முத்தரசன் எட்டிப் பிடி, எட்டிப் பிடி என அந்தச் சிலையைப் பிடிக்கச் சொன்னதே ஊரின் பெயராக அமைந்து இன்று எட்டுக் குடி என விளங்குகின்றது எனச் சொல்கின்றனர். பறக்க ஆரம்பித்த மயிலையும், வேலவனையும் பார்த்து பக்திப் பரவசத்துடன் மக்கள் அனைவரும் பின் தொடர்ந்து ஓடிக் கொண்டே வேலா, எங்களை விட்டுப் போய்விடாதா, கந்தா, கடம்பா எனக் கூவிக் கொண்டே போக, சிற்பியோ தன் உளியை எடுத்து அவசரத்துடனும் பதற்றத்துடனும், பறக்கும் மயிலை நோக்கி வீச, உளிபட்டு பின்னமடைந்த சிலை கீழே இறங்கி நின்றது. சிற்பி கண்களில் கண்ணீருடன் அழகிய சிலையைப் பின்னப் படுத்திவிட்டேனே எனக் கதற, திடீரென சிலையின் பின்னமடைந்த இடம் நேராகி நிற்க, மன்னனும், மக்களும் ஆச்சரியத்துடனும், பயத்துடனும் விக்கித்துப் போய் சிற்பியைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
பின்னர் சிலையைச் சந்நிதானத்துக்கு எடுத்துப் போய் முறைப்படி அனைத்து வழிபாடுகளும் செய்து கும்பாபிஷேகமும் செய்வித்தான் முத்தரசன். மக்கள் மனம் மகிழ்ச்சி அடைந்து சில்பா சிற்பியையும் ஒரு தெய்வமே எனக் கொண்டாட ஆரம்பித்தனர். மன்னனை விடச் சிற்பியின் புகழும், அவருக்கு மரியாதையும் கூடியது. உலகிலேயே இம்மாதிரியான சிற்பி கிடையாது என ஏகோபித்த உணர்வோடு மக்களின் புகழ் சிற்பிக்குக் கிடைக்க மன்னன் மனம் புழுங்கியது. பொறாமையால் வெந்தான். "மன்னன் நான், ஆனால் புகழ் அவனுக்கு! போயும் போயும் ஓர் அற்ப சிற்பிக்கு என் முன்னேயே இத்தனை போற்றுதல்களும், புகழும் போய்ச் சேருகின்றனவே! இது என்ன அநியாயம்?" கொதித்துப் போனான் முத்தரசன். சேவகர்களை அருகே அழைத்துக் காதில் ஏதோ மெல்லச் சொல்ல சேவகர்களே பயத்தில் நடுங்கிப் போனார்கள்.
அவர்களுக்குத் தைரியம் சொன்னதோடு அல்லாமல் இது தன் கட்டளை எனவும் அரசன் என்ற முறையில் ஆணையிட்டான் முத்தரசன். அரசன் ஆணையை மீறும் தைரியம் இல்லாத சேவகர்கள் சில்பா சிற்பியையும் அழைத்துக் கொண்டு அவரின் சிற்ப மண்டபத்துக்குச் சென்றனர். அங்கே அவர் செய்து முடித்திருந்த, செய்து கொண்டிருந்த பல சிற்பங்கள் இருந்தன. அவற்றை எல்லாம் பின்னப்படுத்தி அலங்கோலம் செய்தனர். சிற்பி பதற்றத்தோடு அவர்களைத் தடுக்க வர, சேவகர்களில் சிலர் அவர் கை, கால்களை இறுகக் கட்டிக் கீழே தள்ள, இருவர் அவர் கண்களில் காய்ச்சி வைத்திருந்த கள்ளிப்பாலை ஊற்றினார்கள். துடிதுடித்தார் சிற்பி. கண்களைத் திறக்கவே முடியவில்லை.
"முருகா, ஆறுமுகா, உனக்குப் பதினெட்டு கண்கள் இருந்தும் எனக்கு இந்தக் கொடுமையா?" என்று கதறுகின்றார் சிற்பி. "உன்னைச் சிலையாய் வடித்தது தவிர, நான் செய்த தவறு என்ன? எனக்கு ஏன் இந்தத் தண்டனை?" எனப் புலம்பிய சிற்பி, அப்படியே மயங்கிப் போக அவருக்கு மீண்டும் குமாரன் தோன்றி, "சிற்பியே, மும்முறைகள் என்னை நீர் வடிக்கவேண்டும் எனச் சொன்னது மறந்து விட்டீரா?? எடும் உளியைக் கையில், மீண்டும் நீர் என்னைச் சிலையாக வடிக்கவேண்டும் என்பதை மறந்து, மயங்கிப் போனீரோ?" எனக் கேட்க, " கந்தனே, இது என்ன சோதனை? நொந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கண்ணிழந்து கிடக்கும் என்னையா உன் சிலையைச் செய்யச் சொல்கின்றாய்? இது என்னப்பா சோதனை?" என்று கதறுகின்றார்.
