எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 04, 2025

பல்லைப் பிடுங்கிட்டாங்க!

 வண்டியை விட்டு இறங்கும்போதே அதிர்ச்சி. அத்தனை படிகள். மருத்துவ சாலை மாடியில் இருந்தது. பையர்  என்னிடம் டாக்டர் சொல்லலையானு கேட்க நான் திரு திரு. இதை அவர் சொன்னதாக நினைவில் இல்லை. வந்தாச்சு, நான் மட்டும் மேலே போய்க் கேட்டுட்டு வரேன்னு பையர் போனார். டாக்டர் அவரிடம் நான் தான் அவங்களை வர வேண்டாம்னு சொல்லி இருந்தேனே எனக் கேட்கப் பையர் அவங்க சரியாப் புரிஞ்சுக்கலைனு சொல்லி இருக்கார். சரி கீழே வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு மருத்துவர் கீழே வந்தார். அங்கிருந்த நரசை ஒரு நாற்காலி கொண்டு வந்து கீழே போடச் சொல்லிட்டு மருத்துவர் என்னை அதில் உட்காரச் சொல்லிட்டுப் பார்த்தார்.. ஒண்ணும் சொல்லலை. பையர் பின் தொடர மேலே சென்றார். மேலே போனதும் ஒரு வாரத்துக்கான மாத்திரைகள் நான்கு விதங்கள் எழுதிட்டுக் கூடவே பத்தாவது க்ராஸில் இருக்கும் ஸ்கேன் சென்டருக்குப் போய் ஒரு ஸ்கேன் எடுக்கச் சொல்லிக் கொண்டு காட்டச் சொல்லி இருக்கார். பையர் கீழே வந்து வண்டி பிடித்துக் கொண்டு என்னையும் மெதுவாக வண்டியில் ஏற்றிக் கொண்டு ஸ்கேன் சென்டருக்குப் போனோம். அங்கே கூட்டமெல்லாம் இல்லை. போன உடனே நகைகளைக் கழட்டிட்டு ஸ்கேனுக்கு வரச் சொல்லிட்டாங்க. ஸ்கேன் எடுத்து முடித்ததும் சிறிது நேரத்தில் ரிப்போர்ட் கொடுக்க மறுபடி டாக்டரிடம் போனோம். நான் வண்டியிலேயே உட்கார்ந்திருக்கப் பையர் மட்டும் மேலே சென்று டாக்டரிடம் காட்டிவிட்டுக் கேட்டுக் கொண்டு வந்தார்.  அவர் சொன்னது விஸ்டம் பல் தான் பிரச்னை அதை எடுப்பது கஷ்டம், முடிஞ்சால் எடுக்கலாம் அல்லது ரூட் கானல் போட்டுக் காப் வைக்கலாம்னு சொல்லி இருக்கார். சரினு மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.

சாயந்;திரமெல்லாம் ஒண்ணுமே இல்லை. ரன்க்ஸுக்கு தோசை கூட வார்த்துக் கொடுத்தேன். நானும் சாப்பிட்டுவிட்டு ஏழேகால் மணிக்கெல்லாம் மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தால் படுக்கை கொள்ளவில்லை. எழுவதும் உடகாருவதும் படுப்பதுமாக அவதிப் பட்டேன். திடீரென வலி அதிகமாகிக் கண்ணுக்கும் கீழிருந்து தாடை வரை வீக்கம் பெரிசாக ஆகி ஒரு ஆப்பிள் பழம் அளவுக்குச் சிவந்து தொங்கியது. உதடெல்லாம் கோணிக்கொண்டு விட்டது. முகப் பக்கவாதமோ எனச் சோதனைகள் செய்து பார்த்தேன். வாயெல்லாம் நேராகவே இருந்தது. எதிர் வீட்டு மாமி சிஎம்சியில் ஸ்டாஃப் நர்சாக இருந்தவ்ர். அவரிடம் காட்டினேன். அவரும் முகப்பக்கவாதமோ, பொன்னுக்கு வீங்கி என்னும் மம்ப்ஸோ இல்லைனு சொல்லிட்டார். அதுக்குள்ளே பையர் வந்து என்ன ஆச்சுனு கேட்டுவிட்டு முகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் விட்டார். மணியோ ஒன்பதுக்கு மேல் ஆகிக் கொண்டிருந்தது. வலி பொறுக்க முடியலை, த்லையைக் கீழேயே போட முடியலை. நான் வழக்கமாய் மருந்துகள் வாங்கும் மெடிகல் ஷாப்காரரான பார்மசிஸ்டை அழைத்து நிலைமையைச் சொன்னேன். அவர் உடனே நான் வலி குறைந்து ;தூங்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வரேன், உங்க பையரைக் கீழே செக்யூரிடி இருக்கும்  இடத்துக்கு வரச் சொல்லுங்கனு சொன்னார். பையர் கிளம்புவதற்குள்ளாக அவரே வந்துட்டு என்னையும் பார்த்துட்டு மாத்திரைகளைக் கொடுத்துட்டு பல் மருத்துவர் கொடுத்திருக்கும் மாத்திரைகளில் சிலவற்றைச் சாப்பிடாதே என்றார்.

அவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தேன், அரைமணியில் வலி குறைய ஆரம்பித்தது. ஆனால் வீக்கம் வடியலை. என்றாலும் தூங்கினேன்னு தான் சொல்லணும் காலையில் எல்லோரும் பார்த்துட்டு வேறே மருத்துவர் கிட்டேப் போகச் சொல்ல எங்க வீட்டில் உதவிகள் செய்யும் பெண் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகேயே ஒரு மருத்துவமனையைச் சொன்னார். சரினு சாப்பாடு வந்ததும் ரங்க்ஸைச் சாப்பிடச் சொல்லிட்டு நாங்க மருத்துவமனை போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் பார்க்க அழைக்க, அவர் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் என்னையும் மாற்றி மாற்றிப் பல்வேறு கோணங்களில் பார்த்துவிட்டு என்ன நடந்ததுனு கேட்டார். நான் ஏற்கெனவே ஒரு பல் உடைந்திருந்ததையும் உடைந்த பாகத்தை ஒரு மருத்துவர் எடுத்துட்டார்னும் சொன்னார். உடனே இந்த மருத்துவர் அதில் தான் பிரச்னையே. அந்தப் பல் ஏற்கெனவே இன்ஃபெக்ஷன் ஆகி உடைஞ்சிருக்கு. ஆகவே மொத்தப் பல்லையும் எடுத்திருக்கணும் அப்படி எடுக்காததால் பக்கத்தில் உள்ள பல்லும்/பற்களும் பாதிப்படைஞ்சிருக்குனு சொல்லிட்டு விஸ்டம் பல்லைத் தவிர்த்து மற்ற இரு பற்களை உடனே எடுக்கணும்னு சொல்லிட்டு அவரே செவ்வாய்க்கிழமை சாயங்காலமா வாங்கனு சொல்லிட்டார். எனக்குச் செவ்வாய்க்கிழமை ஒத்துக்கொள்ளாதே என்னும் கவலையில் நான் புதனன்று வரேனேனு சொன்னதைக் காதிலேயே போட்டுக்கலை. செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஐந்தரைக்கு வந்துடுங்கனு சொல்லிட்டார்.

வலி வீக்கம் குறைய இந்தப் புது மருத்துவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு வந்தேன்,. வலி குறைந்தாலும் வீக்கம் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது. செவ்வாயன்று காலையிலிருந்தே திக் திக், திக் தான். மதியம் நெருங்க, நெருங்கக் கவலையும் பயமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்னால் பல்லைப் பிடுங்கிக் கொண்டிருக்கேன் என்றாலும் அவை எல்லாம் ஆடிய பற்கள். இதுவோ ஸ்திரமாக கெட்டியாக ஊன்றி இருக்கு. வலி எப்படி இருக்குமோனு கவலை. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் அழைத்துப் பல் பிடுங்கும் ஆபரேஷன் தியேட்டரில் உட்கார வைத்து விட்டு மறுபடி பற்களை ஆய்வு செய்தார்,. விஸ்டம் பல்லுக்கு முந்தைய பற்களையே பிடுங்கணும்னு மறுபடி காட்டினார். பின்னர் என்னையும் சம்மதம் கேட்டுக் கொண்டு ரூட் கானல் வேண்டாம் என நான் உறுதியாகச் சொன்னதும் ஈறுகள் மரத்துப் போக ஊசியைச் செலுத்தினார். அந்த வீக்கம் இருக்கும் ஈறிலேயே ஊசியைச் செலுத்தியதால் அப்போவே வலி தாங்கலை. டாக்டர் ஒரு மாதிரி பேசி என்னைச் சமாதானம் செய்து கொண்டு ஊசியைப்போட்டுவிட்டுச் சற்று நேரம் உட்கார்ந்திருக்கும்படி சொல்லிப் போனார்.

