொள்ளவும். இது பித்த வாயு.

கடுகு சேர்ந்த வாழைக்காய்க் கறி

பத்து வாழைக்காயை பில்லை பில்லையாக அரிந்து வேகவைத்திறக்கி சலத்தை யிருத்துவிட்டுப் பின்பு, 1/4அரிக்கால் பலம் கடுகு எடுத்துச் சலம் விட்டு நெகிழ அரைத்து வெந்த காயிலே கலந்து காலே அரிக்கால் பலம் புளி ரசம் வார்த்துப் போதுமான உப்புச்  சேர்த்து காலே அரிக்கால் பலம் வெந்தயப்பொடியுஞ்சேர்த்துக் கலந்து கொதிக்க வைத்துப் பின்பு கிள்ளிய முளகாய், வெந்தயம், கடுகு, சீரகம், கறிவேப்பிளை ஆகிய இவைகளை நெய்யிலே தாளித்து அதிற் கொட்ட வேண்டும். வாயு, பித்தமாம்.

வறுத்த வாழைக்காய்க் குழம்பு

பத்து வாழைக்காயெடுத்து மேற்புறணியைச் சீவி பில்லை பில்லையாக அறுத்துப் போதுமான நெய்யில் வறுத்து இருபது முளகாய், கால் பலம் கொத்துமல்லி விதை, தனித்தனி நெய்யில் வருத்துத் தண்ணீர் விட்டு அரைத்தெடுத்து அதனோடு தகுந்த புளியும் உப்புஞ்சேர்த்துக் கரைத்து தோல் போக்கிய பத்து பலம் வெண்காயம்,  21/2 பலம் வெள்ளைப்பூண்டு இவைகளை ஒரு பாத்திரத்தை அடுப்பேற்றி நெய் விட்டு அதிற் பெய்து சிவக்க வறுத்து அதில் மேற்படி வறுத்த வாழைக்காயையும் மேற்படி கரைத்து வைத்த குழம்பையும் விட்டு திரண்டு குழம்பூ ஆகிய பக்குவத்தில் இறக்கி விடவும்

மேலே சொன்ன மாதிரி செய்முறைகள் அந்தக்காலத்துப்புத்தகம் ஒன்றில்  புத்தகம் மிகப் பழையது என் சேமிப்பில்  மின்னூலாகக் கிடைத்தது. பொழுது போகாமல் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கேன். இதற்கு முன்னாலும் சில அத்தியாயங்கள் உள்ளன. அதில் சமையலறை எப்படி இருக்க வேண்டும் என்பதில் இருந்து அதில் இருக்க வேண்டிய சாமான்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் பட்டியல் அவற்றின் பயன்பாடு, அவை உடலுக்குச் செய்யும் நன்மை, தீமைகள் என எல்லாமும் பட்டியலிட்டுள்ளன. அந்தக் காலத்துச் சமையல் முறை மேலே சொன்னது. இன்னமும் இருக்கு. வாழைக்காயில் ஆரம்பம். பிரியாணி செய்முறை கூட இருக்கு. அதுவும் "தம்" கட்டிச் செய்யும் முறை. பிரியாணிக்கான சட்னியும் இருக்கு. 

Friday, August 21, 2020

லீவு! விபத்து! :)

நாளைக்கு எங்க ஆவணி அவிட்டம். ஆகவே காலையில் வீட்டு வேலைகள் அதிகம் இருக்கும். அதோடு இன்னிக்கு வடாம் பொரிக்கும்போது கையில் எண்ணெய் கொட்டிக் கொண்டு கட்டைவிரல் வலக்கையில் வெந்து போய்விட்டது. நாளைக்கு எப்படி எல்லாம் செய்யப் போறேனோ, தெரியலை. என்றாலும் ஏதாவது செய்து தான் ஆகணும். நாளைக்குப் பாடு ஆண்டவன் கைகளில். இப்போதைக்கு இந்தக் காயம் சரியாகணும். கையில் ஆயின்ட்மென்ட் தடவிக்கொண்டிருக்கேன்.  இதே போல் அப்பளம் பொரிக்கையில் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னர் எண்ணெய் கொட்டினப்போவும் இப்படித்தான் பிரச்னை ஆச்சு. அப்போ மாமனார் ஸ்ராத்தம் வேறே வந்தது. சில, பல கல்யாணங்கள் போக வேண்டி இருந்தது. கைக்  காயத்தோடு போயிட்டு வந்தோம். இன்னிக்குச் சாப்பிடவே முடியலை. ராத்திரி தான் மோர் சாதமானும் ஸ்பூனால் சாப்பிட்டுப் பார்க்கணும். :( எதிர்பாரா விபத்து! நினைச்சுக் கூடப் பார்க்கவில்லை. மனசிலும் இப்படி எல்லாம் நடக்கும்னூ தோன்றவே இல்லை.  ஆண்டவன் சித்தம்!  எப்படியும் ஒரு வாரம் ஆகும். இது வரைக்கும் கொப்பளிக்கவில்லை. உடனே ஆயின்ட்மென்ட் தடவிக்கொண்டதாலோ என்னமோ! இனியும் கொப்பளிக்கலைனால் பிரச்னை இருக்காது. பார்ப்போம். 

