எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 31, 2008

கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 53 - யுத்த காண்டம்



விபிஷணன், சமுத்திரத்தைக் கடக்க , ராமரே சமுத்திர ராஜனை அணுகி உதவி கேட்க வேண்டும் எனச் சொல்கின்றான். மேலும் இக்ஷ்வாகு குல மன்னன் ஆன சகரன் முயற்சியால் தோன்றியதே சமுத்திரம் ஆகவே சமுத்திர ராஜன் இக்ஷ்வாகு குலத்துக்குக் கட்டுப் பட்டவன். அவன் நிச்சயம் ராமனுக்கு உதவி செய்வான்.” என்று சொல்கின்றான்.

ராமனிடம் சுக்ரீவன் இதைத் தெரிவிக்க அவரும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டு, லட்சுமணனைப் பார்த்து மேலே என்ன செய்யலாம் என்று கேட்கின்றார். லட்சுமணனும், சமுத்திர ராஜனைக் கேட்டுக் கொள்வதே சிறந்த வழி என்று சொல்கின்றான். ஒரு பாலத்தைக் கட்டாமல் சமுத்திரத்தைக் கடந்து செல்ல முடியாது. ஆகையால் நேரத்தை வீணாக்காமல் சமுத்திர ராஜனை உதவி செய்யுமாறு கேட்க வேண்டும்.” என்று சொல்கின்றான். இதனிடையில் ராவணனால் அனுப்பப் பட்ட ஒற்றன் ஒருவன் வானரப்படையில் புகுந்து கொண்டு அனைத்து விபரங்களையும் அறிந்து கொண்டு ராவணனிடம் திரும்பிப் போய் ராமனின் படை பலத்தையும், வானர வீரர்களின் எண்ணிக்கை மற்றொரு சமுத்திரமோ என்னும் அளவில் இருப்பதையும் தெரிவித்து விட்டு சமாதானம் செய்து கொள்வதா, அல்லது எதிரிகளிடையே பிளவை உண்டு பண்ணுவதா என்று முடிவு செய்யுமாறு கூறுகின்றான். ராவணனும் இதைக் கேட்டுவிட்டு மற்றொரு ஒற்றன் ஆன சுகன் என்பவனை அழைத்து, சுக்ரீவனைச் சென்று அடைந்து, இனிமையாய்ப் பேசி, அவனைப் புகழ்ந்து, கிஷ்கிந்தைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தும்படிக் கேட்டுக் கொள்கின்றான். சுகனும் ஒரு பறவையின் வடிவில் உடனேயே சமுத்திரக் கரை நோக்கிப் பறந்து வருகின்றான். சுக்ரீவனை நெருங்கி, ராவணன் கூறியதைச் சொன்ன சுகனை உடனேயே வானரவீரர்கள் பிடித்து, ராமன் முன்னிலையில் கொண்டு நிறுத்தினர். தூதர்களைக் கொல்லுவது நீதி அன்று ராமா என்று சுகன் சொல்லவே, ராமனும், அவனை விடுவிக்குமாறு கூற அவன் விடுவிக்கப் பட்டு ஆகாயத்திலே போய் நின்று கொண்டு, ராவணனிடம் நான் தெரிவிக்க வேண்டியது என்னவெனக் கேட்க, சுக்ரீவன் அவனைப் பார்த்துச் சொல்கின்றான்:”ராவணனே, நீ என் நண்பன் அல்ல. என் நலனை விரும்புபவனும் அல்ல, ராமனின் எதிரி ஆன நீ எனக்கும் எதிரியே. ராமனும், லட்சுமணனும் இல்லாத வேளை பார்த்து நீ சீதையைக் கடத்தினாய்! உன்னைக் காப்பாற்றக் கூடியவர் இம்மூவுலகிலும் எவரும் இல்லை இப்போது. நீ எங்கே சென்றாலும் சரி, ராமனால் கொல்லப் படப்போகின்றாய். படையோடு இலங்கை வந்து இலங்கையையும், உன் மக்களையும் எரித்துச் சாம்பல் ஆக்குவேன் தகாத காரியத்தைச் செய்த நீ எவ்விதம் உயிரோடு தப்பிக்க முடியும்? இது தான் நான் ராவணனுக்குச் சொல்லும் செய்தி!” என்று சொல்கின்றான் சுக்ரீவன்.
அப்போது அங்கதன் ராமனைப் பார்த்து இவன் ஒற்றன் என்றே நான் எண்ணுகின்றேன். தூதுவனாய்த் தெரியவில்லை. நமது படை பலத்தை முழுதுமாக அறிந்து கொண்டு விட்டான். இவனை வெளியே விடுவது முழுத்தவறு.” என்று சொல்லவே அவன் மீண்டும் பிடித்துக் கட்டிப் போடப் பட்டான். சுகன் ராமனைப் பார்த்து,” ராமா, என்னை இந்த வானரர்கள் துன்புறுத்துகின்றனரே? உன் கண் எதிரிலேயே என் உயிர் போனால், நாம் எந்த இரவில் பிறந்தேனோ, அன்றில் இருந்து என் உயிர் போகும் வரைக்கும் நான் செய்த பாவங்கள் அனைத்தும் உன்னையே சேரும்,” என்று உரக்கக் கூவி அழ, ராமன் வானரர்களைப் பார்த்து, சுகனை விட்டுவிடுமாறு கூறுகின்றார். அவன் திரும்பிப் போகட்டும் என்றும் சொல்கின்றார். ஆனால் அவனை விடுவித்த வானரர்கள் அவனைத் திரும்ப அனுமதிக்கவில்லை.

இதை அடுத்து கடற்கரையில் தர்ப்பைப் புற்கலினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து உடல், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே தியானத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் ராமன் அமர்ந்தார். மூன்று நாட்கள் கடந்த பின்னரும் சமுத்திர ராஜன் அவர் முன்னே தோன்றவில்லை. ராமர் லட்சுமணனைப் பார்த்து மிகுந்த கோபத்துடனேயே, சமுத்திர ராஜனின் கர்வத்தைப் பார்த்தாயா? நீரால் நிரம்பிக் காட்சி அளிக்கும் இந்தக் கடலை இப்போது என்னுடைய சக்தி வாய்ந்த அம்புகளால் துளைத்து நீரை வற்றிப் போகும்படிச் செய்து விடுகின்றேன். முத்துக்களாலும், சங்குகளாலும், மீன்களாலும், முதலைகளாலும், பவளங்களாலும் நிரம்பி இருக்கும் இந்த சமுத்திரத்தை வற்றச் செய்கின்றேன். என்னுடைய பொறுமைக் கண்ட சமுத்திர ராஜன் என்னைச் சக்தியற்றவன் என்று நினைத்துக் கொண்டான் போலும். உடனே சென்று என்னுடைய வில்லையும், அம்புகளையும் எடுத்துவா,” என்று சொல்லி விட்டு மிகுந்த கோபத்தோடும், வீரத்தோடும் வில்லை அம்பை ஏற்றி அவற்றை எய்து விடத் தொடங்கினார்.

அம்புகள் இந்திரனின் வஜ்ராயுதம் போல் கடல் நீரைத் துளைத்துக் கொண்டு சென்று கடல் வாழ் ஜந்துக்களை எல்லாம் வாட்டத் தொடங்கியது. முத்துக்களும், பவளங்களும், மீன்களும், சங்குகளும் உள்ளே இருந்து மேல்நோக்கி வந்து தூக்கி அடிக்கப் பட்டன. நெருப்பை ஒத்த அம்புகள் கடல் நீருக்கு மேல் ஊழிப் பெருந்தீ போன்ற ஒளிமயமான தீயைத் தோற்றுவிக்க அங்கே எழுந்த புகை மண்டலத்தால் விண்ணை மூடும் அபாயம் ஏற்பட்டது. கடல் கொந்தளித்துக் கொண்டு பேரலைகள் எழுந்தன. தூக்கி அடிக்கப் பட்ட கடல்வாழ் பிராணிகளின் ஓலம் தாங்க முடியாமல் இருந்தது. மேலும் அம்புகளைப் பொருத்தி எய்வதற்காக நாணில் ஏற்றிய ராமரை லட்சுமணன் “போதும், போதும்” என்று சொல்லி வில்லைக் கையில் இருந்து வாங்கினான். கோபம் கொள்ளாமல் வேறு வழியில் கடலைக் கடக்க உதவியை நாடுங்கள் என்றும் சொன்னான். விண்ணில் இருந்து இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டும் ,கேட்டுக் கொண்டும் இருந்த தேவர்களும், ரிஷி, முனிவர்களும், பயத்தினால் அலறிக் கொண்டு ,”போதும், போதும், நிறுத்து, நிறுத்து.” என்று கூறவே ராமனும் சமுத்திர ராஜனைக் கூப்பிட்டுப் பேசத் தொடங்கினார்.

Monday, May 26, 2008

கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 52 (விபிஷண சரணாகதி) - யுத்த காண்டம்



பல்வகை ஆயுதங்களுடன், மாபெரும் போர் வீரனைப் போன்ற தோற்றத்துடன் காணப்பட்ட விபீஷணனையும், அவன் நண்பர்கள் நால்வரையும் பார்த்து சுக்ரீவன் சிந்தனையில் ஆழ்ந்தான். அனுமனையும், மற்றவர்களையும் பார்த்துப் பின்னர் இவன் இந்த நால்வரோடு இங்கே வந்திருப்பதைப் பார்த்தால் நம் அனைவரையும் கொல்லவே வந்திருக்கின்றான் என்றே தோன்றுகின்றது என்று சொல்கின்றான். அப்போது உரத்த குரலில் விபீஷணன், அரக்கர் குலத் தலைவன் ஆன ராவணன் என்ற பெயர் கொண்ட , தீய நடத்தை படைத்த மன்னன், இலங்கையின் அரசன் ஆக இருக்கின்றான். அவன் எனக்கு மூத்த அண்ணன்.நான் அவனின் இளைய சகோதரன். அந்த ராவணன், ராமனின் மனைவியான சீதையை ஜனஸ்தானத்தில் இருந்து ஜடாயு என்னும் கழுகரசனைக் கொன்றுவிட்டு அபகரித்து வந்துவிட்டான். அவளை அசோகவனத்தில் அரக்கியர்கள் நடுவில் சிறை வைத்துள்ளான். நான் அவனிடம் பலமுறைகள் வாதம் புரிந்து சீதையைத் திருப்பி அனுப்பச் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவன் திரும்ப அனுப்பச் சம்மதிக்கவில்லை. அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், குடிமக்களுக்கும், நாட்டுக்கும், அரக்கர் குலத்துக்கும் நன்மையையே நினைத்த என்னை அவன் இழிவாகப் பேசிவிட்டான். அடிமை போல் நடத்திவிட்டான். என் மனைவி, மக்களை அங்கேயே விட்டு விட்டு இங்கே உங்களிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளேன். ஈரேழு பதினாலு உலகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கக் கூடிய வல்லமை படைத்த ராமனிடம் சென்று விபீஷணன் வந்திருக்கின்றான் என்று அறிவியுங்கள் என்று சொல்கின்றான்.

அனுமன் சமுத்திரத்தைக் கடக்க அவ்வளவு கஷ்டப் பட்டபோது, நினைத்த நேரத்தில் நினைத்த உருவை எடுக்கக் கூடிய வல்லமை பெற்றிருந்த அரக்கர் குல இளவல், தான் பெற்றிருந்த வரங்களின் மகிமையாலும், தவ வலிமையாலும் வான் வழியே வந்து ராமனைச் “சரணம்” என்று அடைந்தான். அப்போது சுக்ரீவனும், மற்றவர்களும் விபீஷணன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு ராமனிடம் சென்று, ராவணனின் ஆள் ஒருவன் நான்கு பேரோடு வந்திருக்கின்றான். அவன் நடத்தை எவ்வாறிருக்குமோ என்று சந்தேகமாகவே இருக்கின்றது. பிறர் கண்ணுக்குக் கூடத் தெரியாமல் சஞ்சரிக்கக் கூடிய அரக்கர் குலத்தவன் ஒருவன் இங்கே வந்துள்ளான் என்பது சற்றே கவலை அளிக்கக் கூடியதாய் உள்ளது. ஒருவேளை அந்த ராவணனின் ஒற்றர்களில் ஒருவனாயும் இருக்கலாமோ? நாம் கவனமாய் இருக்கவேண்டும். நம்மிடையே பிளவை உண்டு பண்ணி விடுவானோ என்றும் அஞ்சுகின்றேன். எதிரியான அரக்கர்களில் ஒருவன் நமக்கு உதவி செய்கின்றேன் என்று வந்திருப்பது சற்றும் ஏற்கத் தக்கது அல்ல. நம் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு நம்மைத் தாக்கவும் முற்படலாம். அவனைச் சிறைப்படுத்துவதே சிறந்தது.” என்று சொல்கின்றார் வானர அரசன் ஆன சுக்ரீவன்.

ராமர் இதை எல்லாம் கேட்டுவிட்டு மற்ற வானரர்களிடம் சுக்ரீவன் சொன்னதை நீங்கள் அனைவரும் கேட்டீர்கள். தன்னை நம்பியவர்களுக்கு நம் மனதைத் திறந்து பேசுவதும், ஆலோசனை சொல்வதும் நண்பர்களின் லட்சணம், அழகு. ஆகவே நீங்கள் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள், என்று கேட்கின்றார். வானரர்களில் பலரும் ராமனைப் பார்த்து, உங்கள் இஷ்டம் எதுவோ அப்படியே செய்யுங்கள். உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்று பணிவோடு சொல்கின்றனர். இவர்களில் அங்கதன் எழுந்து, நாம் நன்கு ஆராய்ந்து, கலந்து பேசி, இவனை ஏற்பதால் நமக்கு நன்மை உறுதி எனத் தெரிந்தால் ஏற்போம், இல்லை எனில் வேண்டாம் என்று சொல்கின்றான். சரபன் என்ற இன்னொரு வானரன் ஒற்றன் ஒருவனை அனுப்பி விபீஷணனைச் சோதித்துவிட்டு அனுமதிக்கலாம் என்று கூறுகின்றான். ஜாம்பவானோ, இவனை நம்பக் கூடாது. ராவணனிடமிருந்து வந்துள்ளான், இவனை எவ்வாறு நம்புவது என்று சொல்கின்றார். மைந்தன், கொஞ்சம் கொஞ்சமாய் விசாரிப்போம், இவன் எப்படிப் பட்டவன் என்பது புரியும். பின்னர் முடிவுக்கு வரலாம் என்று சொல்கின்றான். அனௌமன் எழுந்து இரு கையையும் கூப்பிக் கொண்டு சொல்லுவார்:” இங்கே பேசிய அனைவர் கருத்திலும் நான் தவறு காண்கின்றேன். அனைவரும் அறிவிற் சிறந்தவர்களே ஆயினும் இவ்விஷயத்தில் நீங்கள் சொல்லும் எந்தக் கருத்தும் உதவாது. விபீஷணனை ஒற்றனை அனுப்பித் தெரிந்து கொள்ள முயன்றால் அவனுக்குக் கோபம் வரக் கூடும். நான் அனுப்பியதன் காரணமும் அவனுக்குப் புரியாமல் போகாது. நன்மை நாடி வந்திருந்தானானால் மனம் புண்படும், அல்லாமல் தீமை நாடி வந்திருந்தானானால், இன்னும் அதிக மோசமாய் நடந்து கொள்ளுவான். இம்முயற்சி பலனளிக்காது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் விபீஷணன் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்படுகின்றான். ஆகையால் அவனால் நமக்கு நன்மையே ஏற்படும். பேச்சிலும் தெளிவும், மன உறுதியும் காணப்படுகின்றது. கெட்ட நோக்கத்தினால் வந்தவனுக்கு இவ்வளவு தெளிவும், மன உறுதியும் காணப்படாது. அனைத்தையும் யோசித்தே அவன் இங்கு வந்திருக்க வேண்டும். ராவணனை விட தாங்கள் மேம்பட்டவர் என்பது அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.. இலங்கை தாக்கப் படும் என்பதையும் அறிந்து கொண்டிருக்கின்றான். மேலும் வாலிக்கு நேர்ந்த கதியையும் அறிந்து வைத்துள்ளான். சுக்ரீவன் உங்களோடு இருக்கின்றார் என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டே இனிமேல் இங்கே வந்து சேருவதே உசிதம் என்றே வந்திருக்கின்றார். ஏற்கத் தக்கவன் ஆன அவனை ஏற்பது நமக்கு நன்மை பயக்கும். இதுவே என் கருத்து.” என்று சொல்லி அமர்கின்றார்.

அனுமன் சொன்னதைக் கேட்ட ராமனுக்கும் மனம் மகிழ்ச்சி அடைந்தது. தானும் அவ்வாறே நினைத்ததாய்ச் சொன்ன அவர் மேலும் சொன்னார்:” அனைவரும் என்னுடைய நன்மையைக் கருதியே பேசினீர்கள் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. முதலில் ஒரு விஷயம் தெளிவாய்ச் சொல்கின்றேன். என்னிடம் “சரணாகதி” என்று சரண் அடைந்தவனை நான் எக்காரணம் கொண்டும் நிராகரிக்க மாட்டேன். அவன் தீயவனாகவே இருந்தாலும்.” என்று சொல்ல சுக்ரீவனும், மற்ற வானரர்களும் மனம் சமாதானம் அடையவில்லை. சுக்ரீவன் சொல்கின்றான்:” தன் சொந்த சகோதரனையே ஆபத்தில் விட்டுவிட்டு ஓடி வந்து விட்ட இவன் வேறு யாரைத் தான் காட்டிக் கொடுக்க மாட்டான்?” என்று சொல்லவே, ராமர் சிரித்துக் கொண்டே சொல்கின்றார்:” விபீஷணன் உலக இயல்புப் படியே இங்கே வந்துள்ளான். ஒரு அரசனுக்கு ஆபத்து நேரிடும் போது அவன் உறவினர்கள் எவ்வாறேனும், அவனைத் தாக்கி நாட்டைக் கைப்பற்றவே முயல்கின்றனர். இவன் அம்மாதிரியே இங்கே வந்திருக்கின்றான். இவனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை வந்துள்ளது. அரக்கர்களிடையே அச்சம் தோன்றிவிட்டதை இவன் வரவு நமக்கு உணர்த்துகின்றது. இவன் இங்கே வந்திருப்பதால் அரக்கர்களிடையே பெரும் பிளவும் உண்டாகலாம். சுக்ரீவா, எல்லா சகோதரர்களும் பரதனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா மகன்களும் ராமனைப் போன்றவர்கள் அல்ல. எல்லா நண்பர்களும் சுக்ரீவனைப் போன்றவர்கள் அல்ல. “ என்று சொல்கின்றார். சுக்ரீவனும் ராமனைப் பார்த்து, மீண்டும், மீண்டும் விபீஷணன் கொல்லப் பட வேண்டியவன் என்ற கருத்தை வலியுறுத்துகின்றான். ராமர் அவன் கூறியதைப் பற்றி நன்கு யோசித்துவிட்டுப் பின்னர் சொல்கின்றார்:” விபீஷணன் தீயவனாகவே இருந்தாலும் என்னால் அவனை அழிக்க முடியும். மேலும் தனக்குக் கெடுதல் செய்த வேடனிடம்கூட ஒரு புறா அன்பு காட்டியதை நாம் அறிந்துள்ளோம். அதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். மேலும் நம்மிடம் அடைக்கலம் என்று கை கூப்பி, பாதிகாப்பு வேண்டி வந்துவிட்டவன் விரோதியே ஆனாலும் அவனைப் பாதுக்கக்கவேண்டியது நம் கடமை. அவனைத் தாக்கக் கூடாது. நம் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காக்க வேண்டும், இது நம் கடமை. மேலும் அடைக்கலம் என்று வந்தவனைப் பாதுகாக்க முடியாமல் அவன் அழிக்கப் பட்டால் நாம் செய்த புண்ணியம் எல்லாம் அழிந்தவனைச் சேர்ந்து நமக்குப்பாவமே வந்து சேரும். சுக்ரீவா! “இனி நான் உன்னுடையவன்” என்று கூறிக் கொண்டு இனியும் யார் வந்தாலும், அவர்களை நான் ஏற்றுக் கொண்டு இறுதி வரை காப்பாற்றுவது என் விரதம். ராவணனாகவே இருந்தாலும் சரி! போய் அவனை அழைத்து வா, “அபயம் என்று வந்தவனைக் காக்க நான் தயாராகிவிட்டேன் என்று சொல்.” என்று சொல்கின்றார்.

