எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 30, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 6

இன்று ஐந்த்ரிணி எனப்படும் இந்திராணி. அம்பிகையின் சேனைகளில் இவளும் ஒருத்தி. யானை வாகனத்தில் வஜ்ராயுதத்தோடு காணப்படும் இவளை வணங்கினால் பெரிய பதவிகள், வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். இவளுக்குரிய நிவேதனம் எலுமிச்சைச் சாதம்.

மாலை நிவேதனம் :அரிசிப்புட்டு. செய்முறை போன வருஷமே சொல்லியாச்சு. என்றாலும் மீண்டும் ஒரு முறை: நான் செய்வது வேக வைக்காத புட்டு. ஆகவே அரிசியைக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நன்கு சிவப்பாக வறுக்கவும். வறுத்த அரிசியை ஆற வைத்துப் பின்னர் மிக்சியில் போட்டு மாவாக்கவும். ஒரு கிண்ணம் மாவுக்கு ஒரு கிண்ணம் நீரை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க வைக்கவும்.அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து அரைத்த மாவில் விட்டுக் கிளறிக்கொண்டே வரவும். கையால் பிடித்தால் பிடிக்கமுடியணும், உதிர்த்தால் உதிரவேண்டும். அந்தப் பதம் வரும் வரைக்கும் நீர் விட்டுக் கிளற வேண்டும். பின்னர் இதையும் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.

பின்னர் நூறு கிராம் வெல்லத் தூளைக் கொஞ்சமாய் நீர் சேர்த்துப்பாகு வைக்க வேண்டும். வெல்லப் பாகை நீரில் போட்டால் உருட்ட வரவேண்டும், அந்த உருண்டை ஒரு தாம்பாளத்தில் போட்டால், டங் என சப்தம் வரவேண்டும். பாகை இந்தப் பதத்தில் காய்ச்சிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். போதும் எனத் தோன்றும் வரையிலும் பாகை விட்டுக் கலக்கவும். பின்னர் வாணலியில் நெய் விட்டுத் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு வறுத்துச் சேர்க்கவும். ஏலக்காய் பொடித்துப் போடவும். இது ஒரு வாரம், பத்துநாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
*************************************************************************************

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என அனைத்துத் தொழில்களையும் புரிபவள் ஆதிபராசக்தியே என்றே கூறுவார்கள். சக்தியிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது. அவ்வளவு ஏன்! பரப்ரம்மம் ஆன சிவனும் அவள் செயலாலேயே தனது அசலத்தில் இருந்து அசைந்து கொடுத்து பிரபஞ்சத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பரிபூரணமாக இருக்கும் ப்ரம்மத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி அவளே. அத்தனை சக்தி வாய்ந்த பராசக்திக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்படும் விழாவாகிய இந்த நவராத்திரியில் அனைத்துப் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான பண்டிகைகளிலேயே மிகவும் விமரிசையாகப் பத்து நாட்கள் கொண்டாடப் படுவது இந்த சாரதா நவராத்திரியே. நவராத்திரி என்றால் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய இரவுகளை ஒரு பக்கம் சுட்டினாலும், மற்றொரு பக்கம் ஒன்பது இரவுகள் என்றும் பொருளைக் கொடுக்கும். எப்போதுமே உயிருள்ள ஜீவன்கள் அனைத்துக்குமே இரவில் அமைதி கிட்டுகிறது. நம் அன்றாட வேலைகளைப் பகலில் செய்தாலும் இரவிலேயே தூங்கி ஓய்வெடுத்து அமைதியைப் பெறுகிறோம். இதற்கு இன்றைய அவசர நாட்களில் பொருளில்லை என்றாலும் பொதுவானதொரு நியதி இரவிலே உடல் ஓய்வெடுக்கும் வேளையில் மனமும், மூளையும் சேர்ந்து ஓய்வெடுக்கும் என்பதே.

பிறந்த குழந்தையானது எவ்வாறு தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் தங்கிப் பின்னர் வெளிவருகிறதோ அதைப் போல் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளிடம் பக்தி செலுத்தி அந்தக் கர்ப்பவாசத்தில் மூழ்கி இருக்கிறோம். நம் மனதிலுள்ள துர் எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்கள் தலை தூக்கும். புதியதோர் ஜீவசக்தி உடலில் பாய்ந்தாற்போல் இருக்கும். ஆகவே இந்த நவராத்திரியை நாம் கொண்டாடுவது என்பது நம் எண்ணங்களையும், உடலையும் சேர்த்துப் புதுப்பித்துக்கொள்ளவே ஆகும். இது நவராத்திரியில் அம்பிகையைத் தியானிப்பதற்கு ஒரு காரணம் ஆகும். முந்தின ஸ்லோகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அம்பிகை வழிபாட்டில் நம்மால் ஈடுபடமுடியும் என சங்கரர் மட்டுமின்றி பட்டரும் கூறுவதைப் பார்த்தோம். அடுத்த ஸ்லோகம் அவளுடைய பாததூளி மஹிமையாலேயே அனைத்துத் தொழில்களும் நடைபெறுவது குறித்து ஆதிசங்கரர் சொல்கிறார்.

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி:ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி:கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர:ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்


த₁னீயாம்ஸம் பா₁ம்ʼஸும்ʼ த₁வ ச₁ரண -ப₁ன்கே₃ருஹ-ப₄வம்ʼ
விரிஞ்சி₁: ஸஞ்சி₁ன்வன் விரச₁யதி₁ லோகா₁ -நவிக₁லம்ʼ
வஹத்₁யேனம்ʼ ஶௌரி: க₁த₂மபி₁ ஸஹஸ்ரேண ஶிரஸாம்ʼ
ஹர: ஸங்க்₁ஷுத்₃யைனம்ʼ ப₃ஜ₁தி₁ ப₄ஸிதோ₁த்₃து₄லன - விதி₄ம்


பாத தாமரையி னுள் உண்டு கட்பரம
வணுவினில் பலவியற்றினால்
வேத நான்முகன் விதிக்க வேறுபடு
விரிதலைப் புவனம் அடைய மான்
மூதரா அடி எடுத்த அனந்த முது
கண-பணா அடவி பரிப்ப மேல்
நாதனார் பொடி படுத்து நீறணியின்
நாம் உரைத்தென் அவள் பான்மையே

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்


அசையாத பிரம்மமாக இருந்த சிவனை ஞானஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ள வைத்தவள் அம்பிகை. அவனை வெளியே இருந்து எல்லாம் அவள் அசைக்கவில்லை. அவனுள்ளே சக்தியாக ஐக்கியமடைந்திருப்பவள் இங்கே எண்ணமே இல்லாமல் இருந்த ஞான ஸ்வரூபத்திற்கு “நான்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அசைத்தாள். இது இவ்வுலகின் முதல் அசைவு எனலாம். ஆட்டமான ஆட்டம்! இதுவே ஸ்ருஷ்டி மூலமாகவும் ஆனது. உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்த ஒரு அசைவு தானே அதிர்வு தானே முதல் முதல் வெளிப்பட்டது! இது தான் big bang எனப்படும் பெருவெடிப்பு என்று அறிவியல் கூறுவதாய்ப் பரமாசாரியார்(காஞ்சி) கருதுகிறார். பரப்ரஹ்மத்தின் அதிர்வே சப்த ரூபமான வேதமந்திரங்களாகி அதிலிருந்தே ஸ்தூல வஸ்துக்கள் அனைத்தும் உண்டானதாய்ச் சொல்கிறார். இதைத் தான் ஸ்பந்தனம் எனப்படும் அசைவு. இத்தகைய அசைவை உண்டாக்கின அம்பிகை இதன் மூலம் ஐந்தொழில்களையும் நடத்துகிறாள். பிரம்மா, விஷ்ணு , ருத்ரன் ஆகியோரின் உதவியோடு. அவர்கள் மூவரும் முறையே படைத்து, காத்து அழித்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.

பிரம்மா அன்னையின் திருவடித்தாமரைகளிலுள்ள மிக மிக நுட்பமான துகள்களே அந்த அதிர்வின் மூலம் வந்ததோ என்னும்படி அவற்றைச் சேகரித்தே இவ்வுலகை சிருஷ்டிக்கின்றாராம். ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் உருவில் விஷ்ணுவும் இவ்வுலகை மட்டும் தன் தலையில் தாங்காமல் அம்பிகையின் அந்தப் பாததூளியையும் சேர்த்தே தாங்குகிறான். ருத்ரனோ அவற்றை விபூதியாகத் தன் உடலில் பூசிக்கொள்கிறார். இவ்விதம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவருமே அம்பிகையைத் தியானிக்கின்றனர் என்கிறார் ஆசாரியர். இதையே அபிராமி பட்டர்,

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே என விளிக்கிறார். தெய்வீக மணம் கமழும் கடம்பமலரைத் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் அணங்காகிய அம்பிகையை ஏத்தும் பல அடியவர்களோடு இந்த ஈரேழு உலகினையும் படைத்து, காத்து, அழித்து என முத்தொழில்களையும் செய்து வரும் மும்மூர்த்திகள் கூட தெய்வ மணம் பொருந்திய உன் திருவடிகளை வணங்கி, உன்னையும் வணங்கித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளைப் போற்றிப் புகழும் அளவுக்கு என்னால் என்ன பாடல் புனைய முடியும்! இருந்தும் என் பாடலையும் நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாயே! அம்மா, அபிராமி, எளியோனாகிய என் நாவில் இருந்து வெளிவரும் அர்த்தமற்ற சொற்களால் பாடப்படும் பாமாலையையும் நகைப்புக்குரியதாய்க் கருதாமல் ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா!

Thursday, September 29, 2011

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 5


இரண்டாம் நாளான இன்று வாராஹியாகக் காட்சி அளிக்கிறாள் அன்னை. இவளே அம்பிகையின் படைத் தலைவியும் ஆவாள். தொந்திரவுகள் நிறைந்த இவ்வுலகில் போட்டி, பொறாமைகளால் அவதிப்படுபவர்கள் இவளை வணங்கினால் நிவர்த்தி பெறுவார்கள். இன்றைய நிவேதனம் தயிர் சாதம். பொதுவாகவே வியாழன் அன்று தயிர்சாதம் நிவேதனம் செய்யலாம். இந்த வருடம் இரண்டாம் நாள் வியாழக்கிழமையாகவே அமைந்துள்ளது.

மாலைச் சுண்டல்: வெள்ளைக்காராமணி. வெள்ளைக்காராமணியையும் முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் அல்லது பிரஷர் பானில் வேக வைக்கவும். வெந்த பருப்பை நீரை வடிகட்டிவிட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல். கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக்கொண்டு, வெந்த பருப்பைப் போட்டுக்கிளறவும். முன் சொன்ன மாதிரியே கொஞ்சம் சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய், கொத்துமல்லி விதைப் பொடி சேர்த்து வதக்கிவிட்டுத் தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
**************************************************************************************
வழக்கம் போலப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இதை ஆரம்பிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் புரிந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன். குற்றம், குறைகளைப் பொறுத்தருள வேண்டும். நம் அனைவருக்கும் குருவாக இருந்து இந்த ஜகத்துக்கே குருவாக விளங்கிய ஆசாரியருக்கு நம்முடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி:ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஹூதி-விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம்

நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பணம் செய்கிறோம். இதுவே அதி உந்நதமானதொரு நிலை. ஆனால் எல்லாராலும் இது இயலுமா? என்றாலும் அத்தகையதொரு முயற்சியை அம்பிகை வழிபாட்டின் மூலம் தொடங்க வேண்டும். இந்த நிலையால் இந்த சமர்ப்பணத்தால் நம்முடைய ஒவ்வொரு பேச்சுமே அம்பிகைக்குரிய ஜபமாகவும், நாம் செய்யும் அனைத்துத் தொழில்களும் அவளுக்குச் சமர்ப்பணம் செய்யும் முத்திரைகளின் விளக்கமாயும், நம் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு நடையும் அம்பாளுக்குச் செய்யப் படும் பிரதக்ஷிணமாகவும், நாம் உட்கொள்ளும் உணவு, போன்றவை ஹோமத்தின் ஆஹுதியாகவும், நாம் ஓய்வெடுக்கப் படுப்பது அவளுக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இன்னும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செய்கையும் அம்பிகைக்குச் சமர்ப்பிக்கிறோம். எப்போதும் இந்த நினைப்போடு இருந்தோமானால் நம்மைத் துன்பங்கள் அண்டாது. அவமானங்கள் தகிக்காது; துயரங்கள் சூழாது. அனைத்தும் அவள் செயலே என நினைப்போம்.

இது சமர்ப்பண ஸ்லோகத்தின் பொருள்.

அடுத்து ஆநந்த லஹரி முதல் ஸ்லோகம் ஆரம்பம்:

சிவ:சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி

ஶிவ: ஶக்₁த்₁யா யுக்₁தோ₂ யதி₃ ப₄வதி₁ ஶக்₁த₁: ப்₁ரப₄விது₁ம்ʼ
ந சே₁தே₁வம்ʼ தே₃வோ ந க₂லு கு₁ஶல:ஸ்ப₁ந்தி₃து₂-மபி₁
அத₁ஸ்த்₁வா -மாராத்₄யாம்ʼ ஹரி -ஹர - விரின்சா₁தி₃பி₄ -ரபி₁
ப்₁ரணந்து₁ம்ʼ ஸ்தோ₁து₁ம்ʼ வா க₁த₂-மக்₁ருத₁பு₁ண்ய: ப்₁ரப₄வதி₁


சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
அரிதெனா மறை இரைக்குமாம்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்
நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்

சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சிவன் சீவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தக்ஷிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்த சித்சக்தி தான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக்கிடக்காமல் வெளியே வந்தால் தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் ப்ரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும்.

ஆகையால் சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக்காத்து ரக்ஷிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம். இதையே அபிராமி பட்டரும்,

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

அபிராமி அந்தாதி 7

இப்படி விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் மூவராலும் அம்பிகை வழிபடப் படுகிறாள். இவ்வளவு பெருமை வாய்ந்த அம்பிகையை நாமும் வழிபடுவதெனில் இது முன் ஜென்மப் புண்ணியம் அன்றி வேறென்ன இருக்க முடியும். பிறவிப் பெருங்கடலாகிய மாபெரும் சுழலில் சிக்கித் தயிர் கடையும் மத்தைப் போல் நாம் அலையாமல் நம்மைத் தடுத்தாட்கொள்ள அந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்க அம்பிகையின் சேவடிகளைப் பற்றினாலே இயலும். நம்மால் அதாவது நம் போன்ற சாமானியர்களால் நிர்குணமான பிரம்மத்தை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத ஒன்று. புரிந்து கொள்ளவும் இயலாது. அதனால் ரூபஸ்வரூபமாக அம்பாளை ஸ்தாபித்து வழிபட்டு வந்தோமானால் நம் மனதை அந்த அம்பாளின் ரூபத்தில், பக்தி மார்க்கத்தில் திருப்பினால் அது தானாகவே நம்மை ஞான மார்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். நம்முடைய தேவதை ஆராதனைகளின் தாத்பரியமும் இதுவே.

சிவனை விட்டு ஒரு கணமும் பிரியாத இந்தச் சக்தியை நாம் வழிபட்டு வந்தால் ஸர்வ விக்னங்களும் நாசம் அடைந்து, நாம் எடுக்கும் அனைத்துக் காரியங்களும் ஸித்தி அடையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இதை அபிராமி பட்டர்,

கண்ணியதுன் புகழ் கற்பதுன் நாமங்கசிந்து பத்தி
பண்ணியதுன்னிரு பாதாம்புயத்திற் பகலிரவா
நண்ணியதுன்னை நயந்தோர் வையத்து நான் முன்செய்த
புண்ணியமேது என்னம்மே புவியேழையும் பூத்தவளே.

அபிராமி அந்தாதி 12.

