எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 11, 2025

வாழ்க நீ எம்மான்!

 



உன்னை என் திருவிழியால் காணுகின்றேன்

ஒளி பெறுகின்றேன் இருளை ஒதுக்குகின்றேன்

இன்னலெல்லாம் தவிர்க்கின்றேன் களி கொள்கின்றேன்

எரிவில்லை குளிர்கின்றேன் உள்ளும் புறமும்

அன்புள்ளம் பூணுகின்றேன் அதுவும் முற்றி

ஆகாயம் அளாவுமொரு காதல் கொண்டேன்

இன்பமெனும் பால் நுரையே குளிர் விளக்கே

எனைஇ இழந்தேன் உனதெxஇலில் கலந்ததாலே

Sunday, September 07, 2025

பெண்களின் மனோபாவம் மாறுமா?

 கணவர் இறந்த பின்னரும் பெண்களால் தாக்குப் பிடிக்க முடிகிறது என்றே எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் எனக்கு என்னமோ இன்னமும் மனதில் எதுவும் ஒட்டவில்லை. ஏதோ போல் இருக்கு. எந்தச் சின்ன விஷயமானாலும் ரங்க்ஸிடம் சொல்லியே பழக்கம் என்பதால் சட்டென மனமும், உடலும் அவரைத் தேடி ஓடும். பின்னர் சாட்டை அடி போல் மனதில் அடி விழுந்ததும் யதார்த்த நிலை புரியும். சமாளித்துக் கொள்வேன். அதிலும் இரவுகளில் அவர் பக்கத்தில் படுத்திருக்கும் நினைப்பில் பேசிவிடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி வரும். 12 மணி வரை தூக்கம் வராது. பின்னர் ஏதோ தூங்குவேன். எப்படி ஆனாலும் 3 மணி அல்லது மூன்றரை மணிக்கு விழிப்பு வந்துடும். இங்கே அடுக்களையில் போய் எதுவும் செய்ய முடியாது என்பதால் அப்படியே படுத்திருப்பேன். ஐந்து மணிக்குப் பிள்ளை, மருமகள் இறங்கி வரும்போது அவங்களுக்குத் தொந்திரவாய் இருக்கக் கூடாது எனப் படுத்தே இருப்பேன். சுமார் ஐந்தே முக்கால் அளவில் மருமகள் குழந்தைக்குக் காலை உணவு, மதிய உணவு தயாரித்து முடித்துவிட்டுக் குழந்தையைத் தயார் செய்ய மாடிக்குப் போவாள். 

அப்போ எழுந்திருந்து ஸ்வாமிக்கு விளக்கேற்றி (ஸ்வாமி விளக்கேற்றியதும் சட்டெனக்குங்குமம் வைத்துக் கொள்ளக் கை நெற்றிப் பொட்டிற்குப் போகும். கஷ்டத்துடன் நிறுத்திப்பேன்.)  பின்னர் காஃபி போட்டுப்பேன். சில நாட்கள் முதல்நாள் டிகாக்ஷனே இருக்கும். ஊரில் இருந்தவரை மாமா இருந்தால் குடிக்க மாட்டார் என்பதால் புதிதாகப் போடுவேன். இங்கே அப்படி எல்லாம் பார்ப்பதில்லை. ஏதோ குடித்து வைப்பேன் .அங்கே ஸ்ரீரங்கத்தில் இருந்தவரைக்கும் காலை எழுந்ததும் வழக்கம்போல் வாசல் தெளிக்கவெனப் போகவே கஷ்டமாக இருக்கும். எதிர் வீடுகளிலெல்லாம் அந்த நேரம் வாசல் தெளிக்க வந்தால் நம்மைப் பார்த்ததும் என்ன நினைச்சுக்குவாங்களோ என்று தயக்கமாக இருக்கும். ஆனால் என்னைப் பத்து நாட்களும் பார்க்கவே பார்க்காத ஒருத்தர் எந்தவிதமான மன வேறுபாடும் இல்லாமல் வந்து பார்த்துவிட்டு வெற்றிலை, பாக்கெல்லாம் வாங்கிக் கொண்டு போனார். இன்னொருத்தரோ மாமா இறந்த அன்றிலிருந்து நான் தோஹா கிளம்பும்வரை வெளியேயே வரலை.  இன்னும் சிலர் வந்துட்டுப் பார்த்துட்டுப் பின்னர் அவங்க அவங்க வீட்டுக்குள்ளேயே இருந்தனர்.அபார்ட்மென்டில் இது ஒரு பிரச்னை. தனி வீடெனில் தெரியாது. ஏனெனில் இங்கெல்லாம் இன்னமும் சாஸ்திர, சம்பிரதாயம் பார்ப்பவர்களும் கடைப்பிடிப்பவர்களும் இருக்காங்களே!

