எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 25, 2009

கண்ணனின் ஆட்சியில் பதினைந்து நாட்கள்!

ஒரு வழியாய் ஊருக்குப் போயிட்டு வந்தாச்சு. தவிர்க்க முடியாத ஒரு பயணம். சொல்லப் போனால் மீண்டும் கண்ணனின் துவாரகையைப் பார்க்க எண்ணி 2006 டிசம்பரில் செல்ல ஏற்பாடுகள் செய்து இரு வழிப்பயணத்துக்கும் பயணச்சீட்டு வாங்கி இருந்தோம். சென்னையில் இருந்து அஹமதாபாத் வரை செல்லப் பயணச்சீட்டு முன்பதிவு உறுதி ஆகவில்லை. ஆனால் திரும்பி வர உறுதி செய்யப் பட்டு இருந்தது. செல்லும் தினம் வரையில் காத்திருந்து விட்டுப் பின்னர் பயணச்சீட்டை ரத்து செய்தோம். சொல்லப் போனால் நம்ம முதன்மைத் தொண்டர் அதியமான் அங்கே இருந்தார் அப்போ. வரப்போறோம்னு தகவல் கொடுக்கச் சொல்லி ம.பா. சொல்லிட்டே இருந்தார். ஆனால் எனக்கு என்னமோ கடைசிவரையில் கொஞ்சம் தயக்கமாவே இருந்தது. அதுக்கேத்தாப்போல் அப்போப் போக முடியவில்லை. இப்போத் தான் முடிஞ்சது.

ஜனவரியில் இருந்தே அலைச்சல் தான். அஹோபிலம் போயிட்டு வந்ததுமே கொஞ்சம் முடியாமலும் போயிடுத்து. என்றாலும் அதைக் கண்டு கொள்ளாமலேயே குஜராத் பயணம் செல்லும்படி நேர்ந்தது. குஜராத்திலேயே ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தப்போ துவாரகை, சோமநாத் இரு கோயில்களுக்கும் சென்று வந்தோம். துவாரகை நாங்க இருந்த ஜாம்நகரில் இருந்து ரொம்பக் கிட்டே இருப்பதால், இரண்டு, மூன்று முறை சென்றிருக்கின்றோம். கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போப் போனப்போ ஊரும் சரி, மக்களும் சரி கொஞ்சமும் மாறவில்லை. அப்படியே தான் இருக்கின்றது. கோயில் இருக்கும் தெருவில் இன்னமும் முன்னேற்றம் என்ற பெயரால் ஐந்து நட்சத்திர விடுதிகளும், சுற்றுலா விடுதிகளும், வியாபாரப் பொருட்கள் விற்கும் கடைகளும் அணி வகுக்கவில்லை. எல்லாம் கோயிலை விட்டுக் கொஞ்சம் தள்ளியே இருக்கின்றன. கோயில் வளாகத்தினுள்ளும் கடைகள் அணி வகுக்கவில்லை. அனுமதிச்சீட்டு கிடையாது. சிறப்புத் தரிசனம் கிடையாது. விஐபி அனுமதி இல்லை.

அது நரேந்திரமோடியே ஆனாலும் எல்லாரையும் போல் தான் வந்து தரிசனம் செய்ய முடியும். என்ன? அவங்களுக்குக் கூடவே பாதுகாவலர்கள் வருவாங்க. நமக்குத் தொந்திரவு இல்லாமல் தரிசனம் செய்துட்டுப் போவாங்க. மக்களை வெளியேறச் சொல்லுவதோ, அவங்களுக்குத் தனியாய்த் தரிசனம் செய்து வைப்பதோ கிடையாது. சிறப்பு அனுமதியும், தனி அனுமதியும் பெண்களுக்கு மட்டுமே. அவங்களுக்கு கண்ணனுக்கு நேரே மிகக் கிட்டத்தில் சென்று தரிசிக்க அனுமதி உண்டு. தனியான வாயிலும் பெண்களுக்கு மட்டுமே. பெண்களும் கண்ணனைப் பார்த்தால் பார்த்துக் கொண்டே இருப்பதோடு ஏதோ தங்கள் பிள்ளை மாதிரிப் பேசுகின்றனர். இங்கேஅம்பி, தன்னோட மதுரை பதிவிலே எழுதி இருக்காப்போல! (அம்பி ஒரு இலவச விளம்பரம் கொடுத்துட்டேன், கொடுத்த மொய்யிலே கழிச்சுக்குங்க, மிச்சம் நீங்க தான் கொடுக்கணும்). அம்பி நீங்க கேட்டாப்பல லிங்க் கொடுத்தாச்சு. கொடுத்த மொய் திரும்ப வரணும்! கண்டிஷனை மறக்காதீங்க! :P

நாங்க காலையிலே முதன் முதல் எடுக்கப் படும் ஆரத்தி என அழைக்கப் படும் தீப ஆராதனையைப் பார்க்கச் சென்றோம். அந்தப் புலர்ந்தும் புலராத காலைப் பொழுதிலே, அந்தக் குளிரிலேயும் எத்தனை மக்கள்? யாருமே இருக்க மாட்டாங்கனு நினைச்சுட்டுப் போனால்?? ஒரே கூட்டம்! ஆச்சரியமா இருந்தது. உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள்னு எல்லாருமே காத்துட்டு இருந்தோம். கூட்டம் வேறு நினைவே இல்லாமல் கிருஷ்ணர் மேலே பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டிருக்க, பெண்களும், ஆண்களும், த்வாரகாதீஷ் கி ஜெய் எனக் கோஷமிட, சரியாக ஏழு மணிக்குத் திரை விலக்கப் பட்டு ஆரத்தி நடைபெற்றது. கிட்டத் தட்ட அரைமணி நேரம் ஆரத்தி எடுக்கப் படுகின்றது. ஆரத்திக்குச் சற்று நேரம் முன்னால் கோயில் பிரகாரத்தில் இருக்கும் மணி ஒலிக்கத் தொடங்குகின்றது. அது ஆரத்தி எடுக்கப் போவதை அறிவிப்பது போல் உள்ளது. பிறகு அந்த மணி நின்று நிசப்தம். அதன் பின்னர் பெரிய காண்டாமணி ஒலிக்க, கூடி இருக்கும் கூட்டம் பித்துப் பிடித்தது போல் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கதறிக் கண்ணீர் மல்க, துவாரகாதீஷ் அன்று காவிக்கலரில் ஆடை அணிந்து ஆடுமேய்க்கும் கோபாலனாகத் திவ்ய தரிசனம் தந்தான்.

Tuesday, February 24, 2009

பாடங்கள் ஆரம்பம், பரிட்சையும் எழுதணும்!

லீவு முடிஞ்சு வந்தாச்சு. இனிமேல் அடிக்கடி இப்படி லீவ் போட்டுட்டுப் போக மாட்டேன்னு ம.பா. கிட்டே உறுதியாச் சொல்லியாச்சு. இப்படி அடிக்கடி போனால் உடனேயே சிஷ்ய(கே)கோடிங்க ஏற்கெனவே எதுடா சாக்குனு காத்துட்டு இருக்காங்க, பதுங்கறதுக்கு. இப்போ வரவே மாட்டாங்க. :P என்னத்தைச் சொல்றது? வந்தவங்க வரைக்கும் பரிட்சை வைக்கலாம்னு பார்த்தால் கோபி மட்டும் தான் தேர்வாகி இருக்கார். திவா வரதே இல்லை, அதனால் மறுபடி படிச்சுட்டுப் பரிட்சை எழுதணும். எங்கே திவா? திவா, திவா, வாங்க, வந்து மறுபடியும் ஆரம்பத்திலே இருந்து படிங்க, பார்க்கலாம். கவிநயா, மன்னிச்சு விட்டுடலாமா? கண்ணனோட விளையாடினேன்னு சொல்றாங்க, அதுவும் யானை படம் எல்லாம் போட்டுக் கவிதையும் எழுதினாங்க, குட்டி யானை வேறே அதிலே. யானைக்காக அவங்களுக்கு மதிப்பெண்கள் கொடுத்துடலாம். திராச சார், வரதே இல்லை, அப்புறம் என்ன ஜாலி வேண்டிக் கிடக்கு? எப்போவுமே ஜாலிதானே?? எஞ்சாய்!!!!!! அம்பி, மெளலி, கைப்புள்ள, அபி அப்பா இவங்களை எல்லாம் என்ன செய்யறது? தண்டனை தான். படிக்கச் சொல்லிட்டுக் கேள்வி கேட்கணும். தப்பில்லாமல் தமிழ் எழுதச் சொல்லணும். மெளலியும், அபி அப்பாவும் நிச்சயமா அதிலே ஃபெயில் தான். இப்போவே தெரியும். சூடான் புலி அப்போ அப்போ நான் இருக்கேன்னு வந்து ஆஜர் கொடுத்துடறார். அதனாலே விட்டுடறேன்.

