மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 21!
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!
கோலங்கள், படங்களுக்கு நன்றி கூகிளார்!
மீண்டும் பசுக்களைக் குறிக்கும் பாடல். அதிலும் எப்போது கலங்களை எடுத்துக் கறந்தாலும் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள். ஆகவே காமதேனுக் கோலமோ, பசுவும் கன்றுமாகவோ கோலம் போடலாம்.
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என பெருமானைக் கூறுகிறாள் ஆண்டாள். இருளை நீக்கும் ஆதவனைப் போல் நம் மனமாகிய காட்டில் எந்நேரமும் காணப்படும் துர் எண்ணங்களாகிய இருட்டை அங்கே பெருமானைக் குடியேற்றுவதன் மூலம் ஒளி பொருந்தியதாக மாற்றலாம். இதயத்தினுள் சுடராக ஒளிவீசிப் பிரகாசிப்பவன் பெருமானே. அதை அறியாமல் நாம் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறோம். உலகினில் தோற்றமாய் நின்றவன் நம்முள்ளும் சுடராய் ஒளி வீசுகிறான். அவன் திருவடிகளைப் புகழ்ந்து பாட வேண்டும். அதுவும் எப்படி? எதிரிகள் கண்ணனின் பலத்தைக் கண்டு அவனுக்கு சேவை செய்ய வேண்டி அவனடிகளைப் பணிந்து வணங்குவது போலவா? அவர்கள் அடி பணிவதில் அச்சம் கலந்திருக்கிறது கண்ணா! எங்களுக்கு என்ன அச்சம்?
நாங்கள் உன்னைக் கட்டி இருப்பது எங்கள் பக்தியாகிய அன்பெனும் கயிற்றினால். இதற்கு தாமோதரனாகிய நீ கட்டுப்பட்டே தீர வேண்டும். உன்னிடம் நாங்கள் எங்களை ஒப்படைத்து விட்டோம். நீ எங்களை ஒதுக்க முடியாது. அதே போல் நீயன்றி நாங்களும் இல்லை. உன்னில் நாங்களும், எங்களில் நீயும் ஐக்கியம் ஆகிவிட்டோம். உன்னைப் புகழ்ந்து ஏத்துவது ஒன்றே எங்கள் வேலை.
இது வரைக்கும் பிராட்டியையும், பரமாத்மாவையும் சேர்த்து எழுப்பினாங்க. இப்போப் பிராட்டி எழுந்து வந்துவிடுகிறாள் போலும். ஆகையால் இந்தப் பாசுரம் பிராட்டியும் சேர்ந்தே பகவானை எழுப்பியதாய் ஐதீகம்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்= ஏற்கெனவேயே நந்தகோபன் வீட்டுப் பசுக்களின் எண்ணிக்கையை எண்ணிமுடியாது என்பதைப் பார்த்தோம். இங்கே அவைகள் அனைத்தும் கறக்கும் பாலைப் பற்றிச் சொல்லி இருக்கிறது. எத்தனை பாத்திரங்கள் எடுத்து வந்தாலும் அவை எல்லாமே நிரம்பி வழியும்படியாகப் பாலைச் சொரியுமாம் பசுக்கள். அவற்றை வள்ளல் பெரும்பசுக்கள் என்கிறாள். அப்படி பாலைப் பொழியும் பசுவைப்போல நீயும் உன் கருணை மழையைப்பால் போல் எங்கள் மேல் சொரிந்துவிடு என் அப்பா என்றே கேட்கிறாள்.
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! = இவ்வளவு பெருந்தன்மை பொருந்திய நந்தகோபனின் மகனே, நீ எங்களை மறந்தாயோ? நீயல்லவோ இந்த உலகின் படைத்துக் காத்து, ரக்ஷித்து என அனைத்தையும் இடைவிடாது செய்து வருகிறாய்?? அதிலே நீ சற்றேனும் அயரவில்லையே? உற்சாகமாய்ச் செய்து வருகிறாயே? நீ எவ்வளவு பெரியவன்?? இவ்வுலகில் முதன் முதல் தோன்றியவனே நீயன்றோ. எண்ணி அடங்க முடியாத அநாதிகாலம் தொட்டே இருக்கும் எப்போது தோன்றினாய் என்றே சொல்லமுடியாதபடி இருக்கும் பெரியவனே.
உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்= ஏ பரம்பொருளே, ஜோதிவடிவானவனே, நீ இருக்கிறாய் என்பதை எல்லாரும் சொல்கிறார்கள் என்று மட்டும் நாங்கள் நம்பவில்லை. நீயே எங்கள் மத்தியில் வந்து எங்கள் குலத்தில் வந்து தோன்றினாயே? நாங்கள் அணுகுதற்கு எளிமையாக எங்களிடையே வந்து தோன்றிய அருள் பெரும் சுடர் வடிவானவனே. துயிலில் இருந்து எழுந்திரு. மாற்றார்களான அரக்கர்கள் கூட உன்னெதிரில் தங்கள் வலிமையைத் தொலைத்துவிட்டு உன்னிடமே அடைக்கலம் ஆகின்றனரே. அவர்களையும் நீ உன் அடிபணியச் செய்தாயே.
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!= உன் சத்ருக்கள் உன்னை எதிர்த்தாலும் கடைசியில் உன் வீரத்துக்கு அடிபணிந்து உன்னிடமே அடைக்கலம் ஆனார்கள். உன் பக்தர்களான நாங்களோ உன் குணத்துக்கு, உன் பெருமைக்கு, உன் கருணைக்குத் தோற்றுப் போய் உன்னிடம் நீயே சரண் என்று வந்திருக்கிறோம். உன்னையே நாங்கள் எந்நாளும் போற்றிப் பாடி வந்திருக்கிறோம். உன்னை நினையாமல் எங்களால் இருக்கமுடியாது. உன் புகழைப்பாடாமல் இருக்க இயலாது.
பட்டத்திரி கண்ணன் புகழை எவ்வாறு கூறுகிறார் என்றால் அவன் எல்லையற்றவன், அனைத்துக்கும் அப்பாற்பட்டவன் என்கிறார்.
யத்து த்ரைலோக்ய ரூபம் தததபி ச ததோ நிர்க்கதோநந்த ஸுத்த
ஞாநாத்மா வர்த்தஸே த்வம் தவ கலு மஹிமா ஸோபி தாவாந் கிமந்யத்
ஸ்தோகஸ்தே பாக ஏவாகிலபுவநதயா த்ருஸ்யதே த்ர்யம்ஸ்கல்பம்
பூயிஷ்ட்டம் ஸாந்த்ர மோதாத்முகமுபரி ததோ பாதி தஸ்மை நமஸ்தே
எல்லையில்லாதவனே, இந்த மூவுலகின் ரூபமே நீர்தானே, இன்னும் இம்மூவுலகுக்கும் அப்பாற்பட்டு பரிசுத்த ஞான ஸ்வரூபியும் நீரன்றோ. உம்முடைய இந்த மஹிமை சாமானியமானதா? உமது இந்த திவ்ய ரூபத்தின் ஒரு சிறுதுளியே இந்தப்ப்ரபஞ்சமாய்ப் பரிணமித்திருக்கிறது. மற்றப் பாகங்கள் அனைத்துமே பரமாநந்த ஸ்வரூபமாக அனைத்துக்கும் அப்பால் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. உம்மை நமஸ்கரிக்கிறேன்.
இனிய காலை வணக்கம்......
ReplyDeleteநல்லதே நடக்கட்டும்.....
வாங்க வெங்கட், நன்றி.
Deleteபாசுரங்கள் வாசித்துக் கொண்டு வருகிறேன் கீதாக்கா. கருத்துதான் இடவில்லை.
ReplyDeleteஇன்றைய விளக்கமும் நன்றாக இருக்கிறது.
பசுக்கள், பால், இயற்கை என்று வருவது எல்லாமே அப்போது எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கு என்று. இப்பவும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பால் அவ்வளவு நன்றாகக் கிடைக்கிறதாம். கறந்த பால். மாடுகள் நிறைய வளர்க்கிறார்கள். நம் உறவு அங்கு இருப்பதால் தெரிகிறது. உங்களைப் போல அவர்கள் பாக்கெட் பாலே உபயோகிப்பது இல்லை!!!
