எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 28, 2018

தொல்காப்பியர் தப்புப் பண்ணிட்டாரோ?

பப்பாளி விதைகளை ஒரு கிண்ணத்தில் போட்டு சமையலறைத் தொட்டி முற்றத்தின் அருகே வைத்தால் கொசுக்கள் வருவதில்லை எனக் கலிஃபோர்னியாவில் இருக்கும் ராஜம் அம்மா சொன்னார்கள். இந்தியாவிலும், தமிழ்நாட்டில், திருச்சி, ஶ்ரீரங்கத்தில் முயல்வோமே என முயன்றேன். நேற்று முன் கூடத்தில் வைத்தப்போவும் கொசுக்கள் வரவில்லை. இப்போ சமையலறைத் தொட்டி முற்றம் அருகே வைச்சிருக்கேன். சின்னச் சின்னதாகக் கூட்டமாக இருக்கும் கொசுக்கள் இல்லை! மற்றவர்களும் முயன்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.  வேப்பெண்ணெயில் விளக்கு எரித்தாலும் கொசுக்கள் அண்டாது என்கிறார்கள்.

*********************************************************************************

ஶ்ரீவிஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது அமர்ந்த வண்ணம் கண்களை மூடிக் கொண்டு தியானம் தான் செய்திருக்கிறார் என்பது அந்த வீடியோவை உன்னிப்பாய்ப் பார்த்தவர்களுக்குப் புரியும்! ஆனால் தமிழ் ஆர்வலர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர்! தமிழ்த்தாயை அவமதித்து விட்டதாகச் சொல்கின்றனர்! எந்த பூஜை செய்தாலும், யாகங்கள், யக்ஞங்கள் செய்தாலும் அமர்ந்த வண்ணம் தான் செய்கிறோம்! இதனால் கடவுளை அவமதித்ததாகப் பொருள் ஆகிவிடுமா? என்னவோ போங்க! மறுபடி ஆரியன், திராவிடன் என்கிறார்கள். திராவிடம் என்பது ஓர் இனத்தைக் குறிப்பது அல்ல! அதே போல் ஆரியம் என்பதும் ஓர் இனத்தைக் குறிக்காது!  பிராமணர்கள் மட்டும் தான் கைபர், போலன் கணவாய் வழி வந்தார்கள் எனில் அவங்க அவ்வளவு வீர, தீரமாகப் போரிட்டு திராவிடர்களைத் தெற்கே அனுப்பிட்டாங்களா? மாடு மேய்ச்சுட்டு வந்ததாகத் தானே சொல்வாங்க! அப்படி வந்தவங்க என்ன ஆயிரக்கணக்கிலா? லக்ஷக்கணக்கிலா? ஏதோ கொஞ்சம் பேர் வந்ததாகத் தானே சொல்வாங்க? அந்தக் கொஞ்சம் பேரைப் பார்த்துட்டு அத்தனை திராவிடர்களும் பயந்து தெற்கே ஓடி வந்துட்டாங்களா?

சரி, அதான் போகட்டும்.! ஆரியர்கள் வந்ததாகவே வைச்சுப்போம். எப்போ வந்தாங்க? தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுதறதுக்கு முன்னாடியா? பின்னாடியா? ஏன்னா தமிழர்கள் தான் இந்தியாவின் மூத்தகுடிமக்கள்! இந்தியா முழுமைக்கும் தமிழ் தான் பேசிட்டு இருந்தாங்க! ஆரியர்கள் வந்து தான் தெற்கே விரட்டிட்டாங்க என்கிறாங்க! தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரோ தொல்காப்பியர்! அதிலே என்னன்னா ஆரிய தெய்வங்கள்னு இவங்க சொல்லும் தெய்வங்கள் பத்திக் குறிப்பிடறார்.  ஆரிய கலாசாரத்தையும் சொல்றார்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை, குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே"(தொல்காப்பியம், பொருள்-அகத்திணை-05)

 இந்த மாயோன், சேயோன், வருணன் ஆகியோர் ஆரியரின் வழிபாட்டுத் தெய்வங்கள்! நாமோ தமிழர்! இந்த நாட்டின் மூத்த குடிமக்கள்! நம்ம மொழிக்கான இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் எப்படி இவங்களைக் குறிப்பிடுகிறார். அப்போ தொல்காப்பியருக்கு முன்னாடி ஆரியர்கள் வந்துட்டாங்களா? அல்லது தொல்காப்பியருக்கு அப்புறமா வந்தாங்களா? அல்லது தொல்காப்பியர் பிறக்கும்போதே இவங்களை எல்லாம் கூட்டிட்டு வந்துட்டாரோ? ஜந்தேகமா இருக்கே!

அதோடு இல்லாமல் வேதங்களில் சொல்லப்படும் எட்டுவகைத் திருமணங்கள் பத்தியும் தொல்காப்பியத்தில் சொல்லி இருக்கு! அது எப்பூடி? அபிதான சிந்தாமணி என்னும் தமிழ்க்கலைக் களஞ்சியத்தில் இந்த எட்டுவகைத் திருமணங்கள் பற்றிச் சொல்லி இருக்காங்களே! பிராம்மம், தெய்விகம், ஆருஷம், பிரஜாபத்யம், ஆசுரம்,காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் ஆகியன எட்டுவகைத் திருமணங்கள். இதிலே பிராம்மம் வகைத் திருமணங்களே அதிகம் நடைபெற்றதாகவும் தெரியுது! அது எல்லாம் வேதம் ஓதிச் செய்யப்படும் திருமணங்களாச்சே! அதிலேயும் கன்னிகாதானம் பற்றியும் சிறப்பாகச் சொல்லி இருக்காங்க! அது எப்பூடிங்க? ஆரியர்களின் இந்தப் பழக்கங்கள், கலாசாரங்கள் எல்லாமே தொல்காப்பியத்துக்கு வந்திருக்கு?

அதோடு இல்லாமல் முப்புரிநூல் எனப்படும் பூணூல், கமண்டலம், முக்கோல், பலகை போன்றவை அந்தணர்க்கு மட்டுமில்லாமல் அரசர்க்கும் உரியவை என்கிறாரே தொல்காப்பியர்! என்னங்க இது?  அப்போத் தொல்காப்பியருக்கு முன்னாடியே ஆரியர் வந்துட்டாங்களா? அவங்க வந்து தான் நமக்கெல்லாம் மொழி அறிவே வந்துச்சோ? அப்படின்னா அதுக்கு முன்னாடி என்ன மொழி பேசினோம்? தொல்காப்பியருக்கு அப்புறமா ஆரியர் வந்தாங்கன்னா அவங்க பழக்கங்களெல்லாம் தொல்காப்பியருக்கு எப்படித் தெரிஞ்சுச்சு? மொழி அறிவே நமக்கு அப்புறமாத் தான் வந்ததா? அதுக்கு முன்னாடி?  இல்லைனா தொல்காப்பியமே தப்போ? அப்போ இலக்கண மரபுகள்? அதுங்க கதி என்னாகும்?  இந்த மரபியல்கள் எல்லாம் நமக்குக் காலம் காலமாத் தானே வந்திருக்கணும்? புதுசா ஏன் ஆரியர்கள் வந்தாங்க, திராவிடர்களைத் தெற்கே விரட்டி அடிச்சாங்க,அவங்க பழக்கங்களை நுழைச்சாங்கனு சொல்லிட்டு இருக்கணும். கொஞ்சமும் பொருந்தும்படியா இல்லையே! ஒண்ணு தொல்காப்பியம் பொய்யா இருக்கணும்! இல்லைனா ஆரியர்கள் தொல்காப்பியருக்கு முன்னாடியே வந்திருக்கணும்! அதான் ஆரியப் பழக்கங்களை எல்லாம் சொல்லி இருக்காரோ! :)))))) அவங்க மூலமாத் தான் நமக்கு மொழி அறிவும், இலக்கண, இலக்கியங்களின் லக்ஷணமும் புரிய ஆரம்பிச்சிருக்கணும்! :))))

என்னவோ போங்க! ஒண்ணும் சொல்லிக்கிறாப்போல் இல்லை! 

Friday, January 26, 2018

பெரிய ரங்குவைப் பார்த்துட்டோம்!

 Image may contain: one or more people, people standing and night

நன்றி. முகநூல் மூலமாக நண்பர் ஜம்புகேஸ்வரன் கணபதி அவர்கள்

நேத்திக்கு நம்ம பெரிய ரங்குவைப் பார்க்கப் போனோம். இப்போ பூபதித் திருநாள் நடப்பதால் நம்பெருமாள் கருவறையில் இருக்க மாட்டார். விசாரித்ததில் அவர் இங்கே தான் காவிரிக்கரைக்கு கருட மண்டபம் வந்திருப்பதாய்த் தெரிந்தது. அங்கே போகலாமா அல்லது பெரிய ரங்குவைப் பார்க்கலாமானு ஒரு சின்ன பட்டிமன்றம். அப்புறமாப் பெரிய ரங்குவையே பார்க்கலாம். கோயிலுக்குப் போயே ஒரு வருஷம் ஆகுதேனு முடிவெடுத்தோம். நம்பெருமாளுக்கு நேத்திக்குத் தங்க கருடன் வாகனமாம். மாலை ஆறு மணிக்கு மேல் கருடமண்டபத்திலிருந்து எழுந்தருளுவார் என்றார்கள். இந்த ஊருக்கு வந்த வருடம் போய்ப் பார்த்தோம். அப்புறமாப் போக முடியலை.

ஒரு வழியா மூணு மணிக்கு மேல் கிளம்பினோம். வழக்கம் போல் வடக்கு வாசலில் இறங்கிக் கொண்டு முதலில் தாயாரைப் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டோம். கோயில்களுக்குப் போகாமலேயே ஒருவருடம் கடந்ததாலோ என்னமோ இரண்டு பேருக்குமே நடக்கச் சிரமமாகவே இருந்தது. என்றாலும் மேலே தொடர்ந்தோம். தாயாரைப் பார்க்கக் கூட்டம் இருந்தாலும் பட்டாசாரியார்கள் விரட்டவில்லை. மென்மையாகவே சொன்னார்கள். நன்கு தரிசனம் செய்து கொண்டு மஞ்சள், சடாரி போன்றவை கிடைக்கப் பெற்று வெளியேறினோம்.  பொய்கைக்கரை வாசலில் பாட்டரி காருக்குக் காத்து நின்றோம். வருவதற்கு நேரம் ஆகும் என ஒருத்தர் சொல்ல நடக்க ஆரம்பித்தோம். பாதிவழியில் எதிரே பாட்டரி கார்! என்னத்தைச் சொல்றது!