என்று கூறுகிறார். ஊனும், உடலும் உருக உருக, அபிராமி அன்னையின் திருவருள் வேண்டிப் பாடிய இந்த அந்தாதித் தொகுப்பில் மேற்கண்ட பாடலுக்குப் பொருள் காண்கையில்,

புவி ஏழையும் பெற்றெடுத்த அம்மா, என் தாயே, அபிராமி அன்னையே, உன் புகழையே நான் நினைந்து நினைந்து பாடி வருகிறேன், உன் திருநாமம் தவிர மற்ற நாமங்களைக் கற்றேன் அல்ல; எப்போதும், எந்த நேரமும் உன்னையே நினைந்து பக்தி செய்தும் வருகிறேன். அம்மா, உன்னை நினைத்துக்கொண்டே இருந்ததால் அன்றோ, உன் பூரண நிலவு போன்ற முகத்தை நினைத்த காரணத்தால் அன்றோ அமாவாசையைப் பெளர்ணமி எனக் கூறினேன். இப்படி நான் என்னையே மறக்கும் அளவுக்கு பக்தி செய்து வந்திருக்கிறேன் என்கிறார் பட்டர். பகலும், இரவும் உன்னை நெருங்கி எந்நேரமும் உன் புகழ் பாடும் அடியார் கூட்டத்தை அல்லவோ நான் எப்போதும் நாடுகிறேன். இவை எல்லாம் உன் திருவருளால் அன்றோ நடைபெறுகிறது! என் தாயே, நான் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பிறவியில் எனக்கு இவை எல்லாம் கிடைக்கப் பண்ணி இருக்கிறாய்.

Wednesday, September 28, 2011

கொலுவுக்கு வந்துட்டுச் சுண்டல் வாங்கிக்குங்க!

 பல பொம்மைகள் மழை நீரில் ஊறிப் போய்க் கரைந்து போய்விட்டன. முக்கியமாய் அம்மன் பொம்மைகள், வெங்கடாசலபதி, அலமேலு மங்கா, மீனாக்ஷி, மற்றும் சில பெரிய பொம்மைகள். இருந்தவற்றில் பாண்ட் செட், தக்ஷிணாமூர்த்தி செட், வேடுவன் செட் போன்றவற்றையும் சில சின்ன பொம்மைகளையும் என் தம்பி மனைவியிடம் கொடுத்துவிட்டேன். அதுபோக மிருகங்களின் பாண்ட் செட், கனகதாரா செட், முருகன் குடும்பம், ராமர் குடும்பம், காட்டு மிருகங்கள், நாட்டு மிருகங்கள், பறவைகள், ஊர்வன, பறப்பன என உள்ளது. அவற்றையும் என் அண்ணா இன்னும் சில நண்பர்கள் எடுத்துக்கறதாச் சொல்லி இருக்காங்க.
 மிச்சம் உள்ளதில் அஷ்ட லக்ஷ்மி, தசாவதாரம், காயத்ரி அம்மன், நவநீத கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர், புலி கொடுத்த கிருஷ்ணர், வாத்தியம் இசைக்கும் டெரகோட்டா பிள்ளையார், மாக்கல் சொப்பு செட், மரச் சொப்பு செட், பித்தளை சொப்பு செட், செட்டியார், மரப்பாச்சி போன்றவை மட்டும் எங்களுக்கு வைக்க எடுத்து வந்திருக்கிறேன்.
 சொப்புக்களையும் கொடுக்கலாம்னு தான் நினைச்சேன். ஆனால் என்னோட மன்னி தான் வீட்டிலே குழந்தை பிறக்கணும் கொடுக்காதீங்கனு செண்டிமெண்டலாச் சொல்லவும் சொப்பைக் கொடுக்கலை.
 
Posted by Picasa
கோலாட்டம் நான் குழந்தையா இருக்கையிலே வாங்கினது. அதனோட பெயிண்ட் போகாமல் அப்படியே இருக்கு. அதே போல் மரச்சொப்புக்களும், மாக்கல் சொப்புக்களும், பித்தளைச் சொப்புக்களும் எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து எங்க வீட்டில் இருந்தது. இன்றும் அப்படியே இருக்கின்றன. மாக்கல் சொப்பு புதுக்கருக்கு அழியாமல் பார்ப்பவர்கள் எல்லாம் புதுசானு கேட்கிறாப் போல் இருக்கும். 
 
Posted by Picasa
இன்னிக்குப் பண்ணின சுண்டல் படம் போட்டிருக்கேன். கோபி கேட்டிருந்தார். சின்னக் கிண்ணத்தில் பயறு வெல்லம் போட்ட சுண்டல். முதல் நாள் தித்திப்புப் பண்ணணும்னு கொஞ்சமாப் பண்ணினேன். இன்னொரு பாத்திரத்தில் இருப்பது பயறு உப்புச் சுண்டல். நாளைக்கு என்ன சுண்டல்??

நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 4

இன்றைய அலங்காரம் ராஜராஜேஸ்வரி.

நிவேதனம் காலை: சர்க்கரைப் பொங்கல்,

மாலை: பயறுச்சுண்டல்.

செய்முறை: எந்தச் சுண்டலுக்கானாலும் முதலில் நன்கு ஊற வைத்துவிடுங்கள். இல்லை எனில் குழைய வேகாது. ஒவ்வொருத்தர் பச்சைப்பயறைச் சும்மா வெறும் வாணலியில் வறுத்துவிட்டுக் குக்கரில் வேக வைத்தால் போதுமானது என்கின்றனர். பயறு வகைகள் சில சமயம் கல் போல இருக்கும். அரித்தால் அடியில் தங்கும். ஆகவே பயறு வேக வைக்கையில் அம்முறையில் பயறு அவ்வளவு நன்கு வேகாது. மேலும் வெல்லம் போட்டுச் செய்கையில் வெல்லத்தைச் சேர்த்ததும் விறைத்துக்கொண்டு காணப்படும். காரம் போட்டுச் செய்தாலும் கொஞ்சம் நறுக் நறுக்கென்று தான் இருக்கும். சுண்டல் குழைய வேண்டும் என்றால் முதல்நாளே பயறாகவே இருந்தாலும் ஊற வைக்கவும்.

ஊற வைத்த பயறை நேரடியாகவே வேக வைக்கலாம். குக்கரில் வைத்தால் மாவு போல் ஆகிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. வேக வைத்த பயறில் வெல்லம் போட்டுச் செய்வதானால் ஒரு சிட்டிகை மட்டும் உப்புச் சேர்த்தால் போதும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு, வேக வைத்த பயறு, கால் கிலோ எனில் 50 கிராம் வெல்லம் பொடி செய்து சேர்க்கவும். வெல்லத்தோடு பயறு நன்கு கலந்து வெல்ல வாசனை போனதும் தேங்காய்த் துருவல் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும்.

காரச் சுண்டல்: பயறு வேக வைக்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துப் பயறைச் சேர்க்கவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும். அல்லது மி.வத்தல், தனியாவை எண்ணெய் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அந்தப் பொடியைப் போடலாம். நன்கு கலந்ததும், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
****************************************************************************************
பல நாட்களாய் எழுதணும்னு நினைத்த ஒரு விஷயம் தான் செளந்தர்ய லஹரி. ஆனால் நான் அதை ஆழ்ந்து படிச்சதில்லை. ஆகவே தயக்கம் இருந்தது. இப்போ ஒரு குழும விவாதத்தில் திவாகர் திராவிட சிசு பற்றிக் கேட்க, நான் செளந்தர்ய லஹரியை எடுத்துக்காட்ட, திவாகர் அதை விபரமாக எழுதச் சொன்னார். அந்த ஒரு பதிவு தான், அத்தோடு முடிந்தது என நினைத்திருந்த சமயம் அதைப் படித்த பின்னர் ஜெயஸ்ரீ இந்த நவராத்திரிக்கா என்று கேட்க, அட, இது தோன்றவே இல்லையே என நினைத்தேன். முடிந்த வரை பார்க்கலாம் என்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். தீராத மன வேதனையும், அதனால் ஏற்படும் உடல் கோளாறுகளிலும் கவனம் செல்லாமல், மனம் திசை திருப்பப்பட்டு ஆறுதல் ஏற்படும் என்பதும் இன்னொரு காரணம். ஆக என் சொந்த லாபத்திற்காக நான் செய்யும் இந்த வேலையைப் புகழ்ந்து பின்னூட்டம் போடுவது சரியாய் இருக்காது. அம்பாளையே போற்றி வழிபடுவோம். அம்பாளே கதி என அவள் பாதத்தை இறுகப் பிடித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
*************************************************************************************

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. பெண்ணைத் தெய்வமாய்ப் போற்றும் நாடு நம் நாடு. பெண்ணுரிமை பேசுவோர் இதை அடிமைத் தனம் எனக் கூறினாலும் இன்றளவும் அது மாறவில்லை என்றே சொல்லலாம். சக்தி உபாசகன் ஆன பாரதியும் சக்தி வழிபாட்டிலும், காளியை வணங்குவதிலும் காட்டிய ஈடுபாடு நாம் அறிவோம். காளியே அனைத்திலும் நிலைத்து நின்று இருக்கிறாள் என்பதை அவன்

யாதுமாகி நின்றாய் காளி,
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ"

என்ற பாடலின் மூலம் காட்டுகிறான். மேலும் பாடலின் கடைசியில் காளியைச் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவளும் அனைத்தையும் தருகிறாள் என்றும் உறுதிபடச் சொல்கின்றான்.

அன்பு தந்துவிட்டாய்-காளி-காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி
துயரமழித்து விட்டாய்!

என்று காளியைச் சரணடைந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் எனக் கூறுகிறான். இது உண்மை என்பதையும் அறிவோமல்லவா! அன்னையின் பாதங்களைச் சரணடைந்தால் அவளே கதி என இறுகப் பற்றிக்கொண்டு விட்டால் அந்தக் குழந்தையை அவள் எட்டியா உதைப்பாள். இந்த எண்ணங்களோடு தெய்வத்தின் குரல் புத்தகத்தில் செளந்தர்ய லஹரி விளக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன்..

எல்லாவற்றுக்கும் மேலே ஆச்சரியவசமாக நான் பிரித்த பக்கத்திலும் அம்பாளின் காலடிகளைப் பிடித்துக்கொண்டு கதறுவதையே பரமாசாரியாரும் கூறி உள்ளார். இந்த மனம் பல விதங்களிலும் வெட்கம் அடைந்து, பலராலும் துக்கம் அடைந்து, அதனால் அவமானம் அடைந்து அழுகிறது. துடிக்கிறது. ஆனால் நாம் அப்போதாவது அம்பாளைச் சரணடைய வேண்டாமா! மாட்டோம். உலகாயுத விஷயங்களில் மூழ்கி, அதிலேயே கவனமாக நமக்கு ஏன் இப்படி ஒரு கதி ஏற்பட்டது என்றெல்லாம் யோசிப்போம். அதன் பின்னராவது புத்தி வருமா என்றால் வராது. இவ்வுலகத்தை நாமா உண்டாக்கினோம்? எல்லாமே நம்மால் தான் என்பது போல் ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு மேலும் மேலும் மனம் புழுங்குவோம். கோபம், ஆத்திரம், அசூயை, எரிச்சல் எல்லாம் ஏற்படும். கொஞ்சம் யோசித்தால், சூரிய, சந்திரரை, மலையை, மரம், செடிகொடிகளை, புழுக்களை, பூச்சிகளை, விலங்குகளை, பறவைகளை எது நம்மால் ஏற்பட்டது! எதுவும் இல்லை. நாமே அவள் சிருஷ்டி. நம் மனத்தை நம்மால் அடக்க முடியாமல் தவிக்கையில் இது நம்மால் இயலக்கூடிய ஒன்றல்ல, இதுவும் அம்பிகையின் மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை அடக்க வல்லது தேவியின் திருநாமமே என்பதைப் புரிந்து கொண்டால் அவளே கதி எனச் சரணடைந்தால் அப்படி நாம் சரணடைவதும் அவள் அனுகிரஹத்தாலேயே என்பதைப் புரிந்து கொண்டால் மனம் என்பது ஒன்று இருப்பதே தெரியாமல் உடல் இருப்பதும் தெரியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கி விடுவோம். ஆனால் எங்கே! அப்போதும் நாம் நம்மைக் குறித்தே தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அம்பாள் அனைத்தையும் மன்னிப்பாள். தாய் எங்காவது தன் குழந்தையிடம் கோபமாய் நடந்து கொள்வாளா?? அப்படிக் கோபமாய் இருந்தால் அது நம் நன்மைக்கே தான் இருக்குமே அன்றி, சும்மாவானும் அம்மா கோபிக்க மாட்டாள் இல்லையா?? அதே போல் தான் அம்பாள் நமக்குத் தரும் கஷ்ட, நஷ்டங்கள் அனைத்துமே நம் நன்மைக்காகவே. நம்மைப் புடம் போட்டு நம் மனதைத் திடம் ஆக்கித் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தானும் ஆனந்தித்து, நம்மையும் ஆனந்தமாக இருக்கப் பண்ணுவதற்காகவே அனைத்தும் நடக்கின்றன. அன்னையைத் தொடர்ந்து வழிபடுவோர் நாளடைவில் தாம் அவளது குழந்தை என்ற மனோபாவம் தோன்ற ஆரம்பித்து ஒரு குழந்தையைப் போலவே நிர்மலமான மனத்தைப்பெறுவார்கள். குழந்தையாகவே மாறி, தேவி ஒருத்தியே அனைவருக்கும் தாய் என்ற எண்ணம் மேலிட்டு இருக்கும். பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அன்னை வடிவிலேயே பார்க்க ஆரம்பிப்பார்கள்.

நம் நாட்டில் தெய்வ வழிபாடு, அதிலும் பெண் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு, எப்போது எனத் தெரியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பழையோள் எனவும், ஐயை எனவும் போற்றித் துதித்து வந்திருக்கின்றனர். நம் தமிழ் மூதாட்டியான ஒளவையோ “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறாள். மாணிக்கவாசகரோ தம் சிவ புராணத்தில், “தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!” எனவும், பிடித்த பத்துக்களில் “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” எனவும் ஈசனுக்கும் மாத்ருபாவத்தை ஏற்றிப் பாடி இருக்கிறார் என்பதையும் காண்கிறோம்.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ

என்கிறார் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள்.

அவ்வளவு ஏன்! திருச்சியில் மலைக்கோட்டைக் கோயிலில் “தாயுமானவர்” என்ற பெயரிலேயே அருளாட்சி புரிந்து வருகிறார். செட்டிப் பெண்ணின் பிரசவத்திற்காக அவள் தாயைப் போல் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்த நிகழ்ச்சி அந்தக் கோயிலின் தலவரலாறாகவே சொல்லப் படுகிறது. இதிலிருந்து தாயின் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா.

ஆனால் நம் சரீரத்தை, உடலை நமக்குக் கொடுத்த தாய் என்றேனும் ஓர் நாள் மறையலாம்; ஆனால் சர்வலோகத்துக்கும் மாதாவான ஜகத் ஜநநீயான அம்பாளோ நம்மை என்றும் தொடர்ந்து வருகிறாள். அதுவும் ஈசனையும் தன்னுள் அடக்கிய வண்ணம் சிவசக்தியாகத் தொடர்ந்து வந்து என்றென்றும் சாச்வதமாகத் தன் கருணையைக்காட்டிய வண்ணமே இருக்கிறாள். அத்தகையதொரு மாத்ருகாபாவத்தை நாம் அன்னையிடமே காணமுடியும். இந்த அன்னைக்கு எடுக்கும் விழாவே நவராத்திரி ஆகும். பொதுவாக விழாக்களும் பண்டிகைகளும் ஓரிரு நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த நவராத்திரிக்கு மட்டும் ஒன்பது நாட்கள்! ஒன்பது நாட்களும் அன்னைக்கு விழா எடுப்பார்கள். முக்கியமாய்ப் பெண்களுக்கெனவே ஏற்பட்ட மாபெரும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை ஆகும். ஏன்?