Tuesday, August 18, 2020

முறுக்கு! முறுக்கு! முறுக்கேய்!

உப்பிட்டவரை

கிருஷ்ணா! கிருஷ்ணா!

ஜன்மாஷ்டமி

கிச்சாப்பயல்

கிச்சாப்பயல் 19

2015 ஆம் வருஷம் உப்பைப் போட்டுச் சுத்தின முறுக்கு அப்புறமா அடுத்த வருஷம் முறுக்கே சுத்த முடியாமல் கையெல்லாம் இழுக்கவே ஏதோ பேருக்கு முறுக்குனு ஒப்பேத்தி வைச்சிருந்தேன். கடந்த நாலைந்து வருஷப் பதிவுகள் மேலே கொடுத்திருக்கேன் பாருங்க. அதில் குட்டிக் குட்டிக் கால் போட்டிருப்பேன். சின்னக் காலாகப் போட்டு விரல்களுக்கான புள்ளிகளை மட்டும் மாற்றி மாற்றி வைப்பேன். அது அவ்வளவாப் படத்தில் தெரியாது. கிட்டப் பார்த்தால் தான் கால் மாற்றி வைச்சிருப்பது தெரியும். இந்த வருஷம் கோலம் தான் இல்லை, பாதங்களும் இல்லை! ஆனால் முறுக்குச் சுற்ற முடியாமல் போனதில் இருந்தே முறுக்கு அவ்வளவாச் சுற்றவில்லை. இப்போ வெளியேயும் வாங்க முடியாதே! திடீர்னு மனதில் தோன்றி நேற்றுக் காலை இரண்டு ஆழாக்குப் புழுங்கலரிசியை ஊற வைத்து அரைத்துத் துணியில் முடிந்து வைத்தேன். அதிகப்படி நீர் இறங்குவதற்காக! அதன் பின்னர் மத்தியானமா அந்த மாவை எடுத்துப் பிசைந்து கொண்டு உளுத்தமாவு சேர்த்து, வெண்ணெய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலந்து கொண்டு சுற்றிப் பார்த்தேன். முன்னெல்லாம் மாதிரி வராட்டியும் முறுக்குனு சொல்லும்படி வந்திருக்கு. முன்னால் கை இழுத்த மாதிரி நேத்திக்கு இழுக்கலை. முறுக்கும் சுத்தினாப்போல் ஆச்சு. கொறிக்கவும் பக்ஷணம் ஆச்சு.

முறுக்குச் சுற்றும்போது படம் எடுக்க நினைச்சேன். ஆனால் என்னமோ மனசு அதில் பதியவில்லை. இப்போவும் முறுக்குப் படம் போடுவதாக இல்லை. வேண்டாம், சுமாராத் தானே வந்திருக்குனு நினைச்சேன். அப்புறமா முறுக்குகளை மட்டும்  படம் எடுத்தேன்.  இன்னும் கொஞ்சம் சுத்திச் சுத்திப் பார்க்கணும். பழக்கம் விட்டுப் போய்டுச்சுன்னா என்ன பண்ணறது? இன்னொரு முறை முறுக்கு மாவு பிசைவதில் இருந்தே படம் எடுத்துப் போடுகிறேன். ஏற்கெனவே போட்டிருக்கேன். அதெல்லாம் பழசு. இப்போப் புதுசாக எடுத்துப் போடணும். ஹிஹி, முறுக்குப் படங்களைப் ஓடாமல் பப்ளிஷ் கொடுத்துட்டேன்!  அவசரம்! விளக்கு ஏத்த ஏற்பாடு செய்யணுமே! வரேன்! அப்புறமா!



அன்றொரு நாள் 

இந்தச் சுட்டியில் பார்க்கலாம். புழுங்கலரிசியை அரைத்துத் துணியில் முடிந்து வைத்திருப்பதில் இருந்து ஆரம்பித்துச் சொல்லி இருப்பேன்.  சுத்தும் அப்போ மாதிரி இப்போ வந்திருக்காது! அதான், இன்னும் பழகிக்கணும். என்னடா இது! இப்படி ஆயிடுச்சேனு அதிர்ச்சியாக இருக்கு! :( வேறே வழியில்லை! மெல்ல மெல்ல முயற்சி செய்து பார்த்துட்டே இருக்கணும்.  இன்னும் என்னென்னவோ எழுத நினைச்சேன். ஆனால் முறுக்கோட அதுக்கும் சம்பந்தம் ஏற்படுத்துவது கஷ்டம்னு எழுதலை. இன்னொரு பதிவாப் போட்டுடலாம்.