மெதுவாக ஆர்யபடாள் வாசலுக்கு வந்து அங்கே மலை போல் உயரமான படியை ஒரு மாதிரியாக் கடந்து ஏறினோம். இரண்டு வருடங்கள் முன்னால் வரை அதைச் சாய்வுத் தளம் போட்டு ஏற வசதியாகச் செய்திருந்தார்கள். இப்போ மாத்திட்டாங்க. வழக்கம்போல் கொடிமரத்துக்கிட்டேயே டிக்கெட் கவுன்டர். 50 ரூபாய்க்குக் கூட்டம் இல்லை என்பதால் அதே எடுத்துக் கொண்டோம். மறுபடியும் படிகள் ஏறுதல், இறங்குதல்! நம்ம ரங்க்ஸானாத் திரும்பியே பார்க்காமல் போகிறார். அப்புறமா ஓர் அம்மாள் உதவி செய்ய மெதுவாக ஏறினேன். அதுக்குள்ளே கால் கட்டைவிரலில் இடித்துக் கொண்டேன். ஏற்கெனவே அங்கே மாவு வைத்திருந்த அடுக்கு விழுந்து அடிபட்டு வீக்கம் இன்னும் வடியவில்லை. மேலே மேலே அதே இடத்திலேயே இடித்துக் கொண்டு வந்தேன்.

கொஞ்ச நேரக் காத்திருப்புக்கு அப்புறமா கருவறைக்குப் போயிட்டோம். எங்களுக்கு முன்னால் சென்றவர் பட்டாசாரியார்களுக்கு வேண்டியவர் என்பதால் அவருக்கு தீபம் காட்டி முகம், திருவடி சேவை செய்து வைத்தார்கள்.  அதிர்ஷ்டம் அடிக்குதுனு நாங்களும் பார்த்துக் கொண்டோம். வெகு நாட்கள் கழித்துப் பார்க்கிறோமா! ரங்குவைப் பார்த்ததுமே கண்ணில் நீர் ததும்பியது. நம்பெருமாள் அவர் இடத்தில் இல்லாமல் வெறிச்சென இருந்தது. உபய நாச்சியார்கள் இருந்தனர். யாகபேரர் இல்லை. அவரை எங்கே வைச்சிருக்காங்கனு கேட்க ஆசை! ஆனால் பதில் சொல்வாங்களோ இல்லையோனு திரும்பினேன். திரும்பும்போதும் படியைக் கவனிக்காமல் ரங்குவையே கவனிச்சதில் மறுபடி இடித்துத் தடுக்கி விழுந்து அங்கிருந்த பாலாஜி என்னும் ஊழியர் கையைப் பிடித்துக் கூட்டி வந்து இறக்கி விட்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டுத் தீர்த்தம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம். சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின்னர் பாட்டரி கார் வர அதிலே வெளியே வந்தோம். இதுக்கே வீட்டுக்கு வரச்சே மணி ஐந்தே கால் ஆகி இருந்தது.

மேலே கருட சேவைப் படம். நேத்திக்குக் கோயிலில் படம் எடுக்க முடியவில்லை. அலைபேசி இருந்தாலும் சார்ஜ் இல்லை என்பதைக் கவனிக்கவே இல்லை! :) அதோடு படிகள் ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் கவனம் அதில் இருந்தது. இன்னும் சில நாட்களில் தேர்த் திருவிழா. அப்போப் படம் எடுக்கணும்னு நினைச்சுட்டு இருக்கேன். பார்க்கலாம்.



இது கும்பாபிஷேஹத் திருப்பணிகள் செய்கையில் எடுத்த படம்!

Wednesday, January 24, 2018

மாவிளக்கும், உளுந்து வடையும்! சரியான கூட்டு தானா? :)

அதிரடிக்கு மாவிளக்குப் பத்தி நெ.த. சொன்னதில் கொஞ்சம் சுணக்கம்! ஹெஹெஹெஹெ! அவங்க மாவு எப்படித் தயாரிப்பாங்கனு தெரியலை! நாங்க எப்போவுமே கடையிலே வாங்கும் மாவில் மாவிளக்குப் போடுவது இல்லை! முன்னெல்லாம் கருவிலியில் வீடு இருந்ததால் என்னிக்கு மாவிளக்குப் போடறோமோ அந்த வெள்ளியன்று காலைதான் அரிசியையே ஊற வைப்போம். இதிலே என் மாமியார் ஒரு படிக்குக் குறையக் கூடாதுனு சொல்லிடுவாங்க! அன்னிக்குக் காலம்பரலே இருந்து வீடு திமிலோகப்படும்! சீக்கிரமாக் குளிச்சுட்டு மாவு இடிக்க உட்காரணும். மகமாயி/மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடும்போது அதைச் சலிக்கக் கூடாதுனு சொல்வாங்க! ஆகவே கூடியவரை மாவு நன்றாக இடிபடும் வரை இடிக்கணும். வீட்டு வேலை செய்யறவங்கல்லாம் உதவ முடியாது! குளிச்சுட்டு ஈரப்புடைவையை உள் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டு உட்கார்ந்து இடிக்கணும்.

இடிக்கும்போதே அதிலேயே வெல்லத்தையும் போடுவாங்க! இரண்டையும் சேர்த்து இடிக்கணும். மாவு இளகி வரும் பதத்துக்கு வந்துட்டால் எடுத்துடுவோம். ஏலக்காயையும் சேர்த்தே போட்டு இடிப்பது வழக்கம்.  அதுக்கப்புறமா அதை இரண்டு உருண்டைகளாக உருட்டி நடுவில் குழி செய்து நெய்யை ஊற்றிப் பஞ்சுத் திரி போடணும். சுமார் நான்கு ஆண்டுகள் முன்னர் வரையிலும் கொட்டை எடுக்காத பஞ்சைத் தான் கொட்டை நீக்கித் திரித்துப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமாக் கோயிலிலேயே பூசாரி மாவிளக்குத் திரியே விக்கறாங்க அம்மா, அதையே வாங்கிப் போடுங்கனு சொன்னார். அதுக்கு அப்புறமா அதான் வாங்கி வைச்சிருக்கேன். அடியிலே குண்டாகவும், மேலே திரி மெல்லிதாகவும் இருக்கும்! என் மாமியாருக்கு இந்த விஷயம் தெரியாது! ஹிஹிஹி!

ஏனெனில் அவங்க இப்போல்லாம் மிக்சியில் அரைப்பதையே ஒத்துக் கொள்ள யோசிப்பாங்க! கருவிலியில் வீடு போனப்புறமாக் கூடக் கோயிலில் என் பெரிய மாமியார் போட்டிருந்த கல்லுரலில் தான் மாவு இடிப்போம். முதல்நாள் இரவே பேருந்தில் கும்பகோணம் கிளம்பிக் காலை நாலு மணி அளவுக்குக் கும்பகோணம் போவோம். அங்கிருந்து கிளம்பும் முதல் டவுன் பஸ்ஸில் ஊருக்குப் போவோம். அங்கே கோயில் குளத்திலேயே குளித்துவிட்டு ஈரப்புடைவையுடன் மாவு இடிப்போம்.  அதுக்குள்ளே பூசாரி வந்து கோயில் கதவைத் திறப்பார். அவரைப் பால் வாங்கி வைச்சிருக்கச் சொல்லி இருப்போம். கையில் இன்ஸ்டன்ட் காஃபி பவுடர், சர்க்கரை கொண்டு போவோம். காஃபி சாப்பிட்டுக் கொள்வோம். அதுவே எனக்கு மிகுந்த அவஸ்தையாக இருக்கும். கழிப்பறை வசதி என்பதே இல்லாத கிராமங்கள் அவை எல்லாம்! எனக்குத் தெரிந்து கருவிலி கோயிலில் முதல் முதல் கும்பாபிஷேஹம் ஆகும் வரைக்கும் அங்கே கழிவறையே கிடையாது! அப்போத் தான் முதல் முதல் கழிவறை கட்டினாங்க! ஆகவே கருவிலி வந்துவிட்டுப் போனால் எனக்குக் கொஞ்சம் வசதி தான்! ஆனால் அங்கே  எல்லாச் சமயங்களிலும் முதலில் போக முடிவதில்லை! காஃபி தவிர்த்துக் குழந்தைக்குப் பால், எங்களுக்குக் கஞ்சினும் அந்த விறகடுப்பில் போட்டிருக்கேன். ஒரு தரம் எங்க பொண்ணு வந்தப்போக் கையோடு இன்டக்‌ஷன் ஸ்டவையும் பால் காய்ச்சும் பாத்திரங்களும் எடுத்துப் போய்க் குழந்தைக்குப்  (அப்புவுக்கு) பால் காய்ச்சிக் கொடுத்திருக்கேன்.


