எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 31, 2019

ஜிங்குச்சா, ஜிங்குச்சா! பச்சைக்கலரு ஜிங்குச்சா! செவப்புக்கலரு ஜிங்குச்சா!


ஏற்கெனவே இந்தத் தலைப்பில் ஒரு பதிவு ஒரு தீபாவளி சமயம் போட்டிருக்கேன்.  கொஞ்சம் மாற்றி இந்தத் தலைப்புக் கொடுத்து மறுபடி போட்டிருக்கேன். இங்கே மூன்று புடைவைகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு புத்தம்புதிது. ஒன்று கட்டிக் கொண்டது. அதுவும் கீழே விழுந்தப்போ வாங்கிக் கட்டிக் கொண்டது. புடைவைகள் புதிது இரண்டும் எங்கே எடுத்திருப்பேன் என யாருக்கானும் யூகம் செய்ய முடியுதா? பார்க்கலாம்!


மேலே உள்ள படத்தில் புடைவைகள் நிறம் சரியாத் தெரியலைனு கீழே உள்ள படம் மறுபடி வேறே கோணத்தில் எடுத்தேன். ஜேகே அண்ணா இவற்றைப் பார்த்துட்டு என்ன கலர்னு சொல்லப் போறார்னு நினச்சுட்டு இருக்கேன். ஹிஹிஹி, இஃகி,இஃகி, அவருக்குனு தனியா ஏதேனும் நிறம் தோணும் பாருங்க!  கீழே விழுந்த புடைவை எதுனு தெரியுதா? ஏதேனும் யூகம் செய்ய முடியுதா?

இப்போ மறுபடி கோயில் படங்கள்! :)


இது நேற்றுப் போட்ட படம் தான்


கோட்டையின் நுழைவாயில்


அப்பாடா! இந்த முற்றம் தான் எவ்வளவு பெரிது?


இந்த உப்பரிகைகளில் அமர்ந்த வண்ணம் ராணிகளும் இளவரசிகளும் கீழே நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்திருப்பார்கள் இல்லையா?




இந்த உப்பரிகையைப் பார்த்தால் இது தான் ராணிகள் அமரும் வண்ணம் அலங்காரமாக இருக்கிறாப்போல் இருக்கு. அப்போ எதிரே உள்ளதில் மற்றப் பெண்கள் அமர்ந்திருக்கலாம். அந்த வாசல் உள்ளே எங்கே போகிறது? தெரியலை! 


உள்ளே ஏதோ கோயில் போலத் தெரிகிறது. உள்ளே போய்த் தான் பார்க்கணும்.



கோயில் தான்! ஆனால் உள்ளே சந்நிதியைப் படம் எடுக்கக் கூடாதாம். அர்ச்சகர்கள் கடுமையாக மறுப்புத் தெரிவிக்கின்றனர். கோயிலின் உள்ளே விசாலமான கூடம்!


நடுக்கூடத்தின் மேல் கூரையின் அழகான சித்திர விசித்திர வேலைப்பாடுகள் கண்களையும் மனதையும் கவர்கின்றன. பலருக்கும் மேலே இப்படி ஒன்று இருப்பது தெரியவில்லை. அவங்க பாட்டுக்கு வந்து உம்மாச்சியைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்காங்க. நமக்குத் தான் ஆஹா! இதெல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற இடமாயிற்றே! இங்கே அவர் நின்றிருப்பாரோ, அங்கே அவர் நின்றிருப்பாரோ என்றெல்லாம் தோணுது!

இப்போதைக்கு இந்தப் படங்களைப் பாருங்க. மற்றவை பின்னர்! :)))))

Saturday, March 30, 2019

படம் பாருங்க முதல்லே! சொல்லவா வேண்டாமானு அப்புறமா!


நாட்டின் பிரபலமான கோயில். சக்தி பீடங்களில் ஒன்று







கோயிலின் நான்கு நுழைவாயிலில் ஒன்று



இது கோட்டைக்கு உள்ளே உள்ள ஒரு கோயில்


கோட்டையின் நிலா முற்றம். எம்புட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுப் பெரிசு தெரியுமா?


ஏற்கெனவே வைத்தீஸ்வரன் கோயில், மாயவரம், திருஇந்தளூர் போனது சொல்லியே முடிக்கலை! வைத்தீஸ்வரன் கோயிலில் பட்ட அவதியோடு நிறுத்தியாச்சு! அதுவும் பாதி ராத்திரியில்!

இங்கே பாருங்க

அந்தப் பதிவிலேயே எல்லோரும் ரொம்பப் புலம்பலா இருக்குனு சொல்லவே அதை அப்படியே விட்டுட்டேன். அதுக்கு முன்னர் பூம்பாறைப் பதிவும்.

பூம்பாறை இங்கே

பாதியிலே விட்டது தான்! முடிக்கலை! நெ.த. 2,3 தரம் வாட்சப்பில், கருத்துக்களில் எனக் கேட்டுப் பார்த்துட்டு அலுத்துப் போய் விட்டுட்டார். :))))) இப்போவும் அந்த அளவுக்கெல்லாம் சொல்ல முடியாட்டியும் கொஞ்சம் பிரச்னைகள் இருக்கத் தான் செய்தன. ஆனால் எல்லோருக்கும் அது பிடிப்பதில்லை. கூடியவரையில் நடந்ததை நடந்தபடி சொன்னால் அது சரியா வரதில்லை. என்னடா இவ இப்படி அறுத்துத் தள்ளறாளேனு நினைச்சுப்பாங்க! பொதுவாக நிறைகளை விடக் குறைகளே அதிகம் தெரியும் வண்ணம் எழுதுகிறேன் போல!

