எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, February 25, 2018

லீவேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

திங்கள், செவ்வாய், புதன் மூன்று நாட்கள் லீவு!  துரை.செல்வராஜு சார், தி.கீதா, அதிரடி ஆகியோர் எ.பி.யில் ஃபர்ஷ்டு வரலாம்! நான் அப்புறமா பிச்சைக்காரனுக்குப் பிழைத்துக் கிடந்தா வந்து பார்த்துக்கறேன். லீவு எதுக்குனு எல்லாம் சொல்ல மாட்டேனே!   அதிரடி, இதுக்கு உடனே பதில் கொடுக்கலைனு தேம்ஸிலே விழப் போயிடாதீங்க! யாரும் காப்பாத்த மாட்டாங்க! நீங்களா எழுந்து வரணும்! ஆமா! சொல்லிட்டேன்!  வந்து தான் பதில் எல்லாம். :)))))

Friday, February 23, 2018

என்னவோ சொல்ல நினைச்சு! என்னவோ சொல்லி இருக்கேன்!

பதஞ்சலி பொருட்கள் வந்தப்போ விலை மலிவா மட்டுமில்லாமல் தரமாகவும் இருந்தது. அதிலும் சில்வர் என்னும் பாசுமதி அரிசி 65 ரூபாயில் இருந்து 70ரூக்குள் தான் இருந்தது. பிஸ்கட்டுகளும் குறைந்த விலையில் கிடைத்தன. நூடுல்ஸும் ஆட்டா நூடுல்ஸ் வித்தாங்க. கொஞ்சம் சந்தையில் நிலை கொண்டதும் பதஞ்சலி குழுமமும்  மெல்ல மெல்ல மாற ஆரம்பிச்சாச்சுனு நினைக்கிறேன். அந்த "சில்வர்" பாசுமதி அரிசியை முதலில் நிறுத்தினாங்க.  இதோ வரும், அதோ வரும்னு சொன்னாங்களேனு இரண்டு, மூணு  மாதங்கள் பொறுத்துப் பார்த்துட்டுப் பின்னர் நாங்க வழக்கமான கர்நாடகா பொன்னியே வாங்க ஆரம்பிச்சுட்டோம். இப்போப் பதஞ்சலி பாசுமதி அரிசி கிலோ 150ரூக்குக் குறைந்து இல்லை. பாசுமதி பழக்கமாயிட்டா என்ன விலை ஆனாலும் வாங்குவாங்கனு நினைப்போ? தெரியலை! சில்வர் பாஸ்மதி அரிசி இப்போது சந்தையிலேயே இல்லை!  மற்றப் பொருட்களில் பற்பசை கொஞ்சம் பரவாயில்லை ரகம் என்றாலும் அதிகம் காற்றால் நிரப்பி இருக்காங்க.  கோதுமை மாவு சிலருக்குப் பிடிக்கலை! கேஷ்கந்தி ஷாம்பூ கொஞ்சம் பரவாயில்லை. அதே போல் சோப்பு வகைகளும்! வாங்கலாம்.

அதே போல் பதஞ்சலி கேஷ் கந்தி எண்ணெயையும் பத்தி எதிர்பார்ப்போடு வாங்கினேன். அதுக்குக் கொடுத்த விளம்பரங்களைப் பார்த்துட்டு நான் வருஷக் கணக்கா தடவிக் கொண்டிருந்த நீலி பிருங்காதித் தைலத்தை நிறுத்திட்டுப் பதஞ்சலி கேஷ் கந்தி வாங்கித் தடவிக்க ஆரம்பிச்சேன். அதையே அம்பேரிக்கா போறச்சேயும் எடுத்துட்டுப் போனேன். ரொம்ப நீளம் இல்லைனாலும் கைக்குள் அடங்காமல் அடர்த்தியான தலைமுடி இருக்கும் எனக்கு! அதைப் பார்த்துட்டுப் புகை விடாதவங்க இல்லை! ஹிஹிஹி! ஆனால் பாருங்க! இந்தக் கேஷ் கந்தி தடவஆரம்பிச்சதும்! :(  கடவுளே! வீடு பூராவும் என்னோட தலை முடி தான்! ஆங்காங்கே நீள நீளமாக! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!  நீளமாயும் அடர்த்தியாயும் இருந்த என்னோட தலையிலே இருந்து உதிர்ந்த மயிர்க்கற்றைகளை வைச்சு இரண்டு சவுரி பண்ணலாம். முன்னந்தலை, உச்சி எல்லாம் கிட்டத்தட்ட அரை வழுக்கை ஆக ஆரம்பித்து விட்டது. என்னை விட ரங்க்ஸ் தான் அதிகம் கவலைப்பட்டார், வருந்தினார். எப்படி இருந்த தலைமுடி! எல்லாம் கொட்டிப் போய் இப்படி ஆயிடுச்சேனு வருத்தம். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே டைஃபாய்ட் வந்தப்போவும் இப்படித் தான் முடி கொட்டினது. அப்போத் தான் நீலி பிருங்காதித் தைலம் தடவ ஆரம்பிச்சேன்.  இப்போ அம்பேரிக்காவில் போய் மாட்டிக் கொண்டேனே! ஒண்ணும் செய்ய முடியாத்! ஆனால் பதஞ்சலி பொருட்கள் அங்கேயும் கிடைக்குது! அங்கே தே.எ. கிடைச்சது தான்.ஆனால் அங்குள்ள தே.எ. மேல் சந்தேகம். ரசாயனக் கலப்பு இருக்குமோனு! அங்கிருந்து வந்ததும் முதல்லே கேஷ்கந்தியைத் தூக்கி எறிஞ்சேன். இதை அம்பேரிக்காவிலேயே செய்திருக்கலாம். 

இந்தியா வந்ததும் மறுபடி நீலி பிருங்காதி வாங்கித் தடவ ஆரம்பிச்சேன். கொட்டுவது குறைஞ்சிருக்குன்னாலும் பழைய அடர்த்தி இல்லை!:)  இப்போ என்னைப் பார்க்கும் உறவினர் எல்லாம் முதலில் கேட்பது உடம்பு தான் இளைச்சிருக்குன்னாத் தலைமுடியும் கொட்டிப் போச்சேனு தான்!
*********************************************************************************

இலக்கியம் என்றால் என்ன? இது தான் நேற்றைய எங்கள் ப்ளாக் பதிவில் பேசப்பட்ட விஷயம்! என்னைப் பொறுத்த வரை இலக்கியம் என்பதற்கு வரையறை ஏதும் இல்லை.  நல்ல கற்பனை வளமும், கலை அழகும் இருந்தால் அது இலக்கியம் எனலாமா? ஆனாலும் சில எழுத்துக்கள் ஜனரஞ்சகமாகவும், எளிமையாகவும், நடைமுறைப் பேச்சுக்களாலும் ஆகி இருக்கும். அத்தகைய படைப்புக்கள் இலக்கியம் இல்லையா?  மனதில் அந்த எழுத்தின் தாக்கம் இருக்கணும், புரட்டிப் போடணும் என்று பானுமதி சொல்கிறார். உண்மையில் சுஜாதாவின் நைலான் கயிறு முதலில் சிறுகதையாகக் குமுதத்தில் வந்தப்போவே புரட்டிப் போட்டு விட்டது! அதுக்கப்புறமாத் தான் அவர் விரிவாக எழுதினார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிச்சிருக்கேன். ஒரே திக், திக்! என் முகம் போகும் போக்கைப் பார்த்துட்டுச் சித்தப்பா, சித்தி எல்லாம் சிரிப்பாங்க! அந்த அளவுக்கு ஆழ்ந்து படிச்சிருக்கேன்.

அதே போல் சுஜாதாவின் இன்னொரு நாவலும் அல்லது தொடர்கதை! (இது இப்போப் புதுசாக் கிளம்பி இருக்கு போல, நாவல்னா வேறே, தொடர்கதைனா வேறேனு) 24 ரூபாய், தீவு! அது குமுதத்தில் தொடராக வந்த நினைவு. அதைப் படிக்கையில் கதாநாயகனின் சின்னத் தங்கைக்கு ஏற்பட்ட பாலியல் பலாத்காரம், அதனால் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட ஹிஸ்டரிகலான மனோநிலை. அந்தப் பெண்ணைப் பற்றிக் கதாநாயகன் சொல்லிச் சொல்லி அழுவது! எல்லாம் இப்போவும் மனசில் இருக்கு. இன்னும் சொல்லப் போனால் அப்போ, அந்த வயசில் இதைப் படிக்க மனமும், தெம்பும் இல்லாமல் அந்தக் குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குப் பின்னர் படிப்பதையே நிறுத்திட்டேன். அப்புறமா இப்போ சமீபத்தில் தான் சுமார் இரண்டு வருஷங்கள் முன்னர் படிச்சேன்.