சுக்ரீவனும் ராமன் சொல்வதில் உள்ள நியாயத்தையும், தர்மத்தையும் உணர்ந்து, தர்மத்தில் இருந்து சற்றும் பிறழாமல் ராமர் நடந்து கொள்வதைப் பாராட்டி விட்டுத் தானும், விபீஷணனை அழைத்துவர ஏற்பாடு செய்வதாய்ச் சொல்லுகின்றான். விபீஷணன், விண்ணில் இருந்து இறங்கி, ராமனிடம் வந்து இரு கை கூப்பி நமஸ்கரித்து, ராவணனின் இளைய சகோதரன் ஆன நான் உங்களை நாடி வந்துவிட்டேன். என்னுடையது என்று சொல்லக் கூடிய அனைத்தையும் துறந்து உங்களை நாடி நீங்களே சரணம் என்று வந்துள்ளேன்,” என்று கூறுகின்றான்.

ராமன் உடனே விபீஷணனைப் பார்த்து அரக்கர்களின் பலம், பலவீனம், ஆகியவற்றை உள்ளது உள்ளபடிக்கு எடுத்து உரைப்பாய், என்று கேட்க விபீஷணனும் அவ்வாறே சொல்கின்றான்:”, பிரம்மன் அளித்த வரம் காரணமாய், கந்தர்வர்கள், நாகர்கள், , பறவைகள் , என்று படைக்கப் பட்ட எந்த ஜீவராசியாலும் ராவணனைக் கொல்வது என்பது முடியாது. ராவணனுக்கு இளையவனும், எனக்கு மூத்தவனும் ஆன கும்பகர்ணன் பலம் சொல்லி முடியாது. தேவேந்திரனை எதிர்க்கும் வல்லமை படைத்தவன். கைலை மலையில் குபேரனின் படைத்தலைவனை வீழ்த்திய பிரஹஸ்தன் ராவணனின் படைத் தளபதி. வில்லாளியும், எதிரிகளின் கண்ணுக்குத் தெரியாமல் போரிடக் கூடிய வல்லமை பெற்றவனும் தேவேந்திரனைச் சிறை எடுத்தவனும் ஆகிய இந்திரஜித் ராவணனின் மைந்தன். இன்னும் மஹோதரன், மஹாபார்சவன், அகம்பனன் ஆகியோரும் முக்கியமானவர்களே. இவர்களைத் தவிர, எண்ணிலடங்கா அரக்கர் படையும் உள்ளது. அனைவருக்கும் மாமிசமும், ரத்தமுமே உணவு. அவர்கள் உதவியோடு மூவுலகையும் ராவணன் எதிர்த்தான். தேவர்களையும் யுத்தத்தில் வென்றவனே கெடுமதியாளன் ஆன ராவணன்.” என்று சொல்கின்றான்.

ராமர் உடனேயே ராவணனின் வரங்கள் பற்றி அறிந்திருப்பதால் நீ கூறியவை அனைத்தும் உண்மையே எனத் தெரிய வருகின்றது. ராவணனையும், அவனைச் சார்ந்தவர்களையும் கொன்றுவிட்டு உனக்கே இலங்கையின் முடியைச் சூட்டுகின்றேன். பாதாளத்தில் போய்ப் புகுந்தாலும், பிரம்மாவே வந்து அடைக்கலம் கொடுத்தாலும் ராவணன் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. என் மூன்று சகோதரர்களின் புகழ் மீதும் ஆணையிட்டுச் சொல்கின்றேன். இந்த அரக்கர்களை ஒழிக்காமல் அயோத்திக்குத் திரும்ப மாட்டேன்.” என்று சொல்கின்றார். விபீஷணனும் அவரை வணங்கிவிட்டு அரக்கர்களை வெல்லும் வழியையும், இலங்கையைத் தாக்கவும் வழியைத் தான் கூறுவதாயும், அரக்கர் படையைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைந்து தாக்க உதவுவதாயும் சொல்கின்றான். பின்னர் ராமன் முக மலர்ச்சியுடனும், மகிழ்வுடனும் லட்சுமணனைப் பார்த்து, சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து வரச் சொல்கின்றார். விபீஷணனுக்கு அரக்கர் மன்னனாய் இப்போதே அபிஷேகம் செய்து வை என்றும் சொல்கின்றார். உடனேயே இதைச் செயல் படுத்துமாறும் லட்சுமணனைச் சொல்ல அவனும் உடனேயே சென்று சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து வந்து வானரர்கள் அனைவர் முன்னிலையிலும் ராமரின் கட்டளைப்படி விபீஷணனுக்கு அபிஷேகம் செய்து வைக்கின்றான். வானரர்கள் அனைவரும் நன்று, நன்று, என்று கோஷமிட்டுக் கொண்டாடினார்கள். விபீஷணனிடம் தங்கள் கவலையை அனுமனும், சுக்ரீவனும் தெரிவிக்கின்றார்கள். இத்தனை பெரிய வானரப் படை சமுத்திரத்தைக் கடந்து செல்வது எவ்வாறு? எவ்வாறு அணுகினால் சமுத்திரத்தைக் கடக்க முடியும்? என்று யோசனை கேட்கின்றார்கள்.

Sunday, May 25, 2008

கதை கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 51 - யுத்த காண்டம்


விபீஷணனை இகழ்ந்து பேசிய ராவணனைத் தொடர்ந்து அவன் மகனும், இந்திரனை வென்று புகழ் நாட்டியவனும் ஆன இந்திரஜித் தன் சிற்றப்பனை அரக்கர் குலத்திலேயே தைரியமும், வீரமும், துணிவும், வலிமையும் இல்லாதவன் என்று தூற்றுகின்றான். மேலும் இந்திரஜித் இந்த சாதாரண வலிமை பொருந்திய இரு அரச குமாரர்களையும் நம் அரக்கர் கூட்டத்தில் உள்ள பலவீனமானவே கொன்று விடுவான். நீர் கோழையைப் போல் நம்மைப் பயமுறுத்தும் காரணம் என்ன? தேவேந்திரனை நான் வென்றது உமக்குத் தெரியாதா? அவன் யானையான ஐராவதம் என்னால் பூமியில் தள்ளப் பட்டதை நீர் அறிய மாட்டீரா? " என்றெல்லாம் வீரம் பேசினான். பின்னரும் விபீஷணன் விடாமல் அவனைப் பார்த்து, " நீ இன்னும் சிறுவனே! உனக்கு நன்மை, தீமை பற்றிய பாகுபாடு அறிந்திருக்கவில்லை. அதனால் தான் உன் தந்தைக்கு அழிவு ஏற்படும் என்பது தெரியாமல் அழிவுக்கான பாதையையே நீயும் தேர்ந்தெடுக்கின்றாய். உன்னைப் போன்ற சிறுவனின் ஆலோசனையைக் கேட்கும் மன்னனும் அறிவற்றவனே! உண்மையில் உன் தகப்பனும், இந்த இலங்கையின் அரசனும் ஆன ராவணனின் நலனை நீ விரும்புவாயெனில் இவ்வாலோசனையைக் கொடுக்க மாட்டாய்! கெடுமதி படைத்தவனே! நீ உளறுகின்றாய்! எமனை ஒத்த ராமனின் வில்லில் இருந்து கிளம்பும் பாணங்கள் ஆன அம்புகளை வெல்லும் வல்லமை நம்மிடம் மட்டுமில்லை, யாரிடமும் கிடையாது. நீ அந்த ராமனின் வலிமையையும், தவத்தையும், ஒழுக்கத்தையும், தர்மத்தையும் அறியாமல் பேசுகின்றாய். தர்மம் அவன் பக்கம் இருக்கின்றது. சகல மரியாதைகளுடன் சீதையை அவனிடம் நாம் ஒப்படைத்தோமானல் நமக்கும், நம் அரக்கர் குலத்துக்கும் என்றென்றும் நன்மையே!" என்று சொல்கின்றான் விபீஷணன்.

ஆனால் பேரழிவுக் காலத்தை எட்டிவிட்டதாலோ என்னமோ,ராவணன் விபீஷணன் சொற்களால் பெரும் கோபமே அடைந்தான். " காட்டில் வளரும் சுதந்திரமான யானையானது எவ்வாறு தன் குலத்தைச் சேர்ந்த மற்றொரு யானையால் பிடிபட்டு மனிதர் வசம் ஆகின்றதோ,அது போல் நீயும் நம் குலத்தைச் சேர்ந்தவனாய் இருந்தாலும் இன்னொருவர் வசம் சென்று அவர்கள் பக்கமே பேசுகின்றாய். இது உனக்கு அழகல்ல. மேலும் மூவுலகிலும் என்னை மதிப்பதைக் கண்டும், தேவருலகையும் நான் வெற்றி கொண்டதைக் கண்டும், என் வல்லமையைக் கண்டும், என் விரோதிகள் அனைவரையும் நான் காலால் மிதித்துக் கொண்டு இருக்கும் பலம் பெற்றவன் என்பதும் உன்னால் சகிக்க முடியாமல் இருக்கின்றது விபீஷணா! யானை தன் தலையிலேயே தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போல் நீ உன் நிலையை
நீயே கெடுத்துக் கொள்கின்றாய். இது நல்லதல்ல. இந்தக் குலத்துக்கும் ஏற்றதல்ல. குலத்தைக் கெடுக்க வந்துள்ளாய் நீ." என்று சொல்ல, விபீஷணன்
உடனேயே தன் ஆசனத்தில் இருந்து எழுந்தான். அவனுடன் அவனை ஆதரிக்கும் நால்வரும் எழுந்தனர். "மன்னனே, உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கின்றாயே? நீ உன்னையே அடக்கிக் கொள்ளவில்லை. உனக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டதாலேயே உனக்கு வேண்டியவர்கள் சொல்லும் புத்திமதியை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கின்றாய். ஒருவனுக்கு மனதுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக இந்த அறிவுரையைச் சொல்லாமல் இருப்பவன், உண்மையானவன் அல்ல. நீ இறந்துவிடப் போகின்றாயே, என்ற கழிவிரக்கத்தினாலும், நீ எப்படியாவது பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தினாலும் நான் இவ்வளவு தூரம் உன்னிடம் எடுத்துச் சொன்னேன். உன் நலனை நினைத்து நான் சொன்ன வார்த்தைகளை உனக்குப் பிடிக்கவில்லை எனில் விட்டு விடு. ஆனால் எவ்வாறேனும் அரக்கர் குலத்தையும், உன்னையும் காத்துக் கொள். உனக்கு எல்லா நலன்களும் உண்டாகப் பிரார்த்திக்கின்றேன். நான் இல்லை எனினும் உனக்கு நன்மையே உண்டாகட்டும் என நினைக்கின்றேன். உன் மனம் போல் இன்புற்று வாழ்வாய்!" என்று சொல்லிவிட்டு விபீஷணன் தன் ஆதரவாளர்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

அதற்கு ஒரு முகூர்த்தம் என்று சொல்லப் படும் ஒன்றரை நாழிகைக்குப் பின்
அவன் ராம, லட்சுமணர்கள் இருக்கும் இடம் தேடி வந்தான். கூடியிருந்த
வானரர்கள் விண்ணிலே நிலை பெற்ற விபீஷணனையும்,அவனுடன் வந்த நால்வரையும் கண்டு திகைத்தனர்.

Wednesday, May 21, 2008

கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 50


மறுநாள் காலையில் தன் தமையன் ராவணனின் இருப்பிடம் நோக்கிச் சென்றான் விபீஷணன். மிக்க பாதுகாப்புடன், திறமை மிக்க அறிவிற் சிறந்த, துரோக சிந்தனை இல்லாத மந்திரி, பிரதானிகளைக் கொண்ட ராவணனின் அரண்மனையானது அந்தக் காலை வேளையில் மிக்க மகிழ்வுடன் கூடிய பெண்களுடனும், தங்கக் கதவுகளையும் கொண்டு விளங்கியதாம். வேத கோஷங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில் விபீஷணன் சென்று, அண்ணனை வணங்கிவிட்டு, அண்ணனின் ஆணைக்குப் பின்னர் ஆசனத்தில் அமர்ந்தான். அமர்ந்தவன், ராவணனுக்கு நல்வார்த்தைகளைக் கூறவேண்டி ஆரம்பித்தான். “அரசே, சத்துருக்களை அழிப்பவரே, சீதையை நீங்கள் இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் இருந்து, இலங்கையில் நல்ல சகுனங்களே காணப்படவில்லை. பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திவிட்டன. யாகத்துக்காக மூட்டப் படும் அக்னியானது, சுடர் விட்டு ஒளி வீசி எரியவில்லை. புகையும், தீப்பொறிகளும் கலந்து மங்கலாக இருக்கின்றது. யாகசாலைகளிலும், வேதம் ஓதும் இடங்களிலும் பாம்புகளும், எலும்புகளும் காணப்படுகின்றன. இன்னும் யானைகள் சோர்ந்து இருப்பதோடல்லாமல், ஒட்டகங்களும் முடி உதிர்ந்து சிகிச்சைக்குக் கட்டுப்படாமல் இருக்கின்றது. நரிகள் ஊளையிடுகின்றன, காக்கைகளும், கழுகுகளும் நகரில் பறந்து கொண்டிருக்கின்றன. நான் பேராசை எதுவும் கொண்டு உங்களுக்கு இதைச் சொல்லவில்லை. ஒருவேளை உண்மையை எடுத்துரைக்க மந்திரிமார்களுக்குத் தயக்கமாய் இருக்கின்றதோ என்னவோ? அல்லது பயத்தினால் சொல்லவில்லையோ? தெரியவில்லை. சீதையைத் துறந்துவிடுவது ஒன்றே சரியாகும். நன்கு ஆலோசித்து முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.” என்று சொன்னான்.

விபீஷணன் சொன்னதைக் கேட்ட ராவணன் சற்றும் கலங்காமல் “நீ சொன்னபடிக்கான சகுனங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ராமனிடம் சீதையைத் திரும்பக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. சென்று வா.” என்று விடை கொடுத்து அனுப்பி விட்டான் . பின்னர் தனக்கு ஆதரவும், தைரியமும் அளித்த மந்திரிமார்களிடம் சென்று மீண்டும் கலந்தாலோசிக்க எண்ணித் தன் அழகு வாய்ந்த ரதத்தில் ஏறிக் கொண்டு தன்னுடைய மந்திரிசபையில் கலந்து கொள்ளச் சென்றான். படைத் தளபதிக்கு நகரைப் பாதுகாக்கும்படி உத்தரவிட்ட ராவணன், தன் மந்திரி,பிரதானிகளைப் பார்த்துச் சொல்கின்றான்:”இன்பமோ, துன்பமோ, லாபமோ, நஷ்டமோ, சாதகமோ, பாதகமோ உங்கள் கடமையை உணர்ந்து நீங்கள் அனைவரும் செயலாற்ற வேண்டும். இதுவரை உங்களை எல்லாம் முன்வைத்து நான் செய்த அனைத்துக் காரியங்களும் வெற்றியையே கண்டிருக்கின்றன. ஆகவே, தொடர்ந்து நமக்கு வெற்றியே கிடைக்கும் எனவும் நம்புகின்றேன். மேலும் நான் செய்த ஒரு காரியம் பற்றிய விபரமும் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கும்பகர்ணன் இன்னும் தூக்கம் கலைந்து எழுந்திருக்கவில்லையே என யோசித்தேன். இப்போது தான் அவன் விழித்திருக்கின்றான் என்ற தகவல் கிடைத்தது. ஆறுமாதம் உறங்கி விழிக்கும் சுபாவம் கொண்ட அவன் விழித்திருக்கும் இவ்வேளையில் இது பற்றிப் பேச எண்ணி உள்ளேன். நான் தண்டக வனத்தில் இருந்து, ராமனின் மனைவியான சீதையைக் கடத்தி வந்தேன். என்னுடைய ஆசைக்கு அவள் இணங்க மறுக்கின்றாள், அவளைப் போன்ற பெண்ணை நான் இம்மூவுலகிலும் பார்க்கவில்லை. நெருப்பைப் போல் ஜொலிக்கின்றாள் அவள். நான் என்வசமிழந்துவிட்டேன், அவள் அழகில். ராமனைச் சந்திப்போம் என்ற எண்ணத்தில் அவள் என்னிடம் ஒரு வருஷம் அவகாசம் கேட்டிருக்கின்றாள்.” என்று நிறுத்தினான் ராவணன்.

உண்மையில் சீதை அவகாசம் எதுவும் கேட்கவில்லை. உறுதியாக ராவணன் ஆசைக்கு இணங்க மறுத்து விடுகின்றாள். ராவணன் தான் அவளுக்கு ஒரு வருஷம் அவகாசம் கொடுக்கின்றான். எனினும், தனக்குக் கீழ்ப்பட்டவர்கள் ஆன மந்திரி, பிரதானிகளிடம் உண்மைக்கு மாறாக இவ்விதம் சொல்லியதன் மூலம் தன் கெளரவம் நிலைநாட்டப் பட்டதாய் ராவணன் நினைத்தானாம். மேலும் சொல்கின்றான் ராவணன்:” அந்த ராமனும், அவன் தம்பியும், வானர வீரர்களுடன் கடல் கடந்து எவ்விதம் வருவார்கள்? ஆனால் அனுமன் வந்து இங்கே விளைவித்து
விட்டுப் போயிருக்கும் நாசத்தை நினைத்துப் பார்த்தால், எது, எப்போது, எவ்விதம் சாத்தியம் என நினைக்கக் கூட முடியாமல் இருக்கின்றது. நீங்கள் அனைவரும் நன்கு யோசித்து உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.” என்று கேட்கின்றான்.

அப்போதே பெரும் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்து வந்திருந்த கும்பகர்ணன் இவற்றை எல்லாம் கேட்டுக் கோபம் மிக அடைகின்றான்:” சீதையை அபகரித்துக் கொண்டு வந்தபோதே இவற்றை எல்லாம் நீங்கள் யோசிக்கவில்லையா?? அப்போது எங்களை யாரையும் எதுவும் நீங்கள் கேட்கவில்லையே? உங்கள் தகுதிக்கு உகந்த காரியமா இது? நன்கு யோசித்துச் செய்தீர்களா இதை? அப்படி இருந்தால் எந்த மன்னனுக்கும் தோல்வி என்பதே இல்லை. முறை தவறி நீர் செய்த இந்தக் காரியம், சற்றும் தகாத இந்தக் காரியம் உம்மால் செய்யப் பட்டது என்பது வெட்கத்துக்கு உரியது. உமக்கு இன்னும் ஆயுள் பலம் இருக்கின்றது போலும், அது தான் அந்த ராமன் உம்மை இன்னும் விட்டு வைத்திருக்கின்றான்.” என்று கடுமையான வார்த்தைகளால் ராவணனைச் சாடுகின்றான் கும்பகர்ணன்.

