அம்மா, அப்பா யார் கல்யாணமோ, நினைவில் இல்லை, என் கல்யாணத்தில் இந்த ஃபோட்டோ எடுக்கலை, அப்புறமா ஐந்து வருஷம் கழிச்சு அண்ணா கல்யாணமோ பத்து வருஷம் கழிச்சுத் தம்பி கல்யாணமோ நினைவில் இல்லை. எங்க குடும்ப வாட்சப் குழுமத்தின் லோகோ! ரேவதி அவங்க அம்மா, அப்பா ஃபோட்டோவைப் போடும்போதெல்லாம் நினைச்சுப்பேன். ஆனால் பதிவுகள் எழுதும்போது நினைவில் வராது. இன்னிக்கு என்னமோ அதிசயமா காலரியில் இந்தப்படம் தானாகவே சேமிப்பில் இருந்தது. உடனே டவுன்லோட் பண்ணிட்டேன்.
இது ஹூஸ்டனில் பையர் வீட்டுக்கு எதிரே! தெருக்கள் நான்கு சந்திக்கும் இடம். இங்கே வலப்பக்கத்துத் தெருவும் எதிரே உள்ள தெருவும் மட்டும் இருக்கிறது. மரங்கள் ஆரம்பிப்பதில் இருந்து கீழே கொஞ்சம் வரைகோடாகத் தெரியும் எல்லையிலிருந்து பையர் வீட்டுப் பகுதி ஆரம்பம். அங்கிருந்து உள்ளே தெரியும் முக்கியக் கதவு வரை பனி விழுந்திருக்கிறது. போன வருஷம் ஃபெப்ரவரியில் அங்கே தான் இருந்தோம். உறைநிலைக்குச் சென்றாலும் இப்படி மைனஸில் எல்லாம் போகலை. தண்ணீர் வராது எனக் குழாயை மட்டும் சொட்டுச் சொட்டாக விழும்படி பண்ணி வைப்பாங்க. மற்றபடி தண்ணீர் எல்லாம் வந்தது. இப்போத் தண்ணீர், மின்சாரம், இணையம் எதுவும் இல்லை. எப்படியோ டாட்டா சேமிப்பில் பையர் கூப்பிட்டு 2 நிமிஷங்கள் பேசுவார். பெண் வாட்சப்பில் செய்தி கொடுப்பாள். அவ்வளவே! குட்டிக் குஞ்சுலு என்ன செய்யறதுனு புரியலை. பையரிடம் கேட்டோம். அவருக்குச் சரியாப் புரியலை போல! ஒண்ணும் சொல்லலை. நாங்க மெம்பிஸில் இருந்தப்போ 2,3 தரம் இந்த மாதிரிப் பனி மழை பார்த்திருக்கோம். இங்கே விட மெம்பிஸில் அதிகமாக இருக்கும்.
***********************************************************************************
ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரே வேலை, வேலை, வேலை மும்முரம். திங்களன்று அண்ணா குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர் வந்தாங்க. தம்பி வற்புறுத்திச் சொன்னதால் காடரிங் சாப்பாடு ஏற்பாடு செய்தோம். மதுரைக்காரங்களாம். ஆனால் எங்களுக்குத் தெரியலை யார் என்பது. சமையல் உண்மையாகவே நன்றாக இருந்தது. இரவு இட்லி, சட்னி, சாம்பார் கேட்டிருந்தோம். அதுவும் நம்மைப் போலவே துணி போட்டு வார்த்திருந்தாங்க. மிருதுவாக நன்றாக இருந்தது. சாம்பாரும் ஓட்டலில் வைக்கும் சாம்பார் மாதிரி வைச்சிருந்தாங்க. ஆனால் இரண்டு பேருக்குக் கொடுக்க மாட்டாங்களாம். குறைந்தது பத்துப்பேராவது இருந்தால் நல்லது. அக்கம்பக்கம் வீடுகளில் வாங்கிப்பாங்கன்னாக் கொடுக்கிறோம் என்றார்கள். நாம தான் அலையறோம்னா எல்லோருமா? இஃகி,இஃகி,இஃகி! அதிர்ஷ்டம் அம்புடுதேன்னு விட்டுட்டோம்.
***********************************************************************************
நெல்லைத் தமிழர் தக்காளிக் கூட்டுப் பாசிப்பருப்புப் போட்டுப் பண்ணும் செய்முறை கேட்டிருந்தாராம். எங்கே/எப்போ/எதிலேனு நினைவில் இல்லை. குழுமத்தின் வாட்சப்பில் கேட்டிருந்தார் ஏன் எழுதலைனு! இப்போக் கொடுக்கிறேன்.
சாப்பாட்டுக்குத் தொட்டுக்கப் பண்ணுவதெனில் கால் கிலோ தக்காளிக்கு அரைக்கரண்டி பாசிப்பருப்பைக் குழைய வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். தக்காளிகளை நன்கு அலம்பித்துண்டங்களாக நறுக்கி ஓர் அடிகனமான பாத்திரத்தில் அல்லது கல்சட்டி அல்லது வாணலியில் போட்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். தக்காளி சீக்கிரமே குழைந்து விடும். அப்போது வெந்த பருப்பைச் சேர்க்கவும். பருப்பு அதிகமாய்த் தெரிந்தால் தனியாய் எடுத்து வைக்கவும். கூட்டின் சுவையைக் கெடுத்து விடும். ஒரு மிளகாய் வற்றலோடு தேங்காய்த் துருவலும் ஜீரகமும் சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கூட்டில் கலக்கவும். தேவையானால் கொஞ்சமாக அரிசி மாவு கரைத்து விடவும். பின்னர் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயத்தோடு தாளிக்கவும்.
வெங்காயம் சேர்த்த கூட்டுக்கு வெங்காயத்தை முதலில் வதக்கிக் கொண்டு அதில் தக்காளியைச் சேர்த்து வேகவிடவும். தக்காளி வெந்ததும் மஞ்சள் பொடி, உப்புச் சேர்த்துக்கொண்டு வெந்த பருப்பைக் கலந்து அரைத்து விட்டதையும் கலந்து ஒரு கொதி விட்டுப்பின்னர் தாளிக்கவும்.
இரண்டு நாட்களாக உள்ளங்கையிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரை வலி! தலை பின்னிக்கவோ, சாதம் பிசைந்து சாப்பிடவோ முடியலை. வலி நிவாரண மாத்திரைகள் போட்டுக் கொண்டு இப்போக் கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் உள்ளங்கை வலி இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த மாத்திரைகள் ஒத்துக்கொள்ளாமல் வயிறு தொந்திரவு வேறே! அதனால் அதிகம் இணையத்துக்கு வர முடியலை.