 நான் வெளியே வந்தால் அவங்க கண்ணில் பட்டு விடுவோமோ எனக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டே வெளியே வருவேன். வெளியே போக வேண்டிய வேலைகள் இருந்தனவே. வங்கிக்கு, மருத்துவரைப்பார்க்கவெனப் போக வேண்டி இருந்தது. ஆனால் நெருங்கிய சொந்தங்கள் எந்தவிதமான மன வேறுபாடும் காட்டாமல் சகஜமாக வந்தனர். இதில் முக்கியமாக வெங்கட்டின் மனைவி, இன்னொரு இளம் சிநேகிதி, பெண்களூரிலிருந்து வந்தவர் என வந்தார்கள். அபார்ட்மென்டிலேயே சிலர் சகஜமாக வந்து நான் தனியாக இருப்பதால் ஏதேனும் உதவி வேண்டுமா எனக் கேட்டுவிட்டுப் போனார்கள். சிலர் உட்கார்ந்து பேசி ஆறுதலும் கொடுத்தனர். என்றாலும் ஒரு சிலர் இன்னமும் இந்த வேறுபாடுகளைப் பார்ப்பது, அதுவும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் பார்ப்பது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது.

இதுவும் கடந்து போகும் என நானும் கடந்து வந்து விட்டேன். வங்கிகளுக்குச் செல்வதெனில் மதியம் பனிரண்டுக்குக் கிளம்பிப் போய் மூன்றுக்குள் திரும்புமாறு பார்த்துக் கொண்டேன். அந்த நேரம் வீட்டில் இருக்கும் பெண்களின் ஓய்வு நேரமாக இருக்குமே. மருத்துவரைப் பார்க்க இரவு எட்டு மணிக்குப் போவேன். இப்படியே ஜூன், ஜூலை மாதங்களைக் கடத்திவிட்டு ஆகஸ்டிலும் பதினைந்து தேதி வரை ஓட்டிவிட்டு இங்கே வந்தாச்சு. இங்கே வந்த மறுநாளே சுப்புத்தாத்தா பேசினார் என்றாலும் வருவதாகச் சொல்லலை. அவர் வயதுக்கும் உடம்புக்கும் அவரை வரச் சொல்வதெல்லாம் சரியாய் இருக்காது என்பதால் நானும் அழைக்கவில்லை. தக்குடு தொடர்பில் இருந்தார். ஒரு நாள் கூப்பிட்டுப்பேசினார். என்னை அவங்க வீட்டுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி இருக்கார். அதன் கஷ்டம் இன்னும் அவருக்குப் புரியலை. வண்டியில் ஏறுவதே கஷ்டமாக இருக்கு. நடப்பது இன்னொரு கஷ்டம். இங்கெல்லாம் எங்கே போனாலும் டைல்ஸ் வழவழப்பாக இருப்பதால் சறுக்குகிறது. அதிலும் மருத்துவமனையில் எனக்கு நடக்கவே பயமாக இருந்தது/இருக்கு. நல்லவேளையாக வீல் சேர் கொண்டு வந்து விடுகின்றனர். இப்படியே போய் மருத்துவப் பரிசோதனை, கைரேகைகள் பரிசோதனை எல்லாமும் முடிச்சுக் கத்தார் ஐடியும் வாங்கிக் கொண்டு மருத்துவக் கார்டும் வாங்கி ஆச்சு. எவ்வளவு நாட்கள் இங்கே இருப்பேனு எல்லோரும் கேட்கிறாங்க. எனக்கே தெரியாது. இங்கே இன்னும் மனமே ஒட்டலை. இருப்பதும் தனித்தனி வீடுகள். யாரும் யாரையும் வந்தோ போயோ பார்ப்பதில்லை. யார் இருக்காங்கனு கூடத் தெரியாது.

நாட்கள் மட்டும் போய்க் கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் எதுவும் எடுத்துவரலை. வெங்கட் மனைவி கின்டிலில் படிக்கச் சொல்லி இருக்கார். முயற்சி பண்ணணும். இப்போதைக்கு முகநூலில் தான் அதிகம் படித்து வருகிறேன். சில சமயம் திரும்பிப் போவோமா எனச் சந்தேகம் வருது. எப்படியும் பையர் மாமாவின் ஆறாம் மாசத்திதிகளை ஸ்ரீரங்கத்தில் போய்ச்செய்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கார். அப்போக் கூட்டிப் போகச் சொன்னால் கஷ்டம் என்கிறார். என்னமோ பார்ப்போம். கடவுள் விட்ட வழி.

