அப்போ எல்லாம் பள்ளியிலே படிக்கும்போது "A" வகுப்பு மட்டும் ரொம்பவே உசத்தின்னும், மற்ற வகுப்புக்கள் மட்டம்னும் ஒரு எண்ணம் "A" வகுப்புப் பசங்களுக்கு உண்டு. நான் முதலில் ஏ வகுப்பில் இருந்தாலும் 2 வது படிக்கும்போது வகுப்பு மாற்றிக் கொண்டதால் "பி" வகுப்புக்குப் போய் விட்டேன். நான் ஃபெயில் ஆகிவிட்டேன் என்று "பி"யில் மாற்றி விட்டார்கள் என என்னைச் சக நண்பிகள் கேலி செய்து என்னை அழ வைப்பார்கள் எனச் சொல்லுவார்கள். 2-ம் வகுப்பு "ஏ"பிரிவின் ஆசிரியை பேரு சமாதானம் டீச்சர், அவங்க, ரொம்பச் சின்னப் பொண்ணு, ஒண்ணும் விவரம் தெரியலை, அதுக்குள்ளே பள்ளிக்கு வந்துட்டாளேன்னு சொல்லுவாங்களாம். என்றாலும் எனக்கு என்னமோ அந்த டீச்சரைப் பிடிக்காது. மூணாம் வகுப்பிலே இருந்தவர் ஆசிரியர், பெயர் சுந்தர வாத்தியார். அவருக்கு என்னமோ என்னைப் பார்த்தாலே கோபம் வரும். அதுக்கு ஏற்றாப் போல் நானும் அநேகமாய்ப் பள்ளிக்குத் தாமதமாய் வந்து சேருவேன். அப்பாவும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும். பட்டாசுப் பங்குகள் போடுவது போல் அப்பா அப்போது எழுதுவதற்கு உபயோகிக்கப் பட்ட சிலேட்டுக்குச்சியையும் பங்கு போட்டுத் தான் தருவார். முதல் வகுப்பில் படிக்கும்போது அவ்வளவாய் ஒண்ணும் புரியாததால் கொடுக்கிறதை வாங்கி வருவேன்.
அப்போதெல்லாம் சிலேட்டுக் குச்சிகளில், செங்கல் குச்சி, மாக்குச்சி, கலர்குச்சி, கறுப்புக்கல் குச்சி என்று தினுசு தினுசாய் இருக்கும். கொஞ்சம் வசதி படைத்த பெண்கள், பையன்கள் கலர்குச்சியை வைத்துக் கொண்டு கலர் கலராய் எழுத முயல, மற்ற சிலர் கெட்டியான செங்கல் குச்சியையும் மாக்குச்சியையும் வைத்துக் கொண்டு எழுத, நான் கறுப்புக் குச்சியால் எழுதுவேன். எழுத்து என்னமோ வந்தது என்றாலும், கூடவே அழுகையும். கலர், கலராய் எழுதாட்டாலும் குறைந்த பட்சம் செங்கல் குச்சியாலாவது எழுதணும்னு ஆசையா இருக்கும், ஆனால் அப்பாவிடம் அது நடக்காது. ஒரு குச்சியை மூன்று பாகம் ஆக்குவார் அப்பா. ஒரு பாகம் எனக்கு, ஒரு பாகம் அண்ணாவுக்கு, ஒரு பாகம் குழந்தையான என் தம்பிக்கு என. தம்பியின் பாகம் அவரிடம் போக, பெரிய வகுப்பு வந்திருந்த அண்ணாவுக்கோ குச்சியின் உபயோகம் அவ்வளவாய் இல்லாததால் கவலைப்படாமல் பென்சில் எடுத்துக் கொண்டு போக, நான் முழுக்குச்சிக்கு அழுவேன். கடைசியில் எதுவும் நடக்காமல், அதே குச்சியை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வேன் தாமதமாய். இந்தக் குச்சியைத் தான் எடுத்துண்டு போகணும். இல்லாவிட்டால் பள்ளி நாளையில் இருந்து கிடையாது என்பதே அப்பாவின் கடைசி ஆயுதம். அது என்னமோ கணக்கு என்னைப் பயமுறுத்தினாலும் பள்ளிக்குச் செல்வதை நான் விட மாட்டேன். வீட்டை விடப் பள்ளியே எனக்குச் சொர்க்கமாய் இருந்ததோ என்னமோ!!!
