குட்டி அம்மாவின் பாப்பாக்களில் சில. இவை மேல் அன்னிக்குக் குட்டி அம்மாவுக்கு ஏதோ கோபம் என்பதால் இவற்றை வெளியே கொண்டு வந்து வைத்து விட்டார்கள். :) மற்றவை குட்டி அம்மாவுடன் மெத்தையில் சுகமாகப் படுத்துக் கொண்டன. சுமாராகப் பத்துப் பாப்பாக்கள் இந்தியா வந்திருக்கின்றன. இவற்றில் அம்மா வெளியே செல்லும்போது அன்னிக்கு யார் கூட வரணும்னு தேர்வு செய்து தூக்கிப்பார். :))))))
எச்சரிக்கை
Have a great day.
Monday, December 27, 2021
குட்டிக் குஞ்சுலுவின் பாப்பாக்கள்.
குட்டி அம்மாவின் பாப்பாக்களில் சில. இவை மேல் அன்னிக்குக் குட்டி அம்மாவுக்கு ஏதோ கோபம் என்பதால் இவற்றை வெளியே கொண்டு வந்து வைத்து விட்டார்கள். :) மற்றவை குட்டி அம்மாவுடன் மெத்தையில் சுகமாகப் படுத்துக் கொண்டன. சுமாராகப் பத்துப் பாப்பாக்கள் இந்தியா வந்திருக்கின்றன. இவற்றில் அம்மா வெளியே செல்லும்போது அன்னிக்கு யார் கூட வரணும்னு தேர்வு செய்து தூக்கிப்பார். :))))))
Saturday, December 25, 2021
தியாகராஜனும், ரங்கராஜனும்!
திருவாரூர் தியாகராஜர். ரொம்ப ஆவலோடு உச்சிகால பூஜை பார்க்கச் சென்றிருந்தோம். ஆனால் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. :(
Friday, December 17, 2021
மர்மம் என்ன சொல்லுங்க!
மேற்கண்ட சுட்டியில் உள்ள எ.பியின் இந்தப்பதிவில் நான் கீழ்க்கண்ட கருத்துக்களைக் கொடுத்தால் இரண்டோ, மூன்றோ தான் போயிருக்கு! மற்றவை தெரியவில்லை. :)))))) என்ன காரணமாய் இருக்கும்? நேற்று ரேவதியின் ஊஞ்சல் பதிவிலும் கருத்து இருமுறை கொடுத்தும் போகவே இல்லை. :))))
Geetha Sambasivam "வெள்ளி வீடியோ : பொன்னைக் கொடுத்தேனும் பூவைக் கொடுத்தேனும் போற்றும் உறவல்லவோ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
இந்தப் பனை மரம் பாடல் திரைப்படத்திலேயே சரோஜா தேவி வகுப்புப் பிள்ளைகளுக்குப் பாடம் எடுக்கையில் பாடுவதாக வந்து நான் படமே பார்த்திருக்கேனே! கடைசியில் இருமி, இருமிச் செத்துப் போவார்.
கருத்தை இடுகையிடுங்கள்.
கருத்துக் கொடுத்தால் காணாமல் போகிறதே, நேற்று ரேவதி பதிவில். இன்னிக்கு இங்கே! :(
கருத்தை இடுகையிடுங்கள்.
Wednesday, December 15, 2021
மார்கழித் திங்கள் நினைவுகள்! மீள் பதிவு!
மீள் பதிவு!
மதுரை நகரின் இப்போதைய மார்கழி மாதத்தை 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் அங்கே சென்றபோது பார்க்க நேர்ந்தது ஒரு மறக்கமுடியாத நிகழ்வாகிவிட்டது. ஆனால் நாங்க அங்கே இருந்தபோது மார்கழி மாதம் என்றாலே, மெல்லிய பனி படரும் அந்தக் காலை நேரத்தில், மீனாட்சி கோயிலில் இருந்து கேட்கும் சங்கீத ஒலியும், கோடி அர்ச்சனை நாமாவளிகளும், (இவை முழுக்க, முழுக்கத் தமிழிலேயே சொல்லப் படும், எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து தமிழிலேயே இருந்தது.) அப்பா, பெரியப்பா போன்றவர்கள் இந்தக் கோடி அர்ச்சனைக் கமிட்டியில் உறுப்பினர்களாக இருந்தனர். தினமும் காலையில் வீட்டிலே மார்கழி மாத வழிபாட்டை முடித்துவிட்டுக் கோயில்களுக்குப் போய்விடுவார்கள் பெரியவர்கள் அனைவரும். அனைத்து வீடுகளிலும் பெரிய, பெரிய கோலங்கள் போடப் பட்டு, பூசணிப் பூவோ, பறங்கிப் பூவோ வைக்கப் பட்டிருக்கும். எப்போ எழுந்துப்பாங்க, எப்போ கோலம் போடுவாங்கனு எனக்குத் தோணும். ஆனால் எங்களைப் போன்ற சிறுவ, சிறுமிகளும் குறைந்தது 4 மணிக்குள்ளே எழுந்துடுவோம். எங்க வீட்டிலே அப்பா யாரையும் எழுப்பக் கூடாது என 144 உத்தரவே போட்டிருப்பார். அவங்க, அவங்க அவங்களா எழுந்திருக்கணும். ஆனால் 4 மணிக்கு எழுந்துக்கணும். படிக்கும்போது பரிட்சை என்றால் கூட எழுப்பிவிடுவது என்பதெல்லாம் கிடையாது.
உனக்குப் பரிட்சை என்றால் நீ தான் எழுந்து தயார் செய்துக்கணும் என்று சொல்லிவிடுவார் அப்பா. தூங்கிவிடுவோமோ என்ற பயத்திலேயே பாதித் தூக்கத்திலேயே முழிச்சுப் பார்த்து மணி என்ன, மணி என்னனு கேட்டுட்டுப் பின்னர் நாலு மணிக்கெல்லாம் எழுந்துக்கப் பழக்கம் தானாகவே வந்தது. ராத்திரி படுக்கும்போது எத்தனை மணிக்கு விழிச்சுக்கணும் என்று நினைச்சுட்டுப் படுக்கிறேனோ அப்போ எழுந்துக்கற வழக்கம் வந்துவிட்டது. மார்கழி மாசம் பத்திச் சொல்ல வந்துட்டு சுயபுராணமாப் போயிட்டிருக்கு இல்லை?? ம்ம்ம்ம்?? பாட்டுக் கத்துக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனால் அப்பாவோ பாட்டுனா காத தூரம் ஓடுவார். அம்மாவுக்குப் பாட்டு வகுப்பிலே என்னைச் சேர்க்க ஆசை என்றாலும், அப்பாவை மீறி ஒண்ணும் செய்ய முடியாது. ஆகவே தானப்ப முதலித் தெருவில் கண்ணாஸ்பத்திரி என்று அழைக்கப் படும் சத்திரத்தில் ஒவ்வொரு மார்கழி மாசமும் ராஜம்மாள் சுந்தரராஜன் என்ற பெண்மணி திருப்பாவை, திருவெம்பாவை வகுப்புகள் எடுப்பார். மதியம் 12 மணியில் இருந்து ஆரம்பிக்கும் வகுப்புகள். மதியத்தில் அநேகமாய் குடும்பப் பெண்களே இடம்பெறுவார்கள். 3 மணிக்கு அப்புறமாய் இருக்கும் வகுப்புகளில் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் இடம்பெறுவார்கள். வகுப்புகள் இரவு 7 மணி வரையிலும் இருக்கும். பெரியப்பா தயவிலே அதிலே போய்ச் சேர்ந்தேன். இலவசம் தான். புத்தகங்கள் அவர்களே கொடுப்பார்கள். புத்தகங்களை அவர்களுக்கு அனுப்புவது சிருங்கேரி மடம் அல்லது காஞ்சி மடம். இருவருமேயும் அனுப்புவதும் உண்டு.
