எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 01, 2018

மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்கு!

ஹிஹிஹி, குதம்பைச் சித்தரின் பாடல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! இதிலே மாங்காய்ப் பால் தேங்காய்ப் பால் இரண்டும் உண்டே!

புத்தகம் அடுக்கும் வேலை ஆரம்பிச்சுப் பாதியிலேயே நிக்குது! அவ்வளவு சுறுசுறுப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லாம் இந்தக் கணினி நடுவில் படுத்துடுச்சா! அந்தக் கவலை! மருத்துவர் வரதும் போறதுமா இருக்கவே மத்தியான நேரங்கள் அதில் போய்விட்டன! புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு! அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை! அது கிடக்கட்டும்.

இப்போச் சில மாசங்களாக நம்ம வழக்கமான சாப்பாடு சாம்பார், அல்லது குழம்பு, ரசம், கறி, கூட்டு முறையை மாற்றியாச்சு. நம்ம ரங்க்ஸே அதிசயமாப் பொடி ஏதேனும் பண்ணி வைனு சொல்லிப் பருப்புப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி பண்ணி வைச்சிருக்கேன். புளிக்காய்ச்சலும் செய்து வைச்சிருக்கேன். அதிலே ஒரு தில்லுமுல்லுவும் பண்ணினேன். ஹெஹெஹெ! அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி! மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி! எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை! நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது! அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது! ஐய! தித்திப்பு, எப்படித் தான் சாப்பிடறயோ என்பார்.

இப்படியாகத் தானே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்கக் கூடிய காலகட்டத்திலே ஒரு நாள் திடீர்னு பார்த்தால் மாங்காய் (கல்லாமை) வாங்கி வந்தார்.  என்னமோ அதிசயம் பாருங்க! போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது! அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும்! :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க "கத்தி" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் "கத்தி!" எடுக்காத குறையாச் சண்டை. அரைகுறையாக் காதிலே வாங்கிக்கற அக்கம்பக்கத்தினருக்கு இது பழகிப் போயிருந்தாலும் இதுங்களுக்கு வேறே வேலையே இல்லையானும் தோணும். ஹெஹெஹெ!

சரி, சரி, பாயின்டுக்கு வந்துடறேன். மாங்காய் மிச்சம் இருந்ததைத் துருவினேன். துருவும்போதே என்ன செய்யலாம் என யோசனை! அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா! எனக்கு மயக்கமே வந்துடுத்து! ஙே என நான் முழிக்க, மாங்காய் சாதம்! என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு! சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, "இங்கே பார்!" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே  மாங்காய் சாதம் ரெசிபி ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடைசியில் இதைப் பார்த்தா! சரி பரவாயில்லைனு அதைப் படித்துக் கொண்டேன். மாங்காய் சாதத்துக்கு சாதம் தனியா எப்போவும் தயாரிக்கிற மாதிரித் தயாரித்தால் போதுமே. மாங்காய் கிளறியது தான் தனியா வேணும். ஆகவே அதற்காக சாமான்கள் சேகரித்தேன்

மாங்காய்த் துருவல்

மாங்காத் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் (தேவையானல்), மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவுக்கு.

இஞ்சி, பச்சை மிளகாய், ஜீரகம்

நல்லெண்ணெய் அரைக்கிண்ணம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயம்  தாளிக்க. தேவையானால் ஒரே ஒரு மி.வத்தல் தாளிக்கலாம். அவரவர் காரத்தைப் பொறுத்து. 

தேங்காய்த் துருவல்


தாளிதம்
முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை ஜீரகத்தோடு சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலையையும் போடவும். அல்லது இவற்றைப் பின்னர் தனியாகத் தாளிக்கவும். இந்த எண்ணெயில் தாளிதத்தைத் தனியாக எடுத்து வைத்து விட்டுப் பின்னரும் சேர்க்கலாம். நான் அப்படியே இதில் மாங்காய் விழுதைப் போட்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மி.பொடி போட்டுக் கிளறினேன். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் கீழே இறக்கி வெந்தயப் பொடி சேர்க்கவும். தாளிதம் கரகரப்பாக இருக்கணும் எனில் மாங்காய் விழுதுடன் அரைத்த விழுது, மி.பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டுத் தனியே கடைசியில் தாளித்து   இப்போது தாளிதத்தைப் போட்டுக் கலக்கலாம். இம்முறையில் தாளிதம் கரகரப்பாக இருக்கும்.   