ஆனால் என்னோட நினைப்பு என்னவெனில் என் பார்வையில் தெரிந்த குற்றம், குறைகள் மற்றவர்கள் பார்வையில் எப்படிப் படுகிறது எனத் தெரிந்து கொள்வதோடு குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும்படி பார்த்துக்கலாம் என்னும் எண்ணம். போகிறவங்க இந்தக் குறைகளைக் கூடியவரை தவிர்த்துவிட்டு மாற்று வழியில் செல்லலாமே என்னும் எண்ணம். அதனாலேயே ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வந்து ஒரு வாரம் ஆகப் போகுது என்னும் போது கூட எழுதலாமா வேண்டாமா! அப்படியே விட்டுடுவோமா என்னும் எண்ணமே கடந்த நான்கைந்து நாட்களாய்.  நாங்க சிரமப்பட்ட விஷயங்களை எழுதாமல் கடந்து விடலாம். ஆனால் என்னமோ அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை.

பெரிசாய் ஒண்ணும் இல்லை. இரண்டு கோயில்கள் உலா தான்! அதில் ஒன்று ஏற்கெனவே போனது! ஏற்கெனவே எழுதியும் விட்டேன். ஆனால் அப்போப் படங்கள் இல்லை. இப்போவும் படங்கள் இல்லை. காமிரா எடுத்துப் போகவில்லை. அறையிலேயே வைச்சுட்டேன்.  தரிசனங்கள் என்னமோ நல்லாவே கிடைச்சது. திருப்தி தரும் வரை பார்த்தாச்சு! அதில் எந்தக் குறையும் இல்லை. அதோடு நாளைக்கு இன்னும் சில படங்கள் போடுகிறேன். பார்த்துட்டு எந்தக் கோயில்னு சொல்ல முடிகிறதா என்றும் பார்க்கவும்.

Tuesday, March 26, 2019

சாமவேதீஸ்வரர் கோயில் படங்கள் தொடர்ச்சி!

தம்பி வந்திருந்தபோது அவருடனும் அவர் மூத்த மகன், மனைவி ஆகியோருடனும் லால்குடி அருகே உள்ள சாமவேதீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலின் சிறப்பு உலகிலேயே வேதத்திற்கென உள்ள ஒரே கோயில் அதுவும் சாமவேதத்துக்கான கோயில் என்றார்கள். இங்கே பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொள்ள இங்கே வந்து வழிபட்டிருக்கிறார்.  ஹிஹிஹி, அவரும் சாமவேதம் தானே!  பரசுராமேஸ்வரம் என்னும் பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டதாய்ச் சொல்கின்றனர். இங்குள்ள தீர்த்தமும் பரசுராமர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. தன் தாயைக் கொன்ற மாத்ரு ஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ளப் பரசுராமர் இங்கே வந்ததால் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இங்கே வந்து சாமவேதீஸ்வரர் சந்நிதியிலும், உலகநாயகி சந்நிதியிலும் நெய்யால் பதினோரு விளக்கேற்றி வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயில் பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் வழிபட்ட லிங்கம் இருக்கிறது.  முருகப் பெருமான் இங்கே வள்ளி, தெய்வானையுடன், ஆறு முகங்கள், ஆனால் நான்கு கைகளோடு காட்சி கொடுக்கிறார். வள்ளியை மணந்த பின்னர் முருகன் இங்கே வந்ததாகவும், அதனால் வள்ளி மட்டும் தனியாக மயில் வாகனத்திலும், முருகனும் தெய்வானையும் நின்ற கோலத்திலும் காட்சி கொடுப்பதாய்ச் சொல்கின்றனர். ஆனாய நாயனாருக்கு இங்கே தான் முக்தி கிடைத்ததாகவும் சொல்கின்றனர்.  ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் ஹஸ்த நக்ஷத்திரத்தில் விமரிசையாக நடைபெறுகிறது. இவருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்பிகையும் தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர்.