Sunday, August 31, 2025

காலம் நகரவில்லை! நிற்கிறது!

 3BHK பார்த்த பின்னர் மேலும் சில படங்கள் பார்க்க நேர்ந்தது. மாரீசனும் அதில் ஒன்று. வடிவேலு நடிப்பும் அந்த ஃபகத் ஃபாசில் நடிப்பும் ஒருவருக்கொருவர் போட்டியாக அமைந்திருந்தது. இந்த நடிகர் நடித்த படத்தை இப்போத் தான் முதல் முதல் பார்த்தேன். பின்னர் ட்ரென்டிங் என்றொரு படம். நல்ல படிப்பினைக் கொடுக்கும் படம். ஆனால் எத்தனை பேர் படிப்பினையாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. அடுத்து முந்தாநாள் பிள்ளையும் மருமகளும் குழந்தைக்குப் பள்ளீச் சீருடை எடுக்கப் போயிருந்தப்போ மருமகள் ரொம்பவே சிபாரிசு பண்ணிப் போட்டு விட்டுப் பார்க்கச் சொன்ன பட. தலைவன், தலைவி. வெகு சாதாரண மனிதர்களை வைத்து எடுத்த படம். நடிகர்களெல்லாம் யாரென்றே தெரியலை. படம் எடுத்தவர், கதை வசனகர்த்தா,எல்லோருமே தெரியாதவங்க. ஆனால் படம் இந்தக் காலத்துத் தம்பதிகள் பார்க்க வேண்டியதொரு படம்.

ஒற்றுமையாய்க் குடும்பம் நடத்தும் கணவன், மனைவி வாழ்க்கையில் இரு பக்கத்து நெருங்கிய சொந்தங்களும் பெண் வீட்டில் பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தவர் எனில் பையர் வீட்டில் அவருடைய சகோதர், பெற்றோர், குறிப்பாகத் தாய், போதனையில் மயங்கித் தவறு செய்யும் தாய், பின்னர் திருந்துவதும் நல்லா இருந்தது.  மற்றவர்களின் போதனையில் பிரியும் தம்பதிகள் விவாகரத்து வரை போய்விடப் பின்னர் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதைச் சொல்லும் படம். இதில் இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் அன்பும், பாசமும், புரிதலும் இருந்ததால் தாங்கள் செய்வது தவறு எனப் புரிகிறது. ஈகோ இருந்தாலும் நிலைமைக்கு ஏற்ப விட்டுக் கொடுத்துப் போகும் அனுசரிப்பும் இருந்தது. ஆகவே கடைசியில் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். இந்தக்காலப் படித்த, படிக்காத இளைஞர்களுக்குத் தேவையான படிப்பினையைச் சொல்லும் படம். அதில் இந்த யோகி பாபு எதற்காக, ஏன் வந்தார் என்றே புரியலை. அவரைப் போட்டால் படம் ஓடும் என்னும் மரபு ஏதானும் இருக்கும்போல.  தேவையே இல்லாத கதாபாத்திரம்.

கண்ணில் கட்டி பெரிதாக வலது கண்ணின் மேல் இமையில் வந்திருக்கிறதால் வியாழனன்று இந்த ஊர் மருத்துவமனைக்குப் போயிருந்தோம். என்னால் காரிலேயே ஏற முடியலை என்பதால் கொஞ்சம் சிரமப்படத் தான் வேண்டி இருக்கு. ஆனால் மருத்துவமனையில் என்னைப் பார்த்ததுமே வீல் சேர் கொண்டு வந்துட்டாங்க. மருத்துவர் கூட அதில் உட்கார்ந்த வண்ணமே நான் இருக்க என்னைப் பரிசோதித்தார். கண் மருத்துவர் இல்லை. மருத்துவமனை பெரிதாக உள்ளது என்பதோடு முதல் இடத்தில் இருக்கும் பத்து மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாம். ஆஸ்டர் என்னும் பெயர். இங்கு வந்ததும் செய்ய வேண்டிய நடைமுறைகளை வந்த இரண்டு நாட்களிலேயே செய்து முடித்து விட்டதால் மருத்துவமனைப் பிரவேசம் எளிதாக இருந்தது. மருத்துவர் உள்ளுக்குச் சாப்பிட மாத்திரைகளும், கண்ணில் போட்டுக்கொள்ள மருந்தும் கொடுத்திருக்கார். கட்டி பழுத்திருக்கே தவிர உடையவில்லை. அப்படியே அமுங்குமோ என்னமோ தெரியவில்லை. கொஞ்சம் பார்வை மங்கலாகவே இருக்கு. 