ஒரு தட்டில் சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்பு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதில் இந்த விழுதைக் கொஞ்சம் போல் எடுத்து நன்கு கலக்கவும். சாதமும் விழுதும் நன்கு கலந்தவுடன் வாயில் போட்டுப் பார்த்து சரியாக இருக்கானு பார்த்துக் கொள்ளவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் விழுது சேர்க்கலாம். 
தேவையானால் கொத்துமல்லி சேர்க்கவும். இதில் கொத்துமல்லி அவ்வளவு சுவை கூட்டவில்லை. இதுக்குத் தொட்டுக்க நான் செய்தது பச்சை மோர்க்குழம்பு! இதைச் சூடு செய்ய வேண்டாம்.



அரைத்த விழுது!


மாங்காய் விழுதுடன் கலந்து வதக்குதல்


சாதம் கலந்தாச்சு!


பக்கத்தில் பச்சை மோர்க்குழம்பு. சிலர் இதுக்குத் தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்!

நல்ல கெட்டியான மொரில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைக்கவும். 
மி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு  அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அல்லது இரும்புக் கரண்டியில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று பெருங்காய்ம் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து விட்டுத் தாளித்ததை அதில் சேர்க்கவும். இதற்கு வெண்டைக்காய் வற்றல் இருந்தால் தாளிக்கும் எண்ணெயிலேயே வறுத்துச் சேர்க்கலாம். 

45 comments:

  1. "கத்திச்சண்டை" ஒரு நிமிஷம் பயந்துட்டேன் ரொம்ப நேரமா யோசித்த பிறகே தெளிவானேன்.

    வாயால "கத்தி" சண்டை போட்டதை.

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெகில்லர்ஜி, எப்போவுமே "கத்தி" தானே சண்டை போட வசதி! :)))))))

      Delete
  2. இந்த சீசனில்மாங்காயாகப் பறிக்கவில்லை பழுக்கும் நிலையில் ஒரு புண்ணியவான் தயவில்காய் / பழங்களை பறித்தோம் நாங்கள் இருப்பதோ இருவர் அக்கம் பக்கம் தெரிந்தவர் தெரியாதவர் என்று எல்லோருக்கும் மாங்கா வினியோகம் இப்படியே போனால் மாங்காயைப் பார்த்தாலே அலர்ஜியாகிறது இருந்தாலும் பழமாக தினமும் இரண்டுமூன்றாவது உள்ளே போகும் அது சரி வலையில் கணவருக்கு ரங்க்ஸ் என்றும் மனைவிக்கு தங்க்ஸ் என்றும் சொல்கிறார்களே சரியா ஏன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா, மாமரம் முதல் காய் கொடுக்கும்போது இருக்கும் சந்தோஷம் அது நன்கு காய்க்க ஆரம்பித்ததும் இருப்பதில்லை! எப்படிப் பறிப்பது, எப்படிச் செலவு செய்வது என மண்டை காய்ந்து போகும்.

      வலை உலகுக்கு வந்த புதுசில் எனக்கு அம்பி என்னும் நண்பர் ஒருவர் (என் பிள்ளை வயசு) இருந்தார். அவருடைய அண்ணன் டுபுக்கு என்பவர் மனைவியைத் தங்கமணி என்றும் தன்னை ரங்கமணி என்றும் அழைத்துக் கோண்டு சில, பல பதிவுகள் போட்டார். அதன் மூலம் இது பிபலம் ஆனாலும் ஏதோ ஒரு சினிமாவில் கவுண்டமணி, செந்தில் காமெடியில் இப்படி ரங்கமணி, தங்கமணி என்று வரும் என்றார்கள். நான் என் இஷ்டத்துக்கு அதை ரங்க்ஸ் என ஆக்கினேன். இப்போப் பலரும் ரங்க்ஸ் என்கின்றனர். அல்லது ரங்கு என்கின்றனர். :)))சும்மா எல்லாமே தமாஷுக்குத் தானே!

