தடைப்பட்டு நிறைவேறிய கல்யாணம்!
சென்னைக் கிறிஸ்டியன் காலேஜில் தமிழாசிரியராக இருந்த கா.ஸ்ரீ. கோபாலாசாரியாரென்பவர் இலக்கண இலக்கியப் பயிற்சியிலும் பிரசங்கம் செய்வதிலும் செய்யுள் இயற்றுவதிலும் பத்திரிகைகளுக்கு விஷயம் எழுதுவதிலும் சிறந்தவராக இருந்தார். திவ்யப் பிரபந்த வியாக்கியானங்களில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த மையின் பல வைஷ்ணவப் பிரபுக்கள் அவரிடம் அன்பு வைத்து ஆதரித்து வந்தார்கள். அவர் பல வருஷங்கள் சென்னை ஸர்வகலாசாலையில் தமிழ்ப் பரீக்ஷகராகவும் இருந்தார். அவர் கெளரவமான நிலையிலே வாழ்ந்து வந்தார். அவருடைய சொந்த ஊர் ராஜமன்னார் குடிக்குப் பக்கத்தேயுள்ள காரப்பங்காடு என்பது.
அவர் எனக்கு முக்கியமான நண்பர். திருவல்லிக் கேணியில் திருக் குளத்துக்குக் கீழ்க்கரையில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்
கோபாலாசாரியார் தம்முடைய குமாரிக்கு விவாகம் செய்ய எண்ணிப் பல இடங்களில் வரன் தேடினார். கடைசியில் மன்னார்குடியில் பந்துக்களுள் செல்வ முள்ள குடும்பத்தைச் சார்ந்த ஒரு பிள்ளையைப் பார்த்து நிச்சயம் செய்து முஹூர்த்தம் வைத்தார். கல்யாணத்தை மிக்க செலவில் விமரிசையாக நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தி ருந்தார். கல்யாணம் நடத்துவதற்காகத் தனியே ஒரு ஜாகை யைத் திட்டம் செய்தார். பந்தல் மிகவும் சிறப்பாக அமைக்கப் பட்டது. சம்பந்திகள் தங்குவதற்குக் குளத்தின் வடகரையில் ஒரு பெரிய ஜாகையை ஏற்பாடு பண்ணினார்.
கல்யாணத்திற்கு முன்னே நடைபெறவேண்டிய சுபகாரியங்கள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றன. கல்யாணத்துக்கு முதல்நாள் காலையிலேயே சம்பந்திகள் மன்னார்குடியிலிருந்து சென்னைக்கு வந்துவிடார்கள். அவர்களைத் தக்கபடி வரவேற்று அவர்களுக்காக அமைக்கப் பெற்ற ஜாகையில் இருக்கச் செய்தார். அவர்களுக்கு வேண்டிய ஆகார வகைகளை அனுப்பி உபசரித்தார். முதல்நாள் இரவு மாப்பிள்ளை ஊர்வலம் (ஜான்வாஸா) உயர்ந்த முறையில் நடை பெற்றது. கல்யாண தினத்தன்று காலையில் பெண் வீட்டிலும் பிள்ளைவீட்டிலும் தனித் தனியே நடைபெற வேண்டிய வைதீக காரியங் களும் ஒழுங்காக நடந்தன. அப்பால் மாப்பிள்ளை பரதேசக் கோலம் வந்தார். பிறகு பெண்ணும் மாப்பிள்ளையும் கல்யாண வீட்டு வாசலில் மாலை மாற்றிக்கொண்டார்கள்.
மாலை மாற்றிக்கொள்கையில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் அவர்களுடைய அம்மான்மார்கள் தோளில் எடுத்துச் செல்வது வழக்கம். அவர்களுக்குப் பதிலாக வேறு சிலர் அவர்களை எடுத்துக்கொண்டு இடசாரி வலசாரியாகச் செல்வதும் ஆடுவதும் ஸ்ரீவைஷ்ணவக் குடும்பங்களில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு தோளெடுப்ப தற்காகவே காஞ்சீபுரத்தில் தேகவன்மையுள்ள ஒரு கூட்டத்தினர் உண்டு.