இவ்வாறு தாமதமாய் வந்த என்னை ஒருநாள் ஆசிரியர் மிகவும் மிரட்ட நான் பயந்து அலற, அவர் என்னைப் பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குப் போகக் கூடாது எனச் சொல்லி, அங்கேயே வைத்துப் பூட்ட, பயந்த நான் அங்கேயே இயற்கை உபாதையைக் கழித்து விட்டு, மயக்கம் போட்டு விழ, பின் வந்த நாட்களில் மூன்று மாதம் பள்ளிக்குப் போக முடியாமல் ஜூரம் வந்து படுத்தேன். முக்கியப் பாடங்களை என் சிநேகிதியின் நோட்டை வாங்கி அம்மா எழுதி வைப்பார். மூன்று மாதம் கழித்துப் பள்ளிக்குப் போனபோது அந்த ஆசிரியர் பெரியப்பாவின் தலையீட்டால் வேறு வகுப்புக்கு மாற்றப் பட்டிருந்தார், என்றாலும் என்னைக் காணும்போதே அவர் கூப்பிட்டுத் திட்டி அனுப்புவார். இது ஆரம்பப் பள்ளி நாட்களில் ஆசிரியர் மூலம் நான் முதன் முதல் உணர்ந்த ஒரு கசப்பான அனுபவம். என்றாலும் அதே பள்ளியில் நான் தொடர்ந்து படித்தேன், பின்னர் வந்த நாட்களில் குறிப்பிடத் தக்க மதிப்பெண்களும் பெற்றேன். இதற்கு நடுவில் வீட்டில் இருந்த மூன்று மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புத்தகங்களும் படிக்க ஆரம்பித்திருந்தேன். அப்போது வீட்டில் ஆனந்தவிகடன் மட்டும் வாங்குவார்கள். என்றாலும் அப்பாவின் பள்ளி நூலகத்தில் இல்லாத புத்தகங்களே கிடையாது. அங்கிருந்து புத்தகம் எடுத்து வரும் அப்பாவைக் கேட்டு அந்தப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.
அதற்கு முன்னால் நான் படிச்சது, என்றால் ஆனந்தவிகடனில் சித்திரத் தொடராக வந்த "டாக்டர் கீதா" என்ற கதையும், துப்பறியும் சாம்புவும் தான். டாக்டர் கீதா தொடரில் சுபாஷ்சந்திரபோஸின், வீரச் செயல்களைப் பற்றியே அதிகம் இருக்கும்,இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பற்றிய கதை அது. எங்க வீட்டிலும் தாயம் விளையாடினால் கூட சுபாஷின் "டெல்லி சலோ" என்ற வாக்கியத்தை வைத்து விளையாடிச் செங்கோட்டையைப் பிடிக்கும் விளையாட்டே அதிகம் விரும்பி விளையாடப் படும். தாத்தா வழியில் (அம்மாவின் சித்தப்பா, பலமுறை சுதந்திரத்துக்குச் சிறை சென்றார், கடைசிவரை திருமணமும் செய்து கொள்ளவில்லை) அப்பாவும் காந்தியின் பக்தர், ஆகவே வீட்டில் எப்போதும் ராட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். நானும், அண்ணாவும் தக்ளியில் நூல் நூற்றுக் கொடுக்க, அப்பாவோ, அம்மாவோ கைராட்டையில் "சிட்டம்" போட்டு கதர் நூல் சிட்டம் தயாரித்து, கதர்க்கடையில் கொண்டு கொடுப்பார்கள். அந்தச் சிட்டத்தின் விலைக்கு ஏற்றாற் போல் கிடைக்கும் கதர் வேஷ்டி தான் அப்பா கட்டிக் கொள்ளுவார். அப்போது பிரபலமாய் இருந்த அரசியல் தலைவர்களில் அப்பாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களில் திரு வை.சங்கரனும், தோழர் பி.ராமமூர்த்தியும் ஆவார்கள். பார்த்தால் நின்று விசாரிக்கும் அளவுக்குத் தோழமை இருந்தது.
நேரடியாகச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், படிப்பை சுதந்திரப் போராட்டம் காரணமாய் விட்ட அப்பா, பல காங்கிரஸ் மகாநாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். சுதந்திரம் கிடைத்தபின்னர்தான் திருமணம் என்றும் இருந்து, அதன் பின்னரே திருமணமும் செய்து கொண்டார். காந்தி இறந்த தினம் முழுதும் ஒன்றும் சாப்பிடாமல் விரதம் இருப்பார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காந்திக்காக ஒரு முறை மட்டுமே உணவு கொண்டு விரதம் இருந்திருக்கிறார். அவருக்கு வயிற்றில் ஆபரேஷன் ஆகும் வரை இது தொடர்ந்தது. எனக்குத் தெரிந்து என்னோட பதினைந்து வயசு மட்டும் வீட்டில் கைராட்டை சுழன்றிருக்கிறது. என் அம்மாவுக்கு முடியாமல் போய் கைராட்டையில் உட்கார்ந்து நூற்க முடியாத காரணத்தாலும், (நிஜலிங்கப்பா பீரியட்?) காங்கிரஸும் முதல் முறையாக உடைந்ததும், அப்பாவும் கதரை விட்டார். அந்தக் கைராட்டையை விற்கும்போது என்னுடைய அம்மா அழுதது இன்னும் என் நினைவில் மங்காத சித்திரமாய் இருக்கிறது.