ராவணன் முகம் வாடக் கண்டு பொறுக்காத அவன் பின்னர், “சரி, சரி, நடந்தது, நடந்துவிட்டது. உமக்காக நான் அந்த இரு அரசகுமாரர்களைக் கொன்று உம்மை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றுகின்றேன். யார் அவர்கள்?? தேவாதி தேவர்களாய் இருந்தாலும் சரி, அவர்கள் இருவரையும்,அந்த வானரப் படையையும் நாசம் செய்துவிட்டு எனக்கு உணவாக்கிக் கொள்கின்றேன். அதன் பின்னர் சீதை உங்களுக்கு உட்பட்டுத் தான் தீரவேண்டும். நீங்கள் இன்பத்தை அனுபவிக்கலாம்.” என்று தேற்றுகின்றான். இதைக் கேட்கும் அவன் மந்திரிகளில் ஒருவன் ஆன மகாபார்ச்வன், சீதையைத் துன்புறுத்திப் பலவந்தமாய் அவளுடன் கூடி இன்பம் அனுபவியுங்கள். சீதையை வற்புறுத்துங்கள். எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.” என்று ராவணன் மனதில் ஆசைத் தீயை மூட்டி விடுகின்றான். அதைக் கேட்ட ராவணன், தனக்கு இடப்பட்ட சாபம் ,”எந்தப் பெண்ணையாவது பலவந்தமாய் அனுபவித்தால் தலை சுக்கு நூறாகிவிடும்” என்று இருப்பதை அவனிடம் நினைவு கூர்ந்தான். கடலை விடக் கடினமான, காற்றை விட வேகமான, நெருப்பை விடத் தகிக்கும் என்னுடைய ஆற்றலை இந்த ராமன்
சந்தேகப் பட்டுக் கொண்டு என்னுடன் மோத வருகின்றானா என்றெல்லாம் பேசினான் தசகண்டன். விபீஷணன் மீண்டும் அண்ணனுக்கு நல்லுரை கூற ஆரம்பித்தான். இந்த சீதை நாகப் பாம்பைப் போன்றவள். யாராவது விஷம் கக்கும் பாம்பை எடுத்துக் கொண்டாடுவார்களா? நீர் அவ்விதம் செய்கின்றீரே? இவளை உம் கழுத்தில் கட்டியது யார்? யார் இந்த யோசனையை உமக்குச் சொன்னது? சீதையை வானரப் படை இலங்கை வந்து சேருமுன்னரே ராமனிடம் ஒப்படையுங்கள். பேராபத்து நம்மைச் சூழ்ந்துவிடும்.” என்று சொல்லவும் பிரஹஸ்தன் விபீஷணனிடம், “யக்ஷர்கள், கின்னரர்கள், தானவர்கள், தேவர்கள் , நாகர்கள், அசுரர்கள் என்று யாரிடம் இருந்தும் நமக்கு எவ்வித ஆபத்தும் வரப் போவதில்லை. வரவும் வராது. இது இவ்வாறிருக்க மனிதர்களின் அரசன் ஆன ஒருவன், அதுவும் அரசாள முடியாமல் காட்டுக்கு வந்த ஒரு மனிதன், அவனால் நமக்கு என்ன நேரிடும்?” என்று சர்வ அலட்சியமாய்ப் பேசுகின்றான்.

விபீஷணன் அதற்குச் சொல்கின்றான்:”ஏனெனில் தர்மம் அவன் பக்கம் இருக்கின்றது. நியாயம் அவனிடம் இருக்கின்றது. அந்த ராமனை எவராலும் ஏன், தேவேந்திரனால் கூட வெல்ல முடியாது. அப்படிப் பட்ட ஆற்றல் படைத்தவன். அவனிடம் போய் நாம் மோத வேண்டாம். இது நம் நன்மைக்காகவே சொல்லுகின்றேன். அதுவும் அரக்கர் குலத் தலைவன் ஆன ராவணனைக் காப்பாற்றவே இதைச் சொல்கின்றேன். சீதை திருப்பி அனுப்பப் பட வேண்டும்.” என்று விபீஷணன் வற்புறுத்தவும், ராவணன் கோபம் மிகக் கொண்டு, நம் அரக்கர் குலத்தில் உன் போல் தொடை நடுங்கி, வீரம் இல்லாதவன் எப்படிப் பிறந்தானோ?” என்று சொல்லிவிட்டு, மீண்டும் சபையினரை பார்த்துப் பேசத் தொடங்குகின்றான்.

Tuesday, May 20, 2008

கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 49

அனுமன் வந்து சொன்னவைகளைக் கேட்ட ராமன் மிக்க மனமகிழ்ச்சி அடைந்தார். மேலும் மற்ற யாராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை அனுமன் நிறைவேற்றிவிட்டு வந்திருக்கின்றார். சமுத்திரத்தை அனுமனைத் தவிர வேறு யார் சென்றிருந்தாலும் கடக்க முடியாது என்பது உண்மை. ராவணனின் கடுங்காவலில் இருக்கும் இலங்கையில் நுழைந்து, சீதையையும் கண்டு பேசிவிட்டு, அங்கே கடும் விளைவுகளையும் ஏற்படுத்திவிட்டு உயிருடன் திரும்பி இருக்கின்றான் அனுமன் என்றால் அவன் ஆற்றல் எப்படிப் பட்டது என்பதை உணர முடிகின்றது. இந்த அனுமனுக்குத் தக்க பரிசளிக்கக் கூடிய நிலைமையில் தற்சமயம் நான் இல்லையே என்பதை நினைத்து வருந்துகின்றேன் என்ற ராமன் அனுமனை நெஞ்சாரக் கட்டித் தழுவினார். பின்னர் சீதையை என்னமோ தேடிக் கண்டு பிடித்தாகிவிட்டது. ஆனால் வானர வீரர்கள் அனைவரையும் எவ்வாறு அழைத்துச் சென்று சமுத்திரத்தைக் கடப்பது என்றே புரியவில்லையே என்ற கவலையில் ராமன் சோகத்தில் ஆழ்ந்தார். சுக்ரீவன் ராமனின் மனக்கவலையை விரட்டி அடிக்கும் வகையில் பேசத் தொடங்கினான்: "மிக மிகச் சராசரியான மனிதன் போல் நீங்கள் அடிக்கடி மனக் கவலைக்கு இடமளிக்கக் கூடாது. சீதை எங்கிருக்கின்றாள் என்பது தெரிந்து விட்டது. எதிரியின் நிலைமையும் நமக்குத் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்துவிட்டது. தாங்களோ ஆற்றல் மிகுந்தவர். அனைத்து அறிந்தவர். அப்படி இருக்கையில் கவலை வேண்டாம், சமுத்திரத்தைக் கடப்போம், இலங்கையை அடைவோம், ராவணனை வீழ்த்துவோம், சீதையை மீட்போம். இலங்கையை அடைய சமுத்திரத்தை எவ்வாறு கடப்பது என்ற ஒன்றே தற்சமயம் யோசிக்க வேண்டிய ஒன்றாகும். தாங்கள் அது பற்றிச் சிந்தியுங்கள். ஒரு பாலம் அமைக்க முடியுமா என யோசிக்கலாம்." என்று கூறுகின்றான்.

ராமனும் சுக்ரீவன் கூறியதை ஒத்துக் கொண்டு, தன் தவ வலிமையால் சமுத்திரத்தை வற்றிப் போகச் செய்யலாம், அல்லது, பாலமும் அமைக்கலாம் என்பதையும் ஒத்துக் கொள்கின்றார். மேலும், மேலும் அனுமனிடம் இலங்கையின் அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள், செல்வம், படைபலம், வீரர்பலம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் விவாதிக்கின்றார். அனுமன் அவரிடம், அங்கதன், த்விவிதன், நீலன், மைந்தன், ஜாம்பவான், நளன், ஆகியோரே போதும் இலங்கையை வென்று சீதையை மீட்டும் வருவதற்கு. இவ்வாறிருக்கையில் வானரப் படைகள் சமுத்திரத்தைக் கடப்பதும் சாத்தியமான ஒன்றே என்று தெளிவாய் எடுத்துக் கூற ராமனும் மன அமைதி அடைந்து, படைகளைத் திரட்டி அணி வகுக்குமாறு சுக்ரீவனை உத்தரவிடச் சொல்லுகின்றார். நீலன் என்ற வானரத் தளபதியின் தலைமையில் படைகள் அணிவகுக்கப் பட்டு, யார், யார், எந்த, எந்தப் படைக்குப் பொறுப்பு எனவும் தீர்மானிக்கப் படுகின்றது. வானரவீரர்கள் கிளம்புகின்றனர் தென் திசை நோக்கி. ஒரு மாபெரும் அலையானது சமுத்திரத்தில் இருந்து பொங்கி வேகமாய்க் கரையை நோக்கி வருவதைப் போன்ற வேகத்துடனும், வீரத்துடனும், ராமனுக்கு ஜெயம், சீதாராமனுக்கு ஜெயம் என்ற ஜெய கோஷங்களை எழுப்பிக் கொண்டு வானரப் படையானது தென் திசை நோக்கிச் செல்கின்றது. வழியிலே காணப்பட்ட நற்சகுனங்கள் லட்சுமணன் மனதை நிறைக்கின்றது. காற்றானது, இளந்தென்றலாகவும் தென் திசை நோக்கி வீசிக் கொண்டும், பறவைகள் இனிமையான குரலில் கூவிக் கொண்டும், சூரியனானது மேக மூட்டமில்லாமல் ஒளி வீசிக் கொண்டும் காணப்பட்டான்.
வானரப்படை நதிகளைக் கடந்து, மலைகளைக் கடந்து, காடுகளைக் கடந்து சஹ்யாத்திரி மலைத் தொடர்களையும் கடந்து, மலய மலைப்பகுதிகளையும் தாண்டி மஹேந்திர மலையையும் கடந்து, சமுத்திரக் கரையை அடைந்தது. சமுத்திரக் கரையில் படைகள் ஓய்வெடுத்துக்கொள்வதற்காக முகாமிட்டார்கள். ராமனும், லட்சுமணனும் அடுத்துச் செய்ய வேண்டியவைகள் பற்றி வானர வீரர்களில் முக்கியமானவர்களுடன் கலந்தாலோசிக்கின்றனர். ராமருக்கு மீண்டும் சீதையின் நினைவு வந்து துக்கம் பெருக்கெடுக்க, லட்சுமணன் அமைதிப் படுத்துகின்றான் அவரை. அப்போது அங்கே இலங்கையில்????????

இலங்கையில் அரக்கர்கள் ராவணன் தலைமையில் அரசவைக் கூட்டம் ஒன்று ஏற்படுத்தினார்கள். அனைத்து முக்கிய அரக்கர்களையும் கலந்தாலோசித்தான் ராவணன்.:" யாராலும் நுழையக் கூட முடியாத கடினமான கல்கோட்டை போன்றிருந்த இலங்கைக்குள் ஒரு வானரன் நுழைந்தது மட்டுமில்லாமல், சீதையையும் பார்த்துவிட்டு நகருக்கும் நாசத்தை விளைவித்துச் சென்றிருக்கின்றான். ராமன் விஷயத்தில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் எனக்கு எடுத்துக் கூறுங்கள். நண்பர்கள், சகோதரர்கள், மற்ற உறவினர்கள், மற்ற உயர்ந்தவர்கள் அனைவரையும் ஆலோசித்துவிட்டுப் பின்னர் தெய்வத்தையும் நம்பிச் செயல் பட்டாலே சிறப்புக் கிடைக்கும் என்பது உறுதி. தானாக முடிவெடுப்பவன் சிறந்த அரசனாய்க் கருதப் படமாட்டான், இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? அறிவிற் சிறந்தவர்களே! தன் தம்பியோடும், பெரும் வானரப் படையோடும் ராமன் இலங்கையை நோக்கிப்புறப்பட்டிருக்கின்றானாம். சமுத்திரக் கரையை வந்தடைந்துவிட்டானாம். அந்த ராமனின் தவ வலிமை அவ்வளவு வலியதாம். அவன் தவ வலிமையால் சமுத்திரத்தையே வற்றச் செய்தாலும், செய்யலாம் என்று பேசிக்கொள்கின்றார்களே? இந்நிலையில் இந்த இலங்கை மாநகரையும், நம் படைகளையும் நான் காக்கும் வழிதான் என்ன?" என்று கவலையுடனேயே இலங்கேஸ்வரன் கேட்கின்றான். அதற்கு அவன் மந்திரி, பிரதானிகள் ஆன அரக்கர்களோ ராவணனைப் பாராட்டிப் பேசுகின்றார்கள்.

"இலங்கேஸ்வரா, ராவணா, உன் வீரம் சொல்லவும் முடியுமோ? நாகர்கள், யக்ஷர்கள், யமன், வருணன், வருணனின் மகன்கள், குபேரன், அவன் செல்வம் தானவர்களின் தலைவன் மது, தேவேந்திரர்களின் தலைவன் இந்திரன் போன்ற பலரை நீங்கள் வெற்றி கொண்டுள்ளீர்கள் அரசே! பெரும் ஆற்றல் படைத்த பல க்ஷத்திரியர்களை நீங்கள் வென்றுள்ளீர்கள். கவலைக்கே இடமில்லை. தாங்கள் இங்கேயே இருந்தாலே போதுமானது. இந்திரஜித் ஒருவனே போதும் அனைவரையும் அழிக்க. சமுத்திரத்தைக் கடக்கும் முன்பே வானர வீரர்களை அடக்கிவிட்டு வெற்றியோடு திரும்பி வருவான்." என தைரியம் சொல்லப் பின்னர் அவன் மந்திரிகள் ஆன பிரஹஸ்தன், துர்முகன் போன்றோரும் அதை ஆதரித்தே பேசுகின்றனர். இவர்களில், வஜ்ரதம்ஷ்ட்ரன் என்னும் அரக்கன் கூறுகின்றான்: தேர்ந்தெடுத்த அரக்கர்களை மனிதர்களாய் மாறும் வல்லமை படைத்தவர்களை மனிதர்களாய் மாறச் சொல்லி, ராமனை அடைந்து பின் வரூம் வார்த்தைகளைத் தெரிவிக்க வேண்டும்:'ராமா, உன் தம்பியாகிய பரதனால் நாங்கள் அனுப்பப் பட்டு படையோடு வந்துள்ளோம். பரதனும் வந்து கொண்டிருக்கின்றார். பரதனைச் சந்திக்கும் ஆவலில், தன் படையோடு ராமன் பரதன் வரும் வழிக்குச் செல்லும்போது, நாம் காத்திருந்து சூழ்ச்சியால் முறியடிப்போம்." என்று யோசனை சொல்லுகின்றான்.
கும்பகர்ணனின் மகன் ஆன நிகும்பன் தான் ஒருவனே தனியாய்ச் சென்று, அனைவரையும் அழித்துவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றான். அரக்கர்கள் அனைவருக்கும் வீரம் பொங்க அனைவரும் வெற்றிக் கோஷம் இட்டுக் கொண்டு, போருக்குச் செல்லலாம் எனக் கோஷம் இடுகின்றனர். அப்போது விபீஷணன்,ராவணனின் தம்பியானவன் எழுந்து, தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பேசத் தொடங்கினான். :"சாம, தான, பேத, தண்டம் போன்ற நான்கு வழிகளில் முதல் மூன்று வழிகளினால் பயன் இல்லை எனத் தெரிந்தால் மட்டுமே நான்காவது வழியைப் பிரயோகிக்க வேண்டும். மேலும் தெய்வத்தால் கைவிடப் பட்டவர்கள், அஜாக்கிரதைக் காரர்கள் போன்றவர்களிடம் பிரயோகிக்கலாம் என்று தர்ம சாத்திரம் சொல்லுகின்றது. ஆனால் ராமன் அப்படிப் பட்டவர்களில் இல்லை. வெற்றிக்கும், வீரத்துக்கும் இலக்கணம் ஆன அவரை எவ்வாறு எதிர்ப்பது? சினத்தை வென்றவரும், தெய்வபலம் பொருந்தியவரும் ஆக இருக்கின்றாரே? அதை யோசியுங்கள். நியாயமும், தர்மமும் அவர் பக்கமே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ராமன் தானாக வலிய வந்து நம் மன்னருக்கு எந்தக் குற்றமும் செய்யவில்லையே? அவர் மனைவியை நம் மன்னர் அபகரித்து வந்தார் சூழ்ச்சியினால். அதன் பின்னரே அவர் நமக்கு எதிரியாகி இருக்கின்றார். கரன் கொல்லப் பட்டதும் கூட தன் வரம்பு கடந்து நடந்து கொண்டதாலேயே தானே? மேலும் தன்னைத் தாக்க வருபவர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் இயல்பு அனைவருக்கும் இருக்கின்றதல்லவா?

"மாற்றான் மனைவியான சீதையை அரசன் அபகரித்து வந்திருக்கின்றபடியாலே தானே நமக்கு இத்தகைய துன்பம் விளைகின்றது? சீதையால் நமக்குப் பெரும் விபத்தே வந்து சேரும். அவளை அவளுக்கு உரிய இடத்தில் சேர்ப்பிக்க வேண்டியதே நம் கடமை ஆகும். ராமரை விரோதித்துக் கொண்டு, பெரிய பட்டணமும், செல்வம் கொழிக்கும் இடமும் ஆன இந்த இலங்கையை அவர் படை வீரர்கள் அழிப்பதில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வானர வீரர்களின் தாக்குதலில் இருந்தும் நம்மையும், நம் உறவினர்களையும், படை வீரர்களையும், நம் நாட்டையும், குடி மக்களையும் நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். ஆகவே சீதை திருப்பி அனுப்பப் படவேண்டும். நாம் அனைவருக்கும் நல்லதே செய்வோம். சீதை ராமனிடம் திரும்பிப் போகட்டும்." என்று சொன்னான். ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு எந்தப்பதிலும் சொல்லாமல் ராவணன் திரும்பித் தன் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்தான். மறுநாள்?????

Monday, May 19, 2008

கதை கதையாம் காரணமாம் ராமாயணம்,


கொஞ்சமே கொஞ்சம், கம்பரையும், அருணகிரியையும் பார்த்துவிட்டு மேலே தொடரலாம். ஏனெனில் பின்னால் வரக் கூடிய அக்னிப்ரவேச நிகழ்ச்சிகளுக்கும், தற்சமயம் வால்மீகியிலும் அனுமன் "கண்டேன் சீதையை" என்னும் வண்ணமே சொல்லி இருக்கின்றானா என்றும் தெரிந்து கொண்டே செல்லலாம் என்ற எண்ணம். பலருக்கும் கம்பராமாயணப் பரிச்சயமே உள்ளது என்று இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆகவே தான் சில சம்பவங்களையும், குறிப்புகளையும் வால்மீகி எழுதியபடி எழுதினால் கொஞ்சம் முரணாய்த் தோற்றம் அளிக்கின்றது. உதாரணமாய் ராவணன் - சீதை அசோகவனச் சந்திப்பின் போது ராவணன் சீதையிடம் ராமனைக் கொன்று விட்டு உன்னைக் கொண்டு வந்திருந்தேனானால், நீ உயிர் தரித்திருக்கமாட்டாய், நானும் உயிர் தரித்திருக்க மாட்டேன் என்று ராவணன் சொல்லுவதாய்க் கம்பர் சொல்லுகின்றார். அதனாலேயே வஞ்சகமாய் சீதையைக் கடத்திவந்ததாய்ச் சொல்லுவான். மேலும், லட்சுமணனைப் பழித்துப் பேசியது பற்றியும் வால்மீகி ராமாயணத்தில் சீதை வருந்துவதாய் எந்தத் தகவலும் இல்லை. ஆனால் கம்பர் அதுபற்றிக் குறிப்பிடுகின்றார்:
"என்னை, நாயகன், இளவலை, எண்ணலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு, "அறிவு இலள்" எனத் துறந்தானோ!
முன்னை ஊழ்வினை முடிந்ததோ?" என்று என்று முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து ஆர் உயிர் பதைப்பாள்" என்று சீதை புலம்புவதைக் குறிப்பிடுகின்றார்.