சுஜாதா எழுதியதில் விருது கொடுக்கணும்னா, "கற்றதும் பெற்றதும்" ஒண்ணு போதுமே! அப்போ விகடன் வாங்கினதும் முதலில் புரட்டிப் படிப்பதே கற்றதும் பெற்றதும் தான். அதை நிறுத்தினாங்களா, நானும் விகடன் வாங்குவதையே நிறுத்திட்டேன்! :( கணையாழியில் ஶ்ரீரங்கம் எஸ்.ஆர். என்னும் பெயரில் எழுதி வந்த கடைசிப் பக்கம்! ஶ்ரீரங்கத்து தேவதைகள்! இப்படி எத்தனையோ சொல்லலாம். "கனவுத் தொழிற்சாலை" என்னும் பெயரில் திரைப்பட உலகைத் தோல் உரித்துக் காட்டி இருப்பார். ஜீனோவை மறக்க முடியுமா?

//ஏராள மார்பு என்று எழுதினால் இலக்கியவாதி ஆகி விட முடியுமா? // சுஜாதா மட்டுமே இப்படி வர்ணிக்கலையே!  இது ஒண்ணை மட்டும் வைத்துக் குறை சொல்லக் கூடாது. அப்படிப் பார்த்தால் எந்த எழுத்தாளர் வர்ணிக்கவில்லை? சாண்டில்யன் வர்ணிக்காததா?


//டாக்கு டாக்கு என்று நடந்தாள். டாக்கு டாக்கு என்றல் சரியான டாக்கு டாக்கு" // அவள் எப்படி நடந்தாள் என்பதைப் புரிய வைக்க இதைவிடச் சிறந்த சொல்லாட்சி வேணுமா? நாம் அன்றாட வாழ்வில் புழங்கும் இந்தச் சொல் எழுத்தில் வந்திருக்கு! அதனால் என்ன?  அவள் நடப்பது அப்படியே கண் முன்னாடி வருமே! இது சரியான பேச்சுத் தமிழ்! இலக்கியம் என்றால் செந்தமிழில் எழுதணும்னு எல்லாம் இல்லை அல்லவா! :)


//பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள், அப்பம், வடை, தயிர் சாதம், //

இவற்றில் பாலகுமாரன் வர்ணனைகளே செய்யவில்லையா? எத்தனை கதைகள்/நாவல்கள் வேண்டும் அவர் வர்ணனைகளைச் சுட்டிக் காட்ட! :)
இதையும் "உடையார்" நாவல்களையும் வைத்துக் கொண்டு பாலகுமாரனை இலக்கியவாதினு சொல்ல முடியுமா? அப்படிப் பார்த்தால் சரித்திரக்கதைகளின் முன்னோடியான கல்கி அவர்களும் ஓர் இலக்கியவாதி தான்! அகிலன், ஜெகசிற்பியன், கோவி. மணிசேகரன், விக்கிரமன், சாண்டில்யன் போன்றோரும் இலக்கியவாதிகளே!

லா.ச.ரா.வின் "பாற்கடல்"! இதுக்கு ஈடு இணை இல்லை! ஆனால் எத்தனை பேருக்குப் புரிஞ்சிருக்கும்?  தொடர்ந்து லா.ச.ராவைப் படிச்சால் தவிரப் புரிஞ்சுக்கறது கஷ்டம்!  அவரோட கதைகளில் வரும் பெண்கள் அனைவருமே அம்பாள் ஸ்வரூபமாகவே அவர் கண்டிருக்கிறார். அதில் துஷ்ட நிஷ்ட சிஷ்ட பரிபாலனம் செய்யும் பெண்களையும் காணலாம். அமைதியான பெண்களையும் காணலாம். மற்றபடி ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், தி.ஜ.ரங்கநாதன் போன்றோரின் எழுத்துகள் தனிப்பட்டவை! அசோகமித்திரனின் "பதினெட்டாவது அட்சக் கோடு" கிட்டத்தட்ட ஓர் சுயசரிதை! சித்தப்பா தாம் வாழ்ந்த காலத்து நிகழ்வுகளைப் பதிந்திருக்கிறார். அதை விட அவருடைய மானசரோவர் இன்னும் அருமையாக இருக்கும்.

ஆனால் இலக்கியம் என்பதற்கு நமக்குப் பிடித்தது என்னும் அளவுகோலை வைத்துப் பார்த்தால் நம்மால் விருப்பு, வெறுப்பின்றித் தேர்ந்தெடுக்க முடியாது! ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்களின் ஒவ்வொரு கதைகள்/நாவல்கள்/தொடர்கள் பிடிக்கும்.  நீல.பத்மநாபன் எழுதிய தலைமுறைகள் நாவல் படிச்சுட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாசம் மனசு சரியில்லாமல் ராத்திரி தூக்கம் வராமல் தவிச்சிருக்கேன். இப்போதும் அந்தக் கடைசி அத்தியாயத்தில் சிவந்த பெருமாள் (கதாநாயகியின் கணவன்) தன் மனைவி மறுமணம் செய்து கொள்ளப் போகும் நாகுவைக் கொன்றது பற்றிய காட்சி கண் முன்னே வரும்! போகும்! தன் அக்காவுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்யக் கதாநாயகன் பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். கதையின் முடிவை நாம் யூகிக்க வேண்டும். கதையின் சம்பவங்கள் கதாநாயகன் பிறப்பை அவன் ஆச்சி(தந்தை வழிப்பாட்டி) சொல்வதாக ஆரம்பித்திருக்கும்னு நினைக்கிறேன். இந்த நாவலை நான் படிச்சு சுமார் நாற்பது வருடங்கள் இருக்கும். ஆனாலும் இன்னமும் மறக்கவில்லை. அதன் தாக்கம் குறையவில்லை. அப்படிப் பார்த்தால் இதுவும் ஓர் இலக்கியமே!

இலக்கியம் என்பது ஒரு வேளை பழமை வாய்ந்த படைப்புக்களாகவும் இருக்கலாம். ஏனெனில் சங்கப் பாடல்களை நாம் சங்க இலக்கியம் என்கிறோமே! ஆகவே இலக்கியம் என்பது தொன்மையைக் குறிக்குமோ என்னும் ஓர் சந்தேகமும் வருகிறது. என்றாலும் இதைப் பலர் கூடித் தீர்மானிக்க முடியாது என்றே எண்ணுகிறேன். தேவநேயப் பாவாணர் சொல்வது இலக்கை எட்டுவதே இலக்கியம் என்று! இலக்கு என்றால் குறி, குறிக்கோள் என்பதால் சிறந்த அறவாழ்க்கையை இலக்காகக் கொண்டு வாழ்பவர் அந்த அறத்தை எடுத்துக் காட்டுவதே இலக்கியம் என்று சொல்கிறார். தலை சுத்துதா? ஹிஹிஹி! ஒவ்வொருவரின் மொழியோடு தொடர்புடையதாக மட்டுமில்லாமல் மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு சிந்தனை, உணர்வு, கற்பனை ஆகியவற்றுக்கு ஓர் வடிகாலாக அல்லது ரசிக்கும் விருந்தாக அமைவது இலக்கியம் என்று பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் சொல்கிறார்.

மற்றபடி சுஜாதாவுக்கு நெ.த. சொன்ன மாதிரி எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினுக்காவது விருது கொடுத்திருக்க வேண்டும். குறைந்தது ஓர் பத்மஶ்ரீயாவது கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. ஒருவேளை அவர் அரசு ஊழியராக இருந்ததும் ஓர் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பணி ஓய்வு பெற்ற பின்னர் கொடுத்திருக்கலாம்! கொடுக்கவில்லை! 

Monday, February 19, 2018

தமிழ்த்தாத்தா பிறந்த நாள் அஞ்சலி!

தமிழ்த்தாத்தா பிறந்த நாள் க்கான பட முடிவு


3.இடையன் எறிந்த மரம்


திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபரஸ்வாமிகள் தின வைபவத்துக்கு வழக்கப்படியே 1937-ம் வருஷம் நான் போயிருந்தேன். அப்போது அந்த மடத்தில் மாடுகளைப் பாதுகாப்பதற்காக வருவித்து நியமிக்கப்பெற்றிருந்த இடையன் ஒருவனை நான் கண்டு பேசினேன். அவனுக்கு அறுபது பிராயத்திற்குமேல் இருக்கும். பல இடங்களிலிருந்து அனுபவம் பெற்றவன். அவனிடம் மாடுகளைப் பற்றிய விஷயங்களை யெல்லாம் தெரிந்து கொள்ளலாமென்பது என் அவா. ஆதலால் அவனிடம் விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவன் முதலில் தன் கதையைச் சொல்லிக் கொண்டான். அந்த மடத்தில் தனக்கு எல்லாவிதமான செளகரியங்களும் கிடைப்பது பற்றி நன்றியறிவுடன் பாராட்டிப் பேசினான். அப்பால் மாடுகளின் வகை, கொண்டி மாடுகளை மடக்கிப் பிடிக்கும் முறைகள், பிடித்தற்கு வேண்டிய கருவிகள் முதலிய பல விஷயங்களை அவன் விரிவாக எடுத்துரைத்தான். கயிற்றில் சுருக்குப்போட்டு அடங்காத காளைகளை அதில் அகப்படச் செய்யும் விதத்தைச் சொல்லித் தன் கையிற் கொணர்ந்திருந்த கயிற்றில் அந்தச் சுருக்கையும் போட்டுக் காட்டினான்.


