எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, September 29, 2021

வசந்தம் திரும்புமா?

துளசி கோபால் தன்னுடைய வலைப்பக்கம் பதினெட்டாம் ஆண்டைத் தொட்டுவிட்டது எனவும் கடந்த ஒரு வருஷமாக தன் வலைப்பக்கம் கோமாநிலையில் இருப்பதாகவும் எழுதி இருக்கார்.  அவரும் சுறுசுறுப்பாகத் தினம் ஒரு பதிவு எனப் போட்டுக் கொண்டிருந்தவர் தான். என்ன காரணமோ சில காலங்களாகப் பதிவே இல்லை. அதைப் படித்ததில் இருந்து எனக்குள்ளும் சிந்தனை.  துளசி ஆரம்பித்த சமயத்தில் எல்லாம் நான் சும்மாக் கருத்துச் சொல்லிக் கொண்டு தான் இருந்தேன். அப்புறமாய்த் தான் திடீரென 2005 ஆம் ஆண்டில் நவம்பரில் வலைப்பக்கம் ஆங்கிலத்தில் தொடங்கலாம் என்று ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் எப்படிக் கணினியில் தமிழில் எழுதுவது என்பதே தெரியாத நிலை. ஆரம்பித்துச் சில காலங்களிலேயே ஆங்காங்கே உதவிக்கரங்கள் நீண்டன. ஒரு வழியாக 2006 ஆம் வருஷம் ஏப்ரலில் என்னுடைய வலைப்பக்கத்தைத் தமிழில் மாற்றினேன். ஆரம்பத்தில் ரொம்பவே கனமான விஷயங்களை எழுதவில்லை. என் பக்கம் எல்லோரையும் வர வைக்கணுமே! அதனால் அதிகமாய் மொக்கை தான்! பின்னரே என்னுடைய பயணங்கள், கோயில்கள் சென்றவை, வட மாநிலங்களில் வசித்த அனுபவங்கள் எனப் பகிர ஆரம்பித்தேன். இதில் ரயில் பயணங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கேன். அதன் பின்னர் அந்த வருஷமே செப்டெம்பர் மாதத்தில் திடீரெனக் கயிலைப் பயணமும் வாய்க்க அதை நான் பயணக்கட்டுரையாக  எழுத வலை உலகில் ஓரளவுக்குப் பிரபலமும் ஆனேன். அதன் பின்னர் சில காலம் திரும்பியே பார்க்கவில்லை எனலாம். முழுக்க முழுக்க வலை உலகம் என்னை ஆட்கொண்டது. வீட்டில் அவ்வப்போது வேலைகளை விரைவாகவும் சரியாகவும் செய்து முடித்துவிட்டுக் கணினியில் ஆர்வமுடன் வந்து உட்கார்ந்து கொள்வேன். புதுப் பதிவுகள் எழுதுவது/வந்த கருத்துகளுக்குப் பதில் சொல்வது, மற்றப் பதிவுகளைப் போய்ப் படிப்பது/ எனச் சுறுசுறுப்பாக வேலைகள் நடக்கும். இதற்கு நடுவில் யாரானும் யாஹூ மெசஞ்சரின் மூலமோ/கூகிள் சாட்/ஸ்கைப் மூலமே அரட்டையும் அடிப்பாங்க. அப்போதிருந்த நண்பர்களில் பலர் இப்போது வலை உலகிலேயே இல்லை. 