மாரியம்மன் கோயில் சமையல் அறை

இப்போக் கருவிலிக் கோயில் கழிப்பறையும் வீணாகிப் போய்விட்டது! மக்கள் பயன்படுத்தத் தெரியாமல் அசிங்கமாக வைத்திருக்கின்றனர். இரண்டு வருஷங்களுக்கும் மேல் அதைப் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகிறது! ஆனால் மாரியம்மன் கோயிலில் வருகிறவர்கள் தங்கவும், கழிவறை வசதிக்காகவும் இப்போப் புதுசாக் கட்டி இருக்காங்க! ஆனாலும் சுத்தம் போதாது! கழிவறைக்கோ, குளியலறைக்கோக் கதவு கிடையாது! பொதுவான வெளிக்கதவு மரம் நன்றாக இல்லாததால் சார்த்தவும் முடியலை! திறக்கவும் முடியலை! பின்னர் வந்த நாட்களில் முதல்நாளே கிளம்பிக் கும்பகோணத்தில் அறை எடுத்துத் தங்கிக் கொண்டு வெள்ளிக்கிழமை காலை ஊருக்குப் போக ஆரம்பித்தோம். இது கிட்டத்தட்ட 2000 ஆம் வருஷம் முதல் பழக்கம் ஆனது! ஆகவே மாவிளக்குக்கு உரிய மாவை புதன் கிழமையே தயார் செய்யணும். மாவு ஈரம் போகக் காயணும்! எல்லாம் பக்குவமாக அன்று இதைத் தயார் செய்து முடிக்கும் வரை சாப்பிடாமல் எல்லாம் செய்துப்பேன். இதற்கெனத் தனிப் பை வைச்சுப்பேன். அந்தப் பையை வேறே யாரிடமும் கொடுக்கக் கூடாது! இப்படிச் சில வருடங்கள்!

அதுக்கப்புறமாப் பையர் கல்யாணம் ஆனதும் மருமகள் மாவிளக்குப் போட ஆரம்பித்தாள். பையர் ரயில் பயணத்தை விரும்பாததால் அவருக்காக வேண்டிக் காரிலேயே சென்னையிலிருந்து போக ஆரம்பித்தோம். அப்போ வியாழன் அன்று காலையிலேயே மாவைத் தயார் செய்துப்பேன். காரிலே போய்க் கும்பகோணத்தில் இரவு தங்கி மறுநாள் காலை குளித்துவிட்டு அங்கிருந்து சென்று கோயிலில் மாவிளக்குப் போடுவோம். ஓட்டலில் டிஃபன் வாங்கிச் சாப்பிட்டிருக்கும் பையரும், நம்ம ரங்க்ஸும் அவங்க அவங்க தங்க்ஸுக்கும் சேர்த்து டிஃபன் வாங்கிடுவாங்க. மாவிளக்குப் போட்டு முடிச்சதும் சாப்பிடமாட்டேன்னு சொல்லாமல் அதைச் சாப்பிட வேண்டி இருக்கும். என்றாலும் நான் எப்படியோ வேண்டாம்னு சொல்லிடுவேன்.  இப்படியாகத் தானே மாவிளக்குப் புராணம் கால, தேச, வர்த்தமானங்களை ஒட்டி மாறுதல் பெற்றது.

இப்போல்லாம் காரிலேயே போய்விடுவதால் (ஹை, பணக்காரங்களாயிட்டோமுல்ல!) வியாழன் அன்று பனிரண்டு மணிக்குள்ளாகக் கொழுக்கட்டை, மாவிளக்கு எல்லாமும் தயார் செய்துடுவேன். பின்னர் வெள்ளியன்று காலை மூன்றரைக்கு எழுந்தால் ஐந்தரைக்குக் கிளம்பும் வரை வேலை சரியாக இருக்கும்.  காலை ஆகாரத்துக்கு இட்லி, புளியஞ்சாதம், தயிர்சாதம் தயார் செய்து ஃப்ளாஸ்கில் காஃபியும் எடுத்துப்பேன். கோயிலில் மாவிளக்கு ஏற்றுவதற்கு முன்னால் மாவையும், வெல்லத்தையும் நன்றாகக் கலக்கவேண்டும். தண்ணீர் அதிகம் பயன்படுத்தாமல் உத்தரணியால் மட்டும் தெளிச்சுப்பேன். நெய் சேர்த்துக் கொண்டு கையாலேயே மாவைப் பிசைய வேண்டும். வெல்லம் இளகியதாக இருந்தால் சீக்கிரமாய் உருட்ட வரும். இம்முறை கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. எனக்கு வேறே கையில் வலி இருந்ததால் அதிகம் வலுவுடன் உருட்டவும் முடியலை! ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு நெய்யை விட்டுப் பிசைந்தே உருட்டி விட்டேன்.

பின்னர் குழி செய்து நெய்யை ஊற்றிக் கொண்டு திரியை அதில் நனைத்துக் கொண்டு மாவிளக்கை ஏற்றினோமானால் முழுதும் எரிந்து முடியும்வரை விட்டு வைப்பதில்லை. திரியின் அடிப்பாகத்துக்கு வந்துவிட்டால் மலை ஏறி விட்டது என்போம். அப்போ ஒரு உத்தரணியால் எடுத்து அருகே உள்ள விளக்கு எதிலானும் மாற்றிவிடுவோம். இரு திரிகளையும் அப்படியே மாற்றுவோம். எங்க அம்மா வீட்டில் மாவிளக்கு மாவை உருட்டுவதில்லை. பொடியாகவே வைப்பார்கள். தேங்காயைத் துருவிச் சேர்த்து விடுவார்கள். அதைத் தவிர்த்தும் தேங்காய் உடைத்து வைப்பார்கள். நடுவில் குழி செய்து நெய்யை ஊற்றிக் கொண்டு அதில் துணியால் முடிச்சுக் கட்டித் திரி போல் செய்து போடுவார்கள். அந்த முடிச்சின் அருகே திரி எரிந்து முடிய ஆரம்பித்தால் மலை ஏறிவிட்டது என்று சொல்லி எடுத்து விடுவார்கள். இது அவரவர் வீட்டு வழக்கம். ஏற்றிவிட்டுத் திரி முழுதும் எரிந்து முடியும்வரை விட்டு வைத்தால் தான் அதிராவின் மாவிளக்கில் பார்த்த மாதிரி ஆகி விடுகிறதோ என நினைக்கிறேன். அதிரா என்ன செய்தார்னு தெரியலை! :))))

மாவிளக்கு ஆச்சா! இப்போ வடை! எ.பி. வாட்ஸப்பில் 500 கிராம் உளுந்தில் வடை செய்யறதைப் பத்திப் பேச்சு வந்தது. அப்போ நான் 500 கிராம் உளுந்தில் வடை செய்தால் 50 பேர் சாப்பிடலாம்னு சொல்ல நெ.த. 500 கிராம் மாவில் 22 வடை வரும்னு ஓட்டல்காரங்க சொன்னதாகச் சொல்லி இருந்தார். 500 கிராம் மாவு என்பது உளுந்தை மெஷினில் கொடுத்து மாவாக(பவுடர்) அரைத்தது எனில் வேண்டுமானால் நெ.த. சொன்னாப் போல் இருக்கலாம். ஆனால் 500 கிராம் உளுந்தை ஊற வைச்சு அரைச்சால் வடை நிறைய வரும். முதல்லே வீட்டு உபயோகத்துக்கு இருக்கும் கிரைண்டர்கள் எனில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டே அரைக்கணும்! அதுவே ஓட்டலுக்கென உள்ள பெரிய கிரைண்டர்கள் எனில் எல்லாத்தையும் போடலாம். ஆனால் சில, பல சமயங்கள் உளுந்து அரைபட்டு மேலே மேலே வரும்போது சுற்றி வாரியடிக்கும்.  எங்க வீட்டிலே ஒரு விசேஷத்திலே அம்மாதிரி ஆகிவிட்டது! சுவரெல்லாம் உளுந்து மாவு! :)))) இன்னைக்கு ரதசப்தமிக்கு நிவேதனம் செய்ய உ.வடைக்கு ஒரே ஒரு கிண்ணம் தான் போட்டேன். மிக்சியில் தான் அரைத்தேன். பனிரண்டு வடைகளுக்கு  மேல் வருகிறது! உளுந்தின் தரம் முக்கியம்! உதயம் உளுந்து எனில் நன்றாகவே வருகிறது. ஒரு சில கடைகளில் உளுந்து நன்றாக இருக்கிறது. ஆனால் ரேஷனில் வாங்கும் உளுந்து எனில் தரம் நிரந்தரம் அல்ல! :))))

Monday, January 22, 2018

குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்! 2

 

மாவிளக்கு இந்தச் சுட்டியில் பார்க்கவும்! (எனக்கு வேலை செய்யுது!)

எல்லோரும் மாவிளக்குப் படத்தையே கேட்டதால் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே பகிர்ந்திருந்ததைப் போட்டிருக்கேன். ஹெஹெஹெஹெ, முந்தாநாள் கோயிலில் கூட்டம் என்பதோடு, என்னோடு சேர்ந்து மற்ற மூவர் மாவிளக்கு ஏற்றி இருந்ததால் படம் எடுக்க முடியவில்லை! அவங்க ஆக்ஷேபணை தெரிவிப்பாங்களோ என்பதோடு நம்ம ரங்க்ஸும் வேண்டாம், எடுக்காதேனு சொல்லிட்டார்! இது  2009 ஆம் ஆண்டிலேயோ 2010 ஆம் ஆண்டிலேயோ மாவிளக்குப் போட்டப்போ எடுத்த படம்! இதே போல் தான் இப்போவும் போட்டேன். விளக்கு நின்னு நிதானமா எரிஞ்சது!

கருவிலி கோயிலில் உள்ளே நுழையும்போது பார்க்க இருட்டாகத் தெரிந்தாலும் வெளிச்சம் தான் உள்ளே! நேரே கருவறை என்பதால் அதிகம் ஜூம் பண்ணிப் படம் எடுக்கலை! மேலும் நான் கோயிலின் வெளியே ராஜகோபுரத்துக்கு எதிரே இருந்து படம் எடுத்ததாலும் உள்ளே இருட்டாகத் தெரியுது!  கருவிலி கோயில் பத்தியும் சர்வாங்க சுந்தரி பத்தியும் ஏற்கெனவே பல முறை எழுதி இருக்கேன். அம்பாள் நல்ல உயரமாக இருப்பாள். படம் பழைய ஃபைல்களில் இருந்து எடுத்ததைக் கீழே பகிர்கிறேன்.



நம்ம ரங்க்ஸின் செல்லப் பிள்ளையார் கீழே! இவரையும் பலமுறை பகிர்ந்திருக்கேன். இம்முறை இவரைப் பார்க்கவே இல்லை! கொஞ்சம் குறை தான்! தினமும் இவருக்கு எண்ணெய் முழுக்காட்டிப் பூ வைச்சு, தீபம் ஏற்றிவிட்டுத் தான் ரங்க்ஸ் பள்ளிக்குச் செல்வாராம்!

