நேத்திக்கு ஃபேஸ்புக்கில் ஜடாயு அவர்கள் சின்னக் குழந்தைக்காகப் பாடும் "ஆனை, ஆனை" பாட்டு பத்திச் சொல்லி இருந்தார். அப்போ இம்மாதிரிப் பாடல்கள் இப்போதுள்ள பெற்றோருக்குத் தெரியாது எனவும் சொல்லி இருந்தார்.அப்போது என்னிடம் சில பாடல்கள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அங்கே ஓர் சிநேகிதி அவற்றைப் பகிரச் சொல்லி இருந்தார்.ஃபேஸ் புக் மட்டுமில்லாமல் பதிவின் மூலம் பலரும் தெரிஞ்சுக்கலாம்னு இங்கே பதிவாப் போட்டிருக்கேன். குழந்தை பிறந்து ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு பாட்டு உண்டு. குழந்தை குப்புறத்திக் கொண்ட பின்னர் சுத்திச் சுத்தி வரும். அதன் பின்னர் ஆறு மாதத்தில் இடுப்பில் வைத்தால் குதிக்கும். அப்போது தான் "சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு குதிச்சதாம்!" பாடுவார்கள். குழந்தையும் அதற்கேற்பக் குதிக்கும்.
பின்னர் தவழ முயற்சி செய்யும் முன்னர் யானையைப் போல் முன்னும், பின்னும் ஆடும். அப்போது
"ஆனை, ஆனை, அழகர் ஆனை" பாடுவார்கள்.
சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!
கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!
உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!
கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!
தவழ முயலும்போது ஒரு பாடல்!
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஆடும் ஆனை
கட்டிக் கரும்பை முறிக்கும் ஆனை
காவேரி நீரைக் கலக்கும் ஆனை
எட்டிக் கதவை உடைக்கும் ஆனை
ஆனையைக் கண்டியா கோலத்தம்பி
கண்டேன் பண்டாரத்தோப்பிலே
சின்ன யானை வருது
சின்னக் கதவைச் சாத்துங்கோ
பெரிய யானை வருது
பெரிய கதவைச் சாத்துங்கோ
கொம்பன் யானை வருது
கொல்லைக் கதவைச் சாத்துங்கோ
குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சுதாம்.
பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாம்.
இன்னும், குழந்தை உட்காரும்போது பெண் குழந்தைக்கு
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!
ஆண் குழந்தை எனில்
ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்
அது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்
குட்டிப் பெருச்சாளி ஆடுமாம்
கொழுக்கட்டை கொண்டான்னு கேட்குமாம்
பொதுவான பாடல்கள்
யானை வந்தது யானை
எங்கே வந்தது யானை
சண்டைக்கு வந்தது யானை
சறுக்கி விழுந்தது யானை
பொதுவான பாடல்
காக்கா காக்கா கண்ணாடி
காசுக்கு ரெண்டு பம்பாயி
குந்தோ குந்தோ தலகாணி
குதிரை மேலே சவாரி
ஏன்டி அக்கா அழறே
காஞ்சிபுரம் போகலாம்
லட்டு மிட்டாய் வாங்கலாம்
பிட்டு பிட்டு தின்னலாம்
கண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு
வேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு
தாலாட்டுப் பாடல்கள்
கண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ
செங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ
முத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி
கொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்
நித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்
நூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ?
ஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
தைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ
யாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது
மானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ
தானோடி வந்து தந்த திரவியமோ
தேனோ திரவமோ திலகமோ சித்தடியோ
சித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்
சுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா
பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூச் செண்டாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே
அம்மா அடிச்சாளோ அரவணாஇக்கும் கையாலே
மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே
இதுவும் ஒரு வகைத் தாலாட்டுப் பாடல் தான்
செட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே
வைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை
கண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே
பார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே
அம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு
அம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ
ஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய
தானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய
ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது
இது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது
ஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி
குளமாப் பெருகி குதிரை குளிச்சேறி
வாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி
என் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.
குழந்தை சாப்பிட ஆரம்பிக்கையில்
பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா
நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா;
மலை மீது ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா;
வட்ட வட்ட நிலாவே
வண்ண முகில் பூவே;
பட்டம் போலே பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா.
காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூக் கொண்டு வா
கிளியே கிளியே கிண்ணத்தில் பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்குத் தேன் கொண்டு வா
ஒரு வயசுக் குழந்தைக்கு
கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் தின்னலாம் கை வீசு
கம்மல் வாங்கலாம் கை வீசு
காதில் போடலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய்ப் போடலாம் கை வீசு
பள்ளிக்குச் செல்லலாம் கை வீசு
பாடம் படிக்கலாம் கை வீசு
கோயிலுக்கு போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு
தில்லிக்குப் போகலாம் கை வீசு
திரும்பி வரலாம் கை வீசு
குழந்தையைத் தூங்க அழைக்கையில் பாடும் பாடல்
சுக்கான் குத்தறதும், சோறு கொதிக்கறதும்
பிள்ள அழறதும், பேசாதே என்கிறதும்
வா வா என்கிறதும், மாட்டேன் போ என்கிறதும்
சண்டை போடறதும், மண்டை உடையறதும்!
வரகரைக்கிறதும்...
வந்து நிக்கிறதும்...
வாவா என்கிறதும்...
வரமாட்டேன் போ என்கிறதும்..
சுக்கான் குத்தறதும்..
சோறு கொதிக்கிறதும்...
பிள்ளை அழுவதுவும்
பேசாதே என்கிறதும்...
பலர் அழறதும் தாச்சுக்க அழைக்கறதும்
மாட்டேன் என்னறதும் மல்லுக்கு நிக்கறதும்.
இன்னும் குழந்தை வளர்ந்த பின்னர் பாடும் பாடல்கள்
ஈ ராஜாவும், ஈ ராணியும் திருமணம் செய்து கொள்ள எண்ணினார்கள். அவங்க பெயர் மறந்து போச்சாம். அதுக்காக ஒவ்வொருத்தரிடமாய்ப் பெயரைக் கேட்டார்களாம்.
கொழு கொழு கன்னே
கன்னின் தாயே
தாயை மேய்க்கும் ஆயா
ஆயன் கை கோலே
கோலிருக்கும் கொடி மரமே
கொடிமரத்திலிருக்கும் கொக்கே
கொக்கு வாழ் குளமே
குளத்திலிருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா
வலையன் கை சட்டி
சட்டி செய்யும் குயவா
குயவன் கை மண்ணே
மண்ணில் வளரும் புல்லே
புல்லைத் தின்னும் குதிரையே
என் பெயரென்ன??
ஹீ ஹீ ஹீ எனக் குதிரை கனைத்து ஈ ராஜாவிடம் அதன் பெயரைச் சொன்னது என்பார்கள்.
அம்மா கொழுக்கட்டை செய்து வைத்திருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருந்தன. மற்றக் குழந்தைகள் பள்ளியிலிருந்து வந்ததும் கொழுக்கட்டை பகிர்ந்து கொள்ளப் பட்டது. ஒரு குழந்தை சற்றுத் தாமதமாய் வர, அதற்கான கொழுக்கட்டை ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டது. அதை எலி சாப்பிட்டுவிட்டுப் பாத்திரத்திலிருந்து வெளியே வர முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தது. வந்த குழந்தை பாத்திரத்தில் கொழுக்கட்டையைக் காணாமல் "கொழுக்கட்டை எங்கே?" எனக் கேட்க, அம்மா சரியாப் பாத்திரத்தில் பார்க்கச் சொல்லக் குழந்தை கொழுக்கட்டை இல்லாததைப் பாட்டாகச் சொல்கிறாள்.
அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கண்ணு உண்டோடி
அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் காலு உண்டோடி?
அம்மா, அம்மா கொழுக்கட்டைக்குக் கை உண்டோடி?
அம்மா, அம்மா கொழுக்கட்டைக்கு வால் உண்டோடி?
இதைப் பாடினால் எங்க பட்டுக் குஞ்சுலு கண், கை ஆகியவற்றைக் காட்டும்.
பட்டம் பறக்குது,
பள்ளிக்கூடம் திறக்குது
கோனார் வீட்டிலே
கொய்யாப்பழம் காய்க்குது!
அம்மா பொண்ணுக்கு கல்யாணம்
அவா அவா வீட்டுல சாப்பாடு
கொட்டுமேளம்கோயில்ல
வெத்தலபாக்கு கடையில
சுண்ணாம்பு சுவத்தில
இதுவும் குஞ்சுலுவுக்குப் புரியும். இன்னும் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொன்னால் பல குழந்தைகளும் கை தட்டும். கையை மேலே தூக்கிக் கோவிந்தா போடும். இவை எல்லாம் எட்டு மாசக் குழந்தைக்கான பாடல்கள். எங்க குஞ்சுலுவுக்கு இப்போ விபரம் புரிய ஆரம்பிச்சுடுத்தா! சமயத்தில் மாட்டேன்னு தலையை ஆட்டிட்டுச் சிரிக்கும்.
தாலாட்டுப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன.