எல்லார் வீட்டிலும் அவரவர் வழக்கப்படி பொங்கல் கொண்டாடி இருப்பீங்க. இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் பொங்க வேண்டும் என வேண்டிக் கொண்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாமா? பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் எனச் சொல்லப்படும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விழா. பாகவதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஆடு, மாடுகளை மேய்த்தான் என்பது தெரியும். அதனாலும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் இந்திரனுக்கும், வருணனுக்கும் உரிய திருநாளாக போகியைக் கொண்டாடுகிறோம். மழைக்கு தெய்வம் இந்திரன். ஆகவே நல்ல மழை வேண்டி இந்திரனையும், நீர் வளம் வேண்டி வருணனையும் வழிபடுகிறோம். அடுத்து பயிர்களின் விளைச்சலுக்கு வெப்பமும் வேண்டும் என்பதால் சூரியனை வழிபடுகிறோம். காச்யபர் என்னும் ரிஷியின் மகன் ஆன சூரியன் அவருடைய இன்னொரு மனைவியின் மகன் ஆன அருணன் உதவியோடு தன் பயணத்தைத் தினம் தொடங்குகிறான். இந்த சூரியன் தினம் தினம் தோன்றுவதும் மறைவதும் போல் தெரிகிறதே தவிர அது உண்மையில் தோன்றவும் இல்லை. மறையவும் இல்லை. சூர்ய சதகம் என்னும் ஸ்லோகத்தில் 18 மற்றும் 97 ஆவது ஸ்லோகத்தில் இது குறித்துக் கூறி இருப்பதாய் அறிகிறோம். ஸ்லோகம் எடுக்க கூகிளாரின் உதவியை நாடினால் மற்ற மொழிகளில் வருகிறது. தமிழில் வரலை. :( ஆனால் சூரியன் உதயமோ அஸ்தமனமோ இல்லாதவன் என்றும் அவன் ஒளி பரவினால் அந்த இடத்தில் அப்போது பகல் எனவும் ஒளி பரவாத திசை இரவு எனவும் கூறுவதாய் அறிகிறோம். ஒரு கண்டத்தில் சூரியன் ஒளி வீசிப் பிரகாசிக்கும்போது இன்னொரு கண்டத்தில் நிலவு பிரகாசிக்கிறது என்பதையும் அந்தக் காலத்திலேயே அந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளனர். அறிவியல் ரீதியாக இது நிரூபிக்கப் படும் முன்னரே நம் முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது.
நந்தி தேவருக்கு ஈசன் கொடுத்த சாபத்தினாலேயே மாட்டுப் பொங்கல் ஏற்பட்டதாய்க் கூறினாலும் விவசாயத்துக்குப் பெரும் உதவி செய்யும் கால்நடைகளை வழிபடுவதே மாட்டுப் பொங்கல் ஆகும். முன்பெல்லாம் மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணமெல்லாம் தீட்டுவார்கள். இப்போதெல்லாம் அதைப் பார்க்க முடிவதில்லை. பொதுவாகவே மக்கள் மனதில் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே வருகிறது. என்றாலும் இளைய தலைமுறை எப்படி அறிந்து கொள்வார்கள் என்பதினாலேயே இதை எல்லாம் எழுதியானும் வைக்கலாம் என்பது முக்கிய எண்ணம். மாடுகளைக் காலை வேளையில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்வார்கள், மாலையானதும் அவை வீடு திரும்பும் நேரம் விளக்கு வைக்கும் நேரமாய் இருக்கும். அப்போது எழும்பும் தூசியை கோ தூளிகா மண்டலம் எனப்படும். இது உடலில் படுவதால் நன்மை பயக்கும் என்று நம் முன்னோர்களின் நம்பிக்கை. கிராமத்துத் திண்ணைகளில் குழந்தைகளோடு இந்தக் காற்றுப் படுவதற்காக மக்கள் அமர்ந்து காத்திருப்பார்களாம். இதைப் போலவே மாட்டுப் பொங்கல் அன்றும் கோதூளிகா மண்டலம் ஏற்படும் வண்ணம் தெப்பம் அமைப்பார்கள் என்று அறிகிறோம்.