      Delete
    2. ரங்கமணி, தங்கமணி//

      அக்கா இது நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்த போதே எங்கவீட்டுல நான் கஸின்ஸ் எல்லாருமே இப்படித்தான் சொல்லிக் கலாய்ப்பது...எங்கள் கிராமத்தில் தங்கமணி என்ற பெண்ணும் இருந்தாள் அவளைக் கலாய்ப்பதாக டூ விடுவாள் அப்புறம் சொல்லிப் புரியவைத்து..என்று அதெல்லாம் க்ரீன் டேய்ஸ்...

      கீதா

      Delete
    3. வாங்க, தி/கீதா, எனக்கு இணையத்துக்கு வந்து தான் தெரியும். ரங்கமணி என்னும் பெயரில் கடையநல்லூரில் ஒரு பெண் மதுரைக்கு லீவுக்கு வருவாள். அவள் என் சிநேகிதி! :)))) வழக்கம் போல் இளைய சிநேகிதி! :))))

      Delete
  3. அந்த நாள் ஞாபகம் வந்ததே.
    அம்பி எங்கே இருக்கிறீர்கள்.
    நன்றாக நினைவு இருக்கிறது ரங்கமணி ,தங்கமணி ஆரம்பம்.

    மாங்காய் சாதத்தை விடப் பிடித்தது பச்சை மோர்குழம்பு. அம்மா,
    ராத்திரி வேளைக்கு இதை செய்வார். தம்பி தயிர் சாப்பிட மாட்டான். அவனுக்காகாக்
    காரம் இல்லாமல் இப்படிச் செய்துவிடுவது.

    உங்கள் சமையலறை மிக சுத்தமாக இருக்கிறது.
    என்றும் இப்படியே இருக்கணும்.நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, எனக்குப் பச்சை மோர்க்குழம்பு, சிவப்பு மோர்க்குழம்பு, மஞ்சள் மோர்க்குழம்பு எல்லாமும் பிடிக்கும். ஆனால் சமைத்தால் நான் மட்டும் தான் சாப்பிடணும்! பேருக்கு ஒரு கரண்டி விட்டுப்பார்! :)))))) குழந்தைங்க இரண்டு பேரும் அம்மாவாலே இப்போ சுத்தமாப் பராமரிக்க முடியறதில்லைனு சொல்லிட்டு இருக்காங்க! நீங்க சுத்தமா இருக்குங்கறீங்க! :))))))

      Delete
  4. இதோ வரேன் அக்கா திங்க....அங்க பூஸார் படங்களா போட்டுருக்காங்க அந்தக் கப்பல்ல ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரேன்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, வாங்க வாங்க! இன்னிக்குப் பூரா இருக்குமே! எப்போவேணாச் சாப்பிடலாம்.

      Delete
  5. இங்கே மாங்காய் கிடைக்குது ஆனா விலை.. எல்லாம் ஆப்ரிக்கன் வெரைட்டிஸ் ஒன்னு முழுசா இனிக்கும் இல்லைன்னா கசப்பு சேர்ந்த புளிப்பு .

    எங்கம்மா அடிக்கடி செய்வாங்க மாங்காய் சாதம் .அதுக்கு உருளை பொடிமாஸ் நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல், நம்ம நாட்டுக் காய்களில், பழங்களில் இருக்கும் சுவை வெளிநாட்டுக் காய், பழங்களில் இருப்பதாய் எனக்குத் தெரியலை. பிஸ்கட், சாக்லேட் கூட இந்தியச் சுவையே தனி! உருளை பொடிமாஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

      Delete
  6. மாங்காய் அழகா ஒட்டாம இப்படி துருவினா சாதத்துக்கு தாளிக்க சுலபம் .நானும் கொத்தமல்லி இல்லை சேர்ப்பதில்லை ஒன்லி கருவேப்பிலை

    ReplyDelete
    Replies
    1. துருவல் நீள நீளமா இருந்தா பார்க்க அழகா இருக்கும் இல்லையா! நான் வெங்காயம் கூட இப்படித் துருவுவேன். சில சமயங்களில் முட்டைக்கோஸ் இப்படித் துருவுவேன். சாலடுக்கு நன்றாக இருக்கும். பஜியா செய்தால் மேலே தூவ காரட்,வெங்காயம் இப்படித் துருவலாம். , ஜவ்வரிசிக் கிச்சடிக்கோ அல்லது அவல் (போஹா) உப்புமாவுக்கோ போட்டால் இப்படித் துருவிப் போட்டுடுவேன்.

