எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 21, 2017

நவராத்திரி ஆரம்பிச்சாச்சு! முதல் நாள்!

இந்த வருஷம் நவராத்திரி கொலு வைக்க முடியாது. இன்று ஆரம்பிக்கும் நவராத்திரி அடுத்த வெள்ளியன்று சரஸ்வதி பூஜை, சனியன்று விஜயதசமியோடு முடிகிறது. சுண்டல் எல்லாம் பண்ண முடியாது என்பதால் நோ சுண்டல் படங்கள்! கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கு! என்றாலும் வேறு வழியில்லை. போன வருஷத்துப் பதிவுகளையே மீள் பதிவாகப் போட்டு வரப் போகிறேன். இன்று முதல்நாளைக்கான பதிவு.

நவராத்திரி முதல்  மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாக நினைத்து வழிபட வேண்டும். துர்கதியிலிருந்து நம்மை நற்கதிக்கு மாற்றும் வல்லமை கொண்டவள் துர்கை! இன்றைய தினம் 2 வயதுப் பெண் குழந்தையை பாலையாக நினைத்து வழிபட வேண்டும்.

பாலாம்பிகா க்கான பட முடிவு

பாலாம்பிகா க்கான பட முடிவு

ஒரு சிலர் குமாரியாகவும் வழிபடுவார்கள். இன்றைய தேவி சைலபுத்ரி ஆவாள். இவள் தான் மலைமகள் என அழைக்கப்படும் பார்வதி தேவி ஆவாள். பவானி, பர்வத குமாரி என்றெல்லாம் அழைக்கப்படுபவள் இவளே. வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி ஈசன் ஆடிய ஆனந்த தாண்டவத்தின் ரிஷிமண்டலத்தில் தோன்றியவள் இவள்.

சைலபுத்ரி க்கான பட முடிவு

சைலபுத்ரி க்கான பட முடிவு


நவராத்திரி முதல்நாளன்று அரிசி மாவினால் பொட்டுக் கோலம் போடவேண்டும். வில்வ மலர்கள் விசேஷம் என்றாலும் மல்லிகை, சிவப்பு அரளி போன்றவையும் உகந்ததே! இன்று காலை வழிபாட்டின்போது வெண்பொங்கல் நிவேதனம் செய்யலாம். மாலை பாசிப்பயறுச் சுண்டல் இனிப்பு, காரம் இரண்டும் செய்யலாம். அல்லது வெண் மொச்சைச் சுண்டல் செய்யலாம்.

வெண் பொங்கலுக்கு ஒரு கிண்ணம் பச்சரிசியும், கால் கிண்ணம் பாசிப்பருப்பையும் நன்கு வாசனை வர வறுக்கவும். குக்கரில் வைப்பதென்றால் களைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று கிண்ணம் நீர் ஊற்றிக் குழைய வேக வைக்கவும். நேரடியாகக் கிளறுவதானால் உருளி அல்லது வெண்கலப்பானை என்றால் நல்லது. முதலில் கொஞ்சம் நெய்யும், பாலுமாகச் சேர்த்துக் கொண்டு பால் 200 கிராம் தாராளமாக எடுத்துக்கலாம். அதில் பாசிப்பருப்பைக் களைந்து போட்டு வேக வைத்துக் கொண்டு பின்னர் பாசிப்பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அரிசியைக் களைந்து போட்டு தேவையான நீர், மற்றும் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கிளறவேண்டும். அரிசியும் பருப்பும் குழைந்து வந்ததும், பக்கத்தில் ஓர் வாணலியில் அரைக்கிண்ணம் நெய்யைக் காய வைத்து அதில் மிளகு, ஜீரகம் முழுதாகப் போட்டுக் கருகப்பிலை, இஞ்சி, மஞ்சள் தூள் (தேவையானால்) சேர்க்கவும். பின் அந்த நெய்யோடு பொங்கலில் கொட்டி, தேவையான உப்புச் சேர்த்துக் கிளறவும். நெய் தேவையானால் பார்த்துக் கொண்டு விடவும். இம்முறையில் வெண்பொங்கல் நல்ல மணமாக இருக்கும். வெண்பொங்கலுக்குப் பாலா என்பவர்கள் ஒரு முறை விட்டுத் தான் பாருங்களேன். அப்புறமாப் பால் விட்டே வெண்பொங்கல் செய்வீர்கள். முந்திரிப்பருப்பு தேவையானால் போடலாம்.

குக்கரில் என்றால் நன்கு குழைய வெந்ததும் வெளியே எடுத்துக் கடாயில் நெய்யையும் பாலையும் சேர்த்து ஊற்றிக் கொண்டு குழைந்த பொங்கலை அதில் சேர்த்து உப்புப் போட்டுக் கிளறவும். இன்னொரு கடாயில் கொஞ்சமாக நெய்யை ஊற்றிக் கொண்டு முந்திரிப்பருப்புச் சேர்த்தால் முதலில் அதை வறுத்து எடுத்துக் கொண்டு பின்னர் மேலே சொன்னமாதிரி மிளகு, ஜீரகம், கருகப்பிலை, இஞ்சி சேர்த்துக் கொள்ளவும். தாளிதத்தைப் பொங்கலில் சேர்க்கவும். குக்கரில் பொங்கல் செய்தால் நெய்யோ, பாலோ கூடச் சேர்க்க வேண்டி வரும். கொஞ்சம் காய்ந்தாற்போல் பொங்கல் இருக்கும். வறண்டு இருக்கும். ஆகையால் நெய்யும், பாலும் நிறையச் சேர்த்தால் தளதளவென்று வரும்.

மொச்சையை முதல் நாளே ஊறப் போடவும். மறுநாள் மாலை அதை நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும். தாளிக்கக் கடுகு, மிவத்தல், பெருங்காயம், கருகப்பிலை, தேங்காய்த் துருவல் ஆகியவை தேவை.
வேக வைத்த மொச்சையை நீரை வடித்துக் கொண்டு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்துக் கொள்ளவும், மி.வத்தல் ஒன்றிரண்டு போட்டுக் கொண்டு, கருகப்பிலை சேர்த்து வேக வைத்த மொச்சையைப் போட்டு வதக்கவும். பெருங்காயப் பவுடர் எனில் அதை எண்ணெயிலேயே போடலாம். பெருங்காயம் கட்டி எனில் நீரில் ஊற வைத்துக் கொண்டு ஜலத்தை வதக்கும்போது சேர்த்துக் கொண்டு தேங்காய்த் துருவலும் சேர்த்துக் கிளறவும். இதற்கு மி,வத்தல், கொத்துமல்லி விதையை வறுத்துப் பெருங்காயத்தோடு சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொண்டும் போடலாம் ஆனால் ஒரு நாள் பண்ணியது மீதம் இருந்தால் மறுநாள் சுண்டலுக்கான நிவேதனத்தில் ஏற்கெனவே சாப்பிட்டதில் மீதத்தைப் பயன்படுத்த முடியாது. ஆகையால் நான் மி.வத்தலே போட்டு விடுவேன். அவரவர் வசதிப்படி செய்து கொள்ளவும்.'