Friday, August 14, 2020

கிச்சாப்பயலுக்குக் கொண்டாடிய எளிமையான பிறந்த நாள் கொண்டாட்டம்!


எங்க வீட்டு ராமர், எல்லோரும் பார்த்து நாளாகி இருக்குமே! அதான் எடுத்துப் போட்டேன்.  ராமருக்கு இடப்பக்கம், நமக்கு வலப்பக்கம் பூச்செண்டு மாதிரி ஒன்று தொங்குகிறதல்லவா? சிதம்பரம் நடராஜர் பாதத்தில் வைக்கும் வெட்டிவேர்க் குஞ்சிதபாதம் அது. எங்களுக்குக் கட்டளை இருப்பதால் தீக்ஷிதர் வீட்டுக்கு வரும்போது அவ்வப்போது எடுத்து வருவார்.


ராமரும் சேர்ந்து வராப்போல் தான் எடுக்கப் பார்த்தேன். காமிராவில் முழுசும் தெரிந்தது. ஆனால் படம் இப்படி வந்திருக்கு. ராமர் மேல் தட்டில் இருக்கார். இரு பக்கங்களிலும் ஒரு பக்கம் கிச்சாப்பயல் கையில் நவநீதத்துடன் தவழ்ந்த கோலத்தில். இன்னொரு பக்கம் நம்மாளு!

இதான் கிச்சாப்பயலின் பிறந்த நாளைக்குச் செய்த நிவேதனம். இந்த வருஷம் பண்டிகைகள் இல்லை என்பதால் மாக்கோலமோ, கிச்சாப்பயலின் பாதங்களோ போடவில்லை. அவனைத் தனியா அமர்த்திப் பூஜைகள் செய்யவில்லை. கூடவே ஊஞ்சலில் ஆடும் மற்ற இரு கிச்சாக்களையும் வைப்போம். வைக்கவில்லை. கிச்சா இருந்த இடத்தில் இருந்து கொண்டே எல்லா அலங்காரங்களையும் ஏற்றுக் கொண்டான். நிவேதனத்தில் பால், தயிர், வெண்ணை, அவல், வெல்லம், பலவகையான பழங்கள், கொஞ்சமாகப் பாயசம். மறுநாள் மாமனார் ஸ்ராத்தம் என்பதால் கொஞ்சமாகத் தித்திப்புப்போட்டுக் கஞ்சி மாதிரிப் பாயசம் வைத்துவிட்டு நான் அதையே சாப்பிட்டுவிட்டேன். அவருக்கு மட்டும் சப்பாத்தி பண்ணினேன்.




கோலம் இல்லாட்டியும், பாதங்கள் போடாட்டியும், பக்ஷணங்கள் பண்ணாட்டியும் கிச்சாவுக்குப் பூக்களை அளிக்கலாமே/ கிச்சாப்பயல் பூ அலங்காரத்தில் காட்சி தரும் படத்தை மேலே பாருங்கள்.  படத்தைப் பெரிது பண்ணிப் பார்க்கவும். வலக்கையில் இருக்கும் நவநீதம் தெரியும். நம் மனமாகிய தயிரைக் கடைந்து அதில் திரளும் அமுதம்/ஞானமாகிய அமுதம் கிருஷ்ணன் கைகளில் நவநீதமாகக் காட்சி அளிக்கிறது. நமக்குத் தான் தருகிறான் நவநீதத்தை. நாம் தான் அவன் சாப்பிடப் போவதாக எண்ணிக்கொள்கிறோம்.

முந்தாநாள் மாமனார் ஸ்ராத்தமும் எளிமையாக ஹிரண்ய ஸ்ராத்தமாக நடந்து முடிந்தது. சமாராதனை சமையல் என்பதால் நானே சமைத்துவிட்டேன். ஸ்ராத்தமாகப் பண்ணினாலும் நானே சமைப்பேன் முன்னெல்லாம். இப்போத் தான் 3,4 வருடங்களாக மாமியைக் கூப்பிடுகிறோம். இந்த வருஷம் அதுவும் முடியாது என்பதால் யாரையும் கூப்பிடவில்லை. குடும்பப் புரோகிதர் வந்து எல்லாவற்றையும் நன்றாக முடித்துக் கொடுத்துவிட்டார். நேற்றே படங்கள் போட நினைத்துப் போடலாமா, வேண்டாமா என்னும் எண்ணத்தில் இருந்தேன். கோமதி அரசு இந்த வருடப் படம் போடுங்கள் எனக் கேட்டிருந்தார்கள். அதுக்காகவும், எங்கள் ப்ளாக் குழுவில் மற்றவர்கள் பார்த்திருந்தாலும் கமலா பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதாலும் போட்டேன். கோமதி அரசுவும் குழுவில் இருந்தார்கள்; இப்போ இல்லை. ஆகவே மற்றவர்கள் பார்க்க வசதியாகப் போட்டிருக்கேன்.

