ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)
ராமருக்குப் பாவம் ரொம்பவே மிருதுவான பக்ஷணங்கள்! அதான் அவர் இப்படிச் சொல்றார்!
நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க! இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும்! அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி! கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே! ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான்! உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன்! ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர்! சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே! நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு! ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம்! ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.
இந்த வருஷம் மல்லிகை மாலை போடலை. பூ சரியாக வர ஆரம்பிக்கலை. அதனால் கதம்பம் தான். படமும் முன்னால் எடுத்தது. இந்த வருஷம் எடுக்கலை! :)
என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை! இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு! பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு! இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன்! நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை! காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.
வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது! :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள்! ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை!
சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்!
கீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது. பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)
எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா!
இது ஒரு மீள் பதிவு. மற்றபடி இந்த வருஷமும் பாயசம், சுண்டல், வடை, நீர்மோர், பானகம், சாதம், பருப்பு, வெற்றிலை, பாக்கு, பழம்!