ஞாயிற்றுக் கிழமை குடும்ப உறுப்பினர்கள் அநேகமாக வீட்டில் இருப்பதால் அன்னிக்கு அடை/பூரி, கிழங்கு/சப்பாத்தி/குருமா என வைச்சுக்கலாம்.
திங்கள் கிழமை மாவு அரைத்து அன்றே தோசை வார்க்கலாம். மறுநாள் இட்லி பண்ணலாம். இட்லிக்குத் தனியாகவெல்லாம் நான் அரைப்பதில்லை.
செவ்வாய்க்கிழமை இட்லினு சொன்னாலும் வேறே ரவா கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி, சேமியா கிச்சடி ஏதேனும் ஒண்ணு வைச்சுக்கலாம்.
புதன் கிழமை ரவா தோசை, உசிலி உப்புமானு பச்சரிசி+பாசிப்பருப்பு வறுத்து உடைத்த கலவையில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்துக் கடுகு+பருப்பு வகைகளோடு பமி/இஞ்சி தாளித்துக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்கிப் பின்னர் ரவையைக் கொதிக்கும் நீரில் சேர்த்துக் கடைசியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கணும். இதற்குத் தக்காளித் துவையல், வெங்காயத் துவையல் நல்லா இருக்கும்.
வியாழக்கிழமை பலருக்கும் விரதமாக இருக்கும். ஆகவே அரிசி உப்புமா/கொத்சு, ஜவ்வரிசி உப்புமா, னு பண்ணலாம்.
வெள்ளிக்கிழமை கோதுமை தோசை/தக்காளி தோசை/கேழ்வரகு அடை, வெஜிடபுள் ஊத்தப்பம் (ரவையும் மோரும்/அல்லது தயிரும் இருந்தால் போதும்) ரவா இட்லி னு பண்ணலாம்
சனிக்கிழமை இன்னிக்கும் பலருக்கும் விரதமாக இருக்கும். ஆகவே விரதப் பலகாரங்களான பச்சரிசி அடை, சேவை, இடியாப்பம்னு பண்ணலாம்.
இதைத் தவிர்த்துப் புளிப்பொங்கல் (அரிசிக்குருணையில் பண்ணுவது) புளி உப்புமா(அரிசி மாவில் புளி கரைத்து உப்புப் போட்டுத் தாளிதங்கள் செய்து பண்ணுவது)மோர்க்களி, பச்சைமாப்பொடி உப்புமா என்னும் மோரில் அரிசிமாவைப் போட்டுப் பண்ணும் உப்புமா, அவல் உப்புமா வகைகள், இதில் உருளைக்கிழங்கு வேகவைத்துச் சேர்த்துப் பண்ணும் ஆலூ போஹா, வெங்காயம் போட்டுப் பண்ணும் காந்தா போஹா, அதைத் தவிர்த்துப் புளி அவல், தேங்காய் அவல், ஜீரகம் சேர்த்த அவல், காய்கள் சேர்த்த அவல் உப்புமா என்று பண்ணலாம். பச்சரிசி, பாசிப்பருப்பை வறுத்துக் கொண்டு பண்ணும் பொங்கலும் விரதங்களுக்கு உகந்ததே. வறுத்து விடுவதால் அதை ஏற்கலாம் என்பார்கள்.
வாரத்தில் ஒரு நாள் எண்ணெயில் பொரித்த பக்ஷண வகைகள் பண்ணலாம். பஜ்ஜி, போண்டா, வடை, மசால் வடை, கீரை வடை, பகோடா, பஜியா எனப்படும் உ.கி.வெங்காயம் சேர்த்த தூள் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி. உ.கி. போண்டா, வெஜிடபுள் போண்டா, சமோசா, ஆலூ டிக்கி, கசோடி எனப் பண்ணலாம். அல்லது முறுக்கு, தேன்குழல், முள்ளுத் தேன்குழல், ஓலை பகோடா, ஓமப்பொடி, மிக்சர், காராபூந்தி, காராசேவு, மிளகு சேவு, தட்டை எனப் பண்ணி வைத்துக் கொண்டு ஒரு பத்து இருபது நாட்கள் ஓட்டலாம். சில நாட்கள் மாலை வேளைகளில் சாப்பிடச் சுண்டல் பண்ணிக்கொள்ளலாம். கடலைப்பருப்பு, கொண்டைக்கடலை, காராமணி, பட்டாணிச் சுண்டல்களில் சுண்டல் பண்ணியதும் அவற்றில் காரட், வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிச் சேர்த்துக் கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கித் தூவிக் கொண்டு எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு சாப்பிடலாம். பேல்பூரி பண்ணியும் சாப்பிடலாம். அதற்குத் தேவையான சட்னிகள் இல்லைனாலும் பரவாயில்லை. சுகா(ஸூகா) பேலாகச் சாப்பிடலாம். முட்டைப்பொரி, ஓமப்பொடி(மெலிதாகப் பண்ணினது) காரக்கடலை, வேர்க்கடலை, கடலைப்பருப்பு வறுத்தது சேர்த்துத் தக்காளி, வெங்காயம், காரட் துருவிப் போட்டுக் கொண்டுப் பச்சைக்கொத்துமல்லிப் பொடியாக நறுக்கிச் சேர்த்துக்கலந்து ஊற வைக்காமல் சாப்பிட்டுடணும்.
சட்னி வகைகள் இருந்தால் வீட்டில் செய்த தட்டை, முறுக்கு வகைகளை அந்த பேல் பூரி கலவையில் நொறுக்கிச் சேர்த்துப் பச்சைச் சட்னியும் புளிச்சட்னியும் சேர்த்துக் கலந்து ரொம்ப நேரம் ஊற விடாமல் சாப்பிட்டுடணும். ஒரு வருஷம் உப்பு அதிகமான கோகுலாஷ்டமி பக்ஷணங்களை நான் இப்படித்தான் தீர்த்தேன். இன்னும் எத்தனையோ இருக்கும். இப்போதைக்கு இம்புட்டுத்தேன்.