Monday, August 10, 2020

காவிரியின் டெல்டாவில் ஏன் புதிய அணைகள் கட்டவில்லை?

படகு வீடு - ரா.கி .ரங்கராஜன் நாவல் .       Padagu Veedu (Tamil Edition) eBook: Ra. Ki. Rangarajan: Amazon.in ...

படத்துக்கு நன்றி கூகிளார்

குமுதத்தில் படகு வீடு வந்தப்போ எல்லாம் வீட்டில் வாங்கலை. வெளியில் வாங்கி ஒன்றிரண்டு அத்தியாயங்கள் படிச்சிருப்பேனோ என்னமோ! அதன் பின்னர் இத்தனை வருடங்களாய்த் தேடியும் புத்தகம் கிடைக்கவில்லை. இப்போ எங்கள் ப்ளாகில் ஒரு பதில் கருத்தாகச் சொல்லி இருந்ததைப் பார்த்துட்டு நெல்லை தன்னிடம் இருந்த பிடிஎஃப் தொகுப்பை அனுப்பி வைத்தார்.

படகு வீடு பிடிஎஃபில் "நெல்லை" அனுப்பி வைச்சுப் படிச்சும் முடிச்சாச்சு. விறுவிறுப்பான கதை! அநேகமா எல்லோருமே படிச்சிருப்பாங்க என்பதால் கதைச் சுருக்கமோ விமரிசனமோ இல்லை! ஆனால் மீண்டும், மீண்டும் அந்தக் கதையின் நினைவுகள் மனதில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு சின்னப் பொறி இருந்தால் போதும்! மனம் திடமாகி சந்நியாசி ஆக என்பது அதைப் படித்தபோது புரிந்தது. ஆரம்பத்திலேயே புரிந்துவிடுகிறது இவர் இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டார் என்பது. அதற்கான போராட்டங்களே கதையாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை இந்த நாவலே ரா.கி.ர.வின் மாஸ்டர் பீஸ் என்பேன். (இது அவரவர் ரசனைக்கு ஏற்ப மாறும்னு நினைக்கிறேன்.) ஏனெனில் கல்கியின் மாஸ்டர் பீஸ் என நான் நினைப்பது "அமரதாரா" தான். அவர் உயிருடன் இருந்து எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பாதியில் இறந்துவிட்டார். அதே போல் "தேவன்" எழுதியவற்றில் "துப்பறியும் சாம்பு"வும் "ஜஸ்டிஸ் ஜகந்நாதன்" இரண்டும். மற்றவையும் பெயர் சொல்லக் கூடியவை என்றாலும் இது இரண்டும் தனி. சாம்புவை மிஞ்ச யாருமில்லை. ஆனாலும் தேவனின் எழுத்துக்களைப் பிடிக்காதவங்களும் இருக்காங்க. அதே போல் கல்கியின் எழுத்துக்கள் பிடிக்காதவங்களும் உண்டு.
*********************************************************************************
வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது ...

படத்துக்கு நன்றி கூகிளார்

எப்போதும் ஆடி மாசக் கடைசி வெள்ளியில் வரும் வரலக்ஷ்மி விரதம் முன்னாடியே வர, ஆவணி அவிட்டம் (யஜுர், ரிக்) அதைத் தொடர அனைவருக்குமே பண்டிகைகள் மாறி வருவதாய்க் குழப்பம். ஆடி மாதப் பௌர்ணமி மாச நடுவில் வரப் பண்டிகையும் முந்திக் கொண்டு விட்டது. இந்த அமாவாசை பௌர்ணமி திதிகளின் படியே நாம் மாதப்பிறப்பையும், பண்டிகைகளையும் வைத்துக் கொண்டிருக்கோம். தமிழ்மாதங்கள் பிறப்பு கணக்கிடுவது சூரியனின் சஞ்சாரத்தை ஒட்டி. சித்திரை மாசம் சூரியன் மேஷ ராசிக்குப் போவதால் அன்று சித்திரை ஒன்று, வருடம் பிறப்பு எனக் கணக்கிடுகிறோம். ஆனால் பொதுவான பஞ்சாங்கப்படி அப்படி இல்லை. முக்கியமாய்த் திருக்கணிதமும், பாம்புப் பஞ்சாங்கமும் நிறைய மாறும். திருக்கணிதப்படி சனிப்பெயர்ச்சி ஆகி விட்டது. பாம்புப் பஞ்சாங்கப்படி டிசம்பர்/மார்கழியில் தான் சனிப்பெயர்ச்சி. இங்கே பெரும்பாலோர் பாம்புப் பஞ்சாங்கத்தையே கடைப்பிடிப்பதால் அதன் படி நாளை ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது.  இதிலேயும் குழப்பம் வந்து யார், யாரோவெல்லாம் நாளை கொண்டாடக் கூடாது, செப்டெம்பர் 11 ஆம் தேதி ரோகிணி நக்ஷத்திரத்தில் வரும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியைத் தான் கொண்டாட வேண்டும் என வாட்சப், முகநூல் மூலம் வேண்டுகோள்கள் எல்லாம் விடுத்துக் கொண்டிருந்தார்கள்.

