வாழ்நாளில் திருப்பம்: சிந்தாமணி பதிப்பு
உவேசா ”அரியலூரிலிருந்து சேலம் இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார். அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்பு முனை என்று அறிகின்றார். திருவாடுதுறை ஆதினம் தெண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உவேசா, இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உவேசா பெரிய அதிச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மை சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உவேசாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாக, சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை, கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உவேசாவிடம் கொடுத்து கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உவேசாவிற்க்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்
முதலியார் அவர்களின் ”இதனால் என்ன பிரயோசனம்” என்னும் கேள்வி உவேசாவின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. சீவக சிந்தாமணி நூலைப்படிக்கத் தொடங்கிய போது “ அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ்நூற்பரப்பை ஒருவாறு அறிந்து விட்டதாக ஒரு நினைப்பு, அதற்கு முன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்பிற்கு புரம் பேயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது”. என்று பதிவு செய்கிறார். உவேசா சிந்தாமணியை தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.
பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடி பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களை தெளிவாக்கிக் கொண்டததாகக் குறிப்பிடுகிறார். உவேசா சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்,, கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உவேசா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.
உவேசா சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப்பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களை தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப்படித்தோரும் இந்தத்தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.
பழந்தமிழ் நூல்களின் உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் மிகச்சிறந்த உரையாசிரியர் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நாம்காணும் உரை உவேசாவால் பதிப்பிக்கப்பெற்றது. அதற்குமுன் ஐயரவர்கள் இவ்வுரையினை நன்கு புரிந்து கொண்டு விளக்குவதற்கு மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டுள்ளார். “நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விசயங்களை உணர்ந்தேன், இரண்டு விசயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. பல இடங்களில் மாறிக் கூட்டிப்பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைந்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விசயத்திற்கோ, சொற்பிரயோகத்திற்கோ ஒருநூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை ‘என்றார் பிறரும்’ என்று எழுதிவிட்டுவிடுகிறார்” என்று உவேசா பதிவு செய்கிறார்.
சிந்தாமணி சமண காவியம் என்று சைவர்கள் குறை கூறிய போதும் “பொய்யே கட்டி நடத்திய சிந்தாமணியானால் நமக்கு என்ன? நாம் வேண்டுவன சொற்சுவையும் பொருட்சுவையும் தமிழ் நயமுமே சுவை நிரம்பிக்கிடக்கும் காவியமாக இருக்கும் பொழுது அதைப்படித்து இன்புறுவதில் என்னதடை” என்று தெளிவாக்குகின்றார். தம் தமிழ் தொண்டில் அவர் மதம் குறுக்கிடுவதை அனுமதிக்கவில்லை.