கொஞ்ச காலமாகவே எழுதுவதிலும்/படிப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இது நான் எதிர்பாராத ஒன்று. பல விஷயங்கள் எழுத நினைச்சு எழுதவே முடியலை. இதிலே சமீப கால உடல் நலம் காரணமாக ஓரிரு மாதங்கள் சுத்தமாய் முடியலை.  அதனால் ஒண்ணும் ஆயிடலை. என்றாலும் எனக்கு மன உறுத்தல். முன்னெல்லாம் ஆரம்ப காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பதிவுகள் போட்டுப் பின்னர் தினம் ஒரு பதிவுனு போட்டு அதிலும் பக்திச் சுற்றுலா/ஆன்மிகம் பற்றியவற்றிற்குத் தனிப்பக்கம் ஆரம்பித்துப் பின்னர் பக்திக்கெனத் தனிப் பக்கம் ஆரம்பித்து, சமையலுக்கென ஆங்கிலத்தில் வலைப்பக்கம் ஆரம்பித்து அதன் பின்னர் வேறொரு மெயில் ஐடியில் இன்னும் இரு வலைப்பக்கங்கள் ஆரம்பித்து என ஒரே சமயம் பல வலைப்பக்கங்களை ஆரம்பித்து ஓரளவுக்கு எழுதியும் வந்தேன். அப்போவும் நாங்க இருவர் தான். இருந்தது அம்பத்தூரில் தனி வீட்டில். வீட்டு நிர்வாகங்கள் அதிகம். தினம் வீட்டைப் பெருக்குவதும்/சுத்தமாய் வைத்துக்கொள்வதுமே தனி வேலை. காலை/மாலை இருவேளையும் சேர்ந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆயிடும். என்றாலும் கணினியில் உட்காரும் நேரம் அதிகமாகவே இருந்தது.  காலை தினம் தினம் யோகாசனப் பயிற்சி வேறே ஒரு மணி நேரத்துக்கும் குறையாது. 2015 வரை யோகாசனப் பயிற்சி இருந்தது. பின்னர் தான் மெல்ல மெல்ல முடியாமல் போனது.  அப்போதெல்லாம் மட்டும் ஒரு நாளைக்கு 48 மணி நேரமா இருந்தது? ஆச்சரியம் தான்!

அப்போதெல்லாம் காலை நேரத்தில் எல்லாம் கணினியில் உட்கார மாட்டேன். எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு சாப்பாடும் முடிந்து பனிரண்டரை ஒரு மணிக்கு உட்கார்ந்தால் மாலை நான்கு மணி வரை உட்கார்ந்திருப்பேன். அதன் பின்னர் எழுந்து மாலை வேலைகள்/ இரவு உணவு தயாரித்தல் முடிந்து உணவு உண்டு இரவு ஏழரை வாக்கில் உட்கார்ந்தால் ஒன்பதரை வரை உட்கார்ந்திருப்பேன். இப்போல்லாம் கண்களின் பிரச்னைகள் காரணமாக இரவில்/மாலை அதிகம் உட்காருவதில்லை. மாலையில் உட்கார்ந்தாலும் ஆறு/ஆறரைக்குள்ளாக மூடும்படி ஆயிடும். மனதைச் செலுத்தி எதுவும் செய்ய முடியறதில்லை. மனசு வீட்டு வேலைகளையே நினைக்கும். அப்போதிருந்த செயல் திறன் இப்போது குறைந்திருக்கிறது. இதுக்கு நடுவில் 2013 ஆம் ஆண்டில் இருந்து சில காலங்கள் லினக்ஸிற்காக மொழிபெயர்ப்பு வேலை திரு தி.வா. மூலமாகச் செய்து கொடுத்திருக்கேன். செல்வமுரளிக்காக அவரின் விஷுவல் கம்யூனிகேஷன் சார்பாக தினத்தந்திக்கு நூற்றாண்டு மலருக்கான வேலைகள் செய்திருக்கேன். திரு வைகோ நடத்திய போட்டிகளில் அவருடைய விடா முயற்சியின் பேரில் விமரிசனங்கள் எழுதிக் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கேன். அப்போதெல்லாம் குழுமங்களிலும் கலந்து கொள்வேன். அதிலும் மின் தமிழ்க்குழுமத்தின் மாடரேட்டர் ஆக இருந்ததால் அட்மின் வேலைகளையும் அவ்வப்போது பார்த்துக்கொள்ளும்படி இருக்கும்.  நிறைய மொழிபெயர்ப்பு வேலைகளும் வந்தன/ ஆனால் சிலவற்றின் ஒரு சார்பு காரணமாக அந்த வேலைகளை  ஏற்றுக்கொண்டதில்லை. 