இந்தக் கோயிலில் அதிசயத்திலும் அதிசயமாக மகாமண்டபத்தைத் தாண்டி உள்ள அர்த்த மண்டபத்தில் கருவறைக்கு ஏறும் படிக்கட்டுகளின் அருகேயே வலப்பக்கமாகச் சண்டேஸ்வரர் வீற்றிருக்கிறார்.இதன் சிறப்பு குறித்து குருக்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. இதைத் தவிரவும் வடக்குப் பிரகாரத்தில் தனிச் சந்நிதியில் சண்டேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். நவகிரஹங்களும்  வடகிழக்கு மூலையில் காணப்பட்டாலும், சூரிய, சந்திரர்கள், சனைசரனோடு  தனியாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர்.  சனைசரனின் காக வாகனம் வடக்கு நோக்கி அமைந்திருப்பதை விசேஷமாகச் சொல்கின்றனர். சனி ப்ரீதி செய்பவர்களும் இங்கே வந்து செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.  சனிப்பெயர்ச்சியின் போது இந்தக் கோயிலுக்கும் சனி பகவானுக்குப் ப்ரீதி செய்ய வேண்டி மக்கள் கூட்டமாக வந்து வழிபடுவார்கள் எனச் சொல்கின்றனர். பைரவர் இங்கே தனியாக இருக்காமல் கால பைரவருடன் காட்சி தருகிறார். இரவு நேரத்தில் பைரவர் பாதத்தில் வைத்து வழிபட்ட விபூதி தீராத பிரச்னைகளைத் தீர்க்கும் எனச் சொல்லப்படுகிறது. கோஷ்டத்தின் தென் திசையில், பிக்ஷாடனர், தக்ஷிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோர் காணப்படுகின்றனர். தக்ஷிணாமூர்த்தி சின் முத்திரை காட்டாமல் அபய ஹஸ்தத்தோடு காணப்படுகிறார்.  தல விருக்ஷம் பலா மரம். தேனில் ஊறிய பலாச்சுளைகளை நிவேதனம் செய்து மக நக்ஷத்திரத்தன்றும்,  சனிக்கிழமையன்றும்  இக்கோயிலைப் பதினோரு பிரதக்ஷிணம் வந்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இது தேவார வைப்புத்தலமாகச் சொல்லப்படுகிறது.  தேவார வைப்புத் தலம் எனில் தனியாகப் பதிகங்கள் மூலம் குறிப்பிடப் படாமல் வேற்றூர்ப் பதிகங்களின் இடையிலும் பொதுவான பதிகங்களிலும் குறிப்பிடப்படும் தலங்கள் தேவார வைப்புத் தலங்கள் எனப்படும்.  தேவாரத் தலங்கள் 276 தலங்களில் இருந்து இவை வேறுபட்டவை ஆகும். வைப்புத் தலங்கள் மொத்தம் 147 இருப்பதாகச் சொல்கின்றனர்.  திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும்  இந்தக் கோயில் ஈசனையும், அம்பிகையையும் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர்.


ஞானசம்பந்தப் பெருமானின் இடர் களையும் திருப்பதிகம்


திருநாவுக்கரசரின் போற்றிப் பதிகம். (மாணிக்க வாசகரின் போற்றித் திரு அகவலுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.)


நாவுக்கரசப் பெருமானின் பஞ்சாக்கரத் திருப்பதிகம்






கோயிலில் சாமவேதீஸ்வரர் சந்நிதியின் வெளியே



முன் மண்டபத்தில் தூணில் வீற்றிருக்கும் நம்மாளு




அம்பிகை லோக நாயகி



கோயில் வெளிப்பிரகாரம். எதிரே தெரிவது வாகன மண்டபம். இந்தக் கோயிலுக்கு 300 ஏக்கர் நிலங்கள் உள்ளனவாம். ஆனால் இருபது ஏக்கரில் இருந்து கொடுத்தாலே பெரிய விஷயம் என்கின்றனர். குருக்கள் பரம்பரையாக வந்தவர் என்பதால் இறைவன் மேல் உள்ள பக்தி காரணமாக இதை ஒரு தொண்டாகச் செய்து வருகிறார். மேலும் அவர் மகன், மாப்பிள்ளை ஆகியோர் வெளிநாட்டுக் கோயில்களில் குருக்களாக இருப்பதால் அவர்கள் அனுப்பும் பணத்தில் இருந்தும் தேவையானபோது சாமவேதீஸ்வரருக்கும் செலவு செய்து கொள்கிறார். கோயிலில் ஊழியர்களும் உள்ளனர். அறநிலையத் துறை அலுவலகம் இயங்குவதாய்த் தெரியவில்லை. 



வெளிப்பிரகாரத்தின் இன்னொரு பகுதி


வெளிப்பிரகாரம்



வெளிப்பிரகாரம்


முன் மண்டபத்தில் காணப்பட்ட அம்பிகையின் ஓவியம்





தெருவில் இருந்து கோயிலின் ராஜ கோபுரம். தெரு சுத்தமாக இருக்கிறது. எங்கும் குப்பைகளோ, ப்ளாஸ்டிக், பேப்பர்களோ பறக்கவில்லை. இருபக்கமும் வீடுகள் இருந்தாலும் எல்லா இடங்களும் பெருக்கிச் சுத்தமாக வைத்திருக்கின்றனர். 




தெருவின் இன்னொரு பகுதி. கோபுரத்துக்கு எதிரே காணப்படும் பகுதி. இங்கேயும் சுத்தமாக இருப்பதைக் காண முடியும்.




Monday, March 18, 2019

உலகநாயகி உடனுறை சாம வேதீஸ்வரர் கோயில், திருமங்கலம். லால்குடி!

தம்பி குடும்பம் வந்திருந்த போது  இங்கே அருகே உள்ள சாமவேதீஸ்வரர் தரிசனத்துக்குச் சென்றோம். அந்தக் கோயில் கோபுரம் மேலே! கீழே நுழைவாயில். இரு படங்களை இணைக்க முயன்றேன். அதனால் இப்படி வந்திருக்கு.


உள்ளே நுழைந்ததும் உள்ள முன் மண்டபம்

கொடிமரம் அருகே நம்மாளு ஜம்முனு உட்கார்ந்திருக்கார். சாதாரணமாக் கொடிமரம் அருகே காணப்பட மாட்டார். இந்தக் கோயிலில் வித்தியாசமாக


உலகநாயகி! கருவறையில். ஜூமெல்லாம் செய்யலை. படம் எடுத்ததே அதிகம்னு விட்டுட்டேன்.

 காலபூஜைக்கான வாத்தியங்கள் வாசிப்பவர். இவரும் தவில்காரரும் மட்டும் வந்தார்கள். நாதஸ்வரக்காரரை எங்கேனு கேட்டதுக்குப் பக்கத்து ஊர்க்கோயில் திருவிழாவுக்கு வாசிக்கப் போயிட்டார் என்றனர். ஏன் இங்கே வாசிக்கலையா என்று கேட்டேன். இங்கே நேரம் ஆவதால் அங்கே வாசிக்க முன்னுரிமை கொடுத்துட்டாராம். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. 


