அப்போல்லாம் நாம் வேண்டுகிற தளத்தின் விலாசத்தைத் தான் முழுவதுமாகத் தட்டச்சணும். நான் என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன். அப்போ என்னோட ஆசிரியர் வந்து ப்ரவுஸ் பண்ணப் போறீங்களானு கேட்க, நானும் என்னனு யோசிக்காம, ஆமாம்னு சொல்லிட்டேன். என்ன சைட்னு கேட்டார். சைட்டா? நான் யாரையும் சைட் அடிக்கலையேனு வாயிலே வந்ததை முழுங்கிட்டேன். எனக்குக் கூச்ச சுபாவம் இல்லை; நேரடியாச் சொல்லி இருக்கலாமோ! அதுக்கும் திரு திரு. அப்புறமா அவரே சரினு ஏதோ ஒரு தளத்தைத் திறந்து கொடுத்தார். அதிலே சில முக்கியமான தளங்களின் வெப் அட்ரஸ் இருந்தது. அதிலே இருந்து ஒரு தினசரியின் தளத்தைக் க்ளிக்கிப் பார்க்க முயல, மெளஸ் அந்தக் குறிப்பிட்ட சுட்டியில் நிக்காமல் ஓடிட்டே இருந்தது. பொறி வைச்சுத் தான் பிடிக்கணும் போலிருக்கேனு அலுத்துப் போயிட்டேன். மீண்டும் ஆசிரியர் வருகை. வெண்ணை திருடின கண்ணனாட்டமா நான் முழிக்க, அவருக்குச் சிரிப்பு. நேத்திக்கு நடந்ததை அந்த ஆசிரியர் சொல்லி இருப்பாரோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சே, நேத்திக்கு எவ்வளவு ஜாலியா இருந்தது! நல்லா விளையாட முடிஞ்சதே, இன்னிக்கு என்னன்னா, பாடம் ஆரம்பிச்சு நடத்தறாரே! எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லைனாலும் அந்த ஆசிரியர் கிட்டே இதைச் சொல்ல முடியலை. :P
என்ன ஆச்சு மேடம்னு கேட்க, மெளஸ் ஓடிப் போயிடறதுனு புகார் கொடுத்தேன். நீங்க பிடிச்சுக்கறதிலே இருக்குனு சொன்னார். மெளஸ்னு நினைச்சாலே பிடிக்கவா தோணும்! இதோட பெயரை வேறே ஏதானும் வைச்சிருக்கக் கூடாதோ! யாருங்க அது இதுக்கு மெளஸ்னு பெயர் வைச்சது! னு மனசுக்குள்ளே நொந்து நூலாகிப் போயிட்டேன். அதுக்குள்ளே மெயில் கொடுக்கணுமேனு யோசனை வர, என் பையருக்கும், பொண்ணுக்கும் மெயில் கொடுக்கணும்னு சொன்னேன். அவங்க மெயில் ஐடி தெரியுமானு கேட்டார். எழுதிக் கொண்டு போயிருந்தேன். அதைச் சொல்லவும். என் கிட்டே இருந்து மெளஸை வாங்கி எதையோ க்ளிக்கினார். ஒரு தளம் வந்தது. அதிலே என்னோட பெயர், வயசு எல்லாம் கொடுத்து ஓகே கொடுக்கச் சொல்ல சரினு அவர் சொன்னதெல்லாம் பண்ணி வைச்சேன். பாஸ்வேர்ட்னு ஒண்ணு கொடுக்கணுமே. அப்போல்லாம் யாஹூ தான். யாஹூ.காமில் ஒரு அக்கவுன்ட் க்ரியேட் பண்ணினேன். பாஸ்வேர்ட் கொடுக்கையில் என்ன கொடுக்கிறதுனு புரியலை. ஏதோ ஒரு பூவின் பெயரைக் கொடுத்தேன்னு நினைக்கிறேன். எல்லாம் முடிச்சாச்சு. மெயில் கொடுக்க என்ன செய்யறதுனு புரியாம எதையோ க்ளிக்கினால் தளம் மறைஞ்சே போயிச்சு. ஆஹா, காக்கா தூக்கிண்டு போச்சோனு, உஷ், உஷ்னு கத்தலாம்னு நினைச்சேன். அதுக்குள்ளே கணினியே முழுசா ஆஃப் ஆக என்னமோ தப்பாயிடுச்சுனு புரிஞ்சது.