சிருஷ்டிக்குப் பெண்ணே முக்கியம். அனைத்துக்கும் ஆதாரம் அவளே. பெண்ணில்லையேல் சிருஷ்டி இல்லை. அழிந்து போகும் இவ்வுயிருக்கு எப்படி ஒரு தாய் இருக்கிறாளோ அவ்வாறே இகம், பரம் இரண்டிலும் ரக்ஷிக்கிற ஒரு தாயையே அம்பாள் வடிவில் நாம் வழிபடுகிறோம். இந்த மண்ணில் தோன்றிய புல்லில் இருந்து, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், அசையும் அசையாப் பொருட்கள், விலங்குகள், மலைகள், காடுகள் என அனைத்துக்கும் உருக்கொடுத்து சிருஷ்டியை ஏற்படுத்திய தாயை நாம் வணங்கி அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நவராத்திரியின் தாத்பரியம். மஹாபிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பிக்கையில் முதலில் பரம்பொருள் உண்டாக்குவது இச்சா சக்தி என்னும் சக்தி. அதன் பின்னரே கிரியை உண்டாகிறது. முடிவில் ஞானம் கிட்டுகிறது. இவையே முறையாக முதல் மூன்று நாட்கள் துர்கை, நடுவில் மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என வழிபடப் படுகிறது. இம்மூன்று சக்திகளும் சேர்ந்த திரிபுரசுந்தரியையே விஜயதசமி அன்று வெற்றித் தேவதையாக வழிபடுகிறோம்.

துர்கையானவள் வீரத்தின் விளைநிலமாக, சிவனுக்குப் ப்ரியமானவளாக, நெருப்பைப் பார்க்கையில் அழகாக இருக்கும், தொட்டால் சுடும் என்பது போல் சீற்றம் நிறைந்தவளாக, கேடுகளை அடியோடு அழிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறாள். இந்த துர்கைகள் ஒன்பது பேர். அவர்கள் முறையே வன துர்கை, சூலினி துர்கை, ஜாத்வே துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, லவண துர்கை


லக்ஷ்மி: செல்வத்தின் பிறப்பிடம், விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள், தாமரை மலர் போன்ற அழகுடையவள், அமுதமயமான இவள் வறுமையைப் போக்குவாள். கிரியா சக்தியான இவள் அஷ்ட லக்ஷ்மிகளாகவும் விளங்குகிறாள். அவர்கள் முறையே ஆதி லக்ஷ்மி, தன லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி

சரஸ்வதி: ஆரவாரமில்லாமல் ஜொலிக்கும் வைரம் போன்ற இவள், கல்வியின் தெய்வம், ஞானச் சுடர், பிரம்மனுக்குப் பிரியமானவள். அஷ்ட சரஸ்வதியர் வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.

அதே போல் மூன்று தேவியரின் முப்பெரும் சக்திகளாக முதலில் துர்கைக்கு மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி ஆகியோரும் லக்ஷ்மிக்கு இந்திராணி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரும், சரஸ்வதிக்கு மஹாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோரும் சக்திகள். இவர்கள் அனைவரும் சேர்ந்தே மஹிஷனை அழித்தார்கள் எனப்படும்.


துணைப் புத்தகங்கள்: தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்கள்
ஸ்ரீதேவி மஹாத்மியம், ராமகிருஷ்ணா பதிப்பகம், விளக்க உரை அண்ணா.

Monday, September 26, 2011

மதுரையில் கொலு பாருங்க!

இது 2009-ம் வருஷம் எங்க வீட்டில் வைத்த கொலுவின் படம். துளசி கோபால் எடுத்தது. இந்த வருஷப் படம் அப்புறமாப் போடறேன். மற்ற விபரங்களும் பின்னர். கீழ்க்கண்ட பதிவு மதுரைமாநகரம் வலைப்பக்கங்களில் மதுரை நினைவுகளில் நான் சில வருடங்கள் முன்னர் எழுதியது. மீள்பதிவுக்கு மன்னிக்கவும்.
************************************************************************************


ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.

அண்ணா தலைமை வகிக்கப் பின்னர் தம்பியும் பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு என்னைக் கேட்கலை. அந்தளவுக்கு மறதி.

அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.

அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?

Sunday, September 25, 2011

பெயர்க்காரணம்! ஸெளந்தர்ய லஹரி! 3

ஸெளந்தர்ய லஹரி எனப் பெயர் வைத்துவிட்டு ஆசாரியாரின் அவதாரத் தேதிகளிலேயே ஆழ்ந்து போகாமல் கொஞ்சம் லஹரியில் மூழ்குவோமா?? இது சாக்ஷாத் பரமேச்வரனாலேயே அம்பிகையைப் போற்றிப் பாடப்பட்டது என்பார்கள். அந்தக் கைலை சங்கரன் சொன்னதை நம் அவதார சங்கரர் கைலை சென்ற போது நேரிலேயே ஈசனிடமிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் இந்த ஓலைச்சுவடிகளையும் பெற்றுக்கொண்டதாய்ச் சொல்லுவார்கள். லிங்கங்கள் ஈசன் ஸ்வரூபம் எனில் இந்தச் சுவடிகளில் அம்பாளின் மந்த்ரமயமான ரூபஸ்வரூபம். ஆகவே இது உலக மக்களுக்குப் பயன்படவேண்டியே கொடுத்திருக்கின்றனர். இது வசின்யாதி வாக்தேவதைகளே அம்பாள் மேல் பாடியதாகவும் சொல்கின்றனர். ஆனால் லிங்க புராணத்திலோ இது மஹாமேருவில் விநாயகரால் எழுதப்பட்டது என்று இருப்பதாய்த் தெரிய வருகிறது. புஷ்பதந்தர் என்பார் மேருமலையில் இதை எழுதி வைத்ததாயும் ஒரு கூற்று. இன்னொரு கூற்று அவருக்கும் முன்னரே மேரு மலைச்சுவர்களில் இது காணப்பட்டது என்றும், ஸ்ரீ கெளடபாதர் இதைக் கிரஹித்துப்பின் ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாயும் சொல்லப்படுகிறது. காலத்தால் முந்திய சில ஆக்கங்கள் எப்போது எழுதப்பட்டது என்பதை விட்டுவிட்டு அதன் சாரத்திற்குப் போவோம்.


எப்படியானாலும் நமக்குக் கிடைத்தது ஆதிசங்கரர் மூலமே என்பது என்னவோ உறுதி. அவர் ஈசனிடமிருந்து இதைப் பெற்று வந்தபோது அங்கே காவல் இருந்த நந்திதேவர் இவர் கைகளில் இருந்த சுவடிகளைக் கண்டதும் அவற்றை வேகமாய்ப் பிடுங்கிவிட்டாராம். ஆசாரியாரிடம் 41 ஸ்லோகங்கள் கொண்ட சுவடிகள் மட்டுமே தங்க, திகைத்த ஆசாரியாரை அம்பிகை மீதம் உள்ள ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை சங்கரரையே பாடிப் பூர்த்தி பண்ண ஆக்ஞாபித்தாள் என்பதும் கேள்விப் படுகிறோம். இதில் முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகளையும், தாந்த்ரீக பூஜை முறைகளையும் விளக்குகிறது எனில் அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் அம்பிகையைக் கேசாதிபாதம் வர்ணனை செய்கிறது. முடிந்த வரையிலும் பார்க்கலாம்.


செளந்தர்ய லஹரி என்ற பெயர் அம்பாளின் கேசாதி பாத வர்ணனையைக் குறிப்பதால் மட்டும் வரவில்லை. அழகு அலைகள் அல்லது அழகு வெள்ளம் என்றெல்லாம் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் அதன் உண்மையான அழகு என்னமோ குறைந்து தான் காணப்படுகிறது. அலைகள் கரை ஏறாது. கரை வரைக்கும் வந்துவிட்டுத் திரும்பக் கடலுக்குச் சென்று விடுகின்றன அல்லவா? அப்படித் தான் இங்கேயும். அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது. அதோடு இந்த ஸ்லோகங்களை ஆசாரியாள் தன் பக்திப் பிரவாஹத்தின் மூலம் வெள்ளமாய்க் கொட்டும்படி பண்ணி இருக்கிறார். இந்த ஸ்லோகங்களின் மூலம் அம்பாளின் கருணை வெள்ளத்தை அவள் அன்பை அவள் நம்மை ரக்ஷிப்பதை, சிவ சக்தி ஸ்வரூபமாய்க் காட்சி அளிக்கும் அற்புதத்தை என்றென்றும் நினைவில் இருத்தி பக்தி செலுத்தலாம்.

Saturday, September 24, 2011

பிச்சை எடுத்தானாம் பெருமாள்

சின்ன வயசிலே இருந்து புரட்டாசி சனிக்கிழமை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். இந்த மாசம் பெருமாளுக்கு உகந்தது என்பதாலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்க உறவினர் ஒவ்வொருத்தர் வீட்டிலும் பெரிய அளவில் வெங்கடாசலபதி சமாராதனை நடைபெறும் என்பதாலும் தான். அதோடு இன்னும் சிறப்பாக என்னோட பெரியப்பாவின் வக்கீல் சங்கத்து நண்பர்கள் அனைவரும் நடத்தும் பஜனையும் கூட. பஜனை முடியும் போது கடைசியில் குத்துவிளக்கை நடுவில் ஏற்றி வைத்துவிட்டுப்பெரியப்பாவும் அவரின் வக்கீல் நண்பர்களுமாக அதைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த வயசில் அதன் தாத்பரியம் புரியாவிட்டாலும் குடுமி அவிழ்ந்து ஆட, கழுத்தில் போட்டிருக்கும் மாலைகளும் அவங்க ஆட்டத்திற்கு ஏற்ப ஆட ஒவ்வொருத்தரும் ஆடுவதைப் பார்க்கையில் நான், என் அண்ணா, தம்பி, பெரியப்பா பெண் ஒருத்தி நாலுபேருமே அப்போ குழந்தைகள்; நாங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்போம். அந்தப் பெரியப்பா பெண் இப்போ இல்லை.

கல்யாணமாகி வந்ததும் புகுந்த வீட்டிலும் வெங்கடாசலபதி சமாராதனைப் பழக்கம் உண்டுனு சொல்லவும் சந்தோஷமாய் இருந்தாலும் நாளாவட்டத்தில் அது வீட்டு மட்டும் செய்யற ஒண்ணா மாறிபோச்சு. அப்போவானும் வீட்டில் குறைந்தது பத்துப் பேர்கள் இருந்தோம். இப்போ நாங்க இருவர் மட்டுமே. அதிலும் இந்த வருஷம் தான் சிறப்பான வருஷம் ஆச்சே. பெருமாள் எங்க பரம்பரையில் பூஜித்து வந்தவர் வீட்டுக்கு வந்து பத்து மாசங்கள் ஆகின்றன. அவருக்கும் பிள்ளையாரைப் போலவே இங்கே இதுதான் முதல் பண்டிகை. கிருஷ்ணருக்கும் இதான் முதல் பிறந்தநாள். அதைத் தான் ஒருமாதிரியா சொந்த வீட்டிலேயே கொண்டாடினோம். கிருஷ்ணரைத் தான் அன்னிக்குப் படம் எடுக்க முடியலை. இன்னிக்குப்பெருமாளையும், கிருஷ்ணரையும் சேர்த்து வைச்சு எடுத்திருக்கேன்.  
Posted by Picasa
கீழே பெருமாளுக்குச் செய்த பிரசாதங்கள் மஹா நிவேதனம், சர்க்கரைப் பொங்கல், எள் சாதம், வடை, வெற்றிலை, பாக்கு, பழம். எப்படியோ புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடியாச்சு.  
Posted by Picasa
முன்னெல்லாம் காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சா மதியம் பனிரண்டு மணி வரையிலும் கோவிந்தா கூப்பிட்டுக்கொண்டு அரிசிக்கு வருவார்கள். வாசலில் ஒரு சின்ன வாளியில் அரிசியை நிரப்பி ஒரு கிண்ணத்தையும் வைத்துக் கொண்டால் வரவங்களுக்குப் போட்டு முடிக்கவும் மணி பனிரண்டு ஆகவும் சரியா இருக்கும். பெரிய பெரிய மனிதர்கள் கூட வந்து பிக்ஷை வாங்கிப் போவாங்க. இப்படி பிக்ஷை எடுத்து வாங்கிய அரிசியில் அன்னதானம் பண்ணுவதைச் சிறப்பாகச் சொல்லி இருப்பதோடு நம் ஆணவமும் கலையும் என்பார்கள். ஆனால் பிக்ஷை எடுப்பதையும் கேலி செய்யறவங்க இருக்காங்க. என் அண்ணாவுக்கு பிக்ஷை எடுத்தே திருப்பதியில் பூணூல் போட்டாங்க. அப்படி ஒரு வேண்டுதல் அந்தக் காலத்திலே. ஒரு சிலர் கல்யாணத்திற்கும் திருமாங்கல்யம் செய்ய மட்டும் அம்மாதிரி வேண்டுதல் செய்வதுண்டு. இதெல்லாம் செய்வதன் காரணமே, நாமெல்லாருமே அவன் போட்ட பிச்சை என்ற நினைப்பு மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே.

பெருமாளும் பிச்சை எடுத்திருக்கிறார் வாமனன் ஆக. ஈசனும் பிக்ஷாண்டவராக வந்து பிச்சை எடுத்திருக்கிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்!

Friday, September 23, 2011

சங்கரர் காலமும் த்ரவிட சிசுவும்! ஸெளந்தர்ய லஹரி 2

சங்கரரின் காலம் பற்றி மெளலி கேட்டிருப்பது குறித்து ஓரளவுக்குக் கூறுகிறேன். திருச்சூர் வடக்கு நாதர் கோயிலில் பஜனம் இருந்த ஆர்யாம்பாளுக்கும், சிவகுருநாதருக்கும் கனவில் வடக்குநாதர் தோன்றிக் குறைந்த வயதுள்ள புத்திசாலிப் பிள்ளை வேண்டுமா? அல்லது அதிக வருடம் உயிர் வாழும் சாதாரணக் குழந்தைகள்போதுமா எனக்கேட்க இருவருமே புத்திசாலிப் பிள்ளையைக் கேட்டுப் பெற்றுக் குழந்தை கர்ப்பத்தில் தோன்றிப் பிறந்தும் ஆயிற்று. குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். சங்கரன் எனப் பெயரிடுகிறார் குழந்தையின் தகப்பனார். இது எப்படித் தீர்மானிக்கப்பட்டது என்பதை இங்கே நம் பரமாசாரியாள் கூறுவதைப் பார்ப்போம்;

சங்கரர் ஒரு அவதார புருஷர் எனவும் சாக்ஷாத் ஈசனின் அம்சம் என்பதும் தெரிந்ததே. ஆனால் பெயர் வைக்கப்பட்ட காரணம் அதுவல்ல. அவர் பிறந்த மாதம், திதி, நக்ஷத்திரம், பக்ஷம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டும் விதமாகவே பெயர் வைக்கப்பட்டது. மேலும் கேரளாவில் அந்தக் காலம் தொட்டே ஒருவர் பிறக்கும் மாசம், திதி, பக்ஷம் போன்றவற்றைக் கடபயாதி சங்க்யை என்னும் எண்ணிக்கைக்குறிப்பின்படி குறிப்பிட்டே நாமகரணம் செய்வார்கள் என்றும் பரமாசாரியாள் கூறுகின்றார். இதற்கு உதாரணமாக நாமும் கேரளத்து அரசர்களுக்கு அவர்களின் நக்ஷத்திரத்தைச் சேர்த்துச் சித்திரைத் திருநாள், சுவாதித் திருநாள் என்றெல்லாம் அழைப்பதைப் பார்க்கிறோம். ஆசாரியாள் பிறந்ததாக பரமாசாரியார் கூறுவது நந்தன வருஷம். கி.மு. 509 என்கிறார். பிறந்த மாதம் வைகாசி. சுக்ல பக்ஷம். வைகாசி இரண்டாவது மாதம், சுக்லபக்ஷம் முதல் பக்ஷம். அதாவது மாதம் 2, பக்ஷம் 1, திதி பஞ்சமி ஐந்தாம் திதி. ஆக திதி 5. இதை 2-1-5 என எடுத்துக்கொண்டு இதைத் தலைகீழாக்குவது கடபயாதி சங்க்யை முறையில் அக்ஷரங்கள் குறிப்பிடப்படும். 5-1-2

இது எவ்வாறெனில் கடபயாதி சங்க்யையில் மெய்யெழுத்துக்கு எந்தவிதமான பொருளும் இல்லை என்பதால் “ங்” என்னும் எழுத்தை நீக்க வேண்டும். இப்போது பார்த்தால் 5 ஆம் எண்ணுக்குரிய எழுத்து “ச” 1-ஆம் எண்ணுக்குரிய எழுத்து “க” இது சம்ஸ்கிருதம் முறையாகக் கற்றிருந்தாலே புரியக்கூடும். கசடதபற என நமக்குத் தமிழில் வருவது போல் சம்ஸ்கிருதத்தில் யாத்யஷ்ட பிரகாரம் ய-ர-ல-வ-ச என வரும்போது ச எழுத்து ஐந்தாம் எண்ணைக் குறிக்கும். பஞ்சமித் திதியைக் குறிக்கும் 5-ஆம் எழுத்தை முதலில் “ச” என்றும், அடுத்து பக்ஷத்தைக் குறிக்கும் எண்ணான 1-ஆம் எழுத்தை அடுத்தும் எடுத்துக்கொண்டு “க” என்றும், அடுத்த இரண்டாம் மாதமான வைகாசியின் எண் 2-ஆம் எண்ணைக் குறிக்கும் எழுத்து “ர”வை ச் சேர்த்தும் சகர சேர்த்து சங்கரர் ஆயிற்று என்று பரமாசாரியாள் கூறுகிறார். தமிழிலேயும் எண்களைக் குறிக்க எழுத்தைப் பயன்படுத்துவது உண்டல்லவா?? அதே போல் தான் இங்கேயும். இதற்குத் தமிழ் எண்கள் பரிச்சயம் இருந்தால் புரியும்.

தமிழில், “க” என்றால் எண் 1, “உ” என்றால் எண் 2, “’ரு” என்றால் எண் 5 எனக்குறிக்கப்படும். நம் தமிழ் மூதாட்டியான ஒளவை, எட்டேகால் லக்ஷணமே எனத் தொடங்கும் பாடல் ஒன்றைப் பாடியுள்ளாள் என்பதை அறிவீர்களா?? எட்டேகாலைக் குறிக்கும் எண்கள் “அ” என்பது எட்டையும் கால் என்னும் பின்னத்தொகையைக்குறிக்க “வ” என்னும் எண்ணும் பயன்படுத்தப்பட்டது. அவ இரண்டு எழுத்துக்களையும் லக்ஷணமே என்பதோடு சேர்த்தால் அவலக்ஷணமே என்று வரும் இல்லையா? இதைத் தான் மறைமுகமாய் ஒளவை எட்டேகால் லக்ஷணமே என்றாள். அதுபோலவே இங்கேயும் சங்கரரின் பெயருக்குப் பயன்படுத்தப்பட்டது. இது காலத்தை எப்படிக் குறிக்கிறது என்பதற்கான ஆதாரம் ஆதி சங்கரர் உட்பட குரு பரம்பரையின் ஆசாரியர்கள் சித்தி அடைந்த தினம் குறித்த “புண்ய ஸ்லோக மஞ்சரி” என்னும் குறிப்புக்களிலிருந்து ஆசாரியாளின் முக்தி தினம் குறித்த குறிப்பைப் பரமாசாரியாள் மேற்கோள் காட்டுகிறார்.

அதில் ஆசாரியாள் ஸித்தி அடைந்த தினம் குறித்த ஸ்லோகம் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

மஹேசாம்சாத் ஜாத: மதுரம் உபதிஷ்டாத்வய நய:
மஹா-மோஹ-த்வாந்த ப்ரசமந ரவி: ஷண்மத குரு:
பலே ஸ்வஸ்மிந் ஸ்வாயுஷி சரசராப்தே (அ) பிசகலேர்
விலில்யே ரக்தாக்ஷிண்-யதிவ்ருஷ ஸிதைகாதசி-பரே

மேற்கண்ட ஸ்லோகம் ஆசாரியர் ஷ்ண்மதங்களையும் ஸ்தாபித்து ஸநாதன தர்மத்தை நிலை நாட்டியதைக் குறிப்பிட்டிருப்பதோடு, ரக்தாக்ஷி வருஷம் வைகாசி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசியில் ஸித்தி அடைந்ததாயும் சொல்லி உள்ளது. ரக்தாக்ஷி வருஷம் எப்போது வந்த ரக்தாக்ஷி என்பதற்கான அத்தாட்சி மூன்றாவது வரியில் கூறி இருப்பதாய்க் கூறுகிறார். அதாவது ஆசாரியாள் ஸித்தி அடைந்த போது அவர் வயதை கடபயாதி ஸங்க்யையில் வார்த்தைகளாய்க் கொடுத்திருப்பதாய்க் கூறியுள்ளார்.மேற்கண்ட ஸ்லோகத்தில் வரும் சரசராப்தே எனும் வார்த்தைதான் கலியில் எத்தனாம் வருஷம் என்ற எண்ணிக்கையைச் சொல்வது எனப் பரமாசாரியார் கூறுகிறார். இதை saracharaabde என்றே உச்சரிக்க வேண்டும். உச்சரிப்பில் கொஞ்சம் பிழை ஏற்பட்டாலும் பொருள் மாறும்.

“சர”(sara) என்றால் அம்பு, அல்லது போவது என்று பொருள் கொண்டாலும் பரமாசாரியார் இதற்கென உள்ள “காதிநவ” என்னும் ஸூத்ரத்தைத் துணை கொண்டு கணக்கிடவேண்டும் என்கிறார். ஏற்கெனவே நாம் பார்த்தோம், ய-ர-ல-வ-ச என்று “ச” ஐந்தாவதாக வருவதை. “ர” இரண்டாவதாய் வருகிறது. ச என்னும் எழுத்து 5 என்றால் ர என்னும் எழுத்துக்கு 2. இதிலே சரசர என்பதில் வரும் கடைசி ர வும் 2 என்னும் எண்ணைக் குறிக்கிறது. “ச” என்பது ‘காதிநவ”வில் 6 என்னும் எண்ணையும் கொடுப்பதாய்ச் சொல்கிறார். (இந்த இடத்தில் கொஞ்சம் தெளிவாய் இல்லை; புத்தகம் இல்லை என்னிடம். பிடிஎப்பில் எழுத்துக்கள் ஒன்றன்மேல் ஒன்று வந்துள்ளதால் படிக்க முடியவில்லை) ஆக சேர்த்துப் பார்த்தால் 5262 என்று ஆகும் என்கிறார். அதைத் தலைகீழாக்கினால் 2625 என்று வரும். எனில் கலி பிறந்து 2625 வருஷத்திற்குப் பின்னர் வந்த ரக்தாஷியில் வைகாசி சுத்த ஏகாதசியில் ஆசாரியார் ஸித்தி அடைந்துள்ளார் என்கிறார். எழுத்துக்களை எண்களாக்கும் வழக்கம் மேலை நாடுகளிலும் உண்டு என்பதை அறிவோம் அல்லவா. அதே போல் தான் இங்கேயும்.

கலியுகம் பிறந்தது கி.மு. 3102 எனச் சொல்கின்றனர். கலி பிறந்து 2625-வது வருடம் என்பது கி.மு. 477 ஆகும். அடுத்து ஆசாரியார் ஸித்தி அடையும்போது அவரின் வயசைச் சொல்லும் கணக்கு. மேற்கண்ட ஸ்லோகத்தில் வரும் “பலே” என்பது ஒரு சிலேடை வார்த்தை என்கிறார் பரமாசாரியார். ‘ப’, ‘ல’ என்னும் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு பார்த்தால் அது ஆசாரியாரின் ஸித்தி அடைந்த வயதைக் குறிக்கும் எனவும் ‘பல’ என்று சேர்த்து எடுத்துக்கொண்டால், காரியத்தில் வெற்றி அடைந்ததை அதாவது ஆசாரியாளின் அவதாரப் பூர்த்தி அடைந்து பரமேச்வரனிடம் ஐக்கியமடைந்ததைக் குறிக்கும் எனவும் கூறுகிறார்.

‘ப’, ல’ என்னும் எண்ணிக்கையில் ‘ப’ என்பது 2ஆம் எண்ணையும் ஏற்கெனவே பார்த்தபடி ‘ல’ என்பது 3 ஆம் எண்ணையும் குறிக்கிறது. இரண்டும் சேர்த்தால் வரும் 23 என்னும் எண்ணை மாற்றிப் போட்டால் வரும் 32 ஆசாரியார் ஸித்தி அடைந்தபோது அவரின் வயசைக் குறிக்கிறது. கி.மு. 477-ஆம் ஆண்டு 32 வயதில் ஸித்தி அடைந்தார் எனில் கி.மு. 477+32=509 என்பதால் ஆசாரியரின் அவதார வருடம் கி.மு. 509 என வருகிறது. மேலும் ஆசாரியார் ஸித்தி அடைந்தது ரக்தாக்ஷி வருடம் எனவும், அவதாரம் செய்தது நந்தன வருடம் எனவும் இருப்பதோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் கி.மு. 477-ஆம் ஆண்டில் ரக்தாக்ஷியும், கி.மு. 509இல் நந்தனவும் வருகிறது. ஆகவே ஆசாரியார் அவதரித்தது கி.மு. என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. அபிநவ சங்கரருக்குப் பின்னர் வருகிறேன்.


இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கையில் சங்கரர் காலத்தில் புத்தமதம் பரவி இருந்ததை அறிந்து கொள்ளலாம். அப்போது பக்தி மார்க்கம் துவங்கவில்லை என்பதும் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் த்ரவிட சிசு என முருகனைக் குறித்து சங்கரர் கூறி இருக்க இயலாது. முருகன் எனப்படும் கார்த்திகேயன், சுப்ரமண்யன் த்ரவிட நாட்டில் தோன்றவில்லை. ஞானசம்பந்தரைச் சொல்லி இருந்தால் அதற்கேற்ற ஆதாரங்கள் எதுவும் இல்லை. தன் காலத்துக்கு முன்னர் தோன்றிய சம்பந்தரைத் தான் புகழ்ந்திருக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் கூற்று எனில் சங்கரரும் கவிதை மழை பொழிந்து கவிகளுக்குள் கவியாகத் தான் இருந்திருக்கிறார். மேலும் வேறு எந்த நாயன்மார்களையும் சங்கரர் குறிக்கவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. சம்பந்தரை மட்டும் வியந்து பாராட்டினார் என்று சொல்வதற்கில்லை. அவருக்கு முன்னரே காரைக்காலம்மையார், அப்பர், சிறுத்தொண்டர் போன்ற பலர் இருந்திருக்கின்றனர் அல்லவா? இவர்களில் யாரையும் ஏன் சொல்லவில்லை??
*************************************************************************************

மேற்கண்ட விளக்கத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும்படி மெளலி, தக்குடு போன்
றோரிடம் விண்ணப்பித்துக்கொள்கிறேன். அல்லது படிக்கும் வேறு யாரேனும் விளக்கமோ, தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும்படியோ கூறலாம். நன்றி.

Wednesday, September 21, 2011

திராவிட சிசு யார்?? செளந்தர்ய லஹரி 1

திவாகர் கேட்ட திராவிடச் சிசு குறித்து எழுத வேண்டுமெனில் முதலில் ஆசாரியர் காலம் கி.மு. என்று நாம் புரிந்து கொண்டால் தான் சரியாக இருக்கும். மேலும் ஆசாரியர் தமிழ் பேசும் பிராமணக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் எடுத்துக் காட்டியுள்ளார். அனைவரும் நினைக்கும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியவர் அபிநவ சங்கரர். இவருக்கும் ஆதிசங்கரருக்கும் இருந்த நிறைய ஒற்றுமைகளால் ஏற்பட்ட குழப்பம் என்பதையும் அறிய முடியும் அனைவரும் நினைப்பது போல் சங்கரர் காலம் கி.பி. இல்லை, கி.மு. தான் இதை நம் பரமாசாரியாள் அவர்கள் தெளிவாக்கி இருக்கிறார்.

தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில் சங்கர சரிதம் என்னும் தலைப்பின் கீழ் வரும் அத்தியாயங்களில் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-ல் இருந்து கி.மு 477 வரையானது என்பதைத் தெள்ளத் தெளிவாய்க் கூறி உள்ளார். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 38-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீஅபிநவ சங்கரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பெரும்பாலும் ஆதிசங்கரரை ஒத்திருந்ததால் அநேகமான ஆய்வாளர்கள் இவர் தான் ஆதிசங்கரர் எனத் தவறாகக் குறிப்பிடுகின்றனர். ஆகவே படிக்கும் நேயர்கள் ஆதி சங்கரரின் காலம் கி.மு. 509-கி.மு 477 என்பதை நினைவில் கொண்டு படிக்குமாறு வேண்டுகிறேன்.

இது குறித்து இங்கே சொல்லப் போவதில்லை; திராவிட சிசு எனத் தன்னைத் தானே ஆசாரியாள் கூறிக்கொண்டதை மட்டும் பார்க்கப் போகிறோம். ஜகத்குருவான சங்கராசாரியாரின் காலம் எப்போது என வரையறுக்கப் படாத காலத்திலே தோன்றினார் என்றே சொல்லப் படுகின்றது. அப்போது நம் தென் தமிழ்நாடு பூராவும் தமிழே பேசப் பட்டிருக்கின்றது. அதனாலேயே இவர் “தமிழ் சங்கரன்” எனப் பாடப் பட்டிருக்கின்றார். ஆசாரியாள் பேசியதும் அவருடைய தாய்மொழியும் தமிழே. சங்கரர் பிறந்த கதை அனைவரும் அறியலாம். சிவகுருநாதருக்கும் ஆர்யாம்பாளுக்கும் திருச்சூர் வடக்கு நாதர் அருளில் தோன்றிய சங்கரர் குழந்தையாக இருந்த போது ஒரு நாள் நடந்தது இது.


ஒருநாள் சிவகுருநாதன் அவர்களுக்கு அருகே இருக்கும் மாணிக்கமங்கலம் என்னும் ஊரில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தவேண்டிய வேலை இருந்தது. ஆர்யாம்பாள் அக்கால வழக்கப்படி வீட்டுக்குள் வரமுடியாத மாதாந்திரத் தொல்லையில் இருந்தாள். ஆகையால் அவள் இல்லத்தின் கொல்லைப் புறத்திலே இருந்தாள். குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்ட படியால் சிவகுருநாதர் ஒரு கிண்ணம் நிறையப் பாலைக் குழந்தைக்கு எனக் குழந்தையின் அருகேயே வைத்திருந்தார். குழந்தை தன் மழலையிலே பாலைப் பின்னர் அருந்துவதாய்ச் சொல்ல அவரும் கோயிலுக்குச் சென்றுவிட்டார். குழந்தை விளையாட்டு மும்முரத்தில் பாலை மறக்க தாய் மறப்பாளா? ஆர்யாம்பாள் கொல்லைப் புறத்தில் இருந்து, “சங்கரா, பாலைக்குடித்தாயா அப்பா?” என ஆதூரம் மிகக் கேட்டாள். குழந்தைக்கும் அப்போதுதான் பாலின் நினைவே வந்தது.