பலதரப்பட்ட மாணவிகளும் அதில் சேர்ந்தார்கள். மாணவிகள் மட்டுமே அனுமதி. மாணவர்களுக்கு எதிரேயே இளைஞர் சங்கம் இருந்தது. அதிலே சொல்லிக் கொடுப்பதாய்க் கேள்விப் பட்டிருக்கேன். ஆனால் என்னோட அண்ணாவோ, தம்பியோ அதிலே சேரவில்லை. அங்கே கத்துக் கொண்டு வந்து வீட்டில் நான் கத்துவதில் இருந்து தாங்க முடியாமல் அவங்க இரண்டு பேருமே நல்லாவே பாட ஆரம்பிச்சாங்க. எல்லாம் நேரம், வேறே என்ன சொல்றது?? மார்கழி மாசத்திலே ஒருநாள் ஞாயிறு அன்றோ அல்லது, ஏதாவது விடுமுறை தினமாகவோ பார்த்து பஜனை வைப்பாங்க. தினம் தினம் காலையில் ஏற்கெனவே ஒரு பஜனை கோஷ்டி வரும். அவங்க எல்லாம் பெரியவங்க. பெரியவங்க என்றால் நிஜமாவே வயசு, அனுபவம், வேலை எல்லாவற்றிலும் பெரியவங்க. சிலர் பெரிய வக்கீலாக இருப்பாங்க. சிலர் ஆடிட்டர்கள், சிலர் இன்னும் வேறு நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று இருப்பார்கள். பெரியப்பாவும் வக்கீலாகத் தான் இருந்தார். அவருடைய நண்பர்களும் இருப்பார்கள். பெரியப்பாவும் போவார்.
மேலாவணி மூலவீதியிலேயே பெரியப்பாவைச் சேர்த்து 5,6 வக்கீல்கள் இருந்தனர். அதில் அப்புசாமி என்பவரும், ராமாராவ் என்பவரும் ஒவ்வொரு வருஷமும் சபரிமலைக்கு மாலை போட்டுப்பாங்க. இப்போ மாதிரி இல்லை அப்போ. பெருவழி என்று சொல்லப் படும் வழியில் நடந்தே போவாங்க. மாலை போட்டுக்கிற அன்னிக்கும் சரி, கிளம்பும் அன்னிக்கும் சரி பெரிய அளவில் அன்னதானம் நடக்கும், தெரு பூராவும் அந்த நாட்களில் அங்கே போய்த் தான் சாப்பிடும். திரும்பி வந்ததும் வேறே ஒரு பெரிய சமாராதனை நடக்கும். மேலாவணி மூலவீதியும், வடக்காவணி மூலவீதியும் சேரும் முடுக்கில் இருக்கும் முதலாம் நம்பர் வீடு இப்போ கர்நாடக சங்கீதத்தில் பிரபலமாய் இருக்கும் ஜி.எஸ். மணி அவர்களின் வீடு. அவங்க வீட்டுக்கு ஒவ்வொரு வருஷமும் ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் வருவார். அவங்க வீட்டிலேயும் பஜனை பெரிய அளவில் நடக்கும். தெருவை அடைத்துப் பந்தல் போட்டு நடத்துவாங்க.
எங்க திருப்பாவை கோஷ்டி பஜனை மதனகோபாலஸ்வாமி கோயிலில் ஆரம்பிக்கும். நாலு மாசி வீதியும் சுத்தி வந்துட்டு, திரும்ப தானப்பமுதலி அக்ரஹாரம் கண்ணாஸ்பத்திரியில் கொண்டு விடுவாங்க எல்லாப் பெண்களையும். அங்கே சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் கொடுப்பாங்க. அதை வாங்கிக் கொண்டுவிட்டு வீட்டுக்குப் போய் அதுக்கப்புறமாய் பள்ளிக்குப் போன நாட்கள் உண்டு. இதைத் தவிர, வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்கும், நேரு பிள்ளையாரையும் பார்க்காமல் இருந்த நாளே இல்லை. பஸ் பிடிச்சு சொக்கிகுளம் பள்ளிக்குப் போகவேண்டி இருந்த நாட்களிலும் தவறாமல் வடக்கு கிருஷ்ணன் கோயிலுக்குப் போய் கோஷ்டியிலே பாடிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வந்து, அப்புறமா பள்ளிக்குப் போனதுண்டு. வடக்கு கிருஷ்ணன் கோயிலில் படிகளில் உட்கார்ந்து வடக்கு மாசி வீதியின் போக்குவரத்தைப் பார்ப்பதும், பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தின்போது கோயிலின் உச்சிப் படியில் உட்கார்ந்து திருநெல்வேலி கண்ணாடிச் சப்பரத்தைப் பார்த்ததும், வையாளி(குதிரை) சேவையை அனுபவித்ததும், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசலுக்கு முண்டி அடித்துக் கொண்டு போனதும் தனி அனுபவம்.
சுடச் சுட இருக்கும் வடக்குக் கிருஷ்ணன் கோயில் பிரசாதம் சுவை போல வேறே ஏதும் இருக்குமா சந்தேகமே! அதுவும் ஒரு மாடக் கோயிலைப் போல என்று அப்போ தெரியலை. இப்போத் தான் புரியுது! :(( கோயிலுக்குப் போகிறதிலே அப்போ இருந்த செளகரியமோ, சுகமோ இப்போ இருக்கா என்றால் இல்லைனு தான் சொல்லணும். காலையிலே இருந்து ஆரம்பிச்சு, இரவு பள்ளியறை வரை பார்த்த மீனாட்சியை இப்போக் காசு கொடுத்தால் கூடப் பார்க்க முடியலை. முன்னேற்றம் என்பது இதுதான். :((((((
இப்போவும் மதுரை மீனாக்ஷி கோயிலில் கிட்டத்தட்டப் பனிரண்டு வருடங்கள் கழித்தும் இதே நிலைதான். ஆனால் இப்போ மதுரைக்குப் போயே மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. எப்போ வாய்க்குமோ! இந்தப் பதிவு "மதுரை மாந்கரம்" என்னும் வலைப்பக்கத்தில் மதுரைக்கார நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து அவரவர் அனுபவங்களை எழுதி வந்தோம். இம்மாதிரிக் குழுமப் பதிவுகள் இன்னும் சிலவும் இருந்தன அப்போது. மதுரை மாநகரம் தவிர்த்து "ப்ளாக் யூனியன்" "ஆசார்ய ஹ்ருதயம்" என்னும் வலைப்பதிவுகளும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து எழுதி வந்தோம். இப்போ அந்த நண்பர்களில் யாருமே வலைப்பக்கம் எழுதவில்லை. குழுமப் பதிவு தவிர்த்து சொந்த வலைப்பக்கங்களிலும் இப்போதெல்லாம் யாரும் எழுதுவதில்லை. பல நண்பர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை. :( அநேகமாக நான் மட்டுமே பதினாறு வருடங்களாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
Saturday, December 11, 2021
மஹா கவிக்கு அஞ்சலி!
துச்சா தனன்எழுந்தே -- அன்னை
துகிலினை மன்றிடை யுரிதலுற்றான்.
‘அச்சோ தேவர்களே!’ -- என்று
அலறியவ் விதுரனுந் தரைசாய்ந்தான்.
பிச்சேறி யவனைப்போல் -- அந்தப்
பேயனுந் துகிலினை உரிகையிலே,
உட்சோதி யிற்கலந்தாள்; -- அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமையுற்றாள். 88
‘ஹரி, ஹரி, ஹரி என்றாள்; -- கண்ணா!
அபய மபயமுனக் கபயமென்றாள்.
கரியினுக் கருள்புரிந்தே -- அன்று
கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்,
கரியநன்னிற முடையாய், -- அன்று
காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதொர் பொருளாவாய், -- கண்ணா!
பேசரும் பழமறைப் பொருளாவாய்! 89
‘சக்கர மேந்திநின்றாய், -- கண்ணா!
சார்ங்கமென் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய், -- கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், -- கண்ணா!
தொண்டர்கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக்காப்பாய், -- அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90
‘வானத்துள் வானாவாய்; -- தீ
மண்நீர் காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -- தவ
முனிவர்தம் அகத்தினி லொளிர்தருவாய்!
கானத்துப் பொய்கையிலே -- தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து ஸ்ரீ தேவி, -- அவள்
தாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப்பாய்! 91
‘ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!
மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே! 92
‘“கம்பத்தி லுள்ளானோ? -- அடா!
காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செய்யுமூடா” -- என்று
மகன்மிசை யுறுமியத் தூணுதைத்தான்,
செம்பவிர் குழலுடையான், -- அந்தத்
தீயவல் லிரணிய னுடல்பிளந்தாய்!
நம்பிநின் னடிதொழுதேன்; -- என்னை
நாணழியா திங்குக் காத்தருள்வாய். 93
‘வாக்கினுக் கீசனையும் -- நின்றன்
வாக்கினி லசைத்திடும் வலிமையினாய்,
ஆக்கினை கரத்துடையாய், -- என்றன்
அன்புடை எந்தை, என் னருட்கடலே,
நோக்கினிற் கதிருடையாய், -- இங்கு
நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்,
தேக்குநல் வானமுதே! -- இங்கு
சிற்றிடை யாச்சியில் வெண்ணெஉண்டாய்! 94
‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.
பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணர்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல், 95
பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்தி லடங்காவே; -- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ! 96
பொன்னிழை பட்டிழையும் -- பல
புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய்,
சென்னியிற் கைகுவித்தாள் -- அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே,
முன்னிய ஹரிநாமம் -- தன்னில்
மூளுநற் பயனுல கறிந்திடவே,
துன்னிய துகிற்கூட்டம் -- கண்டு
தொழும்பத் துச்சாதனன் வீழ்ந்துவிட்டான். 97
தேவர்கள் பூச்சொரிந்தார் -- ‘ஓம்
ஜெயஜெய பாரத சக்தி!’ என்றே.
ஆவலோ டெழுந்துநின்று -- முன்னை
ஆரிய வீட்டுமன் கைதொழுதான்.
சாவடி மறவரெல்லாம் ‘ஓம்
சக்திசக்திசக்தி’ என்று கரங்குவித்தார்.
காவலின் நெறிபிழைத்தான், -- கொடி
கடியர வுடையவன் தலைகவிழ்ந்தான். 98
Friday, December 10, 2021
"இப்போ வந்து" "பார்த்திங்கன்னா" என்னவா இருக்கும்? :)
கல்யாணத்திற்குச் சென்ற கலாட்டாவைப் பற்றி எழுதும்போது ஶ்ரீராம் கேட்டிருந்த இருவிஷயங்களை எழுத மறந்துட்டேன். அதில் ஒன்று ட்ராப் டாக்சியின் வாடகைக் கட்டணம். ஒரு வழிக்கு 4500 ரூபாய் ஆகிறது. விமானத்தை விட மலிவு. ரயில் முதல் வகுப்பை விடக் கொஞ்சம் அதிகம். சாதாரணமாக வாடகைக் கார் எடுத்துப் போனால் இரு வழிக்கட்டணமாக ஒன்பதாயிரம் ரூபாய் ஆகும். ஆகவே இது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
இன்னொன்று நாங்க தங்கின சர்வீஸ் அபார்ட்மென்டின் வாடகை. இதுவும் மிகக் குறைவு தான். அதோடு அரசாங்கம் நடத்துவது. எப்போதும் நடுத்தரமக்களின் வரவு செலவுத் திட்டத்தில் அடங்கும்படியே இருக்கும். இந்த செர்வீஸ் அபார்ட்மென்ட் வாடகையும் ஒரு நாளைக்கு 200 ரூபாய் தான். ஆனால் 3 அறைகள் கொண்ட அதில் இன்னும் நான்கு பேராவது தாராளமாகத் தங்கலாம். இதே போல் தான் கொடைக்கானலில் தமிழ்நாடு ஓட்டலில் வசதிகள் அதிகம்/வாடகை குறைவு/பராமரிப்பு மோசம். உணவு பரவாயில்லை ரகம். எல்லா ஓட்டல்களையும் போல இங்கேயும் தங்குபவர்களுக்குக் காலை உணவு இலவசம். அறையிலேயே காஃபி, தேநீர், பூஸ்ட் போன்றவை போட்டுக்கும் வசதிகள் மற்ற ஓட்டல்களைப் போல் இங்கும் உண்டு. குளியலறையில் 24 மணி நேரமும் வெந்நீர் வந்தது. நாங்க போயிருந்தது முதல் முறை டிசம்பர் என்பதால் வெந்நீர் அப்போது மிகவும் தேவைப்பட்டது. சிவப்புக் கம்பளம் விரித்திருந்தாலும் அவை பராமரிப்பு மோசமாக இருந்தது. அறைக்கு ரூம் செர்வீஸ் உண்டு. ஆனால் உணவு ரூம் சர்வீஸில் தரமாக இல்லை. எங்களுக்கு முதல்நாள் இரவு உணவு எடுத்து வந்தவர் அதைப் பார்த்துட்டு எப்படிச் சாப்பிடப் போறீங்க? இவ்வளவு மோசமா இருக்கேனு கேட்டார். தோசை ஒரே கருகல். ஆனால் மறுநாள் காலை உணவில் தோசை, இட்லி, பூரி, பொங்கல், வடை எல்லாமே நன்றாக இருந்தது.
ஆனால் அதே கொடைக்கானலுக்கு மறுமுறை போனப்போ நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் நம்ம ரங்க்ஸ் தனியார் ஓட்டல் ஒன்றை யாரோ நண்பர் சொன்னார்னு தேடிக்கொண்டு போகச் சொன்னார் ஓட்டுநரை. அங்கே போனால் ஓட்டலுக்குப் போகவே மலை ஏறி இறங்க வேண்டி இருந்தது. நல்லவேளையாக அன்னிக்குப் பிள்ளையார் சதுர்த்தி என்பதால் இட்லி, கொழுக்கட்டை, வடை, அப்பம் எல்லாம் கையில் கொண்டு போய்விட்டேன். இல்லாட்டி அந்த மலையில் ஏறி இறங்கிச் சாப்பிட ஓட்டலைத் தேடிப் போகக் கஷ்டமாக இருந்திருக்கும். சற்றே தூரத்தில் தான் தமிழ்நாடு ஓட்டல். அங்கே போகலாம் என எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. நாங்க போனதுமே கொடைக்கானலில் அந்தப் பகுதியில் மின்சாரம் போய்விட்டது. தமிழ்நாடு ஓட்டலில் ஜெனரேட்டர் போட்டுவிட்டார்கள். ஆகவே அங்கு மட்டும் மின்சாரம் இருந்தது. இங்கே மறுநாள் காலை குளிக்க வெந்நீர் கிடைக்கவே இல்லை. சோலார் பவரில் ஓடும் கீசர் ஆகவே வெந்நீர் மெதுவாக வரும் என்று சொன்னார்கள். அந்த கீசர் குழாயைத் திறந்தால் வெந்நீராவது ஒண்ணாவது! அந்த நடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்தோம். பச்சைப் பொய்! வாடகையும் 2000 ரூபாயோ என்னமோ!
**********************************************************************************
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைப் பயிற்றுமொழி ஆக்கணும்னு வழக்குத் தொடர்ந்திருந்தாங்க. அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்பட்டதன் காரணமே மத்திய அரசில் பணி புரியும் அடிக்கடி மாற்றல் ஆகும் நபர்களின் குழந்தைகள் இந்தியாவில் எங்கே சென்றாலும் எந்த மாதம் சென்றாலும் பள்ளியில் உடனே சேர்ந்து படிக்க முடிய வேண்டும் என்பதற்காகவே. எங்கள் குழந்தைகளை நாங்கள் எங்களுக்கு மாற்றல் வந்த செப்டெம்பர், ஜனவரி, போன்ற மாதங்களில் கூடச் சேர்த்திருக்கோம். இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான பள்ளி திறப்பு, பள்ளி விடுமுறைகள் என்பதாலும் பள்ளிப் பாடங்கள் நடத்துவதும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நடைமுறையைப் பின்பற்றுவதாலும் ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு மாறும்போது குழந்தைகளுக்குப் பாடம் விட்டுப் போய்விடும் என்னும் அச்சம் இருக்காது. ஒரு வாரம் கழித்து வந்தாலும் வந்து உடனடியாகப் பாடங்களைப் புரிந்து கொண்டு விடலாம். பரிக்ஷைகள் நடப்பதும் அப்படியே!