இப்போ நினைச்சால் நானா அது எனத் தோன்றுகிறது. இப்போக் காலையில் எழுந்தாலும் கணினியில் உட்கார முடிவதில்லை. என்னிக்காவது உட்காருகிறேன்.  அதிகமாய் மத்தியானங்களில் தான் உட்கார்ந்து வேலை செய்யும்படி இருக்கிறது. அதுவும் அதிகம் போனால் ஒரு மணி நேரமே/ அதற்குள்ளாக எதைப் பார்ப்பது/எதை விடுவது/எதை எழுதுவது என்று இருக்கு! புதிதாய் ஒன்றும் எழுதவில்லை. பல வேலைகள் ஆரம்பித்தவை அப்படி அப்படியே நிற்கின்றன. உழைப்பு தேவை.ஆனால்  நம்மால் இப்போது உழைப்பைக் கொடுக்க இயலாத நிலை. உடல் நலம் விரைவில் இதை எல்லாம் ஈடு கட்டும்படியாகக் குணம் ஆகிக் கொஞ்சமானும் வேலைகளில் ஈடுபட இடம் கொடுக்க வேண்டும். அதற்கு இறைவன் தான் கருணை காட்ட வேண்டும். இறை அருளால் அனைத்தும் சரியாக வேண்டும் என்பதே பிரார்த்தனைகள்.  இதுவும் ஒரு காலம். இதுவும் கடந்து போகும் தான். ஆனால் பழைய நிலை வருமா? இதான் மில்லியன் டாலர் கேள்வி!

Sunday, September 12, 2021

பிள்ளையாரைப் பார்க்க வாங்க!


 

பிள்ளையார் சதுர்த்திப் படங்கள் கொஞ்சம் தாமதமாக. எங்க வீட்டுப் பிள்ளையாருக்கு இந்த வருஷம் என்னோட கொழுக்கட்டை சாப்பிட்டதில் ஜீரணம் ஆகலையாம். அதான் கொஞ்சம் ஓய்வு எல்லாம் எடுத்துக் கொண்டு தாமதமாய் வந்திருக்கார்.  பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் எங்க ஆவணி அவிட்டம். வெறும் பாயசம், வடை மட்டும் தான் பண்ணினேன். சமாளிச்சுட்டேன். அன்னிக்கே சமைச்ச கையோட பிள்ளையாருக்குப் பச்சரிசி இட்லிக்கும் அரைச்சு வைச்சுட்டேன்.  மறுநாள் காலை சீக்கிரம் வேலை ஆரம்பிக்கணும்னு நினைச்சால் வேலைகளில் உதவும் பெண்மணி கொஞ்சம் தாமதமாக (அதிகமில்லை, ஒரு மணி நேரம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) வேலைக்கு வந்தார். அவர் வந்து வேலைகளை முடிச்சுட்டுப் போனதும் குளிச்சுட்டு வந்து மாவு அரைச்சு, உளுந்துப் பூரணம், வடை, பாயசம், அதிரசம் ஆகியவற்றிற்கு எல்லாம் அரைச்சு வைச்சுட்டுச் சமையலைத் தொடங்கினேன். சமைத்துக் கொண்டே தேங்காய் உடைச்சுத் துருவிப் பூரணம் கிளறியாச்சு. பூரணம் கொஞ்சம் பாகு ஜாஸ்தியாயிடுச்சு! 