அக்காலத்தில் பிரதிகளை அச்சில் பதிப்பதற்கு முன்பு ஊர்ஊராகத் தேடி கிடைக்கும் நகல்களையெல்லாம் பெற்று அவைகளனைத்தையும் நன்று படித்து ஒப்பு நோக்கி, இவைகளுக்குள் வேறுபாடு இருக்குமானால் எது சரியானது என்று தீர்மானித்துப் பதிப்பிக்க வேண்டும். சிதைந்த பகுதிகளின் முழுவடிவத்தையும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். ஒவ்வொரு சொல்லின் பொருள் முழுவதும் விளங்காமல் உவேசா எதையும் பதிப்பிப்பதில்லை. இவர் பிரதிகளைத்தேடித் தேடி தமிழகம் முழுவது அலைந்த விவரம் ஏராளமாக இவர் சரித்திரத்தில் காணலாம். அக்காலத்தில் எவ்வித மோட்டார் வாகன போக்குவரத்து வசதியில்லாத போதும் கூட நூற்றுக்கணக்கான மைல்களை உவேசா பயணம் செய்துள்ளார். தங்குவதற்கு, உணவு உண்பதற்கு வசதியில்லாத போதும், ஊர் ஊராக, கிராமம் கிராமமாக சென்று தெரிந்தவர்கள் வீட்டில் தங்கி கிடைத்ததை உண்டு தம் கருமமே கண்ணாக பண்டைய தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். “ பழந்தமிழ் இலக்கண இலக்கியச்சுவடிகளைத்தேடி ‘ நள்ளிருளோ, கொள்ளு பகலோ, குறிக்கும் கடுமழையோ, அள்ளு பிணியோ, அவதியோ- உள்ளம் தடுக்கும் பகைகள் எது வரினும தள்ளி அடுக்கும் தமிழ்ச் சுவடி தேடிக்கொடுக்கும் தமிழ்த்தாத்தா என்று தரணி புகழ்” என்று ஒரு தமிழ் புலவர் இவரை வர்ணிக்கிறார்
இப்பணியில் ஏராளமான பொருட்செலவு, மன உளைச்சல், உடல் அசதி அன்றி கடின உழைப்பை நல்கினாலும் இப்பணியை மெத்த உற்சாகத்துடன் செய்து வந்தார். கும்பகோணத்திலிருந்து சென்னைக்குச் செல்வதற்கு முன் சேலம் இராமசாமி முதலியாரவர்கள் உவேசாவைச் சந்தித்து “சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்பொழுது நன்றாக உணர்ந்திருக்கின்றீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்னும் சிலபிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும் அதைப்போன்ற உபகாரம் வேறு ஒன்றுமில்லை என்று கூறினார்”.
பவர்துரை பதுப்பித்த சிந்தாமணி நாமகளிலம்பகம் அச்சு நகல் ஒன்று ஐயரவர்களுக்குக் கிடைத்தது, தியாகராசசெட்டியார் தம்மிடமிருந்த நகலை அனுப்பி வைத்தார். திரு சுப்பிரமணிய தேசிகர் திருநெல்வேலி யிலிருந்து சில ஏட்டுப்பிரதிகளை வருவித்துக் கொடுத்தார். பலநகல்களையும் ஒப்பிட்டு பேதங்களைக் குறித்து வைத்து பின் ஆய்வு செய்து சரியான சொற்களைத் தொிவு செய்வார். உவேசாவிடம் பாடம் கேட்கும் மாணவர்கள், கல்லூரி மாணவர் என்று பலர் இவருக்கு உதவி செய்தனர்.
சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தை புராணப் பதிப்பும் நடைபெற்றுவந்தது, திருக்குடந்தைப் புராணம் உவேசா வெளியிட்ட இரண்டாவது நூல். சிந்தாமணியைப் போன்று பல பழையநூல்கள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதை ஐயரவர்கள் அறிந்தார். சிலப்பதிகாரம், மணிமேகலை, எட்டுத்தொகை போன்றவை அவை. எட்டுத்தொகை மூலநூல் திருவாடுதுறை ஆதினத்திலேயே இருந்தது. பொருநராற்றுப்படை, பதினென்கீழ் கணக்கு முதலியனவும் சுவடி வடிவில் கிடைத்தன. மற்ற சங்க நூல்களையும் நன்குபடித்தால் தான் சிந்தாமணியின் பொருள் விளங்கும் என்று அறிந்து அந்நூல்களை ஆழமாக உவேசா படித்து பொருள் விளங்க முயன்று வந்தார்.
சிந்தாமணிப் பிரதியை மேலும் தேடியபொழுது தஞ்சாவூரில் விருசபதாச முதலியாரிடம் உள்ளதாக அறிந்து அவாிடம் கேட்ட பொழுது அவர் “சமணர்களுக்கு மட்டும் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தர இயாலது” என்று மறுத்து விட்டார். பல நண்பர்களின் உதவியுடன் இந்நூல் நகல் அவரிடமிருந்து கிடைத்தது. இது போன்று மதத்தின் அடிப்படையிலும் பல இடையூறுகள் வந்தன. இன்னும் பல இடங்களில் அறிய பொக்கிஷங்களான இச்சுவடிகளை தீயில் இட்டும் ஆற்று வெள்ளத்தில் இட்டும் அழித்து விட்டதைக் கேட்டு உவேசா மிகவும் வேதனைப்பட்டுள்ளார். இவ்வாறு தேடி சிந்தாமணியின் 23 நகல்களை உவேசா சேர்த்துவிட்டார்.