அவன் கூறிய செய்தி ஒவ்வொன்றும் எனக்குப் புதியதாக இருந்தது; ஆச்சரியத்தையும் விளைவித்தது. அந்தச் சமயத்தில் அவற்றால் ஒருவித மகிழ்ச்சி உண்டாயிற்றே யன்றி அவை என் மனத்திற் பதியவில்லை. நான் மாடுகளோடு பழகுபவனாகவோ, பல பசுக்களை வைத்துக் காப்பாற்றுபவனாகவோ இருந்தால், அவன் கூறியவற்றை யெல்லாம் மனத்திற் பதிந்து கொண்டிருப்பேன். எனக்கு அத்தகைய நிலை இல்லையே. இலக்கியத்தில் வரும் பசுக்களையும், காளைகளையும் அறிந்து இன்புறுபவனாகிய எனக்கு அவன் சொன்ன விஷயங்களில் கவனம் ஏற்படாதது வியப்பன்று. ஆயினும் அவன் கூறியவற்றைக் குறித்துக் கொண்டேன்.


அவன் இடையர் கூட்டத்தில் வழங்கும் சில பழமொழிகளைச் சொல்ல ஆரம்பித்தான். அனுபவத்தில் தோய்ந்து பழுத்து உருப்பெற்றவையே பழமொழிகள். ஆதலின் அதுகாறும் வெறும் விநோதார்த்தமாகக் கேட்டு வந்த நான் என் கவனத்தை அதிகமாகச் செலுத்தத் தொடங்கினேன்.


"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும்போது, "நல்லெருமை நாகு, நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற," என்று வாழ்த்துவார்கள் என்றான் அவன். எருமை கிடாரிக்கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாரிக்குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று அந்தச் சாதியினர் விரும்புவார்களாம். நாகு என்னும் சொல் பெண் எருமையைக் குறிக்கும். இலக்கியத்திலே அச்சொல் பயின்று வரும்.


அந்த இடையன் மெல்ல மெல்லத் தன்னிடத்திலும் சரக்கு உண்டு என்பதைக் காட்டத் தொடங்கினான்.


இடையன் ஆடுகளை ஓட்டும் மாதிரியை அபிநயம் செய்து காட்டினான்; 'ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் வெட்டுவோம். நாங்கள் வெட்டும்போது கிளை முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழைகளைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப் போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்." என்று அவன் வருணிக்கத் தொடங்கினான்.


அவன் அந்த விஷயத்தைச் சொல்லி வரும்போது நான் ஊக்கத்தோடு கவனித்தேன். அவன் அகக்கண்ணிற்குக் காடும் மரமும் ஆடு மாடுகளும் தோன்றின போலும்! என் உள்ளத்திலோ வேறுவிதமான தோற்றம் உண்டாயிற்று. அவன் இந்தப் பிரத்தியக்ஷமான உலகத்திலுள்ள காட்சிகளை நினைந்துகொண்டே பேசினான். அதைக் கேட்கக் கேட்க என் மனமோ தமிழ் இலக்கிய உலகத்திலே சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.


'இடையர்கள் ஆடுமாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என்ற செய்தியை அவன் சொன்னபோது எனக்குப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன.


நம் மனமறிந்து முற்றும் நம்மோடு பழகினவர் நம்மிடமிருந்து ஓர் உபகாரத்தை எதிர்பார்க்கிறார்; வாய்விட்டும் சொல்லிக் கேட்டுவிடுகிறார். அவர் கேட்கும்போது தாக்ஷிண்யத்திற்குக் கட்டுப் பட்டு அந்த உபகாரத்தைச் செய்வதாக நாம் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், அவர் கேட்கும் பொருளோ நம்மிடத்தில் இல்லை. கேட்பவர் நெடுநாளாகப் பழகியவர். நாமோ வாக்குக் கொடுத்துவிட்டோம்; நம்முடைய அளவை முன்பே நன்றாக யோசனை செய்யாமல் அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாக்கி விட்டோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். 'முடியாது' என்று கடைசியில் சொல்லுவது நியாயமாகத் தோன்றுவதில்லை. இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை ஓர் உபமானம் நன்றாக விளக்குகிறது. நாம், 'இடையன் எறிந்த மரம் போல' இருக்கிறோம் உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை.


இந்த விஷயத்தையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் தெரிவிக்கின்றது.


1*"அடையப் பயின்றார் சொல் ஆற்றுவராக்கேட்டால்
உடையதொன்றில்லாமையொட்டின் - படைபெற்
றடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்
இடைய னெறிந்த மரம்."


இடையன் விரித்துரைத்த காட்சியும் பழமொழிச் செய்யுளும் ஒருங்கே என் மனத்தில் ஓடின.


"அவ்வாறு வெட்டும்போது கிளை அடியோடு விழும்படி வெட்டினால் என்ன?" என்று நான் கேட்டேன்.


"அப்படி வெட்டிவிட்டால் அந்தக் கிளை பிறகு உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்."


இடையன் எறிந்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும்' என்ற எண்ணத்தை அவன் கூறிய விடை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்தவாறே,
"இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்" (1914), என்ற சீவக சிந்தாமணி அடி ஞாபகத்திற்கு வந்தது.

தமிழ்த்தாத்தாவிற்குப் பிறந்த நாள் அஞ்சலிகள்!

Sunday, February 18, 2018

எண்ணங்களைச் சொல்லலாமா?

தமிழ்நாடு எங்கே போகிறது என்பதை நினைத்தால் கவலையா இருக்கு! தமிழர்கள் வேறே, இந்துக்கள் வேறே என்கிறார்கள். இந்த இந்து என்னும் பெயரே ஆங்கிலேயர் காலத்தில் வந்தது தான். அதற்கு முன்னர் சநாதன தர்மம் என்றே சொல்லி வந்தார்கள். இந்த நாடு முழுவதும் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றனர். ஒரு பேச்சுக்கு ஆரியர் வந்து திராவிடரைத் தெற்கே விரட்டிட்டதா வைச்சுண்டாலும் அந்த திராவிடர் வடக்கே இருந்து வந்தவங்க தானே! அப்போ எல்லோரும் வந்தேறிகள் தானா? அடக் கடவுளே! :) அதோடு சங்க காலத்துக்கும் முன்னால் தொல்காப்பியர் காலத்திலிருந்தே நாம் கும்பிட்டு வந்த கடவுளர்கள் நம்முடையவர்கள் இல்லையாம்! என்னவோ போங்க! மன்னர்களால் தானே கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. எந்த மன்னனும் மொழி வாரியாகவோ ஜாதிவாரியாகவோப் பிரிவினை செய்திருந்தால் அதற்கான ஆவணங்கள் இல்லாமலா போயிருக்கும்? எந்த மன்னனும் அப்படிச் செய்ததாய்த் தெரியவில்லை.  கொடுங்கோல் மன்னன் இருந்திருப்பான். ஆனால் அவன் அழிந்து போனான் என்றே அறிந்திருக்கிறோம்.

மோதி தமிழைத் தொன்மையான மொழினு சொல்லிட்டாராம். அதனால் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கவேண்டும் என்னும் கோரிக்கை! ம்ம்ம்ம் வர வரத் தமிழ்ப் போராளிகள் அதிகமாயிட்டே வராங்க! அதிலே சில பேர் தமிழர்கள் நாகரிகமே கிறித்துவம் தான் என்கிறார்கள். வள்ளுவர் பைபிளைப் பார்த்துத் தான் திருக்குறளே எழுதினார் என்கிறார்கள்.  அப்படியா? வேதங்கள் தொன்மையானவை இல்லையாம்! என்னவோ போங்க!

காவிரி தீர்ப்பு வந்துவிட்டது. பெரும்பான்மையான தமிழர்கள் இதை ஆதரிக்கிறார்கள். கர்நாடகாவிலும் இதற்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கர்நாடகா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் ஆணையை எல்லாம் அவங்க எப்போவுமே மதிக்க மாட்டாங்க! ஆகவே இம்முறை வந்திருக்கும் இறுதித் தீர்ப்பைக் கர்நாடகா அரசு செயலுக்குக் கொண்டு வரணும்! :( இத்தனைக்கும் தேசியக் கட்சி  ஆளும் மாநிலம். என்னவோ போங்க! கோர்ட்  தீர்ப்புப் படி கர்நாடகம் நடந்தால் நல்லது தான்! ஆனால் மேலாண்மை வாரியமே வேண்டாம்னு சொல்றப்போ இது நடக்குமா என்று சந்தேகமே வருது. ஆனாலும் நமக்குக் காவிரி நீர் பெருமளவு நம் தமிழ்நாட்டுக்குள்ளே இருந்தே மழை மூலம் கிடைத்து வருகிறது. ஆகவே நம் நீர் ஆதாரங்களைச் செம்மைப் படுத்தினாலே போதும்னு தோணுது! எங்கே!