இன்னிக்குக் குழந்தை பள்ளிக்குப் போய்விட்டதால் வீடே வெறிச். விளையாட்டு அட்டைகளை வைத்துக் கொண்டு ஸ்னேக் அன்ட் லாடரும், லூடோவும் விளையாடும். அது தான் ஜெயிக்கணும் என்று சொல்லும். லூடோ விளையாட்டில் அதன் காயை நான் வெட்டும் நிலை வந்தப்போ அதுக்குப் புரியலை. அப்புறமாச் சொன்னேன். ஒத்துக் கொண்டது என்றாலும் அதுவே பழம் எடுக்கும்படி விளையாடினேன். இதைத் தவிர்த்து பில்டிங் செட்டை வைத்துக் கொண்டு தானே பேசிக் கொண்டு தானே விளையாடிக்கும். தினம் தினம் தோசை தான் வேண்டும். அதுவும் மிளகாய்ப் பொடியோடு. தாத்தாவுக்கும் அதான் பிடிக்கும். அதோடு உடலில் ரத்தம் எடுக்கறது எனில் தாத்தா மாதிரி பேத்திக்கும் நரம்பே கிடைப்பதில்லை. பள்ளிக்குப் போவதற்கு அழுவதில்லை. தானே கிளம்பி விடுகிறது. இந்த வருஷத்தில் இருந்து அவங்க அம்மாவே கொண்டு விடுவதாகச் சொன்னார்கள். பள்ளிப் பேருந்து கட்டணம் மிக அதிகம் என்பதால் இந்த ஏற்பாடு. இன்னிக்குக் காலம்பரவே எழுந்து குளித்து விட்டதால்நேரம் போகவே இல்லை. அதான் கணினியில் உட்கார்ந்து ஏதேனும் செய்யலாம்னு உட்கார்ந்தேன். இந்தியாவில் இப்போது பனிரண்டரை மணி எனக் கணினி காட்டுகிறது. இங்கே பத்து மணி ஐந்து நிமிடம். பொழுது நகரவே இல்லை. மெதுவாகப் போகிறது. அங்கே எனில் நாள் பறந்து விடும்.

Sunday, August 24, 2025

3BHK விமரிசனம்.

 சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு இன்னிக்கு மருமகளின் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாய் ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன் 3BHK படத்தின் பெயர். சரத்குமார், தேவயானி நடிச்சது. கூடவே தெரிந்த முகம் சித்தார்த் மட்டும் தான். மற்றப் பெண்கள் யாரெனத் தெரியலை. மிகையில்லாத மேக்கப், நடுத்தர வர்க்கத்தை எடுத்துக்காட்டும் வீடு, குழந்தைகளின் பழக்கங்கள், அண்ணன், தங்கை செல்லச் சண்டைகள், அழகான காதலை மட்டுமே வெளிப்படுத்தும் காதல் காட்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய். இயல்பான வசனங்கள் மிகையற்ற நடிப்பு.ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டுமே தரம். அதிலும் ஒலி குறைச்சு வைச்சுக் கேட்டாலும் வசனங்கள் புரிந்தன. யோகிபாபுவை ஓர் அதிர்ஷ்டமான சின்னமாகப் பார்க்கிறாங்க போல. தேவை;யில்லாத அவரோட தலையீடு. என்றாலும் அதிகம் வந்து போரடிக்கலை. கடைசியில் தான் விரும்பிய பாடத்தைப் படிச்சு வேலையும் தேடிக் கொண்டு எடுத்த காரியத்தில் வெற்றியும் அடையும் சித்தார்த். தந்தை, மகன் பாசத்தை இயல்பான நடிப்பால் சரத்குமாரும், சித்தார்த்தும் வெளிப்படுத்தி இருக்காங்க. வீட்டிலுள்ளவர்களுடைய மனக்குறையைக் களைந்து எப்போதும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பெண்ணாக வரும் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்,சித்தார்த்தின் வகுப்புத் தோழியும் காதலியும் ஆன ஐஷுவாக வரும் பெண் எல்லோருமே கச்சிதம்.