 


கருவிலி
சென்ற வருடம் மே மாதம் நாங்க அம்பேரிக்காவில் இருந்து வந்ததும் ஜூன் 30 ஆம் தேதி கருவிலி கோயிலில் கும்பாபிஷேஹம் எனத் தெரிய வந்தது. ஆனால் போக முடியவில்லை. ஆனால் அதைக் குறித்து ஒரு பதிவு எழுதினேன். அது கருவிலி குறித்த இணைய தளத்தில் கோயில் அறங்காவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது. கோயில் அறங்காவலர்கள் தூரத்து உறவினர்களே! மேற்கண்ட சுட்டியில் அதைக் காணலாம். மேலும் கோயில் குறித்த தகவல்களையும் அறியலாம்.

கருவிலி கோயிலில் இருந்து பொய்யாப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றோம். அங்கே பிள்ளையார் மட்டும் தன்னந்தனியாக எப்போவும் போல் இருந்தார். அவருக்கு விளக்கு ஏற்றி வைத்ததில் இருந்து குருக்கள் வந்து நித்தியப்படி வழிபாடுகளைச் செய்து விட்டுப் போய்விட்டார் என்பது தெரிந்தது. பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நிவேதனம் செய்து தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி வழிபாடுகள் செய்தார் ரங்க்ஸ். அதன் பின்னர் அங்கிருந்து நேரே பெருமாள் கோயிலுக்கு வந்தோம்.



இந்தப் பதிவில் சொன்ன மாதிரிப் பெருமாள் கிடைத்தாலும் வலக்கையின் சக்கரம் உடைக்கப்பட்டு இருக்கிறது. அதோடு கைக்கட்டை விரல், சக்கரத்தைப்பிடித்திருக்கும் ஆட்காட்டி விரல் போன்றவையும் வெட்டப்பட்டு இருக்கின்றன. அந்தப் படங்கள் கீழே! இது இன்றைய நிலைமை. இப்போதும் இதே நிலைமை தான்!











இப்போதும் பெருமாள் இதே நிலைமையில் கூண்டில் தன்னுடைய கை சரியாகவும் கருட சேவைக்காகவும் காத்திருக்கார்!

பிச்சை எடுக்கும் பெருமாள்

இந்தத் தலைப்பில் என்னுடைய புகுந்த ஊரான பரவாக்கரைப் பெருமாள் பத்தி எழுதி இருந்தேன். அதன் பின்னர் அவர் காணாமல் போனார். அதைக் குறித்து எழுதிய பதிவு இதோ!

ஓர் அவசரப் பதிவு இது! பெருமாளையே காணோம்!

அதன் பின்னர் அப்போது இந்தச் சிலைக்கொள்ளைகளைத் தடுக்கும் காவல்துறை அதிகாரியான திருமதி திலகவதியை நேரில் சென்று பார்த்து விண்ணப்பித்தோம். அப்போது இந்தப் பெருமாளின் படத்தையும் ஸ்கான் செய்து எடுத்துப் போனோம். அதை வைத்துப் பின்னர் காவல்துறை பெருமாள் இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துப் பெருமாளை மீட்டு விட்டார்கள். ஆனாலும் பெருமாள் கோயிலுக்கு வரவில்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் போதாது என்ற காரணத்தால் திருவாரூரிலேயே வைக்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த 2015 ஆம் வருடம் ஒரு வழியாகக் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.
பெருமாள் கிடைத்து விட்டார்!

அதன் பின்னர் கும்பாபிஷேஹம் 2011 ஆம் ஆண்டு செய்தோம். படங்களுக்கான சுட்டி இங்கே
 கும்பாபிஷேஹப் படங்கள்

Saturday, January 20, 2018

குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழியில்!

அம்பேரிக்கா போறதுக்கு முன்னாடி குலதெய்வம் கோயிலுக்குப் போனோம். அங்கேருந்து வந்ததும் கோயில்களுக்கே போக முடியலை! இதிலே குலதெய்வம் கோயிலுக்கு எங்கே இருந்து போறது? குடும்ப புரோகிதர் போகக் கூடாதுனு சொல்லிட்டார்! ஒரு வழியா வருஷாந்திர விசேஷங்கள் முடிஞ்சதும் போகலாம்னு முடிவு செய்து நேற்றுப் போனோம். மாரியம்மனுக்கு மாவிளக்குப் போடணும்னு வேறே முடிவு செய்திருந்ததால் வியாழன் அன்றே மாவிளக்குக்கு அரிசி மாவைத் தயார் செய்து கொண்டேன். ஊரில் உள்ள பொய்யாப் பிள்ளையாருக்கு நெய்க்கொழுக்கட்டையும் தயார். மற்றும் அபிஷேஹ சாமான்கள் வாங்கிக் கொண்டு பூ, பழம், இளநீர் என மற்றப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு நேற்றுக் காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பினோம்.  காலை மூன்றரை மணிக்கே எழுந்து கொண்டு கைக்கு எடுத்துச் செல்ல இட்லி, புளியஞ்சாதம், தயிர்சாதம் ஆகியவற்றைக் குளித்து விட்டுப் பின்னர் தயார் செய்து கொண்டேன்.

மாவிளக்குப் போடும்வரையிலும் நான் சாப்பிட மாட்டேன் என்பதால் காஃபியும் ஃப்ளாஸ்கில் எடுத்துக் கொண்டேன். இம்முறை ட்ராவல்ஸ் மூலம் வண்டி ஏற்பாடு செய்யவில்லை. அவங்க கிலோ மீட்டருக்குப் பத்து ரூபாய் வரை வாங்குவதால் ஃபாஸ்ட் ட்ராக்கிலேயே புக் செய்திருந்தோம். சரியான நேரத்துக்கு டிரைவர் வந்து விட்டார். திருவானைக்காவல் தான் ஊராம்! சொந்த வண்டி என்பதால் நன்றாகப் பராமரிப்புக்கள் செய்திருந்தார். ஐந்தே முக்காலுக்குக் கிளம்பிய வண்டி கல்லணை மார்க்கமாகச் சென்று ஏழரைக்குள்ளாகக் கும்பகோணம் வந்தாயிற்று. ட்ராவல்ஸ் வண்டிக்காரங்க கல்லணை மார்க்கத்தில் வருவதில்லை. அதோடு முன்னெல்லாம் மணல்குவாரிகள் இருந்ததால் கல்லணை மார்க்கத்தில் செல்ல முடியாமல் இருபக்கமும் லாரிகள் அணி வகுத்து நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தன. இப்போது மணல் குவாரிகளே இல்லை என்பதால் பிரச்னை இல்லை என்பதோடு சாலையும் நன்றாக தேவையான அளவுக்கு அகலப்படுத்தப்பட்டு வாகனங்கள் விரைவாகச் செல்லும் தகுதியிலும் இருந்தன.

கும்பகோணத்தில் இறங்கிக் கொண்டு ஓட்டுநரைச் சாப்பிடச் சொல்லிவிட்டு நாங்கள் பூஜைக்குத் தேவையான மற்றச் சில சாமான்களை வாங்கிக் கொண்டோம். பின்னர் வண்டி எட்டு மணிக்கு மீண்டும் கிளம்பிக் கருவிலி என்னும் சற்குணேஸ்வரபுரம் வந்து அடைந்தது. இது தான் நான் கல்யாணம் ஆகி முதல் முதல் புக்ககமாக வந்த ஊர். ஊருக்குச் செல்லும் வழியில் நிலங்கள் சில அறுவடைக்குத் தயாராகவும், சில பயிர்கள் வளர்ந்தும் காணப்பட்டன. அரிசிலாறு தான் சாக்கடையாக மாறிவிட்டதோடு ஓடவும் இல்லை. தண்ணீர் குட்டை போல் கன்னங்கறுக்கத் தேங்கி நின்றது. படம் எடுக்கலாம் என்றால் இந்தக் கோலத்தில் படம் எடுத்துப் போட்டால் அது அரிசிலாற்றுக்குச் செய்யும் துரோகம் என என் மனதில் தோன்றவே படமே எடுக்கவில்லை. செல்லும் வழியில் கண்ணில் பட்ட சில நிலங்களை மட்டுமே படம் எடுத்தேன்.  நான் பதினெட்டு, பத்தொன்பது வயதில் முதல் முதலாகக் கல்யாணம் ஆகிப் புக்ககம் வரும்போது அரிசிலாற்றில் வண்டியை இறக்கினார்கள். கொஞ்ச தூரம் போனதும் கீழே இறங்கி நடந்தேன். மெல்லிய வெண்மணல். பாதங்கள் மென்மையாக உள்ளே புதைந்தன! செருப்புப் போட்டுக் கொண்டு ஆற்றில் நடப்பதில்லை! ஆகவே வெறும் கால்களோடு தான் நடந்தேன். அந்த சுகம்! இப்போது நினைத்தால் அரிசிலாற்றில் காலை வைக்கவே கூசுகிறது.

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஒரு பெண்ணை ஏழு, எட்டுப் பேர் எப்படி பலாத்காரம் செய்கிறார்களோ என எனக்குக் கொஞ்சம் வியப்பாக இருக்கும். ஆனால் இப்போது இந்த அரிசிலாற்றைப் பார்க்கையில் வியப்பெல்லாம் போய்விட்டது! ஏனெனில் அரிசிலாற்றின் கதியும் அப்படித் தான் இருக்கிறது இப்போது. அந்தப்புரத்தை விட்டு வெளியேயே வராத அரசிளங்குமரி போல் அழகாய்க் காட்சி அளித்த அரிசிலாறு இப்போது போர் வீரர்களின் கைகளில் மாட்டிக் கொண்ட அரச குமாரியைப் போல் நிர்க்கதியாக மாறிச் சிக்கிச் சீரழிந்து விட்டது!