முன்னெல்லாம் விடுமுறைகள் அறிவிப்பும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் சொல்லும்/அறிவிக்கும் நாட்கள் தான். உள்ளூர் விடுமுறை அன்று கேந்திரிய வித்யாலயா செயல்படும். மாணவ, மாணவியர் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அது வேண்டுமானால் இப்போது மாறி இருக்குமோ என்னமோ! மாதத்தின் கடைசி நாள் அது என்ன கிழமையாக இருந்தாலும் அரைநாள் பள்ளி. அது திங்களோ, செவ்வாயோ, அல்லது வேறு எந்தக்கிழமையானாலும்! இப்படிப் பட்ட பள்ளிகளில் நமக்குத் தமிழ்ப் பற்று இருப்பதைக் காட்டத் தமிழ் சொல்லிக் கொடுத்தே ஆகவேண்டும் என்றால் எப்படி? ஏற்கெனவே தமிழகத்தில் இருக்கும் சிபிஎஸ் ஈ பள்ளிகளில் தமிழ் எட்டாவது வகுப்பு வரை சொல்லிக் கொடுக்கப்படுகிறதே! அதிலேயே பல மாணவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. தமிழ்வழிப் பள்ளிகளோ/அல்லது அரசு சொல்லிக் கொடுக்கும் தமிழ்ப் பாடங்களோ தரமானதாகவே இல்லை. அவங்களுக்குச் சங்கப்பாடல்களோ, பக்தி இலக்கியங்களோ கற்பிக்கப் படுவதில்லை. மதச் சார்பு எனச் சொல்லிக் கொண்டு கம்பராமாயணம்/வில்லி பாரதம் போன்றவை கூடப் பாடத்திட்டத்தில் இல்லை. நீதிபோதனைகள், நாலடியார், திரிகடுகம், ஏலாதி, ஆத்திச்சூடி, போன்றவற்றின் பெயர்களைக் கூடக் கேட்டிருப்பாங்களோ என்னமோ! உண்மையான தமிழறிஞர்கள் பலரையும் இந்தத் தமிழ்ப் புத்தகங்கள் கற்பிப்பதில்லை. ஆகவே இப்போதுள்ளவர்களுக்குத் தமிழ் பேசவோ/எழுதவோ வருவதில்லை.
தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்கள்/ செய்திகளில் கீழே ஓடிக்கொண்டிருக்கும்ஃப்ளாஷ் நியூஸ் எனப்படும் அவசரச் செய்திகள் ஆகியவற்றில் தமிழில் எழுத்துப் பிழையையும், பொருட்பிழையையுமே அதிகம் பார்க்கலாம். செய்திகள் வாசிப்பவர்கள் கேட்கவே வேண்டாம். முக்கியமான செய்திக்களங்களில் சென்று செய்தி சேகரித்து அதைத் தொலைக்காட்சிக்குச் சொல்ல வேண்டிய நபர்கள் பேசுவது காதால் கேட்கக் கர்ண கடூரமாக உள்ளது. "இப்போ வந்து" பார்த்தீங்கன்னா" என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றனர். முதலமைச்சர் திரு ஸ்டாலின் என்று சொல்லலாம். அல்லது முதலமைச்சராக இருக்கும் திரு ஸ்டாலின் எனலாம். ஆனால் இவர்கள் சொல்வது, "முதலமைச்சராக இருக்கக் கூடிய" திரு ஸ்டாலின் என்கின்றனர். இது என்ன தமிழ்? ஒருவேளை அவர் இருக்கலாமோ என்னும் சந்தேகத்தை அல்லவோ இது காட்டுகிறது. "நீடூழி வாழ்க" என்றே நாம் கேள்விப் பட்டிருக்கோம். ஆனால் இவங்களுக்கு "நீடுடி வாழ்க" வாம். மக்கள் எல்லோருமே ஆண்டவனைப் போற்றி வாழ்த்திப் பாடுகிறோம். அனைவருக்கும் தெரியும். ஆனால் இவங்க மனிதர்களுக்கு/அதாவது அவங்க தலைவர்களான மனிதர்களை வாழ்த்த மாட்டாங்களாம். வயதில்லையாம். வணங்கிப்பாங்களாம். எல்லாம் வல்ல இறைவனையே வாழ்த்தி வணங்கும்போது மனிதனை வாழ்த்தி வணங்குவதில் என்ன தப்பு?
இன்னும் இருக்கு. எழுதிண்டே போகலாம் போல. ஆனால் இதுவே கொஞ்சம் பெரிசாப் போயிடுத்தோனு தோணுவதாலே இன்னிக்கு இது போதும்.
குன்னூரில் விமான விபத்தில் இறந்த முப்படைத் தளபதிக்கும் அவருடன் கூடப்பயணம் செய்த ராணுவ வீரர்களுக்கும் முப்படைத் தளபதியின் மனைவிக்கும் நம் அஞ்சலிகள். அன்னாரின் குடும்பங்களுக்கு நம் ஆறுதல்களும்/தேறுதல்களும். நம்மையும் நம் நாட்டையும் இரவு, பகல் தூக்கமின்றிப் பாதுகாத்துவரும் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி, வணக்கம்.'
ஜெய்ஹிந்த்!
Sunday, December 05, 2021
அப்பாடா! ஒரு வழியா முடிச்சுட்டேன்!
அப்பா, அப்பா எனக் கூவினாலும் அந்தக் கூட்ட இரைச்சலில் அவர் காதுகளில் விழவில்லை. அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தார். அந்தத் திசையில் தான் நாங்கள் எங்கள் பயணச்சீட்டைக் கொடுத்துக் கையெழுத்து வாங்கச் சொன்ன நண்பர் நின்றிருந்தார். சரி,அப்பா அவரிடம் தான் போகிறார் என உறுதி ஆனது. இப்போது போர்ட்டர் எந்தப் பக்கம் போனார்? ஒரே கவலை. என்னோட பட்டுப்புடைவைகள், நகைகள், குழந்தைக்குச் செய்திருந்த நகைகள், கொஞ்சமாய்ப் பணத்தைக் கைப்பையில் வைத்துக் கொண்டு மிகுதிப் பணம்னு எல்லாமும் இருந்தது. ஒரே அடையாளம் கே.சாம்பசிவம் என ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் என்பதே! எல்லாவற்றுக்கும் மேல் குழந்தைக்கு அவசரத்துக்குக் கொடுக்க வேண்டும் வழியில் என வாங்கி வைத்திருந்த குழந்தை உணவான க்ளாக்சோ டப்பாவும் வெந்நீர் அடங்கிய ஃப்ளாஸ்க்கும், குழந்தையின் மாற்றுத் துணிகளும் ஒரு வயர் கூடையில் வைத்திருந்ததை அந்த சூட்கேஸ் மேல் தான் அவர் வைத்துக்கொண்டு சென்றார். மற்றச் சாமான்கள் போனாலும் குழந்தை உணவு கட்டாயம் தேவை. அப்போதெல்லாம் க்ளாக்சோ அவ்வளவு எளிதில் கிடைக்காது. கடைகளில் சொல்லி வைத்து வாங்கணும். இது அனுமதித்திருந்த விலையில். இல்லைனால் கூடுதல் விலையில் கடைக்காரர்கள் ஒளித்து வைத்திருக்கும் டப்பாவைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டும். ஒரே கவலை என்ன செய்வது என! சட்டென ஒருமுடிவுக்கு வந்தவளாய்ப் போர்ட்டரைத் தேடிச் செல்லலாம் என நினைத்தேன்.
உடனே அம்மாவிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அப்பா இருக்குமிடம் போகச் சொல்லிட்டு நான் போர்ட்டரைப் பார்க்கப் போவதாக அப்பாவிடம் சொல்லச் சொன்னேன். அதற்குள்ளாக ஒரு காவல் துறை நண்பர் என் பதட்டத்தைப் பார்த்துவிட்டு என்னவென்று விசாரிக்க விஷயத்தைச் சொன்னேன். அவர் அங்கீகாரம் பெற்ற போர்ட்டர் தானா எனக் கேட்டார். ஆம் என்றேன். அதோடு விளையாட்டாக எண்களைக் குறித்து மனனம் செய்யும் வழக்கம் என்னிடம் எப்போதும் இருந்ததால் அவருடைய லைசென்ஸ் எண்ணையும் சொன்னேன். அதுக்குள்ளே சுரங்கப் பாதையில் யாரோ ஒருவர் தலையில் கறுப்பு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு இறங்குவதையும், சுற்றும் முற்றும் பார்ப்பதையும் பார்த்துவிட்டேன். காவல்துறை நண்பரிடம் அங்கே கையைக் காட்டினேன். எனக்குப் பதட்டத்தில் பேச்சும் வரவில்லை. ஒரே ஓட்டம் தான். அதற்குள்ளாக நான் சைகை காட்டியதைப் புரிந்து கொண்ட காவல்துறை நண்பர் எனக்கு முன்னால் அந்தச் சுரங்கப்பாதைக்குப் போய்விட்டார். கீழே முற்றிலும் இறங்கி விட்டிருந்த போர்ட்டரையும் பிடித்து விட்டார்.
