நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகிறது என்பதைச் சொல்ல பள்ளித் தலைமை ஆசிரியை மேடை நோக்கிச் செல்கிறார். இந்த மாபெரும் அறை பள்ளியின் ஜிம்னாசியம் என்னும் உடற் பயிற்சிக் கூடம். அங்கே இருந்த சின்ன மேடையில் தான் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமருவதற்கு நாற்காலிகள் போடப்படவில்லை. எல்லோரும் கூட்டமாக நின்று கொண்டு தான் பார்க்க வேண்டி இருந்தது. அப்புறமா எங்க மாப்பிள்ளை எங்கிருந்தோ இரண்டு நாற்காலிகளைக் கொண்டு வந்து எங்களுக்கு அமரக் கொடுத்தார். ஆனாலும் முன்னால் எல்லாரும் அமர்ந்திருந்ததோடு குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்! படம் எடுக்கையில் கையைத் தட்டி விட்டுக் கொண்டு செல்வார்கள். :) இல்லைனா நமக்கு நேரே நின்று கொண்டு மறைப்பார்கள். :)
இது சீனக்குழந்தைகள் அவர்கள் மொழியில் உள்ள தேசியப் பாட்டுக்குப் பிடித்த அபிநயம். எல்லாக் குழந்தைகளும் நன்றாகச் செய்தார்கள்.
கீழே காண்பது டேக் வான்டோ என்னும் ஜப்பானிய/கொரிய கராத்தே (?) பயிற்சி முறை. அதில் கையில் வேல் போன்ற ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்கும் நபர் தான் பயிற்சியாளர் என்பதோடு கடைசியில் ஒரு ஆட்டம் ஆடிக் காட்டினார் பாருங்க! அதைப் படம் எடுக்கும் முயற்சியில் அங்கேயும் இங்கேயும் போனது தான் மிச்சம்! :(
சிறுவர்கள் நன்றாக டேக் வான்டோ பயிற்சிகளைச் செய்து காட்டினார்கள். நம்ம அப்புவும் கொஞ்ச நாட்கள் போய்க் கொண்டிருந்தாள். பின்னர் அவளால் முடியலை என்பதால் நிறுத்தி விட்டாள்.
இது யு.எஸ். அமெரிக்கக் குழந்தைகள் என நினைக்கிறேன். அல்லது ஸ்விட்சர்லாந்தாக இருக்கலாம். அறிவிப்புச் செய்தது சரியாகக் காதில் விழவில்லை. :(
இந்தியக் குழந்தைகள் "ஜய ஹோ!" பாடலுக்கு ஆடினார்கள். மூவர்ணக் கொடியை நினைவூட்டும் வண்ணம் உடை அணிந்திருந்தார்கள். முதலில் ஆரஞ்சு, பின்னர் வெண்மை, பின்னர் பச்சை. நடுவில் நீல நிறச் சக்கரத்துக்கு ஒரு பையர். இந்தப் பாடலுக்கு ஆடிப்பாடச் சொல்லிக் கொடுத்தது ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த லாவண்யா என்னும் ஒரு பெண்மணி ஆவார். அவரை இன்னும் சந்திக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருக்குப் பல்வேறு கலைகள் தெரிந்திருப்பதால் அவற்றில் வேலை மும்முரமாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக எங்க பொண்ணு வேலை செய்தாள். பலரும் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அவரவர் வீட்டிலிருந்து முடிந்த பொருட்களை எடுத்து வந்து அழகு செய்து பெரிய கோலம் போட்டு, வந்தவர்களில் விருப்பப் பட்டவர்களுக்கு மெஹந்தி கையில் இட்டுவிட்டு என்று எல்லாமும் செய்தார்கள். எல்லோருமே அமெரிக்காவில் பல ஆண்டுகளாக இருப்பவர்கள்! என்றாலும் பிறந்த மண்ணை மறக்காமல் குழந்தைகளுக்கும் கலாசாரத்தைக் கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்தியக்குழந்தைகள் ஆடியதோடு நிகழ்ச்சி முடிவடைந்தது. கடைசியில் ஒரு ஊர்வலமாக எல்லா நாட்டுக் குழந்தைகளும் அவரவர் கொடியை ஏந்தி வந்தார்கள்.
இந்தியா என்பதற்குப் பொருளை ஆங்கிலத்தில் வாட்சப் குழுவில் பார்த்தேன்.
INDIA Independent Nation Declared in August என்று பொருளாம். Independent Nation Divided in August என்றும் சொல்லலாமே எனத் தோன்றியது!
எல்லாக் குழந்தைகளும் ஒன்றாக மேடையில்
காயோ, கனியோ, சமையலோ, சாப்பாடோ இந்தியாவில் செய்யும் ருசியில் இங்கு அமைவதில்லை என்றே சொல்ல வேண்டும். பொருட்கள் எல்லாம் நன்றாகவே இருக்கிறது. எல்லாமும் கிடைக்கிறது. என்றாலும் நம் நாட்டு மண்ணின் ருசி இதில் இல்லை தான்!
வந்தேமாதரம்!