கோபாலாசாரியார் வீட்டுக் கல்யாணத்திலும் இந்த வைபவம் நிகழ்ந்தது. தோள் எடுப்பவர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலியாமல் குதித்தும் ஆடியும் ஓடியும் மேளதாளத்திற்கேற்ப நடனம் செய்தும் உத்ஸாகத்தோடு தங்கள் வன்மையைக் காட்டினர். கல்யாணத்துக்காக வந்திருந்த ஜனங்களோடு வேறு ஜனங்களும் இந்த வேடிக்கையைப் பார்க்கக் கூடி விட்டனர். ஜனங்களுடைய சந்தோஷ ஆரவாரமும் வாத்திய கோஷமும் கல்யாணத்துக்கு வந்திருந்த வர்களுடைய குதூகலமும் நிறைந்திருந்த அந்தக் காட்சியைக் கண்டு கோபாலாசாரியார் மனம் சந்தோஷ சாகரத்தில் நீந்தியது. அவருடைய சம்பந்தி யாகிய கனவானும் மிக்க சந்தோஷத்தோடு திண்ணை யில் உட்கார்ந்து இந்தக் காட்சியை அநுபவித்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறு இருந்த சமயத்தில் யாரோ ஒருவர் மெதுவாகச் சம்பந்திக்கு அருகில் சென்றார். இரகசியமாக அவர் காதண்டையில் சில வார்த்தைகள் சொன்னார். அந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் சம்பந்தியின் முகமலர்ச்சி மாறியது. அவர் திடீரென்று திண்ணையிலிருந்து கீழே குதித்து இறங்கினார். ஒருவர் தோளில் ஆரோகணித்திருந்த தம் குமாரரிடம் சென்றார். "கீழே இறங்கு" என்று கூறி அவரை அழைத்துக்கொண்டு நேரே தாம் தங்கியிருந்த ஜாகைக்குப் போய் விட்டார். அங்கிருந்த யாருக்கும் 'அவர் ஏன் அப்படிச் செய்தார்?' என்பது விளங்கவே இல்லை. அவரைச் சேர்ந்தவர்களும் அவர் போவதைக் கண்டு ஒருவர் பின் ஒருவராகச் சென்று விட்டனர். ஒரு நிமிஷத்தில் அங்கிருந்த ஆரவாரம் எல்லாம் மாறிவிட்டது.
கோபாலாசாரியார் பல நண்பர்களுக்கு விவாக முஹூர்த்தப் பத்திரிகை அனுப்பியிருந்தார். எனக்கும் வந்திருந்தது. கல்யாண தினத்து மாலையில் பாட்டுக் கச்சேரி ஒன்றும் ஏற்பாடாகியிருந்தது. நான் முஹூர்த்தத்தன்று பிற்பகலில் கல்யாணம் விசாரிப்பதற்காக, காலேஜ் விட்டவுடன் நேரே விவாகம் நடைபெறும் ஜாகைக்குச் சென்றேன். நான் போன சமயம் நான்கு மணியிருக்கும்.
அங்கே என்னைப் போலப் பலபேர்கள் கல்யாணம் விசாரிக்க வந்திருந் தார்கள். கோபாலாசாரியாரும் வேறு சிலரும் வந்தவர்களுக்குச் சந்தனம், புஷ்பம், கற்கண்டு, தாம்பூலம், தேங்காய் முதலியவற்றை வழங்கிக்கொண்டிருந்தனர். வந்தவர்களிற் சிலர் தாம்பூலம் பெற்றுக் கொண்டு திரும்பினர். சிலர் அங்கேயே உட்கார்ந்திருந்தனர்.
நான் போனவுடன் கோபாலாசாரியார் எனக்கும் சந்தனம், தாம்பூலம் கொடுத்தார்; அவர் முகத்தில் சோர்வுதான் காணப்பட்டது. நான் சாதா ரணமாக, "முஹூர்த்தம் சரியான காலத்தில் நடந்ததா?" என்று விசாரித்தேன்.
"அதுதான் இல்லை" என்றார் அவர்.
"ஏன்? நாழிகை ஆகிவிட்டதோ" என்று கேட்டேன்.
"முஹூர்த்தமே நடக்கவில்லை" என்று அவர் சொன்னார். நான் திடுக்கிட்டேன். "என்ன? முஹூர்த்தம் நடக்கவில்லையா? சந்தனம், தாம்பூலம் கொடுக்கிறீர்களே!"