கண்ணனுடைய ஆட்சியில் பதினைந்து நாட்கள் இருந்துட்டு வந்தேன். குஜராத்தில் கண்ணன் தான் இன்னும் ஆட்சி செய்கின்றான். யாரைப் பார்த்தாலும் முதலில் முகமன் கூறுவது சிறு குழந்தைகளில் இருந்து பெரியவர் வரையிலும், ஜெய் ஸ்ரீகிருஷ்ணா தான். விடை பெறுவதும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா தான். இதிலே அவங்களுக்கு ரொம்பவும் பெருமையும் கூட. யது வம்சத்தவர்களான யாதவர்கள் யதுவின் தகப்பன் ஆன யயாதியின் சாபத்தால் அரியணை ஏறி அரசுக் கட்டிலில் அமர முடியாது. ஆனாலும் அவர்கள் க்ஷத்திரியர்களே என்பதால், தங்கள் தலைவனையே அரசன் என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளுவார்கள். அப்படி ஒரு அரசன் ஆன உக்ரசேனனின் மகன் ஆன கம்சன் என்ற அரக்கன் மகத நாட்டு மன்னன் ஜராசந்தனின் மருமகன் ஆவான். மருமகனைக் கொன்ற கிருஷ்ணரைப் பழி தீர்க்கவேண்டி மொத்த யாதவர்களையுமே அடியோடு மதுரா நகரோடு சேர்த்து அழிக்க ஜராசந்தன் முனைய, அவர்களிடமிருந்து தப்பக் கிருஷ்ணர் செய்த உபாயமே இட மாற்றம். நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மறு பகுதிக்கு மாற்றம் ஆங்கிலத்தில் exodus என அழைக்கப் படும். கிட்டத் தட்ட மோசஸ் செய்த அதே மாதிரிதான் இங்கேயும், உலகிலேயே முதன்முறையாக நடைபெற்ற ஒன்று. அதைப் பற்றி நம் கண்ணன் வருவான், கதை சொல்லுவானில் இன்னும் விரிவாய்ப் பார்ப்போம்.

யாருங்க அது ஓடறது? விரிவாய்ப் பார்ப்போம்னு சொன்னதும்?? அம்பியா? மெளலியா? அபி அப்பாவா? திவா?? இருக்கும், இருக்கும். துரத்தித் துரத்திப் பிடிச்சு வைச்சுட்டு விடாமல் சொல்ல மாட்டோம்?? துவாரகைக் கோயில் பற்றிக் கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பதிவில் வரும். சோமநாத் கோயில் கிருஷ்ணர் அங்கே செல்லும் முன்னரே இருந்த ஒன்று. சந்திரன் பூஜித்ததால் சோமநாதர் என்ற பெயர் பெற்றார் ஈசன். அந்தக் கோயில் பற்றிப் பார்க்க வேண்டிய முகவரி இது.இங்கேபாருங்க. ஹிஹிஹி, நானும் இந்த வலைப்பதிவு பத்தி சிஷ்யகேடிங்க கிட்டே சாட்டிங்கிலேயும், மெயிலிலேயும் சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டேன். ஒண்ணும் அசைஞ்சு கொடுக்கலை. நேரம், வேறே என்ன சொல்றது? அதுக்கப்புறம் என்னை ஆன்லைனில் பார்த்தாலே எல்லாம் இன்விசிபிள் மோடிலே பதுங்குறாங்க! :P:P:P:P புலி ஒண்ணுதான் அப்போ அப்போ எட்டிப் பார்த்துட்டுப் போகுது. இப்போ என்னமோ திவா வரார். நேரம் நிறையக் கிடைக்குது போல. அதான் இங்கே சொல்லிட்டேன். போணி ஆகணுமில்லை?? சொந்த செலவில் செலவில்லாம விளம்பரமும் ஆச்சு இல்லை? அப்புறம் அஹோபிலம் பத்தி ஏற்கெனவே எழுதிட்டு இருக்கிறதிலே வரும்.அஹோபிலம் மாத்தி, மாத்தி ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும். தினமும் எல்லாத்திலேயும் போட முடியாது. போட்டாலும் அடிக்க வருவீங்க இல்லை? :P வந்தாச்சு. விடறதா இல்லை யாரையும். தயாரா இருங்க.