இதற்கு நடுவில் நர்ஸ் வந்து என்னென்ன மாத்திரைகள் சாப்பிடுகிறேன் எனக் கேட்க நினைவிலிருந்தவற்றைச் சொன்னேன். மருத்துவர் முக்கியமாய் ஆர்த்தோ பிரச்னைக்கு என்ன சாப்பிடறேன்னு சொல்லச் சொன்னார். நினைவில் இருந்தவற்றைச் சொன்னேன். பின்னர் பையர் வீட்டில் ரங்க்ஸைக் கூப்பிட்டு என்னோட மருந்துகள் லிஸ்டை அனுப்பச் சொல்ல அவரும் மருமகள் உதவியோடு அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த மருத்துவர் முன்னாடியே பார்த்திருக்கணும் என்றார். யாரும் என்னிடம் கேட்கலை என்றேன். இதுக்குள்ளே மரத்துப் போயிருக்கும்னு பல்லைப் பிடுங்க ஆயத்தமானார். என்ன செய்யப் போறோம் என்பதை மறுபடி ஒரு தரம் எனக்குச் சொல்லிட்டுப் பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். அதான் தெரியும். அடுத்த நிமிடம் நான் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியோ ஒரு பல்லைப் பிடுங்கிட்டார். என்றாலும் திரும்ப ஒரு தரம் ஊசி செலுத்தப்பட்டிருந்தது, இப்போது மூன்றாவது முறையாக மறுபடி கதறக் கதற ஊசி செலுத்திட்டு இன்னொரு பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். லேசில் வருவேனா என்றது அது. ஆழமாக வேரூன்றி இருந்திருக்கு. நான் கத்தவும் பிடுங்குவதை நிறுத்திட்டு இதோடு விட்டுடவா? இன்னொரு நாள் பிடுங்கலாமா என என்னிடம் கேட்டார். வேண்டாம், வேண்டாம் இன்னிக்கே ஒரு வழியா முடிச்சுடுங்கனு சொல்லிட்டு அடுத்த கத்தலுக்கு ஆயத்தமானேன். கதறக் கதறப் பல்லைப் பிடுங்கிட்டார். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் எடுக்க முடிஞ்சது. பல்லில் சீக்கோர்த்துக் கொண்டு வலியைக் கொடுத்த பாகத்தைக் காட்டினார். மற்றபடி பல் நன்றாகவே இருந்திருக்கு. முதலில் போன மருத்துவர் முறையாகச் செய்திருந்தால் இத்தனை கஷ்டம் இல்லை.

பல்லை ஒரு மாதிரி பிடுங்கிட்டாலும் அடுத்தடுத்து நான்கைந்து முறை மயக்க ஊசி போட்டதால் என்னால் எழுந்திருக்க முடியலை. அங்கேயே அப்படியே படுத்துட்டேன். மருத்துவரும் அரை மணி படுத்திருக்கட்டும். பின்னர் அழைத்துப் போங்க. நாளை வரை சூடு, காரம் இல்லாமல் திரவ உணவு தான். ஜூஸ், இளநீர் நிறையக் கொடுங்கனு சொல்லிட்டு அடுத்த பேஷன்டைப் பார்க்கப் போனார். பின்னர் கொஞ்சம் மயக்கம் சரியானதும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். இன்னிக்குத் தான் வலி, வீக்கம் இல்லாமல் சாப்பிட முடிஞ்சது. பேசவும் முடிஞ்சது. 

Wednesday, April 02, 2025

பல்லைப் பிடுங்கிய கதை!

 குட்டிக்குஞ்சுலு வந்து ஒரு வாரம் ஆச்சு,. இதோ வெள்ளிக்கிழமை கிளம்பிடும். பெரிய மாதக் காலண்டரில் அது இங்கே இருந்து கிளம்பும் நாளையும், சென்னையிலிருந்து கிளம்பும் நாளையும் கொட்டை எழுத்தில் எழுதி வைச்சிருக்கு. இந்த முறை வண்டி இல்லாததால் அதுக்கு அவ அப்பாவோட எங்கேயும் போக முடியலை. வண்டியை நம்ம ரங்க்ஸ் வித்துட்டார். அது வாங்கி 20 வருஷத்துக்கும் மேல் ஆச்சு. பையர் எப்போவானும் வரச்சே எடுக்கறது தான். ஆனால் குஞ்சுலுவுக்கு அதில் போவது என்றால் சாப்பாடு கூட வேண்டாம். இந்த முறை ஏமாற்றமாகிப் போச்சு அதுக்கு. பள்ளியில் சேர்ந்த முதல் வாரமே ஸ்டார் ஆஃப் தெ வீக் விருது வாங்கிக் கொண்டு வந்தது. ரொம்ப ஓஹோனு படிக்காட்டியும் படிக்கிறது. ஆனால் வீட்டுக்கு வந்ததும் பள்ளிப் புத்தகங்களையே தொடமாட்டேன் என்கிறது. அதான் ஸ்கூலில் படிச்சுட்டேனே என்கிறது. அவங்க பாட்டியைப் போல இருக்குமோ?இஃகி,இஃகி, ஆனால் பாட்டி வீட்டுக்கு வந்ததும் ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கலைமகள்னு படிப்பா. இது அப்படி எல்லாம்படிக்கிறதே இல்லை. எங்க அப்பா ஸ்கூலுக்கே வந்து எச்.எம்மிடம் என்னைப் பற்றிப் புகார் சொல்லி அடிக்கச் சொல்லிட்டுப் போவார். அவங்களும் அடிக்கையில் எல்லாம் கல்கி, குமுதம் மட்டும் படிக்கத் தெரியுமானு அடிப்பாங்க. இத்தனைக்கும் முதல் 3 ராங்கிற்குள் தான் சுத்துவேன்.