அதற்குள்ளாகப் பச்சரிசி இட்லியும் உளுந்துப் பூரணத்துக்கும் இட்லிப் பாத்திரத்தில் வேக விட்டு எடுத்துக் கொண்டு, உளுந்துப் பூரணத்திற்குத் தேங்காய், கருகப்பிலை, கடுகு, உபருப்பு தாளித்து உதிர்த்துத் தயாரானது. சாம்பார், ரசம் வேலை முடிந்து விட அதையும் எடுத்துத் தனியாய் வைச்சாச்சு. சாதம் ஆனதும் ஒரு கிண்ணத்தில் பருப்புடன் அதையும் தனியா மூடி வைச்சாச்சு. இனி கொழுக்கட்டை பண்ணிக்கொண்டே வடை எல்லாம் தட்டறாப்போல் இப்போ உடம்பு இல்லை. ஆகவே முதலில் கொழுக்கட்டையை முடிச்சுப்போம் என அதை ஆரம்பிச்சேன். வெல்லப் பூரணத்தில் 21 கொழுக்கட்டை பண்ணி எடுத்துக் கொண்டு உளுந்துப் பூரணத்திலும் அதே போல் 21 பண்ணினேன். பார்க்க என்னமோ நன்றாகவே வந்திருந்தது. அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் பூஜையை முடிச்சுட்டு நிவேதனத்திற்குக் காத்திருந்தார். எல்லாம் ஆச்சு, வடையும் அதிரசமும் தவிர்த்து. கொழுக்கட்டை அடுப்பை அணைச்சுட்டு இன்னொரு பக்கத்து அடுப்பில் எண்ணெயை வைத்து அதிரசம் கரண்டியால் எடுத்துப் போட்டால் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் விதவிதமான உருவங்களில்! சரினு அதை வேக விட்டு எடுத்துத் தனியாய் வைச்சுட்டுக் கொஞ்சம் கோதுமை மாவு சேர்த்துக் கொண்டு கனிந்த வாழைப்பழங்களைப் போட்டுப் பிசைந்து அப்பமாக வார்த்தேன். சரியாக வந்தது. 

அதன் பின்னர் வடைக்கு மாவை எடுத்தால் மாவு ஓடிக் கொண்டிருக்கு. எப்படிப் பிடிக்கிறது. ஏற்கெனவே உனக்கு உளுந்து வடையே தட்டத் தெரியலைனு சான்றிதழ்ப் பத்திரமெல்லாம் கொடுத்தாச்சு. இன்னிக்கு எப்படி வருமோ தெரியலை. யோசிச்சேன். அப்படியே மாவைக் கையால் எடுத்துத் தட்டி போண்டா போல் போட்டு எடுத்துட்டேன். இன்னிக்கு இதான். பின்னர் நிவேதனம் முடிஞ்சு, காக்காய்க்கு எல்லாம் கொடுத்துட்டுச் சாப்பிட்டுப் பாத்திரங்களை ஓரளவுக்கு ஒழிச்சுட்டுப் போய்ப் படுத்துட்டேன். கொழுக்கட்டை வாயில் ஒட்டிக் கொண்டது. என்னனு தெரியலை. அது கிடக்கட்டும் போ என்று படுக்கப் போயிட்டேன். அப்போப் பதினொன்றரை மணி. சாயந்திரமா நாலு மணிக்குத் தான் எழுந்து வந்து மிச்சம் மாவை எடுத்து நன்றகப் பிசைந்து மிச்சம்கொழுக்கட்டையைப் பண்ணினால் ரொம்ப நன்றாக வந்தது. காலம்பர ஏன் சரியா வரலை? தெரியலை. நம்மவர் அதைப் பார்த்துட்டுப் பயந்துட்டார். அப்புறமா சமாதானமா நல்ல வார்த்தை சொல்லிச் சாயந்திரமாப் பண்ணின கொழுக்கட்டைகளைக் கொடுத்தேன். நல்லா இருக்கு எப்போவும் போல என்று சொல்லிவிட்டுச் சாப்பிட்டார்!

காலம்பர ஏன் சரியா வரலை? மில்லியன் டாலர் கேள்வி!