Thursday, February 05, 2009

லீவு விட்டாச்சு!

அஹோபிலம் இங்கேசென்று பார்க்கவும். மறுபடி ப்ளாகர் முருங்கை மரத்தில் 2 நாளா ஏறிட்டிருக்கு. பின்னூட்டங்களுக்குப் பதில் வரலையேனு யாரும் தப்பாய் நினைக்கவேண்டாம். பதினைந்து நாட்கள் படிச்சு வைங்க. வந்து ஒரு பெரிய பரிட்சை வைப்பேன். மதிப்பெண்கள் உங்களுக்குத் தான். எனக்கில்லை. வரேன்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பகுதி 26

கண்ணனை எங்கும் காணவில்லை. யசோதை பதறித் துடித்தாள். கண்ணனைத் தேடி அவள் இங்கும் அங்கும் ஓடினாள். அந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள். பைத்தியம் மாதிரிப் புலம்பினாள். "கிருஷ்ணா, கிருஷ்ணா, எங்கே போனாய்? என் கிருஷ்ணன் என்னை விட்டுப் போய்விட்டானா? இனி கிடைப்பானா? மாட்டானா?" என்றெல்லாம் புலம்பினாள். தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் மட்டுமின்றி வீட்டினுள் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து தேட ஆரம்பித்தனர். அவர்களில் சிலர் ஓடிச் சென்று நந்தன் இருக்குமிடம் தேடிக் கண்டு பிடித்துக் கண்ணனைக் காணவில்லை என்ற விஷயத்தைச் சொன்னார்கள். நந்தன் உடனேயே தன்னுடைய ஆட்களைச் சேர்த்துக் கொண்டு யசோதை இருக்குமிடம் வந்து, என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கிருஷ்ணனைத் தேடச் சென்றான். நேரம் சென்று கொண்டே இருந்தது. வெகுநேரம் தேடியும் கண்ணனைக் காணவில்லை. தேடித் தேடி அலுத்துப் போன யாதவர்கள் அனைவரும் நகருக்கு வெளியே வந்துவிட்டார்கள். அப்போது அவர்களில் ஒருவன் காலில் ஏதோ இடறியது. என்னவெனப் பார்த்தால் ஒரு மனிதன் அங்கே இறந்து கிடந்தான். யாரோ ஒரு மனிதன், ஆந்தி எனப் படும் புயல்காற்று வீசியபோது, ஓடி வந்து திக்குத் திசை புரியாமல் முட்டி மோதிக் கொண்டு கீழே விழுந்து அங்கே கிடந்த பெரிய பாறாங்கல்லில் அடிபட்டுச் செத்திருக்கவேண்டும். யார் எனப் பார்த்தார்கள். கிராமத்தார்களில் ஒருவனுக்கு அவனை அடையாளம் தெரிந்தது. ஆஹா, இவன் அந்தப் பறவைகளைப் பிடிப்பவன் அல்லவோ? இவன் பெயர் திரிணாவிரதன். மதுராவில் இருந்து இரு தினங்கள் முன்னால் வந்தான்.