சாமவேதீஸ்வரர். விபரங்கள் பின்னால். நாளைக்குப் பதிவு வந்தாலும் வரலாம். அப்புறமா  5 நாளைக்கு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்ட விடுமுறை! எஞ்சாய்!

Friday, March 15, 2019

பழசு தான், ஆனாலும் சாப்பிடலாம்! :)

இன்னிக்குக் காரடையான் நோன்பு என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இது முன்னர் எப்போதோ நோன்பின் போது எடுத்த படம். இந்த வருஷப் படம் இல்லை. ஆனால் எப்போதும் போல் கொஞ்சமாகத் தான் கொழுக்கட்டை செய்தேன். காலை ஐந்தே முக்காலுக்குள்ளாகச் சரடு கட்டிக் கொண்டாகி விட்டது.  இந்த வருஷம் அதிசயமா எங்க குடும்பப் புரோகிதரின் உதவியாளர் வந்து நோன்புச் சரடு கொடுத்தாரே என அதை எடுத்தால் கையில் கூடக் கட்டிக்கொள்ள முடியாது! அவ்வளவு குறைந்த நீளம். ஏதோ கொடுத்தேன் எனப் பெயர் பண்ணிட்டார். வருஷா வருஷம் விலைக்குத் தான் வாங்குவோம். அது போல வாங்கி இருந்திருப்போம். நல்லவேளையாப் போன வருஷச் சரடுகளை பத்திரமாக வைத்திருந்ததால் அதைத் தேடி எடுத்துக் கட்டிக் கொண்டேன். நல்லபடியா நோன்பு முடிஞ்சது.

இன்று மாலை பல்லவனில் என் தம்பியும் அவன் மனைவி, பெரிய மகன் ஆகியோர் வருவதால் இன்றும் நாளையும் கொஞ்சம் வேலை! வெளியே போக வேண்டியது என இருப்பதால் நாளைக்கு வர மாட்டேன். அதிரடி, சொல்லாமல் போயிட்டேன்னு சொல்லக் கூடாது! நெல்லைத் தமிழரே! எப்போவானும் பதிவு போடுகிறேன் எனக் குற்றம் சொல்லாதீங்க! முடிஞ்சால் பழைய பதிவுகளைப் போய்ப் படிங்க! வந்ததும் தேர்வு வைப்பேன். :)))) அஞ்சு, இரண்டு நாளும் நீங்க பிசியா இருப்பீங்க! முடிஞ்சப்போ வாங்க! அதிரடி கிட்டே சொல்ல வேண்டாம்!

Wednesday, March 13, 2019

இன்றைய எண்ணங்கள்! ஒரு தேவையான மொக்கை!

சனிக்கிழமையில் இருந்தே வேலை அதிகம் ஆகி விட்டது. வீடு சுத்தம் செய்யும் வேலை ஆரம்பித்தோம். எப்போதும் போல் ஆட்களை இம்முறை அழைக்க முடியவில்லை. இரண்டு இரண்டு அறையாகச் சுத்தம் செய்யலாம் என ஆரம்பித்து விட்டோம். முதல் நாள் சமையலறையும் ஒரு படுக்கை அறையும் மட்டும் முடிந்தது. அடுத்த இரண்டு நாட்களில் மற்ற இடங்களைச் சுத்தம் செய்து விட்டு நிமிர்ந்தால் நேற்றிலிருந்து யாரானும் வருகை தந்து கொண்டே இருக்கின்றனர். பேச்சிலே பொழுது கழிந்து விடுகிறது. இன்று முக்கியமான விருந்த்னர். அவங்களுக்காக சிற்றுண்டி தயாரிப்பு பின்னர் பேச்சு என மதியம் 2 மணி வரை சரியாப் போய் விட்டது. பதிவுகள் போடவோ யார் பதிவுக்கும் வரவோ கிடைக்கும் நேரத்தில் தான் முடியுது! ஆகவே இன்னும் 2,3 நாட்களுக்கு நான் வரலைன்னாத் தேடாதீங்க! நாளைக்கும் மத்தியானத்துக்கு மேல் தான் வருவேன்.

சென்னையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து சென்னைக்கும் "தேஜஸ் எக்ஸ்பிரஸ்" என்னும் புதிய ரயில் வண்டி விட்டிருக்கின்றனர். முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது. தானியங்கிக் கதவுகள். இதில் ஏறினால் எல்லா வண்டிகளிலும் நாம் அடிக்கடி இறங்கி இறங்கி ஏறுவது போல் முடியாது. ஏனெனில் ரயில் கிளம்ப ஐந்து நிமிஷம் இருக்கையில் வண்டிக்கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். பின்னர் திறக்க இயலாது. பாஸ்வேர்ட் இருக்குனு சொல்றாங்க. ஆனாலும் பாஸ்வேர்ட் போட்டாலும் திறந்துக்கறதில்லையோனு நினைக்கிறேன். ஏனெனில் 2 நாட்கள் முன்னர் சென்னை எழும்பூரில் இருந்து கிளம்பிய ஒரு தகப்பன், மகள் இருவரில் மகளை இருக்கையில் அமர வைத்துவிட்டுத் தந்தை கீழே குடிநீர் வாங்கப் போயிருக்கார். ரயிலிலேயே வாங்கி இருந்திருக்கலாம். என்னமோ போறத நேரம். அவர் கீழே இறங்கியதுமே வண்டி கிளம்ப 5 நிமிடமே இருந்ததால் தானியங்கிக் கதவுகள் மூடிக்கொள்ளக் குடிநீர் பாட்டிலோடு வந்த தந்தை ரயில் நிலைய நடைமேடையில் செய்வதறியாது விழிக்க, யாராலும் கதவைத் திறக்க முடியவில்லை. ஊழியர்களாலும் முடியவில்லை போலும். வண்டி அடுத்த ஸ்டேஷனில் நிற்கையில் தான் கதவு திறக்கும் என்று சொல்லி இருக்கின்றனர். தகப்பனார் திகைத்துப் போய் வண்டியில் இருக்கும் மகளிடம் தன்னுடைய கைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லிவிட்டுப் பின்னல் கிளம்பிய குருவாயூரில் பயணம் செய்து மகளை மதுரையில் போய்ப் பிடித்திருக்கிறார்.தேஜஸ் காலை ஆறு மணிக்கு எழும்பூரில் இருந்து கிளம்புகிறது. இது சமீபத்தில் ஒருத்தருக்கு ஏற்பட்ட அனுபவம்.