The birth of Lord Krishna – The Vampire's Wife

படத்துக்கு நன்றி கூகிளார்

உப்பிட்டவரை  கமலாவுக்காக!


எண்ணங்கள்: உப்பிட்டவரை உள்ளளவும் ...

இது சொந்தப்படம். ஒரு வருஷம் உப்பை அதிகமாய்ப் போட்டுட்டு விடாமல் சாப்பிட்டுத் தீர்த்த கதை.  இந்த வருஷம் பண்டிகை இல்லை என்பதால் கிச்சாப்பயலுக்குப் பாயசம் மட்டும்.

ஏழை கண்ணீரைத் துடைக்க இங்கே அம்பத்தூர் வீட்டில் செய்த கடைசி கோகுலாஷ்டமிப் படங்கள். காப்பி பண்ண முடியலை என்பதால் சுட்டி கொடுத்திருக்கேன். 

கடைசியில் அதைப் பஞ்சாங்கம் பற்றி நன்கு தெரிந்த வைதிகர்கள் மூலமே தெளிவு செய்தாயிற்று. பண்டிகைகள் சாந்த்ரமானத்தை ஒட்டி வருவதால் நமக்கு ஆடி மாதம் என்றாலும் (ஆவணி பொதுப்பஞ்சாங்கத்தில், முடியும் நேரம்) பண்டிகை நாளையே வந்து விடுகிறது. அதே போல் வரலக்ஷ்மி விரதமும், ஆவணி அவிட்டமும் முன்னால் வந்தது. நம்முடைய மாதங்கள் பிறப்பது சூரியனின் சஞ்சாரத்தை ஒட்டி என்பதால் நமக்கு ஆவணி இனிமேல் தான். ஆனால் யுகாதி கொண்டாடும்/கொண்டாடிய /மக்களுக்கு ஆவணி முடிந்து விடும். இந்தத் தேதிகளைத் தான் இந்திய அரசுப் பஞ்சாங்கம் எனப்படும் காலன்டர்களில் கடைப்பிடிப்பதால் பண்டிகை தினம் இந்தியாவெங்கும் ஒன்றாக வந்தாலும் மாதங்கள் மாறுகின்றன. அதோடு இந்த வருஷம் மஹாலய அமாவாசைக்கு அடுத்த நாளில் நவராத்திரி ஆரம்பிக்கப் போவதில்லை. இன்னொரு அமாவாசை புரட்டாசியிலேயே வருகிறது. அந்த அமாவாசைக்குப் பின்னரே நவராத்திரி துலா மாதம் எனப்படும் ஐப்பசி ஒன்றாம் தேதியன்று ஆரம்பிக்கிறது. இரண்டு அமாவாசைகள் வந்ததால் இந்தக் குழப்பம். மஹாலயமும் ஆவணி பாதி, புரட்டாசி பாதி என்றில்லாமல் (சில சமயங்களில் புரட்டாசியிலேயே ஆரம்பித்தும் முடியும்) அப்படியும் இல்லாமல் ஆவணியிலேயே முடிந்து விடுகிறது. ஆகவே ஆவணியில் கல்யாணம் செய்ய இருப்பவர்களுக்கு நாள்  கிடைப்பது கஷ்டம்! யாருங்க அங்கே, கல்யாணம் பண்ணவே கஷ்டமா இருக்குனு சொல்றது? உண்மைதான்! கொரோனா போனால் தானே கல்யாணம் விமரிசை எல்லாம்!

*********************************************************************************

பழைய படம் தான். இப்போதைய புது வெள்ளத்தை இன்னமும் போய்ப் பார்க்கலை/ படமும் எடுக்கவில்லை. 


காவிரியில் நீர்த் திறப்பு அதிகரித்துள்ளது. மேட்டூரிலும் நீர்த் திறப்பை அதிகரிப்பார்கள்/அதிகரித்திருக்கலாம். செய்திகள் பார்க்கவில்லை. அந்த நீரெல்லாம் வந்து காவிரி இருகரையும் நீர்ப்பெருக்கோடு ரம்மியமாகக் காட்சி அளிப்பாள். அம்மாமண்டபம் போக முடியாதுனு நினைச்சிருந்தேன். நேற்று ஆதி வெங்கட் மகளுடன் வந்து அம்மாமண்டபம் படித்துறைக்குப் போயிருக்கார். நம்ம வீட்டுக்கு வரலை, கொரோனா காலம் என்பதால்! ஆனால் படித்துறைக்குப் போயிருக்கார். ஒரு நாள் போய் அங்கிருந்து படம் எடுக்கணும்.  இப்போ என்ன கதைன்னா இந்த வெள்ள நீரெல்லாம் வடிந்து கடலுக்குப் போகப் போகிறதே எனப் புலம்பல் இப்போவே ஆரம்பித்து விட்டது. கொஞ்சமானும் யோசிச்சுவிட்டுப் புலம்பக் கூடாதோ"

