எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 29, 2016

எல்லாமே தலைகீழ் விகிதம் தான்! 2

எனக்குத் தெரிந்தவரையில் ஐடி வேலை செய்யும் பெண்கள் பயங்கரமான மன அழுத்தத்தில் இருக்கின்றனர். முக்கியமாய் அவங்களுக்கு வேலை நேரம் ஒத்து வரதில்லை. இரவு நேர அலுவலில் அவர்கள் கண் விழித்திருப்பதாலும், கண்ட நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதாலும் உடல்நலம் பாதிக்கப்படுகிறார்கள். போதாக் குறைக்கு இரவுப் பயணங்களில் அவர்கள் அனுபவிக்கும் பாலியல் தொந்திரவுகள். சிலவற்றைச் சொல்லாமல் மறைத்தே வைக்கின்றனர் பெண்கள். இது தப்பு! வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் அவர்கள் நிலையில் அது சங்கடமாக இருக்கிறது என்பதே உண்மை! இவையெல்லாம் அறிந்தோ அறியாமலேயோ பெற்றோர் பெண்கள் சம்பாதிக்கும் தொகைக்காக அவர்களை வேலைக்கு அனுப்புகின்றனர். பல பெண்களும் மனம் விரும்பித் தான் வேலைக்குச் செல்லுகின்றனர். ஆனாலும் அதன் பின்னர் அதில் சந்தோஷமாக நீடித்து இருக்க விரும்பும் பெண்கள் எத்தனை பேர்! சந்தேகமே! பல பெண்களும் பெற்றோர் இனியாவது தாங்கள் வசதியாக வாழலாம் என எண்ணிப் பலவிதமான பொருட்களையும் இஷ்டத்துக்கு வாங்கிக் குவிப்பதற்குப் பணம் கட்டுவதிலேயே தங்கள் சம்பளத்தைச் செலவு செய்ய நேரிடுகிறது.

சில தனியார் நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொடுத்துவிட்டுச் சலுகைகளை வழங்குகின்றன. அவற்றில் மளிகைப் பொருட்கள், துணிமணிகள், நக்ஷத்திர ஓட்டலில் சாப்பிடுதல், மலை வாசஸ்தலங்களில் தங்குதல் போன்றவை எல்லாம் உண்டு. பெண் திருமணம் ஆகிப் போய்விட்டால் இந்தச் சலுகைகள் எல்லாம் போய்விடுமே என நினைக்கும் பெற்றோரும் உண்டு. சொல்ல வருத்தமாய் இருந்தாலும் இது ஒரு சில வீடுகளிலாவது உண்மை நிலவரமாய் இருக்கிறது. அதோடு பெண்கள், ஆண் நண்பர்களோடு பழகுவதையும், வெளியில் செல்வதையும் இந்த மாதிரிப் பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடிவதில்லை.

முன்னெல்லாம் பள்ளி, கல்லூரிகளிலேயே கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இப்போதும் ஒரு சில தனியார் கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் இருந்தாலும் பெண்கள் முன்னை விட இப்போது கொஞ்சம் துணிச்சலாகத் தான் செயல்படுகின்றனர். ஆனால் அவர்களின் தைரியமும் துணிச்சலும் ஆக்கபூர்வமாக இருக்கிறதா? சந்தேகமே! கூடப் படிக்கும் நண்பனோடு வெளியே சென்று காஃபி ஷாப் போவதிலும், பிட்சா சாப்பிடுவதிலும் பெரிய பெரிய மால்களில் சுற்றுவதும் தான் பெண்ணுரிமை என நினைக்கின்றனர். இதைச் சொல்லப் போனால் நமக்குக் கட்டுப்பெட்டி என்னும் பெயர் வரும். ஆனால் இப்படி எல்லாம் சுற்றுவதால் நமக்கு எந்த உரிமையும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. மாறாக நம்மைப் பயன்படுத்திக் கொள்வதில் ஆண்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இப்போது வரும் விளம்பரங்களைப் பார்த்தால் புரியும். ஒரு கால கட்டத்தில் பெண்கள் பெரும்பாலும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளையே விரும்பினார்கள்.