"நாளை ஆறுமணிக்கு வேறு பையன் வந்துவிடுவான். காஞ்சீபுரத்திற்குச் சொல்லியனுப்பியிருக்கிறேன். இதைப் போல இரண்டு மடங்கு விமரிசையாக முஹூர்த்தம் நடந்துவிடும்."
எனக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் உண்டாயிற்று.
"என்ன சொல்கிறீர்கள்? வேறு பையனாவது! வரவாவது! இந்தப் பையன் என்ன ஆனான்? விஷயத்தை விளங்கச் சொல்லுங்கள்" என்றேன்.
"சொல்வது என்ன இருக்கிறது? மனுஷ்யர் சமயத்தில் இப்படி அவமானப்படுத்துவாரென்று எண்ணவே இல்லை. ஹூம்! நம் மேல் தப்பு. மனுஷ்யருடைய தராதரம் அறிந்து நிச்சயம் செய்திருக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவர் பெருமூச்சு விட்டார்.
அருகில் இருந்த ஒருவர் என்னிடம் விஷயத்தை விரிவாகச் சொல்லலானார்; "முஹூர்த்தத்துக்கு முன்பு நடக்கவேண்டிய காரியங்களெல்லாம் நன்றாகவே நடந்தன. எல்லோரும் திருப்தியாகவே இருந்தோம். பெண்ணும், பிள்ளையும் மாலை மாற்றிக்கொண்டார்கள். அப்போது எங்கிருந்தோ சனீச்சரன் போல் ஒருவன் வந்தான். சம்பந்தி காதைப் போய்க் கடித்தான். அந்த மனுஷ்யர் கொஞ்சமாவது மரியாதை யைக் கவனிக்காமல் திடீரென்று பையனை அழைத்துக்கொண்டு ஜாகைக்குப் போய்விட்டார். அவர் பிறகு வருவாரென்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தோம். அங்கிருந்து ஒருவரும் வரவில்லை. இங்கிருந்தும் ஒருவரும் அங்கே போகவில்லை."
"மத்தியான்னம் போஜனம் செய்தீர்களா?"
"போஜனமா? காலையில் ஆகாரம் பண்ணினது தான். அப்பால் ஒன்றும் சாப்பிடவே இல்லை."
'இதில் ஏதோ சிறு விஷமம் நடந்திருக்கிறது. கெளரவத்தைப் பெரிதாக எண்ணிக்கொண்டு ஒருவ ருக்கொருவர் மனஸ்தாபமடைந்திருக்கிறார்கள். சமாதானம் செய்வார் யாரும் இல்லை' என்று நான் தெரிந்து கொண்டேன். பிள்ளை வீட்டுக்காரரும் எனக்குத் தெரிந்தவராதலின், 'நாம் இதில் தலையிட்டுச் சமாதானம் பண்ணவேண்டும்' என்று நிச்சயம் செய்துகொண்டேன்.
"சரி;என்னுடன் சம்பந்தி ஜாகைக்கு நம்பிக்கை உள்ள ஒருவரை அனுப்புங்கள்" என்று கோபாலாசா ரியாரிடம் சொன்னேன்.
"தாங்கள் ஒன்றும் சிரமப்படவேண்டாம். அவர்கள் செய்த அவமா னத்தால் அவர்களைப் போய்ப் பார்த்துக் கெஞ்சுவதற்கு என் மனம் சம்மதிக்கவில்லை" என்றார் அவர். கெளரவத்தை விடாமல் அவர் இவ்வாறு சொன்னாலும் 'எப்படியாவது இதற்கு ஒரு வழி ஏற்படாதா?' என்ற எண்ணம் அவருக்கு இருந்ததென்பதில் சந்தேகம் சிறிதும் இல்லை.
"நீங்கள் இவ்வாறு சொல்லுவது தவறு. இவ்வளவு ஏற்பாடு செய்துவிட்டு இப்படிப் பிடிவாதம் செய்வத னால் லாபம் என்ன? பொருள் நஷ்டம், அவமானம் முதலியவையே உண்டாகும். ஆக்ஷேபிக்காமல் என்னுடன் ஒருவரை அனுப்புங்கள்" என்று நான் வற்புறுத்திக் கூறினேன். அவர் தம் பந்து ஒருவரை அனுப்புவதாகச் சொல்லி உள்ளே சென்றார்.
