தண்ணீருக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்நாட்டில்/முக்கியமாகச் சென்னையில் இப்போது எங்கே பார்த்தாலும் தண்ணீர்! தண்ணீர்! இன்னிக்குச் சென்னையில் ஒரு முக்கியமான கல்யாணம். நேற்றே போயிருக்கணும். வண்டி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டோம். ஆனால் இந்த மழையால் போகவில்லை. விழுப்புரம்/செங்கல்பட்டுப் பக்கம் உள்ள மழை நீரையும் வெள்ளத்தையும் பார்த்துவிட்டுப் போவதற்குத் தயக்கம். ஏற்கெனவே மதுராந்தகம் ஏரி நீரில் விட்டுக் கொண்டிருந்த உபரி நீர் ஏரி நிரம்பியதால் வெளியேற்றப்படுகிறது எனவும், அதனால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் இருப்பதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் திருமணத்தை நேரடி ஒளிபரப்பாகக் காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். நேற்றைய ரிசப்ஷனில் இருந்து இன்று திருமணம் சப்தபதி வரை பார்த்தோம். உண்மையில் சத்திரத்துக்குப் போயிருந்தால் இத்தனை வசதியாகப் பார்த்திருக்க முடியாது. மிகவும் எதிர்பார்த்திருந்த திருமணம். நேரில் பார்க்க முடியலையேனு இருந்தது. ஆனால் அதை விட வசதியாக மொபைல் மூலம் பார்த்தாச்சு!
நேற்றுத் தண்ணீரில் கூடுவாஞ்சேரி அருகே முதலை என வீடியோ வாட்சப்புகளில் வந்தன. இன்னொரு வீடியோ கேகே நகரில் என்றது. என் அண்ணா பெண் அதெல்லாம் இல்லைனு மாவட்ட ஆட்சியரே சொல்லிட்டார். அது உண்மையில் டயர் என்றும் சொன்னாள். மக்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தப்படுகிறார்கள் என்பதும் புரிந்தது. இன்னொரு வீடியோவில் இளையராஜா வீட்டைக் காலி செய்து கொண்டு போகிறாப்போல் வந்தது. சரினு சித்தி அங்கே தானே இளையராஜா வீட்டுக்கு எதிரே இருக்காங்கனு தம்பிக்குத் தொலைபேசி விசாரிச்சா அது 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கான வீடியோவாம். இப்படிப் பலவும் 2015 ஆம் ஆண்டிற்கான வீடியோக்கள் சுற்றுவதாகவும் தெரிவித்தார். என்ன மக்கள்! மனித மனத்தின் பலவீனத்தையும் தற்போது இருக்கும் நிராதரவான நிலையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மேலும் மேலும் பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி மகிழும் சிலரின் வக்கிரமான எண்ணம் வேதனையில் ஆழ்த்துகிறது.
என் முதல் பிரசவத்தின் போது வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபடியால் அறுபது நாட்களே பிரசவ கால விடுமுறை. அறுபத்தி ஒன்றாம் நாள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்கணும். அதுக்கப்புறமாத் தேவைன்னா விடுமுறை எடுத்துக்கலாம். குழந்தையைப் பார்த்துக்க ஆள் இருந்தா வேலைக்கும் போய்க்கலாம். எனக்கு செப்டெம்பர் கடைசியில் பிரசவம் ஆனதும். நவம்பர் கடைசியில் விடுமுறை முடிந்து வேலையில் சேரணும். அலுவலகத்தில் இருந்து நினைவூட்டுக் கடிதமும் வீட்டுக்கு வந்திருப்பதாக நம்ம ரங்க்ஸார் எனக்கும் மதுரைக்குக் கடிதம் எழுதி இருந்தார். குழந்தை பிறந்து கணக்குக்கு மாதம் மூன்று ஆனதால் (தமிழ் மாதக்கணக்கு) என் அப்பா/அம்மா என்னையும் குழந்தையையும் சென்னையில் கொண்டு விட முடிவு செய்து நாள் பார்த்தார்கள். நவம்பர் 29 ஆம் தேதி வேலையில் சேரணும். அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் மதுரையை விட்டுக் கிளம்பினோம். இப்போ குருவாயூர் விரைவு வண்டி என அழைக்கப்படும் வண்டி அப்போது காலை ஆறே கால் மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தது. முதல் நாள் இரவே குருவாயூரில் இருந்து வந்து மதுரையை அதிகாலை அடைந்து அங்கிருந்து காலை ஆறேகாலுக்குக் கிளம்பிச் சென்னை நோக்கிச் செல்லும். அந்த வண்டியில் முன்பதிவு செய்திருந்தார்கள். காலை சீக்கிரமே எழுந்து அம்மா ரயிலுக்கு வேண்டிய உணவு வகைகள், குழந்தைக்குத் தேவையான வெந்நீர். உடனே கொடுப்பதற்கு வேண்டிய பால் எனத் தயாரித்து எடுத்துக் கொள்ள தம்பி அப்போது காலேஜில் படித்ததால் அவனை வீட்டில் விட்டு விட்டு நான், அப்பா, அம்மா குழந்தையுடன் சென்னைக்குக் கிளம்பினோம்.
