என்னோட மன்னிக்கும் எனக்கும் 2 அல்லது 3 மாதங்கள் தான் வயதில் வித்தியாசம். என்னைவிட 2 மாதங்கள் அளவே மன்னி சிறியவர். ஆனாலும் நான் "மன்னி" என்றே அழைப்பேன். நான் கொஞ்சம் பெரியவள் என்பதால் மன்னி என்னை "அக்கா" என அழைக்கிறார். ஆரம்ப காலத்திலேயே பெயர் சொல்லிக் கூப்பிடச் சொல்லியும் அவங்க ஒத்துக்கலை! தம்பி மனைவிக்குத் தான் எந்த உறவுமுறைப் பெயரும் சொல்லத் தெரியலை. காரைக்குடிப் பக்கம் ஏதோ இருக்குனு நினைக்கிறேன். எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இப்போதெல்லாம் மன்னியை அவங்க வயதில் பெரியவங்களா இருந்தாலும் கூட "மன்னி" என்று அழைக்கும் பழக்கம் இல்லை!
மன்னியைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கமே இப்போது இருந்து வருகிறது. நாத்தனாரும் வயதில் பெரியவரானால் மரியாதையாக அழைக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. இதெல்லாம் நம் நாட்டில் முன்னர் கிடையாது. இப்போது அமெரிக்கக் கலாசாரத்தின் தாக்கம் இந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது என்பது! அங்கே தான் எல்லோரும் எல்லோரையும் எந்த வயதானாலும் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இந்த விஷயத்தில் நம் மக்கள் அமெரிக்காவை அப்படியே காப்பி அடிக்கின்றனர். இது தான் இன்றைய நாகரிகம்!
உறவு முறைகளை உறவு முறைப் பெயரைச் சொல்லி அழைக்கும் வழக்கமே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. ஏற்கெனவே ஒவ்வொருத்தர் வீடுகளிலும் ஒரு குழந்தை தான்! வெகு சிலருக்கே 2 குழந்தைகள்! அதிலும் இரண்டும் பெண் எனில் அக்கா, தங்கை தான்! ஆண் எனில் அண்ணா, தம்பி! அண்ணா, தங்கையோ அக்கா, தம்பியோ வெகு அரிதாக இருக்கும். அப்படி இருந்தாலும் மாமா என்னும் உறவு முறைச் சொல் மறைந்து போய்விடும் போலிருக்கு! ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்கள் மாமாவுக்கு எங்கே போக? ஒரே ஒரு ஆண் குழந்தை எனில் அத்தைக்கு எங்கே போவது? இவை தான் இப்படி எனில் சித்தப்பா, சித்திகளும் மறைந்து குறைந்து வருகிறார்கள். ஒரே ஒரு பெண் குழந்தை எனில் சித்திக்கோ, பெரியம்மாவுக்கோ எங்கே போவது? ஆண் குழந்தை எனில் சித்தப்பாவோ, அத்தையோ, பெரியப்பாவுக்கோ எங்கே செல்வது?
அதோடு விட்டதா? அந்த ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணான குழந்தைகளையும் அதிகம் படிக்க வைச்சு அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ, லண்டனுக்கோ நம்மோட பெருமைக்காக அனுப்பி வைச்சுடறோம். அவங்க அவங்க வாழ்க்கையை வாழறாங்கனு பெருமையாச் சொல்லிப்போம். நம்மாலே அங்கேயும் போய் நிம்மதியா இருக்க முடியாது! இங்கேயும் தனிமையிலே வசிக்க முடியாது! அங்கே எல்லாத்துக்கும் நாம் பிள்ளை அல்லது பெண் கையைத் தான் எதிர்பார்க்கணும். அவங்க வேலையை முடிச்சுண்டு அவங்க வந்தப்புறமாத் தான் நாம் நமக்கென அவங்களை ஏதானும் உதவச் சொல்லிக் கேட்க முடியும். எங்கானும் கோயில் போவதென்றாலும் அந்தச் சனி, ஞாயிறுகளில் தான். அதுவும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறையில் தான். ஆனால் அங்கே வாழும் அவங்களுக்கு அந்த இரண்டு நாட்களில் தான் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, ஒரு வாரத்துக்கான சாப்பாடு தயார் செய்வது என்று அதிகம் வேலை இருக்கும். நமக்கோ இங்கே தினசரிகள் தினமும் வரும்! அதோடு வார, மாதாந்தரிகள், எனப் புத்தகங்கள் வரும். படித்துப் பொழுது போகும். அங்கே புத்தகங்கள் நாம் இருக்கப் போகும் சொல்ப காலத்திற்கெனச் சந்தாக் கட்டி வாங்க முடியாது! தொலைக்காட்சி சானல்கள் இப்போதெல்லாம் அங்கேயும் தெரிவதால் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான்.