இன்னொருத்தர் தன் மனைவியையோ, அம்மாவையோ ஏற்றி விட வந்தவர் இறங்குவதற்குள்ளாக வண்டிக்கதவுகள் மூடிக்கொள்ள அவர் திருச்சி வரை அந்த வண்டியில் பயணம் செய்யும்படி ஆகிவிட்டது என்கிறார்கள். இது எவ்வளவு நிஜம் எனத் தெரியவில்லை. ஆனால் இந்தக் கதவுகள் தானாக மூடிக் கொண்டாலும் பாஸ்வேர்ட் போட்டுத் திறக்கும்படியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதோடு பயணிகளுக்கு இவற்றை எல்லாம் பயணச் சீட்டிலேயே அச்சடித்துக் கொடுக்க வேண்டும். ரயில் நிலையத்திலும் வண்டி கிளம்பும் சமயம் வரை அறிவிப்புச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எனக்கு இன்னமும் தேஜஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டவில்லை. கிட்டினால் படம் எடுத்துப் போடறேன். (யாரு அங்கே கிழிச்சேனு கூவறது?) இப்போல்லாம் காமிரா எடுத்துட்டுப் போறோமாக்கும்! 

Friday, March 08, 2019

சிவராத்திரிப் படங்கள் தாமதமாக!

எல்லோரும் சிவராத்திரிப் பதிவுகள் போட்டிருந்தார்கள். நான் சிவராத்திரி பற்றி எல்லாம் எழுதிட்டேன். திரும்ப மீள் பதிவுகள் போடுவதில் விருப்பம் இல்லை. ஆகவே போடுவதில்லை. தவிர்க்க முடியாமல் சிலவற்றைப் போட வேண்டி இருந்தது. அதல்லாமல் எல்லாவற்றையும் மீள் பதிவாகப் போட்டால் புதுசாக எழுத ஒன்றுமே இல்லையா என நினைப்பீங்களே! அதனாலும் போடுவதில்லை. 

சிவராத்திரி அன்றைய தினம் கூட்டம் காரணமாகக் கோயில்களுக்குப் போவது இல்லை. வீடு தான் அன்று கோயில். விரதம் மட்டும் கடைப்பிடிப்போம். ஆகவே தற்காலங்களில் பதிவெல்லாம் போடுவது இல்லை! அதனால் என்ன? என்னைத் தேடிக் கோயில் விசேஷங்களே வந்து விட்டன! கருவிலி பற்றி அடிக்கடி எழுதிட்டு இருக்கேன். அனைவருக்கும் தெரியும்.கோயில் பற்றியும் அனைவரும் அறிவீர்கள் இல்லையா? திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களால் புதுப்பிக்கப்பட்டுக் கும்பாபிஷேஹங்கள் கண்டகோயில். இப்போது இந்தக் கோயிலில் எல்லா நாட்களும் சிறப்பாக எல்லாக் கால வழிபாடுகளும் நடந்து வருகிறது.  இந்த வருஷம் சிவராத்திரி அன்றைய வழிபாட்டுக்கான அழைப்பு வந்தது. ஆனால் போக முடியாது என்பது தெரியும். நான் சிவராத்திரி வழிபாடு ஓரிரு முறை மதுரையில் பார்த்திருக்கேன். சிவராத்திரி வழிபாடு முதல் இரண்டு காலங்களும், ஐப்பசி மாத அன்னாபிஷேஹமும் மதுரையில் பார்த்திருக்கேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திருவிழாவுக்கும் கோயிலுக்குப் போவது என்பதே மதுரையோடு போயாச்சு! காலமும், வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் இழுத்துச் சென்று விட்டன.  இம்முறை சிவராத்திரிக்குப் போகவில்லையே தவிர அங்கு நடந்த நிகழ்ச்சிகளின் சில படங்களைத் திரு கிருஷ்ணமூர்த்தியின் சகோதரர் ஆன திரு ஜி. கண்ணன் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார். அவற்றை இங்கே பகிர்கிறேன்.




கோயிலின் இந்த நுழைவாயிலை அனைவரும் பார்த்திருப்பீர்கள் என்றாலும் இது இரவு நேரத்தில் விளக்கு அலங்காரங்களுடன் காணப்படுகிறது.



