அம்பேரிக்காவில் எடுத்த சில படங்களைப் பகிரலாம்னு நினைச்சால் அவற்றை எல்லாம் ஏற்கெனவே போட்டிருக்கேன். ஆகவே வேறே படங்கள் தேடித்தான் போடணும். நண்பர் ஒருத்தர் அவருடைய புத்தகம் ஒன்றை பிடிஎஃப் ஆக அனுப்பி இருக்கார். அதைப் படிச்சு முடிக்கணும். பாதி படிச்சேன். அப்புறமா படிக்க நேரமே சரியா வரலை. ஏற்கெனவே சித்தப்பாவின் "ஒற்றன்" புத்தகம் மறுபடி படிச்சு முடிச்சேன். சித்தப்பா 73 ஆம் வருடம் ஐயோவா/(மினியாபொலிஸ் அருகே) போனப்போ நடந்த நிகழ்வுகளை வைத்து எழுதியது. மறுபடி படிக்கக் கமலா சடகோபனின், "கதவு" "பொன்னியின் செல்வன்" (லக்ஷம் தரம் இருக்கும்) எடுத்து வைச்சிருக்கேன். அதுக்கு நடுவில் ஸ்ரீரங்கம் பற்றித் தொகுக்க மீண்டும் "திருவரங்கன் உலா" வை அவ்வப்போது எடுத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு நடுவில் "பலே பாண்டியா!" படத்தை வேறே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அந்தப் பாடல் காட்சி ஒன்றுக்குத் தான். "அத்திக்காய், காய்!" பாடலுக்காக. இன்னும் அந்தப் பாடல் வரவில்லை. ஜிவாஜி, தேவிகா எல்லாம் குண்டு குண்டாக ஆடிப்பாடும்போது இதை அந்தக் காலத்தில் எப்படி ரசித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
இதுக்கு நடுவில் வீட்டு வேலைகள், சமையல், சாப்பாடு போன்றவை. இந்த ஊரடங்கு நீடிக்கப் போவதாய்ச் சொல்கின்றனர். தமிழ்நாட்டுக்குப் பேருந்துகள் சேவையோ, ரயில் சேவையோ வேண்டாம் என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் வண்டிகள் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் தொழிலாளர்கள் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் நடந்து செல்பவர்கள் நடந்து சென்று கொண்டே இருக்கின்றனர். இதை எந்த அரசும் செய்யச் சொல்லவில்லை என்றாலும் காத்திருந்து ரயிலிலோ அல்லது பேருந்துகளிலோ பயணித்துப் போவதற்கு நடந்து செல்லலாம் என முடிவு செய்திருப்பார்கள் போல. இத்தனைக்கும் ஆங்காங்கே காவல்துறையினர் கன்டெயினர் லாரியில் பயணிப்பவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிப் பேருந்திலோ, ரயிலிலோ போகச் சொல்கின்றனர். ஆனாலும் அவர்கள் போவதில்லை.
வழிப்பயணம் செல்பவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியைத் தெரிந்து வைத்துக் கொண்டு உணவுப் பொட்டலங்கள் எடுத்துக் கொண்டு சென்றாலும் அவர்கள் அந்த வழியிலேயே சென்று கொண்டிருப்பார்களா நிச்சயம் இல்லை. வடக்கே செல்லும் எல்லாச் சாலைகளிலும் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டு உணவுப் பொட்டலங்களோடு தொண்டர்கள் தான் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ என்னமோ புரியலை. ஆனால் எல்லாவற்றுக்கும் அரசு தான் காரணம் என்று எளிதாகச் சொல்லி விடுகிறார்கள். இந்த அழகில் சில மாநில அரசுகள் திரும்பி வருபவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வேறே சொல்கின்றன. இப்படி ஒரு நிலைமை வந்ததால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி நமக்குத் தெரிய வந்திருக்கிறது. இல்லைனா தெரியவே போவதில்லை. அவ்வளவு ஏன்? அந்த அந்த மாநில அரசுகளிடமே இதற்கான சரியான கணக்கு இல்லை.
இப்போப் புதிய பிரச்னை வெட்டுக்கிளி. அதுக்கும் மத்திய அரசையும் பிரதமரையும் காரணம் சொல்கின்றனர். 20 லக்ஷம் கோடிப் பணம் எனத் தவறாகச் சொல்லிவிட்டார். 20 லக்ஷம் கோடி வெட்டுக்கிளிகளைத் தான் பிரதமர் கொடுத்திருக்கிறார் எனக் கேலி செய்துக் கருத்துப்படங்கள் மூலமும் பதிவுகள் மூலமும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நாட்டை இப்போது பிடித்திருக்கும் கொரோனா பிரச்னையிலிருந்தும் இன்னமும் நாடு முழுவதுமாக விடுதலை அடையவில்லை. அதனால் ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரப் பிரச்னை. அண்டை நாடுகளின் தொல்லைகளினால் எல்லைப் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகளை இப்போது நாடு எதிர் கொண்டிருக்கிறது. இந்த அழகில் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொற்று நோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழக அரசும் பொது விநியோகப் பொருட்களோடு பணமும் 3 மாசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வரப்போகும் ஜூன் மாசமும் கொடுக்கப் போகிறது. மத்திய அரசும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் அட்டை இல்லாமலேயே அரிசியோ கோதுமையோ பருப்போடு வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது. அதைத் தவிரவும் அடித்தட்டு மக்களுக்கு ஜன் தன் திட்டத்தின் மூலம் அவரவர் சொந்த வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது,. விவசாயிகளுக்கும் இரண்டு தவணைகளாகப் பணம் கொடுத்துள்ளது. குன்னியூரில் விவசாயம் செய்யும் என் பெரியம்மா பையர் (தம்பி) இரு தவணைப் பணமும் தனக்கு வந்து சேர்ந்ததையும் மற்றவர்களுக்கு வந்திருப்பதையும் உறுதி செய்கிறார்.