    


பின்னர் கருவிலி கிராமத்துக்கு வந்தோம். நாங்கள் வரப்போகும் தகவலை முன் கூட்டியே சொல்லி இருந்ததால் குருக்கள் அபிஷேஹ, அலங்காரங்களை முடித்துவிட்டுத் தயாராக இருந்தார். அவரிடம் அர்ச்சனை செய்யச் சொல்லி வாங்கிக் கொண்டோம். சர்வாங்க சுந்தரிக்கும் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக் கொண்டோம். ரங்க்ஸின் செல்லப் பிள்ளையாரைப் பார்க்கப் பிரகாரம் சுற்ற வேண்டும். ஆனால் எங்களுக்கு உடனடியாகப் பரவாக்கரை செல்ல வேண்டும். அங்கே பொய்யாப் பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை நிவேதனம் செய்து தேங்காய் உடைத்து வழிபட்ட பின்னர் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். பட்டாசாரியாரை ஒன்பதரைக்கு வரச் சொல்லி விட்டோம். இப்போதே மணி ஒன்பதே கால் ஆகி விட்டது. ஆகவே சுருக்கமான வழிபாடாகச் செய்து விட்டுப் பின்னர் பரவாக்கரை நோக்கிச் சென்றோம். கருவிலி கோயிலிலும் படங்கள் அதிகம் எடுக்கவில்லை. ராஜ கோபுரம் மட்டும் படம் எடுத்தேன். மூலவரை எடுக்க முடியாது!
                                                         
  

ராஜ கோபுரம் தூர இருந்தும் சற்றுக் கிட்டத்தில் இருந்தும்!  என்ன பிரச்னைன்னா படங்களை அலைபேசி மூலம் எடுத்தேன். காமிரா எடுத்துப் போகலை! அலைபேசியில் இந்தப் படங்களை ஏற்றியது புதிய லாப்டாப்பில்! அதில் மவுஸ் வேலை செய்யலையா! எனக்கு அதைப் பயன்படுத்தக் கொஞ்சம் சிரமமாக இருக்கு! ஏனெனில் விரல்கள் தகராறு! சட்டுனு ஸ்தம்பிச்சு நிற்கும் விரல்கள்! அசையாது! விரல்களால் மடிக்கணினியை இயக்கும் வித்தை இன்னும் கைவரவில்லை!  ஆகவே பழைய லாப்டாப்பை எடுத்து அதைக் கொஞ்சம் கெஞ்சிக் கொஞ்சிச் சீராட்டிக் கண்ணே, மணியேனு சொல்லி அதைப் பயன்படுத்தும் நேரம் முழுசுக்கும் அதற்கு சார்ஜிலேயே போட்டு வைச்சு( இல்லைனா, உடனே கண்ணை மூடிடும்! ) ஏதோ ஓரளவுக்கு வேலை செய்யறேனா! இதிலே மற்றப் படங்களையும் இங்கே போடுன்னா எப்படிப் போட முடியும்? எங்க பையர் பழைய லாப்டாப்பின் மவுஸையே  புதுசுக்கும் பயன்படுத்தலாம்னு சொல்றார். ஆனால் புதுசு பழைய லாப்டாப்பின் மவுஸைக் கிண்டலாய்ப் பார்க்குது! ஏத்துக்க மாட்டேன்னு சொல்லிடுச்சு! என்ன செய்ய! பழைய லாப்டாப்போ எந்நேரமும் சார்ஜில் இருந்தால் அற்புதமா வேலை செய்யுது! ஆகவே இப்போது கொஞ்ச நாட்களாக நம்ம வேலையெல்லாம் இப்படித் தான் நடக்குதாக்கும்!

அலைபேசியில் இருந்து இந்தப் பழைய லாப்டாப்பில் படங்களை ஏற்ற முடியலை! அதான் புதுசுலேயே ஏற்ற வேண்டி இருக்கு. காமிரான்னால் இதிலேயும் ஏற்றலாம், அதிலேயும் ஏற்றலாம். ஆனால் கிளம்பும் அவசரத்தில் ம.மவுக்கு அதெல்லாம் தோணவே இல்லை! அதான் கையிலே அலைபேசி இருக்கில்ல, போதும்னு கிளம்பியாச்சு!  இந்த அழகிலே நான் பின்னூட்டக் கருத்துகளுக்கு உடனே பதில் சொல்லலைனு நெ.த. அதிரடி அதிரா ஆகியோருக்குக் கிண்டல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அவங்க அவங்க இங்கே கணினிக்கு வந்து எழுதறதே பெரிய விஷயமாப் போச்சு! இதிலே இது வேறேயாக்கும்! இந்த மொக்கைக்குக் கூட்டம்  கூடிக் கும்மியடிக்கலாம்! என்ன வேணா நடக்கும்!

தொடரும்!



Tuesday, January 16, 2018

நல்லபடியாக எல்லாம் முடிந்தது! இறைவன் அருளால்!

நேற்று வீட்டில் நடந்த ஹோமத்தின் போது எடுத்த படங்களில் சில!


இது வேறே கோணத்தில் எடுக்கப்பட்டது!


அந்தப்பக்கம் ஹோமம் செய்யத் தயாராக ஹோம குண்டம்!


ஒருமாதமாக மாமியாரின் வருஷ ஆப்திகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வந்தோம். முக்கியமாய் அதற்கு உறவினர்கள் அனைவரும் கூடுவதால் சமையலுக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஏனெனில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் மூன்று நாட்களும் விசேஷங்கள்! அவங்க அவங்க வீட்டுப் பண்டிகையை விட்டு விட்டு யார் வருவாங்க என்பது தான் பெரிய பிரச்னை! ஒருவழியாக ஒரு மாமியைத் தேடிப் பிடித்துக் கண்டு பிடித்தோம். அவங்க சமையலும், பழகும் விதமும் எல்லோருக்கும் பிடித்தும் விட்டது! சமையலுக்கு ஆள் இருந்தும் எங்களுக்கும் வேலை இருக்கத் தான் செய்தது. அதிலும் நமக்குக் கேட்கவே வேண்டாம்! எக்கச்சக்க வேலை! புதன் கிழமையிலிருந்தே இணையத்தில் உட்கார முடியலை! வியாழனன்று ஒரு மாதிரியா வந்து எட்டிப் பார்த்தேன். வெள்ளிக் கிழமையிலிருந்து நான்கு நாட்கள் கணினியைத் தொடவே இல்லை!

ஆனால் அதுக்காக நம்ம பதிவுக்கு ஆளுங்க ஒண்ணும் ரொம்ப வந்துடலை! :) அதிலும் மார்கழிப் பதிவு, மீள் பதிவு வேறே! 2008 ஆம் ஆண்டில் எழுதினது! சும்மாப் போட்டு வைச்சேன். அன்னிக்குக் கூடாரவல்லிக்காகச் சர்க்கரைப் பொங்கல் கொஞ்சமாப் பண்ணினேன். பொங்கலுக்குத் தான் என்ன செய்யறதுனு ஒரே குழப்பம்! ஏனெனில் அன்று தான் ச்ராத்தம். பொங்கல் வைக்கும் நேரம் அதைவிடக் குழப்பம்! மாலை நாலரைக்குத் தான் மாசம் பிறப்பதாகச் சொன்னார்கள். நாலரைக்குச் சரியான ராகு காலம் ஆரம்பம்! பொங்கல் பண்ணி முடிப்பதற்குள் மணி ஆறாகி சூரியனார் விடைபெற்று அம்பேரிக்காவைப் பார்க்கப் போயிடுவார். இங்கே இருட்ட ஆரம்பிக்கும். அப்போ எப்படிப் பொங்கல் வைக்கிறதுனு ஒரே குழப்பம். அதோட ச்ராத்தம் அன்று பண்டிகை கொண்டாடலாமா என்னும் கேள்வியும். ஒரு வழியா ச்ராத்த வேலைகள் மதியம் இரண்டரைக்கு முடியவும் குடும்பப் புரோகிதர் இனிமேல் பொங்கல் பானை வைக்கலாம். நாலு மணிக்குள்ளாக நிவேதனம் செய்துடுங்க என்று சொன்னார்.

எல்லோரும் சாப்பிடப் போக நான் மட்டும் வேறே நல்ல புடைவையை மாற்றிக் கொண்டு வெண்கலப்பானைக்குச் சந்தனம், குங்குமம் தடவி மஞ்சள் கொத்துக் கட்டிப் பொங்கல் பானையைத் தயார் செய்து அடுப்பில் வைத்தேன். அரிசி, பருப்பை வறுத்துக் கொண்டு என் வழக்கப்படி முதலில் பருப்பைக் கரைய விட்டுப் பின் அரிசியைச் சேர்த்து இரண்டும் குழைந்ததும் வெல்லம் சேர்த்தேன்.  கிட்டத்தட்ட அரைலிட்டருக்கு மேல் பால் விட்டேன். அதிலேயே வெந்தது. பின்னர் பொங்கலைக் கீழே இறக்கி சுவாமிக்கு நிவேதனம் செய்துட்டு நான் சாப்பிடும்போது நாலே கால் மணி ஆகி விட்டது. வெறும் மோர் சாதம் தான் சாப்பிட்டேன். அன்று இரவு லங்கணம் பரம  ஔஷதம் என்று பட்டினி போட்டாச்சு! ஆக மொத்தம் ஒரு வழியாப் பொங்கல் கொண்டாடி விட்டோம். பொங்கல் பானையைப் படம் எல்லாம் எடுக்கலை! நேற்றைய சுப ஹோமமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. வந்திருந்த விருந்தினரில் என் பெரிய நாத்தனார் தவிர மற்றவர்கள் அவங்க அவங்க ஊருக்குப் போயாச்சு!

இனி இணையத்தில் நண்பர்கள் பதிவுகளைப் படிக்கணும். விட்டுப் போனவற்றைத் தொடரணும்! இறைவன் இழுத்துச் செல்லும் வழியில் செல்கிறோம். பார்க்கலாம்! என்ன செய்ய முடிகிறது என! பதிவுகளை ஒழுங்காகப் போட முடிந்தாலே பெரிய விஷயமா இருக்கு இப்போல்லாம்! 

