இன்னிக்குக் கொஞ்சம் எழுந்து உட்கார்ந்திருக்கேன். கால் வலி எல்லாம் குறைந்தாலும் வீக்கம் குறையவில்லை. இரண்டு கால் பாதங்களிலும் வீக்கம் வருகிறது/மறைகிறது. மீண்டும் வருகிறது. நோய்க்கிருமிகளால் உண்டான நச்சுப் பூராவும் வெளியே வரணும். மெதுவாகத் தான் சரியாகும் என்கிறார் மருத்துவர். ஆனால் ஊன்றும்போது இருந்த கடுமையான வலி இப்போது இல்லை. என்றாலும் கால்க் கணுவைச் சுற்றிய வலி இன்னும் குறையணும். வலக்காலில் குறைந்திருக்கு. அது போல் இடக்காலில் குறையவில்லை. எப்போ எழுந்து சகஜமான நடமாட்டம் வரும்னு புரியலை. எல்லா உம்மாச்சிங்களையும் வேண்டிண்டாச்சு. இனி அவங்க பொறுப்பு!
*************************************************************************************
குட்டிக் குஞ்சுலு விதம் விதமாகக் கோணங்கி எல்லாம் பண்ணுகிறது. எங்களைப் பார்த்தால் ஏதேனும் புத்தகம்/பொம்மையை வைத்துத் தன் முகத்தை மறைத்துக் கொள்ளும். அதை அவ அப்பா எடுத்தால் சிரிக்கும்/ இல்லைனா சில சமயம் கத்தும். சில சமயம் அதுவே அந்தப் பொம்மையைக் காட்டி இதான் பேபி என்று சொல்லும்/ நாங்க அதைத் தான் கொஞ்சணுமாம். கொஞ்சினால் இப்போல்லாம் காதைப் பொத்திக்கறது. அது பேபி இல்லையாம். ஆகவே கொஞ்சக் கூடாதாம். விளையாட்டுக் காட்டும். புத்தகத்தில் வர்ணங்கள் வரைந்து காட்டும். பசில்ஸில் சிலவற்றைப் போட்டுக் காட்டும். எல்லாம் செய்யும் சமயம் ஐ பாட் பார்த்துட்டால் உடனே ஐ பாட் தான்! காமிக்ஸ் பார்க்கணும்! ஒரே ரகளையா இருக்கும். எங்களுக்கு டாட்டா சொல்லச் சொன்னால் அவளோட பேபியின் கையை அசைத்து டாட்டா காட்டுவாள். ஃப்ளையிங் கிஸ் கேட்டால் அவள் பேபி மூலம் தான் வரும். அது கொடுக்காது. காலம்பர எழுந்தால் பல் தேய்க்க, பால் குடிக்க ஒரே ரகளை! ஓட்டம் காட்டுகிறது. அப்பா, அம்மாவுக்கு நல்ல உடல் பயிற்சி!
***********************************************************************************
சில நாட்கள் முன்னர் எங்கள் ப்ளாக் வாட்சப் குழுமத்தில் திரு ஜீவி அவர்கள்பூ வனம் வலைப்பக்கச் சொந்தக்காரர், எழுத்தாளர்கள் பற்றிய ஏதோ பேச்சில் சித்தப்பா திரு சுஜாதாவின் மரணத்திற்குப் பின்னான இரங்கல் கூட்டத்திற்குப் போனதாகவும், அங்கே சுஜாதாவின் வீட்டுக் காஃபி நன்றாக இருக்கும் என்று சொல்லி விட்டு மேடையை விட்டு இறங்கியதாகவும் எழுதி இருந்தார். இதற்கு என்னையும் துணைக்குச் சேர்த்திருந்தார். நான் யாரோ அவரை அங்கே கொண்டு விட்டதாகச் சொன்னதாகச் சொல்லி இருக்கார்.
உண்மையில் நடந்ததே வேறே! சித்தப்பாவைக் கொண்டு விட்டதாக நான் சொன்னது அநேகமாக ஜெயலலிதா கொடுத்த விருது வாங்கும் விழாவுக்கு என நம்புகிறேன். இது பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். ஆகவே இப்படிச் சொல்லி இருக்கேன். என் நினைவு சரியானால் அது இந்த விழாவில் தான் மேடை ஏறுவதைப் பற்றிக் குறையாகச் சித்தப்பா சொன்ன நினைவு. வயதாகிவிட்டதால் மேலே ஏறச் சிரமமாக இருந்ததைச் சொல்லி இருந்தார். ஆனால் சுஜாதாவின் இரங்கல் கூட்டத்திற்கு (அப்படி ஒன்று நடந்திருந்தால்) சித்தப்பா போகவே இல்லை என்பது நூற்றுக்கு நூறு சதம் உண்மை. திரு சுஜாதா அவர்களுடன் வீட்டுக்கு எல்லாம் அடிக்கடி போய் வந்து கொண்டு அப்படி எல்லாம் நெருங்கிய பழக்கம் என்று சொல்ல முடியாவிட்டாலும் பழக்கம் உண்டு. ஆகவே சுஜாதா இறந்ததும் 2008 ஆம் ஆண்டில் சித்தப்பா யார் துணையும் இல்லாமல் தானே சுஜாதாவின் வீட்டைத் தேடிக் கொண்டு சென்றார். அங்கே அவருக்குக் கொஞ்சம் உடல் நலம் இல்லாமல் போக அவரைச் சில நண்பர்கள் ஆட்டோ பிடித்து வீட்டில் கொண்டு விட்டிருக்கின்றனர். இது தான் சித்தப்பா சுஜாதா வீட்டிற்கு முதலும்/கடைசியுமாகப் போனது. சுஜாதா இறந்த சமயம் ஹிந்துவில் இருக்கும் அவருடைய 3 ஆவது பிள்ளை ராமகிருஷ்ணன் ஊரிலேயே இல்லை. ஆகவே அவருக்குத் தகவல் பின்னர் தான் தெரியும். சுஜாதாவுக்கு இரங்கல் கூட்டத்திற்குச் சித்தப்பா போகவில்லை என்பதையும் திரு ராமகிருஷ்ணன் உறுதி செய்தார்.
இதை எல்லாம் கடந்த நாட்களில் விசாரித்து அறிந்து கொண்டு எழுதுவதற்காகவே இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தேன். சித்தப்பாவின் கடைசி மகன் என் ஊகத்தை உறுதி செய்தார். இப்படி ஒன்று நடக்கவே இல்லை என உறுதியாகக் கூறினார். யார் யாரோ சித்தப்பா பற்றி மட்டும் இல்லாமல் அவங்களுக்குத் தெரிந்த மறைந்த எழுத்தாளர்கள்/பிரபலங்கள் பற்றிக் கதையை அவிழ்த்து விடுகிறார்கள். அது போலத்தான் இதுவும். சுஜாதாவின் இரங்கல் கூட்டத்தில் சித்தப்பா அவர் வீட்டுக் காஃபி நன்றாக இருக்கும் என்று சொன்னதாய்க் கூறுவதும். அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் யாரும் இப்படிக் கூற மாட்டார்கள். இன்னும் என்னென்ன இருக்கோ! தெரியலை!