ராமருக்குப் பக்கத்திலே தெரியுதே அந்த லைட்டைப் போட்டாலும் வெளிச்சம் பிரதிபலிச்சு ராமர் சரியாத் தெரியறதில்லை. எதிரே உள்ள லைட்டைப் போட்டுட்டு இதை எடுத்தேன். சுமாரா இருந்தாலும் வலப்பக்க ஓரம் வெளிச்சப் பிரதிபலிப்பு! 



கீழே இரண்டாவது தட்டில் பெருமாள், ஶ்ரீதேவி, பூதேவிக்கு முன்னால் பிள்ளையார் உட்கார்ந்துட்டார். அவரைக் கீழே வைச்சால் இவரால் உட்கார்ந்து பூஜை பண்ண முடியாது. ஆகவே இரண்டாவது தட்டில் வைச்சுட்டு ஸ்டூலில் உட்கார்ந்து பூஜை பண்ணினார்.



ஏதோ ஸ்லோகமோ என்னமோ தெரியலை!


ஜூம் பண்ணிப் பிள்ளையாரைப் பார்க்கலாம்.


நிவேதனங்கள் அதிரசம், வடை இரண்டும் ஒரு பாத்திரத்தில், பக்கத்தில் இட்லி. இட்லிக்கு முன்னால் வெல்லக்கொழுக்கட்டை, பின்னால் உளுந்துக் கொழுக்கட்டை. இட்லிக்குப் பக்கம் பாயசம், அதுக்கு முன்னால் சாதம் பருப்பு. பக்கத்தில் பழங்கள், தேங்காய் உடைத்து வெற்றிலை பாக்குடன்.



தீபாராதனை காட்டுகிறார். 


பிள்ளையாரப்பா! இந்த வருஷம் ஒப்பேத்தியாச்சு. அடுத்த வருஷம் பிழைத்துக் கிடந்தால் நல்லபடியாக வையப்பா! 


Saturday, September 11, 2021

மஹாகவிக்கு அஞ்சலி!

 



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


௨)

கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

Tuesday, September 07, 2021

விட்டுப் போனதைப் பிடித்து விட்டேன்!

கோகுலாஷ்டமி அன்று எடுத்த படங்கள் சிலவற்றைக் கணினியில் ஏற்ற முடியாமல் இருந்தன. அவற்றை நேற்றிரவு ஒரு வழியாய்க் கணினியில் ஏற்றினேன். ஶ்ரீராமர் படம் நெல்லை சொல்கிறாப்போல் ஒரே வெளிச்ச மயமாய் வந்திருக்கு. இந்த விளக்கை அணைச்சுட்டு இன்னொரு விளக்கைப் போட்டாலும் சரியாய் இல்லை. இடம் அப்படினு நினைக்கிறேன். வந்தவரைக்கும் இதான்! 



கீழ்த்தட்டு, உம்மாச்சி எல்லாம் தெளிவாய் இருந்த படம் தற்செயலாய் அழிந்து விட்டது. சரினு இதையே போட்டுட்டேன். :(  ஏதோ ஒரு சாக்கு! நொ.கு.ச.சா. 

 


ஓரளவு பரவாயில்லையோ?


கீழே கோலம் போட்டுப் பலகை வைச்சிருக்கேன். சின்னப் பலகையில் கிச்சாப்பயல்.  படத்தில் நமக்கு இடப்பக்கம் பழங்கள், வெற்றிலை பாக்கு, தேங்காய் உடைத்தது. பக்கத்தில் சின்ன ப்ளாஸ்டிக் டப்பாவில் அவல். அது பக்கம் வடைகள், பால், பாயசம், தயிர் வெண்ணெய், மாமி கொடுத்த மனோஹரம், உப்பு, வெல்லச் சீடைகள், காடரரிடம் வாங்கிய கை முறுக்குகள். 


இந்தப் படம் வேறொரு கோணத்தில் எடுத்தது. முழுசும் வரலை.



கிச்சாப்பயலை மறுபடி போட்டிருக்கேன். அன்னிக்குச் சரியாப் பார்க்க முடியாதவங்க பார்த்துக்கலாமே!