எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 28, 2022

நவராத்திரியில் அம்பிகை வழிபாடு 2

 அவற்றுக்கு என உள்ள வரிசையில் தசமஹா தேவியர் பற்றி எழுதறேனானு தெரியலை. என்றாலும் இப்படியும் எழுதிப் படிச்சிருக்கேன். நவராத்திரியில் அம்பிகை வழிபாடு பற்றி முன்னரும் பல பதிவுகள் எழுதி இருக்கேன். அவற்றின் சுட்டிகளைத் தேடிப் போடறேன். 

தசமஹாதேவியரில் இன்னிக்குப் பார்க்கப் போவது தாரா தேவி. காற்றை விடக் கடிதாக விரைந்து வந்து அருள் புரிவாள். வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்க இவளை வழிபட்டால் போதுமானது. இந்தத் தாரா தேவியின் பூரண அருளினாலேயே ஸ்ரீராமன் ராவணனை வதம் செய்ய முடிந்தது என்பார்கள். இந்தத் தேவியின் அருள் பெற்றவர்களுக்குக் கவிதை தாரையைப் போல் கொட்டும்.  இவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே கிட்டும். எப்போதுமே பக்தர்களைக் காக்கும் இவளை உக்கிரமான காலங்களிலும் "உக்ரதாரா" என்னும் பெயரில் வழிபடுவார்கள். ஆதி அந்தமற்ற இவள் பிரளய காலங்களில் தேவாதி தேவர்களைக் காத்திடுவாள் என்பார்கள்.  தீபாவளி வரும் நரக சதுர்த்தசியோடு அமாவாசையும் சேர்ந்து வரும் நாள் தாராதேவியை வழிபட மிகச் சிறந்த நாள் என்பார்கள். அதே போல் செவ்வாய்க்கிழமை அமாவாசையோடு சேர்ந்து ஏற்படும் சூரிய கிரஹண நாளும் தாராதேவியை வழிபடச் சிறந்த நாளாகும்.  இந்தத்தாரா தேவியை ஜைனர்களும்/பௌத்தர்களும் கூட வழிபடுவதாக அறிகிறோம்.  முற்காலத்தில் ரிஷிகளால் முக்கியமாய் வசிஷ்டரால் வழிபடப்பட்டவள் இந்தத் தாரா தேவி.



மூன்றாவதாக வரும் தேவி ஸ்ரீவித்யா. இவளை பிரம்மா, விஷ்ணு, சிவன், சூரியன், கணபதி, முருகன், அகத்தியர், குபேரன், அத்ரி மஹரிஷி, துர்வாசர், அகத்தியர் மனைவி லோபாமுத்திரை, தத்தாத்திரேயர், புத பகவான், பரசுராமர் ஆகியோர் வணங்கி வழிபட்டு ஆசிகளைப் பெற்றிருக்கிறார்கள். எல்லாம் வல்ல ஆதி பராசக்தியான லோக மாதாவையே ஸ்ரீவித்யா சொரூபத்தில் வழிபட்டதாகச் சொல்லுவார்கள்.  இவளையே ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாகவும், இவளையே ஸ்ரீமாதாவாகவும் வழிபடுவார்கள். இவள் வாசம் செய்யும் இடம் நம் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஸ்ரீபுரம். மஹாமேருவின் சிகரத்தில் உள்ளது. இவளுக்கான மந்திரத்தை ஸ்ரீவித்யை எனச் சொல்லுவார்கள். யந்திரம் நாம் அனைவரும் அறிந்த ஸ்ரீசக்ரம், இவள் சிம்மாசனமோ ஸ்ரீசிம்மாசனம்.


இந்த ஸ்ரீசக்ரத்தின் சிறப்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிறோம். சிவமயமான சக்காங்கள் நான்கு, சக்தி மயமான ஐந்து சக்கரங்கள் ஆகிய ஒன்பது சக்கரங்களை உடைய இணைப்பே ஸ்ரீசக்ரம் என்பார்கள். இந்தச் சக்கரத்தில் அம்பிகையைக் காமேஸ்வரருடன் இணைந்து இருக்கையில் செய்யப்படும் வழிபாடே நவாவரண வழிபாடு என்பதாகும்.இதனால் உலகுக்கு நன்மை உண்டாகும். மனதிலுள்ள வீண் அச்சங்கள் அகலும். 








