இந்த வாரம் திங்கள் அன்று எதிர்பாராவிதமாகக் குலதெய்வம் கோயிலுக்குப் போக நேர்ந்தது. ஒரு பிரார்த்தனை ஒன்று இருந்தது. அதற்காக அம்பிகைக்குச் சூலம் வாங்கிச் சார்த்தி அபிஷேஹம் செய்ய வேண்டி இருந்தது. சூலம் கைக்குக் கிடைத்ததும் உடனே அவசரம் அவசரமாகப் பூசாரி, கோயில் ட்ரஸ்டி ஆகியோருடன் பேசித் திங்களன்று வருவதற்கு ஏற்பாடு செய்து கொண்டோம். அதன் படி திங்கள் காலை ஐந்தரை மணிக்குக் கிளம்பி! (எங்கே வண்டி லேட்) கும்பகோணம் போய் அங்கே கும்பேஸ்வரர் கோயில் தெருவில் மங்களாம்பிகாவில் சகிக்க முடியாத ஒரு டிஃபனைச் சாப்பிட்டு அதை விட மோசமான சிகரி காஃபி (கவனிக்கவும் டிகிரி காஃபி இல்லை! சிகரி காஃபி) குடித்துவிட்டு ஊர் நோக்கிச் சென்றோம். போன முறைகள் எல்லாம் போனப்போ நேரே குலதெய்வம் கோயிலுக்கு மட்டும் போயிட்டுத் திரும்பிட்டோம்.
ஆகவே இம்முறை கருவிலி கோயில்கள், அங்கே காத்தாயி அம்மனுக்கு இப்போ 2,3 வருஷமாகக் கோயிலை விஸ்தரித்துக் கட்டி நன்றாக வழிபாடுகள் நடந்து வருகின்றன. அங்கேயும் போகணும்னு நினைச்சால் நம்மவருக்கு ஏனோ தெரியலை, நேரம் ஆயிடும்னு சொல்லிட்டார். கருவிலி சற்குணேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழி தான் காத்தாயி அம்மன் கோயில். ஆனால் இறங்கலை. நான் மட்டும் தனியா இறங்கி என்ன செய்யறது? நேரே கருவிலி கோயிலுக்குப் போயிட்டோம். அங்கே குருக்கள் அம்மன் சந்நிதியில் அபிஷேஹ ஆராதனைகள் செய்து முடித்து அலங்காரம் செய்து கொண்டிருந்தார். சரியான நேரத்துக்குப் போயிட்டோம். முதலில் ஒரு தரம் சற்குணேஸ்வரரைப் பார்த்தோம். குருக்கள் இல்லை என்பதால் அம்மன் சந்நிதிக்குப் போய் அங்கே தரிசனம் முடித்துக்கொண்டு மறுபடி ஸ்வாமி சந்நிதி வந்து மறுபடி தீபாராதனைகள் பார்த்துட்டுக் கிளம்பினோம். செல்லைக் காரிலேயே சௌகரியமாய் வைச்சுட்டதாலே படங்கள் எடுக்கலை. இஃகி,இஃகி,இஃகி!
அந்தத் தெருவில் திரும்பினால் ஒரே அதிர்ச்சி. பெரிய பெரிய ஜல்லிக்கற்கள் பரப்பித் தண்ணீர் வீட்டு ரோடு போடும் லாரி வந்து அதைச் சீர் செய்து கொண்டிருந்தது. கார் எப்படி உள்ளே போகும்னு கவலை! பின்னர் எப்படியோ ஓரமாகப் பார்த்து டிரைவர் ஓட்டிச் சென்றார். கோயிலுக்குப் போனதும் அங்கே சமீபத்தில் தான் பாலாலயம் கட்டி இருக்காங்கனு கேள்விப் பட்டோம். எங்களுக்கும் அழைப்பு வந்தது. ஆனால் போகலை. அநேகமாக ஆவணி மாதம் கும்பாபிஷேஹம் இருக்கலாம்னு சொன்னாங்க. அங்கே போய் உடனே பூசாரியை அம்மனுக்கு அபிஷேஹம் செய்து சூலத்தைச் சார்த்தச் சொன்னோம். அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து அம்மனுக்குப் புடைவையையும் கட்டிச் சூலத்தையும் சார்த்தினார். ட்ரஸ்டி முன்னிலை வகித்து எல்லாவற்றையும் நடத்திக் கொடுத்தார். பின்னர் தீபாராதனை முடிந்து பிரசாதங்கள் பெற்றுக்கொண்டு ஊருக்குத் திரும்பினோம். திரும்பும்போது கும்பகோணத்தில் ராயாஸ் ரைஸ் அன்ட் ஸ்பைஸசில் சாப்பிட்டோம். சகிக்காத சாப்பாடு அவர் சாப்பிட்டார். அங்கே தயிர்சாதம் என்பது நீர் ஊற்றின பழையதில் ஒரு கரண்டி மோர் விட்டாப்போல் இருக்கும். வேண்டாம்னு சொன்னால் கேட்கலை.
நாங்க அந்த ஓட்டலுக்குச் சாப்பிடப் போன காரணமே கழிவறை அங்கே தான் சுத்தமாக இருக்கும் என்பது தான். ராயாஸ் லாட்ஜிற்குப் பின்னால் இருக்கும் சத்தார் ரெஸ்டாரன்ட் போகலாம்னு ரங்க்ஸ் சொன்னார். ஆனால் அங்கே ஆர்டர் பண்ணிச் சாப்பிடணும். நேரம் ஆயிடும் என்பதால் மாமாங்கக்குளக்கரையில் இருக்கும் இதற்குப் போனோம். ஓட்டுநர் சாப்பாடு சாப்பிட, அவர் தயிர்சாதம் வாங்கிக் கொண்டு அப்படியே வைக்க, நான் ரொம்ப யோசனையுடன் ஸ்வீட் லஸ்ஸி மட்டும் கேட்டேன். அந்த ஓட்டல் ஊழியர் சனா பூரி சாப்பிடுங்க. ஃபில்லிங்காக இருக்கும்னு சொன்னார். சரினு அரை மனதாக அதை ஆர்டர் பண்னினேன். வந்தது. சுடச்சுடச்சுடச்சுட/ பெரிய பூரி. அந்த மாவில் 2 அல்லது 3 பண்ணி இருக்கலாம். சனாவும் முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு ஓட்டல்களில் கொடுக்கும்படி ஒரே க்ரேவியாக இல்லாமல் நிறையக்கொண்டைக்கடலைகள், பெரிய கிண்ணம் என்ன ஒன்று. வெங்காயம் சாலட், எலுமிச்சம்பழம் எல்லாம் கொடுக்கலை. தயிர்ப்பச்சடியும் கொடுக்கலை. வடக்கே இதெல்லாம் கொடுப்பதோடு கூடுதலாக வெஜிடபுள் ஊறுகாயும் கொடுப்பாங்க. அந்தப் பூரியைச் சாப்பிட்டுவிட்டு டிப்ஸோடு சேர்த்து பில்லைக் கொடுத்துட்டுக் கிளம்பினோம்.
வரும் வழியில் தஞ்சை வந்து ஊரை விட்டுக் கிளம்பிச் செல்லப் போகும் ஒண்ணு விட்ட நாத்தனாரை எல் ஐசி காலனியில் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரும்போது ஐந்தரை மணி ஆகிவிட்டது.