வெளிநாடுகளில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் ஆரம்பத்தில் மனதைக் கவரும்! சுத்தம் பார்க்கிறதும் சாலைக் கட்டுப்பாடு போன்றவையுமே பிரதானமாகத் தெரியுமே அன்றி இங்கே மாதிரி எளிமை இருக்காது! வெளியில் எங்காவது போனால் கூட இங்கே எனில் அக்கம்பக்கம் உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சகஜமாப் பேசலாம். ஆனால் அங்கே அப்படி முடியாது. முக்கியமா உடம்பு சரியில்லைனா இங்கே வீட்டிலேயே கஷாயம் போட்டுச் சாப்பிட்டுப் பார்த்துட்டு அப்புறமா மருத்துவர் கிட்டேப் போவோம். அங்கேயும் கஷாயம் போட்டுக்கலாம் தான்! சுக்கு, மிளகு கிடைக்குமே! ஆனாலும் மருத்துவரை உடனே எல்லாம் போய்ப் பார்க்க முடியாது! காத்திருக்கணும்! காத்திருந்து பார்த்தாலும் மருத்துவருக்கான கட்டணங்களைக் கட்ட நாம் இன்ஷூரன்ஸ் செய்திருந்தால் தான் கட்டுப்படி ஆகும்! இல்லைனா கஷ்டம் தான்! ரெண்டுங்கெட்டான் நிலை! அல்லது திரிசங்கு சொர்க்கம்னு சொல்லலாம்!
அங்கே இருக்கும் நதிகளில் நீர் எத்தனை நிறைய ஓடினாலும் அதில் நாம் குளிக்க முடியாது! அருவிகளில் நீர் கொட்டினாலும் அங்கேயும் குளிக்கவோ ஆயில் மசாஜோ செய்து கொள்ள முடியாது! இங்கே இருக்கும் இந்த சுதந்திரம் தான் உண்மையான சுதந்திரம்! அங்கே நாம் காரைப் பார்க்கிங் இடத்தில் நிறுத்தும்போது அங்கிருக்கும் மரம் எதிலாவது கவனக்குறைவாக இடித்துவிட்டோமெனில் அபராதம் கட்டவேண்டும். அதே போன்றதொரு மரக்கன்றை நட்டுப் பராமரிக்க வேண்டும். வீட்டை அது நம் சொந்த வீடாகவே இருந்தாலும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தோட்டங்களில் பனிக்காலத்தில் பனி சேர விடக்கூடாது. புற்களை ஒழுங்காக வெட்டவில்லை எனில் அங்கே நகராட்சியிடமிருந்து அபராதம் கட்டச் சொல்வாங்க. வீடு வாடகைக்கு இருந்தோமெனில் காலி செய்து வேறு வீடு போகையில் இத்தனை நாட்கள் இருந்த வீட்டை முற்றிலும் நம் செலவில் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். அங்கே போட்டிருக்கும் கார்ப்பெட்டுகள் பழுதடைந்தால் புதுசாக வாங்கித் தரணும். இங்கே வாடகையே கொடுக்காமல் ஏமாற்றும் குடித்தனக்காரர்களும் உண்டு. குடித்தனக்காரர்களிடம் அடாவடியாக நடந்து கொள்ளும் வீட்டுக்காரர்களும் உண்டு. இதை எல்லாம் பார்த்துத் தான் பெரும்பாலான பெற்றோர்கள் இங்கேயே தனியா இருக்காங்க. அவங்களாலே முடிஞ்சவரை பார்த்துக்கறாங்க, இல்லைனா முதியோர் இல்லத்திலே சேர்ந்துடறாங்க. ஏனெனில் அக்கம்பக்கம் ஒத்தாசைக்கு யாரும் இப்போல்லாம் முன்னைப் போல் வர முடியறதில்லை. அவங்கவங்க வேலை அவங்க அவங்களுக்கு! ஆக மொத்தம் முதியோர் இல்லம் தான் கதி இங்கே இருக்கும் பெற்றோருக்கு!