Tuesday, September 27, 2022

நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப் பட்டாலும் பெரும்பாலும் வீடுகளில் கொண்டாடுவது இந்த சாரதா நவராத்திரியே ஆகும். பத்து நாட்களும் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பெண்களை அம்பிகையின் வடிவாகவே பார்த்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருவப் பெண் குழந்தையை அம்பிகையாகப் பாவித்து வழிபட்டு அந்தக் குழந்தைக்குப் பிடித்தனவற்றை உண்ணக் கொடுத்துப் புதிய துணிகளும் கொடுத்து வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு.

முதல்நாளன்று இரண்டு வயதுப் பெண் குழந்தையைக் "குமாரி" எனப் பூஜித்து வணங்குவார்கள். அம்பிகையைக் குமாரியாகப் பார்ப்பது தான் இதன் பொருளே தவிர்த்து அந்தக் குழந்தையின் பெயரை இது குறிப்பிடாது.

இரண்டாம் நாளன்று 3 வயதுப் பெண் குழந்தையைத் திரிமூர்த்தி என்னும் பெயரால் வழிபடுவார்கள்.. மூன்று சக்தியும் சேர்ந்தவளாக அம்பிகையைப் பூஜிப்பது வழக்கம். 

மூன்றாம் நாளன்று 4 வயதுப் பெண் குழந்தையைக் கல்யாணி என்னும் பெயரால் வழிபடுவார்கள்.

நான்காம் நாளன்று ஐந்து வயதுக் குழந்தைக்குப்பூஜை செய்ய வேண்டும். ரோஹிணி என்னும் பெயரால் வழிபட வேண்டும்.

ஐந்தாம் நாளன்று 6 வயதுப் பெண்ணைக் காளிகாவாக வழிபடுவது வழக்கம். பகைவர்களை நாசமாக்கும் என்று நம்பப் படுகிறது.

ஆறாம் நாளன்று 7 வயதுப் பெண்ணைச் சண்டிகாவாக வழிபட வேண்டும்

ஏழாம் நாளன்று 8 வயதுப் பெண்ணை சாம்பவி என்னும் பெயரால் வழிபட வேண்டும்

எட்டாம் நாளன்று 9 வயதுப் பெண்ணை துர்கா என்னும் பெயரால் வழிபட வேண்டும்.

ஒன்பதாம் நாளன்று பத்து வயதுப் பெண்ணை சுபத்திரா என்னும் பெயரால் வழிபட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண் குழந்தையை அழைத்து வழிபட்டு வரலாம்.அந்தக் குழந்தைகளுக்குப்பிடித்த உணவைச் சமைத்து உண்ணக் கொடுக்கலாம் அல்லது அந்த அந்த நாளுக்கு என்றே உரியதான பிரசாதங்களையும் பண்ணிச் சாப்பிடக் கொடுக்கலாம். 

இவை எல்லாம் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் திரும்ப  எழுதி வந்திருக்கிறேன்.இந்த வருஷம் நவராத்திரிக்கு எனத் தனியாக எதுவும் சிறப்பாக ஏற்பாடு செய்து கொள்ளவில்லை.எனினும் தசமகா தேவியர் பற்றிய சின்னச் சின்னக் குறிப்புக்களைத் தரலாம் என எண்ணுகிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியின் வடிவில் அம்பிகையைத் துதித்து வரலாம். சக்தி உபாசகர்கள் தினந்தோறுமே தசமகா சக்தியரை வழிபட்டு வருபவர்கள் ஆவார்கள். ஆனாலும் இந்த நவராத்திரி சமயத்தில்நாம் வழிபடுவது இன்னமும் சிறப்பைத் தரும். இங்கே வித்யா என்பது வெறும் அறிவை மட்டும் குறிக்காது. அந்த வித்யையினால் நாம் அடையக் கூடிய அம்பிகையின் அளவற்ற பிரபாவத்தையும் குறிக்கும்.ஆனால் இது கடினமானது. உபாசகர்கள் அதிகம் இதில் ஈடுபட வேண்டாம் என்றே சொல்லுவார்கள். நாம் இங்கே ஆழமாக எல்லாம் போக்ப் போவதில்லை. சின்னச் சின்னதாகவே தெரிந்து கொள்வோம்.