பெற்றோரும் அப்படியே வரன் பார்த்தார்கள். ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளை மட்டும் உள் நாட்டு மாப்பிள்ளைக்குக் குறைந்தவர் அல்ல! அவர்களும் வரதக்ஷணை என்று கேட்காவிட்டாலும் கல்யாணத்துக்குப் பையர் வந்து போகும் செலவு, பெண்ணை வெளிநாட்டுக்கு அழைத்துப் போக விசாவுக்குச் செலவழிக்கும் தொகை, பெண்ணை வெளிநாட்டுக்குப் பிள்ளை அழைத்துப் போனாலோ அல்லது விசா கிடைத்துப் பெண் கொஞ்சம் தாமதமாய்ப் போனாலோ பெண்ணின் போக்குவரத்துச் செலவு எல்லாவற்றையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனைகள் உண்டு. இதற்கு உள்நாட்டு மாப்பிள்ளைக்கே வரதக்ஷணை என்று கொடுத்துவிட்டுக் கல்யாணம் செய்து கொடுத்தால் பெண் நம் கண்ணெதிரே வாழ்க்கை நடத்துவாளே என்று எந்தப் பெற்றோரும் நினைப்பதில்லை.

வெளிநாட்டு மாப்பிள்ளைகளில் பல்வேறு ஏமாற்றுப் பேர்வழிகளும் கலந்து போய் அவங்களோட சுயரூபம் மெல்ல மெல்ல வெளுக்க ஆரம்பிச்சதும் தான் இப்போது வெளிநாட்டு மோகம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆனால் அதற்காகப் பெண் வீட்டுக்காரர்கள் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை. பெண்ணிற்கு வயது ஏறிக் கொண்டே போகிறதே, இந்த வயதில் நாம் இரண்டு பிள்ளைகள் பெற்று விட்டோமே என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை. பெண்ணிற்கும் உணர்வுகள் உண்டு என்றாவது நினைக்க வேண்டும்.அதோடு பெரும்பாலான பெற்றோர்களும் அதீதமாய்ப் பணம் செலவு செய்து படிக்க வைப்பதால் கொஞ்ச நாட்களாவது அந்தப் பெண்ணின் சம்பாத்தியத்தை நாமும் அனுபவிக்கலாமே என்ற எண்ணம் வந்து விடுகிறது. ஒரு சமயம் இரு பெண்கள் பேசிக் கொள்வதைக் கேட்க நேரிட்டது. அதில் ஒரு பெண்ணிற்குத் திருமணம் தள்ளிப் போடப்பட்டே வருகிறது என்பதைக் கேட்ட இன்னொரு பெண் என்ன விஷயம், ஏன் சரியா வரலை? உனக்குப் பிடிக்காத வரனா? என்றெல்லாம் கேட்கிறாள். (தோழிகளுக்குள்ளான அந்தரங்கப் பேச்சில் கேட்டவை! பேருந்துப் பயணத்தில்!) அதற்கு அந்த இன்னொரு பெண், எவனாயிருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கத் தயாராய்த் தான் இருக்கேன். அப்பா, அம்மா தான் இது வேண்டாம், அது வேண்டாம்னு சொல்றாங்க! என்பதே!

கடைசியில் இப்படிச் செய்யும் பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் பெண்ணின் திடீர்த் திருமணத்தால் ஏமாந்து மனம் நொந்து தான் போவார்கள். ஆம், காத்திருந்து, காத்திருந்து பொறுத்துப் பொறுத்து ஏமாந்த அந்தப் பெண் கடைசியில் தானாகவே தன்னை விரும்பிக் கேட்ட ஒரு பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு விடுவாள். இப்படித் தான் நடக்கும்! இல்லை எனில் அந்தப் பெண்ணிற்குத் திருமணம் ஆக வழியே இல்லை! முனைந்து பார்த்துத் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர் மிகக்குறைவாக இருக்கின்றனர்.

பி.கு. போன பதிவில் காரம், உஷ்ணம் அதிகமாய்த் தெரிந்ததாகப் பலரும் அபிப்பிராயப் பட்டதால் இந்தப் பதிவில் காரம், மணம், குணம் கம்மியாக இருக்கும். :)

12 comments:

 1. //பெண் திருமணம் ஆகிப் போய்விட்டால் இந்தச் சலுகைகள் எல்லாம் போய்விடுமே என நினைக்கும் பெற்றோரும் உண்டு. சொல்ல வருத்தமாய் இருந்தாலும் இது ஒரு சில வீடுகளிலாவது உண்மை நிலவரமாய் இருக்கிறது//
  மிகச்சரியாக சொன்னீர்கள் உண்மை

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! பெற்றோர் சரியில்லை என்பது மிக முக்கியம்!