சூடாமணியைத் தன் தலையில் இருந்தே சீதை கழற்றிக் கொடுப்பதாய் வால்மீகி கூறக் கம்பர் புடவைத் தலைப்பில் இருந்து அவிழ்த்துக் கொடுப்பதாயும், அனுமனைச் சிரஞ்சீவியாய் இருப்பாய் என்று ஆசீர்வதிப்பதாய்க் கூறுகின்றார். ஆனால் வால்மீகியில் அவ்வாறு இல்லை. வால்மீகிதான் மூலம் என்பதை நினைவில் இருத்திக் கொண்டு படிப்பது கொஞ்சம் வசதியாக இருக்கும். அருணகிரி நாதரும் சுந்தரகாண்டத்தைப் பற்றிய வர்ணனையில் தன் கதிர்காமத் திருப்புகழில் கீழ்க்கண்டவாறு சொல்கின்றார். "உடுக்கத் துகில்" என ஆரம்பிக்கும் அந்தத் திருப்புகழில் நாலாதிசைகளுக்கும் சுக்ரீவன் ஆட்களை அனுப்புவதைச் சொல்கின்றார் இவ்விதமாய்:
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக
குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் // இவ்விதம் மேற்குத் திசை, வடக்குத் திசை, கிழக்குத் திசையைக் குறிப்பிட்டுவிட்டுக் குறிப்பில் குறி காணும் மாருதி என அனுமனைச் சிறப்பித்தும் கூறுகின்றார். "இனித் தெற்கொரு தூது" என்பதை ஒரு உரை ஆசிரியர் இருவிதமாய்ப் பொருள் கொள்ளலாம் எனவும் சொல்கின்றார். இனி தென் பகுதிக்கு ஒரு தூது என்பதோடு அல்லாமல், ராமன் ஆஞ்சநேயனின் தூதைப் பற்றி, " இனித்து எற்காக ஒரு தூது" என்று தனக்காக அனுமன் மன மகிழ்ச்சியோடு செல்லுவதாய்க் கூறுவதாயும் ஒரு பொருள் சொல்லுகின்றார்.

//குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ//

அதே போல் சம்பாதி கொடுத்த குறிப்பின்படி சீதை இருக்குமிடம் தெரிந்தும், ஒரு கணம், ஒரே கணம் மண்டோதரியைச் சீதை என அனுமன் நினைத்துத் தடுமாறுவதையும், இங்கே "குறிப்பில் குறி போனபோதிலும்" என்ற வரிகள் சொல்லுவதாய்த் தெரிய வருகின்றது. பாடலின் கடைசியில், கடல் கடந்து சென்ற அனுமன், அசோகவனத்தில் சீதையைக் கண்டு, ராமனின் கணையாழியைக் கொடுத்து, சீதையிடம் இருந்து சூடாமணியைப் பெற்று வந்த தகவல்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

//அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் //

எவருக்கும் அஞ்சாத அனுமன் மாது உறையும் வனமான அசோகவனம் செல்லுவதையும், அங்கே கணையாழி கொடுப்பதையும், இந்தத் திருப்புகழ் சுட்டிக் காட்டுகின்றது.

//றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே//

சீதை ராமனைத் தவிர, யாரையும் தீண்ட மாட்டேன் என்று அனுமனிடம் சொன்னதையும், ராவணன் பலவந்தமாய்த் தூக்கி வந்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுமாய்க்கேட்டுக்கொள்கின்றேன். இனி யுத்த காண்டம் தொடரும்.

திரும்பி ஒரு முறை அனைத்தையும் பார்த்துக் கொள்வதற்காக இந்தப் பதிவு. நன்றி.

Sunday, May 18, 2008

கதை, கதையாம் காரணமாம் ராமாயணம் பகுதி 48

இலங்கையை எரித்தது சரியே என மன அமைதி பெற்ற அனுமன், அசோகவனத்தில் சீதைக்குத் துன்பம் எதுவும் நேரிடைவில்லை என இன்னும் அதிக அமைதியுடனும், ஆறுதலுடனும் விடைபெற்றுக் கொண்டு, சீதையின் செய்தியுடன், மீண்டும் இலங்கையை விட்டுவிட்டு, வத இடம் நோக்கிக் கிளம்பினார். அரிஷ்டம் என்னும் பெயர் கொண்ட மலைமீது ஏறி நின்றுகொண்டு, தன் உருவை வளர்த்துக் கொண்டு கால்களைப்பலம் கொண்ட வரைக்கும் எம்பினார். மலை மண்ணோடு மண்ணாக நொறுங்க அனுமன் விண்ணில் கிளம்பினார். வானவெளியில் மிக வேகமாய்ப் பறந்து சென்று அனுமன் கடலின் அக்கரையை விரைவில் அடைந்து மகேந்திரமலையைக் கண்டதும், மகிழ்ச்சியில் ஒரு ஹூங்காரம் எழுப்பினார். அந்த ஹூங்காரத்தைக் கேட்ட வானரர்கள், அனுமன் திரும்பிவிட்டதை மட்டுமல்லாமல் வெற்றியோடு வருகின்றான் என்ற நிச்சயமும் கொண்டனர். ஜாம்பவான், அனுமன் எழுப்புகின்ற ஒலியே அவன் போன காரியத்தில் வெற்றி பெற்றான் என்பதைக் காட்டுகின்றது என்று மற்ற வானரர்களிடம் உற்சாகத்துடன் சொன்னார். காற்றை விலக்கிக் கொண்டு அனுமன் வேகமாய் வந்த காட்சியானது, கார்கால மேகம் விரைவில் விண்ணைத் தன் கூட்டங்களால் நிரப்புவது போல் காட்சி அளித்ததாம். இரு கரம் கூப்பி நின்ற வானரர்கள் நடுவே மகேந்திர மலையின் மீது இறங்கிய அனுமன் முதலில் ஜாம்பவானையும், இளவரசன் அங்கதனையும் வணங்கிவிட்டுப் பின்னர் "கண்டேன் சீதையை" என்ற நற்செய்தியைத் தெரிவித்தார். பின்னர் அங்கதனின் கையைப் பற்றிக் கொண்டு கீழே அமர்ந்த அனுமன், தான் கிளம்பியதில் இருந்து, அசோகவனத்தில் சீதையைத் தான் சந்தித்ததையும், சீதை அங்கு அரக்கிகளின் காவலில் இருப்பதையும், ராமரை நினைத்து வாடிக் கொண்டிருப்பதையும் தெரிவிக்கின்றார்.

பின்னர் அங்கதன் அனுமனைக் கண்டு, மிக்க துணிவோடு இக்காரியத்தை நீ நிகழ்த்தி உள்ளாய். உனக்கு நிகரானவன் எவரும் இல்லை. நீ செய்த இந்தக் காரியத்தினால் வானர குலத்துக்கே பெருமை சேர்த்துவிட்டாய். உன்னால் வானரக் குலம் அழியாப் புகழ் பெறும் என்றெல்லாம் பராட்டுகின்றான். பின்னர் அனைவரும் அமர்ந்து யோசனை செய்தனர். ஜாம்பவான், அனுமனைப் பார்த்து, அனைத்து சம்பவங்களையும் விபரமாய்ச் சொல்லுமாறு கேட்க, அனுமனும் அவ்வாறே சொல்கின்றான். ராமனிடம் எதைச் சொல்லலாம், எதைச் சொல்லக் கூடாது என்பதையும் இங்கேயே முடிவு செய்யுமாறும் கூறுகின்றான் ஜாம்பவான். அதன்படியே அனைத்தையும் கூறிய அனுமன் மேலும் சொல்கின்றான்: "சீதையின் தூய்மை வியக்கும் வண்ணம் உள்ளது. அதைக் கண்டதுமே என் மனம் நிறைந்துவிட்டது. விரத வலிமை ஒன்றாலேயே மூவுலகையும் பொசுக்கும் வல்லமை கொண்டவர் அவர் என்பதை அறிந்தேன். ராவணன் பெற்ற பெரும் வரங்கள் காரணமாகவே சீதையைத் தீண்டித் தூக்கிச் சென்றும் அவன் இன்னும் பொசுங்காமல் இருக்கின்றான். எனினும், ராவணனையும், அவன் மகன் இந்திரஜித், சகோதரன் கும்பகர்ணன் அனைவரையும் என் ஒருவனாலேயே எதிர்க்க முடியும். ஜாம்பவானாகிய உம்மை எதிர்க்கும் வல்லமை கொண்டவனும் எவனும் இல்லை. அதே போல் வாலியின் மகன் ஆகிய அங்கதனும் திறமை கொண்டவனே. மிகப் பெரிய வீரன் ஆகிய நீலனும் நம்மிடையே இருக்கின்றான். இப்படிப் பெரும் வல்லமை கொண்ட நாம் அனைவரும் கூடி இருக்கின்றோம். சீதையின் துயரத்திற்கு முடிவு கட்ட ஆலோசனை செய்யலாம்." என்று கூறுகின்றான்.

உடனேயே அங்கதன் சீதையைப் பார்த்தாகிவிட்டது, ஆனால் மீட்டு வரவில்லை, என்று கிஷ்கிந்தையில் போய்ச் சொல்ல முடியுமா? தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நிகரான சக்தி படைத்த நாம் சென்று அரக்கர்களை அழித்து, ராவணனைக் கொன்று, சீதையை மீட்டுக் கொண்டே கிஷ்கிந்தை திரும்பவேண்டும். அனுமனோ ஏற்கெனவே பெரும் நாசத்தை இலங்கையில் விளைவித்துள்ளான். நாம் சென்று சீதையை மீட்டு வருவதே பாக்கி. இதை விட்டுவிட்டு, நாம் சென்று ராம, லட்சுமணர்கள் கடல் கடந்து சென்று சீதையை மீட்டு வரட்டும் என்று சொல்வது சரியல்ல. இது நாமே செய்துவிடலாம், கிளம்புங்கள், சீதையை மீட்டுக் கொண்டே, நாம் கிஷ்கிந்தை சென்று ராம, லட்சுமணர்களைச் சந்திப்போம்." என்று சொல்கின்றான். ஜாம்பவான், வயதில் மட்டுமன்றி, புத்தியிலும் மூத்தவர் என்பதற்கிணங்க, அங்கதனைப் பார்த்துச் சொல்கின்றார்:" நீ விவேகத்துடன் பேசவில்லை அங்கதா, நமக்கு சீதையை மீட்டு வருமாறு கட்டளை ஒன்றும் இடப்படவில்லை என்பதை அறிவாய் அல்லவா? நாம் மீட்டுச் சென்றால் கட்டாயம் ராமர் மனம் வருந்துவார். தன்னைத் தவிர, வேறு யார் சீதையை மீட்டு வந்தாலும் ராமர் விரும்பமாட்டார் என்றே கருதுகின்றேன். மேலும் எல்லா வானரர்கள் முன்னிலையிலும் ராமர் செய்துள்ள சபதத்தை மறந்துவிட்டாயா? நாம் சீதையை மீட்டு வந்துவிட்டால், அந்தச் சபதம் என்னாவது? அனுமனின் சாதனைகள் வீணாகிவிடும். நாம் சென்று அனுமனின் சாதனையைச் சொல்லுவோம். ராமனின் தீர்மானப் படி முடிவெடுப்போம்." என்று சொல்ல அனைவரும் அதை ஏற்றுக் கிஷ்கிந்தை புறப்படுகின்றார்கள்.
உற்சாகம் கொண்ட வானரர்கள் அங்கிருந்து கிளம்பி மதுவனம் என்னும் நந்தவனத்தை அடைந்து, மகிழ்ச்சியில் இன்னது செய்கின்றோம் என்பதே அறியாமல் அந்த வனத்தில் புகுந்து தேன் பருகும் ஆசையில் அங்கிருந்த பழமரங்களை முற்றுகை இட்டனர். அந்த வனம் சுக்ரீவனின் மாமன் ஆன ததிமுகன் என்பவனுடையது. வானரங்கள் அங்கே வந்து பெரும் நாசத்தை விளைவித்து, மரங்களிலிருந்த பழங்களையும், கனிகளையும் உண்ணவே, போதை அதிகம் ஆகி, அங்கே உள்ள காவலாளிகளைத் தாக்க ஆரம்பித்தனர். தடுத்த ததிமுகனும் தாக்கப் படவே அவன் சென்று சுக்ரீவனிடம் நடந்ததைச் சொல்லுகின்றான். யாரும் நுழையாதவாறு தடுக்கப்பட்டுக் காவல் காக்கப் பட்டிருந்த மதுவனம் நம் வானரர்களாலேயே அழிக்கப் பட்டது, எங்களையும் கடுமையாகத் தாக்கிவிட்டனர். மதுவனம் அழிந்தது." என்று சொல்லவே லட்சுமணன் அப்போது அங்கே வந்தான். ததிமுகனைப் பார்த்துவிட்டு என்ன விஷயம் என லட்சுமணன் விசாரிக்கவே, சுக்ரீவன் தன்னால் அனுப்பப்பட்ட வானரவீரர்கள் மதுவனத்தை அழித்தது பற்றிச் சொல்லி, தாங்கள் சென்ற காரியத்தில் வெற்றி பெற்றிருந்தால் ஒழிய இந்த வானரங்களுக்கு இத்தகைய தைரியம் வந்திருக்காது. மேலும் அனுமனே இதைச் சாதித்திருப்பான், மற்றவர்கலுக்கு இத்தகைய தைரியம் இல்லை. ஆகவே போன காரியத்தில் வெற்றி அடைந்திருக்கின்றனர்," என்று சொல்லவே அருகில் இருந்த ராமனும், லட்சுமணனும் மகிழ்ந்தார்கள். வானரர் கூட்டத்துக்கு சுக்ரீவனால் அழைப்பு அனுப்பப் பட்டது. சுக்ரீவன் அனைத்து வானரங்களையும் கலந்து ஆலோசித்துவிட்டுப் பின்னர் அனைவரையும் கிஷ்கிந்தை செல்ல உத்தரவிட அனைவரும் கிளம்பினார்கள்.
பெரும் மகிழ்வோடு வானரர்கள் வந்து கொண்டிருக்கும் சப்தம் கேட்ட சுக்ரீவன், அவர்கள் குரலின் மகிழ்வில் இருந்து வெற்றி உறுதியாகிவிட்டது, ராமா, உனக்கு மங்களம் உண்டாகட்டும். காலக்கெடு கடந்தும் கூட அவர்கள் என்னைத் தேடி வருகின்றார்கள் எனில் எடுத்த காரியத்தைச் சாதித்து விட்டார்கள் என்றே அர்த்தம். இல்லை எனில் என் அண்ணன் மகன் ஆன அங்கதன் என் முன்னே வரமாட்டான். இனி கவலை வேண்டாம். என்று சொல்கின்றான். அங்கதன், அனுமன் தலைமையில் வானரர்கள் வந்து சேர்ந்தனர். அனுமன் அனைவரையும் தலை தாழ்த்தி வணங்கிவிட்டுப் பின்னர் "கண்டேன், சீதையை!" என்று கூறிவிட்டு, அவள் உடல் நலத்தோடு இருக்கின்றாள் என்ற நற்செய்தியையும் தெரிவிக்கின்றான் முதலில். மேலும் சீதைக்கு ராவணன் விதித்திருக்கும் காலக்கெடுவையும் குறிப்பிடுகின்றான் அனுமன். ராமன் அனைத்து விபரங்களையும் கிளம்பியதில் இருந்து சொல்லுமாறு கேட்க, அவ்வாறே அனுமன் தான் கொண்டு வந்திருந்த சூடாமணியை ராமனிடம் கொடுத்துவிட்டுப் பின்னர் தன் பிரயாண விபரங்களைத் தெரிவிக்கின்றான். கடலைக் கடந்து வந்து தன்னை ராமன் மீட்கவேண்டும் என சீதை சொன்னதையும், அவள் அளித்த சூடாமணியையும் கண்ட ராமன் கண்ணில் இருந்து அருவி போல் நீர் பொங்கியது.

அந்தச் சூடாமணியை மார்போடு அணைத்துக் கொண்ட ராமன், இந்த நகை ஜனகரால் சீதைக்கு அளிக்கப் பட்டது. ஜனகருக்கு இதை இந்திரன் கொடுத்தான். இந்த நகையைப் பார்க்கும்போதெல்லாம் சீதை கண்முன்னே வருகின்றாள். என் தந்தை ஆன தசரதச் சக்கரவர்த்தியும், சீதையின் தகப்பன் ஆன ஜனகனும் நினைவில் வருகின்றனர். அனுமனே, சீதை என்ன சொன்னாள், எப்படி இருந்தாள், அவள் கூறிய வார்த்தைகள் என்ன என்பதை நீ எனக்கு இன்னும் விபரமாய் எடுத்துச் சொல்வாயாக, என் மனமானது அதில் கொஞ்சம் ஆறுதல் அடையும்f எனத் தோன்றுகின்றது. என்று அனுமனை மீண்டும் விபரம் கேட்க, அனுமன் சீதைக்கும், தனக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளை விபரமாய்க் கூற ஆரம்பிக்கின்றான்.

இத்துடன் சுந்தரகாண்டம் முடிந்தது. இனி யுத்த காண்டம். நாளை முதல்

Friday, May 16, 2008

கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் பகுதி 47.


ராவணன் சபையில் அமரவைக்கப்படாமல் கட்டப் பட்ட நிலையிலேயே அனுமன் பேசியதாய் வால்மீகி குறிப்பிடுகின்றார். வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு உட்காருவது எல்லாம் பின்னால் வந்திருக்கின்றது என நினைக்கின்றேன். ராவணனும் நேரிடையாக அனுமனைக் கேள்விகள் கேட்கவில்லை, தன் அமைச்சன் ஆகிய பிரஹஸ்தனை விட்டே கேட்கச் சொல்லுகின்றான். கம்பர், ராவணனும், அனுமனும் நேரிடையாகப் பேசிக் கொண்டதாய் எழுதி இருக்கின்றார். இனி, பிரஹஸ்தனின் கேள்விகளும், அனுமனின் பதில்களும்: "ஏ, வானரனே, உனக்கு நலம் உண்டாகட்டும், நீ யாரால் அனுப்பப் பட்டவன்? தேவேந்திரனா, குபேரனா, வருணனா, அந்த மகாவிஷ்ணுவா, பிரமனா? யார் அனுப்பி இருந்தாலும் உள்ளது உள்ளபடிக்கு உண்மையைச் சொல்லிவிடு, உருவத்தில் வானரன் ஆன உன் சக்தி பிரம்மாண்டமாய் இருக்கின்றது. சாதாரண வானர சக்தி இல்லை இது. பொய் சொல்லாதே!" என்று கேட்க, அனுமன் நேரிடையாக ராவணனைப் பார்த்தே மறுமொழி சொல்லத் தொடங்குகின்றார். "நான் ஒரு வானரன், நீங்கள் கூறிய தேவர்கள் யாரும் என்னை அனுப்பவில்லை. ராவணனைப் பார்க்கவேண்டியே நான் வந்தேன். அரக்கர்களின் தலைவன் ஆகிய ராவணனைப் பார்க்கவேண்டியே அசோகவனத்தை அழித்தேன். அரக்கர்கள் கூட்டமாய் வந்து என்னைத் தாக்கியதால், என்னைத் தற்காத்துக் கொள்ளும்பொருட்டு, நான் திரும்பத் தாக்கியதில் அவர்கள் அழிந்து விட்டனர். என்னை எந்த ஆயுதங்களாலும் கட்டுப்படுத்த முடியாது. பிரம்மாஸ்திரத்துக்கு நான் கட்டுப்பட்டதுக்குக் கூட ராவணனைப் பார்க்கவேண்டும் என்பதாலேயே. இப்போது அதில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன், எனினும், நான் அரக்கர் தலைவன் ஆன உன்னைப் பார்க்கவே இவ்வாறு கட்டுப்பட்டது போல் வந்துள்ளேன். ராம காரியமாய் வந்திருக்கும் நான் அவருடைய தூதனாக உன் முன்னிலையில் வந்துள்ளேன் என்பதை அறிவாயாக!" என்று கூறினார்.