நவராத்திரிக்கான பதிவே இல்லாமல் இருக்க வேண்டாம் என்று திடீரெனத் தோன்றிய எண்ணத்தினால் இந்தப் பதிவு கொஞ்சம் தாமதமாக வருது. நாளைய தினத்துக்கான பதிவு இன்று மாலையே வரும்.

Tuesday, September 19, 2017

ரயில் பயணங்களில்!

ரயில் க்கான பட முடிவு

ரயில் பயணங்களில் மூன்று படுக்கைகள் கொண்ட பெட்டியில் பயணம் எல்லோருமே செய்திருப்போம். அப்போ நமக்குக் கீழ்ப்படுக்கை (லோயர் பர்த்) கிடைச்சிருக்கேனு சந்தோஷப்பட்டாலும் நடுவில் உள்ளவர் பல சமயங்களிலும் சீக்கிரம் படுக்கணும்னு அவரோட படுக்கையைப் போடச் சொல்லிப் போட்டுக் கொண்டு படுத்துடுவார். நமக்கு உட்கார்ந்து பார்த்துக் கொண்டு வரணும்னு ஆசை இருந்தாலும் உட்கார முடியாது! முதுகை வளைத்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டு ஒரு மாதிரி தலை குனிந்தாசனா நிலையில் அமர்ந்தே வரணும். இல்லைனா வேறே வழியில்லாமல் நாமளும் படுத்துடணும்! ஆனால் இப்போ அரசுச் சுற்றறிக்கை மூலம் இதுக்கு முன்னாடி இரவு ஒன்பது மணிக்கு அவரவர் படுக்கை இருக்கைக்குப் போய்ப் படுக்கலாம் என்று இருந்தது இப்போது பத்து மணி ஆக்கி இருக்காங்க. இதனால் நன்மையும் உண்டு! தீமையும் உண்டு. அதோடு இல்லாமல் காலை ஆறு மணிக்கு மேல் யாரும் படுக்கக் கூடாது என்றும் சொல்கின்றனர். எட்டு மணி வரைக்கும் கீழே இறங்காதவங்களை என்ன செய்யறது?

கீழ்ப்படுக்கையில் இருப்பவருக்குப் படுக்கணும்னு தோணிப் படுக்க நினைக்கலாம். ஆனால் அவர் படுக்க முடியாது! இன்னும் இருவர் உட்கார இடம் கொடுக்கணுமே! இந்தப் படுக்கை வசதி வருவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர்,  முன்னெல்லாம் நான்கு பேர் உட்கார முன்பதிவு செய்கையில் ஓரத்தில் உள்ள இடத்தில் அமர்பவர் மேலே உள்ள படுக்கை  இருக்கையை முன்பதிவு செய்திருப்பார். அவர் மேலே படுக்கப் போனதும் கீழே காலி ஆகும் அந்த இருக்கையை அப்போதைய காத்திருப்புப் பட்டியலின் வரிசைப்படி யாருக்கானும் கொடுப்பாங்க! ஆக அமர்ந்திருக்கும் மற்ற மூவரும் படுக்க முடியாது. உட்கார்ந்து கொண்டே தான் வரணும். அது மாறி இப்போப் படுக்கை இருக்கை வசதி என்பது அனைவருக்கும் என்று வந்ததும் இரவு ஒன்பது மணிக்குப் படுக்கப் போகலாம் என்றிருந்தது இப்போ இரவு பத்து மணி ஆகி இருக்கிறது. நீண்ட தூரப் பிரயாணம் எனில் மத்தியானங்களில் கூடப் படுக்கை இருக்கையைப் போட்டுக் கொண்டு படுப்பவர்கள் பாடு என்ன ஆகும்? தெரியலை! மேல் படுக்கையைப் பதிவு செய்திருப்பவருக்கு மட்டும் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் பாட்டுக்கு எப்போ வேணா மேலே போய்ப் படுக்கலாம். கீழே இறங்கி வரலாம். கீழ்ப்படுக்கைக்காரருக்கும், நடுப் படுக்கைக்காரருக்கும் தான் பிரச்னையே! கீழே உள்ளவர் படுக்கணும்னு நினைச்சால் படுக்க முடியாது! நடுவில் உள்ளவர் தன் படுக்கையைப் போட நினைச்சாப்போட முடியாது!

ரயில் க்கான பட முடிவு

ஆனால் அந்த அளவுக்கெல்லாம் இந்தச் சட்டத்தைப் பின்பற்றுபவர்கள் உண்டானு தெரியலை! ஒரு முறை நாங்க ராஜஸ்தானிலிருந்து குஜராத் மாற்றலில் போகும்போது முதல் வகுப்பு எங்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடத்தில் போட்டிருந்தது. அதில் ஒருத்தர் முழுக்க முழுக்கத் தன்னோட பெர்த்தில் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தார். அதில் நானோ அல்லது எங்கள் பெண்ணோ அமரவேண்டும். எதிர் இருக்கைக்காரர் எழுந்து ஒருத்தருக்கு இடம் கொடுத்து விட்டார். இன்னொருத்தருக்கு இடம் கொடுக்காமல் படுத்திருந்தவர் அசையவே இல்லை! மணி காலை பத்தரை தான்! ஆனால் அவரோ இது என்னோட பெர்த்! இதுக்கும் சேர்த்துத் தான் நான் பணம் கட்டி இருக்கேன் என்று அவரோட வாதம்! அப்போ நாங்க என்ன செய்யறது? நீ எதிர்த்தாப்போல் இருக்கும் இடத்தில் உட்காரு! இல்லைனா எங்கேயானும் இடம் இருக்கானு போய்ப் பாரு! கொஞ்சமும் ஈரமில்லாமல் வந்தன வார்த்தைகள். அப்புறமா டிடிஆரைக் கூப்பிட்டோம். அவர் விஷயம் தெரிந்து கொண்டு தன்னுடன் கொண்டு வந்திருந்த ரயில்வே கைடில் உள்ள நிபந்தனைகளை அவருக்குப் படித்துக் காட்டிப் பகல் நேரத்தில் அதிலே மூவர் உட்காரலாம் என்றும் இரவில் இருவர் படுக்கலாம் என்றும் இருப்பதை எடுத்துக் காட்டி இப்போ எழுந்திருக்கலைனா அபராதம் போடுவேன் என நாசுக்காகச் சுட்டிக் காட்டினதும் எழுந்தார். எனக்கு இடம் கொடுத்தார். அப்படியும் சாமான்களை வைக்க விடவில்லை. நட்ட நடுவில் சாமான்களை வைத்து விட்டு உட்கார்ந்தேன்.