முதலில் காளி தேவி. காலி எனவும் சொல்லப்படுகிறாள். காலத்தைக் குறிப்பவள் என்பதாலும் இவ்விதம் அழைக்கின்றனர். இவள் பார்க்க பயங்கர சொரூபியாக இருந்தாலும் இவளைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. பத்ரகாளி எனவும் இவளை அழைப்பார்கள். இங்கே பத்ர என்னும் சொல்லுக்கு நன்மை என்றே பொருள்படும். ஆகவே இவள் அனைத்துக் காலங்களிலும் நமக்கு நன்மையே செய்கிறாள்.  இவள் இருக்குமிடம் ஸ்மசான எனச் சொல்லப்படுகிறது. அது இப்போதைய மயானத்தைக் குறிப்பிடுவதில்லை. மஹா பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் இவளில் ஒடுங்கும்போது இவள் இருப்பிடத்தைக் குறிப்பது ஆகும்.


ஆதி காலத்தில் பலரும் காளி உபாசகர்களாக இருந்திருந்தாலும் நமக்குத் தெரிந்த காலகட்டத்தில் மஹாகவி காளி தாசனும் அதன் பின்னர் வந்த காலகட்டத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களும் மிகச் சிறந்த காளி உபாசகர்கள். இவளுக்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில, ஆதி காளி, பத்ரகாளி, ஸ்மசான காளி, கால காளி, குஹ்ய காளி, காமகலா காளி,தனகாளி, சித்தி காளி,சண்டி காளி, ஏகதாரா காளி, டம்பர காளி,கஹனேஸ்வரி காளி, சாமுண்டா காளி, ரக்ஷா காளி இந்தீவரி காளி, ஈசான காளி, மந்த்ரமாலா காளி, தக்ஷிண காளி, வீர காளி, காத்யாயனி, சாமுண்டா, முண்ட மர்தினி எனப் பல பெயர்கள் உண்டு. இவளைப் பார்த்து நாம் பயப்படாமல் சகலவிதமான பயங்களில் இருந்தும் நம்மைக் காப்பவள் இவளே என்பதை உணர்ந்து கொண்டால் காளி வழிபாடு அச்சத்தை ஏற்படுத்தாது. 

Wednesday, September 21, 2022

நெல்லைத்தமிழருக்காக மட்டுமில்லை, அனைவரும் அறிவதற்கு! :)

 3. செண்டலங்காரர் (நினைவு மஞ்சரி பாகம் 1) உ.வே.சா.


வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர் களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று. சங்ககாலத்திலே பாரதம் ஒன்று இருந்தது. ஆனால், உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப் பெற்றமையின் சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது உயிர்தரித்து நிற்கின்றன. அதற்குப் பிறகு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்று உண்டு. அது முற் றும் கிடைக்கவில்லை. அதைப் படித்து இன்புறுவார் அரியர். பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்ததுபோல வேறு எந்தப் பாரதமும் கவர வில்லை. இப்பொழுதும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலே தமிழறிந்தோர் வில்லிபாரதப் பிரசங்கம் செய்வதைக் காணலாம். தமிழ்நூலை முறையாகப் பாடங் கேட்பவர்கள் வில்லிபாரதத்தைத் தவறாமற் கேட்பது வழக்கம்.


நன் இளமையிலே அந்நூலைப் படித்தகாலத்தில் அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்தேன். அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும் தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலே இலிக்கும். வடமொழிச்சொற்களையும் தொடர்களையும் வில்லிபுத்தூரார் தடையின்றி மிகுதியாக எடுத்து ஆளுகின்றார்.


சபாபருவத்திலே சூதுபோர்ச் சருக்கத்தில் தரும புத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப்படுகிறது. சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரும்வண்ணம் தன தம்பி துச்சாதனனுக்குக் கட்டளை-யிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான்.