சென்ற மாதம் குலதெய்வம் கோயிலுக்குப் போனப்போ அரிசிலாற்றைப் பார்க்கவே வேதனை பிடுங்கியது. இந்த நதிகளைச் சீர் செய்வதையும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வந்தால் தவிர இவற்றுக்கு விமோசனம் கிடையாது! வெள்ளை வெளேரென அழகாக மெத்தென்ற வெண் மணல் படிந்திருக்கும் அரிசிலாற்றைப் பார்த்து அதிசயித்த காலமெல்லாம் கனவாகி விட்டது. ஆங்காங்கே கிழிந்திருக்கும் புடைவையைக் கிழிசலோடு கட்டிக் கொண்டு வந்து பிச்சை கேட்கும் மஹாராணியைப் போல் அரிசிலாறு காட்சி அளிக்கிறாள். கன்னிமாடத்தில் அந்தப்புரத்திலிருக்கும் இளவரசியைப் போல் மென்மையான அழகோடும், நிதானமான நடையுடனும் ஒசிந்து ஒசிந்து செல்லும் அரிசிலாறு இப்போது நடக்கத் தடுமாறுகிறது.

திரு நாகசாமி, தொல்லியல் அறிஞருக்கு இப்போது "பத்ம" விருது கிடைத்திருப்பதற்கும் ஒரு காரணத்தைத் தமிழறிஞர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.  திருக்குறளுக்கு மனு நீதி சாஸ்திரம்  மூலமாக இருந்திருக்கலாம் என்று சொல்லி இருக்கிறாராம். அதோடு அவர் புத்தகத்தில் காஞ்சி மஹாப்பெரியவரின் படம் இருந்ததாம். ஆகவே காஞ்சி மடத்தினரின் சிபாரிசின் பேரில் அவருக்கு விருது கிடைத்திருப்பதாகச் சொல்கின்றனர்.  பாவம் திரு நாகசாமி அவர்கள்! வயது தொண்ணூறுக்கு மேல் ஆகிறது. இந்த வயசில் இவர் விருதுக்காகவா அலைவார்? குற்றம் சொல்றவங்க யாரும் அதை நினைச்சே பார்க்கலை! இத்தனைக்கும் குற்றம் சாட்டுபவர் அவருடைய மாணவராம்! ஆசிரியர் மேல் மாணவர் குற்றச் சாட்டு. இதுக்கு நிறைய பதிலும் வந்திருக்கு! என்றாலும் இப்போல்லாம் தமிழர்கள் எல்லாத்தையும் உணர்வு பூர்வமாகவே அணுகுவதாகத் தோன்றுகிறது. இந்த முனைவர் சாந்தலிங்கம் அவர்கள் கீழடி அகழ்வாராய்ச்சி விஷயத்தில் சரியான கோணத்தை எடுத்துக் காட்டி இருந்ததைப் பார்த்தப்போ சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவர் எழுதி இருக்கும் "நெ"(நொ)ட்டுரையில் தம்முடைய ஆசிரியரைக் குறித்துக் கேவலமாகப் பேசி இருப்பதைக் கண்டால் சாந்தலிங்கம் அவர்கள் மேல் வைத்திருந்த மதிப்பே காணாமல் போனது!

ஆனால் பாருங்க! நம்முடைய ராஜ ராஜ சோழனையும், குலோத்துங்க சோழனையும், ராஜேந்திர சோழனையும் இதே தமிழர்கள் திட்டறாங்க! அவங்கல்லாம் ஒண்ணுமே நல்லது செய்யலைனு சொல்றாங்க. அப்போ இந்தத் தனித் தமிழர்களுக்கு அவங்களும் தமிழர்கள் தான்னு தோணவே இல்லை பாருங்க! அதோடு மட்டுமில்லாமல் எல்லாக் கோயில்களுமே பௌத்த விஹாரங்களை இடிச்சுட்டுக் கட்டினதா வேறே சொல்லிட்டு இருக்காங்க. நாகைப்பட்டினத்தில் பௌத்த விஹாரம் இருந்தது உண்மை தான். ஆனால் அதே சமயம் திருநாகைக்காரோணரும் அங்கே இருந்திருக்கார் என்பதை வசதியாக மறந்துடறாங்க. அதே போல் காஞ்சியில் சமணப் பள்ளிகளும் பௌத்தக் கடிகைகளும் இருந்தன தான். ஜீன காஞ்சி, பௌத்த காஞ்சி ஆகியவற்றோடு கூட சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சியும் இருந்திருக்கின்றனவே. எல்லா பிரபலமான கோயில்களும் ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடப்பட்டு அகச்சான்றுகள், புறச் சான்றுகளோடு காணக் கிடைக்கின்றன. அவற்றையே இல்லைனு சொல்றாங்க!

இப்போப் புதுசா ஒண்ணு கிளம்பி இருக்கிறது என்னன்னா திருஞானசம்பந்தர் சமணப் பெண்களைக் கற்பழிக்கணும்னு ஆலவாய் அண்ணலிடம் வேண்டிக் கொண்டாராம்! என்னத்தைச் சொல்ல! ஞானசம்பந்தர் இருந்ததே பதினாறு வயது வரையோ என்னமோ தான். அதிலே பாண்டியனைச் சுரம் இறக்கச் சென்றவர் மன்னன் சமணன் என்பது தெரிந்திருந்தும் இம்மாதிரி வெளிப்படையாக மன்னனுக்கு எதிராக ஆலவாய் அண்ணலிடம் கோயிலில் எல்லோர் முன்னாலும் வேண்டிக் கொள்வாரா என்ன?  மொத்தத்தில் எல்லோருக்கும் என்னவோ ஆகி விட்டது! என்னனு தான் புரியலை!

மொத்தத்தில் நம்முடைய கோயில்கள், கலாசாரம் ஆகியவற்றுக்குக் கேடு வந்திருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். முக்கியமாய் இளைஞர்கள் மனதில் இவை எல்லாம் பதிந்து போய்விடாமல் அவர்கள் உண்மையைக் கண்டறிய வேண்டும்.  ஏற்கெனவே மொழியைக் காரணம் காட்டி தமிழர் தனி என்று சொல்லி வருகின்றனர். அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரிக் கலாசாரம், கோயில்கள், புராண, இதிகாசங்கள் என்று அமைந்துள்ளப்போத் தமிழ்நாட்டில் மட்டும் மாறுமா?

Monday, February 12, 2018

சின்னச் சின்னப் பிரச்னைகள்!

என்னென்னவோ எழுதணும்னு நினைப்பு. ஆனாலும் ஒரு வாரமாகச் சும்மா இணைய உலாவோடு சரி! எதுவும் எழுதணும்னு தோணவில்லை. தினம் தினம் இன்னிக்கு எப்படியாவது எழுதிடணும்னு நினைப்பேன். ஆனால் எதுவும் எழுதாமல் மாலை ஐந்தரைக்கே கணினியை மூடிடுவேன். இன்னிக்குத் திறந்திருப்பதே சுண்டெலியைச் சரி செய்ய மருத்துவர் வந்திருந்தார். அதனால் திறந்து வைச்சிருக்கேன். கணினியிலே எந்தப் பிரச்னையும் இல்லை. மவுஸ் தான் கீழே விழுந்ததில் வீணாகி விட்டது என்பதோடு பாட்டரிக்கும் தலையில் வீக்கம்! :) சரினு பழைய மடிக்கணினியில் சுண்டெலியை இதில் போட முடியலையேனு கேட்டேன். ஹிஹிஹி! அது லாகிடெக்! இது டெல்! அதனால் ஒத்துக்கலை. (ஆரம்பத்தில் இருந்தே)  கடைசியில் பார்த்தால் ரிசீவர் தான் பிரச்னை! நான் இந்தப் புதுக்கணினியில் இருந்த ரிசீவர் எல்லா மவுஸுக்கும் பொருந்தும்னு நினைச்சேன். ஆனால் லாகிடெக் ரிசீவர் தான் லாகிடெக் சுண்டெலிக்குச் சேருமாம். ரிசீவரை மாத்தினதும் புதுக் கணினியில் வேலை செய்ய முடிகிறது. சின்னப் பிரச்னை! ஆனால் மாசக்கணக்காகத் தடங்கிப் போய் இருந்தது. இப்போதைக்குப் புதுசாச் சுண்டெலி வாங்க வேண்டாம்.

எல்லோரும் பட்டுக்குஞ்சுலு யாருனு பேசிட்டு இருக்காங்க. ஹிஹிஹி! சொல்ல மாட்டேனே!

அப்புறமா இன்னொரு விஷயம் இன்னிக்குக் கீரை வடை செய்தேன். நெ.த.வை நினைத்துக் கொண்டேன். நல்ல மொறு மொறு!


நெ.த. நினைப்பு வந்தாலும் படம் அரைப்பதற்கு முன்னர் எடுக்கலை. வேறே வேலை இருந்ததால் அதைப் பார்த்துக் கொண்டே வடைக்கு அரைச்சு எடுத்துட்டேன். கீரையைக் கலந்தப்புறமாத் தான் படம் எடுத்தேன். அது மேலே!