பசுஞ்சாணத்தினால் தோட்டம் அல்லது மாட்டுத் தொழுவத்தில் தரைப்பகுதியில் தண்ணீர் கசியா வண்ணம் பூமியுடன் ஒட்டிய வண்னம் தெப்பம் அமைப்பார்களாம். தெப்பச் சுவர் அரைசாணாவது இருக்க வேண்டும். என்றால் சாணம் எவ்வளவு எனக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்தத் தெப்பத்தில் நவதானியங்கள், மஞ்சள், பூக்கள், இவற்றைப் போட்டு நீர் நிரப்புவார்கள். தெப்பத்தின் நான்கு பக்கமும் திருநீறு, குங்குமம் அல்லது சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் பொங்கல் செய்து படைத்து வழிபட்டு, மாடுகளுக்கும் குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றுக்கும் தூபம், தீபம் காட்டி அவற்றோடு இந்தத் தெப்பத்தை மும்முறை வலம் வருவார்கள். அப்போது கிளம்பும் கோ தூளிகாவின் மகிமையை மிகவும் சிறப்பாகச் சொல்கின்றனர். பின்னர் முடியும் நேரம் கால்நடைகளின் கால்களை தெப்பத்தின் மீது வைத்து தெப்பநீர் மதில் தாண்டி வெளிப்படச் செய்வார்கள். இது மிகவும் சிலாக்கியமான ஒரு வழக்கமாக அந்நாட்களில் இருந்து வந்ததாய்த் தெரிய வருகிறது.
பொங்கல் முடிந்த மறுநாள் கணுப்பண்டிகையாகவும் கொண்டாடுவார்கள். முதல்நாள் பொங்கல் பானையில் கட்டிய மஞ்சளோடு சேர்த்து மிச்சம் பசும் மஞ்சளையும் அம்மியில் அரைத்துச் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த மஞ்சள் கொத்தில் இருந்து ஒரு துண்டு மஞ்சளை எடுத்து வீட்டிலுள்ள பெரியவர்களிடம் கொடுத்து நெற்றியில் மஞ்சளைக் கீறிவிடச் சொல்வார்கள். மஞ்சள் கீறுகையில் சொல்லும் ஆசீர்வாத வாழ்த்துப் பாடல் கீழ்க்கண்டவாறு. இதில் வரும் சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு, பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து என்பதின் அர்த்தம் விபரமாகப் பகிர்கிறேன். அந்தக் காலங்களில் பெண்களை ஐந்திலிருந்து ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் செய்து வைப்பார்கள். அதில் வயதில் குறைந்த மாப்பிள்ளைகளும் அமையலாம். வயது முதிர்ந்த மாப்பிள்ளைகளுக்கும் கொடுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அப்படியான பெண்கள் பால்யத்திலேயே விதவையாகவும் ஆகி இருக்கிறார்கள். ஆகவே அது எல்லாம் நடக்கக் கூடாது என்பதாலேயே சிறு வயதுப் பிள்ளையாக உனக்கு ஈடாக இருக்கக் கூடியவனைத் திருமணம் செய்து கொண்டு அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனிடம் குடும்பம் நடத்திக் குழந்தைகள் பெற்றுச் சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்தும் பாடலே இது.
தாயோடும் தந்தையோடும் சீரோடும் சிறப்போடும்
பேரோடும் புகழோடும் பெருமையோடும் கீர்த்தியோடும்
சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டு
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துக்
கொண்டவன் மனம் மகிழத் தையல் நாயகி போலத்
தொங்கத் தொங்கத் தாலி கட்டித் தொட்டிலும் பிள்ளையுமாக
மாமியார் மாமனார் மெச்ச நாத்தியும் மதனியும் போற்றப்
பிறந்தகத்தோர் பெருமை விளங்கப் பெற்ற பிள்ளைகள் ஆயுள் ஓங்க
உற்றார் உறவினரோடு புத்தாடை புதுமலர் சூடி
புது மாப்பிள்ளை மருமகளோடு புதுப் புது சந்தோஷம் பெருகி
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி என்றென்றும் வாழணும்
எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கணும்!
கனுப்பிடி வைக்க மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையில் கூறும் இந்த வாழ்த்துச் சொல்லைப் பற்றி ஒரு சிலருக்குச் சரியான புரிதல் இல்லை எனத் தெரிய வந்தது. அதற்காகவே இந்தப் பதிவு. சின்ன வயசில் கனுவுக்கு மஞ்சள் கீறிக்கொள்ளப் போகையிலே என் பாட்டி, பெரியம்மாக்கள் எல்லாம், மஞ்சளைக் கீறிக்கொண்டே,
சின்ன ஆம்படையானுக்கு வாக்கப் பட்டுப்
பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துச்
சீரோடும், சிறப்போடும், காக்காய்க் கூட்டம் போல்
ஒற்றுமையாச் சேர்ந்து வாழணும்னு "
சொல்லித் தான் மஞ்சளைக் கீறி விடுவாங்க. சின்ன வயசில் அர்த்தம் புரியாமல் இருக்கையில் இதைக் கேட்டுச் சிரித்த நாங்கள் அர்த்தம் புரிய ஆரம்பிக்கையில் குழப்பமும், கோபமுமே வந்தது. ஒரு சமயம் என் அப்பாவின் சித்தி அடிக்கடி எங்க வீட்டில் வந்து தங்குவார். ஒரு கனுவின்போது அவர் மஞ்சள் கீறியபோது இப்படிச் சொல்லவே, நான் துடுக்குத் தனமாய், " ஏன் சித்தி, சின்னாம்படையானுக்கு வாக்கப்பட்டுப் பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்துனு சொல்றயே? இப்படிச் சொல்லாதே. ரொம்பக் கஷ்டமாவும் வெட்கமாவும் இருக்கு. என் சிநேகிதிகள் எல்லாரும் கேலி செய்யறாங்க." என்று சொன்னேன்.