கிண்ணத்தையே பார்த்தது குழந்தை. பால் தளும்பிற்று. கிண்ணத்தைக் கையில் எடுத்தது. சாப்பிடப் போன குழந்தைக்குத் தன் தந்தை எது சாப்பிட்டாலும் உம்மாச்சிக்குக் காட்டுவாரே என நினைப்பு வந்தது. உடனேயே தத்தக்கா பித்தக்கா எனத் தளிர் நடை நடந்து பூஜை அறைக்குச் சென்றது குழந்தை. பால் கிண்ணத்தைக் கீழே வைத்தது. அதன் எதிரே அன்னபூரணியின் உருவப் படம் மாட்டப் பட்டிருந்தது. அன்னபூரணியையே ஒரு கணம் உற்றுப் பார்த்தது. யார் கண்டார்கள்? அன்றொரு நாள் தான் பிரம்ம கபாலத்தை ஏந்தி பிக்ஷை எடுத்து வந்த நாட்கள் ஒன்றிலே சாட்சாத் அன்னபூரணியின் கை அன்னத்தால் தன் பிக்ஷைப் பாத்திரம் நிரம்பிய நினைவு மனதில் மோதிற்றோ?? குழந்தை தன்னிரு கண்களையும் மூடிக்கொண்டது. தகப்பன் அப்படித் தான் செய்வார், பார்த்திருக்கிறது. ஏதோ முணுமுணுப்பாரே? ம்ம்ம்?? சரி, நாம் இப்படிச் சொல்வோமே. “அம்மா, அன்னபூரணி, இந்தப் பாலை எடுத்துக்கோயேன்.” குழந்தை வேண்டியது. அப்பா செய்யறாப்போலே குஞ்சுக்கைகளால் நிவேதனமும் செய்தது. அடுத்த கணம் கிண்ணத்தில் இருந்த பாலைக் காணோம். குழந்தை திகைத்துப் போனது. இது என்ன? அப்பா நிவேதனம் செய்வார். அப்புறம் நாம் தானே சாப்பிடுவோம்? ஆனால் இப்போ?? பாலையே காணோமே? வெறும் கிண்ணமல்லவா இருக்கு??

கிண்ணத்தையும் பார்த்துவிட்டு அன்னபூரணியையும் பார்த்தது குழந்தை. பசி வேறு ஜாஸ்தியாகிவிட்டது. என்ன செய்யறதுனு புரியாமல் உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, “அம்மாஆஆஆஆஆ, பால்” என்று அழ ஆரம்பித்தது. தன் பதியின் அவதாரமான இந்த ஞானக்குழந்தையோடு சற்று விளையாடுவோம் என எண்ணின அன்னபூரணி இப்போது பதறினாள். ஆஹா, குழந்தை அழுகிறானே? பசி பொறுக்க மாட்டானே? உடனே கிண்ணத்தில் பால் நிரம்பியது. குழந்தை சிரித்தது. (இதைப் பின்னர் செளந்தர்ய லஹரியில் குறிப்பிடப் போகிறார் சங்கரர். அதைப் பின்னால் பார்ப்போம்.) உமை அளித்த அந்த ஞானப்பாலைக் குழந்தை குடித்தது. பின்னால் வரப் போகும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடுகளே இவை எல்லாமே.

அம்பாளைக் குறித்த கேசாதிபாத வர்ணனையில் சங்கரர் அம்பாளின் ஸ்தனங்களைக் குறித்தும் பாடி இருக்கிறார். அம்பாளின் மார்பகத்தில் ஊறும் ஞானப்பாலைக் குடித்தே தேவர்கள் நித்ய யெளவனமாய் இருக்கின்றனர் எனவும் அவர்கள் குமாரர்களையோ நித்ய இளைஞர்களாக என்றும் இளையோயாய் மாற்றிவிட்டது எனவும் கூறுகிறார். இதன் உள்ளார்ந்த கருத்து அம்பாளின் ஞானப்பாலை உண்டதால் காமமே என்னவெனத் தெரியாத ஞானமூர்த்திகளாக இருக்கின்றனர் என்று கூறுகிறார். இங்கே ஞானம் என்பதை பரப்ரும்மத்தை அறிவது என்ற கருத்தில் ஆசாரியார் கூறி இருக்கலாம். அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து ஞானம், கருணை, ஸெளந்தரியம், போன்ற அனைத்தும் அவள் இருதயத்திலிருந்து ஊறிப் பாலாகப் பெருகித் தன்னையும் அவளின் குழந்தையாக ஆக்கியது என்கிறார். இதை உண்டதாலேயே ஸாக்ஷாத் சரஸ்வதியின் சாரம் தமக்குள்ளே ஊறிக் கவிதை மழை பொழிய முடிந்தது எனவும் கூறுகிறார். இது சங்கரரே எழுதியதாய்ச் சொல்லப்படும் ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களில் ஒன்று.

முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஆனந்த லஹரி எனப்படும். அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் ஸெளந்தர்ய லஹரி எனப்படும். இவை அனைத்தும் சேர்ந்தே ஸெளந்தர்ய லஹரி என்று அழைக்கப்படுகிறது. அதன் எழுபத்தி ஐந்தாம் ஸ்லோகத்தில் இந்தக் குறிப்பிட த்ரவிட சிசு என்னும் வார்த்தை காணப்படும்.

தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ:
தயாவத்யா தத்தம் த்ரவிடசிசு-ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரெளடானா-மஜனீ கமனீய: கவயிதா

இங்கே ஞானசம்பந்தரை ஆதிசங்கரர் குறிப்பிடக் காரணம் ஏதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மேலும் மலையாள மொழியின் வரலாறு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதன் முன்னர் சேர, சோழ, பாண்டியர் காலங்களில் சேர நாட்டிலும் தமிழே மொழியாக இருந்தது என்பதையும் அறிவோம். ஆதிசங்கரரும் அப்படியான தமிழ்க்குடும்பத்தைச் சேர்ந்தவரே என்பதால் தம்மைத் தானே இங்கே மூன்றாம் மனிதர் போல் பாவித்துக் குறிப்பிட்டிருக்கிறார். அம்பாளின் ஞானப்பாலைக் குடித்து சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தைப் பெற்றதால் தம் வாக்வன்மை அதிகரித்துக் கவிஞர்களுக்கெல்லாம் கவியாகத் தம்மை ஆக்கிவிட்டது. இதுவும் அவள் அனுகிரஹமே என்கிறார் ஆசாரியார்.


இன்னும் வரும்.

Friday, September 16, 2011

அம்பத்தூர் நரகம்!!

 எங்க வீட்டிலே மிச்சம் இருக்கும் சாமான்களைக் கொஞ்சம் எடுத்து வரலாம்னுபோனால் வீட்டுக்குள் நுழையவே முடியவில்லை. வழியில் வரிசையாக மணல், செங்கல், ஜல்லி கொட்டப்பட்டு, வழியென்றால் சத்தியமாக தெரு நட்ட நடுவில் கொட்டப்பட்டுள்ளது. மனிதர் நடமாடவே கஷ்டம். இந்த அழகில் தினம் தினம் பெய்யும் மழை வேறு. லாரிகள், டிராக்டர்கள், ஜேசிபி, மினி வான்கள் என எல்லாம் வந்து மாட்டிக்கொள்கின்றன. இந்த லாரி மாட்டிக்கொண்டு நகரமுடியாமல்! :((((((
 
 தண்ணீர் தேங்கி நடமாட முடியாமல் சேறாக இருக்கும் சாலையில் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள் தேங்கி நிற்கும் தண்ணீர். இவ்வளவு மோசமான சாலையிலும் அதைக் குறித்துச் சிறிதும் கவலைப்படாமல் குடி இருக்கும் மக்கள். இதைக் குறைந்த பக்ஷம் தெருக்காரர்கள் எல்லாரும் ஆளுக்கு ஒரு ஐந்நூறு ரூபாய் போட்டு ரப்பிஷ், கிராவல் போட்டு அடித்தால் சாலை கொஞ்சம் நடக்க லாயக்காக இருக்கும். நாங்க இருக்கையில் எல்லாரையும் கேட்டு அலுத்துப் போய்க் கொஞ்ச தூரம் வரையாவது நாம் செய்யலாம் என எங்க எதிர்வீட்டுக்காரரும், நாங்களும் முடிவு செய்தபோது கிளம்பும்படி ஆயிற்று. அப்படியும் ரப்பிஷாவது போடலாம் எனில் ஒரு சிலர் அதற்கு ஆக்ஷேபம் தெரிவிக்கின்றனராம். எங்களிடமே சிலர் ரப்பிஷைப் போட்டு நடக்க முடியாமல் பண்ணிட்டீங்க என முன்பு போட்டபோது வந்து சண்டை போட்டார்கள். :((((
 
 
 
Posted by Picasa
மேலுள்ள படத்திலும் இந்தக் கடைசிப்படத்திலும் காணப்படும் வண்டிகள் எல்லாம் எங்க வீட்டு வாசலை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன. நாங்க இருக்கையிலேயே சற்றும் கவலைப்படாமல் நிறுத்துவாங்க. கேட்டால், "அதுக்கென்ன இப்போ!" என அலக்ஷியமாகப் பதில் வரும். இப்போக் கேட்கவே வேண்டாம். இதுக்கெல்லாம் ஒரு முடிவு எப்போது?? முனிசிபாலிட்டியில் தினம் தொலைபேசி ஜல்லி கிரஷரை ஒரு லோடு கொட்டிச் சாலையை நடக்கத் தகுதியானதாகப் பண்ணும்படிக் கேட்டோம். நாங்க இருக்கும்வரையில் தினமும் இதோ இன்று, இதோ இன்று எனச் சொல்லிக் கொண்டிருந்துவிட்டு இப்போ வரதே இல்லை!

ஆதார் தேசிய அடையாள அட்டைக்கான பதிவு செய்துவிட்டீர்களா?

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவுகள் செய்து விட்டீர்களா??? இல்லை எனில் உடனடியாகச் செய்துவிடவும். முக்கியமான அடையாளங்களாக ரேஷன் கார்டு, வாக்குப்பதிவு அடையாள அட்டை தேவை.

உங்கள் சரியான பிறந்த தேதி, தாய், தந்தையர் பெயர், பெண் எனில் கூடுதலாகக் கணவர் பெயர், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குப் பெற்றோர் பெயர், அல்லது பொறுப்பாளர் பெயர், வங்கிக்கணக்கு விபரம், உங்களுக்கு இமெயில் கணக்கு இருந்தால் அதன் ஐடி, போன்றவற்றை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

அங்கே உங்கள் கண்விழிகளின் அடையாளங்கள் இரு கைவிரல்களின் அடையாளங்கள், உங்கள் கட்டை விரல்களின் அடையாளங்கள் எடுக்கப்படும். பின்னர் உங்கள் சரியான நிரந்தர விலாசம் சரிபார்த்துச் சேர்க்கப்பட்டு அதற்கு ஒரு அடையாளச் சீட்டுக் கொடுக்கப் படும். அதன் பின்னர் தொண்ணூறு நாட்களில் உங்கள் அடையாள அட்டை வந்து சேரும். இந்தியக் குடிமகன்/குடிமகள் அனைவரும் உடனடியாகப் பதிந்து கொண்டு உங்கள் தேசீய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஏதேனும் ஒன்றில் இதற்கான பதிவுகளைச் செய்கிறார்கள். அம்பத்தூருக்கு பாங்க் ஆஃப் பரோடா. இது போல் உங்கள் பகுதிக்கு எந்த வங்கி என்பதை உங்கள் பகுதியின் செய்திகளை அளிக்கும் தினசரிக்குறிப்புகளில் இருந்து அறியவும். இதற்குப் பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்படாததால் பலரும் அறியவில்லை. அரசு இதற்கு விளம்பரம் இயன்றால் முழுப்பக்க விளம்பரம் செய்ய வேண்டும்.


நாங்கள் பதிந்து விட்டோம்! அப்போ நீங்கள்???



ஆதார் தளம்

Monday, September 12, 2011

மெளன ராகம் இசைத்த போராளிகள்-2

மறைக்கப்பட்ட இந்திய விடுதலைப் போர்:



நாமெல்லாம் படிச்சது என்னமோ சிப்பாய்க்கலகம் எனப்படும் 1857ஆம் ஆண்டு நடந்த புரட்சி தான். அதைத் தான் நாம் முதல் இந்திய விடுதலைப் போர் என்று கூறுகின்றோம். வரலாற்றுப் பக்கங்களிலேயும் அப்படியே பதிவாகி உள்ளது. ஆனால் இதற்கு முந்தைய கட்டுரையில் நாம் முதன்முதலாக விடுதலைக்குக் குரல் கொடுத்த தமிழனைப் பற்றிப் பார்த்தோமல்லவா? அப்படியே முதன்முதலாகச் சிப்பாய்க் கலகம் ஏற்பட்டதும் தமிழ்நாட்டிலே தான். எங்கே தெரியுமா?/ வேலூர்க்கோட்டையிலே. முதலிலே கோட்டையின் வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். கோட்டை முதலில் கட்டியது விஜயநகர சாம்ராஜ்யத்து அரசர்களால். ஆச்சரியமாய் உள்ளதா? ஆம், விஜயநகரத்தில் இருந்து தென்னகம் முழுமையையும் ஒரு குடைக்கீழ் கொண்டு வந்து ஆட்சி புரிந்த விஜயநகர சாம்ராஜ்யத்து அரசர்களில் ஒருவரான சதாசிவ ராயர் என்பவர் தன் படைத்தளபதிகளான சின்ன பொம்மி நாயக்கனையும், திம்ம ரெட்டி நாயக்கனையும் இந்த ஊர் எல்லா இடத்திற்கும் செல்ல வசதியாக அமைந்திருப்பதால் இங்கே நமக்கு ஓர் கோட்டை அவசியம் எனக் கருதிக் கட்டச் சொன்னார். அரசர் ஆணையின் பேரில் இங்கே கோட்டை கட்டப்பட்டு விஜயநகர சாம்ராஜ்யத்தின் வசமே கோட்டை இருந்து வந்தது. இதுவும் ஒரு குட்டித் தலைநகராக இருந்தது. சந்திரகிரியிலும் தங்களுக்கென ஒரு கோட்டையைக் கட்டிக்கொண்டு அதையும் தங்கள் தலைநகராக மாற்றிய விஜயநகர மன்னர்கள் தங்கள் ராய வமிசத்தினர் ஒருவருக்கொருவர் ஏற்பட்ட தாயாதிச் சண்டையின் போது இங்கே மாறி மாறித் தங்கி இருக்கின்றனர்.