கருவறைக்கு மேலுள்ள விமானமே உயரமாகக் கட்டப்படும் சோழநாட்டுக் கலைப்படியே இந்தக் கோயிலும் இருந்தது. ஆனால் திரு கிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்ற பின்னர் இங்கே ராஜ கோபுரம் தேவை என உணர்ந்து ராஜகோபுரம் கட்டினார். அந்த ராஜகோபுரம் தான் மேலே காணப்படுவது. இதையும் பார்த்திருப்பீர்கள்.

அர்த்த மண்டபத்துக்கு முன்னே உள்ள மஹா மண்டபம். இங்கே வேதங்கள் ஓதுவோர்களும், தேவார, திருவாசகம் ஓதுவார்களும் ஒருங்கே அமர்ந்து அவரவர் பணியைச் செய்து வருகின்றனர்.


இது எந்தக் கால வழிபாடு எனத் தெரியவில்லை.  ஏதோ ஒரு கால வழிபாடு முடிந்த பின்னர் காட்சி கொடுக்கும் இறைவன்.

நாதஸ்வரம் இப்போது கோயில்களில் இருந்து மறைந்து வருகிறது  என்பது வருந்தத் தக்க செய்தி. ஆனாலும் பழமைப் பெருமை பெற்ற மீனாக்ஷி அம்மன் கோயிலிலும், ஶ்ரீரங்கம் அரங்கன் கோயிலிலும் இன்னமும் ஒவ்வொரு கால வழிபாட்டிலும் நாதஸ்வர இசையால் அம்மையையும், அப்பனையும், அதே போல் அரங்கனையும் நாச்சியாரையும் மகிழ்விக்கின்றனர். எல்லாக் கோயில்களிலும் நாதஸ்வரம் சிறப்புப் பெற வேண்டும். பழைய நிலைமைக்கு மீள வேண்டும். ஆனால் கிராமங்களையும் பழமை வாய்ந்த கோயில்களையும் விட்டு நகரத்துக்குக் குடி பெயர்ந்த பல நாதஸ்வர வித்வான்கள் சொல்லுவது இங்கே விவரிக்க முடியாத வேறு சில காரணங்கள். விரைவில் எல்லாம் மறந்து நாதஸ்வரக்கலை புத்துயிர் பெற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.


திரு கிருஷ்ண மூர்த்தி அவர்களால் நடைபெறும்  வேத பாட சாலையின் மாணாக்கர்கள் இந்த வழிபாட்டில் பங்கு பெற்ற நிகழ்வு படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.




Tuesday, March 05, 2019

நான் கணினி கற்றால், அதை முழுதும் கற்றால் இணைய ரசிகர்களைப் படுத்தாமல் விடமாட்டேன்!

 

அப்போல்லாம் நாம் வேண்டுகிற தளத்தின் விலாசத்தைத் தான் முழுவதுமாகத் தட்டச்சணும்.  நான் என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்.  அப்போ என்னோட ஆசிரியர் வந்து ப்ரவுஸ் பண்ணப் போறீங்களானு கேட்க, நானும் என்னனு யோசிக்காம, ஆமாம்னு சொல்லிட்டேன்.  என்ன சைட்னு கேட்டார்.  சைட்டா?  நான் யாரையும் சைட் அடிக்கலையேனு வாயிலே வந்ததை முழுங்கிட்டேன்.  எனக்குக் கூச்ச சுபாவம் இல்லை;  நேரடியாச் சொல்லி இருக்கலாமோ!  அதுக்கும் திரு திரு.  அப்புறமா அவரே சரினு ஏதோ ஒரு தளத்தைத் திறந்து கொடுத்தார்.  அதிலே சில முக்கியமான தளங்களின் வெப் அட்ரஸ் இருந்தது.  அதிலே இருந்து ஒரு தினசரியின் தளத்தைக் க்ளிக்கிப் பார்க்க  முயல, மெளஸ் அந்தக் குறிப்பிட்ட சுட்டியில் நிக்காமல் ஓடிட்டே இருந்தது.  பொறி வைச்சுத் தான் பிடிக்கணும் போலிருக்கேனு அலுத்துப் போயிட்டேன். மீண்டும் ஆசிரியர் வருகை.  வெண்ணை திருடின கண்ணனாட்டமா நான் முழிக்க, அவருக்குச் சிரிப்பு.  நேத்திக்கு நடந்ததை அந்த ஆசிரியர் சொல்லி இருப்பாரோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சே, நேத்திக்கு எவ்வளவு ஜாலியா இருந்தது!  நல்லா விளையாட முடிஞ்சதே, இன்னிக்கு என்னன்னா, பாடம் ஆரம்பிச்சு நடத்தறாரே!  எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லைனாலும் அந்த ஆசிரியர் கிட்டே இதைச் சொல்ல முடியலை. :P