"தண்டார் விடலை தாயுரைப்பத்

      தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்

செண்டால் அவள்பைங் குழல்பற்றித்

      தீண்டா னாகிச் செல்கின்றான்

வண்டார் குழலு முடன்குலைய

      மானங் குலைய மனங்குலையக்

கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்

      கொண்டா ளந்தோ கொடியாளே"


என்ற செய்யுளில், அவன் திரௌபதியைப் பற்றி இழுத்துச் செல்லும் செய்தி கூறப்படுகின்றது. "தன்னுடைய தாயாகிய காந்தாரி, 'நீ போய் வா' என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலை பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி அந்தோ! தன் குழல் குலைய மானங் குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள்" என்பது இச்செய்யுளின் பொருள்.


திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில்,

"தீண்டாத கற்புடைய செழுந்திருவை"


என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன்.

'கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி'


என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். 'துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது? திரௌபதி கூந்தலில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்தான் என்று சொல்லலாமா? பாட்டில் தெளிவாகக் கைச்செண்டாலென்று சொல்லப் பட்டிருக்கிறதே. தீண்டாத நிலையில் உள்ள அவள் கூந்தலில் மாலை அணிவதும் கையில் செண்டு வைத்திருப்பதும் இயல்பல்லவே? செண்டென்பதற்குப் பந்தென்று ஒருபொருள் உண்டு. அதை அமைத்துப் பார்க்கலாமா? பந்துக்கு இங்கே என்ன சம்பந்தம்?' என்று இவ்வாறெல்லாம் எனக்கு அடிக்கடி ஐயங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன.


திருவிளையாடற்புராணத்தில் சோமசுந்தரக் கடவுள் உக்கிரகுமாரருக்கு வேல் வளை செண்டு வழங்கியதாக ஒரு திருவிளையாடல் இருக்கிறது. அங்கே கூறப்படும் செண்டு எது? அந்தச் செண்டைக் கொண்டு அவர் மேருவை எறிந்ததாகப் புராணம் கூறுகின்றது. பலர் அதற்குப் பந்தென்றும், பூச்செண்டு போன்ற ஆயுதமென்றும் பொருள் கூறினர். ஐயனார் திருக்கரத்தில் செண்டு இருக்கிறதென்றும், கரிகாற்சோழன் இமயமலையைச் செண்டாலடித்துத் திரித்தானென்றும் சில செய்திகள் நூல்களால் தெரிந்தன. அந்தச் செண்டுகள் யாவை? பந்தா? மலர்ச்செண்டா? செண்டு போன்ற ஆயுதமா? எல்லாம் சந்தேகமாகவே இருந்தன. நான் பலரைக் கேட்டுப் பார்த்தேன். சமயம் போல அவர்கள் விடை பகர்ந்தார்கள்.


சற்றேறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன், வழக்கமாக நான் செய்துவரும் தமிழ் யாத்திரையில் ஒரு முறை பொறையாறு முதலிய இடங்களுக்குப் போக நேர்ந்தது. என்னோடு இருந்து தமிழ்ப்பணிக்கு உதவிபுரிந்து வந்த திருமானூர்க் கிருஷ்ணையரென்பவருடன் அம்முறை புறப்பட்டேன். மாயூரத்தைக் கடந்து ஆறுமைல் தூரத்திலுள்ள ஆறுபாதி என்னும் ஊருக்கருகில் சென்று கொண்டிருந்தோம். அங்கே வழியில் கீழ்மேல் அக்கிரகாரத்துக்குப் பின்பக்கமாக வடபுறமுள்ள குளத்தின் கீழ்கரையில் ஒரு பெருமாள் கோயில் இருந்தது. அக்கோயிலின் வாசலில் அதனுடைய தர்ம கர்த்தாவும் வேறு சிலரும் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருந்த நிலையப் பார்த்தபோது யாரோ பெரிய உத்தியோகஸ்தர் ஒருவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பதாகத் தோற்றியது. எங்களைக் கண்டவுடன் தர்மகர்த்தா என்னை அவ்வுத்தியோகஸ்தராக எண்ணிக்கொண்டா ரென்று ஊகித்தேன். அந்தக் கலத்தில் உத்தியோகஸ்தராக இருந்தாலும் கோவிலுக்குப் போகும் போது வைதிகக் கோலத்தோடுதான் போவது வழக்கம். ஆதலின் நான் மிகவும் சாதாரண உடை யணிந்து செல்வதைக் கண்டும் அவர் என்னையே உத்தியோகஸ்தராக எண்ணிவிட்டார், "வாருங்கள், வாருங்கள்" என்று உபசரித்து வரவேற்றார்.