முன்பும் ஒரு காலத்தில் நானும் கறந்த பால்தான் பயன்படுத்தினேன் அதன் பின் கிடைத்தால்தானே?!! இப்போது இங்கு ஆங்காங்கே பார்க்கிறேன் மாடுகள்....ஆனால் தூரத்தில் நடக்கும் இடத்தில்...
கீதா
நன்றி தி/கீதா. இப்போ இங்கே வந்ததிலே இருந்து கானில் தான் பால். வெண்ணெயும் வீட்டு வெண்ணெய் இல்லை. அமுல் நெய். நெய்யாகவே வாங்கறாங்க. நான் நெய்யை எல்லாம் நிறுத்தி சில வருடங்கள் ஆகின்றன. சப்பாத்திக்குப் பயன்படுத்துவதே கொஞ்சமாகத் தான்.
Deleteமார்கழி 21 ஆம் நாள் வாழ்த்துகள்..
ReplyDeleteThank You.
Deleteஒரு ஒளியைத் தொடர்ந்தோ அல்லது ஜஸ்ட் பார்த்தோ கண்களை மூடினாலே கண்ணுக்குள் சில வினாடிகள் வெளிச்சம் தங்குகிறது. அருள் படைத்த பேராளன் உருவாய்க்கனால் கண்டு மனதில் இருத்துவது வாய்க்கப்பெற்றோர் பாக்கியவான்கள். ஏகாக்கிர சிந்தனை.
ReplyDeleteஇறை சிந்தனை தவிர்த்த மற்றச் சிந்தனை இல்லாதவர்கள்.
Deleteபாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
ReplyDeleteபசுமிக நல்லதடி பாப்பா...
இந்தக் காலத்தில் அப்படிப் பாலைப் ஏற்ற தீவனம் இல்லையே... மனிதர்களுக்கும் பகவான் மேல் அப்படி பக்தி இல்லாமல் போனது.
மாட்டுத் தீவனத்திலும் கலப்படம். ஆனாலும் திருச்சி சுற்றி உள்ள கிராமங்களில் இன்னமும் கறந்த பால் கிடைக்கிறது. எருமைப்பால் அவ்வளவாய்க் கிடைப்பதில்லை. பசும்பால் தான். குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பால் அதிலும் பசும்பால் செழிப்பு. பஞ்சாபில் எருமைப்பால். எருமைகளெல்லாம் யானையைப் போல் பெரிது பெரிதாக இருக்கும். பெரிய வாளியை வைச்சுத் தான் பால் கறப்பார்கள்.
Deleteஉன் சக்தியைக் கண்டு பயந்து அல்ல,
ReplyDeleteஅருளைக்கண்டு பயந்துருகி உன்னடி
தொழவந்தோம் கண்ணா..
எல்லையற்ற பேருருவமாய்
அண்டமெங்கும் வியாபித்திருக்கும்
பேரொளியாய் துலங்கும் உன் ஒளியில்
ஒரு துளி என மனதுக்குள் கொடு
பாத்திரங்கள் நிரம்பி வழிய
அரக்கரின் அராஜகம் அடக்கியது போல
எங்கள் மனதில் உள்ள
பாச மாயைகள் அகற்றி மாசுகள் களைய
பால் சொரியும் பசுக்கள் போல
நாங்கள் எங்கள் மனப்
பாத்திரம் நிரம்பி வழிய எமக்குன்
அருளைக் கொடு, கருணையைக் காட்டு என்றும்
உன்னை முழுதும் அறியும்
ஞானத்தைக் கொடு என்றும்
வேண்டுகிறோம், சரணடைகிறோம்.
மிக அருமை. பொருள் பொதிந்த கவிதை. எனக்கெல்லாம் இப்படி நினைச்ச மாத்திரத்தில் எழுத முடிவதில்லை.
Deleteநேற்று எவ்வளவு முயன்றும் உங்கள் தளத்தில் மட்டும் என்னால் கமெண்ட் இட முடியவில்லை.
ReplyDeleteWhy?
Deleteஅது தெரிந்தால் கமெண்ட்டியிருக்க மாட்டேனா? இடைவெளி விட்டு இடைவெளி விட்டு மறுபடி மறுபடி வந்தேன். ரெஃப்ரெஷ் செய்து பார்த்தேன்.. ஊஹூம்!
Delete