அவர் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கையில் நானும் சென்று விட்டேன். அவர் நாங்க வெளியே தான் போகணும்னு சொன்னதாகப் பிடிவாதமாகச் சாதித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆளும் கிடைத்துப் பெட்டியும் கிடைத்ததால் எனக்கு மேலே ஒன்றும் கேட்கவோ/பேசவோ தோன்றவில்லை. இதற்குள்ளாக அம்மா போய் விஷயத்தைச் சொல்லியதால் அங்கிருந்து அப்பாவும் ஓடோடி வந்து விட்டார். "கீதா! கீதா!" என அவர் என்னை அழைத்த குரலில் திருச்சி ஜங்க்ஷனே பிரமித்து நின்றிருக்கும். அந்தப் போர்ட்டர் சாமானைத் தூக்கிக் கொண்டு மறுபடி மேலே வர அங்கே வேறு பக்கம் என்னைத் தேடிக் கொண்டு போய்க் கொண்டிருந்த அப்பாவைக் கூப்பிட்டேன். பின்னர் காவல்துறை நண்பர் எங்களைப் பெட்டி வரை கொண்டு விட்டார். எங்களை வண்டியிலும் ஏற்றி விட்டார். சாமான்களையும் போர்ட்டர் கொண்டு கொடுத்துவிட்டார்.குழந்தையின் உணவும் கிடைத்து விட்டது. போர்ட்டருக்கும் காவல்துறை நண்பருக்கும் நன்றி சொன்னோம். சிறிது நேரம் ஆகிவிட்டது படபடப்பு அடங்கி நிதானத்துக்கு வர. ஒரே களைப்பு/பசி! ஆனால் அங்கே சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. கூட்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ரயில்வே கான்டீனில் பண்ணுவது எல்லாம் உடனுக்குடன் காலி ஆகிக் கொண்டிருந்ததாம். எங்கள் பயண நண்பர் எங்கோ போய்ப் பழங்கள் வாங்கி வந்தார். அதைச் சாப்பிட்டு விட்டுக் குழந்தையைப் பாதுகாப்பாகப் போட்டுப் படுக்க வைத்தோம். இத்தனை அமர்க்களத்திலும் அவள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். பாவம். பாதுகாப்பான கைகளில் இருக்கோம் என்னும் நிம்மதிதானே அதுக்கும் அப்போ தோன்றி இருக்கும்!
வண்டி சிறிது நேரத்தில் கிளம்பியது. மேற்கே சென்றது. நாங்கள் அசதியில் உட்கார்ந்தவாறே தூங்கி விட்டோம். நடுவில் ஒரு தரம் குழந்தை விழித்துக் கொண்டு அழுதப்போ ஈரோடோ என்னமோ ரயில் நிலையம். சரியாய் நினைவில் இல்லை. காலை விழித்ததும் சேலம் ஜங்க்ஷனில் வண்டி நின்று கொண்டிருந்தது. எல்லோருக்கும் காஃபி வாங்கி வந்தார் நண்பர். பின்னர் டிஃபனும் வாங்கிக் கொடுத்தார். நாங்களும் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்சம் மன அமைதி பெற்றோம். என்றாலும் கழிவறை எல்லாம் பயன்படுத்த முடியாமல் ஒரே பிரச்னை. அப்போ ரொம்பச் சின்ன வயசு. 20 வயசுக்குள் தான் என்பதால் எப்படியோ சமாளித்தேன். அம்மாதான் பாவம் திண்டாடினார்கள். கால் வைக்க முடியாமல் கழிவறைகள்.
இங்கே அம்பத்தூரில் சனிக்கிழமை மாலையே என் அண்ணாவோடு எழும்பூருக்கு வந்திருக்கார் நம்ம ரங்க்ஸ். அண்ணா அப்போது எங்களுடன் தான் இருந்தார். ஆழ்வார்ப்பேட்டையில் அலுவலகம். அம்பத்தூரில் இருந்து போய் வந்து கொண்டிருந்தார். இருவரும் எழும்பூர் வந்ததுமே சுமார் 3 மணி அளவில் ரயில் நிறுத்தப்பட்ட விபரமும் திரும்பத் திருச்சி போகிறது என்னும் தகவலையும் ரயில்வேக்காரர்கள் ஒலிபரப்பு/நோட்டிஸ் போர்டில் எழுதிப் போட்டு அறிவித்திருக்கிறார்கள். என்ன தான் விசாரித்தாலும் அந்த ரயிலில் வந்தவர்கள் எவருக்கும் எதுவும் ஆகவில்லை என்பதற்கு மேல் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சுமார் ஐந்தரை வரை காத்திருந்துவிட்டுத் திரும்ப அம்பத்தூர் போயிருக்கிறார்கள். மாற்று ரயில் விடப்பட்டிருக்கிறது என்பதை இரவு ரயில் நிலையத்துக்குத் தொலைபேசிக் கேட்டதில் சொல்லி இருக்காங்க. ஆனால் அதில் நாங்க வரோமா/திரும்பி மதுரையே போயிட்டோமா எனத் தெரியவில்லை. ஒரே குழப்பம். மறுபடி காலையில் விசாரித்தபோது திருச்சியில் இருந்து மாற்று ரயில் சேலம் வழியாகச் சென்னை சென்ட்ரலுக்கு மதியம் இரண்டு மணி அளவில் வந்து சேரும் எனச் சொல்லி இருக்காங்க.
ஆகவே சாப்பிட்டோம் எனப் பெயர் பண்ணிவிட்டு இருவருமாகக் கிளம்பி சென்னை சென்ட்ரல் வந்து விட்டார்கள். அங்கே அம்பத்தூரில் அக்கம்பக்கத்தினர் எல்லோரும் போய் என்ன ஆகப் போகிறது? அவங்க வராங்களா என்பது நிச்சயம் இல்லை. கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இப்படி எல்லாம் அவதிப்பட்டு வர மாட்டாங்க. திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பேருந்து அல்லது ரயிலில் மதுரை போய்ச் சேர்ந்திருப்பாங்க என்று சொன்னார்களாம். ஆனாலும் வந்து பார்க்கலாம் என வந்திருக்காங்க. ஒரு கோடியில் அண்ணாவும், இன்னொரு கோடியில் நம்ம ரங்க்ஸும் நின்றிருக்கிறார்கள். நான் எட்டிப் பார்த்துக் கொண்டே வந்தப்போ அண்ணா மட்டும் கண்ணில் பட்டார். சரிதான், அவருக்கு என்ன ஆச்சு எனக் கவலையுடன் பார்த்தால் கொஞ்சம் தள்ளி அவரும் நின்று கொண்டிருந்தார். உடனே கையை ஆட்டினேன். நல்லவேளையாக அவரும் கவனித்துவிட்டார். பின்னர் ரயில் நின்றதும் எல்லோரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டதும் அப்பாடா என இருந்தது. கூடவே வந்த நண்பர் எங்களைப் பாதுகாப்பான கரங்களில் ஒப்படைத்த நிம்மதியோடு எங்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றார். இப்படியாக என் பெண் பிடிவாதமாகச் சென்னை சென்ட்ரலில் தான் கால் வைப்பேன் என்று சொல்லி நேரடியாக அங்கே வந்து இறங்கினாள். அங்கிருந்து ஒரு டாக்சி வைத்துக் கொண்டு (அப்போல்லாம் ரொம்பச் சீப்) எல்லோரும் அம்பத்தூர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
கதையும் முடிந்தது/கத்திரிக்காயும் காய்ச்சது. கத்திரிக்காயைப் பார்த்தே பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன! ஹிஹிஹி!
Friday, December 03, 2021
பயணம் எங்கே! எங்கே!