பின்னர் தன் வானரத் தலைவன் ஆன சுக்ரீவனின் வேண்டுகோளின் பேரிலேயே தான் ராமனின் காரியமாக அவரின் தூதுவனாக அவர் கொடுத்த தகவலைத் தாங்கி வந்திருப்பதாய்த் தெரிவிக்கும் அனுமன், சுக்ரீவன் ராவணனின் நலன் விசாரித்துவிட்டு, ராவணனுக்கு நற்போதனைகள் சொல்லி அனுப்பி இருப்பதாயும், அதைக் கேட்குமாறும் கூறுகின்றார். இப்படிக் கூறிவிட்டு, தசரத மகாராஜாவுக்கு, ராமன் பிறந்ததில் இருந்து ஆரம்பித்துக் காட்டுக்கு வந்தது, வனத்தில் சீதையை இழந்தது, சுக்ரீவனோடு ஏற்பட்ட நட்பு, வாலி வதம், சீதையைத் தேட சுக்ரீவன் வானரப் படையை ஏவியது, அந்தப் படைகளில் ஒரு வீரன் ஆன தான் கடல் தாண்டி வந்து சீதையைக் கண்டது வரை விவரித்தார். பின்னர் மேலும் சொல்கின்றார்:" ராவணா, உனக்கு அழிவு காலம் வந்துவிட்டது. ராம, லட்சுமணர்களுடைய அம்புகளின் பலத்தைத் தாங்கக் கூடிய அரக்கர்கள் எவரும் இல்லை. ராமருக்குத் தீங்கு இழைத்துவிட்டு அரக்கன் எவனும் இந்தப் பூமியில் நிம்மதியாய் வாழமுடியாது. ஜனஸ்தானத்தில் அரக்கர்கள் கதியை நினைத்துப் பார்ப்பாய். வாலியின் வதத்தை நினைத்துப் பார். சீதையை ராமனுடன் அனுப்பி வைப்பது தான் சிறந்தது. இந்த நகரையோ, உன் வீரர்களையோ, படைகளையோ அழிப்பது என் ஒருவனாலேயே முடியும். எனினும் ராமரின் விருப்பம் அதுவல்ல, சீதையைக் கடத்தியவனையும், அவனைச் சார்ந்தவர்களையும் தம் கையால் அழிக்கவேண்டும் என்பதே அவர் விருப்பம். அவ்வாறே சபதம் இட்டிருக்கின்றார். அதை நிறைவேற்றியே தீருவார். இந்த உலகத்தின் அழிவுக்கே காரணம் ஆன காலனின் துணையான காலராத்திரி போன்ற சீதையை விட்டு விலகினாய் ஆனால் உனக்கே நன்மைகள். இல்லை எனில் இந்த உன் இலங்கைக்கும், உன் குலத்துக்கும் அழிவுக்கு நீயே காரணம் ஆவாய்." என்று சொல்லி நிறுத்த அனுமனைக் கொல்லச் சொல்லிக் கட்டளை இடுகின்றான் ராவணன்.ராவணனின் கோபத்தையும் அவன் அனுமனைக் கொல்லச் சொன்னதையும் கண்ட விபீஷணன், எந்நேரமும் இந்தக் கட்டளை நிறைவேற்றப்பட்டுவிடுமோ என அஞ்சினான். தான் தலையிடும் நேரம் வந்துவிட்டதாய்க் கருதினான். ராவணனைப் பார்த்து, " அரசே, என் குறுக்கீட்டுக்கு மன்னிக்க வேண்டுகின்றேன். பொதுவாக அரசர்கள் தூதுவனை மரியாதையுடனேயே நடத்துவது வழக்கம். இந்த வானரனின் உயிரைப் பறிப்பது சரியல்ல. தாங்கள் அறியாத விஷயம் எதுவும் இல்லை. கோபத்தினால் பீடிக்கப் பட்டு தாங்கள் சாத்திரங்களை முறையாகப் பயின்றதை வீண்வேலை என ஆக்கிவிடாதீர்கள்" என்று சொல்கின்றான். ராவணன் இன்னும் அதிகக் கோபம் கொண்டு, "விபீஷணா, இந்த வானரன் ஒரு மாபெரும் பாவி. பாவிகளைத் தண்டித்தால் ஒரு பாவமும் வராது." என்று கூற, அவன் முடிவு தவறு என்று மேலும் விபீஷணன் கூறுகின்றான். ஒரு தூதுவனை எந்த நிலையிலும் அரசன் ஆனவன் கொல்லக் கூடாது, அதற்குப் பதிலாக வேறு வழியில் தண்டிக்கலாம், சாட்டையால் அடித்தோ, அங்கஹீனம் செய்யப்பட்டோ, மொட்டை அடித்தோ, முத்திரை குத்தி ஊர்வலம் விட்டோ எப்படியும் தண்டிக்கலாம், ஆனால் கொல்வது முறையல்ல. இந்த வானரனை எவர் அனுப்பினரோ அவர்களே தண்டிக்கப் படக்கூடியவர்கள். இவனைக் கொன்றுவிட்டால் பின் அந்த இரு அரசகுமாரர்களுக்கும் விஷயம் எவ்விதம் தெரியவரும்? ஆகவே இவனை உயிரோடு அனுப்பினால் அவர்கள் இங்கே வருவார்கள். யுத்தம் செய்யலாம் என்றெல்லாம் எடுத்துச் சொல்ல, ராவணனும் சம்மதித்து, வானரங்களுக்கு வாலின் மீது பிரியம் அதிகம் என்பதால் இந்த வானரனின்வாலில் தீ வைத்து அனுப்புங்கள். வால் பொசுங்கி இவன் போவதைப் பார்த்த இவன் ஆட்கள் இவனைப் பார்த்து மகிழட்டும். நகரின் வீதிகளில் இழுத்துச் சென்று வாலில் தீ வைக்கப் படட்டும் என்று ஆணை இடுகின்றான், தசகண்ட ராவணன்.

அனுமன் தனக்கு நேரிடும் இந்த அவமானத்தை ராமனின் காரியம் ஜெயம் ஆகவேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவராய்ப் பொறுத்துக் கொள்கின்றார். மேலும் நகர்வலம் வருவதன் மூலம் இலங்கையின் அமைப்பைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் எனவும் நினைத்துக் கொள்கின்றார். சங்குகள் ஊதப்பட்டு, முரசம் பலமாகக் கொட்டப் பட்டு, தூதுவனுக்குத் தண்டனை வழங்கப்படுவது உறுதி செய்யப் படுகின்றது. வாலில் தீ வைக்கப் பட்ட அனுமன் நகரின் பல வீதிகளிலும் இழுத்துச் செல்லப் படுகின்றார். நகரின் தெருக்களின் அமைப்பையும், நாற்சந்திகள் நிறுவப்பட்டிருந்த கோணங்களையும் அனுமன் நன்கு கவனித்துக் கொள்கின்றார். சீதைக்கு அரக்கிகள் விஷயத்தைத் தெரிவிக்கின்றனர். அனுமன் வாலில் தீ வைக்கப் பட்ட விஷயத்தை அறிந்த சீதை மனம் மிகவும் நொந்துபோய்த் துக்கத்தில் ஆழ்ந்தாள். உடனேயே மனதில் அக்னியை நினைத்து வணங்கினாள்:"ஏ, அக்னி பகவானே, ராமன் நினைப்பு மட்டுமே என் மனதில் இருக்கின்றது என்பது உண்மையானால், கணவன் பணிவிடையில் நான் சிறந்திருந்தது உண்மையானால், விரதங்களை நான் கடைப்பிடித்தது உண்மையானால், இன்னமும் ராமர் மனதில் நானும், என் மனதில் ராமர் மட்டுமேயும் இருப்பது உண்மையானால், அனுமனிடம் குளுமையைக் காட்டு. சுக்ரீவன் எடுத்த காரியம் வெற்றி அடையுமெனில் ஏ, அக்னியே, குளுமையைக் காட்டு." எனப் பிரார்த்தித்தாள் சீதை.
அனுமனோ, சற்றும் கலங்கவில்லை. வாலில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி இருந்த நெருப்பு மேல் நோக்கி எரியத் தொடங்கியது. திடீரென, அந்த நெருப்பானது ஒரு பக்கமாய்ச் சாய்ந்து அதிகம் உஷ்ணம் காட்டாமல், மென்மையாய் எரியத் தொடங்கியது. ஒரு கணம் திகைத்தார் அனுமன். "நாற்புறமும் எரியும் தீ என்னைத் தகிக்கவில்லையே? என்னைக் காயப் படுத்தவில்லையே? ஏதோ குளுமையான வஸ்துவை வைத்தாற்போல் இருக்கின்றதே ஏன்? சீதையின் மேன்மையாலா? அக்னியின் கருணையாலா, நட்பினாலா? என்று மனதுள் வியந்த அனுமன், இவர்கள் செய்த அட்டூழியத்துக்கு நான் சரியாகப் பழிவாங்க வேண்டும் என மனதினுள் நினைத்தவராய், கட்டுக்களைத் திடீரென அறுத்துக் கொண்டு, வானத்திலே தாவி, பெரும் சப்தத்தை எழுப்பினார். நகரின் நுழைவாயிலை அடைந்து, சிறு உருவை அடைந்து, கட்டுக்களை முழுமையாகத் தளர்த்திவிட்டுப் பின்னர் மீண்டும் பெரிய உருவை எடுத்துக் கொண்டார்.காவாலாளிகளை அடித்துக் கொன்றார்.வாலில் சக்ராயுதம் போல் ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருந்த தீ அவர் சுழலும்போது மீண்டும் மீண்டும் சுழன்று பிரகாசித்தது.

அனுமன், கட்டிடங்களின் மீதும், மாளிகைகளின் மீதும் தாவி ஏறி, தனது வாலில் இருந்த தீயை அந்தக் கட்டிடங்களின் மீது வைத்தார். ப்ரஹஸ்தன், மஹாபார்ச்வன், சுகன், சரணன், இந்திரஜித், ஜம்புமாலி, சுமாலி, ரச்மகேது, சூர்யசத்ரு, ரோமசன், கரலன்,விசாலன், கும்பகர்ணன், போன்றவர்களின் மாளிகைக்கெல்லாம் தீ வைத்த அனுமன் விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு வைக்கின்றார்.ராவணனின் மாளிகையைக் கண்டறிந்து கொண்டு அதற்கும் பல இடங்களில் தீவைக்கின்றார். தீ நகரம் பூராப் பரவ வசதியாக வாயு தேவன் உதவினான். மாட, மாளிகைகள்,கூட கோபுரங்கள் தீயினால் அழிந்தன. அரக்கர்கள் கதற, அங்கே சேமிக்கப் பட்டிருந்த நவரத்தினங்கள் தீயினால் உருகி ஓர் பெரிய ஆறாக உருவெடுத்து ஓட ஆரம்பித்தது. திரிகூட மலை உச்சியிலும் அனுமன் தீயை வைக்க நகரையே தீ சூழ்ந்து கொண்டது. எங்கு பார்த்தாலும், அழுகை, கூக்குரல், முப்புரம் எரித்த அந்த ஈசனே வந்துவிட்டானோ என்ற ஐயம் அனைவர் மனதிலும் எழ, அனுமன் மனதிலும் இரக்கம் தோன்றுகின்றது. தான் செய்தது தப்போ என்ற எண்ணம் அவரை வாட்டி வதைக்கின்றது. வானரபுத்தியால் ராம,லட்சுமணர்களின் கீர்த்திக்குத் தான் அபகீர்த்தி விளைவித்துவிட்டதாய் எண்ணுகின்றார் அனுமன். அவர்கள் முகத்தில் எவ்வாறு விழிப்பேன் என எண்ணி மயங்குகின்றார். அனைவரும் தவறாய் எண்ணும்படிப் பேரழிவைப் புரிந்துவிட்டேனோ என எண்ணித் துயர் உறும் அனுமன் மனம் மகிழும் வகையில் நற்சகுனங்கள் தோன்றுகின்றன.விண்ணில் இருந்து சில முனிவர்களும், சித்த புருஷர்களும், இவ்வளவு பெரிய தீங்கு ஏற்பட்டபோதிலும் சீதை இருக்கும் அசோகவனத்துக்கு எந்த அழிவும் உண்டாகவில்லை என மகிழ்வுடன் பேசுவதையும் கேட்டார். உடனேயே அசோகவனம் விரைந்து சென்று சீதையைக் கண்ட அனுமன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் பல கூறி அவளிடம் விடைபெற்றார்.

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 46

சீதையின் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போன அனுமன், "தாயே, உங்கள் கூற்று சரியானதே. உங்கள் மேன்மைக்குத் தக்க வார்த்தைகளையே நீங்கள் கூறினீர்கள். ராமனைத் தவிர, இன்னொருவரைத் தீண்டமாட்டேன் என்று நீங்கள் கூறியது, உங்கள் தகுதிக்கும், மேன்மைக்கும், நிலைக்கும் பொருத்தமான ஒன்றே. எனினும், நீங்கள் இருவரும் உடனடியாக ஒன்று சேரவேண்டும் என்ற ஆவலின் காரணமாகவே நான் மேற்கூறிய வழியைக் கூறினேன். அதற்காக என்னை மன்னிக்கவும். நான் தங்களைச் சந்தித்துத் தான் திரும்பியுள்ளேன் என்பதை ராமன் உணரும்வண்ணம் ஏதேனும் அடையாளச் சின்னம் இருந்தால் கொடுக்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்." என்று கூறி வணங்கி நின்றார். சற்று நேரம் யோசித்த சீதை பின்வருமாறு சில நிகழ்ச்சிகளைக் கூறினாள். "நாங்கள் இருவர் மட்டுமே அறிந்த ஓர் நிகழ்ச்சியை இப்போது கூறுகின்றேன். என்னை ஒருநாள் ஒரு காகம் துன்புறுத்தித் தொல்லை கொடுத்தது. அதைக் கண்ட ராமர் ஒரு புல்லை அஸ்திரமாக்கி அந்தக் காக்கையை அழிக்க முனைந்தார். காகம் மிகவும் மன்றாடியது. ஆனால் அஸ்திரம் ஏவப்பட்ட பின்னர் திரும்பப் பெறமுடியாது, அஸ்திரத்தின் பலனை ஏதாவது ஒருவகையில் அனுபவித்தே தீரவேண்டும் என்பது மாறாத விதி. ஆகையால் காக்கையின் ஒரு கண்ணை மட்டும் அந்த அஸ்திரத்தால் அழித்து, அதை உயிரோடு விட்டார் ராமன். என்னைத் துன்புறுத்திய ஒரே காரணத்திற்காகக் காக்கையின்மேல் இவ்வளவு கோபம் கொண்ட ராமன், இப்போது ஏன் இன்னுமும் பொறுமை காட்டிக் கொண்டிருக்கின்றார். நிகரற்ற வில்லாளியான லட்சுமணனாவது வரலாமே? ஏன் அவனும் வரவில்லை என்று நான் கேட்டதாய்ச் சொல். ராமனின் நலன் பற்றி நான் விசாரித்தேன் எனச் சொல்வாய், பெருமை மிக்க தாய் சுமித்திரையின் மைந்தன் ஆன லட்சுமணனை விசாரித்தேன் எனச் சொல். ராமனைப் பின் தொடர்ந்து காட்டுக்கு வந்த லட்சுமணன், என்னை விட ராமனுக்கு உகந்தவன். அவன் மனது வைத்து, என் துன்பங்களைத் தீர்க்கும் வகையில் நீ என் துன்பத்தைப் பற்றி அவனிடம் எடுத்துச் சொல். இன்னமும் ஒரு மாதம் தான் நான் உயிர் வாழ்வேன் எனவும், அதற்குள் வந்து என்னைக் காக்கவேண்டும் எனவும் இருவரிடமும் சொல்." என்று சொல்லிவிட்டுச் சீதை தன் தலையில் சூடிக் கொண்டிருந்த அழகிய ஆபரணத்தை எடுத்து அனுமனிடம் கொடுத்தாள். அதைக் கொடுத்த சீதை மேற்கொண்டு சொல்கின்றாள்: "இந்த ஆபரணத்தைப் பார்த்தால் ராமனுக்கு நான் தான் இதைக் கொடுத்தேன் என்பது தெரிய வரும். என் நினைவு மட்டுமின்றி, என் தாய், மற்றும் ராமனின் தந்தை தசரதன் ஆகியோரின் நினைவும் அவருக்கு வரும். ஏனெனில் தசரதச் சக்கரவர்த்தியின் முன்னிலையில், என் தாய் இந்த ஆபரணத்தை எனக்குப் பரிசாய்க் கொடுத்தாள். மற்றும் உன் மன்னன் ஆன சுக்ரீவனிடமும், மற்ற வானர அமைச்சர்கள், வீரர்கள் அனைவரிடம் சொல்வாய்." என்ரு கூறினாள்.