ஆஹா, ஓஹோ நு எல்லாம்                                                                                                                        விருச்சிக ராசிக்குப் போடறாங்க. ஆனால் எனக்கென்னமோ ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டே இருக்கு. காலில் கல்லைப் போட்டுக் கொண்ட பின்னர் சில நாட்கள் அப்படியே போயிடும்னு நினைச்சால் திடீர்னு ரங்க்ஸுக்குப் பல்வலினு போன மருத்துவர் கிட்டே என்னோட பல்லையும் காட்ட, அவர் ஒரு பல் உடைஞ்சிருக்குனு சொல்லி அதை எடுத்துட்டேன் என்றார். சரி,இத்தோடு விடும்னு நினைச்சால் வெள்ளிக்கிழமை அன்றிலிருந்து விடாமல் ப்ல் வலி. இது என்னடா சோதனைனு நினைச்சேன். ஏற்கெனவே ரங்க்ஸுக்குப் பல்வலி வந்தால் போட்டுக்கச் சொல்லி மருத்துவர் கொடுத்த மாத்திரைகள் இருக்க அதைப் போட்டுக் கொண்டு படுத்தேன். தூக்கமா? நல்ல நாளிலேயே வராது. உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காதுனு சமாதானம் செய்துக்கணும். இன்னிக்குத் தூக்கம் வராததோடு வலப்பக்கம் கன்னம் வீங்கி உதடுகள் எல்லாம் கோணிக்கொண்டு ஒரு சின்ன ஆப்பிள் அளவுக்குக் கன்னம் வீங்கித் தொங்க ஆரம்பிச்சது. பையர் பயந்து போய் விட்டார்.

மருத்துவர்கள் யாருமே அப்போது இல்லை. நான் போய்க் கொண்டிருந்த மருத்துவரை அழைத்தால் அவர் நாளைக்குப் பார்த்துக்கலாம். மெடிகல் கடையில் சொல்லி வலியைக் குறைக்கும் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்குங்கனு சொல்லிட்டார். வேறே வழி? பையர் போய் வாங்கி வர அதைப் போட்டுக் கொண்டு தூங்கினேன். காலை எழுந்ததும் மருத்துவரிடம் பேசி எத்தனை மணிக்கு வரணும்னு கேட்டால் அவர் வராதீங்க. உங்களுக்கு இங்கெல்லாம் வருவது கஷ்டம் என்கிறார். தனியாய் வரணும்னு சொல்றார் போலனு நினைச்சுப் பையர் வந்திருப்பதால் அவரோடு வரேன்னு சொல்லிட்டேன். ஏற்கெனவே 12 மணிக்கு மேல் தான் இருப்பேன்னு சொல்லி இருப்பதால் சாப்பாடு வந்தது சொல்லிட்டுக் கிளம்பினேன். ரங்க்ஸுக்கு ஆயிரம் ஜாக்கிரதை சொல்லி, அதிகம் வீட்டுக்குள்ளேயே அலைய வேண்டாம்னு சொல்லிப் படுக்கச் சொல்லிட்டுக் கிளம்பினோம். ஆட்டோ பெரிய ஆட்டோ வந்தது, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஏற முடியலை.  அந்த ஆட்டோ டிரைவர் ஒரு சின்ன ஸ்டூல் வைச்சிருந்ததால் அதை எடுத்துப் போட்டார், ஒரு மாதிரி ஏறிட்டேன்

ஒரு காலை வைச்சு ஏறிட்டேன். இன்னொரு காலை எடுக்கும் முன்னர் அதுவும் தொந்திரவு கொடுக்கும் இடக்கால். ஸ்டூல் ஆட ஆரம்பிச்சுடுத்து. உடனேயே கத்த ஆரம்பிக்கப் பையர் ஒரு பக்கமும் ஆட்டோ ஓட்டுநர் இன்னொரு பக்கமும் பிடித்துக்கொண்டு உள்ளே தள்ளினார்கள். ஒரு மாதிரியா உட்கார்ந்துட்டேன். தில்லை நகர் நோக்கி ஆட்டோ சென்றது. மருத்துவமனையின் விலாசத்தை வைத்துக் கண்டுபிடித்துக் கொண்டு கீழே இறங்கலாம்னு பார்த்தால் ஒரே அதிர்ச்சி. மருத்துவர், மருத்துவமனை எல்லாம் சரி. ஆனால் என்னால் அங்கே போக முடியாதே! என்ன செய்யப் போறேன்?