தேவயானிக்கு அதிகம் வேலை இல்லை என்றாலும் பணக்கார வீட்டுப் பென்ணோடு மகனின் திருமணம் நின்று விட்டதுக்காக சரத்குமார் மகனை ஒதுக்கி வைக்கும் காட்சியில் தன் தாய் மனதின் மகன் அவனுக்குப் பிடித்த பெண்ணைத் தான் திருமணம் செய்துக்கணும் என்னும் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்வதோடு சரத்குமாரின் கோபம் அர்த்தமற்றது, பணக்காரப் பெண்ணோடு வரும் வீடு கிடைக்காமல் போனதால் வந்த கோபம் என்று சொல்கையில் அவரின் இயல்பான நடிப்பு கை கொடுக்கிறது.  மொத்தத்தில் ஆரவாரமில்லாத அமைதியான கருத்துள்ள குடும்பப் படம். குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக் கூடியதொரு படம். தமிழில் இப்படி எல்லாமும் படம் எடுப்பாங்க என்பதை எனக்குப் புரிய வைத்த படம். நடுத்தர மக்களின் கனவான சொந்த வீடு, அதிலும் 3BHK கடைசியில் எப்படிக் கிடைக்கிறது என்பதைச் சொல்லும் படம். தியேட்டர்களில் வருதானு வந்திருக்கானு தெரியாது. அமேசானில் பார்த்தேனோனு நினைக்கிறேன். அமேசான் கணக்கு இருந்தால் முடிஞ்சால் பாருங்க. 

Thursday, August 21, 2025

மழை ஓய்ந்தும் தூவானம்

 கீதா கல்யாணமே வைபோகமே! என்னோட கல்யாணம் நடந்த விதத்தைப் பற்றிய சில பதிவுகளைச் சேர்த்து ஒரு புத்தகமாகத் திரு கிரியேட்டிவ் காமன்ஸ் ஸ்ரீநிவாசன் மூலமாகப் போட்டேன். அதிலேயே காப்பிரைட்டில் இந்தப்புத்தகத்தை மறுபதிப்புச் செய்யவும் யாவரும் பயன்படுத்தும் முறையில் ஆன உரிமைக்கும் எழுதிக் கொடுத்திருக்கேன். இப்போது திடீரென ஓர் எண்ணம். இந்தப் புத்தகத்தை மறுபதிப்புச் செய்யலாமா என்பதே அது! செய்தால் கிண்டில் மூலம் வெளியிட முடியுமா? பிரச்னை வருமா?மற்றவர்கள் நம் புத்தகத்தை மறுபதிப்புச் செய்யும்போது நாமே அதைச் செய்தால் என்ன  என்னும் எண்ணம் தோன்றியது. நன்கு விபரம் தெரிஞ்சவங்க இதைப் பற்றிச் சொல்லவும்/ இல்லைனா என்னோட "எண்ணங்கள்" பக்கத்திலேயே மீள் பதிவு செய்துட்டுப் போயிட்டே இருக்கலாம். என்ன சொல்றீங்க?


என்னோட பி எஸ் என் எல் நம்பர் லாக் ஆகிப் பின்னர் நம்ம ஸ்ரீராமின் ஆஃபீசர் அத்தை மூலம் அதை மீட்டெடுத்தேன். ஆனாலும் அதில் பயன்படுத்த முடியாதவாறு உள்ளதால் இன்டெர்நேஷனல் ரோமிங்கிற்கான ஐ என் ஆர் போட்டாக வேண்டும். ஸ்ரீராம் போட்டுத் தரத் தயார் என்றாலும் அதுக்கான சிம்மை இங்கே இருந்து நான் எப்படிக் கையாள்வது? ஆகவே தொலைபேசி இருந்தும் இல்லாதது போல், ஒரு பலனும் இல்லை. கிளம்பும் முன்னர் நடந்த சில அமர்க்களங்களால் உடல் நிலை மோசமாகப்பாதிக்கப்பட்டதில் ஒண்ணும் புரியலை. மருத்துவர், எக்ஸ்ரே, ஸ்கான் என்றே கிளம்புவதற்கு முதல் நாள் வரை போய் விட்டது. இத்தனைக்கும் காரணமே பிஎஸ் என் எல்லுக்குப் போனது தான். ஆனால் வேலையும் ஆகவில்லை. உடம்பும் பாதிப்படைந்து சுத்தமாய் இந்த இன்டெர் நேஷனல் ரோமிங் பற்றியே மறந்து விட்டோம். ஜியோவில் போடலாம் எனில் அது யானை குதிரையை விடவும் விலை அதிகமாய் உள்ளது. இப்போதைக்கு என்னோட தொலைபேசியில் வாட்சப்பில் செய்திகள் கொடுக்கலாம், பெறலாம். இங்குள்ள நெட்வொர்க்கின் மனம் குளிர்ந்திருந்தால் வீடியோ கால் பண்ணிப் பேசலாம்.