வண்டி மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைந்து நின்றது. அப்பா போய் விசாரித்து வந்ததில் வெண்ணாறு/வெட்டாறு கரை உடைந்துவிட்டதால் கடலூர் மெயின் லைனில் தண்டவாளமெல்லாம் நீர் நிரம்பி இருப்பதாலும் அங்கிருந்து வரும் லைன்களிலும் நீராக இருப்பதாகவும் விழுப்புரம் தாண்டிக் கொஞ்ச தூரம் வரை ஒரே தண்ணீர் மயம் என்றும் ரயில் மேலே போக முடியாது எனவும் சொன்னார்கள். அதற்குள்ளாகக் கூச்சல், குழப்பம், ஆங்காங்கே ஒரே களேபரம். என்ன செய்வதுனு புரியலை. அப்பாவுக்கும் குழப்பம். இப்படி ஒரு நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லை. அன்று சனிக்கிழமை நவம்பர் 25/26தேதினு நினைக்கிறேன். ஏனெனில் திங்களன்று நவம்பர் 28 தான் நான் வேலையில் சேரணும். நடுவில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் வேலைக்குச் செல்வதாகத் திட்டம். அப்பா/அம்மா கொஞ்ச நாட்கள் இருப்பார்கள். அப்பா வேலையில் இருந்தார் என்பதால் ஒரு வாரம் பத்து நாட்களுக்குப் பின்னர் அப்பா மட்டும் கிளம்பிப் போவதாயும் அம்மா ஒரிரு மாதங்கள் இருந்த பின்னர் போகலாம் எனவும் திட்டம். குழந்தைக்கு அறுபது நாட்கள் முடியவில்லை. மாதம் கணக்கில் தான் 3 ஆம் மாதம். எல்லாத் திட்டங்களும் இப்போது மாறிவிடுமே! யோசனையில் இருந்தோம். ரயில் நின்று கொண்டிருந்தது. மாலை நாலு மணி வரை யாருக்கும் எந்த முடிவும் தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் எங்கள் வண்டி கிளம்பவும் திரும்பச் சென்னை தான் போகிறதோ என நினைத்தோம். ஆனால் இல்லை. திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருச்சிக்குத் திருப்பி விடப்பட்டதாகச் சொன்னார்கள். இது என்னடா கூத்து என நினைத்தோம். ஒண்ணுமே புரியலை. அப்போது சிலர் விழுப்புரத்தை விடத் திருச்சியிலிருந்து மாற்று ரயில்கள் விடுவார்கள் என்று நம்பிக்கை கொடுத்தனர். வழியெங்கும் மக்கள் வெள்ளம் எங்கள் ரயிலை வரவேற்றது. தண்டவாளத்தின் இரு பக்கங்களிலும் கூட்டமாக நின்ற வண்ணம் மேலே போகாதே! நடுவில் எல்லாம் தண்ணீர்! தண்டவாளத்தில் விரிசல்! நதிப்பாலத்தின் மேல் ரயில் போக முடியாது. திருச்சியில் கொள்ளிடம் பாலத்தைக் கடக்க முடியாது. காவிரியில் வெள்ளம் கொள்ளிடம் பாலத்தை மூழ்க அடித்துவிட்டது. ரயிலோடு பயணிகள் அனைவரும் அடித்துக் கொண்டு போகப்போகிறது. நாளைக்கு தினத்தந்தியில் வரப்போகிறது என்றெல்லாம் மக்கள் கோஷமிட்டார்கள். ஆனால் ரயில்வேக்காரர்கள் அசரவில்லை.
பின்னர் தெரிந்தது எங்களுக்கு முன்னால் பராமரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒரு வண்டியில் ரயில்வே தொழில் நுட்ப ஊழியர்கள் அமர்ந்த வண்ணம் பாதையைப் பார்த்துக் கொண்டு ஆங்காங்கே சில இடங்களில் இறங்கியும் பார்த்துக் கொண்டு போவதாகவும், அவர்களை ஒரு திறந்த பெட்டியில் அமர வைத்து ஒரு இஞ்சின் இழுத்துச் செல்வதாகவும் அதன் பாதையிலேயே இந்த ரயில் செலுத்தப்படுவதாகவும் சொன்னார்கள். முன்னால் ஏதேனும் பிரச்னை இருந்தால் அவங்க பார்த்துட்டு இந்த ரயிலை நிறுத்திவிட்டுப் பின்னர் மேலே போகலாமா/வேண்டாமா என்பதை முடிவு செய்வார்கள். ஆகவே ரயில் மெதுவாகவே சென்றது. சுமார் மத்தியானம் 3 மணி/4 மணி அளவில் விழுப்புரத்தில் இருந்து கிளம்பிய வண்டி திருச்சியை மறுபடி வந்தடைய இரவு எட்டு மணி ஆகி விட்டது. எல்லோருக்கும் பசி. வழியில் ரயில் எங்கும் நிறுத்தப்படவில்லை. காஃபியோ, தேநீரோ எதுவும் குடிக்கவில்லை. கழிவறை கூடப் போகவில்லை.
ரயிலில் வந்த யாரோ ஒருவர் மேலதிகாரி வரை போய்க்கொடுத்த புகாரின் விளைவோ அல்லது ஒரு ரயில் கூட்டத்தையும் மேலே மேலே வந்து ஆங்காங்கே நின்று கொண்டிருந்த கூட்டத்தைச் சமாளிப்பது எப்படி என்பதனாலோ என்னமோ ரயில்வே அலுவலர்கள் மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்திருந்தனர். பயணச்சீட்டு மறுபடி வாங்க வேண்டாம் எனவும் அதே பயணச்சீட்டிலேயே பயணிக்கலாம் எனவும் சொன்னார்கள். ஆனால் முன் பதிவெல்லாம் எதிர்பார்க்க முடியாது. சாமர்த்தியம் உள்ளவர்கள் ரயிலில் அவங்க சொந்த சாமர்த்தியத்தில் ஏறிக்கணும். என்பதே அவர்கள் சொன்னது. என்ன ஏற்பாடு? எப்படிப் போகப் போகிறோம். இந்தப் பக்கம் "கார்ட் லைன்"எனச் சொல்லப்படும் நம் ரயில் செல்லும் பாதையும் போக முடியாது. அந்தப் பக்கம் கிழக்கே மெயின் லைன் எனச் சொல்லப்படும் பாதையும் உபயோகத்தில் இல்லை. நடைமேடையிலோ ஒரே கூட்டம். கிட்டத்தட்ட ஐந்தாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அன்று திருச்சி ரயில் நிலையத்தில்.
சற்று நேரத்தில் அறிவிப்புச் செய்யப்பட்டது. சென்னை/கொல்லம் விரைவு வண்டிப் பயணிகளுக்காக ஓர் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஏன் அதே ரயிலிலேயே போகலாமே என நினைப்பவர்களுக்கு! அப்போது மெயின் லைன்'கார்ட் லைன் இரண்டுமே மீட்டர் கேஜ் தான். சின்ன ரயில் பெட்டிகளைக் கொண்ட ரயில். நாங்க மதுரையில் வந்தது மீட்டர் கேஜிலே. இப்போது விழுப்புரத்தில் இருந்து செல்ல வேண்டியது ப்ராட் கேஜிலே. மாற்றுப்பாதை எனில் முற்றிலும் மாற்றுப் பாதை. மேற்கே சென்று சேலம் வழியாகச் சென்னை செல்ல வேண்டும். ஆக மொத்தம் எங்க பெண் பிறந்த 3 மாதங்களிலேயே மீட்டர் கேஜில் சின்ன ரயிலில் எல்லாம் போக மாட்டேன்னு அடம் பிடித்து ப்ராட் கேஜ் ரயில் பாதைக்கு மாற்றிக் கொண்டாள். அதோடு இல்லாமல் காலை கிளம்பினால் மாலை போகும் தூரம் உள்ள சென்னைக்கு முதல்நாள் சனிக்கிழமை காலை கிளம்பி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை போகும்படி ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு போகும்படியும் ஆனது.
சிறிது நேரத்தில் பயணிகளுக்குப் பயணச் சீட்டில் பரிசோதகரின் கையெழுத்து வாங்கும்படியாக அறிவிக்கப்பட ஒரே கூட்டமாக ஆங்காங்கே மக்கள் பரிசோதகரிடம் பாய்ந்தார்கள். எங்கள் கூடவே மதுரையிலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவர் எங்களுக்கும் அவரே சென்று மாற்று ஏற்பாட்டுக்கானக் கையெழுத்தை வாங்கி வந்து கொடுத்தார். திருச்சியிலிருந்து கிளம்பும் அந்த ரயில் வேறு நடைமேடையில் வருவதால் சாமான்களைத் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும். ஆகவே அப்பா ஒரு போர்ட்டரைப் பிடித்து அந்தக் குறிப்பிட்ட நடைமேடையில் ஏதேனும் ஒரு பெட்டியில் வைக்குமாறும் எங்கள் மூவருக்கும் இடம் போட்டு வைக்கும்படியும் சொன்னார். போர்ட்டர் கேட்ட தொகைக்கும் ஒத்துக்கொண்டார். அந்தப் போர்ட்டர் சுரங்கப்பாதையில் இறங்கிச் செல்லக் கூடவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு அப்பாவுடன் நானும், அம்மாவும் சென்றோம். படியெல்லாம் மக்கள் வெள்ளம். போர்ட்டர் தூக்கிச் சென்றது என்னோட சூட்கேஸ். அதில் நம்மவரின் பெயர் கே.சாம்பசிவம் எனப் பொறித்திருக்கும். ஆகவே நான் அதைக் குறி வைத்துக் கொண்டு நான் சென்றேன். என்னுடன் அம்மாவும் வந்தார். அப்பாவும் போர்ட்டரும் எங்கோ ஓர் இடத்தில் திரும்பி இருக்க எனக்கு அப்பா மட்டும் தெரிந்தார். போர்ட்டரைக் காணவில்லை.