      Delete
  7. அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். //

    ஹையோ அக்கா ரொம்பப் பிடிக்கும் எனக்கும்.....நீங்க சொல்லிருக்கறது எல்லாமே பிடிக்கும் மாங்கா டிஷஸ்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி.கீதா. மாங்காயில் எல்லாமும் எனக்கும் பிடிக்கும். ஆனாலும் எல்லாம் செய்ய முடியறதில்லை. எப்போவானும் எனக்கு மட்டும் பச்சடி பண்ணிப்பேன்.

      Delete
  8. கூட நாங்க "கத்தி" ச் சண்டை போட்டுப்போம். // ஹா ஹா ஹா ஹா ஹா

    மாங்காய கட் பண்ணிட்டே கையில் ஒரு கத்தி!! தொண்டையில் ஒரு "கத்தி!!! இது படு இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும் போலருக்கே...ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெஹெ, எத்தனை வருஷமா நடக்குது! அவ்வளவு சீக்கிரம் விடுவோமா என்ன? :)))))

      Delete
  9. இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா! எனக்கு மயக்கமே வந்துடுத்து! ஙே என நான் முழிக்க, மாங்காய் சாதம்! என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு! // ஹா ஹா ஹா ஹா....இப்பத்தான் அக்கா கம்ப்யூட்டர் சரியாகி மயக்கம் தெளிஞ்சு வந்துருக்காங்கனா மீண்டும் மயக்கமா...!!! மாங்காய்சாதம் என்றால் வேண்டாம் என்பவர் கேட்டிருக்கார்னா என்னமோ ஏதோ....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை. சாம்பாரோ, வத்தக்குழம்போ, மோர்க்குழம்போ வைச்சால் மிஞ்சிப் போகுது! அப்போ அதுக்கு ஏத்தபடி ராத்திரி பண்ணனும். அரைச்சு வைச்சிருந்தாலோ, அல்லது சப்பாத்திக்கான காய்கள் இருந்தாலோ அவை வீணாகும். ஆகவே குழம்பே வைக்கலைன்னா! ரசம் கொஞ்சம் போலத் தான் மிஞ்சும்! :)))))

      Delete
  10. "இங்கே பார்!" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே மாங்காய் சாதம் ரெசிபி ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடைசியில் இதைப் பார்த்தா! //அதானே கீதாக்காவுக்குத் தெரியாதா...

    மாங்கா சாதம் மாமாவுக்குப் பிடித்ததா சொலல்வே இல்லை...முன்னாடி நீங்க செய்யரதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முன்னாடி தேங்காய் சேர்த்து அரைத்து விட்டதில்லை. ப.மி. இஞ்சி, மி.வத்தல் தாளித்து விடுவேன். இப்போத் தான் அரைத்து விட்டுப் பண்ணினேன்.

      Delete
  11. நான் இதுவரை ஜீரகம் சேர்த்ததில்லை. கொத்தமல்லியும் சேர்க்க மாட்டேன் கா அது சேர்வதில்லை...

    பச்சை மோர்க்குழம்பு இப்படித்தான் ...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஜீரகம் சேர்க்கச் சொல்லி தினமலரில் போட்டிருந்தது. ஆகவே சேர்த்தேன். ஒண்ணும் வித்தியாசமாத் தெரியலை. காரம் தான் ரொம்பக் கம்மி!

      Delete
  12. மாங்காய் சாதத்துக்கு இஞ்சி போட்டால் நல்லா இருக்குமோ?

    மிக அருமையா மாங்காயை சீவியிருக்கீங்க. என் கண்ணே பட்டுடும்போலிருக்கு.