"உளியைக் கையில் எடும் சிற்பியே! நீர் கையில் எடுத்தால் தாமாய் வேலைகள் நடக்கும். உம் பேத்தி உமக்குத் துணை இருப்பாள்."என்று கந்தவேள் ஆணை இடுகின்றான். மறுநாள் முதல் சிற்பவேலை தொடங்குகின்றது. பேத்தியாக வந்த பெண்ணின் உதவியோடு சிற்பி சிலை வடிக்கத் தொடங்குகின்றார். அவயங்களை அந்தப் பெண் சிற்பியின் கைகளை எடுத்து வைத்து, இங்கே, இங்கே எனக் காட்டிக் கொடுக்க அவ்வாறே சிற்பியும் செதுக்க மெல்ல, மெல்ல கந்தன் உருவாகத் தொடங்கினான். ஆனால் இப்போது சிலை செய்வது முத்தரசன் காதுகளில் எட்டவே கூடாது என மிக மிக கவனமாய்ச் சிலையைச் செதுக்கி வந்தார் சில்பா சிற்பி. பார்த்தாலே தெரியும் வண்ணம் முருகனின் சிறப்பான,
"பன்னிரு கண்ணும்,பவளச் செவ்வாயும், நன்னெறி நெற்றியில் நவமணிச்சுட்டியும்" "ஈராறு செவியில் இலகு குண்டலமும்"
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கையும், கீதம் பாடக் கிண்கிணி ஆட"
"மைய நடம் செய்யும் மயில்வாகனனை'
மிக அழகாகவும், அருமையாகவும், ஜீவ சக்தி ததும்பும் வண்ணமும் செதுக்க ஆரம்பித்தார் சில்பா சிற்பி. மெல்ல, மெல்ல சிலை வடிவெடுத்துக் கொண்டு வந்தது. அப்போது ஒரு வயதானவர் அங்கே சிற்ப மண்டபத்துக்குச் சிற்பியைத் தேடிக்கொண்டு வந்தார். சில்பா சிற்பியைப் பார்த்து சிக்கலிலும், எட்டுக்குடியிலும் அவர் செதுக்கி வடிவமைத்த சிற்பங்களைப் பார்த்து அதன் அழகிலும், உயிரோட்டத்திலும் மனதைப் பறி கொடுத்துவிட்டதாயும், தாம் சமீவனம்(தற்போது எண்கண், புராண காலத்தில் அஷ்டநேத்திரபுரம்) என்னும் ஊரில் இருந்து வருவதாயும், சில்பியைத் தம்மோடு சமீவனத்துக்கு அழைத்துச் செல்லும் ஆர்வத்தோடு வந்திருப்பதாயும் தெரிவிக்கின்றார்."முத்தரசனுக்குப் பயந்து பயந்து வாழும் நீர் அங்கே வந்து என்னுடன் இருந்தால் எங்கள் ஊரினுள் இருக்கும் வன்னிமரக் காட்டில் இருந்த வண்ணம் உம் சிற்பப்பணியை நீர் தொடரலாம். உம்மை எவரும் தடுக்க மாட்டார்கள்." என்று அழைக்க, சிற்பி தயங்குகின்றார். ஆனால் பேத்தியாக வந்த பெண்ணோ, அவரைச் சமாதானம் செய்து இது தான் சிறந்தது எனச் சொல்லி அவரை அழைத்துக் கொண்டு செய்து கொண்டிருந்த முருகன் சிலையையும் எடுத்துக் கொண்டு, அந்தப் பெரியவரோடு சமீவனம் அழைத்துச் செல்கின்றாள்.
எண்கண் முருகன் கோயில், படத்துக்கு நன்றி விக்கிபீடியா
சமீவனத்தில் சிலையை எந்தத் தொந்திரவும் இல்லாமல் செதுக்க ஆரம்பித்த சிற்பி சில மாதங்களிலேயே பேரழகன் ஆன கந்தன் சிலையை, உயிரோட்டத்துடன் மீண்டும் செதுக்கி முடித்தார். மெல்ல, மெல்ல, சமீவனத்து மக்களுக்கும் இந்தச் செய்தி பரவ, ஊரார் அனைவரும் காட்டுக்குள் வந்து கந்தனைத் தரிசிக்கின்றனர். அப்போது......