எல்லோரும் இப்போச் சொல்லி இருப்பது ஏற்கெனவே இருந்த சட்டம்தான் இப்போது ஒரு மணி நேரம் தான் பின்னுக்குத் தள்ளி இருக்காங்க என்கிறார்கள். என்றாலும் நம் மக்களை நினைத்தால் கவலையாகத் தான் இருக்கு! காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பாங்களா என்பதும் சந்தேகம். நமக்கு அந்த ஜந்தேகம் எல்லாம் இல்லை. நாலு மணிக்கே விபரீதத்துக்கு முழிப்பு வந்துடும். கோணாசனத்தில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கும் ரகம்! இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் பயணம் எனில் இது எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதும் போகப் போகத் தான் தெரியும். எங்களுக்கு சமீப காலங்களில் ரயில் பயணம் என்பது குறைந்து விட்டது. பெரும்பாலும் விமானப்பயணமோ அல்லது காரிலோ போயிடறோம். எல்லா நேரமும் அப்படிப் போக முடியாதே!  நெடுந்தூர ரயில் பயணம் எனில் எப்படினு இனிமேத் தான் பார்க்கணும்!  என்ன தொந்திரவு இருந்தாலும் ரயில் பயணத்தின் சுகம் மற்றப் பயணங்களில் வருமா!

படங்களுக்கு நன்றி கூகிளார்

Sunday, September 17, 2017

காவிரியில் தண்ணீர்! அதிசயம்! :)

என்னடா, நாம தான் எல்லோருடைய பின்னூட்டங்களையும் வெளியிட்டுத் தானே வரோம்னு நினைச்சால், அப்பாதுரை, அவர்கள் உண்மைகள், பானுமதி வெங்கடேஸ்வரன் இன்னும் சிலர் அவ்வப்போது எங்களோட கருத்து எங்கேனு கேட்டுட்டு இருந்தாங்க! காக்காவும் வரதில்லை! அப்புறமா எங்கே போயிருக்கும்? நான் எப்போதுமே பின்னூட்டங்களை  மெயில் மூலமாகவே வெளியிடுகிறேன். பதிவின் பின்னூட்டப் பக்கத்துக்குப் போவதில்லை! இன்னிக்குப் பாருங்க ஶ்ரீராம் கொடுத்திருந்த இம்பொசிஷனிலே ஒண்ணு எங்கேயோ போய் ஒளிஞ்சுக்க அதைத் தேடப் போய் எதையோ தட்டிக் குலுக்கவந்தது பாருங்க கமென்ட் மழை! அசந்துட்டேன்! எல்லாத்தையும் வெளியிட்டாச்சு! இனிமே யாரானும் கமென்ட் காணோம்னா நான் பொறுப்பில்லை! ஏன்னா இப்போ என்ன பண்ணினேன்னு கேட்டா எனக்கே சொல்லத் தெரியாது! தினம் தினம் கமென்ட் மாடரேஷன் பக்கத்திலும், ஸ்பாமிலும் தேடினப்போ வராதது இன்னிக்கு எங்கேருந்தோ வந்து குதிச்சிருக்குங்க! அதனால் திரும்பக் கமென்ட் காணோம்னா இந்த மாதிரி ஏதேனும் நடந்தால் தான்! :)

இங்கே காவேரி புஷ்கரம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டமான கூட்டம். நடைபாதைக்கடைகள் சுறுசுறுவென இயங்குகின்றன. மற்ற கடைகளுக்கும் நல்ல வியாபாரம். காய்கள் விலை கொஞ்சம் அதிகம் தான். அதிலும் கோயம்பேடு சந்தையில் காய்கள் விலை மலிவென்று பார்த்தப்போ இங்கே விலை அதிகம் எனக் கோபம் வருது! அவ்வளவு வித்தியாசம் இல்லை. என்றாலும் விலை அதிகம் தான்! சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய் விக்குது! உருளைக்கிழங்கு விலை 25 ரூபாய். சென்னையில் மலிவாக இருக்கும்னு நினைக்கிறேன். எல்லோரும் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க பலத்த எதிர்ப்புக்கு இடையேயும் காவிரியில் தண்ணீர் பத்தாயிரம் கன அடி விட்டு அது வியாழனன்று வந்து சேர்ந்தது. அன்னிக்குத் தான் நம்ம வீட்டுக்கு விருந்தினர்களும் வந்திருந்தாங்க. அவங்கல்லாம் வெள்ளியன்று கிளம்பிப் போனாலும் உடனே படம் எடுத்துப் போட முடியலை. காமிராவில் எடுக்கணும்னு இருந்தேன். காமிரா என்னவோ திறக்கவே இல்லை. அப்புறமா நேத்திக்கு விடாப்பிடியா சோனி சேவை மையம் போய் அதைச் சரி பண்ணிண்டு வந்தாச்சு! ரிப்பேர் செலவுக்குக் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது எடுத்து வைக்கணும்னு முனகிண்டே வந்த ரங்க்ஸுக்கு ஒரு பைசா செலவில்லை! ஆனால் ஆட்டோவுக்குக் கொடுக்கும்படி ஆயிடுச்சு! :)

இன்னிக்குக் காலம்பரப் போய்ப் படம் எடுத்தேன். முதல்லே திறக்கலை! அப்புறமாத் திறந்து எடுத்தேன்.  டிஸ்ப்ளே சரியில்லையோனு ஒரு எண்ணம். ஆனால் நேத்திக்குக் காமிராவைப் பார்த்த நபர் எல்லாம் சரியா இருக்குனு சொல்லிட்டார்.  காமிராவில் தேதி, நேரம் இந்திய நேரப்படி வைக்கச் சொன்னா, அவர் அதைச் சரி செய்யவே இல்லை. இன்னிக்குக் காலம்பரப் படம் எடுத்திருக்கேன். அது யு.எஸ். நேரம் காட்டுது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)


இது ஒரு கோணம்


இன்னொரு கோணம்உ.பி.கோயில். ஜூம் செய்ய நினைச்சு மறந்து விட்டேன். தெற்கு கோபுரம்! இதுவும் ஜூம் செய்யாமல் எடுத்தது தான்! அப்போப் பார்த்துப் பேச்சுக்கு ஒருத்தர் வந்துட்டாங்க! நொ.கு.ச.சா. வேறே என்ன!எல்லாத்தையும் எடுத்துட்டு நம்ம ராமரை எடுக்காமல் முடியுமா? விளக்கை அணைச்சால் படம் தெரியலை. விளக்கைப் போட்டால் இம்மாதிரிப் பிரதிபலிப்பு வலப்பக்கம் அல்லது இடப்பக்கம்! :( இரண்டு விளக்கையும் போட்டால் படம் சரியா வரலை!