    மாங்காய் சாதத்துக்கு எனக்கு கொஞம் மாங்காய் கார புது ஊறுகாய் பிடிக்கும். இல்லைனா, வெறும்னயே சாப்பிடலாம்.

    அவியலில் மாங்காய் சேர்த்தால் கொஞ்சம் புளிப்பா இருக்கும். அட்டஹாசமா இருக்கும். ஒரு தடவை போட்டுப்பாருங்கள் (அவருக்குச் சொல்லாமல், வேணும்னா தோலைச் சீவிட்டு).

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. இஞ்சி போட்டால் நல்லாத் தான் இருந்தது. :)))) எனக்கும் இப்போத் தான் தெரியும் இஞ்சி போட்டுப் பண்ணலாம்னு. நான் காரட், மாங்காய், இஞ்சி மூணையும் பொடியா நறுக்கி ஊறுகாய் போடுவேன். இஞ்சி இளசா இருக்கணும் அதுக்கு. இப்படிச் சாதம் செய்கையில் போட்டதில்லை. துருவலைப் பாராட்டியதுக்கு நன்னி ஹை! ஹிஹிஹிஹி. காய்கள் நறுக்கினாலும் இப்படித் தான் ஒண்ணு போல இருக்கணும். இல்லைனா சமைக்கவே பிடிக்காது. புலம்புவேன்! :)))) அவியலில் மாங்காய் எல்லாம் சேர்த்தால் பிடிக்காது! வம்பா! சேர்க்கறதுக்கு! சாப்பிடும்போது தெரியுமே! என் அம்மா சேர்ப்பார். நான் அவியலுக்குப் பெரும்பாலும் தயிர் சேர்ப்பதில்லை. அப்படிச் சேர்த்தால் சாப்பிடும்போது அவியல் தேவையான அளவுக்கு எடுத்துக் கொண்டு அதுக்கு மட்டும் தயிர் சேர்ப்பேன். பெரும்பாலும் புளி சேர்த்த அவியல் தான். சொன்னால் தான் தெரியும் தயிர் சேர்க்கலைனு! :))))

      Delete
  13. புத்தகங்களைச் சரி செய்யும் வேலை எனக்கும் ரொம்......ப நாளா பெண்டிங்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இன்னும் ஆரம்பிக்கவே இல்லை! எப்போ ஆரம்பிப்பேன்னு தெரியலை! :)))

      Delete
  14. நான் கூட மாமா கட்சிதான்.. அடிக்கற வெயிலுக்கு சாம்பார் கூட்டு எல்லாம் வேணாம். மோர் சாதம் போதும்!

    ReplyDelete
    Replies
    1. ராத்திரிக்கும் மோர் சாதம் தான் கேட்கிறார். எனக்கு ஒத்துக்கறது இல்லை! ஒவ்வொருத்தருக்குத் தனித்தனியா ஒவ்வொண்ணு பண்ணணும்! அதான் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி!

      Delete
  15. மாங்காய் சாதம்... பாஸுக்கு உடம்பு சரியானதும் செய்யச் சொல்லவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. அட? பாஸுக்கு உடம்பு சரியில்லையா? சொல்லவே இல்லையே! இப்போ எப்படி இருக்காங்க? அப்போ வீட்டில் உங்க சமையலா? இஷ்டத்துக்கு ஜமாயுங்க! உங்களுக்கு விருப்பமான காய்களைப் பண்ணித் தீர்த்துடுங்க! :)))))

      Delete
  16. நன்றாக இருக்கிறது மாங்காய் சாதம்.
    சார் சாப்பிட்டாரா என்று சொல்லவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு! அன்னைக்கு அதானே! சாப்பிட்டுத் தானே ஆகணும்! :))))))

      Delete
  17. ஆஆஆஆவ்வ்வ் மாங்காய் ஜாதமோ?:).. மீயும் உங்கள் நிலைமைதான்.. எனக்கு மட்டும்தான் பிடிக்கும் என்பதால் ஒருநாளும் செய்ததில்லை.. இப்போ அம்மா வந்து நிற்பதால்.. அம்மாவைக் கட்சி சேர்ப்போம் என இன்று புளிச்சாதம், தயிர்ச்சாதம் செய்வமோ என்றால் உடனே அம்மா.. சே..சே.. அது எதுக்கு என்கிறா கர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரடி, உங்க அம்மாவுக்கு உங்க சமையலில் அம்புட்டு நம்பிக்கை! ஹெஹெஹெஹெஹெஹெ

      Delete
  18. ஒரு தடவை மாங்காய் சாதம் செய்திடோணும்.