அவர் சென்ற சமயம் பார்த்து அங்கே உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர், "இந்தப் பயலுக்கு இது வேணும்" என்றார்.
"ஏன்?" என்றேன் நான்.
"நான் அப்பொழுதே சொன்னேன். இந்த ஸம்பந்தம் வேண்டாமென்று முட்டிக்கொண்டேன். ஒருவார்த்தை என்னிடம் சொன்னானா? ஏதடா, பெரியவன் ஒருவன் இருக்கிறானே, அவனைக் கேட்போமென்று நினைத்தானா? இப்போது அதன் பலனை அநுபவிக்கிறான்."
"இவ்வளவு கோபமாகப் பேசும் இந்த ஸ்வாமி யார்?" என்று அருகிலுள்ள ஒருவரைக் கேட்டேன்.
"இவர் கோபாலாசாரியாருடைய தமையனார்" என்றார் அவர்.
இதற்குள் கோபாலாசாரியார் தம் பந்து ஒருவரை அழைத்து வந்து என்னுடன் அனுப்பினார். அவரைக் கையில் தாம்பூலம் புஷ்பம் எடுத்துக்கொள்ளச் சொல்லி உடன் அழைத்துக்கொண்டு சம்பந்திகள் தங்கியிருக்கும் ஜாகைக்குச் சென்றேன்.
அங்கே சம்பந்தி ஒரு நாற்காலியில் முகவாட்டத்துடன் உட்கார்ந் திருந்தார். அருகில் பெஞ்சியில் சிலர் இருந்தனர். சிலர் கீழே ஜமுக்காளத்தின்மேல் அமர்ந்திருந்தனர். எல்லோருடைய முகமும் சோர்வ டைந்திருந்தன. யாவரும் உத்ஸாகத்தை இழந்து மத்தியான்ன உணவில்லாமையால் பசி ஒரு பக்கம் வருத்த, இன்னது செய்வதென்று தோற்றாமல் இருந்தனர்.
நான் சம்பந்தியிடம் போய், "என்ன இப்படிச் செய்து விட்டீர்களே! கல்யாணம் எவ்வளவு சிறப்பாக நடந்தி ருக்கவேண்டும்!" என்றேன்.
அவர், "நீங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ, அப்படி நடக்கிறேன்" என்றார்.
சமாதானம் பண்ணுவதற்கு ஒருவரும் வாராமையால் அவர் மிகவும் மனம் கலங்கி உட்கார்ந்தி ருந்தாரென்று தோற்றியது.
"கல்யாணத்துக்காக எவ்வளவு விரிவான ஏற்பாடுகள் செய்திருக்கிறார்? எவ்வளவு பந்துக்கள் வந்திருக் கிறார்கள்? எவ்வளவு சிநேகிதர்கள் வந்து வந்து விசாரிக்கிறார்கள் ? நீங்கள் திடீரென்று இப்படிச் செய்ய லாமா? ஏதாவது தோஷத்தைக் கண்டீர்களா ? முன்பே தீர யோசித்துத் தானே இந்தச் சம்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டிருப்பீர்கள் ?"
அவர் பதில் சொல்லாமல் எதையோ யோசித்தார், பெருமூச்சுவிட்டார்; பிறகு பேசலானார்:
"ஏதோ நடந்தது நடந்துவிட்டது; அவர்கள் எங்களை மதித்திருந்தால் உடனே வந்து கூப்பிட்டிருக்கலாமே. நாங்கள் மத்தியான்னம் கூடச் சாப்பிடவில்லை; காலையில் ஆகாரம் பண்ணியதுதான். அவர்களில் யாராவது வருவார்கள் வருவார்கள் என்று எதிர் பார்த்துக்கொண்டே இருந்தோம். எங்களை இவ்வளவு சங்கடமான நிலைமையில் அவர்கள் வைத்தது நியாயமா?"
"நீங்கள் திடீரென்று வந்துவிட்டீர்களாமே; உங்களுடைய அபிப்பிராயம் என்னவென்று தெரியாமல் உங்களிடம் வருவதில் அவர்களுக்குத் தைரியமில்லை. என்ன காரணமென்று சொல்லக் கூடுமானால் சொல்லுங்கள்."