இங்கே இருந்த வண்ணம் தஞ்சையை ஆண்ட நாயக்கர்களையும், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களையும் செஞ்சிக்கோட்டையையும் தங்கள் வசமே வைத்துக் கட்டிக் காத்தனர். ராய வமிசத்தினருக்கு பீஜப்பூர் சுல்தான்கள் பரம வைரிகளாக இருந்தனர். அவர்களுடன் நடந்த சண்டையில் மூன்றாம் ஸ்ரீரங்கராயனின் காலத்தில் இது சில காலம் பீஜப்பூர் சுல்தான்களின் வசத்தில் இருந்தது. ஆனால் வேலூர்க்கோட்டையைக் கைவிட முடியாத ராய வமிசத்தினர் தஞ்சை நாயக்கரின் உதவியோடு கோட்டையை மீட்டனர். ஆனால் மீண்டும் நடந்த சதியில் ஸ்ரீரங்கராயர் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டு அதில் எப்படியோ மீண்டு தப்பி வந்த ராமதேவராயரிடம் அரசாட்சி செல்லக் கோட்டை அவரிடம் இருந்தது. பின்னர் தஞ்சை மராட்டி அரசர்கள் வசம் வந்து அதன் பின்னர் மீண்டும் முசல்மான்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு ஆர்க்காடு நவாப் ஒருவரால் அவரின் மருமகனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. இதற்குள்ளாக இங்கே நன்றாய் வேர் விட்டுப் படர ஆரம்பித்திருந்த கும்பினியார் கர்நாடகத்தின் ஹைதர் அலியோடும், அவன் மகன் திப்பு சுல்தானோடும் நடந்த கர்நாடகா யுத்தங்களில் இந்தக் கோட்டையை ஒரு முக்கிய கேந்திரமாகக் கொண்டு செயல்பட்டனர். ஹைதர் அலி தன் காலத்திலேயே இந்தக் கோட்டையை மீட்டாலும், ஆங்கிலேயச் சிப்பாய்கள் முற்றுகையிட்டு மீண்டும் இதைத் தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

ஹைதர் அலிக்குப் பின்னர் அவன் மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயருடனான போரைத் தொடர்ந்து நடத்தினான். ஆனால் ஆங்கிலேயர் திப்புவை மேமாதம் நாலாம் தேதி, 1799 ஆம் ஆண்டு சீரங்கப்பட்டணத்தில் நடந்த போரில் கொன்றனர். அதன் பின்னர் அவர் குடும்பத்தைச் சிறைப்பிடித்து வேலூர்க்கோட்டைக்குக் கொண்டு வந்து அங்கே சிறை வைத்தனர். கோட்டையில் 5 பெரிய அரண்மனைகள் இருந்ததாகவும், திப்புவின் குடும்பத்தினர் முந்நூறு நபர்களையும் அங்கே தங்க வைத்ததாகவும் தெரியவருகிறது. இந்தக் குடும்பங்கள் வசிக்கவும், பின்னர் அவர்களைக் காவல் காக்கவும் இங்கே ஏற்படுத்தப்பட்ட படையே இங்கே தங்க வைக்கப்பட்டது. ஆனாலும் பின்னர் அவர்கள் தங்கள் படையில் ஒரு பகுதியை முக்கியமாய் இந்தியச் சிப்பாய்களை இங்கேயே தங்க வைத்திருந்தனர். ஆகவே இந்தப் படைவீரர்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் கலந்தே இருந்தனர். முதன் முதலாக மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்ற பெயரில் முழுவதும் தமிழ்நாட்டு வீரர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்ட காலாட்படை என்னும் இன்பண்ட்ரி ரெஜிமெண்ட் இங்கே தான் துவங்கப்பட்டது. இன்றும் இந்திய ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்டிற்குக் குறிப்பிடத் தக்க முக்கியத்துவம் உண்டு. அப்போது நம் சிப்பாய்கள் நாட்டு வழக்கப்படி தலைப்பாகையுடனும், முறுக்கிவிடப்பட்ட மீசைகளோடும் காட்சி அளித்தனர். ஆனால் அவர்களின் தலைமைத் தளபதியான ஆங்கிலேயனுக்கு இந்தக் கோலம் அருவருப்பைத் தந்தது. ஆகவே சிப்பாய்கள் அனைவரும் தங்கள் மீசையையும், தாடி இருந்தால் அதையும் மழித்துவிட்டுத் தலைப்பாகைக்குப் பதிலாக அவர்களால் அளிக்கப்படும் தொப்பிகளை அணிய வேண்டும் என்று கட்டளை இட்டான். ராணுவத்திலேயே தளபதி கட்டளை எனில் மீற முடியாது. அதுவும் இது ஆங்கிலேயத் தளபதி. அவன் சொன்னால் சொன்னதுதான்.



அதோடு படை வீரர்களில் அனைத்து மதத்தினரும், அனைத்து தெய்வங்களை வழிபடுபவர்களும் இருந்து வந்தனர். இந்துக்களுக்குத் தங்கள் மதச்சின்னங்களை நெற்றியில் தரிக்கும் வழக்கம் இருந்தது. அதுவும் தடை செய்யப்பட்டது. இஸ்லாமியருக்கோ தாடி வளர்க்கக் கூடாது என்பதினால் அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் புதிதாய்க் கொடுக்கப்பட்ட தலைப்பாகை மிருகங்களின் தோலினால் செய்யப்பட்டவை என்பதாலும் இந்துக்கள் எதிர்த்தனர். அதுவும் பன்றியினால் செய்யப்பட்டது என்றும், மாட்டுத்தோலினால் செய்யப்பட்டது என்றும் தெரிய வந்தது. பன்றி இஸ்லாமுக்கு எதிரானது. மாடுகளோ இந்துக்கள் வழிபடும் காமதேனு தெய்வம். ஆகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கத்தை இன்று வந்த ஆங்கிலேயர் மாற்ற முனையவே சிப்பாய்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதோடு அனைவரையும் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாயும் நம்பினார்கள். துப்பாக்கிகளில் வைக்கப்படும் தோட்டாக்களிலும் மிருகக்கொழுப்புக் கலந்திருப்பதாயும் நம்பினார்கள். ஆகவே தங்கள் எதிர்ப்பைக் காட்ட அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். மேலும் இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கையும் ஆங்கிலேயச் சிப்பாய்களை விட அதிகமாக இருந்தது.



ஆகவே 1806-ஆம் ஆண்டு ஆகஸ்டு அல்லது செப்டெம்பர் மாதத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து தென்னகத்தில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களிலும் ஒரே நேரத்தில் புரட்சி வெடித்தால் ஆங்கிலேயர் பயந்து போய் நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள். இருப்பதோ பதின்மூன்றாயிரம் ஆங்கிலேயச் சிப்பாய்கள். அவர்களை எளிதில் கொன்றுவிடலாம். செத்தவர்கள் போக மிச்சம் உள்ளவர்கள் ஓட்டம் பிடிப்பார்கள் என்று கருதினார்கள். வேலூரிலோ புரட்சிக்கனல் முற்றிக் கனிந்து எந்நேரமும் பிடிக்கும் நிலையில் இருந்தது. ஆனால் தளபதி கர்னல் பேங்கோர்ட் என்பவரோ சென்னைக் கோட்டையின் கவர்னரிடம் வேலூர்க்கோட்டை முழு அமைதி காப்பதாகக் கடிதம் எழுதினான். புரட்சியோ மறுநாள் வெடிக்கத் தயாராகக் குமுறிக்கொண்டிருந்தது. புரட்சியாளர்கள் அவ்வளவு ரகசியமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தனர். புரட்சி வெடித்தது. ஆங்கிலேயேப் படைத்தளபதிகள் தனி மாளிகைகளில் இருக்க இந்தியச் சிப்பாய்கள் தனியான வீடுகளில் இருந்தனர். புரட்சி நாளுக்கு முந்தைய ஜூலை ஒன்பதாம் தேதி முந்நூறு இந்தியச் சிப்பாய்கள் கோட்டைக்குள் புகுந்தனர். அனைவரும் புரட்சியாளர்கள்.



ஜூலை பத்தாம் நாள் 1806ஆம் ஆண்டு அதிகாலை இரண்டு மணியளவில் புரட்சி வெடித்தது. புரட்சித்தலைவர்கள் தங்கள் மேலதிகாரிகளான ஆங்கிலேயர்கள் தூங்குகையில் ஆயுதக் கிடங்கில் புகுந்து தளவாடங்களை எடுத்துக்கொண்டு வந்து தங்கள் சக புரட்சிக்காரர்களுடன் அணிவகுத்தனர். ஆங்கில்யே அதிகாரிகளைத் தாக்க ஆரம்பித்தனர். ஆயுதங்கள் மற்றப் புரட்சியாளர்களால் இடைவிடாது வழங்கப்பட்டது. ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வைக்கப்படிருந்த துப்பாக்கிகளைப் புரட்சியாளர்கள் கையாண்டனர். பீரங்கிகளையும் பயன்படுத்தினர். ஒன்றும் புரியாமல் எழுந்து வந்த அதிகாரிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர். கோட்டைத் தலைவனும் கர்னலுமான பேங்கோர்டும் சுட்டுக் கொல்லப்பட்டான். இறந்த அவன் உடலை ஆத்திரத்துடன் புரட்சியாளர்கள் எச்சில் உமிழ்ந்தும், துப்பாக்கியால் மீண்டும் மீண்டும் அடித்தும் சேதம் செய்தனர். ஒளிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அனைவரும் வெளியே இழுத்துவரப்பட்டனர். அனைவரும் கொல்லப்பட இதற்குள் திப்புவின் பணியாட்களும் புரட்சிக்காரர்களோடு சேர்ந்து கொள்ள, மற்ற பிரஞ்சு, டச்சு ஐரோப்பிய வீரர்களும் உதவி செய்ய ஆங்கிலேய அதிகாரிகளின் மாளிகைகள் கைப்பற்றப்பட்டன. கோட்டையின் பிரதான வாயில் புரட்சிக்காரர்களால் காவல் காக்கப் பட்டது. திப்பு சுல்தானின் மகனான மொய்தீன் தான் வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சிறையிலிருந்து வெளிவந்து திப்புவின் கொடியான புலிச்சின்னக் கொடியைப் புரட்சிக்காரர்களிடம் அளித்தார். அந்தக் கொடி கோட்டையின் தென்பகுதியில் கொடிக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அனைவருக்கும் முழுமையான விருந்துபசாரங்களுடன், ஆங்கிலேயன் தோற்றான் என்ற கோஷங்களோடு புரட்சிக்காரர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.



ஆனால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போனது. அதன் காரணம் அங்கிருந்த தங்கசாலை தான். ஒரு சில புரட்சிக்காரர்கள் அங்கிருந்த தங்க நாணயங்கள் பாதுகாக்கப்பட்ட அறையை உடைத்து நாணயங்களைக் கொள்ளை அடிக்க, மற்றச் சிப்பாய்களும் சேர்ந்து கொள்ள யாருக்கும், யாரையும் கட்டுப்படுத்த முடியாமல் பணத்தாசை பிடித்து ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். கூச்சல் குழப்பம். நாலாபக்கமும் அணிவகுத்து நின்ற புரட்சி வீரர்கள் பயத்தில் தாறுமாறாக ஓட ஆரம்பிக்க, திப்புவின் மகன்களும் கலவரத்தில் மீண்டும் வீட்டுச் சிறையான அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டு தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர். சற்றும் பொறுமையின்றிப் பணத்தாசை பிடித்துப் புரட்சியாளர்கள் நடந்துகொள்ளவே தலைமை தாங்கச் சரியான நபரின்றிப் போனது. இதற்குள்ளாக ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லஸ்பி என்பவருக்கு இந்தச் செய்தி தெரியவரவே காலை ஒன்பது மணிக்கு மேல் அவர் தனது குதிரைப்படையுடன் வேலூர்க்கோட்டையை அடைந்தார். கோட்டைக்கதவுகள் மூடப்பட்டுப் பிரதான வாயில் அடைக்கப் பட்டிருந்தது. ஆனாலும் கில்லஸ்பி காவலுக்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தான். உள்ளே நிலவிய கூச்சல், குழப்பம் அவனுக்கு அநுகூலமானதாக இருக்கவே எளிதில் தனது படைகளை ஏவிப் புரட்சிக்காரர்களைக் கொன்றான்.



கோட்டை மதில் சுவரில் ஏறித் தப்பிக்க முயன்ற புரட்சியாளர்களில் பலர் அகழியில் விழுந்தும், நெரிசலில் சிக்கியும் மடிந்தனர். கோட்டைக்குள் இறந்த வீரர்களின் எண்ணிக்கை சுமார் மூவாயிரத்துக்கும் மேல் இருக்கும் எனத் தெரிய வருகிறது. ஆவணங்களும் அவ்வாறே சொல்வதாய் அறிகிறோம். ஒரு சிலரைக் கைதியாகப் பிடித்து வரிசையில் நிறுத்தியும் சுட்டனர் என்பதும் பதிவாகி இருக்கும் செய்தியாகும். அனைவரையும் ஒரு சில மணி நேரத்தில் அடக்கிய கில்லஸ்பி மீண்டும் கோட்டையை ஆங்கிலேயர் வசமாக்கினான். கோட்டைக்கு வெளியே தப்பி ஓடிய சிப்பாய்களையும் அவர்கள் கவர்ந்து சென்ற பொருட்களோடு பிடிக்க ஆட்களை அனுப்பிச் சுமார் அறுநூறு சிப்பாய்களையும் பிடித்துச் சிறையில் அடைத்தான். மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்த கோட்டைக்கு கில்லஸ்பி தலைமையும் ஏற்றான். என்றாலும் ஆங்கிலேயருக்கு அப்போது கொஞ்சம் பீதி ஏற்பட்டது என்னவோ உண்மை. லண்டனின் பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரைக்கும் செய்தி போய் பாராளுமன்றம் இந்த வேலூர் சிப்பாய்க்கலகத்தைக் குறித்து மூன்று மாதங்கள் வரை ஆய்வு செய்து இந்நிகழ்ச்சியை மறக்காமல் இனி வருங்காலத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை செய்தது. ஆனால் தென்னாட்டில் அமைதி அவ்வளவு விரைவில் ஏற்படவில்லை. ஆங்கிலேய அரசு மிகவும் சிரமத்துடனேயே தென்னாட்டு மக்களை அடக்கி ஒடுக்கினர். இதன் பின்னர் ஏறத்தாழ முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னாலேயே இதே மாதிரியான சிப்பாய்க்கலகம் 1857 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதையே முதல் சுதந்திரப் போர் என வரலாறு பதிவும் செய்துள்ளது ஆனாலும் இந்த வேலூர்ப் புரட்சியையே முதல் சிப்பாய்க் கலகம் எனக் கூற வேண்டும்.

http://tinyurl.com/3m6pkh6
[Open in new window]
(அதீதம் மின் இதழில் செப்டம்பர் இரண்டாம் தேதி வந்தது.)

Sunday, September 11, 2011

தொண்டு செய்யும் அடிமை! உனக்குச் சுதந்திர நினைவோடா?

இறை வணக்கம்:

‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;

சீர்பெற்றிட நீ யருள் செய்வாய்,

வையந் தனையும் வெளியினையும்

வானத்தையு முன் படைத்தவனே!

ஐயா, நான் முகப் பிரமா,

யானைமுகனே, வாணிதனைக்

கையாலணைத்துக் காப்பவனே,

கமலா சனத்துக் கற்பகமே.’

~ மஹாகவி பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை: விருத்தம்


குரு வந்தனம்:


பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி, அவ்வப்பொழுது, குட்டியும், தட்டியும், மஹாகவியை பற்றி, திலகர் மடலில், ‘அதிக’ பிரசங்கிக்க வைத்து, கல்விக்கனல் மூட்டிய பாலு சாரை நெடுஞ்சாங்கிடையாக தெண்டன் சமர்ப்பிவித்த விஞ்ஞாபனம். அன்றைய நாள் செப்டம்பர் 11, 1939/40? அல்லது அவருடைய ஜன்மதினம்? நினைவில்லை. ஆனால், ஒரு பெரியவர் மேடை ஏறி வந்து, என்னை ஆரத்தழுவி ‘ஓ’ என்று அழுதார். ஆனந்தக்கண்ணீர். ஆத்துக்கு வந்த பின், சித்தியாவும் அழுதார். அத்தையும், சித்தியும் சுத்திப்போட்டா. இப்போ புரியது, பாலு சார். கல்வியும் தொடருகிறது. கனலும் கணகணப்பு. பக்தியும் பரவசம்.


கவி வந்தனம்:

~ தமிழன்னையின் அருமந்த புதல்வனும்,

உயர் ஆஸனத்தில் அமர்ந்து எமையெல்லாம்

பாலிக்கும் கவிஞர் குல விளக்கும்

ஆகிய மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்

~ பராக்! பராக்!

~ ராயப்பேட்டை வேப்பமரத்தடி தமிழ் மொழியும், தேசபக்தியும் கலந்த திருக்கண்ணன் அமுதாகிய தேசபக்தன் இதழ் அச்சாபீஸ்ஸில். வந்துட்டார்! வந்துட்டார்! இது பரலி.சு.நெல்லையப்பர்.

வருணனை:வெ.சாமிநாத சர்மா.

போதிமரத்தடி தென்றல்: திரு.வி.க.


‘வந்தாரே அமானுஷ்யன்;

சட்டையில் காலரில்லை;

ஆனா டை கட்டி தொங்குதடா,

சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,

தோளின் மேல் சவாரி,

நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.

முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.

அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.

எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.

மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.

எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!

கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?

உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?

அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?

என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;

அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!

மஹமாயி! ஆதி பராசக்தி!