அனுமனும் அந்தச் சூடாமணியை வாங்கிக் கொண்டு சீதையிடம் ராமனுடனும், பெரும்படையுடனும், வந்து உங்களை மீட்டுப் போவது உறுதி என்று சொல்கின்றார். சீதை அனுமனைப் பார்த்து இன்னும் ஓர் நாள் தங்கிவிட்டுப் போகின்றாயா? நீ இருந்தால் என் மன உறுதியும், தைரியமும் என்னைக் கைவிடாது எனத் தோன்றுகிறது, கடலைக் கடந்து வந்து எவ்வாறு மீட்டுச் செல்லுவார்கள் என்பதை எண்ணும்போது சந்தேகமாய் உள்ளது. கருடனையும், வாயுவையும், இப்போது உன்னையும் தவிர மற்றவர்களால் முடியுமா எனத் தெரியவில்லையே? பெரும்படை வருவது எவ்வாறு" என்று எண்ணிப் புலம்ப ஆரம்பித்தாள். அனுமன் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி, சுக்ரீவனின் படை பலத்தையும், வீரர்களின் வல்லமை, திறமை போன்றவற்றையும் எடுத்துரைக்கிறார். உண்மையில் இந்தக் காரியத்துக்காக ஏவப்பட்ட நான் அவர்கள் அனைவரிலும் தாழ்ந்தவனே. ஒரு காரியத்துக்கு ஏவப் படுகின்றவன், மற்றவர்களை விட மேன்மையானவனாய் எவ்விதம் இருப்பான்? ஆகவே தாங்கள் அஞ்ச வேண்டாம். உங்கள் துன்பம் அழியும் நேரம் வந்துவிட்டது. பொறுங்கள், அமைதி காத்து இருங்கள்" என்றெல்லாம் சொல்லிச் சீதையிடம் விடைபெற்றுக் கொண்டு அனுமன் வடதிசையில் செல்லத் தீர்மானித்தான். செல்லும்போதே அனுமன் நினைத்தான்."சீதையைக் கண்டு பேசியாகிவிட்டது. எடுத்த காரியத்தில் வெற்றி அடையும் அடுத்த வழியைப் பார்ப்போம். அரக்கர்களிடம் பேச்சு வார்த்தை பலனில்லை. துணிவின் மூலமே அவர்களுக்குத் தக்க தண்டனை அளிக்கவேண்டும். மேலும் நமக்கும், ராவணனுக்கும் நடக்கப் போகும் யுத்தத்தில் வெற்றி அடையவேண்டுமானால், ராவணன் பற்றியும் அவன் பலம் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும்.அதற்கு அவனைச் சந்திக்கவேண்டும், அவன் அமைச்சர்களைச் சந்திக்க வேண்டும். என்ன செய்யலாம்? ம்ம்ம்ம்ம்??? இந்த நந்தவனம எத்தனை அழகு? பல்வேறு விதமான கொடி, செடிகள், மரங்கள், உத்தியான மண்டபங்கள், லதாமண்டபங்கள்???ம்ம்ம் இதை நான் அழித்தால் ராவணன் கட்டாயம் கோபம் கொண்டு என்னை அழிக்கப் படையை ஏவுவான், அல்லது அவனே வரலாம். எதிராளியின் பலம் அப்போது தெரிய வரும்" என்றெல்லாம் எண்ணிய அனுமன் அசோகவனத்தை அழிக்க முற்பட்டு, அதை நாசம் செய்யத் தொடங்கினார்.
அசோக வனம் நாசமடைந்ததைக் கண்ட அரக்கிகள் சீதையிடம் சென்று யார் அது உன்னிடம் பேசியது/ எங்கிருந்து வந்தான் என்றெல்லாம் கேட்டார்கள். சீதையோ எனில், தாம் விரும்பிய வடிவம் எடுத்துக் கொள்ளும் அரக்கர்கள் எப்போது என்ன செய்கின்றார்கள் என்பதை நான் அறியேன். யார் வந்தார்களோ, நான் என்ன கண்டேன் என்று சொல்லிவிடுகின்றாள். அரக்கிகள் ராவணனிடம் ஓடிச் சென்று நடந்த நாசத்தைக் குறித்து விவரிக்கின்றார்கள். சீதை அமர்ந்திருக்கும் இடம் தவிர, மற்ற இடங்களெல்லாம் அழிக்கப் பட்டு விட்டது என்பதை அறிந்த ராவணன் பெரும்கோபத்துடன் கிங்கரர்கள் என அழைக்கப் படும் அரக்கர்களை அனுப்பினான். அனுமன் ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டே, தான் வாயுவின் மைந்தன் எனவும், ராமனின் தூதன் எனவும் சொல்லிவிட்டு, கிங்கரர்களை அழித்துவிடுகின்றார். பின்னர் பிரஹஸ்தன் என்பவனின் மகன் ஜம்புமாலி என்பவன் வந்து அனுமனுடன் மோத, ஜம்புமாலியும், அவனுடன் சேர்ந்து அசோகவனத்தில் மீதமிருந்த ஓர் மண்டபமும், அதைக் காத்த அரக்க வீரர்களும் மாண்டனர். ராவணனின் அமைச்சர்களின் மகன்கள் எழுவர் வர, அனுமன் அவர்களையும் எதிர்கொண்டார். தன் தளபதிகளையும் அனுமன் வென்றதைக்கண்ட லங்கேசுவரன், பின்னர் தன் மகன்களில் ஒருவன் ஆன அக்ஷ குமாரனை அனுப்ப அவனும் அனுமன் கையால் மடிகின்றான்.

அக்ஷ குமாரன் மடிந்தது கேட்ட ராவணன், உடனேயே இந்திரஜித்தை அழைத்துச் சொல்கின்றான்:"மூவுலகிலும் உன்னை யாராலும் வெல்ல முடியாது. உன்னாலும், உன் தவத்தாலும், பலத்தாலும் சாதிக்க முடியாதவை எவையும் இல்லை. இப்போது இந்த வானரத்தால் நம் வீரர்கள், உன் சகோதரன் அக்ஷகுமாரன் அனைவரும் மடிந்துவிட்டனர். இந்த அனுமனின் பலத்துக்கு எல்லை இல்லை என்பதாலேயே உன்னை அனுப்புகின்றேன். இது புத்திசாலித் தனமான காரியமா இல்லையா என்பது தெரியவில்லை. எனினும் நன்கு ஆலோசித்து இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவது உன் கடமை." என்று சொல்லி அனுப்புகின்றான். இந்திரஜித்தும் அனுமன் நிற்கும் இடம் நோக்கிச் செல்கின்றான். துர்சகுனங்கள் ஏற்பட்டன. அப்படி இருந்தும் இந்திரஜித் தொடர்ந்தான். அனுமன் விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டு உரக்கக் கோஷம் இடுகின்றார். பலத்த மோதல் இருவருக்கிடையே நடக்கின்றது. இருவரின் பலமும் சமமாய்த் தெரிகின்றது. இந்திரஜித்தை வீழ்த்தும் வழி அனுமனுக்குத் தெரியவில்லை. அனுமனை எப்படி வீழ்த்துவது என இந்திரஜித்துக்குக் குழப்பம். ஆனால் இந்திரஜித் அனுமனை எவ்வாறேனும் சிறைப்பிடித்துவிடலாம் என எண்ணினான். உடனேயே யோசனை செய்து பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அனுமன் கீழே வீழ்ந்தான். எனினும் அவனுக்குத்தான் பிரம்மாஸ்திரத்தால் கட்டப் பட்டுவிட்டோம் என்பது புரிந்தது. ஆனால் அதன் வலி அவனுக்கு இல்லை. மேலும் இந்த அஸ்திரத்தால் தான் கட்டுப்பட்டாலும் விரைவில் விடுதலையும் கிடைக்கும் என்பது அனுமனுக்கு நினைவு வந்தது. பிரம்மாவின் இந்த அஸ்திரத்தில் இருந்து நாமாய் விடுவித்துக் கொள்ள முடியாது. ஆகவே காத்திருப்போம் என்ற முடிவுக்கு வந்தார்.
அனுமன் வீழ்ந்தது கண்ட அரக்கர்கள் தைரியமாய்க் கிட்டே வந்து அனுமனைக் கொடி, செடிகளால் ஏற்படுத்தப் பட்ட கயிற்றினால் பிணைக்கவும், அதன் காரணமாய், பிரம்மாஸ்திரக் கட்டு அனுமனை விடுவித்தது. வேறு வகையில் கட்டப் பட்டவனை பிரம்மாஸ்திரம் கட்டாது என்பது அதன் விதி. இந்திரஜித் உடனேயே விஷயம் புரிந்து அரக்கர்களின் மூடத் தனமான செயலை நினைந்து வருந்தினான். எனினும் கட்டுண்டு அமைதியாகக் கிடந்த அனுமனை மற்ற அரக்கர்கள் ராவணனின் சபைக்கு இழுத்துச் சென்றனர். சபையில் அமைச்சர்களும், மற்றா வீரர்களும், படைத்தலைவர்களும் வீற்றிருந்தனர். ராவணன் முன்னிலையில் பலரால் இழுத்துச் செல்லப் பட்டான் அனுமன். அவன் முன்னே நின்றான். அமைச்சர்கள் அனுமனை அவன் யாரெனவும், வந்த காரியம் பற்றியும் பலவித விசாரணைகள் செய்ய ஆரம்பித்தனர். அனுமனின் ஒரே பதில்:'நான் சுக்ரீவனிடமிருந்து வந்திருக்கும் தூதன்" என்பதே. பேசும்போதே ராவணனைப் பற்றி ஆராய்ந்தறிந்தார் அனுமன். எத்துணை கம்பீரம் பொருந்தியவன்? ஒளி வீசும் தோற்றம்?அவன் மகனா இந்திரஜித்? மகனே இவ்வளவு வீரன் என்றால் தகப்பன் எத்தனை பெரிய வீரன்? என்ன அழகு? என்ன மதிநுட்பம்? முகமே காட்டுகின்றதே? இவன் ஓர் அரக்கர் தலைவனா? இவன் மட்டும் நன்னடத்தை உள்ளவனாய் இருந்திருந்தால் இவ்வுலகையே வென்றிருப்பானே?

அதே சமயம் ராவணன் நினைக்கின்றான் அனுமனைப் பற்றி:" கைலையில் இருக்கும் அந்த ஈசனின் அமைச்சன் ஆன நந்திதேவனே இந்த உருவெடுத்து வந்துவிட்டானோ? இவன் பெரும் வீரம் செறிந்தவனாய்க் காணப்படுகின்றானே என நினைத்துக் கொண்டே, தன் அமைச்சர்களில் முக்கியமானவன் ஆன பிரஹஸ்தன் என்பவனைப் பார்த்து இந்த அனுமன் வந்த காரியம் என்ன என்பது அறியப் படட்டும் என்று உத்தரவிடுகின்றான். பிரஹஸ்தன் கேள்விகள் கேட்கத் தொடங்குகின்றான்.

Thursday, May 15, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 45

துயருற்றிருந்த சீதையின் முன்னர் தாம் திடீரெனப் போனால் விளையும் விளைவுகளை எல்லாம் புத்திமான் ஆன அனுமன் நன்கு யோசித்துத் தெளிந்தார். "நாமோ ஒரு வானரன். தற்சமயம் உருவோ சிறியதாய் இருக்கின்றோம். பேருருவை எடுத்துச் சென்றாலும் சீதை பயப்படுவாள். அவளுக்குத் தாம் ராமனிடமிருந்துதான் வந்திருக்கின்றோம் எனத் தெளியவும் வேண்டுமே? ஆகவே, நாம் நடந்த கதையை ஒருவாறு நாம் அறிந்தது, அறிந்தபடி சொன்னோமானால், முதலில் சீதையின் நம்பிக்கையைப் பெறலாம். ஆகவே ராமனின் சரித்திரத்தைச் சொல்லலாம் என நினைத்துச் சொல்ல ஆரம்பிக்கின்றார், மிருதுவான குரலில். தசரதகுமாரன் ஆன ராமன், மிகச் சிறந்த வில்லாளி, மனிதர்களில் உத்தமர், தர்மத்தின் காவலர், என ஆரம்பித்து, மிகச் சுருக்கமாய் ராமன் பட்டாபிஷேகம் தடைப்பட்டு, ராமன் வனம் வர நேரிட்ட கதையையும், பின்னர் சீதை அபகரிக்கப் பட்டு, தற்சமயம் சீதையைத் தேடி வருவதையும், அதன் காரணமாகவே தான் கடல் தாண்டியதையும் சொல்லி முடித்தார். சீதைக்குத் தாள முடியாத வியப்பு. சொல்லுவது என்னமோ தன் வாழ்க்கைச் சரித்திரம் தான். ஆனால் சொல்வது யார்? தான் பார்க்காத சில சம்பவங்களும் இருக்கின்றனவே? தான் அமர்ந்திருந்த மரத்தை அண்ணாந்து பார்க்கின்றாள் சீதை. ஒரு வானரம் மரத்தின் மீது வெண்ணிற ஆடை அணிந்து அமர்ந்திருப்பது கண்ணில் படுகின்றது. கனவோ இது? என மயங்கினாள். வானரம் தன்னிடம் பேசியதா? எப்படி? ஒருவேளை இது அரக்கிகளின் சதியோ? அல்லது ராவணன் தன்னை அடையச்செய்யும் மற்றொரு வகைத் தந்திரமோ? யோசனையுடனேயே மீண்டும் மரத்தின் மேலே பார்த்தாள் சீதை.

உடனேயே அங்கிருந்து கீழே இறங்கிய அனுமன் தன் இருகைகளையும் கூப்பிக் கொண்டு சீதைக்கு வணக்கம் தெரிவித்து வணங்கி நின்று, "குற்றமற்ற பெண்மணியே, நீ யார்? ராவணனால் கடத்தி வரப்பட்ட ராமனின் மனைவி சீதை நீதானா? எனில் அதை என்னிடம் சொல்லு! உனக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகட்டும்" எனச் சொல்கின்றார். சீதை மனம் மகிழ்ச்சி அடைந்து, "தசரதன் மருமகளும், ஜனகனின் மகளும், ராமனின் மனைவியும் ஆன சீதை நான் தான்." என்றுசொல்லிவிட்டு, அயோத்தியை நீங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளையும், தான் கடத்தி வரப்பட்டதையும் சொல்கின்றாள். அனுமன் மனம் மகிழ்ந்து, நெகிழ்வுடன், "ராமசாமியின் தூதனாய்த் தான் நான் வந்திருக்கின்றேன். ராமன் நலமே. உங்களைப் பற்றிய கவலையன்றி வேறே ஒரு கஷ்டமும் இல்லை அவருக்கு. லட்சுமணனும் நலமே. உங்கள் கஷ்டத்தின் போது காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தமே அவருக்கு." என்று சொல்லிக் கொண்டே அனுமன் சீதையை நெருங்க, சீதைக்கு மீண்டும் சந்தேகம் வருகின்றது. ஒருவேளை ராவணனோ என. ஆகவே எதற்கும் அமைதி காக்கலாம் என அமைதி காக்கின்றாள். சீதையின் சந்தேகத்தைப் புரிந்து கொண்ட அனுமன் தான் ராமனின் நட்பைப் பெற்ற வானர அரசன் சுக்ரீவனின் நண்பன், அமைச்சன், ராமனின் சார்பாகவே தான் இங்கே வந்திருப்பதையும் சொல்ல, ஒரு வானரம் எவ்வாறு கடல் தாண்ட முடியும் எனச் சந்தேகப் படும் சீதையிடம் நடந்த விபரங்களைக் கூறுகின்றார் அனுமன். ராம, லட்சுமணர்களின் தோற்றத்தைப்பற்றியும், அவர்களின் சோகத்தைப் பற்றியும், சுக்ரீவனுடன் ஏற்பட்ட நட்பு பற்றியும், வாலி வதம் பற்றியும் விவரிக்கின்றார் அனுமன். சீதையின் மனதில் நம்பிக்கை பிறக்கின்றது.
சீதைக்கு முழுமையான நம்பிக்கை ஏற்படுத்தும் எண்ணத்துடன் அனுமன், "நான் ஒரு வானரன், ராமனின் தூதன். இதோ ராமன் பெயர் கொண்ட மோதிரம். இந்த மோதிரத்தை உங்களுக்கு அடையாளமாய் ராமன் என்னிடம் கொடுத்தார். மங்களம் உண்டாகட்டும், உங்கள் அனைத்துத் துன்பங்களும் பறந்தோடட்டும்."என்று கூறிவிட்டு அனுமன், ராமனின் மோதிரத்தை சீதையிடம் அளித்தார். அந்த மோதிரத்தைக் கண்ட சீதைக்கு ராமனையே நேரில் காண்பது போலிருந்தது. மனமகிழ்வோடு அனுமனைப் பார்த்து, "அப்பனே! அரக்கர்களின் இந்தக் கோட்டைக்குள் நீ உட்புகுந்து என்னைப் பார்த்து இதைச் சேர்ப்பித்ததில் இருந்தே உன்னுடைய துணிவும், வலிமையும், அறிவும் நன்கு புலப்படுகின்றது. மழைநீரைத் தாண்டி வரும் சாதாரண மனிதன் போல் நீ பெருங்கடலைத் தாண்டி இங்கே வந்துள்ளாய். உன் சக்தியைப் புரிந்து கொள்ளாமல் ராமன் உன்னை இங்கே அனுப்பவில்லை என்று தெரிந்து கொண்டேன். ராமன் நலம் என்ற செய்தி கேட்டு மகிழும் அதே நேரம் ராமன் ஏன் இன்னும் வந்து என்னை மீட்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துன்பத்திற்கு இன்னும் முடிவுகாலம் வரவில்லை போலிருக்கின்றது. போகட்டும், ராமர் மற்றக் கடமைகளைச் சரிவர ஆற்றுகின்றாரா? என் பிரிவினால் மற்றக் கடமைகளுக்குப் பாதிப்பு ஒன்றும் இல்லையே? நண்பர்கள் அவரை மதிக்கின்றார்கள் அல்லவா/ என் மாமியார்கள் ஆன கோசலை, சுமித்திரை, பரதன் ஆகியோரிடமிருந்து அவர்கள் நலன் பற்றிய செய்திகள் வருகின்றனவா? என்னை எப்போது ராமன் மீட்டுச்செல்வார்? லட்சுமணனும் உடன் வந்து அரக்கர்களை அழிப்பான் அல்லவா? " என்றெல்லாம் கேட்க அனுமனும் பதில் சொல்கின்றார்.