எண்ணெயில் வேகும் வடைகள்! மொறு மொறு நெ.த.! தொட்டுக்க ரங்க்ஸுக்குப் பிடிச்ச தேங்காய்ச் சட்னி! எனக்கு எதுவுமே வேண்டாம். அப்படியே சாப்பிடுவேன். கற்பகாம்பாள் மெஸ்ஸிலே பண்ணின மாதிரி சாம்பார் எனில் ஓகே! :)



 கொஞ்சம் ஷேக் ஆயிடுச்சோ! அடுப்பில் பாலை வைச்சிருந்ததால் அங்கே ஒரு கண்! இங்கே ஒரு கண்! அதான்! :) 



இது கொஞ்சம் பரவாயில்லையோ? இதோடு சேர்த்து இன்னும் இரண்டு, மூன்று சமையல் குறிப்புகள் உள்ளன. ஶ்ரீராமிடம் கேட்டதுக்கு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட வரிசை என்பதால் மார்ச் மாதம் வரும்னு சொல்றார். அதான் அனுப்பலாமா வேண்டாமானு யோசனை! என்ன சொல்றீங்க? எப்படியோ இன்னிக்கு எ.பி.க்குப் போட்டியா கீரை வடை போட்டாச்சு! என்ன செய்முறையா? ஹை! முன்னேயே அதிரா போட்டப்போ சொல்ல மாட்டேன்னு சொல்லி இருந்தேனே! அதனாலே சொல்ல மாட்டேனே!

Saturday, February 10, 2018

ஒரு சாமானியர் பிரதமர் ஆனால் எதிர்கொள்ள வேண்டியவை! :(

Image may contain: 1 person, text

இது பிரதமரின் அலுவலகத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு ட்வீட். இதைப் பிரதமரின் சார்பில் அவர் அலுவலக ஊழியர் ஒருவர் கொடுத்திருக்கிறார். இதைக் கேலி செய்து நேற்று முகநூலில் சில இளைஞர்கள் பிரதமரைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டு இருந்தார்கள். மேலும் அவரின் ஆங்கில உச்சரிப்பையும் கேலி செய்தார்கள். சாதாரண அரசுப் பள்ளியில் படிச்ச நாங்களே நல்லா ஆங்கிலம் பேசறோம். இவரால் முடியலையே என்று அவர்கள் கிண்டல்! ஏனெனில் பிரதமர் ஒரு டீக்கடைக்காரர் அல்லவா?  அதான் அவர்களின் முக்கியக் கருத்தே!  எல்லோருமே அந்த இளைஞர்களைப் போல திறமையானவர்களாக இருக்க முடியாதே!

எனக்குத் தெரிந்து வட மாநிலங்களில் ரிசர்வ் என்பதை "ரிஜர்வ்" என்றே சொல்லுவார்கள்.  "நெசஸரி" என்பதை "நெஜஜரி" என்பார்கள். "மெஷர்" என்பதையும் "மெஜர்" என்பார்கள்.  ஆரம்பத்தில் எங்களுக்கும் சிரிப்பு வந்தாலும் எல்லோருடைய உச்சரிப்புமே அப்படியே இருக்க இதான் அவர்களின் உச்சரிப்பு, பொதுவானது என்பதைப் புரிந்து கொண்டேன். மேலும் பிரதமருக்குக் கல்லூரிக்குச்  சென்று படித்திருக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்காது. அதோடு இல்லாமல் பொதுவாகவே ராஜஸ்தான், குஜராத், உ.பி. ம.பி. பிஹார் இங்கெல்லாம் இப்படியே உச்சரிப்பதால் அது தான் சரியானது என்னும் எண்ணம் இருக்கலாம். வட மாநில மக்கள் சொல்லுவது மதராஸிகளின் ஆங்கில உச்சரிப்பு ஆங்கிலேயர் போலவே இருக்கும் என்பது தான்.  அவங்க உச்சரிப்பு சரியில்லை தான். ஆனால் அதற்காக ஒருவரை எவ்வளவு கீழ்த்தரமாகக் கேலி செய்வது? அதுவும் ஓர் நாட்டின் பிரதமரை! ஏனெனில் அவர் ஒரு டீக்கடைக்காரர்! அதான் இங்கே முக்கியம்.

வட மாநிலங்களின் உச்சரிப்பே அப்படித் தான். இவர் மட்டுமல்ல. ஆக நீங்க கேலி, கிண்டல் செய்வதெனில் வட மாநில மக்கள் மொத்தப்பேரையும் செய்ய வேண்டும். இதிலே சில பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் போன்றோர் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், இந்தியாவின்  டூன் ஸ்கூலிலும் மற்ற பிரபல கான்வென்ட்களிலும் படித்த தலைவர்கள் இருக்கலாம். அவர்கள் உச்சரிப்பு ஆங்கிலேயர் போலவோ அமெரிக்கர் போலவோ இருக்கலாம். மோதி மாதிரி டீக்கடைக்காரர்கள், சாமானியர்கள் உச்சரிப்பு இது தான்.

ரிசர்வேஷன் செய்யப் போனால் வட மாநிலங்களில் கவுன்டரில் உள்ளவர் கூட ரிஜர்வேஸன் என்றே கூறுவார்! சென்னையில் மக்கள் பள்ளியை இஸ்கூலு என்பார்கள். பல்லியை Ba(ப)ல்லி என்றும், குடிசையை Gu(கு)டிசை என்றும் சொல்லுவார்கள். நாங்கள் இதை எல்லாம் கேலி செய்வதில்லை. ஏனெனில் அவங்க பார்வையில் நாம் தப்பாக உச்சரிப்பவர் ஆக இருப்போம் என்னும் எண்ணம் எங்களிடம் உண்டு!

எத்தனை தரம் நீங்க கேலி பண்ணினாலும் அப்படித் தான் பேசுவார்கள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அவங்க குஜராத்தி உச்சரிப்பையும், ஹிந்தி உச்சரிப்பையும் அவங்க போல நீங்க பேசலாம். ஆனால் அவங்கல்லாம் உங்களைப் போல் திறமையானவர்கள் அல்ல! வெகு சாமானிய மக்கள்! :) சுமார் 20,25 வருட வட மாநில வாழ்க்கையில் மக்களுடன் பழகியதில் சாமானியர்கள் என்பது நன்கு புரிந்தது.

ஆக்கபூர்வமாகப் பிரதமர்  நாட்டுக்கு என்ன செய்தார் என்பதைச் சிந்திக்காமல் இம்மாதிரி அவருடைய நடை, உடை, பாவனை, பேச்சு, உச்சரிப்பு போன்றவை விமரிசனத்துக்கு உள்ளாவது அநேகமாக இந்தப் பிரதமரிடம் மட்டும் தான். ஏனெனில் இவர் சாமானியர். கீழே இருந்து மேலே படிப்படியாக முன்னேறியவர். நாம் வாய் தான் கிழியப் பேசுவோம். தலித்துகளையும், மற்ற பிற்பட்ட வகுப்பினரையும் முன்னேற்ற வேண்டும் என்று. ஆனால் அவர்களில் ஒருத்தர் முன்னேற்றம் கண்டு தலைவராக வந்துவிட்டால் நம்மால் பொறுக்க முடியவில்லை பாருங்கள். நாலு வருஷமாக எவ்வளவு பேசுகிறோம். இதுவே வேறே காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எனில் பேசுவோமா! அடக்கிக் கொண்டு வாய் மூடிக் கொண்டு இருப்போம். நாம் அப்படியே பழகி விட்டோம்.


தவறாக இருக்கும் என்றாலும் தைரியமாக அதைப் பதிவிட்ட திரு மோதியைப் பாராட்டுகிறேன். ஜப்பானியர்கள் ஆங்கிலம் பேசலைனா, நாம் அதைப் பாராட்டுவோம். புகழ்வோம். ஆனால் நம்மில் ஒருவர் பேசத் தெரியாமல் தப்பாகப் பேசினால் கிண்டல், கேலி, நையாண்டி இன்னும் எவ்வளவு மட்டமாகக் கீழ்த்தரமாகப் பேச முடியுமோ அவ்வளவும் பேசுவோம்.

இதுக்கு பதில் சொன்ன அந்த இளைஞர் சொல்கிறார்: "நான் சாதாரண கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்ச ஆள்.. என்னால சரியா சொல்ல முடிகிற உச்சரிப்பை அவங்க ஏன் சொல்ல முடியல ?"// தமிழிலே இங்கே எல்லோரும் சரியான உச்சரிப்பைத் தான் காட்டுகிறார்களா? அமைச்சர்கள் உட்ப்ட? முதல்லே தமிழ் பேசுபவர்களைத் திருத்துங்க! அப்புறமா வடநாட்டுக்குப் போகலாம். அங்கே சொல்லிக் கொடுப்பதே ரிஜர்வேஸன் என்று தான்! ஆசிரியர்களின் உச்சரிப்பே அப்படித் தான் இருக்கும். எங்களைப் போன்ற தென்னிந்தியர்கள் வேணுமானால் குழந்தைகளைத் திருத்துவோம். ஆனால் அங்கே அது தான் அவங்க உச்சரிப்பு. டெக்னிக் என்பதை தக்னிகி என்பார்கள். இப்படி எத்தனையோ இருக்கு! ஒட்டுமொத்த மக்களின் உச்சரிப்பே ரிஜர்வ் என்றே இருக்கையில் எத்தனை பேரைத் திருத்துவீங்க? இங்கேயும் சிலருக்கு ஷ, ஸ, ஹ வராது. உச்சரிப்பில் மாறுபாடு இருக்கத் தான் செய்யும். குறை சொல்லாமல் அவங்க சொல்வதைப் புரிஞ்சுக்கணும்.  எல்லாருமே அந்த இளைஞரைப் போல கெட்டிக்காரர்களாக இருக்க முடியுமா என்ன?