நந்தனுக்கு விஷயம் மெல்ல மெல்லப் புரிந்தது. கம்சன் ஏற்பாடு செய்து இவன் இங்கே வந்திருக்கவேண்டும். நிச்சயம் கிருஷ்ணனைத் தூக்கிச் சென்றுகொல்லுவதற்காக கம்சன் ஏற்பாடு பண்ணி இருக்கவேண்டும் இவனை. ஆனால் விதி வசத்தால், அல்லது கிருஷ்ணனின் அதிர்ஷ்டத்தால் இவனே இறந்துவிட்டான் இப்போது. ம்ம்ம்ம்ம்?? இவன் தூக்கிச் சென்ற கண்ணன் எங்கே? எங்கே போயிருப்பான்? அல்லது எங்கேயானும் ஒளித்து வைத்துவிட்டானோ? அனைவரும் "கண்ணா, கண்ணா, " என்று கூப்பிட்டுக் கொண்டு ஓடி, அலைந்து கண்ணனைத் தேட ஆரம்பித்தனர். சற்று நேரம் தேடும்போதே அருகே இருந்த ஒரு மாந்தோப்பில் இருந்து "அப்பா, அப்பா, நான் இங்கே இருக்கேன்." என்று ஒரு இளங்குரல் கேட்கவே அனைவரும் ஓடிச் சென்று பார்த்தனர். கண்ணன் ஒரு மாமரத்தின் பின்னாலிருந்து மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தான். அவன் முகத்தின் சிரிப்பு சற்றும் மாறவில்லை. அதே கள்ளச் சிரிப்பு. தந்தையைக் கண்டதும், தன்னிரு கைகளையும் விரித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடோடி வந்தான் கண்ணன். வாரி அணைத்துக் கொண்டான் நந்தன். ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். "குழந்தாய், எப்படி வந்தாய் நீ இங்கே?" என்று நந்தன் கண்ணனைக் கேட்டான். அவன் குரல் பெரும் ஆபத்தில் இருந்து நீங்கிய உணர்ச்சிகளில் தழுதழுத்தது. கண்ணன் பயமறியாத இளங்கன்றாகத் தன் பிஞ்சு விரல்களால் இறந்திருந்த அந்த மனிதனைச் சுட்டிக் காட்டி "இவன் என்னைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தான். என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓடினான். நானும் அப்போ இருந்த காற்றால் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். ஆனால் இவன் கீழே விழுந்துவிட்டான், நான் ஓடியே போய் ஒளிஞ்சுண்டேன்." என்று குழந்தைத் தனம் மாறாத குதூகலத்துடன், தகப்பன் அறியாமல் தான் ஒரு பெரிய வேலையைச் செய்திருக்கோம் என்ற சந்தோஷத்துடன் கூறினான் கண்ணன்.

நந்தன் மிக ஆழமான ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் குழந்தையைத் தூக்கிச் சென்று யசோதையிடம் ஒப்படைத்தான். விஷயம் வசுதேவருக்கும், தேவகிக்கும் சொல்லப் பட்டது.

Tuesday, February 03, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - பகுதி 25

இதன் மற்ற பகுதிகளைப் படிச்சுட்டீங்களா? இந்தக் குழந்தைகள் பத்தி எழுதறதே ஒரு சுகமான அனுபவம். அதிலும் சுட்டிக் குழந்தைகள் பத்திக் கேட்கணுமா? அதிலும் சின்னஞ்சிறு குழந்தைனால் கேட்கவே வேண்டாம். நித்தம் நித்தம் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். சமீபத்தில் கைப்புள்ள கூடப் பேசிட்டு இருந்தப்போ சொன்னார். "மேடம், நான் பங்களூரிலே இருந்தப்போ எப்போ சென்னை வரேனோ அப்போ எல்லாம் தான் என் மகளைப் பார்ப்பேன். ஆனாலும் அவள் என்னை அடையாளம் தெரிஞ்சு வச்சிருக்கா. எனக்கே ஆச்சரியமா இருக்கு. அவள் பிறந்ததும் முதல்லே என் கிட்டேத் தான் கொடுத்தாங்க. அது இன்னும் நினைவிலே இருக்குமா?" என்று கேட்டார். நினைவு வச்சுக்கும் குழந்தைகள். என்னைப்பொறுத்தவரையில் நான் அதிகம் பழகியதே சிறு குழந்தைகளோடுதான். ஆகவே யார் தொடறாங்க, அம்மாவா? அப்பாவா? நம்மளைக் கொஞ்சறவங்களா? இல்லை வேறு யாருமானு நல்லாவே தெரிஞ்சிருக்கும். மேலும் நம் கை தொடுகையில் இருந்தே, அதுக்கு உணவு கொடுக்கப் போறோமா? மருந்து கொடுக்கப் போறோமா? இல்லை துணி மாத்தறோமா? குளிப்பாட்டப் போறோமானு தெரிஞ்சு அதுக்கு ஏத்தாப்போல் அழுகையைக் கொண்டு வர முயற்சி செய்யும். கீழுதடு பிதுங்கிப் பிதுங்கி வெளியே வரும். ஒரு பக்கம் சிரிப்பும் வரும், இன்னொரு பக்கம் அழுகையும் வரும். தூக்கிச் சமாதானம் செய்தால் சிரிப்போடு கலந்த அழுகை வரும். சில சமயம் சமாதானம் அடையும். சில சமயம் அழுகையாகவும் மாறும். அந்த அழகை அனுபவித்தால் வேறே எதுவுமே வேண்டாம் உலகிலேனு தோணும். ரேமாண்ட் விளம்பரத்தில் வராப்போல FEELING HEAVENS தான். இப்போ இது இங்கே இடம் பெறுவதற்குக் காரணம் இன்னிக்கு எழுதப் போகும் விஷயம் தான். இனி அதைப் பார்ப்போம்.
*************************************************************************************