"தாங்கள் இங்கே இருக்கும் செய்தி இன்னும் ராமருக்குத் தெரியாத காரணத்தினாலேயே இன்னும் வந்து உங்களை மீட்கவில்லை. பெரும்படையுடன் வந்து உங்களை மீட்டுச் செல்லுவார். உறக்கத்தில் கூட உங்களையே நினைத்துக் கொண்டிருக்கின்றார் ராமர். வேறு சிந்தனை இல்லாமல் இருக்கின்றார்." என்று சொல்லவும், சீதை பெருமிதம் கொண்டாள். "எனக்குப் பெருமை அளித்தாலும், இந்தச் சிந்தனை மட்டுமே ராமனுக்கு இருக்கிறது என்பது கொஞ்சம் கவலையாகவும் இருக்கின்றது. ராவணன் ஒரு வருடமே கெடு வைத்திருந்தான். அந்தக் கெடுவும் இப்போது முடியப் போகின்றது. ராமன் விரைந்து செயல்படவில்லை எனில் அதற்குள் என் உயிர் பிரிந்துவிடும் என ராமனிடம் நீ எடுத்துச் சொல்வாய். விபீஷணன், ராவணனின் தம்பி, என்னை ராமனிடம் திரும்பச் சேர்க்குமாறு பலமுறை எடுத்துச் சொல்லியும் ராவணன் மறுத்துவிட்டான். மேலும் ஓர் கற்றறிந்த நன்னடத்தை பொருந்திய அரக்கன் ஆன "அவிந்த்யன்" என்பவனும் ராவணனுக்கு எடுத்துச் சொன்னான். ராவணன் அவனையும் மதிக்கவில்லை." என்று சொல்லவே, அனுமன் அவளைத் தன் தோளில் அமரச் சொல்லிவிட்டுத் தான் தூக்கிச் சென்று கடலைக் கடந்து ராமனிடம் சேர்ப்பிப்பதாயும் தன்னை நம்புமாறும் கூறுகின்றான். தன்னுடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் தன்னைத் தொடர்ந்து வரக் கூடியவன் இந்த இலங்கையில் இல்லை எனவும் சொல்கின்றான். அதைக் கேட்ட சீதை, மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வார்த்தைகளையே சொல்லும் அனுமனின் இத்தனை சிறிய உருவைப் பார்த்து சந்தேகம் கொண்டு கேட்கின்றாள்."இத்தனை சிறிய உருப்படைத்த நீ எவ்வாறு கடலைக் கடப்பாய், அதுவும் என்னையும் சுமந்து கொண்டு?" என்று கேட்கின்றாள்
உடனேயே அனுமனின் விஸ்வரூபம் காண நேரிடுகின்றது அவளுக்கு. நினைத்தபோது, நினைத்த வடிவைத் தான் எடுக்க முடியும் என சீதைக்குக் காட்ட வேண்டி, விண்ணுக்கும், மண்ணுக்குமாய் வளர்ந்து நிற்கின்றார் ஆஞ்சநேயர், வானர வீரன், வாயுகுமாரன், மங்களங்களை அள்ளித் தரும் சுந்தரன். மேலும், மேலும், மேலும் வளர்ந்து கொண்டே போகும் அந்த அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியக்கின்றாள் வைதேஹி. அனுமன் சொல்கின்றான். "அம்மையே, உங்களை மட்டுமல்ல, இந்த நகரையும், நகரோடு உள்ள மக்களையும், ராவணனையும், அனைவரையும் சுமக்கக் கூடிய வல்லமை படைத்தவனே நான். ஆக்வே தாங்கள் தயங்க வேண்டாம். உடனே என்னுடன் வருவீர்களாக.' என்று கூப்பிடுகின்றான். அனுமனின் விசுவரூபத்தைக் கண்டு வியந்த ஜானகி, "அப்பா, இப்போது நன்கு புரிகின்றது. ஒரு சாதாரண வானரன் எவ்வாறு கடல் தாண்ட முடியும் என நான் நினைத்தது, தவறு என்று தெரிந்து கொண்டேன். ஆனால், காற்றை விடக் கடினமாயும், வேகமாயும் பறக்கும் உன்னுடைய வேகத்தை என்னால் தாங்க முடியுமா? வழியில் அரக்கர்கள் பின் தொடர்ந்தால், என்னையும் சுமந்துகொண்டு அவர்களோடு நீ எவ்விதம் சண்டை போடுவாய்? உன் முதுகிலிருந்து நான் நழுவி விழுந்தாலும் விழலாம், அல்லது அரக்கர்கள் ஜெயித்தால் என்னைக் கொன்றாலும் கொல்லலாம். இப்படி எல்லாம் நடந்தால் உன்னுடைய முயற்சி வீணாகிவிடுமே? மேலும் ராமனின் பெருமைக்கும் இது களங்கம் அல்லவோ? அதுவும் தவிர, வேறொரு முக்கியமான விஷயமும் இருக்கின்றதே, ராமனைத் தவிர, வேறு யாரையும் நான் தீண்ட மாட்டேன். அப்படி எனில் ராவணனோடு வந்தது எப்படி என்கின்றாயா? அது பலவந்தமாய் அவன் இழுத்துக் கொண்டு வந்ததால், நான் வேறு வழி அறியாமல் இருந்துவிட்டேன். இப்போது நான் உன் முதுகில் ஏறிக் கொண்டு எவ்வாறு வருவேன்,அறிந்தே வரமுடியாது. ராமன் இங்கே வந்து அரக்கர்களோடு சண்டையிட்டுவிட்டு, அவர்களைத் தோற்கடித்து, ராவணனையும் வென்று என்னை அழைத்துச் செல்வதே சிறப்பானது, அவருக்கும், எனக்கும். ஆகவே அவரிடம் சென்று சொல்லி, சீக்கிரம் இங்கே வந்து இவர்களைத் தோற்கடித்துவிட்டு என்னை அழைத்துச் செல்லச் சொல்வாயாக!" என்கின்றாள் ஜானகி.

Wednesday, May 14, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 44


ராவணனைத் தாம் அழிக்கக் கூடிய வல்லமை இருந்தும், இது ராமன் செய்ய வேண்டிய ஒன்று எனத் தெளிந்த அனுமன் அசோகவனத்தைக் கண்டதும் இந்த வனத்தில் இதுவரை தேடவில்லை எனக் கண்டு உள்ளே நுழைந்தான். யார் கண்ணிலும் படாமல் தேட வேண்டிய கட்டாயத்தினால், தன் உருவத்தை மிக, மிகச் சிறு உருவமாக்கிக் கொண்டிருந்த அனுமன் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டே அந்த வனம் பூராவும் தேடினார். ஓரிடத்தில் ஓர் அழகான தாமரைக் குளத்தைப் பார்த்துவிட்டு, ஒருவேளை சீதை இந்த வனத்தில் இருந்தால் இந்தக் குளத்திற்கு வரலாம் என எண்ணியவாறே அந்தக் குளக்கரையில் ஓர் உயர்ந்த மரத்தின் மீது அமர்ந்த வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்தார். அப்போது அங்கே பவளத்தினால் ஆன படிகளைக் கொண்டதும், தங்கத்தினால் உள்ள மேடைகளைக் கொண்டதும், மிக, மிக உயரமானதுமான ஒரு மண்டபத்தைக் கண்டார் அனுமன். அந்த மண்டபத்திற்கு அருகே, ஆஹா, என்ன இது? யாரிவள்? இத்தனை அதிரூப செளந்தர்யவதியான பெண்ணும் உலகிலே உண்டா? ஆனால், என்ன இது? ராகு பிடித்துக் கொண்ட சந்திரன் போல் அவள் முகம் ஒளியிழந்து காணப்படுகின்றதே? ஏன், இவள் ஆடை இத்தனை அழுக்காயிருக்கின்றது? இது என்ன, இந்தப் பெண்மணியைச் சுற்றி இத்தனை அரக்கிகள்? ஆனாலும் இவளைச் சுற்றிலும் ஒரு தெய்வீக ஒளி வீசுகின்றாற்போல் இருக்கின்றதே? இவள் ஆடையின் நிறத்தின் மஞ்சளைப் பார்த்தால், ரிச்யமூக பர்வதத்தில் சீதை வீசி எறிந்த ஆடையின் நிறத்தை ஒத்திருக்கின்றதே? இவளின் ஆபரணங்களின் இந்தப் பகுதியும், சீதை வீசி எறிந்த ஆபரணங்களின் மற்றொரு பகுதியாய்த் தெரிகின்றதே? இவள் முகத்தில் தெரியும் கரைகாணாச் சோகத்தின் காரணமும் புரிகின்றது. இவள் தான் சீதை. ராமனைப் பிரிந்து இருப்பதால் இவ்வாறு சோகமாய் இருக்கின்றாள். ஆஹா, ராமனின் சோகத்தின் காரணமும் புரிகின்றது. இத்தகைய சீதையைப் பிரிந்த ராமன் சோகமாய்த் தான் இருக்க முடியும், எவ்வாறு இன்னமும் உயிர் வைத்திருக்கின்றான் என்பதே பெரும் சாதனை தான் என்று இவ்வாறெல்லாம் ஆஞ்சநேயன் நினைத்தார்.


சீதை இத்துணை மேன்மை வாய்ந்தவளாய் இருந்தும் இத்தகைய துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்றாள் என்றால் விதி வலியது என்ற முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. எவராலும் விதியை வெல்ல முடியாது என்பதிலும் வேறு கருத்து இல்லை. ராமனை நினைத்துக் கொண்டு அவனுக்காகவே இந்தப் பெண்மணி தன் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றாள், என்றெல்லாம் நினைத்துக் கொண்டு மேலே என்ன செய்யலாம் என்று அனுமன் யோசித்தார். இரவிலே அதுவும் பாதி ராத்திரியிலே சீதைக்கு முன்னால் எவ்வாறு போய் நிற்பது, என்ன வழி? என்றெல்லாம் அனுமன் யோசிக்கும்போதே இரவு கடந்து காலையும் வந்தது. அரண்மனையில் அரசன் ஆன ராவணனைத் துயிலெழுப்பும் ஓசையும், வேத கோஷங்களும், மந்திர கோஷங்களும், பூஜை வழிபாடுகளும் கலந்து கேட்க ஆரம்பித்தது. ராவணன் துயிலெழுந்தபோதே சீதையின் நினைவோடே எழுந்தான். சீதையைச் சந்தித்து அவள் சம்மதம் பெற்றே தீரவேண்டும் என முடிவெடுத்தான். அரக்கிகள், மற்ற தன் பரிவாரங்கள் சூழ ராவணன் அசோக வனத்திற்குச் சென்று சீதையைச் சந்திக்க ஆயத்தம் ஆனான். அனுமன் மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த போதே, ராவணன் அசோக வனத்தினுள் நுழைந்தான். அவன் தோற்றத்தைக் கண்டு அனுமன் வியந்தான்

ராவணன் சீதையைக் கண்டதும் முதலில் மிக மிக அன்பாய்ப் பேசத் தொடங்கினான். "என் அன்பே, சீதை, என் மீது அன்பு காட்டு. மாற்றான் மனைவியைக் கவர்வது என் போன்ற அரக்க குலத்துக்கு உகந்த ஒரு செயலே ஆகும். எனினும் உன் சம்மதம் இல்லாமல் உன்னை நான் தொட மாட்டேன். ஒற்றை ஆடையில் நீ இவ்வாறு அமர்ந்து தனிமையில் துக்கத்தில் ஆழ்ந்து கிடப்பது ஏற்றதே அல்ல. என்னை ஏற்றுக் கொண்டாயானால் அனைத்து இன்பங்களும் உன் வசமே. ராமனிடமிருந்து நீ வந்துவிட்டாய் பெண்ணே, இனி அதையே நினைந்து, நினைந்து துயரம் கொள்வதில் பயனில்லை. உன்னைப் பார்த்தால் பிரமன் கூட படைப்பை நிறுத்திவிடுவானோ என எண்ணுகின்றேன். இத்தகைய செளந்தர்யவதியான நீ என் ராணியாகி விட்டால்? இந்த உலகம் முழுதும் சென்று நான் வென்ற அத்தனை சொத்து, சுகங்களையும் உன் தந்தையான ஜனகனுக்கு உரியதாக்குவேன். என்னளவு பலம் கொண்டவனோ, எனக்கு நிகரானவனோ இவ்வுலகில் யாருமே இல்லை. எனக்கு நீ கட்டளை இடு, நான் நிறைவேற்றுகின்றேன். ராமன் உன்னை நினைத்துக் கொண்டிருப்பான் என்பதே நிச்சயம் இல்லை. இங்கு வந்து உன்னை மீட்டுச் செல்வான் எனக் கனவு காணாதே!" என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் காட்டுகின்றான்.

சீதை அவன் பேசியதைக் கேட்டுவிட்டு, பின்னர் ஒரு புல்லை எடுத்து அவனுக்கும், தனக்கும் இடையே போடுகின்றாள். இதன் தாத்பரியம் ராவணனை அவள் ஒரு புல்லுக்குச் சமம் என மதித்தாள் என்பது மட்டும் இல்லை, தீய எண்ணத்துடன் தன்னிடம் பேசும் ஒரு அந்நிய ஆடவனிடம் நேரிடையாகப் பேச அவள் இஷ்டப் படவில்லை, ஆகையால் தங்களுக்கிடையே ஒரு தடுப்பை உண்டுபண்ணிக் கொண்டே பேசுகின்றாள் என்பதே உண்மையான அர்த்தம். சீதை சொல்கின்றாள்:" என்னை விட்டுவிடு, என்னை விரும்புவது என்பது உனக்கு அழிவையே தரும். உன் மனைவிகளோடு கூடி வாழ்வதில் உள்ள சுகத்தை விட இதில் என்ன மேலானதைக் கண்டாய்? இங்கு உனக்கு நல்வழி புகட்டுபவர்களே இல்லையா? உன் பொருட்டு இந்த ராஜ்யமே அழிந்துவிடுமே? உன் சக்தியோ, செல்வமோ என்னைப் பணிய வைக்க முடியாது. ராமனைப் பற்றி நீ அறிய மாட்டாய். அவர் பலத்தைப் பற்றி எண்ணவில்லை நீ. அத்தகைய ராமனை மணந்த நான் உன்னை மனதாலும் நினைப்பேனா? ராமனும், அவர் தம்பி லட்சுமணனும் ஏவப் போகின்ற அம்புகளால் உன் இலங்கையே அழியப் போகின்றது. அவர்கள் இருவரும் இப்போது சும்மா இருப்பதாய் எண்ணாதே. புலிகள் இருவரும். அந்த இரு புலிகளையும் நாய் போன்ற உன்னால் எப்படி எதிர்க்க முடியும்?" என்று கோபமாய்ப் பேசவே ராவணன் அமைதி இழந்தான்.

"நான் அமைதியாய்ப் பேசுகின்றேன் என நினைத்துக் கொண்டு நீ என்னை அவமதிக்கின்றாய். உன் மீதுள்ள அன்பினால் நான் இப்போது கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்கின்றேன். உன்னைக் கொல்லாமலும் விடுகின்றேன். உனக்கு நான் பனிரண்டு மாதங்கள் அவகாசம் அளித்தேன். ஆனால் இன்னும் நீ பதில் சொல்லவில்லை. பனிரண்டு மாதங்கள் முடியவும் இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அதன் பின் நீ எனக்கு உரியவளாய் ஆகிவிட வேண்டும். இல்லை எனில், நீ கண்ட துண்டமாய் வெட்டப்பட்டு, சமைக்கப் பட்டு அனைத்து அரக்கர்களுக்கும் உணவாகிவிடுவாய்!" என்று கோபத்துடன் சொல்கின்றான். மேலும், மேலும் சீதை மறுத்துப் பேசவே, அவளுக்குக் காவல் இருந்த சில அரக்கிகளைப் பார்த்து ராவணன், சொல்கின்றான்:"சீதை விரைவில் எனக்கு இணங்க வேண்டும். நல்ல வார்த்தைகளால் முடியவில்லை எனில் கடுமையான அணுகுமுறைகளால் மாற்றுங்கள்"என்று சொல்ல அவன் பட்டமகிஷியான மண்டோதரியும், மற்றொரு மனைவியும் வந்து அவன் கடுமையைத் தணிக்க முயன்றனர். அவர்கள் பேச்சால், சற்றே அமைதி அடைந்த ராவணனும், அரண்மனைக்குப் பூமி அதிர, நடந்து சென்றான். காவல் இருந்த அரக்கிகள் ஏகஜடை, ஹரிஜடை, விகடை, துர்முகி, போன்றவர்கள் ராவணனின் பெருமைகளை சீதைக்கு எடுத்துக் கூறி அவள் மனத்தை மாற்றும் முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தனர். சீதை அவர்கள் பேச்சுக்கு இணங்கவில்லை.
"இந்திரன் மீது சசி கொண்டிருந்த அன்பைப் போலவும், வசிஷ்டர் மீது அருந்ததி கொண்ட அன்பைப் போலவும், சந்திரனிடம் ரோகிணி கொண்ட அன்பைப் போலவும், அகத்தியரிடம் லோபாமுத்திரை கொண்ட அன்பைப் போலவும், ச்யாவனரிடம் சுகன்யை கொண்ட அன்பைப் போலவும், , சத்தியவானிடம் சாவித்திரி கொண்ட அன்பைப் போலவும், நான் ராமனிடம் அன்பு வைத்துள்ளேன். இந்த அன்பு ஒருக்காலும் மாறாது." என்று சொன்ன சீதையைப் பலவிதங்களிலும் பயமுறுத்துகின்றனர் அரக்கிகள். அவளைக் கொன்றுவிடுவோம் எனவும், அவளை விழுங்கிவிடுவோம் எனவும் பலவிதங்களிலும் தொந்திரவு செய்கின்றனர். சீதை துயரம் தாளாமல் புலம்புகின்றாள்: "தந்திரங்கள் பல செய்யவல்ல ராவணன், ராமனையும், லட்சுமணனையும் கொன்றுவிட்டானோ? என்ன பாவம் செய்தேன் நான் இத்தகைய துன்பத்தை அனுபவிக்க? ஏதோ ஒரு பெரும் குறை அல்லது பாவத்தின் காரணமாகவே இத்தகைய துன்பம் எனக்கு நேர்ந்துவிட்டிருக்கின்றது. இத்தகைய நிலையில் நான் உயிர் விடுவதே சிறந்தது. ராமனும், லட்சுமணனும் காப்பாற்றவும் வராமல், இந்த அரக்கிகளின் தொல்லை தாங்க முடியாமல் நான் உயிர்வாழ்வதே வீண் என்ற முடிவுக்கு வந்தாள் சீதை.

அப்போது அதுவரை அங்கே உறங்கிக் கொண்டிருந்த திரிஜடை என்னும் அரக்கி விழித்து எழுகின்றாள். மற்ற அரக்கிகளைப் பார்த்து நமக்கு அழிவுகாலம் வந்துவிட்டது. சீதையின் கணவனுக்கும், அவன் சிறப்புக்கும் புகழ் சேரப் போகின்றது. அத்தகைய கனவொன்றை நான் கண்டேன், ஆகவே பெண்களே, உங்கள் தொல்லையை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று சொல்ல, மற்ற அரக்கிகள் திரிஜடையிடம் உன் கனவு என்னவென்று தெளிவாய்ச் சொல் எங்களிடம் என்று கேட்கின்றார்கள். திரிஜடையும் சொல்கின்றாள்:"பொழுது விடியும் முன் காணும் கனவு பலிக்குமெனச் சொல்வதுண்டு. நான் கண்டது, வெள்ளைக்குதிரைகளால் இழுக்கப்பட்ட தங்கத் தேரில் ராமனும், லட்சுமணனும் இலங்கைக்கு வந்து, சீதையை மீட்டுச் செல்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியோடு புஷ்பக விமானத்தில் அவர்கள் செல்வதைக் கண்டேன். ஆனால் மாறாக ராவணன் தலை மொட்டை அடிக்கப் பட்டு, எண்ணெய் பூசப் பட்டு புஷ்பகத்தில் இருந்து கீழே தள்ளப் பட்டான். கறுப்பாடை அணிந்திருந்தான். தென் திசை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் ஒரு கழுதை மீது ஏறி, அதே போல் ராவணனின் மகன், தம்பியான கும்பகர்ணன் ஆகியோரும் அவ்வாறே சென்றனர். சிவப்பாடை அணிந்த ஒரு பெண்ணால் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப் பட்டனர். ராவணன் தம்பி விபீஷணன் மட்டுமே வெண்மை ஆடை தரித்து சந்தனம் பூசப்பட்ட உடலுடன் யானை மீது அமர்ந்திருந்தான். இந்த லங்காபுரியே மூழ்கிவிடுவது போலவும், தீப்பற்றி எரிவது போலவும், மாட, மாளிகைகள், கூட, கோபுரங்கள் கீழே விழுவது போலவும் கனவு கண்டேன். சகல லட்சணங்களும் பொருந்திய சீதைக்கு ஒரு துன்பமும் நேரப் போவதில்லை." என்று கூறவே, சந்தோஷம் கொண்ட சீதை, "அத்தகைய ஒரு நிலை எனக்கு நேரிட்டால், நிச்சயமாய் உன்னைப் பாதுகாப்பேன்," என்று சொல்கின்றாள். எனினும் ராவணனின் அச்சுறுத்தல்களும், மற்ற அரக்கிகளின் தொந்திரவுகளினாலும் மனம் நைந்து போன சீதை தன் தலையில் கட்டி இருந்த ஒரு கயிற்றினால் தான் தூக்குப் போட்டுக் கொள்ளலாமா என யோசிக்கின்றாள். உடலிலும் இடது கண்கள், தோள்கள் துடித்து நற்சகுனத்தையும் காட்டவே, சற்றே யோசிக்கின்றாள்.

அப்போது எங்கே இருந்தோ தேவகானம் போல் ராம நாமம் கேட்கின்றது.

"ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்"
அனுமன் மெல்ல, மெல்ல மெல்லிய குரலில் சொல்லத் தொடங்கினான், ராமனின் கதையை.