அதுக்குள்ளே என்னோட மூஞ்சியைப் பார்த்துட்டே அந்த ஆ"சிரி"யர் வந்து சேர்ந்தார். என்னனு கேட்க, வாயே திறக்காமல் கணினியைச் சுட்டிக் காட்டினேன். ஹிஹிஹி, ஷட் டவுன் பண்ணி இருக்கீங்க, எப்படிச் செய்தீங்கனு கேட்டார். நான் எங்கே ஷட் டவுன் பண்ணினேன். மெயில்கொடுக்கணும்னு தான் நினைச்சேன். அது ஒரேயடியா காணாமப் போச்சுனு சொன்னேன். மறுபடியும் ஸ்விட்சைப் போட்டு கணினியைத் திறக்கச் சொன்னார். திறந்து ஸ்டார்ட் பட்டனைக் க்ளிக்கச் சொல்ல ஸ்டார்ட் க்ளிக் பண்ணினேன். டபுள் க்ளிக் என்று சொன்னதாக நினைவு. ஆகவே இன்னொரு தரம் எதிலோ க்ளிக்க, பெயின்ட், ப்ரஷ்னு வந்துடுச்சு. அங்கே பார்த்தால் ஒரு ப்ரஷ் ஒண்ணு ஓரமா இருக்க அதைக்க்ளிக்கினால் சென்டருக்கு வந்தது. மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன். இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது. இப்படி எல்லாம் விளையாடலாம்னு யாருமே சொல்லலையே, துரோகிங்கனு பொண்ணையும், பையரையும் திட்டிக் கொண்டேன், மனசுக்குள்ளே தான். பார்த்தார் ஆசிரியர். என்னதான் இவங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லைனாலும் இதெல்லாம் டூ மச் இல்லை, ஃபோர் மச்ச்னு தோணிப்போய், என்ன மேடம் மெயில் ஐடி க்ரியேட் பண்ணணும்னு சொல்லிட்டு வரையறீங்களேனு கேட்க, அசடு வழிய நான் ஸ்டார்ட் பட்டனிலே டபுள் க்ளிக் பண்ணினதிலே இது வந்ததுனு சொல்ல, அதெல்லாம் இல்லை, ப்ரொகிராமிலே பெயின்ட், ப்ரஷிலே க்ளிக்கி இருக்கீங்கனு நாலு பேர் முன்னாடி சொல்லி என் மானத்தை(இருக்கா என்ன?) ஒட்ட வாங்கினார். ப்ரொகிராமா அது எங்கே இருக்கு?? ம்ம்ம்ம்?? தனியாக் கேட்டு வைச்சுக்கணும், இல்லைனா இன்னொரு நாள் வந்து கணினியைத் துருவிப்பார்க்கணும்னு நினைச்சுக் கொண்டேன். பின்னர் அங்கே வந்து யாஹூவைத் திறந்து கொடுத்தார்.
மெயில் கொடுக்க இன்பாக்ஸ் திறந்துடுச்சு. ஆ னு வாயைப் பிளந்தேன். கொடுங்க மேடம்னு சொன்னார். இதிலே ஒருத்தருக்குத் தானே கொடுக்க முடியும்னு சொல்ல, நீங்க மேட்டரை டைப் பண்ணுங்க. இல்லைனா சொல்லுங்க, நான் டைப்பறேன்னு சொல்லவே, அட, இந்த ஆங்கிலம் கூடவா தெரியாதுனு நினைச்சுட்டார்னு கோபம் வர, கிடு கிடு கிடு கிடுனு டைப்பினேன். அவசரத்தில்" கிடுகிடு" "கிடு கிடு" "கிடு கிடு" அப்படின்னே அடிச்சுருக்கப்போறேனேனு பார்த்துக் கொண்டேன். நல்ல வேளையா இல்லை.நான் டைப்பின வேகத்தைப் பார்த்து அசந்துட்டார். என்ன இவ்வளவு வேகமா டைப்பறீங்க! ஒண்ணும் அவசரம் இல்லை. இன்னும் பத்து நிமிஷம் இருக்கு உங்க நேரம் முடிய. அப்புறமாக் கூட ஒரு ஐந்து நிமிஷம் ஆனாப் பரவாயில்லைனு ரொம்பப் பெருந்தன்மையாச் சொல்ல, அலட்சியமா அவரைப் பார்த்த நான். என்னோட டைப்பிங் குறைந்த பட்ச வேகம் இதுனு சொல்லி அவரைத் திரும்ப அசர அடிச்சேன். அப்புறமா அந்த ஐடியை மேலே டைப் பண்ணச் சொன்னார். சென்ட் கொடுக்கச் சொன்னார். நாளைக்கு பதில் என்னோட இந்த ஐடியிலே இருக்கும், வந்து பார்த்துக்குங்கனு சொன்னார். நான் எனக்கு? எனக்கு? னு சுண்டல் கேட்கிறாப்போல் கேட்க, அவரும் இங்கே பக்கத்துப் பிள்ளையார் கோயில்லே தான் தராங்கனு சொல்லிட்டார். பதிலுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரின நான், அவர் கிட்டே நானே சொந்தமா என்னோட மெயில் ஐடி ஒண்ணு க்ரியேட் பண்ணணும்னு சொல்ல, அதான் மேடம் இதுனு செந்தில்--கவுண்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரிச் சொல்லிட்டார்.