நானும் அம்மாவும் குழந்தையுடன் சைகிள் ரிக்ஷாவில் ஸ்டேஷனுக்குப் போக அப்பாவும் தம்பியும் மூட்டை முடிச்சுக்களை முடிந்தவரை ரிக்ஷாவில் வைத்தது போக மிச்சத்தைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தனர். ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். நான்கு பேர் உட்காரும் ஒரு பக்கப் பலகையில் நாங்கள் 3 பேர் இருந்ததால் இடம் தாராளமாகவே இருந்தது. சாமான்களை வைத்துவிட்டு நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு குழந்தையை எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் போட்டுவிட்டுத் தூங்கப்பண்ணிவிட்டுக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ரயில் என்னமோ கிளம்பவே இல்லை. தம்பி என்னனு போய் விசாரித்த்தற்கு இஞ்சின் மாற்றணும்னு சொல்லி இருக்காங்க. சரிதான், சித்தரஞ்சன்லே இருந்து இஞ்சின் எல்லாம் வரணும் போலனு நாங்க கேலி பேசிக் கொண்டோம். பின்னர் ஒருவழியாக ஏழு மணிக்குக் கிளம்பியது. வழியில் இட்லி, புளியஞ்சாதம், தயிர் சாதம் போன்றவற்றைச் சாப்பிட்டு முடித்தோம். குழந்தைக்கும் நானும் பால் கொடுத்து விளையாட விட்டுப் பார்த்துக் கொண்டோம். சாயந்திரமாய் ஐந்தேகால் மணிக்கு சென்னை/எழும்பூர் போகணும். மத்தியானம் இரண்டரை மணி இருக்கும் விழுப்புரம் வந்தது. விழுப்புரத்தில் அரை மணியாவது நிற்கும். எப்போதும் மத்தியானம் ஒரு மணிக்குக் காஃபி குடிச்சுப் பழகிய அப்பா காப்பி வாங்கி வரக் கீழே இறங்கினார். வண்டி கிளம்பறதுக்குள்ளே வரணுமேனு எனக்குக் கவலை.
எனக்கு எப்போவுமே வண்டி நடுவில் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி ஏதாவது வாங்கணும்னா கொஞ்சம் யோசனையா இருக்கும். அதுக்குள்ளே வண்டி கிளம்பிடுமோனு பயம் வரும். ஆனால் அப்பா காஃபி வாங்கி வந்துட்டார். கூடவே ஒரு செய்தியையும் கொண்டு வந்தார்.அது தான் வண்டி விழுப்புரத்தை விட்டுக் கிளம்புமா என்பது! விழுப்புரம்/செங்கல்பட்டு நடுவே மழையினால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும் வண்டியை மேலே செலுத்திக் கொண்டு போவது கடினமான காரியம் எனவும் பேசிக் கொண்டதாய்ச் சொன்னார். கவலை சூழ்ந்தது. நிலைமை புரியாமல் குழந்தை கத்தி விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் அதற்குள்ளாக வண்டி கிளம்பி மேலே சென்றது. அப்பாடா! என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொஞ்ச நேரத்திலேயே ஒரு நீண்ட குரல் எழுப்பி விட்டு ஓய்ந்த இஞ்சின் தடாரென இழுக்கப்பட வண்டி சட்டென நின்றது. பின்னர் மெல்ல மெல்ல அப்படியே பின்னாலேயே போக ஆரம்பித்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.