<

Tuesday, May 13, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 43

தன் முன்னர் தோன்றிய லங்கிணியைப் பார்த்த அனுமன் இவள் யாரோ என யோசிக்க அந்த லங்கிணியோ அனுமனைப் பார்த்து, "ஏ, வானரமே, யார் நீ? ஏன் இங்கே வந்தாய்?" என வினவுகின்றாள். லங்கிணியைப் பார்த்த அனுமன் ஏன் என்னை விரட்டுகின்றாய் என வினவிவிட்டு உள்ளே செல்ல யத்தனிக்க, லங்கிணியோ, அனுமனைப் பார்த்துக் கோபமாய்ச் சொல்கின்றாள்,. "இந்த லங்காபுரியைக் காவல் காக்கும் லங்கிணி நான். என்னை மீறி யாரும் நகரின் உள்ளே செல்ல முடியாது. இதன் அதிதேவதை நானே." என்கின்றாள். ஏ, குரங்கே உன்னால் என்ன ஆகும் என்று சொல்லிக் கேலியாய்ச் சிரிக்க அனுமன் யோசிக்கின்றார். தன்னைச் சண்டைக்கு இழுக்கும் இவளை ஜெயிக்காமல் உள்ளே செல்ல முடியாது என நன்குணர்ந்த அனுமன் அவ்வாறே அவளோடு போரிட ஆயத்தம் ஆனார். அதற்குள் வெறும் குரங்குதானே என நினைத்த லங்கிணி, அனுமனை ஓங்கி அறைய, அந்த அறையின் வேகம் கண்ட அனுமன் அதை விட வேகமாய்ப் பெருங்கோஷத்துடன் தன் கைவிரல்களை மடக்கிக் கொண்டு முட்டியினால் ஒரு குத்துக் குத்தவே அந்த ஒரு குத்துக் கூடத் தாங்க முடியாத லங்கிணி கீழே விழுந்தாள்.

உடனேயே தன்னிலை புரிந்து கொண்ட லங்கிணி, அனுமனைப் பார்த்து, "ஓ,ஓ, வானரமே, இன்றுவரை யாராலும் நெருங்க முடியாத என்னை வீழ்த்திவிட்டாயே? எனில் அரக்கர்களுக்கு அழிவுகாலம் ஆரம்பம் ஆகிவிட்டதா? ஓஓஓ, என்ன சொல்வேன்? இந்நகரைப் பாதுகாக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தபோதே, பிரமன் சொன்னது, எப்போது ஒரு வானரத்தால் நீ வீழ்வாயோ அப்போதே உனக்கும், அரக்கர் குலத்துக்கும் அழிவு எனப் புரிந்து கொள் என்பதே! இப்போது நீ என்னை வீழ்த்திவிட்டாய், இனி அரக்கர் குலத்துக்கே அழிவுதான் என்பதைப் புரிந்து கொண்டேன். உன் வெற்றி உறுதி செய்யப் பட்டது. நீ நகருக்குள் செல்வாயாக!" என்று கூறி வழி விட்டாள். நகரினுள் சென்ற அனுமன் அங்கே பல இடங்களில் இருந்தும் வேத கோஷங்கள், உற்சாகமான ஒலிகள், மற்றும் பெண்களின் உல்லாசக் குரல்கள் அனைத்தையும் கண்டார், கேட்டார், வியந்தார். மாட, மாளிகைகளையும், கூட, கோபுரங்களையும் கண்டார். விசாலமான கடைத் தெருக்களைக் கண்டார். இவற்றில் சீதை எங்கே ஒளித்து வைக்கப் பட்டிருக்கின்றாளோ என வியந்தார்.
ஒவ்வொரு இடமாய் அலசி, ஆராய்ந்து கொண்டு வந்த அனுமன் கடைசியில் ஒரு பெரிய மாளிகையைக் கண்டார். அந்த மாளிகையின் தோற்றத்தில் இருந்தும், அதன் பிரம்மாண்டத்தில் இருந்தும், அதன் காவல் புரிபவர்களின் எண்ணிக்கை, தரம் போன்றவற்றில் இருந்தும் அதுவே ராவணன் மாளிகையாய் இருக்கலாமோ என எண்ணினார். அந்த மாளிகைக்குள் தன்னைச் சிறு உருவிலே மாற்றிக் கொண்டு சென்றார். அந்தப்புரம் நிறையப் பெண்கள் இருந்ததைக் கண்டார். இவர்களில் சீதையும் இருப்பாளோ என்று வியந்தார். பின்னர் இருக்க முடியாது எனத் தெளிந்தார். அரண்மனை பூராவும் செல்வம் கொழிப்பதைப் பார்த்த அனுமன், குபேரனின் மாளிகையோ என்னும் வண்ணம் செழிப்புடன் இருக்கின்றதே, இது நாசம் ஆகிவிடுமே என எண்ணிய வண்ணம் சென்ற போது ஒரு பக்கம் புஷ்பகவிமானத்தையும் கண்டார். உடனேயே அதில் ஏறிப் பார்த்தார். அப்போது ராவணனின் மாளிகையின் உட்புறமும், அந்தப்புரத்திலே பல பெண்கள் உறங்கிக் கொண்டிருப்பதும் கண்டார். அந்தப் பெண்களில் யாரும் சீதையாக இருக்கலாமோ என எண்ணிக் கொண்டு அந்தப்புரத்துக்குள் சென்று பார்த்தார். ஒரு விசாலமான அறையில் அமையப் பெற்றிருந்த ஒரு மேடையில் இருந்த ஓர் அழகான ஆசனத்தில் வீரம் செறிந்த ஓர் ஆண்மகன் இருப்பதைக் கண்டார்.

அந்த ஆண்மகனின் கம்பீரம், ஆடை, ஆபரணங்கள், சந்தனம், வாசனாதித் திரவியங்கள் பூசி அலங்கரிக்கப் பட்ட உடல், ஆசனத்தில் அமர்ந்தவாறே உறங்கிக் கொண்டிருந்த அவன் கம்பீரம் இவற்றைப் பார்த்த அனுமன், இவன் தான் ராவணன் என்பதையும் புரிந்து கொண்டார். (அனுமன் பார்க்கும்போது ராவணன் பத்துத் தலையோடு இருக்கவில்லை. வேண்டியபோது அவ்வாறு பத்துத் தலைகளுடன் கூடிய உருவை அவன் எடுத்துக் கொள்ளுவான்.)
அந்த ஆடவனின் பக்க்த்திலே விலை உயர்ந்த மற்றொரு கட்டிலிலே பேரழகுப் பெண்ணொருத்தி உறங்கிக் கொண்டிருக்கக் கண்ட அனுமன், துள்ளிக் குதித்தான். ஆஹா, இதோ சீதை, எனத் தெளிந்தான், பின்னர் மனம் கலங்கினான். ராமனைப் பிரிந்த சீதை, இப்படி எங்கேயாவது இன்னொரு ஆடவன் அருகே அவனுடைய கட்டிலில் படுத்து உறங்குவாளா? இல்லை, இல்லை இவள் சீதை இல்லை, பின் எங்கே சீதை? இவள் ஒருவேளை ராவணன் மனைவியோ, ஐயகோ, அப்படி எனில் மாற்றான் மனைவியை இவ்வாறு நான் எங்கனம் பார்ப்பது முறை? இந்த அந்தப்புரத்து மகளிர் அனைவரும் ராவணன் மனைவியரா? நான் இவ்வாறு பார்ப்பது முறையே அன்று. எனினும் நான் தீய எண்ணத்தோடு பார்க்கவில்லையே? சீதையைத் தேடும் முகமாய்த் தானே பார்க்கின்றேன். இவர்களில் யார் சீதை? எப்படிக் கண்டு பிடிப்பது? ஒருவேளை ராமனைப் பிரிந்த சோகம் தாளாமல் இறந்துவிட்டிருந்தால்? என்ன செய்யலாம்? பின்னர் ராமனிடம் போய் எவ்வாறு சொல்லுவேன்? ராமனும் உடனே உயிரை விட்டு விடுவாரே? பல விபரீதங்கள் எழுமே?

பின்னர் லட்சுமணன் உயிர் வாழ மாட்டான். பரதன் உயிர் தங்காது. சத்ருக்கனனும் அவர்கள் வழியே போவான். பேரழிவு ஏற்படுமே? இந்நிலை ஏற்பட நான் காரணம் என்பதறிந்தால் மன்னன் சுக்ரீவனும் உயிரை விட்டு விடுவானே? கிஷ்கிந்தை என்ன ஆகும்? அழிந்து படுமே/ அயோத்தியின் புகழ் மங்குமே? எப்படியாவது சீதையைத் தேடிக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். இல்லை எனில் திரும்பக் கூடாது. திரும்பாமல் இங்கேயே துறவியாக வாழ்ந்துவிடலாம். இல்லை எனில் ஜலசமாதி அடைந்துவிடலாம். யாருக்கும் தெரியாது. அதனால் பல விளைவுகளையாவது தடுத்துவிடலாமே?" இவை எல்லாம் அனுமனின் மனதில் தோன்றிய எண்ணங்கள். பின்னர் மன உறுதியை மீண்டும் பெற்ற அனுமன் உயிர் விடுவதால் பயன் இல்லை, தொடர்ந்து முயன்று தீர்மானித்த காரியத்தில் வெற்றி அடைதலே வாழ்வின் அர்த்தம் எனத் தெளிந்து கொண்டார்.

சீதை கிடைக்கவில்லை எனில் ராவணனை நாமே அழித்துவிடலாம், அந்தப் பரமேசனுக்குப் பலியிடலாம், என எண்ணிக் கொண்ட அனுமனின் கண்களில் ஒரு பெரிய அசோகவனம் கண்ணில் பட்டது. இங்கே இன்னும் இதுவரை தேடவில்லையே என நினைத்த வண்ணமே, சீதை இங்கே இருக்கவேண்டுமே என்ற எண்ணத்துடனேயே, ராமனை, லட்சுமணனை, சீதையை,ருத்ரனை, எமனை, இந்திரனை, பிரம்மனை, அக்னியை, சந்திரனை, வாயுவை, வருணனை, விஷ்ணுவை என அனைத்துத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு அனுமன் அசோக வனத்தினுள்ளே நுழைகின்றார்.

Monday, May 12, 2008

கதை, கதையாம் காரணமாம், ராமாயணம் பகுதி 42

பிரம்மா, சிவன், வாயுதேவன், இந்திரன் போன்றவர்களை மனதில் நினைத்து வணங்கிய அனுமன் தன் பிரயாணத்தை ஆரம்பித்தார். மலையே குலுங்கும் வண்ணம் கிளம்பிய அனுமன் சமுத்திரத்தைத் தான் தாண்டும் வண்ணம் விசுவரூபம் எடுத்துக்கொண்டு கூடி இருந்த வானர வீரர்களிடம் தான் சீதையை எவ்வாறேனும் கண்டுபிடித்துக் கொண்டு வருவதாயும் இல்லை எனில் ராவணனைச் சங்கிலியால் கட்டி இழுத்து வருவதாயும் கூறிவிட்டுச் சமுத்திரத்தைத் தாண்டுகின்றார். கடலைத் தாண்டி விண்ணில் பறந்த அனுமனைக் கண்ட தேவாதிதேவர்கள் அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். கடல் தாண்டும்போது சமுத்திரராஜன் அனுமனைப் பார்த்துவிட்டு, அவன் இக்ஷ்வாகு குல திலகம் ஆன ராமனின் காரியமாய்ப் போவதை அறிந்து கொண்டு அவனை உபசரித்து அனுப்புவது தன் கடமை என நினைக்கின்றான். ஆகவே தன்னுள் அடங்கிக் கிடந்த மைந்நாகம் என்னும் மலையை எழுப்பி அனுமனைத் தடுத்துத் தன்னில் சற்று நேரம் தங்கிப் போகச் சொல்லி வேண்டுமாறு சொல்கின்றான். அப்போது கடல் நடுவே இருந்த மைந்நாக மலை விண்ணளவுக்கு உயர்ந்து நின்று எழும்பியது. இந்த மலை இவ்வாறு தன் வழியில் குறுக்கிட்டுத் தடுப்பதை உணர்ந்த அனுமன் அந்த மலையைப் புரட்டித் தள்ளிவிட்டு அதைவிடவும் உயரே பறக்க ஆரம்பிக்க, மைந்நாகமோ அனுமனைத் தன் சிகரத்தில் சற்றே அனுமன் தங்கிப் போகுமாறு வேண்டியது. மேலும் இது சமுத்திரராஜனின் வேண்டுகோள் எனவும், இக்ஷ்வாகு குலத்தவரை உபசரிப்பது தன் கடமை என சமுத்திரராஜன் வேண்டியதன் பேரில் தான் கேட்பதாயும் சொன்னது, மலை உருவில் இருந்த மலையரசன். தான் ராம காரியமாய் வேகமாய்ச் செல்லவேண்டி இருப்பதாய் அனுமன் கூறிவிட்டு அதைத் தாண்டி முன்னே இன்னும் வேகமாய்ப் போனான். சூரியனே வியக்கும் வண்ணம் வேகமாய்ப் பறந்தானாம் அனுமன். அந்தச் சூரியனை மறைக்கும் ராகுபோல் அனுமன் வானத்தில் பறக்கும்போது உலகில் மேலெல்ல்லாம் ஒளிபெற்றுக் கீழெல்லாம் இருண்டிருந்தது. விண்ணில் உள்ள தேவர்கள் நாக மாதா ஆன சுரசை என்னும் தூய சிந்தை உடைய பெண்ணை நோக்கி, இந்த அனுமனின் பலத்தை நாம் அறிந்துவர உதவி செய்வாய் என வேண்ட, அவளும் உடனே சுய உருவை விடுத்து ஒரு அரக்கி வடிவம் எடுத்து அனுமன் முன்னே செல்கின்றாள்.

பிளவு பட்ட நாக்குடன் கூடியவளாய் அனுமன் முன்னே தோன்றிய சுரசை அனுமனை உண்ணும் ஆசை உள்ளவள் போல் அனுமனைப் பழித்துப் பேசுகின்றாள். ஆணவம் கொண்ட வானரமே, எனக்கு ஏற்ற உணவு நீயே, என்னெதிரே வருபவர்களைத் தடுத்து நிறுத்தி எனக்கு உணவாக்கிக் கொள்வது என் வேலை, பிரமன் எனக்களித்த வரம் எனக் கூறுகின்றாள். என் வாய் வழியே புகுந்து உட்செல்லுவதைத் தவிர வேறே வழியில்லை உனக்கு என்று கூறுகின்றாள். அனுமன் அவளிடம் நான் ராமகாரியமாய்ச் செல்கின்றேன். இப்போது தடை செய்யாதே. பெண்ணாகிய நீ பசித்துன்பத்தால் வருந்துவது கண்டால் மனம் வேதனைப் படுகின்றது. ராமனின் காரியம் முடிந்து நான் திரும்பி வரும் வேளையில் நீ என்னை உண்ணலாம், அப்போது என் உடம்பைத் தருவேன் என்று கூற சுரசை சம்மதிக்கவில்லை. உடனேயே அனுமனைத் தன் வாயினுள்ளே புகச் சொல்கின்றாள். அனுமன் அவளை எவ்வாறு வெல்லுவது என யோசித்த வண்ணம், உன்னை எவ்வாறேனும் அவமதித்துவிட்டுச் செல்வேன். உன் வாயினுள் நான் புகுந்து கொள்கின்றேன். முடிந்தால் நீ என்னை உண்ணலாம். என்று சொல்லிவிட்டுச் சட்டெனத் தன்னைச் சுருக்கிக் கொண்டு சுரசையின் வாயினுள் புகுந்துவிட்டு அவள் அதை உணரும்முன்னர் வெளியே வந்துவிட, அனுமனின் வல்லமை உறுதியானதை எண்ணி வானவர் வாழ்த்தினர், மலர்மாரி தூவினார்கள். சுரசையும் தன் பழைய உருவை அடைந்து அனுமனின் செயல்களில் இனி வெற்றியே என ஆசிகள் கூறி வாழ்த்தி வழி அனுப்புகின்றாள்.
பின்னர் அனுமன் இன்னும் அதிக உயரத்தில் விண்ணில் பறக்கக் கண்ட தேவர்களும், யக்ஷர்களும், அந்த மகாவிஷ்ணுவின் வாகனம் ஆன கருடனோ இவ்வாறு வேகமாய்ப் பறக்கின்றார் என வியந்தனர். அப்போது சமுத்திரத்தில் அனுமனின் நிழல் நீளமாய் விழவே, அந்த நிழலைப் பிடித்து யாரோ இழுக்கவே அவர் வேகம் தடைப்பட்டது. அனுமன் கீழே பார்த்தார். பெரிய உருவம் படைத்த ஒரு அரக்கி குகை போன்ற தன் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு இருப்பதையும் அவள் உருவம் வளர்வதையும் கண்டார் அனுமன். சிம்ஹிகை என்னும் அந்த அரக்கி குகை போன்ற தன் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு அனுமனை விழுங்க வர, அனுமன் அவள் வாயினுள் புகுந்து, வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து வெற்றி காண்கின்றார். அதன் பின்னர் தடையேதும் இல்லாமல், சமுத்திர ராஜனும், வாயுவும் துணை செய்யப் பறந்த அனுமன், கடலின் மறுகரையை அடைந்து திரிகூட மலை மீது நின்று கொண்டு இலங்கையைப் பார்வை இடுகின்றார். எவ்வளவு பெரிய நகரம், எத்தனை அழகு பொருந்தியது? மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், குளங்கள், ஏரிகள், நந்தவனங்கள், பேரழகோடு ஒளிமயமாய்க் காட்சி அளித்தது இலங்கை நகரம். பாதுகாக்கத் தான் எத்தனை அரக்கர்கள்? இத்தனை அரக்கர்களின் பாதுகாப்பையும் மீறி என்ன செய்ய முடியும்? அவ்வளவு எளிதில் இந்நகரைக் கைப்பற்ற முடியுமா? இப்போது நாம் வந்தாற்போல் கடல் கடந்து இந்நகருக்குள் வர வானரத் தலைவர்கள் ஆன அங்கதன், அரசன் ஆன சுக்ரீவன், தளபதியான நீலன், நான் ஆகிய நால்வரால் மட்டுமே இவ்வாறு வர முடியும். மற்றப் பெரும்படை எவ்வாறு வரும்? சீதையை எப்படி மீட்பது? முதலில் எவ்வாறு காண்பேன்? எங்கே இருப்பாள் அந்தச் சுந்தரியான சீதை? இந்த அரக்கர்களுக்குத் தெரியாமல் தான் பார்க்கவேண்டும். இப்போது பட்டப் பகலாய் இருக்கின்றதே? இரவு வரட்டும், பார்க்கலாம். இவ்விதமெல்லாம் அனுமன் எண்ணினான். ஆராய்ந்து பார்த்துத் தான் நாம் வந்த காரியம் கெட்டுவிடாமல் வேலையை முடிக்கவேண்டும் என்று எண்ணியவனாய் அனுமன் பகல் போய் இரவுக்குக் காத்திருந்தான், இரவும் வந்தது. அனுமன் முன் தோன்றினாள், இலங்கை நகரைக் காத்து வருபவள் ஆன இலங்கிணி, மிக்க கோபத்துடன்.

கடாம்பி உ.வே.ரங்காசாரியார் அவர்களின் வால்மீகி ராமாயண மூல மொழிபெயர்ப்புக்கு இணங்க திருத்தப் பட்டது. சில தவறுகள் ஏற்பட்டதற்கு வருந்துகின்றேன்.