என்ன ஆச்சு மேடம்னு கேட்க, மெளஸ் ஓடிப் போயிடறதுனு புகார் கொடுத்தேன்.  நீங்க பிடிச்சுக்கறதிலே இருக்குனு சொன்னார்.  மெளஸ்னு நினைச்சாலே பிடிக்கவா தோணும்! இதோட பெயரை வேறே ஏதானும் வைச்சிருக்கக் கூடாதோ!  யாருங்க அது இதுக்கு மெளஸ்னு பெயர் வைச்சது! னு மனசுக்குள்ளே நொந்து நூலாகிப் போயிட்டேன். அதுக்குள்ளே மெயில் கொடுக்கணுமேனு யோசனை வர, என் பையருக்கும், பொண்ணுக்கும் மெயில் கொடுக்கணும்னு சொன்னேன்.  அவங்க மெயில் ஐடி தெரியுமானு கேட்டார்.  எழுதிக் கொண்டு போயிருந்தேன்.  அதைச் சொல்லவும். என் கிட்டே இருந்து மெளஸை வாங்கி எதையோ க்ளிக்கினார்.  ஒரு தளம் வந்தது.  அதிலே என்னோட பெயர், வயசு எல்லாம் கொடுத்து ஓகே கொடுக்கச் சொல்ல சரினு அவர் சொன்னதெல்லாம் பண்ணி வைச்சேன்.  பாஸ்வேர்ட்னு ஒண்ணு கொடுக்கணுமே.  அப்போல்லாம் யாஹூ தான்.  யாஹூ.காமில் ஒரு அக்கவுன்ட் க்ரியேட் பண்ணினேன்.  பாஸ்வேர்ட் கொடுக்கையில் என்ன கொடுக்கிறதுனு புரியலை.  ஏதோ ஒரு பூவின் பெயரைக் கொடுத்தேன்னு நினைக்கிறேன்.  எல்லாம் முடிச்சாச்சு. மெயில் கொடுக்க என்ன செய்யறதுனு புரியாம எதையோ க்ளிக்கினால் தளம் மறைஞ்சே போயிச்சு.  ஆஹா, காக்கா தூக்கிண்டு போச்சோனு, உஷ், உஷ்னு கத்தலாம்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே கணினியே முழுசா ஆஃப் ஆக என்னமோ தப்பாயிடுச்சுனு புரிஞ்சது.


அதுக்குள்ளே என்னோட மூஞ்சியைப் பார்த்துட்டே அந்த ஆ"சிரி"யர் வந்து சேர்ந்தார்.  என்னனு கேட்க, வாயே திறக்காமல் கணினியைச் சுட்டிக் காட்டினேன்.  ஹிஹிஹி, ஷட் டவுன் பண்ணி இருக்கீங்க, எப்படிச் செய்தீங்கனு கேட்டார்.  நான் எங்கே ஷட் டவுன் பண்ணினேன்.  மெயில்கொடுக்கணும்னு தான் நினைச்சேன்.  அது ஒரேயடியா காணாமப் போச்சுனு சொன்னேன்.  மறுபடியும் ஸ்விட்சைப் போட்டு கணினியைத் திறக்கச் சொன்னார். திறந்து ஸ்டார்ட் பட்டனைக் க்ளிக்கச் சொல்ல ஸ்டார்ட் க்ளிக் பண்ணினேன்.  டபுள் க்ளிக் என்று சொன்னதாக நினைவு.  ஆகவே இன்னொரு தரம் எதிலோ க்ளிக்க, பெயின்ட், ப்ரஷ்னு வந்துடுச்சு.  அங்கே பார்த்தால் ஒரு ப்ரஷ் ஒண்ணு ஓரமா இருக்க அதைக்க்ளிக்கினால் சென்டருக்கு வந்தது.  மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன்.  இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது.  இப்படி எல்லாம் விளையாடலாம்னு யாருமே சொல்லலையே, துரோகிங்கனு பொண்ணையும், பையரையும் திட்டிக் கொண்டேன், மனசுக்குள்ளே தான்.  பார்த்தார் ஆசிரியர். என்னதான் இவங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லைனாலும் இதெல்லாம் டூ மச் இல்லை, ஃபோர் மச்ச்னு தோணிப்போய், என்ன மேடம் மெயில் ஐடி க்ரியேட் பண்ணணும்னு சொல்லிட்டு வரையறீங்களேனு கேட்க, அசடு வழிய நான் ஸ்டார்ட் பட்டனிலே டபுள் க்ளிக் பண்ணினதிலே இது வந்ததுனு சொல்ல, அதெல்லாம் இல்லை, ப்ரொகிராமிலே பெயின்ட், ப்ரஷிலே க்ளிக்கி இருக்கீங்கனு நாலு பேர் முன்னாடி சொல்லி என் மானத்தை(இருக்கா என்ன?) ஒட்ட வாங்கினார். ப்ரொகிராமா அது எங்கே இருக்கு??  ம்ம்ம்ம்?? தனியாக் கேட்டு வைச்சுக்கணும், இல்லைனா இன்னொரு நாள் வந்து கணினியைத் துருவிப்பார்க்கணும்னு நினைச்சுக் கொண்டேன்.  பின்னர் அங்கே வந்து யாஹூவைத் திறந்து கொடுத்தார்.