அப்புறமா அங்கிருந்து பொண்ணுக்குத் தனியா, பிள்ளைக்குத் தனியானு மறுபடி என் முயற்சியாலேயே இன்னொரு மெயில் கொடுத்தேன். அப்பா! இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினாக் கூட இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சந்தோஷமா இருந்தது. போயிருக்குமானு சந்தேகம் வேறே. அன்னிக்கு வீட்டிலே போய் ரங்க்ஸ் கிட்டே இதான் பெருமையாச் சொல்லிட்டு இருந்தேன். பையர் அன்னிக்கு ராத்திரியே ஃபோன் பண்ணி அம்மா மெயில் வந்ததுனு சொல்லிட்டு, என்னோட ஆர்வத்தைப் பொசுக்கிட்டார். "ஏண்டா, சொன்னே! ஒரு மெயில் கொடுக்கக் கூடாதோ! நான் வந்து அப்பா கிட்டே சொல்லுவேனே!" னு சொன்னா. "ஹை டெக் அம்மா" னு கிண்டல் வேறே! இப்போவும் என்னை ஹை டெக் அம்மானு தான் சொல்லுவார். :P:P:P:P
மறுநாளைக்குப் பொண்ணு சமத்தா மெயிலில் பதில் கொடுத்திருந்தாள். ரொம்பவே சந்தோஷமா இருந்தது. அதுக்கப்புறமா ஆரம்பிச்சார் எங்க பையர். அம்மா கணினி எக்ஸ்பெர்ட் ஆயிட்டானு, அவர் அமெரிக்கா போகிறதுக்குண்டான வேலையை எல்லாம் இங்கே என்னைச் செய்ய வைச்சு, அதைக் கணினி மூலமா அப்டேட் செய்யச் சொல்லி இன்னும் பழக்கினார். ஓரளவுக்குக் கணினியைத் திறக்கவும், மூடவும், மெயில் ஐடியைத் திறக்கவும் வந்தது. அப்புறமா முதல்முறை அமெரிக்கா போனப்போ பொண்ணு வீட்டு கணினியிலே தான் முதல்முறையாத் தமிழ் படிச்சேன். அந்தக் கதை தனி. அதை வேறே யாரானும் கேட்டா வைச்சுக்கலாம். மொத்தத்தில் நான் கணினி கற்றுக் கொண்டதுனு பார்த்தா மெயில் கொடுக்க மட்டுமே தெரிந்து கொண்டிருந்தேன். மிச்சம் எல்லாம் அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே தெரிந்து கொண்டேன்.
தொழில் நுட்பப் பிரச்னைகள் என வரும்போது நண்பர்கள் உதவி செய்யறாங்க, செய்தாங்க, இன்னும் செய்வாங்க.
நான் அழைக்கும் ஐந்து பேர்
வல்லி சிம்ஹன்
ரஞ்சனி நாராயணன்
வை.கோபாலகிருஷ்ணன்
ஜி.எம்.பி. சார்
ஜீவி அவர்கள்
ரொம்ப யோசிச்சு இவங்களை எல்லாம் யாரும் கூப்பிடலை என்பதை உறுதி செய்து கொண்டு கூப்பிட்டிருக்கேன். பதிவு ரொம்பவே பெரிசா ஆயிடுமோனு இதைக் கொஞ்சம் அவசரமாவே முடிச்சிருக்கேன். மன்னிக்கவும். :))))
இது மீள் பதிவு என்பதால் போனமுறை ஐந்து பேரை அழைக்கணும் என அழைத்திருந்தேன். இதைப் பார்த்து எல்லோரும் பயந்து ஓடிட வேண்டாம். இப்போ நான் யாரையும் அழைக்கலை!சே,பதிவுக்குக் கருத்துச் சொல்லனு நினைச்சுட்டு எங்கே ஓடறீங்க? வந்து கருத்துச் சொல்லிட்டுப் போங்க! நான் சொன்னது யாரும் இதைத் தொடர் பதிவாக நினைத்துக்கொண்டு எழுத வேண்டாம் என்பதே! உங்களுக்கே விருப்பம் இருந்தால் எழுதுங்க! தடுக்க மாட்டேன்! :)))))