மேலும் அவர் சொன்னது! "இது பி எம் ஆபிஸில் இருந்து போட்ட பதிவு . ஆங்கிலம் தெரியாதவர் எல்லாம் அங்கே இருந்தால் அந்த ட்வீட்டை படிக்கிறவங்களுக்கு எது சரினு தெரியும் ?" // தெரியுது இல்லையா? இது பிரதமரே நேரடியாகப் போட்டது இல்லை என்பது? யாரோ செய்த தவறுக்கு அவரை ஏன் பொறுப்பாக்கறீங்க? 70 வருஷமாக் காங்கிரஸ் செய்யாதவற்றை எல்லாம் நான்கே வருடங்களில் அவர் செய்யலைனு கேலி செய்யறமாதிரி? ஒவ்வொன்றையும் அவர் நேரடியாகப் பார்த்துக் கவனித்துக் கொண்டிருந்தால் அப்புறமா அவருக்கு வேறே வேலையே இல்லையா? இதுக்கு அந்தத் துறை சார்ந்தவர்களுக்கோ அல்லது அந்த ட்வீட்டிலேயோ பதில் சொல்லி இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொண்டு திருத்தி இருப்பார்கள். அதை விடுத்துப் பிரதமரின் நடை, உடை, பாவனை, பேச்சுக்கள் என எல்லாவற்றையும் கேலி செய்வது தேவையே இல்லாதது.


இங்கேயும் ஆங்கிலத்தைத் தவறாகப் பேசும், எழுதும் அரசு அதிகாரிகள்/அமைச்சர்கள் உள்ளனர்! இன்னும் சொல்லப் போனால் தொலைக்காட்சி சானல்களில் வரும் சூடான செய்திகளின் தலைப்புக்களில் எவ்வளவு எழுத்துப் பிழைகள், பொருட்பிழைகள்! அதை எல்லாம் யார் கண்டிக்கின்றனர்? ஆங்கிலம் கலக்காமல் எந்தத் தொகுப்பாளர்/தொகுப்பாளினி பேசுகிறார்கள்?


ஆனால் அந்நிய மொழி ஒன்றை இந்திக்காரர் தமிழ்காரர் இருவரும் கையாளும் விதமே முக்கியம்// லட்சக்கணக்கான மக்களை அதுவும்    ஐந்து, ஆறு மாநில இந்தி பேசும் மக்களை நீங்கள் முயன்றால் திருத்துங்கள். புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாம் ஹிந்தியை அதே போல் தவறாக உச்சரிப்பதை அவர்களும் கேலி செய்யலாமே! ஆனால் நீங்க எல்லாம் தான் ஹிந்தியே கற்றுக்கொள்ள மாட்டீர்கள்! ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன்போன்ற தமிழ்நாட்டு மொழிகளில் வல்லுநர்கள்! :))))) கூடியவரை தனி மனிதத் தாக்குதல்களைத் தவிர்த்து நிர்வாக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ பிரதமர் செய்யும்/செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டலாமே!

Thursday, February 08, 2018

என்ன நடக்கிறது? :(

திருச்செந்தூர்க் கோயிலின் மண்டபம் இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து ஶ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளம்மா நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். தொடர்ந்து விஜயேந்திரர் மாட்டிக் கொண்டார். அதன் பின்னர் மதுரைக் கோயில் பற்றி எரிந்தது! அந்த வேதனையே இன்னும் அகலாமல் இருக்கும்போது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருக்ஷம் பற்றி எரிகிறது என்று செய்தி!


மொத்தத்தில் நடப்பவை எதுவும் நல்லதுக்கல்ல. மீனாக்ஷியைப் போய்ப் பார்த்தே நாட்கள் ஆகி விட்டன. போகணும்னு இருந்தோம். அதுக்குள்ளே கோயிலில் தீ என்னும் செய்தியைக் கேட்டதும் எந்த முகத்தோடு அந்தப் பழைய இடங்களை எல்லாம் பார்க்க மனசு வரும்னு தோணுது! மதுரைக்குப் போகவே மனசு வராது போல இருக்கு! அதிலும் மீனாக்ஷியைப்    பார்க்கவே மனசுக்குக் கஷ்டமா இருக்கும் போல! ஏற்கெனவே வீர வசந்தராயர் மண்டபமும், பசுபதிராயர் மண்டபமும் இடிந்து விழுந்து விட்டதாகச் சொல்கின்றனர்.

நெருப்புத் தோன்றிய உடனே ஏன் யாரும் அதை அணைக்க முயற்சி செய்யவில்லை? இந்த அளவுக்கு நெருப்புக் கொடூரமாகப் பற்றிக்கொள்ளும்வரை எல்லோரும் ஏன் பேசாமல் இருந்தார்கள்? இதிலே அறநிலையத் துறையின் பொறுப்பு என்ன? அவங்க ஏன் வாயே திறக்கலை? நெருப்புப் பற்றிக் கொண்டது எதனால்? இவ்வளவு மோசமான பாதிப்பு இருந்தும் அரசு ஏன் மௌனமாக இருக்கிறது? ஒண்ணும் புரியலை! அறநிலையத் துறை அமைச்சர் ஏன் இன்னும் வந்து பார்க்கலை? அடுத்தடுத்துக் கோயில்களுக்குக் கேடு நடந்து வருவது நல்லதல்ல! ஆனால் நாம் கையாலாகாமல் உட்கார்ந்து புலம்புவதைத் தவிர வேறே ஏதும் செய்ய முடியலை! :(

Tuesday, February 06, 2018

கலியுக வரதராஜப் பெருமாள் கோயில்! தொடர்ச்சி!

மூலவருக்கு அறங்காவலர் முன்னிலையில் வழிபாடுகள் முடித்துக் கற்பூரம் காட்டி அவருக்குப் பரிவட்டம் கட்டிப் பின்னர் உற்சவருக்கு வந்தார்கள். அந்த ஊர் வழக்கம் எப்படி எனில் அர்ச்சனையோ, அபிஷேஹமோ, சிறப்பு வழிபாடோ மூலவருக்கு மட்டுமின்றி உற்சவருக்கும் சேர்த்தே செய்ய வேண்டுமாம். எங்களுக்கு அது தெரியாது. மூலவர் வெறும் கம்பத்திலேயே குடி கொண்டிருக்கிறார். ஆஞ்சநேயர் தாங்குவதாகச் சொல்கின்றனர். ஆனாலும் ஆஞ்சநேயர் உருவம் தெரியவில்லை! மூலவர் கம்பத்தில் இருப்பதால் தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது. தாயாரும் கம்பத்தில் பெருமாளுடன் இருப்பதாக ஐதீகம். கோவிலில் தசாவதார சந்நிதியில் தசாவதாரங்களும் சிற்ப வடிவில் உள்ளன. கோயிலே சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து காணப்பட்டாலும் படம் எடுக்க முடியவில்லை. ஏற்கெனவே எங்களை விரோத பாவத்துடன் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கப் படத்தை வேறே எடுத்து அர்ச்சனையே செய்ய முடியாமல் போயிடுமோனு பயமா இருந்தது.

இந்தக் கோயிலில் கால்நடைகள், பயிர்கள் போன்றவை செழிப்பாக இருக்கத் தனியான பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். கோயிலைச் சுற்றிலும் பெரிய பெரிய கொள் கலன்களும், தானியக் கிடங்குகளும் இருக்கின்றன. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் அதில் சேர்க்கப்பட்டு உரிய நேரத்தில் நிவேதனமாகச் செய்யப்படுகிறது. கால்நடைகளின் நோய் தீரவும் ஆடோ, மாடோ கன்று ஈன்றால் முதல் ஈற்றுக் கன்றைக் கோயிலுக்குக் காணிக்கையாகவும் கொடுக்கிறார்கள். இந்தக் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்க வாசல் திறப்பு இல்லை. மாறாக உற்சவர் கலியுக வரதராஜப் பெருமாளே புறப்பாடு கண்டருளுகிறார்.  உற்சவர் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார்.