இங்கே கரூருக்குப் பின்னரே திருச்சியிலிருந்து ஆரம்பித்து முகத்துவாரக் கடைசி வரை சமவெளிதான். இந்தச் சமவெளியில் எப்படி, யார், எங்கே, எம்முறையில் அணை கட்டுவாங்க? ஒவ்வொரு வருஷமும் இந்தப் புலம்பல் யாரிடமிருந்தாவது வருது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இந்த டெல்டா பிரதேசத்தில் முடிந்தவரை தடுப்பணைகள் கட்டலாமே தவிர மேட்டூர் மாதிரியெல்லாம் அணைகள் கட்ட முடியாது. கொஞ்சம் யோசிங்கப்பா! அதோடு தண்ணீர் கடலுக்குப் போய்ச் சேரவில்லை எனில் முகத்துவாரம் உப்புத் தண்ணீராகிப் பாலைவனமாக ஆகிவிடுமே! அதை யோசிச்சீங்களா? அப்புறம் சுற்று வட்டாரமெல்லாம் நிலத்தடி நீர் உப்பாக மாறி விடும். தண்ணீர் போதுமான அளவுக்குக் கடலுக்குப் போய்ச் சேரத்தான் வேண்டும். அது இஷ்டத்துக்குப் போகவிடுங்க. இங்கே கிடைக்கும் நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளத் தடுப்பணைகள் கட்டினால் போதுமானது. அது தான் செய்ய முடியும்!

அதோடு இல்லாமல் காவிரி, உபநதிகளின் ஆகாயத்தாமரை, கண்ட கண்ட புற்கள், மரங்கள் இவற்றை எல்லாம் எடுத்துச் சுத்தப்படுத்தித் தூர் வாரினாற்போல் பண்ணினாலே நீர் அதிகரித்து வருகையில் பூமியில் இறங்கி நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பாக இருக்கும். கரை ஓரங்களையும் மேடு பண்ணி, காவிரியின் பாசன வாய்க்கால்களையும் சுத்தம் செய்துவிட்டால் கடைமடை வரை நீர் போக வசதியாக இருக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டுக் காமராஜருக்குப் பின்னால் அணையே கட்டலை, தண்ணீர் வீணாகுது என்றால் தண்ணீர் கடலுக்குப் போய்த் தான் ஆகவேண்டும். இல்லை எனில் முகத்துவாரம் மேடு தட்டிக் காய்ந்து போய் உப்பு நீராக மாறிவிடும். சீனாவில் தான் என நினைக்கிறேன். ஆற்றில் வெள்ளம் அதிகமாய் வருகிறது என்பதால் ஆற்றின் போக்கை மாற்றி விட்டு (அதுவாக மாறினால் அது தனி) பின்னர் முகத்துவாரம் பாலைவனம் ஆனபின்னரே தவறை உணர்ந்திருக்கின்றனர். அந்தத் தவறை நாமும் செய்யாமல் இருக்க வேண்டும். இங்கே தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் அணைகளைத் தவிர்த்து வேறே அணைகள் கட்டும்படியான சூழ்நிலை இல்லை. எல்லாம் சமவெளிதான்.  முடிந்தவரை ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்கிக் கொள்ளலாம். அது தான் முடியும்.





Tuesday, August 04, 2020

ஆடி ஆடிக்கொண்டு பண்டிகைகள் வரும் மாதம்!




படத்துக்கு நன்றி சஹானா இணைய இதழ்

ஆடி மாதம் தக்ஷிணாயனம் ஆரம்பிக்கும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயன புண்ய காலம் ஆடி ஒன்று வரை நீடிக்கும். ஆடி ஒன்றாம் தேதி அன்று தான் சூரியன் தன் தேரைத் தெற்கு நோக்கி (சரியாச் சொன்னால் தென்கிழக்கு)த் திருப்புகிறான். ஆடி மாதத்தில் இருந்து மார்கழி வரை தக்ஷிணாயனம் ஆகும். தேவர்களின் மாலை நேரம். மார்கழி மாதம் தேவர்களின் உதய காலம் என்பார்கள். ஆகவே இப்போது தொடங்குவது அவர்கள் மாலை நேரம். பொதுவாகவே புண்ய காலங்களில் நதிகளில் ஸ்நானம் செய்வது உகந்ததாய்ச் சொல்லப்பட்டாலும் ஆடி மாதம் விசேஷமானது. ஆனால் ஆடி மாதம் முதல் நாலைந்து நாட்களுக்கு எந்த நதியிலும் நீராட மாட்டார்கள். ஏனெனில்  முதல் 3 நாட்களுக்குப் பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் போல "ரஜஸ்வலா" என்னும்  தீட்டு ஏற்படுவதால் அந்த நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடுவது இல்லை.  அதன் பின்னரே நீராடலாம்.

ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பாகச் சொல்லப்படும். அந்தக் கால கட்டங்களில் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளித்துவிட்டு ஔவையார் விரதம் இருப்பார்கள். இந்த விரதத்தில் ஆண்கள் பங்கேற்க முடியாது. பெண்களுக்கு மட்டும் எனத் தனித்துச் சொல்லப்படும் விரதம். ஆனாலும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்காகவும், குழந்தைகள் பிறக்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் ஆகவும் சிறப்பாகப் பிரார்த்தித்துக் கொள்வார்கள். இதைத் தவிரவும் மங்கல கௌரி விரதமும் கடைப்பிடிப்பார்கள். பொதுவாகப் பெண்கள் திருமணம் ஆகிக் கருவுற்றால் ஐந்தாம் மாதம் வளைகாப்புச் செய்வது உண்டு. அந்த வழக்கப்படி பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம் காணும் அம்பிகையருக்கு ஆடி மாதம் வளையல் அலங்காரம் செய்து இன்புறுவதும் வழக்கம். அன்றைய தினம் அனைத்துக் கோயில்களிலும் உள்ள அம்பிகையருக்குச் சிறப்பு வளையல் அலங்காரம் வெகு விமரிசையாக நடைபெறும். ஆண்டாள் திரு நக்ஷத்திரம் ஆன ஆடிப்பூரத்தன்றும் பெரும்பான்மையான கோயில்களில் வளையல் அலங்காரம் நடைபெறும்.

ஆடி மாதத்தைக் கணக்கிட்டே பண்டிகைகள் தொடங்குகின்றன. ஆடி அழைத்து வரும், யுகாதி ஓட்டும்" என்பார்கள். ஏனெனில் பெரும்பாலான பண்டிகைகள் தக்ஷிணாயனத்திலேயே கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறக் காவல் தெய்வங்களான கருப்பண சாமி, ஐயனார், மதுரை வீரன், மாடசாமி,, மாரியம்மன், திரௌபதி அம்மன், காளி அம்மன் போன்றோருக்கான சிறப்பு விழாக்கள் எடுக்கப்படும். கும்பகோணம் மடத்துத் தெரு காளி அம்மன் கோயிலில் பச்சைக்காளி, சிவப்புக்காளி வேஷமிட்டுக்கொண்டு காளி ஆட்டம் ஆடுவார்கள். அப்போது பெண்கள் இதற்கெனச் சிறப்பாகத் தனியாக விரதம் இருந்து வேஷம் கட்டுவார்கள். உக்கிரமாகவும் இருப்பார்கள்.  நெல்லை மாவட்டம் சங்கரன் கோயிலில் கோமதி அம்மன் ஆடி மாதம் தபஸ் இருந்து ஈசனை மணந்தாள் எனச் சொல்வதால் அங்கே ஆடித் தபஸு உற்சவம் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

எல்லாவற்ரையும் விடச் சிறப்பானது என்னவெனில் நம் நாட்டைப் போன்ற பருவ மழையை எதிர்பார்த்திருக்கும் விவசாய நாட்டில் இந்தச் சமயங்களில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையால் எல்லா நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். தமிழ்நாட்டுக்கெனச் சிறப்பாக இருக்கும் காவிரி ஆற்றில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையால் வெள்ளம் நிறைவாக இருக்கும். இந்தப் புது வெள்ளம் வருவதை வைத்து ஆடி மாதம் பதினெட்டாம் தேதி அன்று "ஆடிப் பெருக்கு" எனப் பண்டிகையாகக் கொண்டாடிக் கலந்த சாதங்கள் செய்து நதிக்கரையில் அமர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக உண்பார்கள். அப்போது நதிகளுக்குக் காணிக்கையாகப் புடைவை,, மலர் மாலைகள், கருகமணி பிச்சோலை போன்றவை போட்டு தீப ஆராதானை காட்டி நதித் தாய்க்குப் பூஜை செய்வார்கள். பெண்கள் தங்கள் தாலிச் சரடைப் பிரித்துக் கட்டிக்கொள்வார்கள். ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் இருந்து நீர் பெருகும் என்பது நம்பிக்கை. ஆகையால் தங்கள் மணவாழ்விலும் பெருகி மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிக் கொண்டு மங்கல நாணை மாற்றிக் கொள்வார்கள்.