இதற்கிடையில் மடத்தின் அலுவல் காரணமாக சென்னை சென்று வர வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு சென்னையில் இராமசாமி முதலியாரிடம் தங்கிக் கொண்டு பல புகழ் பெற்றவா்களிடம் அறிமுகமாகி பழகும் வாய்ப்பைப் பெற்றார். சென்னையில் சந்தித்த சி வை தாமோதரம்பிள்ளை, சிந்தாமணியைத் தாம் பதிப்பிக்க விருப்பியதாகவும் உவேசாவிடமுள்ள குறிப்புகளனைத்தையும் அவரிடம் தரும்படி வற்புறுத்தியுள்ளார். அரைமனதுடன் இருந்த உவேசா தாம் ஏற்கனவே வாக்குக் கொடுத்திருப்பதாகவும், முடிவு செய்துவிட்டதாகவும் எத்துணை இடர்பாடுகள் வந்தாலும் இம் முயற்சியிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் தீர்மானமாக கூறிவிட்டார்.
சிந்தாமணியைப் பிழையில்லாமல் பதிப்பிக்க வேண்டும் என்னும் ஆவலில் உவேசா முயற்சி தொடர்ந்தது. இதனால் காலதாமதம் ஆயிற்று ஒவ்வொறு விசயத்தையும் சந்தேகமறத் தெளிந்து பின்பு வெளியிடுவது எளிதன்று என்றும் இப்படி ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ்நாள் முழுவதும் செலவாகி விடும் என்று நண்பர்கள் அறிவுறுத்த உவேசாவும் நூலைப்பதிப்பிக்கலாம் எனவும் திருத்தங்கள் தேவைப்படின் அடுத்த பதிப்பில் மேற்கொள்ளலாம் என முடிவு செய்தார்.
நூலைப் பதிப்பிக்கத் தேவையான நிதி வசதியின்மையால் இவர் பல பெரியவர்களை அணுகி முன்பணம் பெற்றுக்கொண்டு பணியைத் துவக்கினார். சீவக சிந்தாமணி பதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுது புரசவாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரவர்கள் போன்றவர்கள் நீங்கள் வயதில் இளையவர், சீவக சிந்தாமணிப்பதிப்பு மிகவும் கடினமான செயல் உங்களால் முடியாது என்றும், சேலம் ராமசாமி முதலியார் கூட ஒரு சமயம் உங்களுக்கு இது கடினம், உங்கள் குறிப்புகளை தாமேதரம்பிள்ளையவர்களிடம் கொடுத்து விடுங்கள் உங்களுக்கு நிதி திரட்டுவது சிரமம் என்று தளர்வூட்டினர். ஆனால் உவேசா “நான் ஏன்பதிப்பிக்கக் கூடாது அந்த நூலையும், உரையையும் பலமுறை படித்து ஆராய்ந்துள்ளேன். அதற்கு வேண்டிய கருவி நூல்களையும் படித்திருக்கிறேன் நிறைவேற்றி விடலாம் என்ற துணிவு எனக்கு இருக்கிறது”. என்று தெளிவாக இருந்தார், “யார் வந்து தடுத்தாலும் என்முயற்சியை நிறுத்திக்கொள்ளாத உறுதி என்னிடம் இருந்தது”.