மெயில் கொடுக்க இன்பாக்ஸ் திறந்துடுச்சு.  ஆ னு வாயைப் பிளந்தேன். கொடுங்க மேடம்னு சொன்னார்.  இதிலே ஒருத்தருக்குத் தானே கொடுக்க முடியும்னு சொல்ல, நீங்க மேட்டரை டைப் பண்ணுங்க.  இல்லைனா சொல்லுங்க, நான் டைப்பறேன்னு சொல்லவே, அட, இந்த ஆங்கிலம் கூடவா தெரியாதுனு நினைச்சுட்டார்னு கோபம் வர, கிடு கிடு கிடு கிடுனு டைப்பினேன்.  அவசரத்தில்" கிடுகிடு"  "கிடு கிடு" "கிடு கிடு" அப்படின்னே அடிச்சுருக்கப்போறேனேனு பார்த்துக் கொண்டேன்.  நல்ல வேளையா இல்லை.நான் டைப்பின வேகத்தைப் பார்த்து அசந்துட்டார்.  என்ன இவ்வளவு வேகமா டைப்பறீங்க! ஒண்ணும் அவசரம் இல்லை.  இன்னும் பத்து நிமிஷம் இருக்கு உங்க நேரம் முடிய.  அப்புறமாக் கூட ஒரு ஐந்து நிமிஷம் ஆனாப் பரவாயில்லைனு ரொம்பப் பெருந்தன்மையாச் சொல்ல, அலட்சியமா அவரைப் பார்த்த நான். என்னோட டைப்பிங் குறைந்த பட்ச வேகம் இதுனு சொல்லி அவரைத் திரும்ப அசர அடிச்சேன். அப்புறமா அந்த ஐடியை மேலே டைப் பண்ணச் சொன்னார். சென்ட் கொடுக்கச் சொன்னார். நாளைக்கு பதில் என்னோட இந்த ஐடியிலே இருக்கும், வந்து பார்த்துக்குங்கனு சொன்னார்.  நான் எனக்கு? எனக்கு? னு சுண்டல் கேட்கிறாப்போல் கேட்க, அவரும் இங்கே பக்கத்துப் பிள்ளையார் கோயில்லே தான் தராங்கனு சொல்லிட்டார்.  பதிலுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரின நான், அவர் கிட்டே நானே சொந்தமா என்னோட மெயில் ஐடி ஒண்ணு க்ரியேட் பண்ணணும்னு சொல்ல,  அதான் மேடம் இதுனு செந்தில்--கவுண்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரிச் சொல்லிட்டார்.

அப்புறமா அங்கிருந்து பொண்ணுக்குத் தனியா, பிள்ளைக்குத் தனியானு மறுபடி  என் முயற்சியாலேயே இன்னொரு மெயில் கொடுத்தேன். அப்பா!  இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினாக் கூட இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சந்தோஷமா இருந்தது.  போயிருக்குமானு சந்தேகம் வேறே.  அன்னிக்கு வீட்டிலே போய் ரங்க்ஸ் கிட்டே இதான் பெருமையாச் சொல்லிட்டு இருந்தேன்.  பையர் அன்னிக்கு ராத்திரியே ஃபோன் பண்ணி அம்மா மெயில் வந்ததுனு சொல்லிட்டு, என்னோட ஆர்வத்தைப் பொசுக்கிட்டார். "ஏண்டா, சொன்னே! ஒரு மெயில் கொடுக்கக் கூடாதோ! நான் வந்து அப்பா கிட்டே சொல்லுவேனே!" னு சொன்னா. "ஹை டெக் அம்மா" னு கிண்டல் வேறே!  இப்போவும் என்னை ஹை டெக் அம்மானு தான் சொல்லுவார். :P:P:P:P

மறுநாளைக்குப் பொண்ணு சமத்தா மெயிலில் பதில் கொடுத்திருந்தாள். ரொம்பவே சந்தோஷமா இருந்தது.  அதுக்கப்புறமா ஆரம்பிச்சார் எங்க பையர்.  அம்மா கணினி எக்ஸ்பெர்ட் ஆயிட்டானு, அவர் அமெரிக்கா போகிறதுக்குண்டான வேலையை எல்லாம் இங்கே என்னைச் செய்ய வைச்சு, அதைக் கணினி மூலமா அப்டேட் செய்யச் சொல்லி இன்னும் பழக்கினார்.  ஓரளவுக்குக் கணினியைத் திறக்கவும், மூடவும், மெயில் ஐடியைத் திறக்கவும் வந்தது.  அப்புறமா முதல்முறை அமெரிக்கா போனப்போ பொண்ணு வீட்டு கணினியிலே தான் முதல்முறையாத் தமிழ் படிச்சேன். அந்தக் கதை தனி. அதை வேறே யாரானும் கேட்டா வைச்சுக்கலாம்.  மொத்தத்தில் நான் கணினி கற்றுக் கொண்டதுனு பார்த்தா மெயில் கொடுக்க மட்டுமே தெரிந்து கொண்டிருந்தேன்.  மிச்சம் எல்லாம் அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே தெரிந்து கொண்டேன்.



தொழில் நுட்பப் பிரச்னைகள் என வரும்போது நண்பர்கள் உதவி செய்யறாங்க, செய்தாங்க, இன்னும் செய்வாங்க.

நான் அழைக்கும் ஐந்து பேர்

வல்லி சிம்ஹன்

ரஞ்சனி நாராயணன்

வை.கோபாலகிருஷ்ணன்

ஜி.எம்.பி. சார்

ஜீவி அவர்கள்

ரொம்ப யோசிச்சு இவங்களை எல்லாம் யாரும் கூப்பிடலை என்பதை உறுதி செய்து கொண்டு கூப்பிட்டிருக்கேன்.  பதிவு ரொம்பவே பெரிசா ஆயிடுமோனு இதைக் கொஞ்சம் அவசரமாவே முடிச்சிருக்கேன்.  மன்னிக்கவும். :))))

இது மீள் பதிவு என்பதால் போனமுறை ஐந்து பேரை அழைக்கணும் என அழைத்திருந்தேன். இதைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடிட வேண்டாம். இப்போ நான் யாரையும் அழைக்கலை!சே,பதிவுக்குக் கருத்துச் சொல்லனு நினைச்சுட்டு எங்கே ஓடறீங்க? வந்து கருத்துச் சொல்லிட்டுப் போங்க! நான் சொன்னது யாரும் இதைத் தொடர் பதிவாக நினைத்துக்கொண்டு எழுத வேண்டாம் என்பதே! உங்களுக்கே விருப்பம் இருந்தால் எழுதுங்க! தடுக்க மாட்டேன்! :)))))