தட்டை மாவு பிசைந்தது. அதன் மேல் ஒரு பெரிய பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைச்சிருக்கேன்.
தட்டை செய்ய முடியாமல் மாவு கலந்ததை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென அக்கி ரொட்டி நினைவில் வந்தது, அக்கி ரொட்டி பற்றிப் பல்லாண்டுகள் முன்னரே அம்பத்தூரில் எங்க வீட்டில் குடி இருந்த மாமி மூலம் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் பண்ணும்போது எல்லாம் அந்த மாமியும் கொடுத்தது இல்லை. அநியாயமா இல்லையோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நானும் சுவாரசியமாகப் பண்ணும் முறை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கலை. இணையத்துக்கு வந்த பின்னரே அதைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள நேர்ந்தது. ஆகவே அக்கி ரொட்டி செய்முறை பற்றித் தேடும்போது தி/கீதா அவர்கள் எ.பி.யில் "திங்க"க்கிழமைக்கு எழுதினது கண்களில் பட்டது. அதில் அவர் அரிசி மாவோடு கொஞ்சம் சமைத்த சாதமும் சேர்க்கச் சொல்லி இருந்தார். நமக்கு அது சரிப்படாது, சாதம் என்னமோ இருந்தது தான். அதைச் சேர்த்துப் பிசைந்து விட்டால் பின்னர் குளிர்சாதனப்பெட்டியில் மாவை வைக்க முடியாது. ஆகவே யோசித்தேன்.
மாவு பைன்டிங்கிற்காக/அதாவது சேர்ந்து வந்து தட்டும்போது பிரியாமல் வருவதற்காகத் தானே சாதம் சேர்க்கிறார். நாமோ மாவில் உளுந்த மாவு//பொட்டுக்கடலை மாவு எல்லாம் சேர்த்திருக்கோம். அதற்குத் தகுந்த காரமும் இருக்கு. போதாக்குறைக்கு ஊற வைச்ச கடலைப்பருப்பு/தேங்காய்க்கீற்று எல்லாமும் சேர்ந்திருக்கு. இனி! மேல் அலங்காரங்கள் தானே தேவை. கொத்துமல்லியைக் கழுவி நன்கு பொடியாக நறுக்கிக் கொண்டேன். 2,3 பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். ஒரு பச்சை மிளகாயைக் கீறி உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். இஞ்சி ஒரு துண்டு தோல் சீவிப் பொடியாக நறுக்கினேன். எல்லாவற்றையும் தட்டைக்காகப் பிசைந்த மாவில் சேர்த்து நன்கு கலந்தேன். வாசனை தூக்கியது. இஃகி,இஃகி, இஃகி.
பச்சைக் கொத்துமல்லி
வெங்காயம்
எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்த மாவு
ப்ளாஸ்டிக் பேப்பரில் முதலில் தட்டினேன். பின்னர் பையர் சாப்பிடும்போது வெங்காயத்தின் நீர் சேர்ந்து கொண்டு மாவு தளர்ந்து விட்டதால் அப்படியே எடுத்து உருட்டித் தோசைக்கல்லிலே போட்டு நேரடியாகக் கையாலேயே தட்டிக் கொடுத்துவிட்டேன். இது இன்னமும் நன்றாக வந்தது. மெலிதாகத் தட்டவும் முடிந்தது.
அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் அக்கி ரொட்டி. ஒரு பக்கம் வெந்திருக்கு என்றாலும் இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்த படம் என்னமோ சொதப்பல்! வழக்கம் போல்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ராத்திரிக்கு என்னனு கேட்ட ரங்க்ஸுக்கும்/பையருக்கும் அரிசி மாவு அடைனு மட்டும் சொல்லி இருந்தேன். இரண்டு பேருமே பயந்துட்டு இருந்தாங்க. நம்மவர் சாதம் இருக்கோனு கேட்டுச் சந்தேகத்தையும் தீர்த்துக் கொண்டார். சாப்பிடும் நேரமும் வந்தது. தொட்டுக்க என்ன? காலையில் காடரிங்கில் கொடுத்த மணத்தக்காளி வத்தக்குழம்பு இருந்தது. பொதுவாக அடைக்கு எங்க வீட்டில் வத்தக்குழம்பே தொட்டுப்போம். ஆகவே அது போதும்னு நினைச்சேன். வெண்ணெய் வேறே முதல்நாள் தான் எடுத்து வைச்சிருந்தேன். அதையும் எடுத்து வெளியே வைச்சேன்.
முதலில் வாழை இலையில் தான் தட்டணும்னு நினைச்சேன். ஆனால் வாழை இலையே இல்லை. ஆகவே சர்க்கரை வந்த ப்ளாஸ்டிக் கவரை எடுத்து நன்கு அலம்பித்துடைத்து நெய்/எண்ணெய் தடவி வைத்துக் கொண்டேன். ஒரு சின்ன ஆரஞ்சு அளவுக்கு மாவை எடுத்துக்கொண்டு தண்ணீரும், எண்ணெயுமாகத் தொட்டுக் கொண்டு பின்னர் அதைக் கையில் எடுத்துத் தோசைக்கல் காய்ந்ததும் அதில் போட்டேன். சிறிது நேரம் வேகவிட்டுப் பின்னர் எண்ணெய் ஊற்றித் திருப்பிப் போட்டு மறுபடி எண்ணெய் ஊற்றி நன்கு வேக விட்டேன். முதலில் நம்ம ரங்க்ஸ் தான் சாப்பிட்டார். வெண்ணெய் போதும்னு சொல்லிட்டார். சாப்பிட்டதுமே நன்றாகவே இருக்குனு சான்றிதழும் கொடுத்தார். அப்பாடானு இருந்தாலும் பையர் என்ன சொல்லப் போறாரோனு நினைச்சேன். அவரும் தொட்டுக்க என்னனு கேட்டுட்டு வெண்ணெய் மட்டும் போதும்னு சொல்லிட்டார். பின்னர் சூடாகத் தட்டில் போட்டதைச் சாப்பிட்டதும், நன்றாகவே இருக்கு. இதுக்குத் தொட்டுக்கவெல்லாம் வேண்டாம். அப்படியே சாப்பிடலாம் எனச் சான்றிதழும் கொடுத்தார்.
அப்பாடா! உருப்படியாக மாவைத் தீர்த்த நிம்மதி எனக்குக் கிடைத்தது. அதே சமயம் நல்லா இருக்குனு பாராட்டும் கிடைச்சது. இப்படியாகத் தானே அக்கி ரொட்டி சாப்பிடணும்/பண்ணணும் என்னும் என் நீண்ட கால ஆசை பூர்த்தி ஆனது.
பிள்ளையாரப்பா! இதே மாதிரி எல்லாக் கஷ்டங்களையும் நிவர்த்தி பண்ணிடுப்பா!