சீவக சிந்தாமணி நூலைப் பதிப்பிக்க எவ்வளவு தமிழ் புலமை வேண்டும் அது உவேசாவிடமிருந்ததுதான் சிறப்பு. மேலும் சிறுவயதிலிருந்து உவேசா தீராததமிழ் ஆர்வத்தால் மிகுந்த முயற்சி எடுத்து தமிழைக் கற்றுத் தேர்ந்த புலமை தான் சீவக சிந்தாமணி போன்ற பழைய நூல்களை சிறப்பாகப் பதிப்பிக்க உதவி செய்தது என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. நாமகளிலம்பகம் 58 ஆம் செய்யுளுக்கு உரை எழுதும் பொழுது நச்சினார்க்கினியர் “ஏக்கழுத்தம் என்ற ஒரு சொல்லைக் குறிப்பிட்டுள்ளார். இச்சொல்லிற்கு பொருள் விளங்காத உவேசா சிறுபஞ்சமூலத்திலும், நீதிநெறிவிளக்கத்திலும் இதே சொல் வருவதை நினைவுகூர்ந்து அவைகளை மீண்டும் படித்து இச்சொல்லின் முழுமையான, சரியான பொருளை தமது பதிப்பில் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சொல்லும் வேறு எந்த இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தொடர்புகொண்டு பார்க்கக்கூடிய அளவு புலமை பெற்றிருந்தால் தான் இது இயலும். இதனை உவேசா செய்துகாட்டியுள்ளார். இதுபோன்று ‘ஏக்கழுத்தம்’ என்ற சொல்லிற்கு நாம் கண்டுபிடித்த பொருளைப் பற்றி தமது பதிப்பிற்கு மிகுந்த துணையாக இருந்த சக்கரவர்த்தி இராச கோபாலாச்சாரியாரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது “புதிய தேசத்தைக் கண்டு பிடித்தாற் கூட இவ்வளவு சந்தோசமிராது” என்று கூறுகிறார்.
நூலை அச்சிடும்பொழுது ஒய்வு ஒழிவில்லாமல் உவேசா உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருநாளும் அச்சுப்பிரதிகளைத் திருத்திக்கொடுப்பது, கையெழத்துப்பிரதியைப் படிப்பது, போன்று பல வேலைகள் இருந்தன.. இப்பணியில் சோடசவதனம் சுப்பராய செட்டியாரும், ராஜ கோபாலாச்சாரியாரும் வேலுச்சாமி பிள்ளையும் கையெழுத்துப் பிரதிகளை படித்து உதவி செய்ததாகவும் குறிப்பிடுகிறார். அச்சடித்த நகல்களை தாமே தனியாக இரவில் அமர்ந்து நெடுநேரம் சரிபார்த்ததாகவும் குறிப்பிடுகிறார். தமக்கு இரவில் “தூரத்துப் பங்களாவில் ஒரு நாய் கட்டப்பட்டிருக்கும் இரண்டு கூர்க்கா சிப்பாய்கள் தூங்காமல் காவல் புரிவார்கள்” இவர்கள் மட்டுமே துணை இவர்களால் எனக்கு என்ன உதவி செய்யமுடியும் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுகிறார்.
தாத்தாவுக்கு அஞ்சலி தாமதமாக! சிந்தாமணியைப் பதிப்பிக்கச் செய்த முயற்சிகள் மேலே உள்ளவை. விக்கிபீடியாவில் இருந்து நன்றியுடன். நேற்றே போட்டிருக்க வேண்டும். ஷெட்யூல் செய்து வைத்திருந்தேன். ஆனால் அது எப்படியோ அழிந்து விட்டிருக்கிறது. நானும் ஏதேதோ வேலைகளில் கவனிக்கவில்லை. அமெரிக்க நாட்காட்டிப் படி இப்போது 28 ஆம் தேதி தான் என்றாலும் நமக்கு மறுநாள் பிறந்துவிட்டது. நேரத்தில் பதிவிடாமல் முதல்முறையாகத் தவறிழைத்து விட்டேன். :(