யசோதைக்குக் கண்ணனைக் கண நேரம் கூடப் பிரிந்திருக்க முடியவில்லை. அவன் விஷமமோ கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றது. அதிலும் பூதனைக் கண்ணனைக் கொல்ல வந்தாள் எனக் கேள்விப் பட்டதில் இருந்தே கண்ணனைத் தவிர வேறே எதிலும் சிந்தனை செல்லவில்லை. ஆனால் கண்ணனோ, யசோதையின் பிடியில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு புது வழியைக் கண்டு பிடித்தான். நந்தனாலோ, யசோதையாலோ நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் புதுப் புது யுக்திகள் கண்டு பிடித்து ஓடி ஒளிகின்றான் மாயவன். இம்மாதிரிச் சில நாட்கள் குறிப்பிட்ட எந்தவிதமான சம்பவங்களும் இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் யசோதை, கோகுலத்து கோபியரில் ஒருத்திக்குக் கஷ்டப் பிரசவம் நடந்த செய்தி கேட்டு, அவளைச் சென்று பார்த்து நலம் விசாரிக்கவேண்டும் எனக் கண்ணனையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு சென்றாள். கண்ணனின் இரு கால்களையும் தன் இடுப்பைச் சுற்றி வளைத்து இறுக்கிக் கொண்டு அவன் கீழே இறங்காதவாறு பிடித்துக் கொண்டு சென்றாள். கண்ணனா சும்மா இருப்பான்?

சற்று நேரம் சும்மா இருந்தான் கண்ணன். திடீரெனக் கண்கள் விஷமத்தால் மின்னின. அவன் முகத்தில், இதழ்க்கடையில் ஒரு கள்ளச் சிரிப்பு. யசோதையின் இடுப்பிலேயே மேலும், கீழும் குதிக்க ஆரம்பித்தான் கண்ணன். முதலில் மெதுவாய் ஆரம்பித்தவன் போகப் போக வேகமாய்க் குதிக்க ஆரம்பிக்க யசோதையால் தாங்க முடியவில்லை. "கண்ணா, என்னடா இது? என்ன செய்கின்றாய்?" என்று கேட்க, கண்ணனுக்கோ குதூகலம் தாங்க முடியவில்லை."ஒண்ணுமில்லை அம்மா" எனச் சொல்லிக் கொண்டே வேகமாய்க் குதிக்க, "என் கண்ணே, மணியே, வேண்டாம் அப்பா! அம்மாவால் தாங்க முடியலை. எப்படி நடப்பேன்? சற்று நேரம் சும்மா உட்காரு, என் குழந்தை!" என்று கெஞ்சினாள். "நான் நடப்பேன்!" இது கண்ணன். கண்ணனின் குதியாட்டம் அதிகமாகியது. கண்ணனையும் போட்டுக் கொண்டு கீழே விழுந்துவிடுவோமோ என அஞ்சிய யசோதை அருகிலிருந்த ஒரு வீட்டுத் திண்ணையில் கண்ணனைக் கீழே இறக்கிவிட்டுச் சற்று உட்காருவோமா என நினைத்தாள்.