    கீதா சொன்னா நீங்க நியூ போஸ்ட் போட்டிருக்கிறீங்க என.. நான் பழசையே ரீஈஈஈஈஈஈ ஃபிரெஸ்ஸ்ஸ்ஸ் பண்ணிக்கொண்டிருந்தேன் கர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. ஒழுங்காப் பார்த்தாத்தானே!

      Delete
  19. சூப்பரா இருக்கு ரெசிப்பி....

    அது சரி மாமா ஏன் உங்க மாங்கா சாதத்தை இதுவரை சாப்பிடலை...?!!!! இந்த ரெசிப்பியைச் சுட்டிக் காட்டினார்....பஞ்சாயத்தைக் கூட்டுங்கப்பா...அதிரா ஏஞ்சல் ஓடிவாங்க...கீதாக்கா கட்சிக்கு ...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. காகாகாகா தி/கீதா, அவருக்கு எப்போவுமே சாம்பார், வத்தக்குழம்புனு தான் பிடிக்கும். அப்படித் தான் சாப்பிடுவார். தோசைக்குத் தொட்டுக்கத் தக்காளிச் சட்னி பண்ணினால் முன்னெல்லாம் சாப்பிடவே மாட்டார். ஐய, புளிக்கும் என்பார். என் மாமியாரும் போட்டுக்காதே! அதெல்லாம் நல்லா இருக்காது, அவ என்னென்னமோ சமைக்கறா! என்பார்! ஹிஹிஹிஹி, பின்னால் எல்லோருக்கும் பிடிச்சுப் போய்த் தக்காளிச் சட்னி பண்ணினால் தான் தோசைனு ஆனது! அது ஒரு கனாக்காலம்! தக்காளி சாதம், வெஜிடபுள் சாதம், புலவ், வெஜிடபிள் பிரியாணி எல்லாம் பண்ணினால் குழந்தைகளும் நானும் தான் சாப்பிடுவோம். என் முதல் மைத்துனன் கொஞ்சம் கொஞ்சம் அவ்வப்போது சாப்பிடுவார். அலுவலகத்துக்கு லஞ்சில் எடுத்துப் போவார். ஆனால் மாமியாருக்குத் தெரிந்தால் அம்புடுதேன்! :))))) அப்புறமா வெங்காயம், பூண்டு இல்லாமல் வெஜ் சாதம் மாமியாருக்குத் தனியாப் பண்ணிக் கொடுக்க ஆரம்பிச்சாச்சு. கிச்சடி (வட இந்திய முறை) செய்தால் அதிலும் காய்கள் போடச் சொல்லுவார். தொட்டுக்கத் தயிர்ப்பச்சடி ஏதானும். காரட், தக்காளி துருவிப் போட்டுப் பண்ணுவேன்.

      Delete
  20. பொடொடு// அக்கா உங்க கலப்பை சரியா உழலை!!!! போட்டு என்பது பொடொடு னு முதலில் என்ன இது வேறு சாமானும் சேர்க்கணுமா என்ன சாமான் அது என்று கன்ஃப்யூஷன் அப்புறம் புரிந்தது....ஹா ஹா ஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிறேன். கலப்பை இன்னும் சரியாகலையே! சுரதாவும் உதவுகிறது.

      Delete
  21. ஆகா... அருமை!...
    இதெப்படி இத்தனை நாளாகக் கண்ணிற்படாமல் போனது...

    பரவாயில்லை... நாலு நாள் கழிச்சு வந்தாலும் ருசியா நல்லாத் தான் இருக்கு....
    பசி நேரத்தில சோறு போட்ட அன்னலச்சுமி நல்லா இருக்கட்டும்!...

    ReplyDelete