கடந்த நாட்களில் சுஜாதாவின் கதை ஒன்றும் "கமிஷனருக்குக் கடிதம்!" பிவிஆரின் கதை ஒன்றும் "அதிர்ஷ்ட தேவதை" படித்தேன். முதல் கதை காவல்துறையையும் அதன் செயல்பாடுகளையும் பற்றியது. பெண் ஒருத்தி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள். இந்தக் கதை எழுதிய கால கட்டம் பெண்கள் காவல் துறையில் அதிகம் பங்கெடுக்காத காலம் என நினைக்கிறேன். எண்பதுகளின் ஆரம்பமோ! இருக்கலாம். அந்தக் காவல் நிலையத்தின் கமிஷனரில் இருந்து உதவிக்கமிஷனர் வரை அந்தப் பெண்ணின் மேல் ஆசை கொள்கின்றனர். அந்தப் பெண்ணுக்கோக் காவல் துறையில் சாதிக்க எண்ணம். வேலையில் சேர்ந்த அன்றே விபத்து/அதில் இறந்தவரின் உடல், மார்ச்சுவரி, தற்கொலை செய்து கொண்டவரைப் பார்க்க அழைத்துச் செல்லுதல் என அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்துப் பார்த்துத் திகைக்க நேரிடுகிறது. இதற்கு நடுவே இரண்டு அதிகாரிகளும் மாற்றி, மாற்றி அந்தப் பெண்ணைத் தன் வசப்படுத்த முயலும் முயற்சிகள்.
இவற்றிலிருந்து அந்தப் பெண் எப்படி மீண்டாள் என்பதே கதை என்றாலும் அதற்காக அவள் எடுத்துக் கொண்ட விஷயம் கொஞ்சம் ஆபத்தானது. அவள் வேலையே போய்விடும் அபாயம் கொண்டது. இதற்கு நடுவில் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு பெண்ணைப் பார்த்துப் பரிதாபம் கொண்டு அவளை மாற்றவும் முற்படுகிறாள். முடியவில்லை. ஆனால் அதனால் அந்தப் பெண் காவல் துறை அதிகாரிக்குக் கெட்ட பெயர் தான் மிச்சம். மேல் மட்டத்தில் இருந்து அவளைப் பணி இடை நீக்கம் செய்யச் சொல்லி உத்தரவு வர, தன் மேலதிகாரியின் குடும்ப விஷயத்தைப் பார்த்து விட்டு அதைச் சரி செய்ய அந்தப் பெண் அதிகாரி மேற்கொண்ட முயற்சிகளால் கடைசியில் அவளாகவே வேலையை விட்டு ராஜினாமா செய்யும்படி நேருகிறது. இடைப்பட்ட பக்கங்களில் நடந்தவைகளை நேரில் படிக்கையில் விறுவிறுப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணாக இருந்தால் அவள் காவல் துறையில் நீடித்து நிற்க முடியாது என்னும்படியான ஓர் எண்ணத்தை சுஜாதா இதில் ஏற்படுத்தி இருக்காரோ? ஆகவே அந்தப் பெண் தானாகவே ராஜினாமா செய்யும்படியான சூழ்நிலையை ஏற்படுத்தி சுஜாதா எழுதி இருக்கும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு வேளை இது அவருடைய ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறதோ என்றும் தோன்றியது.