எல்லோரும் மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், கீழ்த்தட்டு மக்கள் அனைவருக்கும் 7,500 ரூபாய் ( 7500 ரூ? அது என்ன கணக்கு?) கொடுக்கணும்னு சொல்கிறார்கள். நோட்டை அடிச்சால் போச்சுனு நினைக்கறாங்க போல. அதோட இந்தப் பணம் எத்தனை நாட்களுக்கு? அவங்களுக்கு நிரந்தரமாக ஓர் வருமானத்துக்கு அல்லவோ ஏற்பாடு செய்யணும்? எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்படி நடந்து செல்லும் தொழிலாளர்களோடு தெரு நடைமேடைகளில் அவங்களும் உட்கார்ந்து படம் பிடித்துப் பத்திரிகைகள், முகநூல், டிவிட்டர் எனப் பகிர்கிறார்கள். மத்திய அரசின் இயலாமையை எடுத்துச் சொல்கிறார்களாம்! ஏன் இவங்களுக்குப் பொறுப்பு இல்லையா? கட்சி நிதியிலிருந்தும் அனைவரின் சொந்த சொத்துக்களில் இருந்தும் நிதி அளிக்கக் கூடாதா? பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாதா? இன்னொரு தலைவி ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்யறேன்னு சொல்லிட்டுக் கடைசியில்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வேண்டாம்!
இத்தனை பேர் போகும்போது யார், யாருக்கு எங்கே, எந்த மாநிலத்தில் எந்த ஊருக்குப் போகணும்னு யாரால் கண்டுபிடிக்க முயலும்? ஏதோ ஒரு பத்து இருபது பேரிடம் கேட்கலாம். சாரிசாரியாக வரும் நபர்களிடம் எப்படி விசாரிப்பது? அனைவரும் ஒரே ஊருக்கா போகிறார்கள்? அனைவரும் ஒரே மாநிலத்தில் இருந்தா வந்திருக்கிறார்கள்? அவர்களிடம் ஆதார் அட்டையோ ரேஷன் அட்டையோ இருந்தாலும் கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் இருந்தால் தான் அவங்க காத்திருந்து பொறுமையா அரசு ஏற்பாடு செய்யும் ரயில்களில் முன்பதிவு பண்ணிக் கொண்டு போகலாமே! அதெல்லாம் இல்லாததால் தானே நடந்தே போகிறார்கள். உள்ளூர பயம்! எங்கே நம்மைப் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்களோ என! ஆகவே நடந்தே செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். இவர்களில் ஒரு சில வெளிநாட்டவர்களும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். ரயில்களில் போகிறவர்களும் போய்க்கொண்டே தான் இருக்கிறார்கள். நடந்து செல்பவர்களும் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து உபி, பிஹாருக்குச் செல்லும் மக்கள் அதிகம். அங்குள்ள அரசாங்கங்கள் மத்திய அரசு தான் இதற்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றன. யாரிடமும் ஒரு தெளிவான கணக்கு இல்லை என இப்போது அரசைக் குறை கூறுபவர்கள் அரசு கணக்கெடுக்கும்போது முறையான விபரங்களைக் கொடுக்கக் கூடாது என்று மக்களிடம் வலியுறுத்திச் சொன்னவர்கள் தான்!
மத்திய அரசு எதற்குத் தான் பொறுப்பேற்கும்? இந்த மாநிலங்களின் வேறு எந்த விஷயத்திலும் மத்திய அரசு தலையிட்டால் இது மாநிலச் சுதந்திரம், மத்திய அரசு தலையீடு என்பார்கள். சட்டம், ஒழுங்கு மாநில அரசின்பொறுப்பு என்பார்கள். ஆனால் இப்போதோ? எல்லாம் மத்திய அரசு தான் பொறுப்பு என்று சொல்லிக் கை கழுவி விடுகின்றனர். ரயில்களும் கன்னா, பின்னாவென ஓடுகின்றன. பிஹாருக்குச் செல்ல வேண்டிய ரயில் ஒடிசா போய் அங்கிருந்து பிஹாருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இம்மாதிரிப் பல ரயில்களும் திசைமாறிப் பயணிக்கின்றன. விபத்து இல்லாமல் போகிறதே ஒரு பெரிய விஷயம். ஆங்காங்கே கிடைக்கும் சிக்னல்களினால் இந்தப் பிரச்னை. ரயில்களில் சரியான சிக்னல்கள் கிடைக்கும்படி சிக்னல் தொழிலாளர்கள் இன்னமும் வேலைக்கு வரவில்லை போலும். இப்படி எல்லா விஷயங்களிலும் பிரச்னை நுணுக்கமாக ஊடுருவி இருக்கும்போது ஒரே இரவில் அனைத்தையும் சரி பண்ண, "ஜீ பூம்பா!" தான் வரணும்.
ஜீ! பூம்பா!