யாரோ ஓர் உத்தியோகஸ்தர் அவ்வாலயத்தைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாராம். அதற்காகப் பெருமாளுக்கு அலங்காரம் செவ்வையாகச் செய்திருந்தார்கள். தர்மகர்த்தாவும் நல்ல உடைகளை உடுத்து அலங்காரம் செய்து கொண்டு நின்றனர். பிரஸாதங்களும் பெருமாளுக்கு நிவேதனம் செய்த வியாஜமாக உத்தியோகஸ்தரின் பொருட்டு ஸித்தமாக வைத்திருந்தனர். அவர்கள் நெடுநேரம் காத்திருந்தார்கள். உத்தியோகஸ்தர் வரவில்லை. அந்த நிலையிலே என்னைக் கண்டவுடன் அவரென்றோ அவரால் அனுப்பப்பட்டவரென்றோ தான் தீர்மானித்திருக்க வேண்டும். தர்மகர்த்தா எங்களை உள்ளே அழைத்துசு சென்றார். பெருமாளைத் தரிசனம் செய்து வைத்தார். அவர் எதிர்பார்த்தவர் நான் அல்லவென்று உடனிருந்தவரால் அறிந்து ஏமாந்து போனார்.


ஆனாலும் அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கும்பகோணத்தில் நான் வேலையில் உள்ளவனென்று தெரிந்தவுடன் தம்முடைய பெருமை அங்கே பரவட்டுமென்று எண்ணியிருந்தாலும் இருக்கலாம். எப்படியாயினும் எங்களுக்கு எதிர் பாராதபடி திவ்ய தரிசனமும் வயிறார இனிய பிரஸாதங்களும் கிடைத்தன.


தரிசனம் செய்தபோது பெருமாள் திருநாமம் ராஜகோபாலப் பெருமாளென்று அறிந்தேன். அவர் திருக்கரத்தில் பிரம்பைப்போல ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பில் இரண்டு வளைவுகள் இருந்தன. நான் அதுகாறும் பெருமாள் திருக்கரத்தில் அத்தகைய ஒன்றைக் கண்டதில்லை; ஆதலால் தர்மகர்த்தாவை நோக்கி, "இது புதிதா யிருக்கிறதே; என்ன?" என்று கேட்டேன். "அது தான் செண்டு" என்று அவர் கூறினார். "செண்டா!" என்று சொல்லி அப்படியே சின்றுவிட்டேன். "எங்கே, அதை நன்றாகக் காட்டச் சொல்லுங்கள்" என்று வேண்டினேன்.


கோயில் அர்ச்சகர் கற்பூர தீபத்தால் அந்தச் செண்டை நான் நன்றாகப் பார்க்கும்படி காட்டினார். நான் அதைக் கவனித்துப் பார்த்தேன். என் மனக்கண்முன் அப்போது திரௌபதியின் உருவம் வந்து நின்றது; துச்சாதனன் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற ஒரு கருவியால் அவள் கூந்தலைப் பற்றி யிழுக்கும் காட்சி வந்தது. அடுத்தபடியாக உக்கிர குமாரர் மேருமலையை அந்தக் கருவியால் எறிந்து திரித்த தோற்றம் தோற்றியது. அவர் மறைந்தார். கரிகாலன் கையில் செண்டாயுதத் தோடு நின்றான். ஐயனாரும் நின்றார். அவர்கள் கைக ளில் எல்லாம் தலைப்பு வளைந்த பிரம்புபோன்ற கருவியைக் கண்டேன். சில நிமிஷங்கள் வரையில் இந்த அகக் காட்சிகளால் புறவுலகத்தை மறந்திருந்தேன்.