இங்கே எத்தனை நாட்கள் எனப் புரியவில்லை. வந்ததும் மெடிகல் செகப் முடிஞ்சுக் கைரேகைகள் மாதிரி கொடுத்து எல்லாம் ஆகிவிட்டது. கத்தார் ஐடி வரணும். அதன் பின்னரும் மெடிகல் செக் அப் இருக்குமோ என்னமோ சுப்புத்தாத்தா முகநூல் மூலம் அழைத்துப் பேசினார். தக்குடு வரேன்னு சொல்லி இருக்கார் வரணும். இன்னும் சில சொந்தங்கள் (தூரத்துச் சொந்தம்) இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் அவ்வளவாய்த் தெரியாது. வலை உலக நண்பர்கள் தான் அதிகம் பழகி இருக்காங்க.

இங்கே எனக்கு இன்னமும் மனம் ஒட்டலை. திடீர்னு பறக்கும் சக்தி வந்து கிளம்பிப் போயிடலாமானு இருக்கு. என்னதான் பிள்ளை, மாட்டுப்பெண், கு.கு. ஆகியவர்கள் இருந்தாலும் இது அவங்களோட இடம் என்பதால் அவங்களுக்குச் சரியா வருது. என் உடலோ, மனமோ இன்னமும் ஏத்துக்கலை. வீடு ரொம்பப் பெரியது. மாடியும் கீழுமாய்ப் பத்துப் பேருக்கு மேலே இருக்கலாம். கூரை நல்ல உயரம். இருபதடி இருக்குமோனு சந்தேகம். மாடிக்கெல்லாம் நான் போகவே இல்லை. சுமார் 24 படிகள். நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. வெளியே போனவரைக்கும் வெயில் கொளுத்துது என்றால் கொளுத்துது. 37 டிகிரி செல்ஷியஸ் தான் போடறாங்க. ஆனால் சூடு/அனல் தாங்கலை. காரிலிருந்து வெளியே வந்தாலே அனல் அடிக்குது. கார் கதவை எல்லாம் பிடித்துக் கொண்டு காரில் ஏற முடியலை. பையர் ஒரு நாள் மால் எல்லாம் பார்க்கப் போகலாம் என்றார். வேண்டாம்னு கை எடுத்துக் கும்பிட்டுட்டேன்.

Saturday, August 16, 2025

நான் வந்துட்டேன். வந்துட்டேன்னு சொல்லு!

 ஸ்ரீரங்கத்திலே இருந்து இங்கே வந்தாச்சு. மனமே சரியில்லை. ஆனால் வேறே வழி இல்லாமல் மனசைச் சமாதானம் செய்து கொண்டு தான் கிளம்பி வந்திருக்கேன். முன்னே எல்லாம் ரங்க்ஸ் கூட வருவார். இங்கே சரியில்லை எனில் உடனே பயணச்சீட்டைத் தேதி மாற்றிக் கொடுக்கச் சொல்லிக் கிளம்புவோம். நம்ம இடம் தான் நமக்கு சரி. ஆனால் இப்போ இப்படிச் சொல்ல முடியலை. அதுக்காக எவ்வளவோ மனச்சமாதானங்கள், செய்து கொண்டிருக்க வேண்டி இருக்கு. சில விஷயங்களை வெளியே சொல்லிவிட முடியாது. இருந்து பார்த்தால் தான் புரியும். ராமரை அங்கே தன்னந்தனியாக விட்டுட்டு வந்திருக்கேன். பாவம், சாப்பாட்டுக்கு என்ன செய்வாரோ? இன்னிக்குக் கோகுலாஷ்டமி வேறே. அங்கே இருந்தால் பால், தயிர், பழம் மட்டுமாவது கிருஷ்ணனுக்கு வைச்சு இரண்டு பூக்களைப் போட்டுச் செய்யலாம். பண்டிகை என்றெல்லாம் கொண்டாடப் போவது இல்லை. ஆனால் தினசரி நிவேதனம் உண்டே. அது மாதிரிச் செய்யலாம். இங்கே சரியாக வராது. இங்கே வீடு எல்லாம் பெரிதாக உள்ளது. வில்லா வகையைச் சேர்ந்த வீடு. ஒரு சின்ன டவுன்ஷிப் மாதிரி உள்ளது. அக்கம்பக்கம் இருப்பது வாசலில் நிற்கும் கார்களில் இருந்தும் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதர்களைப் பார்க்கவே முடியவில்லை. இதை விட அம்பேரிக்க வாழ்க்கை இன்னமும் எளிதானதும், க்ஷ்டமில்லாததுமாக இருக்கும். இங்கேயே இருக்கணும் என்றால் என்னால் முடியுமா? தெரியலை. போகப் போகப் பார்க்கணும்.