ஏனெனில் இருக்கும் உறவினரே மிகக் குறைவாக இருக்கும். பெற்றோருக்கு இன்னொரு பெண்ணோ, பிள்ளையோ இருக்கா! அதுவும் இல்லை! இருக்கும் ஒன்றிரண்டு உறவினருக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். உடல்நலக் கேடு இருக்கும். இந்த அழகில் நாமளும் அவங்க கிட்டேப் போக முடியாது! அவங்களும் நம்மை வந்து பார்க்க முடியாது! உறவுகள் பெயரளவில் மட்டுமல்லாமல் மனதளவில் கூடச் சுருங்கிப் போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன.
தலைப்பை விட்டுட்டு எங்கேயோ போறேனோ! இப்படி மறைந்து கொண்டிருக்கும் பெயர்களில் தாத்தா, பாட்டி, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, மாமா, மாமி, அத்தை, அத்திம்பேர், அம்மான் சேய், அம்மங்கா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா! மச்சான், மச்சினி, மைத்துனர், மைத்துனி, நாத்தனார் போன்ற எத்தனையோ உறவுப் பெயர்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. வெளிநாட்டு மோகம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறது! வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் சாப்பாடு கூட மாறி வருகிறது. இப்போது கே எஃப்சி பதார்த்தங்களும், பிட்சா, பர்கர் வாங்காத மனிதர்களும் மனிதர்களே அல்ல. நம் இட்லி, தோசையைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இவை முன்னணியில் நிற்கின்றன. நம் கலாசாரம் அவர்களைக் கவர்ந்தது போக அவர்கள் கலாசாரத்தில் நாம் மூழ்கியே விட்டோம். வெளிவரவே இல்லை.
ஆறுதல் தரக் கூடிய ஒரே விஷயம் கோயில்களில் கூட்டம், பிரதோஷம் என்றால் எக்கச்சக்கமான கூட்டம்! பக்தியோ, இல்லை பயமோ அல்லது பயம் கலந்த பக்தியோ ஏதோ ஒண்ணு தான் இன்னும் கொஞ்சம் நஞ்சமாக மிச்சமிருக்கும் நம் கலாசாரத்தைத் தூக்கிப் பிடித்து வருகிறது. இது மட்டும் இல்லைனா இன்னும் மோசமாக இருக்கும்! :( இதிலே அண்ணாவை அண்ணா என்றோ தம்பியைத் தம்பி என்றோ கூப்பிடுபவர்கள் அரிது. என் மைத்துனரை எங்க மாமியார் வீட்டில் எல்லோருமே "தம்பி அல்லது அம்பி" என்றே அழைத்து வந்தனர். இதை அவர் ஒரு பெரிய விஷயமாகக் கருதியதில்லை. இத்தனைக்கும் அவர் 60 வயது ஆனவர் தான். கடைசி மைத்துனர் தன் அண்ணாவான இந்த மைத்துனரை "அம்பி" என்றே அழைப்பார். இதெல்லாம் ஒரு நெருக்கத்தைத் தான் காட்டுமே தவிர நாம் அவர்களை விட உயர்வானவர்கள் என்ற பொருளில் எல்லாம் வராது! உறவு முறைப் பெயரைச் சொல்லி அழைக்கும்போது மனதில் ஏற்படும் நெருக்கம் அவங்களோட பெயரைச் சொல்லி அழைக்கையில் ஏற்படுமா? சந்தேகமே!
இது ஒருவேளை என் தலைமுறைக்காரங்களுக்கு இப்படித் தோன்றலாம்! அதுவும் தெரியவில்லை! அல்லது எனக்குப் புரியவில்லை. நான் இணையத்தில் என் அருமைத் தம்பிகள் அனைவரையும் "தம்பி" என்றே அழைத்து வருகிறேன். ஒருத்தரும் ஆக்ஷேபம் தெரிவிக்கவில்லை! பிழைச்சேன்! அவங்களும் என்னை அன்பாக அக்கா என்றே சொல்கின்றனர். சந்தோஷமாகவே இருக்கு!