புதிதாகத் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் தலை ஆடிக்கு மாப்பிள்ளை தன் மனைவியுடன்  மாமியார் வீட்டிற்குச் சிறப்பான விருந்துக்குச் செல்வார்கள். மாப்பிள்ளைகளுக்குச் சிறப்பான பரிசுகள், புதுத்துணிகளாகவும், நகைகளாகவும் வெள்ளிப் பாத்திரங்களாகவும் வழங்கப்படும். இதைத் தவிர அன்று தேங்காய்ப்பாலில் வெல்லம் போட்டுக் காய்ச்சி வெள்ளி டம்பளரில் மாப்பிள்ளைக்குக் கொடுப்பார்கள். "ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி!" என்பது சில வட்டார வழக்கில் விளையாட்டாகச் சொல்லுவார்கள். இன்னும் சிலருக்கு ஆடி மாதம் புதிதாய்க் கல்யாணம் ஆன கணவன், மனைவி சேர்ந்து இருந்தால் அடுத்த சித்திரையில் கடுங்கோடையில் குழந்தை பிறக்கும் என்பதால் கணவன், மனைவியைப் பிரித்து வைப்பது உண்டு. மாமியார் தன் மருமகளை (பெண்ணை)ப் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.  பெண் திரும்பிப் புக்ககம் வரும்போது சிறப்பான சீர் வரிசைகளும் கூட வரும்.

ஆண்டாளின் அவதாரத் திருநாளான "ஆடிப்பூரம்" இந்த மாதமே வரும். ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனின் சக்தி பரிபூரணமாக இருக்கும் என்பது ஐதிகம் என்பதோடு கண்கூடாகவும் காணலாம். தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் தான் பொறுமையின் சிகரமான பூமாதேவியின் அவதாரம் என்பது ஆண்டாளின் அவதாரத்தோடு பொருந்தியும் போகிறது அல்லவா?  மேலும் சொல்லவேண்டுமெனில் விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஆடி மாதத்தில் "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதற்கொப்ப விவசாய வேலைகள் ஆரம்பிப்பார்கள்.  ஆடியில் விதை விதைத்தால் தை மாதம் அறுவடை செய்துவிடலாம். நல்ல மகசூல் வரும் என்பது நம்பிக்கை.

ஆடீ மாதத்தில் காவல் தெய்வங்கள் குடி இருக்கும் கோயில்களில் "ஆடிக் கூழ்" காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பார்கள். பல்வேறு தானியங்களும் போட்டுத் தேங்காய்கள், காய்கள் மற்றும்  மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சப்படும் இந்தக் கஞ்சிப் பிரசாதம் உடலுக்கு நல்லது எனச் சொல்லப்படுகிறது.  ஆடி மாதம் சுவாதி நக்ஷத்திரத்தில் கருடன் பிறந்ததாகவும் ஆடிப் பௌர்ணமிக்கு ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாகவும் சொல்வார்கள். ஆடி மாதம் முழுவதுமே அம்பிகைக்கு உகந்த  மாதம் என்றாலும் ஆடிக் கிருத்திகையில் முருகனும், ஆடிப் பௌர்ணமியில் ஹயக்ரீவரும், ஆடி சுவாதியில் கருடாழ்வாரையும் தரிசித்தல் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அதோடு இல்லாமல் ஆடி மாதத்தின் அனைத்துச் செவ்வாய்க்கிழமைகள், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யலாம். ஆடி மாதம் முழுவதும் பக்திபூர்வமாக இருந்து அம்பிகையின் அருளைப் பெற்று உய்வோம்.


நம்ம ஏடிஎம் (புவனா கோவிந்தன் என்ற அப்பாவி தங்கமணி) பதினெட்டாம் பெருக்கன்னிக்கு இந்த இணைய இதழை ஆரம்பிச்சிருக்காங்க. அதில் ஆன்மிகப் பக்கம் போடுவதற்காக என்னை ஆடி மாதச் சிறப்புப் பத்தி எழுதித் தரச் சொன்னாங்க. அவங்க கேட்டுப் பல நாட்கள் கழிச்சு ஒரு வழியா எழுதி அனுப்பினேன். நல்லவேளையா இணைய இதழ் ஆரம்பிக்கலை! அந்தச் சுட்டியை மேலே கொடுத்திருக்கேன். அங்கேயும் போய்ப் படிக்கலாம். அதோடு அங்கே உள்ள மற்ற கதை, கட்டுரைகள், சமையல் குறிப்பு (ஆதி வெங்கட்) ஆகியவற்றையும் படிக்கலாம்.  இங்கேயும் அந்தத் தொகுப்பையே மறுபடி எல்லோரும் படிக்க வேண்டும் என்பதற்காகப் பகிர்ந்திருக்கேன்.  

இன்னிக்கு இதுக்கு மேலே இணையத்திலே உட்கார மனம் இல்லை. இனிமேல் நாளைக்குத்தான். வேறே பதிவுகள் எழுத உட்கார்ந்தேன். ஆனால் முடியலை.  முடிஞ்சால் மொபைல் மூலமாக மொபைல் பார்க்கலாம்.