திடீரென மேகம் கறுத்தது. கருநிற மேகங்கள் சூழ்ந்து கொள்ள சூரியன் மறைந்தான். மெல்லிய இருள் படர்ந்தது. என்ன இது என நினைக்கும்போதே புழுதியை வாரி இறைத்துக் கொண்டு காற்று புயல் போல் வீசத் தொடங்கியது. மணல் வாரிச் சுற்றிச் சுழன்று கொண்டு போனது. அதனால் எழும்பிய புகையும், ஏற்கெனவே கருத்திருந்த இருட்டும் சேர்ந்து கொண்டு மேற்கொண்டு நிற்கவோ, நடக்கவோ முடியாமல் போனது யசோதாவுக்கு. நேரம் ஆக ஆகக் காற்றும் அதன் வேகமும் அதிகரித்தது. இது எப்படியும் இன்னும் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் எனப் புரிந்து கொண்ட யசோதா அருகிலிருந்து ஒரு வீட்டுத் திண்ணையில் கண்ணனைக் கீழே இறக்கிவிட்டுத் தானும் அருகே உட்கார்ந்தாள். பக்கத்தில் இருந்த ஒரு தூணைப் பிடித்துக் கொண்டாள். காற்று நின்றதும் மேற்கொண்டு தொடரலாம் என நினைத்து உட்கார்ந்திருந்தாள் யசோதை.

முகம்,கண், உடுத்தியிருந்த உடை எல்லாம் மணல். கண்ணே திறக்க முடியவில்லை, யசோதைக்கு.சற்று நேரம் ஆனது காற்று அடங்க. காற்று அடங்கி மீண்டும் சூரியன் வெளியே வர, வெளிச்சமும் வந்தது. தன் மேலிருந்த மணலை எல்லாம் போக்கிக் கொண்டே, "கண்ணா, கண்ணா, இங்கே வா!" என்றாள் யசோதை. கண்ணன் அந்தத் திண்ணையில் இல்லை. யசோதை பதறினாள். பெரும் கூச்சல் போட்டாள். கண்ணா, கண்ணா, எங்கே போய் ஒளிந்து கொண்டாய்? வந்துவிடுடா! என்று கெஞ்சினாள். அவள் குரல் கேட்டு வீட்டினுள் இருந்த கோபியர்களும், தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதர்களும் வந்தனர். அனைவரும் தேட ஆரம்பித்தனர். கண்ணனை எங்கும் காணவில்லை. எங்கே போனான்? யாரோடு போனான்? போகும்போது அழவே இல்லையா??

Monday, February 02, 2009

விடுமுறை ஆரம்பிக்கப் போகுதே!

வீட்டிலே கொஞ்சம் வேலை அதிகம், அதோட கொஞ்ச நாட்கள் லீவு விடப் போறேன், எல்லாத்தையும் வச்சுத் தான் கொஞ்ச நாட்களாய் கண்ணன் வருவான் பதிவு போட முடியலை. மேலும் தினம், தினம் போட்டால் சிலர் மெதுவாய்ப் படிக்கிறோம், நேரம் இருக்கிறதில்லைனு சொல்றாங்க. அதனாலும் தாமதம் செய்தேன். வெள்ளிக்கிழமை பெப்ரவரி ஆறாம் தேதியில் இருந்து பெப்ரவரி 23-ம் தேதி வரைக்கும் விடுமுறை அறிவிச்சாச்சு. போறதுக்குள்ளே ஒரு இரண்டு போஸ்ட் ஏற்கெனவே எழுதி வச்சிருக்கிறதைப் போடுவேன். வந்து மிச்சம் பார்த்துக்கலாம். அதுக்குள்ளே எழுதி இருக்கிறதை எல்லாம் படிச்சு வைங்க. வந்து பரிட்சை இருக்கும். திவா மாதிரி உங்களை எழுதச் சொல்லிட்டு மதிப்பெண்களை எனக்குப் போட்டுக்க மாட்டேன். மதிப்பெண்கள் உங்களுக்குத் தான். சும்மா ஒளிஞ்சுக்கிறது, சாக்குப் போக்கு சொல்லறது எல்லாம் எதுவும் நடக்காது. இங்கே லிஸ்டிலே பதினாறு பேர் இருக்காங்க. அவங்க தவிரவும் வேறே வரவங்க லிஸ்ட் என் கிட்டே இருக்கு. ஆகையால் யாரும் தப்ப முடியாது. ஒழுங்காப் படிக்கணும்.