நம்ம ஊரில் ஆட்டோக்களில் ஏற முடியாதது போல் இங்கே கார்களில் ஏற முடியவில்லை. விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குப் போக டாக்சியில் ஏற முடியலை. எப்படியோ கஷ்டப்பட்டுப் பின்னிருக்கையில்  சிரமப்பட்டு ஏறினேன். படுக்கையில் படுத்துக் கொள்ள ஸ்டூல் வைச்சு ஏற வேண்டி இருந்தது. அப்புறமாப் பையரிடம் சொல்லி அவசரமாக ஆளைக் கூப்பிட்டுக் கட்டிலை அரை அடி போல் கீழிறக்கி மெத்தையைப் போட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. குளியலறை ஒரே கீக்கிடம். ஒரே பக்கம் குளிக்கும் முற்றம் , கழிவறை, தரையோ ஒரே வழுக்கல். காலை வைத்தால் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

இன்னும் வரும் விரிவாக

Monday, July 07, 2025

நம்பிக்கை தந்த நட்புகள்!

 மனது வேதனைப்  படும் சமயங்களில் எல்லாம் நான் புத்தகங்களே படிப்பேன், அதிலும் திரு தேவனின் புத்தகங்கள் என்றால் எத்தனாம் முறை என்றெல்லாம் கணக்கில்லை. கல்யாணி, ஜானகி, கோமதியின் காதலன், ஸ்ரீமான் சுதர்சனம் போன்றவை ஒவ்வொரு தரம் படிக்கும்போதும் புதிய கோணத்தைக் காட்டி மனசை லேசாக்கும். ஆகவே கடந்த நான்கு நாட்களாக ஸ்ரீமான் சுதர்சனமே படித்து வந்தேன். விறு விறுப்பாக நான் படிப்பதை நம்ம ரங்க்ஸ் மட்டும் பார்த்திருந்தாரானால் சிரித்துக் கிண்டல் செய்திருப்பார். ஆனால் எனக்கு உண்மையில் சுதர்சனம் படும் கஷ்டங்களை எல்லாம் படிக்கையில் நாங்க குடித்தனம் வைச்சப்போ நடந்தவையும் அதை எப்படி எல்லாம் சமாளித்தோம் என்பதும் நினைவில் வந்து போகும். இம்முறையும் அப்படிப் பழைய மலரும் நினைவுகள் வந்து மனதில் ஆறுத்டல் தோன்ற ஆரம்பித்தது. சுதர்சனம் முடிஞ்சு போய் அடுத்து ஜஸ்டிஸ் ஜகந்நாதனை எடுத்தேன். கல்யாணி, ஜானகி, எல்லாம் கிழிந்து விட்டன. கோமதியின் காதலன் தூள் தூளாக இருக்கு. வைச்சுப் படிக்க முடியாது. ஜஸ்டிஸ் ஜகந்நாதன் அத்தனை ருசிகரமாகப் படிக்க மாட்டென் எனினும் அதிலும் நகைச்சுவைக்குப் பஞ்சம் இல்லை.

ஆதியிடம் ஏற்கெனவே பாலங்கள் புத்தகம் கேட்டிருந்தேன். ஆனந்த விகடனில் தொடராக வந்தப்போப் படிச்சது. ஆதிக்கு இருந்த வேலை நெருக்கடியில் அவங்க தான் புத்தகம் எடுத்து வந்து கொடுக்கணும். திரும்ப வந்து வாங்கிப் போகனும். ரங்க்ஸ் இருந்தால் வண்டியில் போயிடுவார். ஒவ்வொரு சமயமும் அவர் இருந்தால் என்பதே தோன்றிக் கொண்டிருக்கிறது. சனிக்கிழமை ஆதியே தன் வேலைகளை ஒதுக்கிட்டு இந்தப் புத்தகம் கொடுக்கவென்றே வீட்டுக்கு வந்தார். அப்போ ஜகந்நாதன் தான் படிச்சுட்டு இருந்தேன். விறுவிறுப்பே இல்லை. ஆதியோடு பேசியதில் கொஞ்சம் மன ஆறுதல் ஏற்பட்டது. அவருக்கும் மனப்பாரம் குறைஞ்சிருக்கும்.  அன்று தற்செயலாக முகநூல் மெசஞ்சரில் ஏதோ புதுச் செய்தி வந்திருப்பதாகக் காட்டவே என்னவென்று பார்த்தால் பழைய சிநேகிதி (எனக்குச் சின்னவங்க தான். மின் தமிழில் இருந்திருக்காங்க. பதிவுகளும் போட்டிருக்காங்க) பார்வதி ராமச்சந்திரன் ஞாயிறன்று இன்னொரு சிநேகிதரையும் அழைத்துக் கொண்டு என்னைப் பார்க்க வரப் போவதாகத் தெரிவித்திருந்தார். அவர் எங்கேயோ டெல்ல்லியிலோ/ பெண்களூரிலோ அல்லவா இருந்தார் என யோசித்தாலும் வரச் சொல்லி அழைப்பு விடுத்தேன்.