அந்த மணக்குளத்து பிள்ளையாரே!

பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ

இவனுக்கு சேவகன் இல்லையாடா?

அதெல்லாம் சரி.

அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?

ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!


(கவிதை நடை இல்லை. யதுகை? மோனை? பாலு சார் அதை சொல்லித்தரல்லை. வினோத்தின் மென்பொருள் வரலையப்பா, அப்போது! நான் என்றோ ஆங்கிலத்தில் பதித்த வருணனை:வெ.சாமிநாத சர்மா தான் மூலம். இது நிஜம்.)


இன்றைய தினம் 1921ம் வருடம் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அமரரானார். அவரை பற்றி எழுத பல சான்றோர்கள் இருக்கும் இந்த அவையில் மாணவனாகிய எனக்கு எழுத தயக்கம். காலதேசவர்த்தமானம் கருதி, ஒரு சொல் பேசி விட்டு, நகர்ந்து விடுகிறேன். பழித்து அறிவுறுத்துகிறார், ‘நடிப்புச் சுதேசிகள்’ என்ற கிளிக்கண்ணி கவிதை ஒன்றில். இன்று பாரதமாதாவை வற்புறுத்தி, இற்செறித்து, கண் கலங்க வைத்திருக்கும் நடிப்பு சுதேசிகளை என்றோ எடை போட்டு,

‘உரமும், திறமும் அற்றவர்கள், வாய்ச்சொல்லில் மட்டும் வீரம், கூவுவதோ பிதற்றல், அந்தகன், அலி, கண்ணிருந்தும் குருடன், மந்திரத்தில் யந்திரம் தேடுபவன், செய்வதறியாதவன், ஆன்மிகம் பேசும் நாத்திகன்,பேதை, அஞ்சி நடுங்குபவன், ஊமை, வாழத்தகுதியற்ற ஈனன், பொய்யன், ஆஷாடபூதி, அற்பன், செம்மை அறியாதவன், சோம்பேறி, வெத்து வேட்டு என்று பொருள்பட, வெளிப்படையாக, எளிய தமிழில், கண்டனம் செய்திருக்கிறார். ஈற்றடியில் ‘...அதை மனத்திற் கொள்ளார்’ என்று சாடியிருப்பதையாவது நாம் கவனத்துடன் பார்த்து, சுய விமரிசனம் செய்து கொள்வது சாலத்தகும்..


ஆம். நெஞ்சில் உரம் இருந்திருந்தால், ஊழல் மிகுந்திருக்காது. திறன் இருந்திருந்தால், லஞ்சத்தை ஒழித்திருப்போம். வாய்ச்சொல்லிலும் மட்டும் இல்லாமல், மனவுறுதியிலும், உடல் வலிமையிலும், வீரம் இருந்திருந்தால், அயலார் மிரட்டமுடியாது. பிதற்றி, பிதற்றியே, உலக அரங்கில் தன்மானமிழந்தோம். கண் கூடாக அதர்மங்களை கண்டும், கண்ணில்லா கபோதியென மண்ணில் வீழ்ந்து கிடந்தோம்.கட்டை பஞ்சாயத்துக்குத் தொடை நடுங்கினோம். சாதி மத பேதம் வளர்க்கும் பேதைகள் ஆனோம். முகமூடி அணிந்த கொள்ளையர் போல் சொத்து சேர்ப்பவர்களின் மெய்கீர்த்தி இசைத்தோம், வறுமை தீராதப் பாணர்களைப்போல அல்லாமல், அற்பத்தனமாய் ஏழையின் உணவை திருடுவோருடன் கூட்டு சேர்ந்தோம்.


இது எல்லாம் உண்மை, ஐயா! ஆனாலும், மார்க்கமொன்று உண்டு. மனமிருந்தால், குணமும் கூடினால், மஹாகவியுடம் சேர்ந்து, ‘...பாரத தேசமென்று தோள்’ கொட்டலாம். அதற்கு தகுதி: தேசாபிமானம், விழிப்பு, கல்வி, தர்ம போதனை, சான்றோர் வாழ்க்கை அறிதல், வாய்மையும், நேர்மையும். இவற்றை பெறுவது, நம் கையில்:

~ தனியார்: கற்கலாம்; சிந்திக்கலாம்; தொண்டாற்றலாம். மோசம் போகாமல் இருக்கலாம்.

~ குடும்பம்: சிறார்களுக்கு அறிவுரை; நடந்துக் காட்டுவது; பாசம் வளர்ப்பது.

~ சமூகம்: பெரிய குடும்பமாக இயங்கலாம்; நியாயம் பார்க்கலாம். நேசத்தைக் கூட்டலாம்.

~ சமுதாயம்: கல்வி, சுகாதாரம், மரபு, நற்பண்புகள் என இலக்குகள் வைத்து, வாழ்நெறி இயக்கமாக, சமுதாய மேன்மை நாடலாம். கிலேசத்தைத் தணிக்கலாம்.

~ அரசு: தர்மபரிபாலனம்; தேச சம்ரக்ஷணை.

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ‘பலே பாண்டியா!’ என்று ஆசிகள் பல வழங்குவார். கிணற்றுத்தவளையாக இல்லாதபடி, உலக வழக்குகளும், வரலாறும், சிந்தனைகளும் அறிந்து கொள்ளேன் என்று சொல்லிவிட்டு ‘மாஜினியின் பிரதிக்கினை’ என்று பரவசமும் ஆவேசமும் கலந்துயர்ந்த குண்டலினி யோகத்திலே, பரமோனத்திலே பாடுவார்.

ஏனிந்த மாஜினிப்பாட்டு? வரலாற்றுப் போக்கில், மரபும், பண்பும், கலாச்சாரமும், நாகரீகமும் பளிச் என்று மிளிர்ந்த இத்தாலி நாடு அன்னியர் நுழைய, அழிய தொடங்கியது. அழுகல் துர்நாற்றம். அவயவங்கள் வாடி விழுந்தன. ஒற்றுமை பலிகடா ஆகி விட்டது. மக்களுக்கு தன்னம்பிக்கை ஒழிந்து போனது. இருந்தாலும், ஐரோப்பாவெங்கும் தேசாபிமானம் தலை தூக்கியது. ஃப்ரென்ச் புரட்சியின் தாகம் தீரவில்லை. தாரக மந்திரம்: விழிப்புணர்வு/ உரிமை போராட்டம்/ஒருமைப்பாடு/குடியரசு. மாஜினி, கரிபால்டி, கவூர் ஆகிய மூவர் இத்தாலி நாட்டுக்கு புத்துயிர் அளித்தனர். என்றைக்கு அவர்களை பற்றி எழுத முடியுமோ? Please read Sir Arthur Quiller-Couch: The Roll Call of Honour. மாஜினியின் எழுச்சி இன்றும் இந்தியாவுக்கு பாடம். எனவே, மஹாகவியின் ‘மாஜினியின் பிரதிக்ஞை’ யை இங்கே அளித்தேன்.

மாஜினியின் சபதம் பிரதிக்கினை

பேரருட் கடவுள் திருவடி யாணை,
பிறப்பளித் தெமையெலாம் புரக்கும்
தாரணி விளக்காம் என்னரு நாட்டின்
தவப்பெய ரதன்மிசை யாணை
பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின்
பணிக்கெனப் பலவிதத் துழன்ற
வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த
விழுமியோர் திருப்பெய ராணை.

ஈசனிங் கெனக்கும் என்னுடன் பிறந்தோர்
யாவர்க்கும் இயற்கையின் அளித்த
தேசமின் புறுவான் எனக்கவன் பணித்த
சீருய ரறங்களி னாணை.

மாசறு மென்நற் றாயினைப் பயந்தென்
வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின்
ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்றோ
அத்தகை யன்பின்மீ தாணை.

தீயன புரிதல் முறைதவி ருடைமை,
செம்மைதீர் அரசியல், அநீதி
ஆயவற் றென்னஞ் சியற்கையின் எய்தும்
அரும்பகை யதன்மிசை யாணை
தேயமொன் றற்றேன் நற்குடிக் குரிய
உரிமைகள் சிறிதெனு மில்லேன்,
தூயசீ ருடைத்தாம் சுதந்திரத் துவசம்
துளங்கிலா நாட்டிடைப் பிறந்தேன்.

மற்றை நாட்டவர்முன் நின்றிடும் போழ்து
மண்டுமென் வெட்கத்தி னாணை.
முற்றிய வீடு பெறுகெனப் படைப்புற்று
அச்செயல் முடித்திட வலிமை
அற்றதால் மறுகும் என்னுயிர்க் கதனில்
ஆர்ந்த பேராவலி னாணை.
நற்றவம் புரியப் பிறந்த தாயினுமிந்
நலனறு மடிமையின் குணத்தால்.

வலியிழந் திருக்கும் என்னுயிர் கதன்கண்
வளர்ந்திடும் ஆசைமீ தாணை.
மலிவுறு சிறப்பின் எம்முடை முன்னோர்
மாண்பதன் நினைவின்மீ தாணை.
மெலிவுடன் இந்நாள் யாங்கள் வீழ்ந்திருக்கும்
வீழ்ச்சியி னுணர்ச்சிமீ தாணை.
பொலிவுறு புதல்வர் தூக்கினி லிறந்தும்
புன்சிறைக் களத்திடை யழிந்தும்

வேற்று நாடுகளில் அவர் துரத் துண்டும்
மெய்குலைந் திறந்துமே படுதல்
ஆற்ற கிலாராய் எம்மரு நாட்டின்
அன்னைமார் அழுங்கணீ ராணை.
மாற்றல ரெங்கள் கோடியர்க் கிழைக்கும்
வகுக்கொணாத் துயர்களி னாணை.
ஏற்ற இவ்வாணை யனைத்துமேற் கொண்டே
யான்செயுஞ் சபதங்கள் இவையே.

கடவுளிந் நாட்டிற் கீந்ததோர் புனிதக்
கட்டளை தன்னினும் அதனைத்
திடனுற நிறுவ முயலுதல் மற்றித்
தேசத்தே பிறந்தவர்க் கெல்லாம்
உடனுறு கடமை யாகுமென் பதினும்
ஊன்றிய நம்புதல் கொண்டும்
தடநில மிசையோர் சாதியை இறைவன்
சமைகெனப் பணிப்பனேல் அதுதான்.

சமைதலுக் குரிய திறமையும் அதற்குத்
தந்துள னென்பதை யறிந்தும்
அமையுமத் திறமை ஜனங்களைச் சாரும்
அன்னவர் தமக்கெனத் தாமே
தமையல தெவர்கள் துணையு மில்லாது
தம்மருந் திறமையைச் செலுத்தல்
சுமையெனப் பொறுப்பின் செயத்தினுக் கதுவே
சூழ்ச்சியாம் என்பதை யறிந்தும்,

கருமமுஞ் சொந்த நலத்தினைச் சிறிதும்
கருதிடா தளித்தலுந் தானே
தருமமாம் என்றும், ஒற்றுமை யோடு
தளர்விலாச் சிந்தனை கொளலே
பெருமைகொள் வலியாம் என்றுமே மனத்திற்
பெயர்ந்திடா உறுதிமேற் கொண்டும்,
அருமைசால் சபத மிவைபுரி கின்றேன்
ஆணைக ளனைத்து முற்கொண்டே.

என்னுடனொத்த தருமத்தை யேற்றார்
இயைந்தஇவ் வாலிபர் சபை க்கே
தன்னுடல், பொருளும், ஆவியு மெல்லாம்
தத்தமா வழங்கினேன்; எங்கள்
பொன்னுயர் நாட்டை ஒற்றுமை யுடைத்தாய்ச்
சுதந்திரம் பூண்டது வாகி
இன்னுமோர் நாட்டின் சார்வில தாகிக்
குடியர சியன்றதா யிலக.

இவருடன் யானும் இணங்கியே யென்றும்
இதுவலாற் பிறதொழி லிலனாய்த்
தவமுறு முயற்சி செய்திடக் கடவேன்.
சந்ததஞ் சொல்லினால், எழுத்தால்,
அவமறு செய்கை யதனினால் இயலும்
அளவெல்லாம் எம்மவ ரிந்த
நவமுறு சபையி னொருபெருங் கருத்தை
நன்கிதன் அறிந்திடப் புரிவேன்.

உயருமிந் நோக்கம் நிறைவுற இணக்கம்
ஒன்றுதான் மார்க்கமென் பதுவும்
செயம்நிலை யாகச் செய்திடற் கறமே
சிறந்ததோர் மார்க்கமென் பதுவும்,
பெயர்வர எங்கள் நாட்டினர் மனத்திற்
பேணுமா றியற்றிடக் கடவேன்,
அயலொரு சபையி லின்றுதோ றென்றும்
அமைந்திடா திருந்திடக் கடவேன்.

எங்கள்நாட் டொருமை என்னொடுங் குறிக்கும்
இச்சபைத் தலைவரா யிருப்போர்
தங்களாக் கினைக ளனைத்தையும் பணிந்து
தலைக்கொளற் கென்றுமே கடவேன்,
இங்கென தாவி மாய்ந்திடு மேனும்
இவர்பணி வெளியிடா திருப்பேன்
துங்கமார் செயலாற் போதனை யாலும்
இயன்றிடுந் துணையிவர்க் களிப்பேன்.

இன்றும் எந்நாளும் இவைசெயத் தவறேன்
மெய்யிது, மெய்யிது; இவற்றை
என்றுமே தவறு யிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக.
அன்றியும் மக்கள் வெறுத்தெனை இகழ்க
அசத்தியப் பாதகஞ் சூழ்க
நின்றதீ யெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம்யா னுழலுக மன்னோ!

வேறு

பேசி நின்ற பெரும்பிர திக்கினை
மாசி லாது நிறைவுறும் வண்ணமே
ஆசி கூறி யருளு! ஏழையேற்கு
ஈசன் என்றும் இதயத் திலகியே.-



இன்னம்பூரான்

11 09 2011

http://professormira.com/wp-content/uploads/2011/05/Bharati-Stamp2.jpg

பி.கு: சாமியோவ்! மஹாகவிக்கு வர்ணஜாலம் பிடிக்கும். அதான்.


எழுத்தும் ஆக்கமும்: திரு இன்னம்புரார்

*************************************************************************************
இன்று தேசிய கவி சுப்ரமண்யபாரதியின் நினைவுநாள். அதற்கான ஓர் இடுகை ஏதேனும் போட எண்ணி அதிகாலை வந்தால் மின் தமிழில் எனக்கு முன்பே திரு இன்னம்புரார் அருமையானதொரு பதிவை அளித்து மஹாகவிக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். அதைப் படித்த பின்னர் நான் எழுதுவதெல்லாம் எதுவுமே இல்லை எனத் தோன்றிவிட்டது. அந்தப் பதிவுதான் மேலே நீங்கள் காண்பது. பாரதியின் கனவுகள் எதுவும் இன்று வரை பலிக்கவில்லை. எனினும் என்றாவது ஓர் நாள் பலிக்கும் எனக் காத்திருப்போமாக.


மேலே எழுதி இருப்பது அனைத்தும் எண்பது வயதுப் பெரியவரும் ஆடிட்டர் ஜெனரலும் ஆன திரு இன்னம்புராரின் எழுத்து வண்ணம். இந்த வயதிலும் நம் நாட்டின் நிலைமையை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இளைஞர்களின் எழுச்சியைக் குறித்து ஆவலோடு காத்திருக்கிறார். இன்றில்லை எனில் என்றாவது ஓர் நாள் நம் நாடும் ஊழலற்ற ஒரு அருமையான சமுதாயத்தை உருவாக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறார். பல்வேறுவிதமான உடல் உபாதைகளுடன் அவர் தொடர்ந்து இந்த எழுச்சியை இளைய சமுதாயத்திற்கு ஊட்டி வருகிறார். அவருடைய நம்பிக்கை பொய்க்காமல் இருக்கப் பிரார்த்திப்போமாக. உலக அரங்கில் ஊழலில் சிறந்த நாடு பாரத நாடு என்ற பெயர் எடுத்திருக்கும் நாம் இனியாவது அதிலிருந்து விடுபட்டு பாரதியின் வாக்கான பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என நெஞ்சை நிமிர்த்திக் குரல் கொடுக்கப் பிரார்த்திப்போமாக!