   Delete
 2. காரம் மணம் குறைந்தது என்று நீங்கள் சொன்னாலும் நிறையவே கன்ஃப்யூஸாகி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் பெண்ணுரிமை என்று பேசும்போது ஆண்களுக்குச் சமம் என்று எண்ணும்போது ஆண்களின் கஷ்டங்களும் பட வேண்டும் அல்லவாஎன் மகன் சொல்வான் நான் இன்னும் மனதளவில் மாறவில்லை என்று. எனக்கும் அது சரி என்றே தோன்றுகிறது இன்றைய நிகழ்வுகள் பலவற்றை சீரணிக்கவே முடியவில்லை அதுவே பெண்கள் எனும் போது பயமும் கலக்கமும் அதிகரிக்கிறது ஆனால் இன்றைய பெண்கள்திருமணத்துக்கு இரண்டாம் பட்ச மதிப்பே கொடுக்கிறார்கள் ஒரு விளம்பரத்தில் வருவது போல் எல்லாமே ஈக்வல் ஈக்வல் ஆக இருக்க விரும்புகிறார்கள் எனக்குத் தெரிந்த ஒரு பையனின் மனைவி திருமணத்துக்குமுன் பையனுடன் நன்றாகவே பழகி சம்மதம் தெரிவித்தாள் ஆனால் திருமணம் ஆன ஒரு வாரத்திலேயே விவாக ரத்து கேட்டாள் நானும் கட்டுப்பெட்டிதான் போல இருக்கிறது நல்ல வேளை எனக்குப் பெண்கள் பிறக்க வில்லை. மருமகள் களும் கட்டுப் பெட்டிகள் அல்ல. எல்லா விதத்திலும் ஆணுக்கு குறைந்தவர்களும் அல்ல,

  ReplyDelete
  Replies
  1. எந்த விதக் குழப்பமும் எனக்கு இல்லை ஐயா! பொதுவாகப் பெண்களின் நிலையே இப்போது கொஞ்சம் குழப்பமாக இருப்பதால் அப்படித் தெரிகிறது. ஒரு பக்கம் பெண்ணுரிமை பேசும் பெண்கள்! இன்னொரு பக்கம் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்! இதற்கு நடுவில் தான் எல்லாப்பெண்களும் வாழ வேண்டி இருக்கிறது. சாமானியப் பெண்கள் உட்பட! பெண்ணும் ஆணும் சமம் என்று நான் எங்கே சொன்னேன்? என்னைப் பொறுத்தவரை பெண் பெண்தான். அவளுடைய பிரச்னைகள் தனி! உலகம் தனி! அவளுடைய உடல்ரீதியான கஷ்டங்களாலும் மனம் பாதிக்கப்படுவாள். ஆணுக்குப் பிரச்னைகளே வேறே! ஆணின் உலகம் பரந்து விரிந்தது. பெண்ணின் உலகம் முதலில் குடும்பம் தான்! அநேகமாகப் பல பெண்களும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தைக் கட்டிக்காத்துக் கொண்டு இருக்கவே விரும்புகின்றனர். மாறுதலாகப் பெண்ணுரிமை பேசும் பெண்களே குழப்பமான மன நிலையில் உள்ளார்கள்.

   Delete
 3. எனக்கு பலதும் சொல்ல விருப்பம் இருக்கிறது. ஆனால் தனிப்பட்ட குடும்ப விசயங்களை வெளிப்படுத்துவதில் தயக்கம் இருக்கிறது. பெண்ணுரிமை பேசுபவர்கள் எல்லாம் பெண்களும் அல்ல, அதேபோல் பெண்ணுரிமை மறுப்பவர்கள் எல்லோரும் ஆண்கள் அல்ல. ஒரு சிலரே
  முரண்பட்டு போகிறார்கள். ஆகவே அவர்களை ஒதுக்கிவிட்டு நாம் நமக்கு நேர்மையை கடைப்பிடித்தால் போதும். வரையறுக்கப்படாத உரிமைகள் வேண்டும் என்பது வாகனங்கள் செல்லும் சாலையில் நான் நடுச் சாலையில் தான் நடப்பேன் போன்றது.

  ஜெயகுமார்

  ReplyDelete
  Replies
  1. சில விஷயங்களை வெளிப்படுத்துவதில் எனக்கும் தயக்கம் தான் ஜேகே அண்ணா. பெண்ணுரிமை பேசுவதில் பல பெண்களுக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் ஆண்கள் பெண்ணுரிமையை எதிர்க்கவில்லை என்றாலும் பெண் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதை நிச்சயம் எதிர்பார்க்கிறார்கள்! உரிமைகளுக்கு வரையறை வேண்டும் என்பதிலும் நியாயம் இருக்கிறது. வரையறை அற்ற உரிமைகள் வாழ்க்கைப்பாதையில் பரப்பப் பட்டிருக்கும் கற்கள், முட்கள், இடையூறுகள்.