கீழ்த்தட்டு விக்ரஹங்கள்! 

அஹோபில மடம் ஜீயர் வந்திருக்கிறார். அவர் தலைமையில் யாகங்கள், யக்ஞங்கள் நடைபெறுகின்றன. அவருடன் கூட ஆந்திர மக்களும் நிறைய வந்திருக்காங்க! அதைத் தவிரவும் சாரி சாரியாக மக்கள் கூட்டம். போதாதுக்குப் போன வாரம் தான் இங்கே உறியடி உற்சவம் நடந்தது. அதுக்கு வேறே கூட்டம்!  முடிஞ்சா மக்கள் கூட்டத்தையும் படம் எடுக்கணும்! பார்ப்போம்! 

Saturday, September 16, 2017

மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர்கள்!

ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது  புதுசு இல்லை. எனக்கு முக்கியமாய் எங்க ரெண்டு பேருக்கும் இப்படி நிறைய நடந்திருக்கு! நடந்தும் வருகிறது! இணையத்திலும் நடக்கிறது! :) எல்லா இடத்திலும் ஒரே மனிதர்கள் தானே! ஒரு சிலர் அவங்களுக்கு வேலை ஆகும் வரை நம்மிடம் இழைவார்கள். அவங்க வேலை முடிஞ்சப்புறம் சாம்பார், ரசத்திலிருந்து கருகப்பிலையைத் தூர எறிகிறாப்போல் எறிந்து விடுவாங்க. சமீபத்தில் கூட அப்படி ஒரு சம்பவம்! வேலை முடிஞ்சு திரும்பினதும் தொடர்பு கொண்டு நல்லபடியாப் போய்ச் சேர்ந்தோம்னு கூடத் தெரிவிக்கவில்லை.

இதிலே இன்னும் சிலர் பெரிய மனுஷங்க எல்லோரையும் தங்களுக்குத் தெரிஞ்சதாக் காட்டிப்பாங்க. அதிலும் இரண்டு, மூன்று பெண்கள் இருந்துவிட்டால் அவங்களுக்கு நேரே தங்களைப் பெரிய ஆளாய்க் காட்டிப்பதில் எல்லா ஆண்களும் அது வயசு எத்தனையாக இருந்தாலும் குறைவில்லா ஆசை!

நாம் பாட்டுக்கு ஏதானும் பக்கத்தில் உள்ள பெண்மணியிடம் பேசிக் கொண்டிருப்போம்.

நீங்க நல்லாப் பாடறீங்க! இன்னொரு பாட்டுப் பாடுங்களேன்!

இப்போ நடுவில் அவர் உட்புகுந்துப்பார்! "அவங்க அம்மாவுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்ததே எனக்கு ரொம்பவும் தெரிஞ்ச அந்தப் பிரபலப் பாடகர் தான்!"

அவர் சொன்னதைச் சிறிதும் கவனிக்கலைனாலும் விடுவாரா! நம்மோடு பேசிண்டு இருப்பவர் அவருக்குத் தெரிந்தவர் தானே! ஆகையால் அவங்களைப் பார்த்து ஆரம்பிப்பார்!

"அன்னிக்கு நான் அந்தப் பாடகர்(பிரபலமான யாரோ ஒருத்தர்) வீட்டுக்குப் போயிருந்தப்போ எப்படிக் கவனிச்சான் தெரியுமா? மாமா, நீங்க இருங்கோ, இன்னிக்குக் கச்சேரியிலே என்ன பாடணும்னு உங்களை வைச்சுண்டு தான் முடிவு பண்ணணும்! னுட்டான்! என்ன செய்யறது! இருந்து சொல்லிக் கொடுத்துட்டு வந்தேன்!"

நாம அறுவை தாங்க முடியாமல் இந்த நவோதயா பள்ளிகள் வந்தால் எவ்வளவு சௌகரியம்னு ஆரம்பிப்போம்.

"ஹூம், என்ன சொல்றீங்க! எடுகேஷன் டிபார்ட்மென்டிலே (Education Department, அவர் அந்தக் காலத்து ஆள் இல்லையா, அதனால் எடுகேஷன் அப்படின்னே சொல்லுவார்) என்னோட கூடப் படிச்சவனோட பிள்ளை தான் செக்ரடரி! அவன் கிட்டே என்னடா தமிழ்நாடு நிலைமை இப்படி இருக்கேனு கேட்டேன்! "பார்க்கலாம் மாமா!"ங்கறான்!" அப்படிம்பார்.

சரினு நாம அவர் கிட்டே யாருக்கானும் பள்ளியிலே சேர்க்க விண்ணப்பம் கேட்டு வேண்டுகோள் விடுத்துப் பார்த்தோமானால் உண்மை நிலவரம் புரியும்! ஆனால் போயிட்டுப் போறது பெரியவர்னு நாம விட்டுடுவோம். அப்படியும் விடாமல் எங்க உறவினரில் ஒருத்தர், "மாமா! உங்களுக்குத் தான் இவ்வளவு பேரைத் தெரிஞ்சிருக்கே! என் பிள்ளைக்கு நல்ல இஞ்சினியரிங் காலேஜிலே உங்களோட பிரபலமான நண்பரோட கோட்டாவிலே இடம் வாங்கித் தாங்கோளேன்!" என்று கேட்டு விட்டார். மனிதர் அதற்குப் பின்னர் சில மாதங்கள் வாயையும் திறக்கவில்லை. வெளியேயும் வரல்லை! ஆனாலும் விட்டாரா! மறுபடியும் யார் வீட்டுக்கோ போயிருக்கும்போது  , இவரே யாரோ சொல்லித் தான் சொந்த வேலையாக அங்கே போயிருந்தார். அந்த வீட்டின் கணவன், மனைவியை முதல் முறையாப் பார்க்கிறார்.