அன்றிர்வே திரு தி.வா. அவர்கள் கூப்பிட்டிருக்கார்/ இதைச் சொல்லத் தான். ஆனால் பெல் அடிக்கவே இல்லை என்பதோடு நானும் தொலைபேசியை ம்யூட்டில் வைத்திருந்தேன். ஆகவே அழைப்பு வந்தது ஞாயிறன்று காலை தான் தெரியும். காலை அவருக்கு பதில் செய்தி கொடுக்கையிலேயே அவரே அழைத்துப் பேசினார். ரங்க்ஸ் போனப்புறமா அன்னிக்குத் தான் முதல் முதலாக அழைத்திருந்தார். தொலைபேசி பிசியாக இருப்பதால் கூப்பிடலை என்றார். அவருடன் பேசிவிட்டுக் கொஞ்சம் ஆறுதலுடன் தொலைபேசியை வைக்கையில் பார்வதி ராமச்சந்திரன் வரப்போவதைத் தெரிவித்தார். மத்தியானம் இரண்டரை மணி அளவில் பார்வதியே தொலைபேசியில் அழைத்து 3 மணிக்கு மேல் வரப்போவதைச் சொன்னார். ஒண்ணும் சாப்பிட மாட்டோம் என்றும் நேற்று ஏகாதசி என்பதால் முழு விரதம் எனவும் சொன்னார். ஆனால் அவர் வருவதற்கு நான்கரை மணி ஆகிவிட்டது. அவருடனும் இன்னொரு நண்பருடனும் (அம்பாள் உபாசகர்) பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியலை. அதிலும் எங்கள் மானசீக குருவான திரு காழியூராரைப் பற்றிய பேச்சுக்கள் அதிகம் இடம் பெற்றன.

கடைசியாக அவரைத் திருவண்ணாமலையில் 2020 ஆம் ஆண்டில்  எங்கள் குழும் நண்பர் ஒருத்தர் ரமணாசிரமத்தில் தங்கி இருந்தப்போப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அப்போதே குருநாதர் தம்மை இனித் தொலைபேசி, வாட்சப், மெசஞ்சரி மூலமெல்லாம் இனித் தொடர்பு கொள்ள முடியாதெனவும் தானாக எங்களைப் பார்க்க விரும்பிச் செய்தி அனுப்பிப் பார்ப்பதாகவும் இதுவே தன்னைப் பார்ப்பது கடைசி முறை என்ற தொனியில் பேசியதாகவும் சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் எனக்குப் புதுசு. ஆனால் அவரைப் பார்க்க வேறே என்ன வழி எனத் தெரியலையே என மனம் நொந்து போனாலும் ஓரளவு நம்பிக்கைக்கிற்றும் மனதில் தோன்றியது. நம்ம ரங்க்ஸ் அவரை நினைக்காத நாளில்லை. நாமெல்லாம் அதிர்ஷ்டம் பண்ணவில்லை என்பார்.. கடைசியில் அவர் ஒவ்வொருவருக்கும் எப்படி அறிமுகம் ஆனார் என்பதைப் பகிர்ந்து கொண்டோம் நேரமும் ஆயிற்று. நண்பர்கள் விடை பெறும் நேரமும் வரவே அனைவரும் விடைபெற்றுச் சென்றனர். இதில் பார்வதியுடன் வந்த எங்கள் நண்பர் முத்துச்சாமியுடன் அவருடன் கூட வேலை பார்ப்பவரும் வந்திருந்தார். விசாரித்தால் அவர் என்னுடைய எழுத்தை எல்லாம் படிச்சுட்டு என்னுடைய ரசிகர் ஆகிவிட்டாராம். முதல் முறையாக ஒரு ரசிகரைப் பார்த்ததில் மனம் சந்தோஷம் அடைந்தது என்னமோ உண்மை தான். இப்போக் கொஞ்சம் தெளிவாக இருப்பதால் இதை உடனே எழுதி இருக்கேன். எப்போ மனக்குரங்கு மரத்தில் ஏறுமோ தெரியாது. விழி கிடைக்குமா? வாழ வழி கிடைக்குமா? என்றே யோசித்து வருகிறேன். ஒரு முறையாவது காழியூராரைப் பார்த்து விடணும் என்பதும் மனதின் ஓர் ஓரத்தில்.