   Delete
 4. பதிவின் நோக்கம் விளங்கவில்லை. எனினும் எங்கள் வீட்டில் இரண்டு உதாரணங்கள் உண்டு. ஒன்று, முப்பத்தைந்து வயதாகியும் தன் ஒரே பெண்ணைத் திருமணம் செய்விக்காமல் இருக்கும் ஒரு உறவினர். அந்தப் பெண்ணுக்கு நல்ல சம்பளம். இன்னொரு உதாரணம் கலப்புக் கல்யாணம். தகப்பனின் வேதனை.

  ReplyDelete
  Replies
  1. ஜிஎம்பி சார் நான் குழப்பமான மனநிலையில் எழுதி இருப்பதாகச் சொல்கிறார். நீங்கள் நோக்கம் விளங்கவில்லை என்கிறீர்கள். என்னுடைய கருத்து இப்போதைய பெண்களின் முக்கியமாக இளம்பெண்களின் இரண்டுங்கெட்டான் நிலை பற்றிக் குறிப்பிடுவது தான். அதைச் சொல்கையில் ஐடியில் பெரும்பாலான பெண்கள் வேலை பார்ப்பதையும் அங்கே அவர்கள் படும் சிரமங்கள், சங்கடங்கள், பிரச்னைகள் எனப் பலவற்றையும் பேசி ஆக வேண்டும். ஆனால் முழுவதும் சொல்வதிலும் தயக்கமாக இருக்கிறது. ஆகவே தொட்டும் தொடாமலும் சொல்லிச் சென்றிருக்கிறேன்.

   Delete
 5. எதையும் ஒரு நிலைப்பாடோடு தெளிவாகச் சொல்லும் நீங்கள், இந்த விஷயத்தில் தொட்டும் தொடாமலும் மட்டும் தான் இதைப் பேச முடியும். பெரும்பாலும் பேசாமல் தவிர்க்கப்படும் வலிகள் இவை. இன்னமும் சொல்லுங்கள் .

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் பெண்களின் இரண்டுங்கெட்டான் நிலையைக் குறித்துத் தெளிவாகத் தானே சொல்றேன் தம்பி. உண்மையில் இதைப் படிக்கும் இந்தக் காலத்து இளம்பெண்கள் என்னைப் பார்த்து உனக்குப் பொறாமைனு சொல்லக் கூடிய சாத்தியங்கள் உண்டு. தமிழ் ஹிந்துவில் எழுதியப்போ ஏற்கெனவே ஒரு பெண் அப்படிச் சொல்லி இருக்கிறாள்! :) தொட்டும், தொடாமலும் சொல்வதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. :(

   Delete
 6. 'எல்லாமே தலை கீழ் விகிதம்தான்-பெண்களின் பங்கு' படித்தேன். ஐ.டி யில் பணி புரியும் பெண்களின் துயரங்களை எழுத ஆரம்பித்த நீங்கள் பெண்களுக்கு எதிராக சேம் சைட் கோல் போட்டு கட்டுரையை முடித்திருப்பது ஐ.டி. பெண்களின் மற்றுமொரு துயரம்!

  ஐ.டி. என்று நீங்கள் குறிப்பிடும் பொழுது எல்லோரையும் போலவே ஐ.டி. மட்டுமல்லாமல் BPO, KPO துறைகளையும் சேர்த்துதான் சொல்கிறீர்கள் இல்லையா? பெண்களை சீரழிப்பதில் BPO வின் பங்கு சற்று அதிகம் என்று நினைக்கிறேன்.

  நான் பார்த்த வரையில் நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண்களை விட, சிறு நகரங்களில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு புலம் பெயரும் பெண்கள்தான் மிகவும் தாறுமாறாக நடந்து கொள்கிறார்கள். காரணம் திடீரென்று கிடைத்த அதிக பட்ச சுதந்திரம்.

  //பெண் திருமணம் ஆகிப் போய்விட்டால் இந்தச் சலுகைகள் எல்லாம் போய்விடுமே என நினைக்கும் பெற்றோரும் உண்டு.//

  பெண்கள் என்றைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்களோ அன்றைக்கே அவர்களால் கிடைக்கும் சௌகரியங்களை விட மனமில்லாமல்தான் அவர்களுக்கு திருமணம் செய்யாமல் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்னும் பழியை பெண்ணைப் பெற்றவர்கள் சுமக்கத் தொடங்கி விட்டார்கள்.

  //எனக்குத் தெரிந்தவரையில் ஐடி வேலை செய்யும் பெண்கள் பயங்கரமான மன அழுத்தத்தில் இருக்கின்றனர்//

  வேறு எந்த துறையில் வேலைக்குச் செல்லும் பெண் சந்தோஷமாக இருக்கிறாள்? unless she is career oriented.