ஏற்கெனவே கே. ரவிசங்கர்(கேஆரெஸ் இல்லை) வந்து கேட்டுட்டு இருக்கார், பாரத் தர்ஷன் பற்றிய பதிவுகள் என்ன ஆச்சுனு. அது வேறே இருக்கு. அதுக்கு அப்புறமும் போயிட்டு வந்தது எல்லாம் வேறே எழுதணும். ஒரு பத்துக் கை இருந்தால் தேவலைனு தோணுது. இருக்கிற ஒரு கையே வலிச்சுட்டு இருக்கு இன்னும். எக்ஸ்ட்ரா இருந்திருக்கலாம். வண்டிக்கெல்லாம் ஸ்டெப்னி வச்சிருக்கிற மாதிரி நமக்குக் கையும் எக்ஸ்ட்ரா கொடுத்தால் இது வலிக்கிறப்போ கழட்டி வச்சுட்டு, அதைப் போட்டுக்கலாம். அது தொந்திரவு கொடுத்தால் கழட்டி வச்சுடலாம். எல்லாத்துக்கும் மேலே கணினி தொந்திரவு, ஆற்காட்டார் தொந்திரவு. ஒரு வாரம் விட்டு மறு வாரம் நேரத்தை மாத்திடறாங்க. ஆனால் மின்வாரிய ஆளுங்க நான் கணினியிலே எப்போ உட்காருவேன்னு மட்டும் தெரிஞ்சு வச்சுக்கிறாங்களேனு அதிசயமா இருக்கு. கரெக்டா அப்போப் போயிடும்.

நல்லவேளையா இன்னிக்குக் காலம்பரவே போயிட்டு, பனிரண்டு மணிக்கெல்லாம் வந்துடுச்சு. வரேன், நாளைக்குக் கண்ணன் வருவான், கதை சொல்ல. இது ஒரு ஆறுதல் பதிவு!

ஹிஹிஹி, பதினாறு பேர் இருக்கீங்கனு சொன்னதாலே, நான் அந்தண்டை ஊருக்குப் போனதும், எல்லாரும் கழண்டுக்காதீங்க! மானம் போயிடும்! :)))))))))))))))))

ரத சப்தமி- ஒரு மீள் பதிவு! தெரியாதவங்களுக்காக!


இன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் "ரத சப்தமி" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.

ஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு. பொதுவாகவே சப்தமி திதியை சூரியனுக்கே உரித்தானதென்று சொன்னாலும், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசம் ஆனதின் பின்னர் வரும் வளர்பிறை சப்தமி திதியை சூரியனின் சுற்றும் சக்கரமான காலச்சக்கரத்தின் பெயராலும், ரதத்தின் பெயராலும் ரதசப்தமி என்றே அழைப்பார்கள். இன்று கோலம் போடும்போது கூடத் தேர் வடக்கே நகருவது போலப் போடுவதே வழக்கம். (ஹிஹி, போன வருஷம் இதை எழுத மறந்து போச்சு, இன்னிக்குக் காலம்பர கோலம் போடறச்சே நினைச்சேன், எழுதினேனா பார்க்கணும்னு, எழுதாமல் விட்டிருக்கேன்.) தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முடைய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.

அவரிடம் பீஷ்மர், "நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை?" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், "பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. "பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா? தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா? என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே?" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.

வியாசர் அதற்கு, "பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, "கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா? என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி!" என்று சொல்கின்றார். அப்போது," என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்," என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.

வியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, "பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்," என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், "வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்." என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும்,கண்கள், செவிகள், கை,கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பதும் ஏற்பட்டது. மாறுபட்ட இன்றைய சூழ்நிலையில் எருக்க இலை என்றாலே யாருக்கும் தெரியறதில்லை, யாரும் குளிக்கிறதும் இல்லை எருக்க இலைகளை வைத்துக் கொண்டு. இருந்தாலும் தெரிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா? காலமாகிய தேரில் சுற்றும் ஒற்றைச் சக்கரமான நாட்கள், மாதங்கள், வருடங்களைக் கிழமைகள் என்னும் ஏழு குதிரைகள், அருணனின் துணையுடன் ஓட்டப் படுகின்றது என்றும் சொல்லுவதுண்டு.