"அதெல்லாம் இப்போது எதற்காகச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும்? ஏதோ சகுனம் சரியாக இல்லை யென்று தெரிந்தது. அதனால் வரவேண்டியதாயிற்று."
"இப்போது கல்யாணம் நடப்பதில் தங்களுக்கு எந்தவிதமான ஆக்ஷேபமும் இல்லையே; முஹூர்த்தத்தை நிறைவேற்றிவிடலாமல்லவா?"
"பேஷாக நடத்தலாம்."
உடனே கல்யாண ஜாகைக்கு உடன் வந்தவரை அனுப்பி, பிள்ளை வீட்டுக்காரருக்கு அந்தச் சமயத்தில் பசியை அடக்கக் கூடிய பலகாரங்களை அனுப்பச் செய்தேன். விசாரித்ததில் அஸ்தமனத்துக்குப் பின் ஒரு முஹூர்த்தம் இருப்பதாகத் தெரிந்தது. அதற்கு முன் சதிபதிகளாக உள்ள சிலரைக் கற்கண்டு, சர்க்கரை, சந்தனம், புஷ்பம், தாம்பூலம் முதலியவற்றோடும் வாத்தியத்தோடும் மாப்பிள்ளை வீட்டார்களை அழைப்பதற்கு வரும்படி செய்தேன். யாவரிடமும் அதுவரையிலும் மனஸ்தாபத்தாலும் சோர்வினாலும் மறைந்திருந்த உத்ஸாகம் இரண்டு மடங்கு அதிகமா யிற்று. சம்பந்திகள் புறப்பட்டார்கள். வாசலில் அடி வைத்தவுடன் ஒரு சுமங்கலி நிறைகுடத்தோடு எதிரே வந்தாள். அடுத்தபடி கையில் பால் எடுத்துக் கொண்டு இரண்டு பிராமணர்கள் வந்தனர். இப்படியே கல்யாண ஜாகைக்கு அவர்கள் போகும் வரையில் நல்ல சகுனங்கள் உண்டாயின. அவ்வாறு வரும்வண்ணம் ஜாக்கிரதையாக ஏற்பாடு செய்யவேண்டு மென்று சொல்லியிருந்தேன்.
கல்யாண ஜாகையின் வாசலில் மீண்டும் மாலை மாற்றும் வைபவம் சுருக்கமாக நடைபெற்றது. உடனே முஹூர்த்தமும் நிறைவேறியது. திருமங்கலிய தாரணம் ஆகும்வரையில் நான் இருந்தேன். தாலி கட்டியவுடன் சம்பந்தியிடம் என்ன சகுனத்தடை உண்டாயிற்றென்று கேட்டேன். அவர், "எங்களுக்குத் தெரிந்த ஜோஸ்யர் ஒருவர் என்னிடம் வந்து பெண்ணின் ஜாதகத்தில் தோஷம் இருக்கிறதென்றும், காலையில் புறப்படும்போது நல்ல சகுனம் ஆக வில்லை யென்றும் சொன்னார். சகுனம் ஆகாதது எனக்கும் தெரியும். என் மனத்தில் அந்த விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. அதோடு அவர் தோஷமென்று சொன்ன காரணமும் சேரவே, நான் பொறுமையை இழந்து அவ்வாறு செய்தேன். ஜாகைக்குப் போனபிறகு மற்றொரு ஜோஸ்யரைக் கொண்டு பார்த்ததில் தோஷமே இல்லையென்று தெரிந்தது. ஆனால் நாங்களாக வலிந்து வந்தால் கெளரவக் குறைவென்றும், அவர்கள் வந்து கூப்பிட்டால் போகலாமென்றும் எண்ணினோம். அவர்கள் வாராமையால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தோம். தாங்கள் வந்து எங்கள் சங்கடத்தைப் போக்கினீர்கள். காலையில் சகுனமாகாததன் பலன் மத்தியான்னம் பட்டினி கிடந்ததோடு சரியாகப் போய்விட்டது" என்றார்.
தாலிகட்டினவுடன் மிக்க திருப்தியோடு முதல் தாம்பூ லத்தை நான் வாங்கிக்கொண்டு விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன். கல்யாண கோஷ்டியில் இரு சாராரும், இந்த விஷயத்தை அறிந்த பிறரும் என்னை வாழ்த்தினர்.