இந்தக் கோயிலின் தலவரலாறு வருமாறு: அரியலூருக்கு அருகில் உள்ள சிதளவாடியில் கோபாலன் என்னும் வன்னியருக்கு மங்கான் என்னும் பெயருள்ள மகன் ஒருவர் இருந்தார். இவர் ஆடு, மாடுகளை மேய்த்து வந்தார்.  அவர் மந்தையில் கருவுற்ற பசு ஒன்று நிறை மாதத்தில் கன்றை ஈனும் தருவாயில் திடீரெனக் காணாமல் போக மனம் வருந்திய மங்கான் பசுவைத் தேடி அலைந்தார். இரண்டு நாட்கள் சென்ற பின்னர் மூன்றாம் நாள் இரவு அவர் கனவில் காணாமல் போன பசு மேற்கே உள்ள காட்டில் மகாலிங்க மரத்துக்கும் ஆலமரத்துக்கும் இடையே சங்கு இலைப்புதர் அருகே உள்ளதாகவும், காலையில் சென்று பசுவோடு கன்றையும் கொண்டு செல்லலாம் என்றும் இறைவனால் கூறப்பட்டது.  காலையில் பசுவைத் தேடி அங்கே சென்றதும் பசு அவரைக் கண்டதுமே "அம்மா" என்று அலறியபடி ஓடி வந்தது. கூடவே அதன் கன்றும் வந்தது. பசு இருந்த இடத்தினருகே ஓர் நீண்ட கல் கம்பம் சாய்ந்து கிடந்ததைக் கண்டார் மங்கான். பசு அந்தக் கம்பத்தின் மீது பாலைச் சொரிந்து இருந்தது.

அந்தக் கம்பத்தைத் தொட்டு வணங்கிய மங்கானும் அவருடன் சென்றவர்களும் வீடு திரும்பினர். ஏழாம் நாள் இரவு மீண்டும் மங்கானின் கனவில், " பொய்ப் பொருளாம் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாயே! பேதையே! எத்தனையோ ஆயிரம் பேர் காத்துக் கிடந்தாலும் கிடைக்காத ஓர் தரிசனம் உனக்குக் கிடைத்துள்ளது.  அறியாமையால் நீ என்னை விட்டுச் சென்று விட்டாய். எனக்கும் உன் முன்னோர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதே சீதளவாடியில் வாழ்ந்து கொண்டு என்னை வணங்கி வந்த உன் முன்னோர் எனக்குக் கோயில் எழுப்பும்போது கல் கம்பம் கொண்டு வந்தனர்.  வண்டியில் என்னை ஏற்றி வரும்போது அச்சு முறிந்து அங்கேயே நான் விழுந்து விட்டேன். என்னை எடுக்க முடியாமல் அங்கேயே விட்டுச் சென்றார்கள். அந்தக் கம்பத்தில் தான் நான் குடி இருக்கிறேன். என்னை நிலை நாட்டுவது உன்னுடைய உரிமை!" என்று இறைவன் கூறினார்.

மேலும் தொடர்ந்து, "இந்தக் கம்பத்தை நிலை நிறுத்தி நீ தொடர்ந்து என்னை வழிபடவே உன் பசுவை மறைத்து வைத்தேன். இந்தக் கலியுகத்தில் மக்கள் படும் பெரும் துன்பத்தையும், துயரத்தையும் தீர்க்கவே நான் தோன்றினேன். உன்னுடைய குலதெய்வமாக இருந்து உன்னை வழிநடத்தவும் தோன்றினேன். என் பெயர் கலியுக வரதராஜப் பெருமாள்!" எனக் கூறி மறைந்தார். அந்த இடத்தில் தான் மங்கான் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்து இப்போது அவர் சந்ததிகள் வழிபட்டு வருவதாகச் சொல்கின்றனர். இந்த ஊரின் பெயர் இப்போது கல்லங்குறிச்சி என அழைக்கப்படுகிறது.

சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பு, அக்ஷய திரிதியை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் (உற்சவர்) எழுந்தருளுகிறார். இதைத் தவிரவும் ஆடி பதினெட்டு, கோகுலாஷ்டமி, விநாயக சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, விஜயதசமி,  திருக்கார்த்திகை, மார்கழி மாத பூஜைகள், அனுமன் ஜயந்தி, போன்ற நாட்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஶ்ரீராமநவமிக்கு உற்சவர், தாயாருக்கும், ஆஞ்சநேயருக்கும் சேர்த்து இரண்டு தேர்கள் இழுத்துத் தேர்த்திருவிழாக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரமும் இங்கே சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.      

Sunday, February 04, 2018

ஹை கோபியின் திடீர் மறைவு!



சென்ற ஞாயிறு அன்று ஹை கோபி என்னும் பெயரில் நான் அறிந்திருந்த வல்லுநரான தகடூர் கோபி, அதியமான் கோபி என்றெல்லாம் பெயர்களில் வழங்கப்பட்டவர் தூக்கத்திலேயே தன் கடைசி மூச்சை விட்டிருக்கிறார். ஹைதராபாதில் என்று சிலரும் இல்லை சொந்த ஊரில் என்று சிலரும் சொன்னாலும் மறைந்தது என்னமோ நிச்சயம் தான்.  நான் இன்று வரை அவரை நேரில் பார்த்ததில்லை!

2005 ஆம் ஆண்டில் நான் எழுத வந்த புதுசில் முதலில் அவருடைய  மொழி மாற்றி மூலம் தான் தமிழை எழுத  முயன்றேன். அங்கே மொழி மாற்றி வந்ததைக் காப்பி, பேஸ்ட் பண்ண வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தேன். அப்புறமாத் தான் அவருடைய மெயில் ஐடி கிடைத்ததும் அவரைத் தொடர்பு கொண்டேன். கூகிள் சாட்டிலேயே வந்து சொல்லிக் கொடுத்தார். நேரில் பார்த்ததில்லை.  பின்னர் தான் இ கலப்பை பழக்கம் ஆனதும் ஆசான் ஜீவ்ஸ் ஐயப்பன் கையைப் பிடித்து எழுத வைத்ததும் நடந்தது.

1. தகடூர் தமிழ் மாற்றி
2. உமர் பன்மொழி மாற்றி
3. அதியமான் எழுத்துரு மாற்றி
4. அதியன் பயர்பாக்ஸ் மீட்சி
5. தமிழ் விசைப்பலகை

இவை அனைத்தும் இவரால் தமிழ்க்கணினிக்கு வழங்கப்பட்டவையாகும்.

அதற்கு முன்னர் ஹை கோபியின் மொழி மாற்றியே உதவி வந்தது. சரியாக அடிக்கத் தெரியாமல், காப்பி, பேஸ்ட் பண்ணத் தெரியாமல் இருந்தபோதெல்லாம் வந்து உதவி இருக்கிறார். 42 வயதே ஆன ஹை கோபியின் மரணத்துக்கு வேலையில் இருந்த அழுத்தமே காரணம் என்று கூறுகின்றனர். இது இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  எத்தனை வேலைகள் இருந்தாலும் ஒரு நாளைக்குக் குறைந்த பட்சமாக அரைமணி நேரம் குடும்பத்துடன் செலவிடுங்கள். திருமணம் ஆனவராக இருந்தால் மனைவி, குழந்தைகளின் ஆசைகளுக்கும் விருப்பங்களுக்கும் செவி சாயுங்கள். தாய், தந்தை இருந்தால் அவர்களுக்காகவும் அரை மணி நேரம் செலவிடுங்கள்.

எந்நேரமும் வேலை, வேலை என வேலையில் மூழ்கி இருக்காமல் கொஞ்சம் ஓய்வும் பொழுது போக்கும் தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வெளிப்படையாக எந்த வியாதியும் தெரியாமல் இருந்து வந்த தகடூர் கோபி என்னும் ஹை கோபிக்கு உள்ளூர இருதயப் பிரச்னை இருந்து தூக்கத்திலேயே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். அவர் குடும்பத்தின் துன்பத்தையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரையும் நினைவு கூர்ந்தால் இனி நீங்கள் வாழ வேண்டிய வாழ்க்கையில் கூடியவரை எதையும் இழக்காமல் வாழ்வீர்கள் என நம்புகிறேன்.

தகடூர் கோபியின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறேன். சென்ற வாரமே இறந்து போன தகடூர் கோபிக்குத் தாமதமாக அஞ்சலி செலுத்த வேண்டியதற்கு மன்னிப்பும் கோருகிறேன். அடுத்தடுத்து ஏதேதோ பிரச்னைகள்! எழுத முடியவில்லை. முக்கியமாய் அவரைக் குறித்த மேலதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை. இப்போதும் கிடைக்கவில்லை! என்றாலும் பத்து வருடங்களுக்கு முன்னர் என்றோ ஓர் நாள் என்னுடன் கூகிள் சாட்டில் அவர் பேசியது அவருக்கு நினைவில் இருந்ததோ இல்லையோ எனக்கு இருக்கிறது.  தமிழும், தமிழ் எழுதுபவர்களும் உள்ளவரை தகடூர் கோபியின் பெயர் நிலைத்து நிற்கும்.  என்றென்றும் தமிழுக்கு அவர் செய்த தொண்டு அளப்பரியதாகும். 

Saturday, February 03, 2018

எங்கே போனேன்? இதோ இங்கே தான்!

kaliyaperumal_temple

படத்துக்கு நன்றி. கூகிளார் வாயிலாக Temples of Tamilnadu!