Monday, November 29, 2021
சென்னை மழையும் நானும்!
தண்ணீருக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்நாட்டில்/முக்கியமாகச் சென்னையில் இப்போது எங்கே பார்த்தாலும் தண்ணீர்! தண்ணீர்! இன்னிக்குச் சென்னையில் ஒரு முக்கியமான கல்யாணம். நேற்றே போயிருக்கணும். வண்டி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டோம். ஆனால் இந்த மழையால் போகவில்லை. விழுப்புரம்/செங்கல்பட்டுப் பக்கம் உள்ள மழை நீரையும் வெள்ளத்தையும் பார்த்துவிட்டுப் போவதற்குத் தயக்கம். ஏற்கெனவே மதுராந்தகம் ஏரி நீரில் விட்டுக் கொண்டிருந்த உபரி நீர் ஏரி நிரம்பியதால் வெளியேற்றப்படுகிறது எனவும், அதனால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் இருப்பதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் திருமணத்தை நேரடி ஒளிபரப்பாகக் காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். நேற்றைய ரிசப்ஷனில் இருந்து இன்று திருமணம் சப்தபதி வரை பார்த்தோம். உண்மையில் சத்திரத்துக்குப் போயிருந்தால் இத்தனை வசதியாகப் பார்த்திருக்க முடியாது. மிகவும் எதிர்பார்த்திருந்த திருமணம். நேரில் பார்க்க முடியலையேனு இருந்தது. ஆனால் அதை விட வசதியாக மொபைல் மூலம் பார்த்தாச்சு!
நேற்றுத் தண்ணீரில் கூடுவாஞ்சேரி அருகே முதலை என வீடியோ வாட்சப்புகளில் வந்தன. இன்னொரு வீடியோ கேகே நகரில் என்றது. என் அண்ணா பெண் அதெல்லாம் இல்லைனு மாவட்ட ஆட்சியரே சொல்லிட்டார். அது உண்மையில் டயர் என்றும் சொன்னாள். மக்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தப்படுகிறார்கள் என்பதும் புரிந்தது. இன்னொரு வீடியோவில் இளையராஜா வீட்டைக் காலி செய்து கொண்டு போகிறாப்போல் வந்தது. சரினு சித்தி அங்கே தானே இளையராஜா வீட்டுக்கு எதிரே இருக்காங்கனு தம்பிக்குத் தொலைபேசி விசாரிச்சா அது 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கான வீடியோவாம். இப்படிப் பலவும் 2015 ஆம் ஆண்டிற்கான வீடியோக்கள் சுற்றுவதாகவும் தெரிவித்தார். என்ன மக்கள்! மனித மனத்தின் பலவீனத்தையும் தற்போது இருக்கும் நிராதரவான நிலையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மேலும் மேலும் பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி மகிழும் சிலரின் வக்கிரமான எண்ணம் வேதனையில் ஆழ்த்துகிறது.
என் முதல் பிரசவத்தின் போது வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபடியால் அறுபது நாட்களே பிரசவ கால விடுமுறை. அறுபத்தி ஒன்றாம் நாள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்கணும். அதுக்கப்புறமாத் தேவைன்னா விடுமுறை எடுத்துக்கலாம். குழந்தையைப் பார்த்துக்க ஆள் இருந்தா வேலைக்கும் போய்க்கலாம். எனக்கு செப்டெம்பர் கடைசியில் பிரசவம் ஆனதும். நவம்பர் கடைசியில் விடுமுறை முடிந்து வேலையில் சேரணும். அலுவலகத்தில் இருந்து நினைவூட்டுக் கடிதமும் வீட்டுக்கு வந்திருப்பதாக நம்ம ரங்க்ஸார் எனக்கும் மதுரைக்குக் கடிதம் எழுதி இருந்தார். குழந்தை பிறந்து கணக்குக்கு மாதம் மூன்று ஆனதால் (தமிழ் மாதக்கணக்கு) என் அப்பா/அம்மா என்னையும் குழந்தையையும் சென்னையில் கொண்டு விட முடிவு செய்து நாள் பார்த்தார்கள். நவம்பர் 29 ஆம் தேதி வேலையில் சேரணும். அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் மதுரையை விட்டுக் கிளம்பினோம். இப்போ குருவாயூர் விரைவு வண்டி என அழைக்கப்படும் வண்டி அப்போது காலை ஆறே கால் மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தது. முதல் நாள் இரவே குருவாயூரில் இருந்து வந்து மதுரையை அதிகாலை அடைந்து அங்கிருந்து காலை ஆறேகாலுக்குக் கிளம்பிச் சென்னை நோக்கிச் செல்லும். அந்த வண்டியில் முன்பதிவு செய்திருந்தார்கள். காலை சீக்கிரமே எழுந்து அம்மா ரயிலுக்கு வேண்டிய உணவு வகைகள், குழந்தைக்குத் தேவையான வெந்நீர். உடனே கொடுப்பதற்கு வேண்டிய பால் எனத் தயாரித்து எடுத்துக் கொள்ள தம்பி அப்போது காலேஜில் படித்ததால் அவனை வீட்டில் விட்டு விட்டு நான், அப்பா, அம்மா குழந்தையுடன் சென்னைக்குக் கிளம்பினோம்.
நானும் அம்மாவும் குழந்தையுடன் சைகிள் ரிக்ஷாவில் ஸ்டேஷனுக்குப் போக அப்பாவும் தம்பியும் மூட்டை முடிச்சுக்களை முடிந்தவரை ரிக்ஷாவில் வைத்தது போக மிச்சத்தைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தனர். ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். நான்கு பேர் உட்காரும் ஒரு பக்கப் பலகையில் நாங்கள் 3 பேர் இருந்ததால் இடம் தாராளமாகவே இருந்தது. சாமான்களை வைத்துவிட்டு நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு குழந்தையை எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் போட்டுவிட்டுத் தூங்கப்பண்ணிவிட்டுக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ரயில் என்னமோ கிளம்பவே இல்லை. தம்பி என்னனு போய் விசாரித்த்தற்கு இஞ்சின் மாற்றணும்னு சொல்லி இருக்காங்க. சரிதான், சித்தரஞ்சன்லே இருந்து இஞ்சின் எல்லாம் வரணும் போலனு நாங்க கேலி பேசிக் கொண்டோம். பின்னர் ஒருவழியாக ஏழு மணிக்குக் கிளம்பியது. வழியில் இட்லி, புளியஞ்சாதம், தயிர் சாதம் போன்றவற்றைச் சாப்பிட்டு முடித்தோம். குழந்தைக்கும் நானும் பால் கொடுத்து விளையாட விட்டுப் பார்த்துக் கொண்டோம். சாயந்திரமாய் ஐந்தேகால் மணிக்கு சென்னை/எழும்பூர் போகணும். மத்தியானம் இரண்டரை மணி இருக்கும் விழுப்புரம் வந்தது. விழுப்புரத்தில் அரை மணியாவது நிற்கும். எப்போதும் மத்தியானம் ஒரு மணிக்குக் காஃபி குடிச்சுப் பழகிய அப்பா காப்பி வாங்கி வரக் கீழே இறங்கினார். வண்டி கிளம்பறதுக்குள்ளே வரணுமேனு எனக்குக் கவலை.
எனக்கு எப்போவுமே வண்டி நடுவில் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி ஏதாவது வாங்கணும்னா கொஞ்சம் யோசனையா இருக்கும். அதுக்குள்ளே வண்டி கிளம்பிடுமோனு பயம் வரும். ஆனால் அப்பா காஃபி வாங்கி வந்துட்டார். கூடவே ஒரு செய்தியையும் கொண்டு வந்தார்.அது தான் வண்டி விழுப்புரத்தை விட்டுக் கிளம்புமா என்பது! விழுப்புரம்/செங்கல்பட்டு நடுவே மழையினால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும் வண்டியை மேலே செலுத்திக் கொண்டு போவது கடினமான காரியம் எனவும் பேசிக் கொண்டதாய்ச் சொன்னார். கவலை சூழ்ந்தது. நிலைமை புரியாமல் குழந்தை கத்தி விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் அதற்குள்ளாக வண்டி கிளம்பி மேலே சென்றது. அப்பாடா! என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொஞ்ச நேரத்திலேயே ஒரு நீண்ட குரல் எழுப்பி விட்டு ஓய்ந்த இஞ்சின் தடாரென இழுக்கப்பட வண்டி சட்டென நின்றது. பின்னர் மெல்ல மெல்ல அப்படியே பின்னாலேயே போக ஆரம்பித்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.