  என் மகளை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற கால கட்டத்தில் அவள் விண்ணப்பித்திருந்த நகரின் மூன்று சிறந்த கல்லூரிகளிருந்தும் அவளுக்கு அட்மிஷன் கார்டு வந்தது. அதில் ஒரு கல்லூரியைத்தான் என் மகனும் மகளும் தேர்ந்தெடுத்தனர். எனக்கு அது பணக்கார மாணவிகள் படிக்கும் கல்லூரி, மேலும் அந்தக் கல்லூரி மாணவிகள் என்றாலே அல்ட்ரா மாடர்ன் பெண்கள் என்று ஒரு எண்ணம் உண்டே என்று தயங்கினேன். என் நினைப்பு தவறு என்று என் மகன் கூறி, அதிலேயே அவளை சேர்க்கச் செய்தான். அங்கு சேர்ந்த சில நாட்களில் என் மகள், "அண்ணா சொன்னது சரிதான் அம்மா. என் வகுப்பில் பெரும்பாலானோர் மிடில் க்ளாஸ் அல்லது அப்பர் மிடில் கிளாஸ் தான். பெரும் பணக்காரர்கள் என்று ஐந்து பேர் இருக்கலாம். அதே போல அல்ட்ரா மாடர்ன் என்பதும் தவறு. விஸ்காம் மாணவிகள்தான் தலையை கலர் செய்து கொள்வது போன்ற விஷயங்களைச் செய்து மாடர்ன் ஆக இருப்பார்கள். மற்றபடி எல்லோரும் சாதாரணமாகத்தான் இருக்கிறார்கள்" என்றாள். அவள் கணக்கு படி 2% மாணவிகள்தான் அல்ட்ரா மாடர்ன்! 3000 மாணவிகள் பயிலும் இடத்தில் 2% மிக அதிகமாக தெரிகிறது. இதே நிலைதான் ஐ.டி. பெண்களுக்கும்.

  இறுதியாக ஒன்று, ஐ.டி. துறை என்பது காய்க்கும் மரம் கல்லடி படத்தான் செய்யும்.

  கல்யாணம்,விவாகரத்து இவைகளைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுதலாம் என்று நினைக்கிறேன்.

  பி.கு.: என் மகனோ, மகளோ ஐ.டி.யில் இல்லை.

  ReplyDelete
 7. இதைப் பற்றி நிறைய எழுதலாம். நிறையக் கேள்விப்பட்டுள்ளேன். இந்தத் துறையில் இருப்பதால் நிறையத் தெரிகிறது. ஆனால், தாமதமாகப் படிப்பதால் எழுதவில்லை.

  வேலைக்குச் செல்லும் பெண்களின் உணர்வு, அப்பா/அம்மா வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு (வயதுக்கு வந்த), ஒரு நாளோ அல்லது இரு நாளோ வெளியூர் செல்லும்போது குழந்தைகள் அனுபவிக்கும் மன நிலை, மனைவி 1 வாரம் பிறந்தகம் சென்றபோது கணவர் அனுபவிக்கும் சுதந்திர மன நிலை - எல்லாம் ஒரே மாதிரிதான். தான் சம்பாதிக்க ஆரம்பித்ததும் ஒரு சுதந்திர உணர்வு கிடைக்கும். அது தவறில் கொண்டுபோய் விடாமல் பார்த்துக்கொண்டால் போதும்.

  பெற்றோர் கன்சர்வேடிவ் ஆக இருந்தாலோ, எல்லாவற்றிற்கும் தீர்வு காண முயற்சிக்காமல், பிள்ளைகளையே குறை சொல்லும் குணமுடையவர்களாக இருந்தாலோதான், குழந்தைகள் பாலியல் இன்ன பிற தொந்தரவுகளைப் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். பெற்றோர்தான் இதைப் புரிந்துகொண்டு உதவ வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள் ஓரளவு மெச்சூர்ட் ஆனவர்கள். அப்படி இல்லை என்றால்தான், நாம் உதவ வேண்டும். (means we need to protect)

  "அப்பா, அம்மா தான் இது வேண்டாம், அது வேண்டாம்னு சொல்றாங்க" - இது மிகவும் குறைந்த சதவிகிதம்தான். அப்படிப்பட்டவர்கள் பெற்றோராய் இருக்க இயலாது. பிஸினஸ்மேன் களாய்த்தான் இருக்க வேண்டும். They will deserve what they will get. அந்தப் பெண்களுக்காக நாம் பரிதாபப் படத்தான் இயலும்.

  ReplyDelete