இன்னொரு கதையான பிவிஆரின் "அதிர்ஷ்ட தேவதை"யில் ரங்கன் என்னும் ஓர் அப்பாவிக்கு ரமணி என்னும் ஓர் வாலிபன் தற்செயலாக அறிமுகம் ஆகிப் பின்னர் உள்ளார்ந்த நட்புப் பாராட்டும்படி ஆகிறது. இந்த ரங்கனுக்கு எல்லாமே ரமணி தான். ரமணி சொல்படி தான் அவன் எல்லாமும் கேட்பான். அப்படிப்பட்ட ரங்கன் ரமணி பேச்சைக் கேட்காமல் செய்து கொண்ட கல்யாணமும், ரங்கனின் ஆசையால் அவன் அடுத்தடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவுக்குப் பணமும் வந்து சேரக் கடைசியில் ரமணியின் குடும்பமும்/தாத்தாவும், ரமணி மணந்து கொள்ளக் காத்திருக்கும் பெண்ணுமாகச் சேர்ந்து ரங்கனின் வாழ்க்கையைச் செப்பனிடுகிறார்கள். ஆனாலும் துரதிர்ஷ்டம் பிடித்த ரங்கனுக்கு நுரையீரல் வலுவிழந்து போக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல நேரிடுகிறது. பணம் இல்லாதபோதெல்லாம் நன்றாக இருந்த ரங்கன் லட்சாதிபதி ஆனதும் அடிக்கடி மருத்துவமனை வாசம். பணத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை.
இதற்கு நடுவில் ரமணியின் குடும்பச் சூழ்நிலை/அவன் தாத்தாவின் பாசம்/ரமணியின் நேர்மை/ அவன் காதல்/கடைசியில் வெகு காலத்துக்கும் பின்னர் நடந்த திருமணம்/ ரமணிக்கு ரங்கனின் திருமணப்பரிசு என்றெல்லாம் விவரித்து நேர்மைக்குக்கிடைத்த பலனாக ரமணியின் வாழ்க்கையை ஓர் உதாரணமாகக் காட்டி இருக்கார் பிவிஆர் அவர்கள். கதை முழுவதும் அநேகமாக உரையாடல்களிலேயே போனாலும் ஆங்காங்கே விவரணைகளும் வருகின்றன. சுவாரசியமாக இருந்தது கடைசி வரைக்கும். ரங்கனின் முடிவு வெகு விரைவில் ஏற்பட்டு விடும் என்பதில் ரமணிக்கு மட்டுமா வருத்தம்? நமக்கும் ஏற்படுகிறது. இரண்டு புத்தகங்களும் இணையம் வழி படித்ததால் எங்கே கிடைக்கும்/எப்போ எழுதினது/என்ன விலை என்பதெல்லாம் தெரியாது.
எங்கள் ப்ளாகில் பானுமதி சுஜாதாவின் ரிசப்ஷன் கதையின் முடிவு பற்றிக் கேட்டிருந்த கேள்விக்கு ஓரளவு சரியான பதிலைக் கொடுத்ததால் எனக்கு சுஜாதாவின் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கப் போவதாகச் சொல்லி இருந்தார். நானும் ஏதோ விளையாட்டு என்று சும்மா இருந்துவிட்டேன். பின்னர் வாட்சப்பில் செய்தி கொடுத்துத் தொலைபேசியில் அழைத்துப் பேசி என் விலாசத்தை வாங்கிக் கொண்டு புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறார். நேற்று வந்து சேர்ந்தது. சுஜாதாவின் "ப்ரியா" புத்தகம். குமுதத்தில் தொடராக வந்தப்போப் படிச்சிருக்கேன். அதை நம்ம ரங்க்ஸும் நினைவு கூர்ந்தார். பின்னர் திரைப்படமாக வந்தப்போவும் தொலைக்காட்சி தயவில் பார்த்தோம். படம் படு சொதப்பல். ஶ்ரீதேவியையும் ரஜினியையும் போட்டும் சோபிக்கவில்லை. இந்தப் புத்தகத்தை இன்னமும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தவில்லை. இனிமேல் தான் ஆரம்பிக்கணும். சில மாதங்களாகக் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்காமல் இணைய வழியே படித்து வந்தேன். இனி இந்தப் புத்தகத்தில் ஆரம்பிக்கணும்.
அநேகமாய்த் தலைப்பு சரியில்லைனு ஶ்ரீராம் சொல்லுவாரோ? அவரைக் கேட்டுத் தலைப்புப் போடலாம்னா இது நான் நேரடியாக எழுதிக் கொண்டு இருக்கேனே! இந்தத் தலைப்பே இருக்கட்டும் விடுங்க ஶ்ரீராம்!