போய்க் காஃபி எல்லாம் சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் ஆனதும், நம்ம ஆளோட மனைவிக்குக்   குளியலறைக் குழாயைத் திறக்க வரலை என்பதால் அந்த வீட்டுப் பெண்மணி உதவிக்குப் போயிருந்தார்! எந்தக் குழாயை எப்படித் திறக்கணும்னு சொல்லிட்டு வந்தார். அப்போ சும்மா இருக்கக் கூடாதா! என்னோட ஃப்ளாட்டிலே நான் இந்த மாதிரிக் குழாய் தான் வேணும்னு சொல்லிட்டேன்! பில்டர் அதெல்லாம் மாட்டேன்னான்! நான் என் செலவிலே போட்டுக்கறேன்னு  போட்டிருக்கேனாக்கும்!" என்பார். அப்போ ஏன் குழாயைத் திறக்க முடியாமல் தவிச்சார்னு வீட்டுக்காரங்க ரெண்டு பேருக்கும் மண்டை உடையும். இவர் இன்னொரு குளியலறைக்குப் போவார்! போன சில நிமிடங்களிலேயே வெளியே வந்து முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு, "மாமி, இங்கே வாங்கோ! ஒரு விஷயம் காட்டணும்!" என்பார்.

வீட்டு அம்மாவுக்குக் குளியலறையைக் காலம்பரத் தானே நல்லா சுத்தம் செய்தோம். இப்போ என்ன ஆச்சு? ஏதேனும் தப்பா ஆயிடுத்தா? ஃப்ளஷ் வேலை செய்யலையா? அப்போச் சொல்லலாமே! அல்லது ஃப்ளஷ் பண்ணியும் போகாமல் தேங்கிட்டு இருக்கோனு எல்லாம் கவலை வரும்! குழாய் ஏதேனும் லீக் ஆகுதோனு கூட நினைப்பாங்க! அதுக்குள்ளே வீட்டுக்காரர் ஏதேனும் வேலையில் இருப்பவர், "என்ன விஷயம்?" அப்படினு கேட்பார்! "நீங்க இருங்கோ சார்! மாமி வரட்டும்! மாமி என்ன பயமா இருக்கா? என்று கேட்பார். வேறே வழியே இல்லைனு அந்த அம்மா போவார். குளியலறைக் குழாயைக் காட்டி, "எல்லாக் குழாயும் நல்லாத் தேய்ச்ச மாதிரி இதையும் தேய்க்கக் கூடாதா?  இந்தத் தண்ணீரிலும் உப்பு இருக்கு போல! மற்றக் குளியலறைக் குழாயைத் தேய்ச்ச அளவுக்கு இதை நீங்க தேய்க்கலை!( நல்லா இந்தக் கெமிக்கல் அல்லது ஏதேனும் அவருக்குத் தெரிந்த ஒன்று) அதைப் போட்டு  இன்னும் நல்லாத் தேய்க்கணும்! ஸ்டீல் உல் வைச்சுத் தேய்க்கக் கூடாது! ஸ்பாஞ்ச் வைச்சுத் தேய்க்கணும்! நேரம் இருந்தா இப்போவே தேய்ச்சுடுங்க!" என்பார்!

தலையில் அடிச்சுக்காத குறையா அந்த அம்மா வெளியே வருவார். இதை ஏன் அவர் ரகசியமாக் கூப்பிட்டுச் சொல்லணும்! எல்லோர் முன்னிலையிலும் தாராளமாச் சொல்லி இருக்கலாமே! இந்தக் குழாய் சரியாத் தேய்க்கலை என்பது என்ன பெரிய ரகசியமா? அடிக்கடி தண்ணீர் படும் குழாய்கள் என்ன தேய்ச்சாலும் கொஞ்சம் புள்ளிகள் விழத்தான் செய்கின்றன. சென்னைத் தண்ணீருக்கு இங்கே தண்ணீர் எவ்வளவோ நல்லா இருக்கும்! அதோடு அவங்க வீட்டுக் குழாயை எப்படிப் பராமரிக்கணும் என்பதெல்லாம் அவங்களுக்குத் தெரியாதா?  இதற்காக ஏதோ அவங்க மாபெரும் தப்புப் பண்ணிட்டாப்போல் பில்ட் அப்பெல்லாம் கொடுத்துச் சொல்லணும்னு தேவையே இல்லை! சொல்லும்போதும் ரகசியமாச் சொல்லலை! ஏதோ பள்ளியில் பாடம் எடுக்கும் தோரணையில் தான் சொன்னார்! வீட்டுச் சொந்தக்காரர் கேட்டப்போ அவர் கிட்டே சொல்லலாமே! எல்லாத்தையும் விட்டுட்டு ஏதோ ரொம்பவே ரகசியமான முக்கியமான விஷயம் போல் அந்த அம்மாவைக் கூப்பிட்டு! அவங்க ரொம்பவே பயந்துட்டாங்க! :)

அதோடு இல்லாமல், "என்னை அவன் யு.எஸ்ஸுக்குக் கூப்பிட்டான்! இவன் லண்டனுக்குக் கூப்பிட்டான்! நான் வரலைனு சொல்லிட்டேன். ஐ ஹேட் தட் கல்சர்!" என்றெல்லாம் சொல்லுவார். பிரபல பாடகர்களிலிருந்து, பக்க வாத்தியக்காரர்கள் வரை அவர் தெரியும்னு சொல்லிப்பார். ஆனால் ஏதேனும் கச்சேரிக்கு அவர்ட்ட டிக்கெட்டுக்குப் போனால் ஆள் அம்பேல்! அதே போல் அரசியல்வாதிகள், பெரிய பெரிய தொழிலதிபர்கள் எல்லோரையும் ஒருமையில் சுட்டிக் காட்டுவார். நாம் ஏதேனும் காரியம் ஆகணும்னு கேட்டால் தலையே காட்டமாட்டார்! இவரைக் குறித்த இந்த விஷயங்கள் பலருக்கும் தெரிந்திருந்தாலும் வயசானவர், பெரியவர் என்பதால் யாரும் வெளியே காட்டிக்கிறதில்லை! :)

இப்படியும் மனிதர்கள்!Wednesday, September 13, 2017

மோடம், ஏசி, குழாய், காவிரி மற்றும் நீட்!

பதிவுகளை ஜி+இல் இணைத்தாலும் அதைக் காட்டுவதில்லை. சமீப காலமாக அப்படி நேர்கிறது. அதோடு என்னோட அன்ட்ராய்ட் ஃபோனில் திடீரென ஃபேஸ்புக் பதிவுகளுக்கு பதிலளிக்க ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் என மூன்று விருப்பத்தேர்வுகளைக் காட்டுகிறது! ஆனால் வாட்ஸப்பில் வருவதில்லை! இணையப் பிரச்னை இன்னும் சரியாகவில்லை. புதுசா மோடம் வாங்கலாம்னா பையர் இணையச் சேவையில் தான் குறைபாடு எனச் சொல்லுகிறார். யோசிக்கிறேன். :(  வீட்டில் அடுத்தடுத்து ஏ.சி., ஃப்ளஷ் செய்யும் தொட்டி, தண்ணீர்க் குழாய்கள் என வேலை செய்து கொண்டிருக்கோம். அதிலும் இந்தக் குழாய்களை ஜாக்வர் கம்பெனியோட ப்ரான்டில் வாங்கிப் போட்டிருக்காங்க. அதைச் சாதாரண ப்ளம்பர்களால் சரி செய்ய முடிவதில்லை. அவங்க கம்பெனியில் கிடைக்கும் உதிரி பாகங்களை வைத்தே தான் சரி செய்ய வேண்டி இருக்கு.

அவங்களைக் கூப்பிட்டால் நமக்கு வரிசை எண் கொடுத்துடறாங்க. வரதுக்கு 2,3 நாட்கள் அதுக்கும் மேல் ஆகி விடுகிறது! சாதாரணக் குழாயே போட்டிருக்கலாம் போல! அம்பேரிக்காவில் எல்லாம் பையரே பார்த்துடுவார்! ரொம்ப வீணாகி விட்டதெனில் மாற்ற வேண்டியது தான்! ஒரு சில குழாய் இணைப்புக்கள் மட்டும் வெளி ஆட்கள் வந்து பார்க்க வேண்டியதாக இருக்கும். அங்கே ஒரு முறை வந்தால் குறைந்த பக்ஷமாக 100 டாலர் வாங்கறாங்க. இங்கேயும் வந்தால் என்ன குறைபாடு என்பதைக் கண்டு சொன்னால் 250 ரூபாய் வரை வாங்கறாங்க. பணத்தின் மதிப்புத் தான் வேறே! மற்றபடி மனிதர் ஒரே மாதிரித் தான்! ஒவ்வொன்றாகச் செய்து கொண்டு வருகிறோம். இதிலே நாளைக்கு விருந்தினர் வேறே வராங்க! அநேகமா நாளைக்கும், நாளன்னிக்கும் இணையம் வருவதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். அல்லது கொஞ்ச நேரமே வந்துட்டுப் போகலாம். எல்லோரும் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்கப்பா! ஆடுங்க, பாடுங்க, கொண்டாடுங்க!

 இங்கே ஶ்ரீரங்கத்தில்  காவிரி புஷ்கரத்திற்காக யாகங்கள், யக்ஞங்கள் நடைபெற்று வருகின்றன. இன்னும் போய்ப் பார்க்கவில்லை. காவிரியில் குளித்துப் புண்ணியம் தேடிக்கொள்வதற்காகச் சில நண்பர்கள் வருகின்றனர். அவங்களைக் கவனித்து அனுப்பின பின்னரே யாகமோ, யக்ஞமோ போய்ப் பார்க்க முடியும். எங்க தெருவே கூட்டமான கூட்டம். நேத்திக்கு மொட்டை மாடியில் போய்க் காவிரியில் தண்ணீர் வந்திருக்கானு பார்த்தால், தேங்கி இருக்கும் தண்ணீரில் சில, பல மனிதர்கள் குளிச்சுட்டு இருந்தாங்க. கணிசமான கூட்டம். ஆனால் நான் போய்ப் பார்த்தப்போ கிட்டத்தட்டப் பத்து மணி என்பதால் நல்ல வெயில். படம் எடுத்திருக்கேன். எப்படி வந்திருக்குனு இனிமேத் தான் பார்க்கணும். :) அதோட காவிரியில் தண்ணீர் விடும்படி கேட்டுக் கொண்ட வேண்டுகோள் ஏற்கப்பட்டு நேற்றிலிருந்து தான் சுமார் பத்தாயிரம் கன அடி தண்ணீர் விடச் சம்மதிச்சிருக்காங்க. அது வந்து சேர எப்படியும் நாளை ஆகிடும்.


மக்கள் கூட்டம் தூர இருக்கும் செக் அணைக்கட்டு அருகே தெரியும். அது இங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் இருக்கலாம். ஜூம் பண்ணி எடுத்தாலும் வெயிலில் படம் சரியா இருக்கானு காமிராவில் பார்க்க முடியலை! வந்தவரை போதும்னு எடுத்திருக்கேன். 


இது கொஞ்சம் கிட்டே இருக்கும் இடம்! இங்கேயும் கூட்டம் ஓரளவுக்கு இருந்தது.எல்லாம் கிடக்க    நீட் தேர்வு குறித்த போராட்டங்கள் ஓயவில்லை எனத் தொலைக்காட்சியில் சொல்றாங்க. எத்தனை நாட்களுக்குப் போராடப் போறாங்கனு தெரியலை! போன வருஷமே விலக்கு அளித்து அடுத்த வருஷம் தேர்வு உண்டுனு சொல்லியும் யாரும் அதுக்குத் தயார் ஆகலை! வருத்தமளிக்கும் செய்தி! போராடுபவர்களில் மாணவர்களை விட வயதானவர்களே அதிகம் இருக்கிறார்கள். ஒரு சில மாணவிகள் போராடுவதையும் பார்க்க முடிந்தது. நான் பள்ளியில் படிக்கும்போது வந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப்படித் தான் பள்ளிக்குள் நுழையவே விட மாட்டாங்க போராட்டக்காரங்க. அவங்களை ஏமாத்திட்டுப் பின் வாசல் வழியா போவோம். அதைக் கண்டு பிடிச்சு அங்கேயும் வந்துட்டாங்க. ஆனால் நாங்க ஐந்தாறு பேர் ஒரே ஓட்டம்! வகுப்பறைக்குப் போய்த் தான் ஓட்டத்தை நிறுத்தினோம். சுமார் மூன்று கிலோ மீட்டர் ஓடி இருப்போம். அதுவும் புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு!

என்னமோ இப்போதைய மத்திய அரசு தான் இந்த "நீட்" தேர்வு முறையைக் கொண்டு வந்தாப்போலச் சொல்றாங்க. இது 2010 ஆம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டம். திட்டம் வெற்றி எனில் அவங்க எங்களால் தான், நாங்க கொண்டு வந்தோம்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே திட்டத்துக்கு எதிர்ப்பு என்பதால் இப்போக் காங்கிரஸும் சேர்ந்து எதிர்க்கிறாங்க! அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் நடந்துக்கிறாங்க.  என்றாலும் இந்த வருஷ மாணவர் சேர்க்கை பின் தங்கிய மாவட்டங்களில் அதிகரித்துள்ளதாகத் தெரிய வருகிறது. அவங்க எல்லாம் அரசுப் பள்ளி இல்லைனு ஒரு புள்ளி விபரம்! பின் தங்கிய மாவட்டங்களில் கூட சிபிஎஸ்சி பள்ளிகள் தரத்தோடு செயல்பட முடியும் எனில் ஏன் நவோதயா பள்ளிகள் செயல்படக் கூடாது? நவோதயா பள்ளிகளை உடனே தமிழகத்தில் கொண்டு வரும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதற்கும் எதிர்ப்பு! ஹிந்தி இருக்குமாம். படிக்க மாட்டோம்னு சொல்றாங்க. சொல்றவங்க எல்லாம் படிப்பை முடிச்சு வேலை பார்க்கிறவங்க. இவங்க பலரின் குழந்தைகளும் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தியும் சேர்த்துத் தான் படிக்கிறாங்க. ஆனால் மத்தவங்களைப் படிக்கக் கூடாதுனு சொல்றாங்க. அரசுப் பள்ளியில் ஹிந்தி சொல்லிக் கொடுத்தால் அது ஹிந்தி திணிப்பாம். தனியார் பள்ளியில் சொல்லிக் கொடுத்தால் திணிப்பு இல்லையாம்! என்னவோ நியாயம் போங்க! தமிழ்நாட்டுக்கே தனி நியாயமாத் தான் இருக்கு! :( இத்தனைக்கும் இங்கே தான் ஒவ்வொரு வருஷமும் ஹிந்தி பிரசார சபா மூலம் ஹிந்தி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம்!

பக்கத்து மாநிலங்களில் எல்லாம் "நீட்" தேர்வுக்கும் எதிர்ப்பு இல்லை. நவோதயா பள்ளிகளுக்கும் எதிர்ப்பு இல்லை! தமிழ்நாட்டில் திறமைசாலிகள், கெட்டிக்காரங்க என்று சொல்லிக் கொண்டு இந்தத் தேர்வுக்கு ஏன் அஞ்ச வேண்டும் என்பதே புரியவில்லை! வேடிக்கை என்னன்னா இங்கே எதிர்க்கும் கட்சிகள் பலவும் மற்ற மாநிலங்களில் எதிர்க்கவே இல்லை! அதுவும் ஏன்னு புரியலை! :)

Monday, September 11, 2017

மஹாகவிக்கு அஞ்சலி!

பாரதியார் க்கான பட முடிவு


அச்சமில்லை அச்சமில்லை
    அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம்
   எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத்
   தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை
   பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை
   அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம்
   இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

கச்சணிந்த கொங்கை மாதர்
   கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து
   நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற்
   படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து
   வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
   அச்சமென்ப தில்லையே.

Sunday, September 10, 2017

உங்க வீட்டுப்பாப்பாவுக்கு ஒரு பாடல்!

குழந்தை க்கான பட முடிவு
குழந்தை முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாட்களிலேயே குப்புறத்திக்கொள்ள முயலும். மெல்ல மெல்லக் குப்புறத்திக்கும். பின்னர் தலையைத் தூக்கும். தலையைத் தூக்கி நம்மைப் பார்த்துச் சிரிக்கும். நாம் கையில் தூக்கிக் கொண்டால் நம் வயிற்றில் காலை வைத்து உதைத்துக் கொண்டு மேலே ஏறும்.
அடுத்து ஆறு மாசம் ஆகும்போது கைகளைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கும். கையை வாயில் கொண்டு போகும். அப்போக் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொல்லிக் கொடுத்தால் புரிந்து கொண்டு கையைத் தட்டும். மாசம் ஆனால் கையை மேலே தூக்கிக் கொண்டும் கோவிந்தா போடும். பின்னர் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட பாடலைப் பாடினால் இடுப்பிலேயே குதிக்கும். கையில் பிடிபடாமல் ஆடும்! முன்னும், பின்னும் ஆடும்.


சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!

கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!

கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!

அடுத்து நீஞ்சித் தவழ முற்படும் போது முதலில் முட்டிக்கால் போட்டுக் கொண்டு முன்னும், பின்னும் ஆடும் குழந்தை!

அப்போப் பாடும் பாடல்

ஆனை ஆனை! அழகரானை!
ஆனயும் குட்டியும் ஆடுமானை!

ஜல்லைக் கரும்பை முறிக்கும் ஆனை!
சீராடி சீராடிக் கொஞ்சும் ஆனை!

குட்டி ஆனைக்குக் கொம்பு முளச்சுதாம்!
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்!

எங்க குட்டிப் பேத்திக்கு இந்தப்பாடலைப் பாடினால் குதிப்பாள்! தவழ ஆரம்பிக்கும் குழந்தை உட்கார முயற்சிக்கும்போது கொஞ்சம் சாய்ந்தாப்போல் தான் முதலில் உட்காரும். அப்போப் பாட வேண்டிய பாடல்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!/சந்தனக்கிளியே சாய்ந்தாடுனும் பாடலாம்.
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!

உட்கார்ந்து கொண்ட குழந்தை தவழ ஆரம்பித்தால் கொஞ்சம் ஆடிக்கொண்டே போகும். அப்போ

ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்
அது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்
குட்டிப் பெருச்சாளி ஆடுமாம்
கொழுக்கட்டை கொண்டான்னு கேட்குமாம்

அடுத்து எழுந்து நிற்க முயல்கையில் கீழே பொத், பொத் என்று விழும்.

யானை வந்தது யானை
எங்கே வந்தது யானை
சண்டைக்கு வந்தது யானை
சறுக்கி விழுந்தது யானை

என்று சொல்லிக் கைதட்டினால் குழந்தையும் கை தட்டும். சிரிக்கும்.

குழந்தை க்கான பட முடிவு
குழந்தை அழும்போது பாடும் தாலாட்டு

ஆராரோ ஆராரோ ஆரிரரி ஆராரோ

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுது!
அடிச்சாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்பேன்!
தொட்டாரைச் சொல்லி அழு தோள்விலங்கு பூட்டி வைப்பேன்!

மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே
பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் சங்காலே
அத்தை அடிச்சாளோ அல்லிப் பூச் செண்டாலே
அம்மா அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது!

இன்னொரு தாலாட்டு!


கண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு
வேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு

கண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ
செங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ

முத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி
கொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்
நித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்
நூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ?

ஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
தைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ

யாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது
மானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ
தானோடி வந்து தந்த திரவியமோ
தேனோ திரவமோ திலகமோ சித்தடியோ

சித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்
சுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா

பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே

Thursday, September 07, 2017

விமரிசனங்கள் குறித்து ஒரு விமரிசனம். :)

என்னனு பார்க்கிறீங்களா? இப்போது எல்லாம் பதிவுகள் எழுதினாலும் சரி, கதைகள், கட்டுரைகள், கவிதைகள்னு எது பகிர்ந்தாலும் சரி எல்லோரும் நல்லா இருக்குனு சொல்லிடறாங்க. நல்லவேளையா நான் கவிதை எல்லாம் எழுதறதில்லை. பிழைச்சேன்! ஆனாலும் நான் எழுதறதை அனைவரும் பாராட்டியே எழுதறதைப் பார்க்கையில் உண்மையிலேயே நல்லா இருக்கானு சந்தேகம் வரத் தான் செய்கிறது. இந்த விஷயத்தில் "காலச்சக்கரம் நரசிம்மா"வைப் பாராட்டியே ஆகணும். நான் குற்றம் சுமத்தி எழுதி இருந்த போதிலும் அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் (அதாவது தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல்) அருமையான பதிலை எழுதி, மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை நிரூபித்து விட்டார்.

ஏனெனில் இப்போதெல்லாம் எல்லோரும் எல்லாவற்றையும் பாராட்டி விடுவது ஒன்றே சரி என நினைக்கிறார்கள். உண்மையைச் சொன்னாலோ, குற்றம் குறைகளைச் சுட்டினாலோ எழுதியவர்   மனம் வருந்துவார் என்பது மட்டும் இல்லை. அதன் எதிர் விளைவுகளைத் தாங்கவும் யாரும் விரும்புவதில்லை. ஒரு சிலர் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்கின்றனர். ஏனெனில் உண்மையைச் சொன்னால் எல்லோருமே, " சரி, தப்பா இருந்தால் திருத்திக்கறேன்." னு சொல்வதில்லை. "உன்னை யார் கூப்பிட்டாங்க?  நீ யார் சொல்வதற்கு?" என்பதே முதல் கேள்வியாக இருக்கும்! அடுத்ததாக, "உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! இஷ்டமிருந்தால் படி! இல்லைனா இங்கேருந்து ஓடு!" என்பதே அடுத்த பதிலாக இருக்கும். இது நான் இரு வருடங்கள் முன்னர் ஒருத்தரின் முகநூல் பதிவில் உள்ள தவறைக் குறிப்பிட்டபோது அனுபவித்த ஒன்று. அதன் பின்னர் அவங்களை நட்பு வட்டத்திலிருந்தே விலக்கி விட்டேன். ஏனெனில் படித்தால் நமக்கு அதில் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டத் தோன்றும். ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடனேயே விமரிசனம் எழுதி வருகிறேன்.

நாம் நினைத்ததை, எழுத எண்ணியதை வேறு யாரேனும் குறிப்பிட்டிருந்தால் மட்டுமே அதை ஆமோதித்துச் சொல்கிறேன். முன்னைப் போல் நானாக என் மனதில் தோன்றுவதைச் சொல்வதில்லை. இப்போவும் அப்படியே நேரடியாத் தான் தட்டச்சு செய்து வருகிறேன் என்றாலும் எழுதியதை, கருத்துச் சொன்னதை ஒரு முறை படித்துவிட்டுப் பரவாயில்லையா, அனுப்பலாமா என யோசித்தே பப்ளிஷ் கொடுக்கிறேன். இது கொஞ்சம் புதுசு தான்! ஆனாலும் என் சுபாவம் தெரிந்த நண்பர்களிடம் அப்படி நடந்து கொள்வதில்லை! அதை அவங்களும் புரிந்து கொண்டிருப்பாங்க! எழுத்துப் பிழைகளைக் கூட இப்போதெல்லாம் சுட்டிக் காட்டுவதை நிறுத்தி விட்டேன். :) இது என் சுபாவம் அல்ல என்றாலும் இனி இப்படித் தான் என்னும் முடிவு!

பொதுவாக யாருடைய எழுத்தை நாம் விமரிசித்தோமோ அவர்களிடம் இருந்து  இம்மாதிரி பதில்களைக் கேட்டால் அவமானப்பட்டதாக ஓர் உணர்வு விமரிசனம் செய்தவர்களுக்கு இருக்கும். யோசித்துப் பார்த்தால் இவ்வகையான பதில்களும் ஒரு வகையில் விமரிசனங்களே! அதைத் தள்ளிவிட்டுப் போவது தான் சரி.  நான் ராமாயணம் எழுதும்போது கடுமையான விமரிசனங்களைச் சந்தித்திருக்கிறேன். எல்லாவற்றிற்கும் தக்க பதிலும் கொடுத்திருக்கிறேன். அதற்காக என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கியதாக இன்று வரை நினைக்கவில்லை. ஆனால் ஒரு சிலரின் எழுத்தை நாம் விமரிசித்தால் அப்படி அர்த்தம் வருகிறது. என்றாலும் எத்தகைய விமரிசனம் வந்தாலும் நான் தாங்கிக் கொள்ள மனோபலத்தை இறைவன் கொடுக்க வேண்டும். அதைத் தான் வேண்டிக் கொள்கிறேன்.

இப்போது யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் ஒரு சிலரின் பதிவுகளில் முக்கியமாக முகநூல் பதிவுகளில் விமரிசனங்களுக்கு வரும் பதிலைப் பார்த்தால் இப்படித் தோன்றியது! தனிப்பட்ட தாக்குதல்கள், ஜாதியைக் குறித்த இகழ்ச்சி என்றே பேசுகிறார்கள். பேசுவதற்கும், எழுதுவதற்கும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றனவே! ஆக்கபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்தால் அனைவருக்கும் நன்மை தரும்! அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏசுவதால் என்ன நடக்கப் போகிறது! அதோடு பதிவுகள் போடுவதையும் குறைத்திருக்கிறேன். வாரம் இரண்டு அல்லது மூன்று எனக் கணக்கில் கொண்டு வர உத்தேசம்!