பல பிரார்த்தனைகள் நிறைவேற்ற வேண்டும். அவற்றில் ஒன்று அரியலூருக்கு அருகே கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ள கலியுக வரதராஜப் பெருமாளுக்குச் செய்ய வேண்டிய பிரார்த்தனையும் ஆகும். 2016 ஆம் ஆண்டிலேயே போயிருக்கணும். அப்போப் போக முடியாமல் ஏதேதோ தடங்கல்கள். அதை இப்போ முடிக்கணும்னு நினைச்சோம். ஆகவே அரியலூரில் இருந்து ஆறுகிலோ மீட்டரில் கல்லங்குறிச்சியில் உள்ள கலிய பெருமாள் கோயிலுக்குச் சென்றோம்.   முந்தாநாள் திடீர்ப் பயணமாகக் கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் எனப்படும் கலியபெருமாள் கோயிலுக்கும், பின்னர் அங்கிருந்து சிதம்பரமும் சென்று வந்தோம். திரும்பும் வழியில் கடலூர் சென்று தம்பி வாசுதேவனைப் பார்த்துவிட்டு வந்தோம். சமீபத்தில் தான் அறுவை சிகிச்சை முடிந்து வந்திருக்கிறார். அறுவை சிகிச்சை சமயத்தில் போக முடியவில்லை. எப்படியும் கடலூர் வந்ததும் போகணும்னு தான் இருந்தோம். அது இப்போத் தான் நேரம் கிடைச்சது.

காலை ஆறு மணிக்கே கிளம்பினோம். இப்போவும் ஃபாஸ்ட் ட்ராக் தான்! வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் போயிட்டோம்.  ஆனால் அங்கே முதல்நாள் கிரஹணத்திற்கான பரிகார பூஜைகள் முடிந்து அன்றைய உதயகாலபூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அர்ச்சனைக்குத் தேவையானவற்றையும் அங்கே நிவேதனம் செய்ய வேண்டியதையும் கையோடு எடுத்துப் போயிருந்தோம். நாம் கொண்டு போவதை நிவேதனம் செய்ய மாட்டார்கள் என்பதை ஏற்கெனவே அறிந்திருந்தோம். எனினும் அர்ச்சனைகள் செய்துக்கலாமே என அர்ச்சனைச் சீட்டு வாங்கப் போனால் அங்கே இருந்தவர் அப்போது அர்ச்சனைச் சீட்டுக் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.

கோயில் அறங்காவலர், (ஊழியர் சொன்னது முதலாளி) வரவேண்டும் எனவும் அவர் வந்து நித்திய கால பூஜைகள் முடிந்த பின்னரே அர்ச்சனை செய்வார்கள் எனவும் கூறினார். நாங்களும் அதனால் என்ன சீட்டு வாங்கிக் கொண்டு உட்கார்ந்துக்கறோம். காத்திருந்து அர்ச்சனை செய்து கொண்டே போறோம்னு சொன்னோம். அந்த ஊழியருக்கு வந்ததே கோபம்! அதெல்லாம் இப்போச் சீட்டுக் கொடுக்கக் கூடாது! கொடுக்கவும் முடியாது! நீங்க காத்திருந்தால் பின்னாடி வந்து வாங்கிக்குங்க! என்று சொல்லி விட்டார். சரினு வெளிப் பிரகாரத்தில் இருந்த ஒரு மண்டபத்துக்கு எதிரே போய் உட்கார்ந்தோம். பரபரப்பாகச் சிலர் அந்த மண்டபத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். நீர் விட்டுக் கழுவித் துடைத்து அங்கே நடுவாக உள்ள ஓர் இடத்தில் ஓர் ஆசனப் பலகையையும் போட்டார்கள். அந்த மண்டபத்தில் யாரோ சாமியார் படத்தோடு சாமியாரின் பெயரும் இருந்ததால் அவர் தான் வரப் போகிறாரோ என நினைத்தோம்.

ஆனால் அறங்காவலர் வரப் போவதாக அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் சொன்னார். அதற்குள்ளாக நம்ம முன்னோர்கள் மேற்கூரையிலிருந்து நம் கையிலிருந்த பையையே நோட்டம் விட்டார்கள். அலைபேசியை எடுத்துப் படம் எடுக்கலாம்னு நினைச்ச நான் அந்த யோசனையைக் கை விட்டேன். காமிராவாக இருந்தாலும் போயிட்டுப் போகட்டும்னு விட்டுடலாம். அலைபேசியைத் தூக்கிட்டுப் போயிட்டார்னா என்ன செய்யறது! உள்ளே போட்டுட்டு நாங்களும் உள்ளேயே சென்றோம். உற்சவருக்கு எதிரே இருந்த மண்டபத்தின் படிகளில் அமர்ந்தோம். கண்டிப்பாகப் புகைப்படம் எடுக்கக் கூடாதுனு சொன்னாங்க! புகைப்படம் எடுக்கத் தனியாக அனுமதி கொடுக்கும் சீட்டும் அங்கே கொடுப்பதில்லை. கொஞ்சம் தெரிஞ்சவங்க, வசதியானவங்க என்றால் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க போல! அது என்னமோ அந்தக் கோயிலில் இருந்தவங்க எங்களை அந்நியராகவே பார்த்தார்கள்.

அதுக்குள்ளே அறங்காவலர் வந்துட்டார்னு தெரிஞ்சு போய்ப் பார்த்தால் கோயில் ஊழியர்கள் குடங்களில் தண்ணீர் நிரப்பி எடுத்து வந்து அறங்காவலருக்குக் காலில் தண்ணீரை விட்டுப் பாத பூஜை போல் ஏதோ செய்தார்கள். அவருடன் கூட வந்தவர் தம்பியோ? அவர் ஜாடையிலேயே இருந்தார். அவருக்கும் நடந்தது. பின்னர் எல்லோரும் புடைசூழ அந்த மண்டபத்துக்குள்ளே போய் அந்த ஆசனப் பலகையிலேயே இருவருமாக அமர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குள்ளாக ஏதோ பேசிக் கொண்டார்கள். இருவருக்குமே கோயிலில் நித்தியகால பூஜைக்கான நேரம் என்பதே நினைவில் இல்லையோனு தோணிச்சு! அதுக்குள்ளே நான் மறுபடி தேவஸ்தான அலுவலகம் போய் அர்ச்சனைச் சீட்டு மறுபடி கேட்க மறுபடி கடுமையான வார்த்தைப் பிரயோகம்!  அப்படியும் விடாமல் நான் சீட்டுக் கொடுத்துட்டால் நாங்க ஒரு பக்கமா உட்கார்ந்துக்கறோம். வழிபாடுகள் முடிஞ்சதுமே அர்ச்சனை செய்துக்கறோம்னு சொன்னேன். ஊழியருக்கு வந்ததே கோபம்! கடுமையாகப் பேசினார்! திரும்பிட்டேன். மறுபடி உற்சவருக்கு எதிரே தேவு காத்துட்டு இருந்தோம்.

அரைமணிக்கப்புறமா நாதஸ்வரக் கலைஞர் , தவில் காரருடன் வந்தார். அத்தனை மன வருத்தத்திலும் இந்தக் கோயிலில் பரம்பரை நாதஸ்வரக் கலைஞர் இருக்காரேனு சந்தோஷம் வந்தது. அதுக்குள்ளே அறங்காவலர் மூலவரின் கர்பகிரஹத்துக்கு வந்துட்டார். அங்கே வழிபாடுகள் ஆரம்பித்தன. இங்கே நாதஸ்வரக் கலைஞர் சக்கைப் போடு போட்டார்.  தீப ஆராதனை சமயம் நானும் போய் நின்ற வண்ணம் தீப ஆராதனையைப் பார்த்துக் கொண்டேன். கோயில் பட்டாசாரியார்கள் ஒவ்வொன்றுக்கும் இடுப்பு வரை வளைந்து வணங்கி அறங்காவலரின் உத்தரவைப் பெற்றுக் கொண்டு செய்ததோடு அல்லாமல் அவருக்கு தீபாராதனையைக் காட்டி அவர் வணங்கும்போதும் கிட்டத்தட்ட வணங்கிய நிலையிலேயே காட்டினார்கள். கர்பகிரஹத்தில் இறைவன் ஒருவனே பெரியவன் என்னும் வேண்டாத நினைப்பு எனக்கு வந்து தொலைத்தது. பொதுவாகக் கோயிலிலேயே மனிதர்களை வணங்கக் கூடாது என்பார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தான் எனினும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆன கோயில்களைப் போல் மிகப் பழமையாகக் காணப்பட்டது. முகப்பில் கோபுரம் இல்லை! முன்னால் கிராமமே அதிகம் மனிதர்கள் இல்லாமல் கோயில் மட்டும் தன்னந்தனியாகக் காணப்பட்டது என்று ரங்க்ஸ் சொன்னார். இப்போத் தான் காலி இடங்களே விட்டு வைக்கிறதில்லையே நாம! அந்த வழக்கப்படி இப்போ அங்கே மனித நடமாட்டம் மட்டுமில்லாமல் இலவசக் கழிவறை, குளியலறை (பராமரிப்பு மோசம்) போன்றவைகள் இருந்தது. அங்கே மொட்டை போட்டுக் காது குத்துவது மட்டுமே செய்வார்களாம். திருமணங்கள் நடத்துவதில்லையாம்! நிறையப் பிச்சைக்காரர்கள் வழக்கம் போல்! ஆனாலும் கோயிலில் உள்ளே உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் மக்கள் எனில் நாங்கள் இருவர் மட்டும் தான்.