--

Saturday, September 10, 2011

பிள்ளையார் இப்போத் தெரியறரா?

Posted by Picasa
போன பதிவில் பிள்ளையார் தெரியலைனு திவாஜி சொல்லி இருந்தார். அதுக்காகப் பிள்ளையாரை மட்டும் தனியாக எடுத்தது போட்டிருக்கேன். பாருங்க நல்லாத் தெரியறரானு.

Tuesday, September 06, 2011

என்ன சொல்றீங்க???

 
Posted by Picasa
புதுசாய்க் குடி போன வீட்டில் முதல் சமையல் பிள்ளையார் சதுர்த்தியில் இருந்து ஆரம்பிச்சோம். பிள்ளையார் சதுர்த்தியைச் சொந்த வீட்டிலேயே முடிச்சுட்டுக் கிளம்பறாப்போல் தான் முதலில் நினைச்சோம். அப்படியே சொல்லவும் சொன்னோம். ஆனால் பிள்ளையார் என்னமோ திடீர்னு குடித்தனம் போற வீட்டிலே தான் என்னோட சதுர்த்தியைக் கொண்டாடணும்னு சொல்லிட்டார். நீங்க பூஜையிலே பார்க்கும் பிள்ளையார் பரம்பரையாக மாமனார் குடும்பத்தில் வழிபட்டு வந்த விக்ரஹம். சென்ற 2010ஆம் வருடம் டிசம்பரில் தான் எங்களிடம் வந்து சேர்ந்தார். அதுவரைக்கும் தஞ்சாவூரில் என் பெரிய மாமியாரிடம் இருந்தது. அவங்க டிசம்பரில் தான் மேலே பார்க்கும் மற்ற விக்ரஹங்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதப் பெருமாள், ரிஷபவாஹனர், வெண்ணைத்தாழி கிருஷ்ணன்,(இவருக்குத் தான் கோகுலாஷ்டமி நிவேதனம் நடந்தது. முதல்லே தண்ணீரை வீட்டுக்குள்ளே புக வைத்தவரும் இந்தக் கிருஷ்ணரே! :P) பிள்ளையார் ஆகிய விக்ரஹங்களை எங்க கிட்டே ஒப்படைச்சாங்க. அதிலிருந்து இந்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தியைச் சொந்த வீட்டிலே இவரை வைச்சு வழிபட்டுச் செய்யலாம்னு நினைச்சால், நாமொன்று நினைக்கப் பிள்ளையார் வேறொன்று நினைத்துவிட்டார். 
Posted by Picasa
படங்களை எடிட் செய்யாமலேயே போடறேன். தொழில்நுட்ப நிபுணர்கள் கண்டுக்காதீங்க. :P

ஞாயிற்றுக்கிழமை பால் காய்ச்சிச் சாப்பிட்டதும்,, சாமானை எடுக்கும் அளவுக்கு சுறுசுறுப்பு வரவில்லை. ஆனால் மழை பயமுறுத்திக்கொண்டே இருக்கவே, திங்களன்று பாக்கிங் செய்யலாம்னு ஆரம்பிச்சால், இடியும், மின்னலுமாக மழை கொட்டுவேனெனச் சொல்ல, மறுபடி சாலை மோசமானாலோ தண்ணீர் புகுந்தாலோ ஒருவாரமாவது அப்படி இப்படி நகர முடியாது. ஆகவே ட்ரக்காரரை தொலைபேசி அழைத்து அவர் வந்து பார்த்துவிட்டு வண்டியை மதியம் அனுப்பறேன்னு சொல்லிச் சாயங்காலம் வரை வரவே இல்லை. ஒரே டென்ஷன். எந்த நிமிஷமும் மழை வரலாம்னு வேறே தொலைக்காட்சியில் அறிவிப்புக்கள். கண்ணீர் மழையா, இந்த மழையா எது முந்தப் போகுதோ தெரியலைனு நினைச்சு, நேரேயே போனார்; ஒரு ட்ரக்கையும் கூட்டி வந்தார். அந்த டிரைவர் சாலையைப் பார்த்ததுமே இந்தச் சாலையா? இதிலே சாமானையும் ஏத்திட்டுப் போகணுமான்னு கேட்டுட்டு ஓட்டம் பிடித்துவிட்டார். மறுபடி தொலைபேசியில் ட்ரக்காரரைக் கூப்பிட்டால் காலை வரேன்னு சொன்னார். எங்க வீட்டில் உதவிக்கு வரும் நபரும் தானும் அழைத்துவருவதாயும் இரண்டு ட்ரக்கிலுமாக மொத்தமாய்ச் சாமான்களை ஏற்றிவிடலாமென்றும் கூறவே அப்போதைக்கு சமாதானம் ஆனோம்.

மறுநாள் காலை ட்ரக் வருவதெனில் காலை ஐந்து மணிக்கே வந்துவிடும். வீடு காலி செய்கையில் அப்படித் தான் வருவது வழக்கம். ஆனால் எட்டு மணி ஆகியும் யாருமே வரலை; மறுபடி தொலைபேசி அழைப்பு. டரக் காரர் ஆட்களைத் தயார் செய்து கூட்டிட்டு வந்து ட்ரக்கை எடுத்துப்போங்க என்று கை விரிக்க, எங்க வீட்டில் உதவிக்கு வரும் நபர் ட்ரக்காரர் லோட் ஏத்திக்கொண்டு சென்றிருப்பதாய்க் கூற குழப்பமோ குழப்பம். இதற்குள்ளாக என் தம்பி தொலைபேசி தான் மாம்பலத்திலிருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாயும் வந்ததும் சாமான்களை ஏற்றலாம் எனவும் கூறினார். அவர் வரப்போவது மாலை. மாலை நேரம் சாமான்களை ஏற்றுவதும் கடினம். மழை வந்தாலோ கேட்கவே வேண்டாம். ஆகவே மறுபடியும் வேறொருத்தர் வருகிறேன் என்று சொல்லித் தொலைபேசி எண்களைக் கொடுத்திருந்தார். அவரை அழைத்துப் பேசினோம். ஆட்களைத் தயார் செய்துவிட்டுக் கூப்பிடுவதாய்ச் சொன்ன அவர் அவ்வாறே கூப்பிட்டு வந்து கொண்டிருப்பதாய்த் தெரிவித்தார்.

ஒரு மாதிரியாக எங்க சாலைக்கும் வந்தாச்சு. இன்னும் கொஞ்ச தூரம் தான்; எங்க வீடு வந்துடும். அதற்குள்ளாக மேற்கே எங்க வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டு வாசலில் இரண்டு நாட்கள் முன்னர் தான் ஜேசிபியே இறங்கி மாட்டிக்கொண்டு ஏற்படுத்திய பள்ளத்தில் வந்த வண்டி மாட்டிக்கொள்ள, எதிரே வீடு கட்டுறவங்க கிட்டேயும், பக்கத்திலே கட்டறவங்க கிட்டேயும் மண்வெட்டி, ஆட்களை அவங்களே உதவிக்கு அழைத்துக்கொண்டு வண்டியை மெல்ல மெல்ல மேலே எடுத்தாங்க. பின்னர் வண்டி பின்னாலேயே மெதுவாகப் போய் அடுத்த தெரு வழியாக அதே மாதிரி பின்னாலேயே எங்க வீட்டு வாசலுக்கு வந்தது. இதற்குக் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பிடித்துவிட்டது. அதன் பின்னர் முடிந்தவரையிலும் எல்லா சாமான்களையும் மேலே இருந்தும் எடுத்துவிட்டோம். எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இப்போப் புதுசாப்போட்டிருக்கும் நூறடிச்சாலையின் சேவைக்கான சாலை வழியாகச் சுற்றிக்கொண்டுபோய் இந்த வீட்டில் கொண்டு சேர்த்தாங்க. அவங்களே எல்லாவற்றையும் மேலே ஏற்றியும் கீழே வைக்க வேண்டியதைக் கீழேயும் வைத்து ஒழுங்கும் செய்து கொடுத்துவிட்டாங்க.

முன்பே திட்டமிட்டிருந்தது பாக்கர்ஸ் அண்ட் மூவர்ஸைக்கூப்பிடுவதாக. ஆனால் திடீரென மாறிய திட்டத்தில் அவங்க யாருமே வரும்படியான சூழ்நிலையில் இல்லை; மிச்சம் சமையல் சாமான், பாத்திரங்கள், காஸ் அடுப்பு இன்னும் சில சூட்கேஸ்கள், பெட்டிகள், கொலு பொம்மைகள் பாக்கி. எல்லாவற்றையும் ஏற்றிச் செல்ல ஒரு சின்ன ட்ரக் இருந்தால் போதும். ஆனால் உள்ளூர் டிரக் யாருமே வரச்சம்மதிக்கவில்லை. ஆகவே ஒரு மாட்டுவண்டியைப் பேசி வரச் சொல்லிவிட்டுத் தொலைபேசி எண்ணையும், விலாசத்தையும் கொடுத்தாச்சு. அன்று எங்கள் ஆவணி அவிட்டம் வேறே. காலையிலேயே அதுக்குப் போனார். அதுக்குள்ளே தம்பியும் வந்தாச்சு. கூடவே தம்பி மனைவி, தம்பி பிள்ளை போன்றோரும் வந்தாங்க. எல்லாருமாச் சேர்ந்து பாத்திரங்களைச் சாக்கு, உரப்பைகள் போன்றவற்றில் போட்டுக் கட்டிவிட்டு, மளிகைச்சாமான்களை பெரிய ப்ளாஸ்டிக் டப், வாளி போன்றவற்றில் கொட்டாமல் வைத்துத் தயார் செய்தோம். பெரிய தண்ணீர் ட்ரம்மிலும் இவ்வாறே சாமான்கள் வைக்கப்பட்டுத் தயார் செய்தோம். மதியம் பனிரண்டு மணியிலிருந்து மாட்டுவண்டிக்காரருக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு விடுத்தும், இதோ வரேன், அதோ வரேன்னு சொல்லிட்டு இரண்டரை மணி வரை வரவே இல்லை. தொலைபேசியையும் ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைச்சுட்டார்.

அப்போத் தான் முதல் நாள் கணினியை டிஸ்கனெக்ட் பண்ணி ஆட்டோவில் எடுத்துப் போனது நினைவில் வர, அந்த ஆட்டோக்காரரைக் கூப்பிட்டோம். அவர் வருவதாகவும், ஆனால் சாலை மோசமான நிலையில் இருப்பதால் ஒரே டிரிப் தான் அடிப்பேன் என்றும், அதில் எவ்வளவு முடியுமோ சாமான்களை வைக்கலாம் எனவும் கூறினார். அவரை வரச் சொல்லிவிட்டு குடும்ப ஆட்டோக்காரரான இன்னொருவரைக் கூப்பிட்டோம். அவர் உடனே வர அவர் வண்டியில் முடிந்த சாமான்களை முக்கியமானதாக, சமையலுக்குத் தேவையானவற்றை ஏற்றிவிட்டு நானும் ஏறிக்கொண்டேன். அவர் எல்லாவற்றையும் தானே கொண்டு சேர்ப்பதாகவும் ஒப்புக்கொண்டார். சாமான்கள் ஒருவழியாக வந்து சேர்ந்தன. அது வரைக்கும் கொல்லைக்கிணற்றடியில் போட்டிருந்த அம்மியை எடுக்க வேண்டாம் என எல்லாரிடமும் சொல்லிவிட்டு வந்தேன். யாரும் நேற்று வரை எடுக்கவில்லை. நேற்றுத்தான் கொலு பொம்மைகளைக்கொண்டு வர சென்றிருந்தபோது அம்மிக்குழவியை உள்ளே எடுத்து வந்தேன். பெரிய பொம்மைகள் எல்லாம் தண்ணீர் போய் வீணாகிவிட்டன. அதோடு வடாம் வைத்திருந்த டப்பாவிலும் தண்ணீர் எப்படினே புரியலை; :( போய்விட்டது. வடாமும் வீணாகிவிட்டது. பாத்திரப்பெட்டியில் தண்ணீர். பாத்திரங்களை வெளியே எடுத்துத் தண்ணீரைத் துடைத்துக் காய வைத்துப் பாத்திரங்களைத் திரும்ப வைத்தோம்.

மறுநாள் பிள்ளையார் சதுர்த்தி; எப்படிச் செய்யப் போகிறோம் என மலைப்பாகவே இருந்தது. முதல் நாள் இந்த வீட்டுக்கு வந்துதான் நிவேதனத்திற்காக இட்லிக்கு அரைத்தேன். அதன் பின்னர் மறுநாள் கொழுக்கட்டை, அதிரசம், வடை, பாயசம், அன்னம், பருப்பு போன்றவை செய்து நிவேதனம் செய்தோம். பூஜைக்குக் கல்பத்ரயம் எடுத்து வரேன்னு வீட்டுக்குப் போனவர் கல்பத்ரயத்திற்குப் பதிலாக சுந்தர காண்டத்தை எடுத்து வந்துவிட்டார். பிள்ளையார் கிட்டே, "நீ தானே இங்கே வரணும்னு அடம் பிடிச்சு வந்திருக்கே; இந்த வருஷம் இதான் உனக்கு!" னு சொல்லியாச்சு. அதனால் என்னனு ஜம்ம்னு குளிச்சுப் புதுவேஷ்டி கட்டிண்டு எல்லா நிவேதனங்களையும் வாங்கிக்கொண்டார். நல்லவேளையாகக் கற்பூரம் போன்றவை இங்கே எடுத்து வந்திருந்தோம். பிள்ளையார் நல்லா இருக்கார் இல்லை??

நாங்க இருக்கும் பகுதி மாடியில் இருக்கிறது. படிகளோ எல்லோராக் குகைகளுக்குப் போகிறமாதிரி உயரம்! ஆகவே சாமான்களை நாங்களே எடுத்து வருகையில் கீழே கயிற்றைக்கட்டி மேலே அவர் அனுப்ப, மேலே நான் போய் நின்றுகொண்டு இழுத்து எடுத்துக்கொள்கிறேன். தூக்கிக்கொண்டு ஏறுவது கொஞ்சம் இல்லை; நிறையவே சிரமம். :( ஆனால் சுற்றி இருக்கும் மரங்கள் உற்சாகம் கொடுக்கின்றன. மாடி வராந்தாவில் உட்கார்ந்தால் அருகே மரக்கிளைகளில் விளையாடும் அணில்கள், தவிட்டுக்குருவிகள், மைனாக்கள், தேன்சிட்டுக்கள், விதவிதமான பட்டாம்பூச்சிகள் என நேரம் போவது தெரியவில்லை. அங்கே இருந்து யாருடனாவது தொலைபேசினால் அவங்க இந்தச் சப்தத்தைக்கேட்டுவிட்டு என்ன இதுனு அதிசயிக்கின்றனர். எங்க பொண்ணுக்கும் இந்தச் சப்தங்கள் கேட்டு ஜாலியா இருக்கேனு சொன்னா. என்ன? தொலைபேசி இணைப்புக்கொடுக்கப் பத்து நாட்கள் ஆகிவிட்டன. ஆயிரம் அன்னா ஹசாரே வந்தாலும் இதிலே எதுவும் மாறப்போவதில்லை. நேற்று வரையிலும் இணைப்புக்கொடுக்கவில்லை. இன்றுதான் சற்றுமுன்னர் தொலைபேசி இணைப்பும், இணைய இணைப்பும் வந்தது.

காலை தினசரியிலிருந்து எல்லாமும் கீழே இருந்து கயிறுகட்டி இழுத்து மேலே கொண்டு வருவதும் ஒரு தனி அநுபவம் தான். கொஞ்ச நாட்கள் அதையும் அநுபவித்துவிட்டுப் போகலாம். என்ன சொல்றீங்க??? :)))))))