Thursday, January 11, 2018

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தன்!

ஆண்டாள் க்கான பட முடிவு

முதன் முதல் நோன்பு ஆரம்பிக்கும் போது "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்" ஆரம்பிக்கும் கோதை நாச்சியார், பின்னர் 2-வது பாடலில் இந்த வையத்தில் எல்லாம் வாழ்வோர்களை அழைத்து, நோன்பைப் பற்றியும் அதற்கான விதிமுறைகளையும் கூறுகிறாள். அதற்கான அழகான தமிழ் வார்த்தை "செய்யும் கிரிசைகள்" என்று குறிப்பிட்டு விட்டுப் பின் நோன்பு நூற்குங்காலையில் தாங்கள் மேற்கொள்ளப் போகும் விரதத்தையும் கூறுகிறாள் இவ்வாறு:
"நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்!" என்று உறுதி எடுத்துக் கொள்ளுகிறாள் அவ்வாறே உறுதி எடுத்துக் கொண்டு தன் தோழிகளையும் அழைத்துக் கொண்டு, நந்தகோபன் வீட்டு வாயில் காப்போனை அழைத்து மணிக்கதவம் தாள் திறக்கச் சொல்லிப் பின்னர், நந்தகோபனையும் யசோதையையும் எழுப்பிப் பின்னர், அவர்தம் மருமகளாம், திருமகள் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பிக் கண்னனையும் எழுப்பச் சொல்லி வேண்டுகிறாள். அதுவும் எப்படி?
"உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்!" என்று சொல்லுகிறாள். பொதுவாகக் காலையில் எழுந்து கொள்ளும்போது முதன் முதல் பார்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று மனைவியின் முகம். நப்பின்னை பால் கொண்ட காதலால், ஏழு எருதுகளை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் கண்ணன் அவளை எவ்வாறு பிரிவான்? மனம் வருந்தும் அல்லவா? அதனால் நப்பின்னையையே வேண்டுகின்றாள் ஆண்டாள், "நப்பின்னாய், நீ உன் மணாளனைத் துயில் எழுப்பு! உன் அழகான செந்தாமரை போன்ற முகத்தைக் காட்டி, அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டி, உன் வளையல் கரங்களால், வளையலில் இருந்தி இன்னிசை எழுப்பிப் பள்ளி எழுச்சி பாடு, அவனைத் திருப்திப் படுத்தி எங்களுடன் நீராட்டலுக்குத் தயார் செய்து அனுப்பி வை!"
"பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவோய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!"

இவ்வாறு நப்பின்னையை வேண்டிக் கொண்ட ஆண்டாள், பின்னர் கண்ணனைத் திங்களும், ஆதித்யனும் ஒரு சேர எழுந்தாற்போல் எங்கள் சாபம் தீர நீ எங்களை உன் அருட்கண்ணால் நோக்குவாய்!" எனக் கேட்டுக் கொள்கின்றாள். மழைக்காலத்தில் குகைக்குள் பதுங்கி இருக்கும் சிங்கத்துக்கு ஒப்பானவன் கண்ணன் எனச் சொல்லும் ஆண்டாள் தன் 24-வது பாடலில் கண்ணனின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம், ராம அவதாரம் இரண்டையும் குறிப்பிட்டுப் பாடிப் பின்னர் அடுத்த பாடலில் கண்ணன் பிறந்த கதையை வர்ணிக்கின்றாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து, அந்த ஓர் இரவிலேயே ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்க்கப் பட்ட கண்ணனைப் பாடும் போது
"திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து ,மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். மாலுக்கு, மணிவண்ணனுக்கு, கோல விளக்குக்குப் பல்லாண்டு பாடும் விதமாய்
"சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே!" என்று சொல்லிப் பின்னர் 27-வது பாடலுக்கு வருகின்றாள் ஆண்டாள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!* உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு*
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிச் செய்த இந்தத் திருப்பாவையின் 27-வது பாடல் இது. இது வரையிலும் "பாவை நோன்பு" நூற்றுக் கொண்டிருந்த நாச்சியார் ஆனவள் தன் நோன்பை முடிக்கிறாள். அதுவும் எப்படி? "கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா!" என்று கண்ணனைக் கூப்பிடுகிறாள். இங்கே கூடார் எனத் தீயவர்களைச் சொல்லும் சொல் மிக அழகாய் ஆண்டாளால் சொல்லப் பட்டிருக்கிறது. சாதாரணமாய்க் கெட்டவங்க என்று சொல்லுவதில் உள்ள கடுமை இங்கே குறைக்கப் பட்டுக் கூடார் என்று அவர்களைக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் தன் மென்மையான போக்கையும், நாகரீகத்தையும் ஆண்டாள் வெளிப்படுத்தி இருக்கிறாள். இப்படிக் கூப்பிட்டு இறைவனைப் பாடிப் பணிந்து நோன்பு நூற்றுத் தாங்கள் அடையப் போகும் அணிகலன்களையும் அந்நாளைய வழக்கப் படி குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.
இந்த 27-ம் நாளிலே தாங்கள் கொண்ட பாவை நோன்பை முடிக்கும் விதமாய் இந்தப் பாடலை ஆண்டாள் பாடி இருக்கின்றாள். அது வரை நெய் உண்ணாமல், பால் உண்ணாமல்,மையிட்டு எழுதாமல், மலரிட்டு முடியாமல் இருந்த வந்த பெண்கள் அன்று முதல் நல்ல ஆடை அணிகலன்கள் மட்டுமில்லாமல் :
""அதன் பின்னே பால்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!" எனச் சொல்கின்றாள். சொல்லின் திறம் மட்டுமில்லாமல் கூடி இருந்து அனைவரும் உண்ணும் பாங்கையும் எடுத்து உரைக்கும் இந்தப் பாடல் இன்று அதாவது ஜனவரி 12-ம் நாளான இன்று.

இன்று மதுரை மாநகரில் அனைவர் வீட்டிலும் பால் பொங்கும், நெய் மணக்கும், பொங்கல் உண்ணும் மக்கள் அனைத்து இல்லங்களிலும். அனைத்துப் பெருமாள் கோவிலிலும் இன்று நெய் மணக்கும் சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாய்க் கொடுக்கப் படும். முக்கியமாய் அழகர் கோயில் அழகருக்கு இன்று செய்யப் படும் நைவேத்தியம் ஆண்டாள் அவள் காலத்திலே வாய்மொழியாக வேண்டிக் கொண்ட ஒன்று ஆகும்.

"நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்
எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?"

திருமாலிருஞ்சோலை நம்பியான அழகருக்கு நூறு தடா வெண்ணெயை உருக்கிக் காய்ச்சி, பதமாய் நெய்யாக்கி, அந்த நெய்யால் நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்து வைப்பதாயும், அழகரை அதை ஏற்றுக் கொள்ளுமாறும் தன் வேண்டுகோளை நிறைவேற்றுமாறும் கேட்டுக் கொள்கிறாள் ஆண்டாள். அவள் செய்கின்றாளோ இல்லையோ, அவள் பாமாலையால் மகிழ்ந்த எம்பெருமான் அவள் வேண்டுகோளை நிறைவேற்றுகின்றான். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆகின்றாள் ஆண்டாள். வருஷங்கள் பறக்கின்றன. நூற்றாண்டுகள் செல்கின்றன. வைணவத்தை உய்விக்க வந்த எம்பெருமானாக ராமானுஜர் தோன்றி, வைணவத்தை மட்டுமில்லாமல் கோயில் வழிபாட்டு முறைகளையும் செம்மைப் படுத்தி வந்த சமயம் அது.

அப்போது ஆண்டாள் பாசுரத்தைப் படித்து வந்த ராமானுஜர், தற்செயலாகப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அழகனைக் கண்டார். அவன் அழகில் மெய்ம்மறந்தார். அன்று இரவு அவருக்கு ஆண்டாளின் வேண்டுகோளும், அவள் அதை நிறைவேற்றாததும் நினைவுக்கு வந்தது. ஆண்டாள் செய்யவில்லை என்றால் என்ன? அதை நாம் நிறைவேற்றுவோம் என எண்ணிக் கொண்டு கோயிலில் சொல்லி ஆண்டாளின் விருப்பம் போலவே நூறு தடா நிறைய வெண்ணெய் வாங்கிக் காய்ச்சி, நூறு தடா நிறைய அக்கார அடிசில் செய்ய்ச் சொல்லி அழகனுக்குப் படைக்கின்றார். அழகன் மனம் மகிழ்ந்தானோ இல்லையோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் மனம் மகிழ்ந்தாள். அழகர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றார் ராமானுஜர். ஆண்டாளின் திருக்கோயிலினுள் நுழைந்தார். நுழையும்போதே, ஒரு குரல், "என் அண்ணாரே!" எனக் குயில் போலக் கூவியது. சுற்றும் முற்றும் பார்த்தால் அழகிய ஆண்டாள் விக்ரகம் அசைந்து, அசைந்து வந்து ராமானுஜரைப் பார்த்து, " என் அண்ணாரே, தங்கையின் வேண்டுகோளை ஒரு அண்ணன் தான் நிறைவேற்றுவான். என் வேண்டுதலை நிறைவேற்றிய நீர் என் அண்ணார்!" எனச் சொல்லி மறைந்தாள். அன்று முதல் தென் மாவட்டங்களில் "கூடாரவல்லி" என்று செல்லமாய் அழைக்கப் படும் கூடாரவல்லித் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றது. இப்போ எப்படினு தெரியாது!


மீள், மீள், மீள் பதிவு! 2008 ஆம் ஆண்டில் எழுதியது!

Tuesday, January 09, 2018

சில, பல எண்ணங்களின் தொகுப்பு!

அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் தன் பணியாளர்களுடன் சாலை அமைக்க உள்ளே நுழைந்திருக்கிறது! அதை இந்திய ராணுவம் விரட்டி அடித்துள்ளது. இது டிசம்பர் 28-12-2017 இல் நடந்திருக்கிறது. உடனே நம் தமிழ்நாட்டு மோதி எதிர்ப்பாளர்களுக்கு வழக்கம்போல் எதிர்ப்பு உணர்ச்சி தோன்றி விட்டது. இந்திய ராணுவத்தைப் பார்த்து , "உங்களால் தான் சாலை போட முடியவில்லை! அவங்களாவது போடட்டுமே!" என்கிறார்கள்.  அந்நிய ராணுவமோ அதன் பணியாளர்களோ நம் நாட்டுக்குள் நுழைவது சரியல்ல என்று கூடத் தோன்றாமல் மோதி எதிர்ப்பு தீவிரமாக இருக்கிறது.

இதைக் கேட்டால் இங்கே சென்னையில் கொளத்தூரிலிருந்து மாதனாங்குப்பம் செல்லும் சாலையை வந்து பாருங்க என்று பதில் வருகிறது. இந்தச் சாலையை மோதி அரசும், இந்திய ராணுவமும் நேரில் வந்து போட்டுக் கொடுக்கணும்னு எதிர்பார்க்கிறாங்களோ! அவங்களுக்குப் புரியும்படி இது மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை! பராமரிப்பு அவங்களோடது! இல்லைனா மாநில அரசு செய்யணும்னு சொன்னாலும் புரிஞ்சுக்கவே இல்லை.  இப்படி எல்லாத்துக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு என்றால் என்ன செய்ய முடியும்!
*********************************************************************************

ஆன்மிகத்துக்கும் பக்திக்கும் உள்ள வேறுபாடு பலருக்கும் புரியலைன்னே நினைக்கிறேன். பொதுவா பக்தியைத் தான் ஆன்மிகம் என்றே சொல்கிறார்கள். இளைஞர்கள் பலருக்கும் இதில் இன்னமும் குழப்பம் இருக்கிறது! ரஜினி சொல்வது பக்தி நிரம்பிய கடவுளை நம்பும் ஆட்சி என்றே எண்ணுகிறேன்.  ஆனால் ரஜினிக்கு எதிர்ப்பு அதிகம் இருக்கு! ஏனெனில் அவர் கன்னடராம். அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் காமராஜருக்குப் பின்னர் யாருமே தமிழர்கள் ஆளவில்லை! வடுகர், மலையாளி, கன்னடர் என்றே ஆண்டு வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருப்பதால் அவங்கல்லாம் தமிழர்கள் தாம் எனில் ரஜினியும் தமிழர் தானே! போகட்டும்! இப்போ பாக்யராஜும் அரசியலுக்கு வருகிறாராம். ஏற்கெனவே கட்சி ஆரம்பிச்ச நினைவு!
**********************************************************************************
இப்போல்லாம் பெண்கள் சமையல் என்றாலே ஏதோ மட்டமான வேலையாக நினைக்கின்றனர். நான் நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைச் சொல்லவில்லை. இருபதில் இருந்து 30,35 வயது வரை உள்ள தற்கால நவநாகரீகப் பெண்களைச் சொல்கிறேன். திருமணம் ஆகிச் செல்லும் இத்தகைய பெண்கள் புக்ககத்தில் சமைப்பதைப் பெரிய தண்டனையாக நினைக்கிறார்கள் அது தனிக்குடித்தனமாகவே இருந்தாலும்! இவ்வளவு படிச்சுட்டு, இத்தனை சம்பாதிச்சுட்டு இங்கே சமையல் செய்து கொண்டிருக்கிறேனே எனத் தங்கள் மீதே கழிவிரக்கம் கொள்கின்றனர். நம் அம்மாக்கள் நமக்குச் சமைத்துப் போடவில்லை எனில் நாம் என்ன ஆகி இருப்போம்? அவங்க இப்படி எல்லாம் நினைச்சாங்களா? ஒரு வேளை நினைத்திருந்தால்? இன்னிக்கு நாம் வெளிச்சாப்பாடே பழகிக் கொண்டிருந்திருப்போமோ!

அந்த வெளிச்சாப்பாடும் ஏதேனும் ஓர் பெண்/அல்லது ஆண் சமைத்துத் தான் தர வேண்டி இருக்கு! அப்போ அந்தப் பெண்ணிற்கும் பெண்ணுரிமை உண்டு தானே! அவங்க மட்டும் சமைத்துத் தரலாமா? இம்மாதிரிப் பெண்ணுரிமை பேசும் பெண்கள் தங்களிடம்  வீட்டு வேலை செய்யப் பெண்களைத் தானே அமர்த்திக் கொள்கிறார்கள்? அந்தப் பெண்களும் பெண்ணுரிமை பேசிக் கொண்டு இந்த வேலை எல்லாம் செய்ய மாட்டோம்னு ஒதுங்கிட்டால்? என்ன ஆகும்? சரி! கூட்டுக் குடும்பம்னா மாமியார் சமைக்கலாமா? அவங்க மட்டும் பெண் இல்லையா? நமக்கு உள்ள பெண்ணுரிமை நம்மை விட வயதிலும், அனுபவத்திலும் சிறந்த அவங்களுக்குப் பெண்ணுரிமை கிடையாதா? அதோடு இல்லாமல் நம்மைப் போல் படிக்கலை என்பதால் அவங்க மட்டும் சமைக்கலாமா? எனக்குத் தெரிந்த ஓர் இளம்பெண் தான் படித்து நல்ல வேலையில் இருந்தும் கூட மாமியார் தன்னைச் சமைக்கச் சொல்வதாகக் குறைப்பட்டுக் கொண்டார். இது சரியா?

உலகப் புகழ் பெற்ற பெப்சியின் சி ஈஓ(?) ஆக இருக்கும் இந்திரா நூயி தான் இவ்வளவு பெரிய வேலையில் இருப்பதால் குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்றெல்லாம் சொல்லவில்லை! மாறாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தால் நான் என் கணவரின் மனைவி, என் குழந்தைகளின் தாய் என்னும் எண்ணம் தான் என்னிடம் இருக்கும் என்று சொல்கிறார். அதே போல் நம் கண்ணெதிரே அருணா சாய்ராம், கர்நாடக சங்கீதப் பாடகி தன் இரு பெண் குழந்தைகளும் ஓரளவுக்கு வளர்ந்து பெரியவர்கள் ஆகித் தங்கள் வேலைகளைச் சுயமாகச் செய்ய ஆரம்பித்த பின்னரே மேடைக் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார். அவருக்குத் தான் பெரிய பாடகி, ஆகையால் சமையல் எல்லாம் செய்யக் கூடாது என்னும் எண்ணம் இருந்ததாகவோ/ இருப்பதாகவோ தெரியவில்லை! ஆனால் இப்போதைய பெண்கள் தங்கள் ரோல் மாடலாக, முன் மாதிரியாக எடுத்துக் கொள்வது இவர்களைப் போன்ற பெண்கள் அல்ல.
*********************************************************************************

பெண்களைப் பற்றிப் பேசும்போது ஆண்டாள் நினைவு வந்தது. பிரபல பாடலாசிரியர் ஒருவர் பிரபல தமிழ் தினசரியில் ஆண்டாளை ஒரு தேவதாசி என்று சொல்லி இருக்கிறாராம்! நேற்றிலிருந்து அதான் வாதவிவாதங்களுக்கு உட்பட்டுக் கொண்டு இருக்கிறது.  ஆண்டாளோ, ராமனோ, கிருஷ்ணனோ யாராக இருந்தாலும் நம் கடவுள்கள் இத்தனை காலத்துக்குப் பிறகும் குற்றம் சுமத்தப்பட்டுக் கொண்டும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்கள். அந்தப் பாடலாசிரியர் சொன்னதால் ஆண்டாளை நாம் அப்படி எல்லாம் நினைக்கப் போவதில்லை!

Friday, January 05, 2018

இன்னிக்கும் தீனி தின்னி தானா? நெ.த. ஓட்டம்!

தமிழ்நாட்டில் சோழர்கள் இன்னமும் வாழ்கின்றனராம். தந்தி தொலைக்காட்சியின் செய்திகளில் காட்டினார்கள். கும்பகோணத்துக்கு அருகே ஓர் சின்ன கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனராம். சிதம்பரம் கோயிலில் ஒவ்வொரு திருவிழாவின் போதும் இவர்களுக்கே முதல் மரியாதையாம். அதே போல் முதல் மண்டகப்படி அல்லது கட்டளையும் இவர்களுடையது தானாம்! முன்னொரு காலத்தில் ஹிரண்ய வர்மனால் திருப்பணி செய்யப்பட்டுக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் சிதம்பரம் கோயிலில் இவர்கள் தான் ஹிரண்ய வர்மனின் வாரிசுகளாக இன்றளவும் கருவறைக்குச் செல்லும் வழியில் உள்ள பஞ்சாக்ஷரப் படிகள் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்வார்களாம்.  இதற்கு முன்னால் இருந்த அரசர் 1978 ஆம் வருஷம் பட்டம் சூட்டிக் கொண்டாராம். இப்போது அவர் காலம் ஆகிவிடவே அவரின் இளவல் விரைவில் பட்டம் சூட்டிக் கொள்ளப்போகிறாராம். பஞ்சாக்ஷரப் படிகளில் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உண்டாம்! சற்று முன்னர் தான் இந்தச் செய்தியை தந்தி தொலைக்காட்சியில் கூறினார்கள். எங்க கட்டளை தீக்ஷிதர் இது குறித்து இன்றளவும் ஏதும் சொன்னதில்லை. அவர் ஆய்வு செய்து எழுதிய சிதம்பரம் பற்றிய நூலிலும் இந்த விபரங்கள் காணப்படவில்லை. நேரில் அவரைப் பார்க்கையில் கேட்க வேண்டும்.  ஆனால் நான் அறிந்த வரையில் ஹிரண்ய வர்மன் கௌட தேசத்தில் இருந்து வந்தவன். தோல் வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த இவன் தில்லைக்கு வந்து அங்குள்ள தீர்த்தத்தில் குளித்து தோல் நோய் நீங்கப்பெற்று ஹிரண்யம் போல் ஜொலிக்கும் ஹிரண்ய வர்மன் ஆனான். அவன் உண்மைப்பெயர் சிம்மவர்மன் ஆகும். இவனிடமிருந்தே பல்லவ குலம் தோன்றியதாகவும் படிச்சிருக்கேன். ஆனால் இன்னிக்குத் தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய சோழ வாரிசுகள் தாங்கள் ஹிரண்ய வர்ம சோழனின் வாரிசுகள் என்றனர். ஒண்ணும் புரியலை!
நாங்க நின்ற இடத்திலிருந்து நம்பெருமாள் பத்து அடி தூரத்திலே இருந்தாலும் ஜூம் பண்ணி எடுக்க முடியலை! கூட்டம் நாலாபக்கமும் நெருக்குது! செல்லே கீழே விழுந்துடுமோனு பயமா இருந்தது. அதனால் தான் காமிராவைக் கீழே போட்டுடுவோமோ என்னும் பயத்தில் கொண்டு போகலை! செல்லில் எடுத்தது. அதுவும் எனக்குக் கொண்டையும் முகமும் மட்டுமே தெரிஞ்சது. ரங்க்ஸ் எடுத்தார் படங்கள்!

நேற்று நம்பெருமாளை ஆயிரக்கால் மண்டபத்திலாவது பார்த்துட்டு வரலாம்னு மூணு மணிக்கே கிளம்பிப் போனோம். வண்டியை எங்கோ நிறுத்திட்டு நடந்து தான் போகும்படி இருந்தது. ஆயிரக்கால் மண்டபத்திலேயே பெருமாள் இருப்பார். பார்த்துட்டு வர வேண்டியது தான்னு நினைச்சால் அங்கே மண்டபத்துக்குப் போகும் வாசலில் மக்கள் அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள். விசாரித்ததில் இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும் நம்பெருமாள் அங்கே வருவதற்கு என்றார்கள். எங்கே போனார் என்றால் மத்தியானம் ஓய்வு எடுக்க நம்மைப் போல் அவரும் போயிருக்கார். ஆழ்வார்களும் அனைவரும் போயிருக்காங்க! நேற்றுத் திருக்கைத்தல சேவை வேறே! அதனால் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். நமக்குப் பெருமாளைப் பார்த்தால் போதுமேனு வரவரைக்கும் உட்காரலாம்னு உட்கார்ந்திருந்தோம். ஓர் வயதான அம்மா வந்தார்கள். அவரைப் பார்த்ததும் எங்க பக்கம் உட்கார்ந்திருந்த ஒரு தம்பதியினர்  (இந்தத் தம்பதியர் அருப்புக்கோட்டையிலிருந்து திருவிழாவுக்கு வந்திருக்காங்களாம்! இப்படி எத்தனையோ பேர்!) ஓடிப் போய் அவரை வணங்கினார்கள். அவங்க கோயில்லே எனக்கெல்லாம் நமஸ்காரம் செய்யக் கூடாதுனு தடுத்துட்டுச் சிறிது நேரம் பேசிட்டுப் போயிட்டாங்க. அவங்க போனதும் அந்தத் தம்பதியர் அந்த அம்மா கூரத்தாழ்வாரின் வாரிசைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதாகவும் அந்த அம்மாவின் கணவர் கூரத்தாழ்வாரின் நேரடி வாரிசு என்றும் சொன்னார். அட, பேசி இருக்கலாமேனு நினைச்சேன்.


ஶ்ரீரங்கம் பத்தி எழுதறதாலே சில, பல சந்தேகங்கள். அந்த அம்மாவைச் சிநேகிதம் பண்ணிக் கொண்டிருக்கலாமோனு நினைச்சேன். இன்னொரு முறை பார்த்தாலும் எனக்கு அடையாளம் தெரியாது! ஹிஹிஹி! அவ்வளவு சமர்த்து!

கிட்டத்தட்ட நாலு மணி இருக்கும்! சாரி,சாரியாக மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு ஆழ்வாராக வர ஆரம்பிச்சு ஒன்பது பேர் வந்துட்டாங்க! இன்னும் மூணு பேர் வரணும். அதுக்குள்ளே வடக்கு வாசலில் கொட்டு சத்தம் கேட்டது! சரி நம்பெருமாள் தான் வராரோனு நினைச்சா யாரையும் காணோம். அப்போ ஒரு பெரியவர் வந்து அங்கே உட்கார்ந்தார். கோயில் ஊழியம் செய்பவர் எனத் தெரிந்தது. அவரிடம் விபரம் கேட்டதுக்கு இப்போத் தான் வடக்கு வாசல் திறந்து நம்பெருமாள் வெளியே வந்திருக்கார் என்றும், இங்கே வர இன்னும் 2 மணி நேரமாவது ஆகும் என்றும் கூறினார். ஏற்கெனவே கூட்டம் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அன்னிக்குத் திருக்கைத்தல சேவை பார்க்க வேறே மக்கள் முண்டிக் கொண்டு ஆயிரங்கால் மண்டபத்துக்குள் உட்கார்ந்திருந்தார்கள். பெருமாள் உட்காரும் இடத்தில் மட்டும் ஆட்கள் இல்லை! மற்றபடி கூட்டம் நிரம்பி வழிந்தது. வெளியே அதற்கும் மேல்!  அதுவும் சொர்க்க வாசலை மிதிக்கவும், உள்ளே முத்தங்கி சேவையில் பெரிய ரங்குவைத் தரிசிக்கவும் கூட்டம் அலை மோதியது! இலவச தரிசனத்துக்கோனு நினைச்சால் 250 ரூபாய்க்காம்! அதுக்கே இவ்வளவு கூட்டமானு நினைச்சு மயக்கமே வந்தது.


நாங்க தாயார் சந்நிதிக்குப் போற வழியிலே சென்றோம். ஆயிரக்கால் மண்டபத்துக்கு வராமல் இருந்த 3 ஆழ்வார்களுக்கும் வழியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருத்தர் நம்மாழ்வார், இன்னொருத்தர் திருமங்கை மன்னன். மற்றவர் பெரியாழ்வாரோனு நினைப்பு! தெரியலை. கூட்டம் அங்கேயும்! கிட்டே போக முடியலை. மேலே நடந்தோம். வடக்கு வாசலுக்குப் போகும் வழியிலேயே பாதி வழியில் நம்பெருமாளை இருத்தி இருந்தார்கள். தூரக்க இருந்து தெரியலை. ஆனால் ரங்க்ஸ் பார்த்துட்டு, "இவர் நம்பெருமாள் இல்லை போலிருக்கே! ரொம்பச் சின்னவரா இருக்காரே!" என்றாரே பார்க்கலாம்!  கொஞ்சம் கிடைத்த இடைவெளியில் பார்த்த நான் பாண்டியன் கொண்டையையும் அவர் அணிந்திருந்த நகைகளையும் வைத்து அடையாளம் கண்டுகொண்டு நம்பெருமாள் தான் என உறுதி செய்தேன். பக்கத்தில் இருந்தவர்களும் ஆமோதித்தார்கள். சற்று நேரம் நின்று பார்க்க முயன்று விட்டு, அருகே செல்ல முயன்றுவிட்டு, கூட்டத்தின் நட்ட நடுவில் மாட்டிக் கொண்டால் வெளியேறுவது சிரமம் என்பதால் பார்த்தவரைக்கும் போதும்னு திரும்பினோம். பிரசாதங்கள் விற்பனை அமோகம். ஆனால் எங்கிருந்து வருதுனு தெரியலை! தீரத் தீரச் சூடாக நிரப்பிக் கொண்டே இருந்தார்கள். அங்கேயும் கூட்டம். டோக்கன் வாங்கி வாங்கணும்.

வைகுண்ட ஏகாதசித் திருவிழா சமயத்தில் மட்டுமே கிடைக்கும் சம்பார தோசை (கிட்டத்தட்ட பிட்சா! அதைப் போல் தான் முக்கோணமாக வெட்டி இருந்தார்கள்) வாங்கிக் கொண்டோம். ஒரு துண்டம் 30 ரூபாயாம்! அநியாயம். சாதாரணமாக ஒரு தோசையே 60 ரூபாய் தான். கூட்டத்தைக் கண்டதும் விலை ஏற்றி விட்டார்கள்.

சம்பார தோசை க்கான பட முடிவு

இந்த ஒரு துண்டம் தான் 30 ரூபாய்!  தோசை சூடு கை பொரிந்து விடும்போல இருந்தது. வீட்டுக்கு வந்து மிளகாய்ப் பொடியுடன் சாப்பிட்டோம்.  செய்முறை
நம்ம காஞ்சீபுரம் இட்லி மாதிரித் தான்.

பச்சை அரிசி ஒரு கிண்ணம்
இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிண்ணம்
உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம்
வெந்தயம் ஒரு டீஸ்பூன்

எல்லாவற்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைத்து தோசைக்கு அரைப்பது போல் அரைக்கவும். பின்னர் சுக்கைப் பொடி செய்து அதில் போட்டு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். (கோயிலில் நோ பெருங்காயம்)  அடுப்பில் ஓர் வாணலியில் நெய்யை ஊற்றிக் கொண்டு மிளகு, சீரகத்தைப் பொடித்து அதில் போட்டு தோசை மாவில் கலக்கவும்.  உடனே வார்க்காமல் கொஞ்சம் புளிக்க வைக்கவும். பின்னர் அடிகனமான தோசைக்கல்லில் மாவைக் கொஞ்சம் தடிமனாகப் பரப்பி நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு மேலே கருகப்பிலையைத் துண்டாக நறுக்கித் தூவவும். மூடி வைத்து வேக விடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கமும் திருப்பிச் சிறிது வேக விட்டு எடுக்கவும். இதற்குச் சட்னி, சாம்பாரை விடக் காரமான மிளகாய்ப்பொடி அல்லது தக்காளித் தொக்கு அல்லது தக்காளிச் சட்னி நன்றாக இருக்கும்.  கோயிலில் செய்யும் சம்பார தோசைக்குக் கறுப்பு உளுந்து சேர்ப்பார்கள். அதனால் ருசியில் மாறுபாடு தெரியும்.