அதற்கு அவர்கள் கொடுத்த விளக்கம்:"போடி அசடு! அந்தக் காலங்களில் பெண்ணிற்கு ஏதேனும் ஆபத்து வந்துடும்; நம்ம பழக்கத்தை விட்டுட்டு மாறிடுவானு சில வீடுகளில் படிக்க வைக்க யோசிப்பாங்க; சில வீடுகளில் அதனால் அவசரம் அவ்சரமாக் கிடைச்ச மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துடுவாங்க. பெண்ணிற்கு ஐந்து, ஆறு வயசுக்கெல்லாம் கல்யாணம் ஆகும். பிள்ளைக்கு 20, 22 கூட இருக்கும். வெகு சிலருக்கே அவங்க வயசுக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைப்பான். அப்போதெல்லாம் பெண்களை வயசு வித்தியாசம் பார்க்காமல் குலம்,கோத்திரம் மட்டும் பார்த்து இரண்டாவது, மூன்றாவதுனு கொடுப்பதும் உண்டு. அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப் பெண்களின் வாழ்க்கை நன்றாக அமையும்; இல்லை எனில் பால்யவிதவையாகி விடுவாள். அதனால் தான் அவள் வயசுக்கேற்ற கணவனாகச் சிறு பிள்ளையாகக் கிடைக்க வேண்டும், என்றும் அவனோடு நன்றாக வாழவேண்டும் என்பதற்கு வாழ்த்துவதே,
"சின்னாம்படையானுக்கு வாழ்க்கைப் பட்டு" என்ற சொற்றொடர் என்றும், அவ்வளவு சின்ன வயசில் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது தகுந்த பிராயம் வரவேண்டும் இருவருக்குமே என்பதால், அந்தப் பையனுக்கும் தக்க பருவம் இருக்க வேண்டும் என்றே அவனைப் பெரியாம்படையான் என்று சொல்வது. அவன் வளர்ந்து உரிய பருவம் வந்ததும் இருவருக்கும் குழந்தை பிறக்கும் தகுதி கிடைக்கும் அல்லவா? அதன் காரணமாகவே சின்ன வயசிலேயே கல்யாணம் செய்து கொண்டாலும் தக்க பருவத்தில் உரிய நேரத்தில் குழந்தை பிறக்கவேண்டியுமே, "பெரியாம்படையானுக்குப் பிள்ளை பெத்து" என்று வாழ்த்துவது இது என எடுத்துச் சொன்னார்கள்.
தற்காலங்களுக்குப் பொருந்தாது என்றாலும் பெரியவர்கள் சொன்னதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்து என்பது இல்லை எனப் புரிந்து கொண்டேன். நீங்களும் புரிந்து கொள்ளுங்கள்.
அண்ணன்மார்களே, தம்பிமார்களே, எல்லோருக்காகவும் காக்காய்ப்பிடி, கனுப்பிடி வைச்சாச்சு. வஸ்த்ரகலா கொடுப்பவங்க வஸ்த்ரகலாவும், பரம்பரா கொடுக்கப் போறவங்க பரம்பராவும், சாமுத்ரிகா கொடுக்கப் போறவங்க சாமுத்ரிகாவும், இல்லை, பிரைடல் செவன் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிக்கிறவங்க அதுவும், ரெயின்போ கலர்ஸ்னு சொன்னால் அதுவும் எதுவானாலும் ஓகேப்பா. நேத்திக்கு நிறையப் பேர் வந்து பொங்கல் சாப்பிட்டிருப்பதும் தெரிஞ்சது. இப்படி எல்லாம் மொக்கைப் பதிவு போட்டால் தான் மக்கள் வருவாங்க போல! :P
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் எதுவானாலும் ஓகே தான்! :)))))) எடைக்கு எடைன்னா டபுள் ஓகே! :)))))))