அந்த அர்ச்சகர் காட்டிய கற்பூர தீபம் பெருமாள் திருக்கரத்திலிருந்த ஆயுதத்தை எனக்குத் தெளிவாகக் காட்டியது. அதனோடு நெடுங்காலமாக என் மனத்திலிருந்த சந்தேக இருளை அகற்றித் துச்சாதனன், உக்கிரகுமார், கரிகாலன், ஐயனாரென்பவர்கள் கையில் உள்ள கருவி இன்னது தானென்று அறியும்படியும் செய்தது.


" ஐயா, நீங்கள் எனக்குப் பெரிய உபகாரம் செய்தீர்கள். பெருமாளின் தரிசனத்தால் எனக்கு ஒரு பெரிய லாபம் கிடைத்தது; என் மனம் சந்தோஷம் அடைந்தது. இதுவரையிலும் இந்தச் செண்டைப் பார்த்ததில்லை. உங்கள் தயையால் இதைப் பார்த்தேன்" என்று தர்மகர்த்தாவை நோக்கிக் கூறினேன்.


" இந்தப் பெருமாளும் மன்னார்குடியில் எழுந்தருளியிரு்க்கும் பெருமாளும் ஒரே அச்சு. அங்கும் பெருமாளின் திருக்கையில் செண்டு உண்டு. செண்டலங்காரப் பெருமாள் என்றும் அவரது திருநாமம் வழங்கும்" என்று அவர் கூறினார்.


" சந்தோஷம். தங்களுக்கு மிகவும் வந்தனம்" என்று கூறி விடை பெற்றுக்கொணடேன்.


அன்றுமுதல் என் சந்தேகம் பறந்துபோய் விட்டது. பிறகு ஆராய்ச்சி செய்யத் தமிழ் இலக்கியத்தில் பல செண்டுகள் கிடைத்தன. அவற்றை நான் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டேன். மன்னார்குடிப் பெருமாளுக்குச் செண்டலங்காரப் பெருமாளென்னும் திருநாமம் உண்யென்று தர்ம கர்த்தா கூறியதை இலக்கிய வாயிலாகவும் நான் உறுதி செய்து கொண்டேன். ' செண்டலங்காரப் பெருமாள் வண்ணம்' என்ற பிரபந்த மொன்றை நான் படித்தபோது அந்த நினைவு எனக்கு வந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கரத்தில் உள்ள செண் டும் ஓர் ஆயுதமென்று தெரிந்து கொண்டேன். பெருமாள் தரிசனத்தின் பயன் கைமேல் கிடைத்தது.

**********************************************************************************

வடுவூர் பெருமாளைப் பற்றி உ.வே.சா அவர்கள் குறிப்பிடவில்லை. அநேகமாக "தெய்வத்தின் குரலில்" படிச்சிருப்பேன். அதையும் தேடி எடுக்கணும். தேடி எடுக்கிறேன். ஆறுபாதி வழியாகவே பலமுறை போயும் உள்ளே போய்ப் பெருமாளைப் பார்க்கலை. :(

Sunday, September 11, 2022

மஹாகவிக்கு அஞ்சலி!

 “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”



"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;

பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;

நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;

ஞான நல்லறம் வீர சுதந்திரம்

பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;

பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”


பாரதியார் இன்னிக்கு இருந்தால் இப்படிப் பாடி இருப்பாரா சந்தேகம் தான். :(


காலம்பர எழுத உட்கார்ந்தால் ஒரு சில அவசர வேலைகள்! பொதுவாய் ஒரு வாரம் முன்னரே ஷெட்யூல் பண்ணி வைப்பேன். இந்த முறை உடல்நலக் குறைவும் ஒரு காரணம். அதோடு சிலர் செப்டெம்பர் 12 தான் என்கின்றனர். பலர் செப்டெம்பர் 11 என்கின்றனர். என்றாய் இருந்தால் என்ன? இரு நாட்களுக்கும் சேர்த்து அஞ்சலி செலுத்துவோம். தமிழக அரசு இந்நாளை "மஹாகவி நாள்" என அறிவித்துள்ளதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.