Tuesday, November 23, 2021
வந்தோமே! வந்தோமே! கல்யாணத்துக்கு வந்தோமே!
எனக்கு ஏற்பட்ட குழப்பத்திலும், கவலையிலும் தம்பி பையரிடம், இதுக்குத்தான் உன்னைச் சீக்கிரமா வானு சொன்னேன். இப்போப் பாரு! இங்கே கும்மிருட்டா இருக்கு. வெளிச்சமே இல்லை. நாங்க எங்கே வந்து உன்னைப் பார்ப்பது? அல்லது நீ எப்படி வந்து எங்களைக் கூட்டிப் போவாய்! ஒண்ணுமே புரியலை என்று படபடத்தேன். பின்னர் நானும் ரங்க்ஸுமாகக் கலந்து ஆலோசித்தோம். நல்லவேளையாக ஒரு மெழுகு வர்த்தி எடுத்து வந்திருந்தார். அதை ஏற்றிவிட்டு அந்த வெளிச்சத்தில் அவர் வெளியே சென்று ஒரு ஆட்டோ பிடிப்பதாகவும், அந்த ஆட்டோ ஓட்டலுக்கு வரேன்னு சொன்னால் நேரே ஓட்டலுக்குப் போயிடலாம் எனவும் இல்லை எனில் தம்பி பிள்ளை எங்கே இருக்கானோ அங்கே போகலாம்னும் சொன்னார். உடனே தம்பி பிள்ளையைக் கூப்பிட்டால் அவரும் அந்த நேரம் எங்களைத் தொடர்பு கொள்ள முயன்று கொண்டிருந்திருக்கார். ஆகவே அவர் எங்களைத் தொடர்பு கொண்டு துரைசாமி சப்வே அருகே வர மூடியுமானு கேட்க, எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. துரைசாமி சப்வே அருகே போவதே கஷ்டமாச்சே என நினைத்தபடியே கொஞ்சம் பயந்ததோடு அல்லாமல் சில நாட்கள் முன்னர் சப்வேயில் மூழ்கி இறந்த பெண் மருத்துவர் நினைவும் வந்து தொலைத்தது. ஆகவே அவரிடம் நான் துரைசாமி சப்வேக்கு எல்லாம் வரவில்லை என்று சொல்லிவிட்டேன். மறுபடி குழப்பம். அவரும் யோசனையில் ஆழ்ந்து போக நாங்களும் யோசிக்க ஆரம்பித்தோம்.
பின்னர் மறுபடி யோசித்ததில் தம்பி பையரே எங்களை அழைத்து எங்களை ஆர்யகௌடா ரோடு அயோத்யா மண்டபம் அருகே வர முடியுமா எனக் கேட்டார். அவசரமாக ரங்க்ஸைக் கலந்து ஆலோசித்ததில் அந்தப் பக்கம் மேடு எனத் தெரியவும் தம்பி பையரிடம் சரி எனச் சொன்னேன். உடனே அவரும் தாங்கள் காருடன் அயோத்யா மண்டபம் அருகே காத்திருப்பதாகவும் எங்களை ஓர் ஆட்டோ பிடித்துக்கொண்டு அங்கே வந்து சேரும்படியும், அங்கிருந்து அவர்கள் எங்களை ஓட்டலுக்குக் கூட்டிச் செல்வதாகவும் சொன்னார். உடனே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சாமான்களை மாடிப்படி அருகே கொண்டு வைத்துவிட்டுப் பூட்டுவதற்குத் தயாராகக் கதவை வைத்துவிட்டு அந்தக் குறைந்த வெளிச்சத்திலேயே நம்மவர் ஆட்டோவைத் தேடிச் சென்றார். மாடிப்படி அருகே ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு நான் சாமான்களுக்குக் காவலாக உட்கார்ந்திருந்தேன். பின்னால் இன்னொரு குடித்தனத்தின் வாயில் கதவு. இவர் போனவர் வரவே இல்லை. மெழுகுவர்த்தி காற்றில் அணையவா என பயமுறுத்திக் கொண்டிருந்தது. மணியைப் பார்த்தால் அப்போத் தான் ஆறு மணி ஆகப் போகிறது. ஆனால் இருட்டு என்னமோ நடு இரவு மாதிரி என்பதோடு அரை மணி நேரம் தான் கழிந்திருக்கிறது என்பதும் எனக்கு என்னமோ நாள்கணக்காகக் காத்திருப்பது போலவும் தெரிந்தது.
சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோவின் வெளிச்சம் காம்பவுண்டுச் சுவர்களில் பட்டு நான் உட்கார்ந்திருந்த இடத்தில் பிரதிபலிக்கக் கடவுளை இவர் ரங்க்ஸ் கொண்டு வந்த ஆட்டோக்காரராய் இருக்கணுமேனு வேண்டிக் கொண்டேன். இதுக்குள்ளாகப் பின்னாலிருந்து "யாரது?" என்னும் பெண்குரல் கேட்கத் திரும்பிப் பார்த்த நான் அங்கே நின்றிருந்த மாமியிடம், நாங்கள் பக்கத்து அபார்ட்மென்டுக்குத் தங்க வந்ததையும் இப்போ இங்கே மின்சாரம் இல்லை என்பதாலும், சாப்பாடு கிடைக்கவில்லை என்பதாலும் ஓட்டலுக்குப் போவதாய்ச் சொன்னேன். அதுக்குள்ளே ரங்க்ஸே வந்துவிட்டார். அவர் கொண்டு வந்த ஆட்டோத் தான் அது. அந்த மாமி உடனே தன் கையிலிருந்த டார்ச்சை அடித்து நல்ல வெளிச்சம் காட்டச் சாமான்களை மெதுவாக ரங்க்ஸ் ஆட்டோவில் ஏற்ற ஆட்டோக்காரர் அவற்றை ஆட்டோவில் நாங்கள் உட்கார இடம் இருக்கும்படி விட்டுவிட்டுக் கவனமாக வைத்தார். பின்னர் நான் ஏற வசதியாக ஆட்டோவை வாயிலுக்கு அருகே மேடான படியில் கொண்டு வந்து நிறுத்த நான் ஏறிக்கொண்டேன். மாடிக்கு வாடகைப் பணம் கொடுக்கச் சென்றிருந்த ரங்க்ஸ் அங்கிருந்து அந்த மாமி காட்டிய வெளிச்சத்தில் ஆட்டோவுக்கு வந்து சேர்ந்து ஏறிக்கொண்டார். ஆர்யகௌடா ரோடை நோக்கி ஆட்டோ சென்றது. இல்லை, இல்லை ஊர்ந்தது.
ஆட்டோக்காரர் ஏற்கெனவே சொல்லிட்டார். தண்ணீரைப் பார்த்துப் பயப்படாதீங்க. நான் கவனமாக மெதுவாகப் போய் உங்களைக் கொண்டு சேர்த்துவிடுவேன். இரண்டு, மூன்று தெருக்கள் சென்றதும் இவ்வளவு தன்ணீர் இருக்காது. கவனமாக உட்காருங்க என்றார். ஆட்டோ மெல்ல, மெல்ல, மெல்ல, மெல்லச் சென்றது. தண்ணீர் இரு பக்கங்களிலும் வாரி அடித்தது. முன்னாலும் அப்படியே எண்ணினாற்போல் ஒரு சில ஆட்டோக்களும் ஒரே ஒரு காரும் தள்ளாடித் தத்தளித்துக் கொண்டிருந்தன. கிரி ரோடு, ஜூபிலி ரோடு தாண்டிக் கொஞ்சம் மேடான பகுதி வந்ததும் அங்கெல்லாம் மின்சாரமும் இருந்தது. தண்ணீரும் அவ்வளவாய்த் தேங்கவில்லை. சுமார் ஒரு அரை மணி நேரப் பயணத்தில் (சாதாரண நாட்களில் அவ்வளவெல்லாம் ஆகாது) ஆர்யகௌடா ரோடு அயோத்யா மண்டபம் வந்துவிட்டோம். நாலைந்து கார்கள் நின்று கொண்டிருந்தன. தம்பி பையர் எந்தக்காரில் இருக்கார்னு ஆட்டோக்காரர் கேட்க, நாங்கள் வெளியே தலையை நீட்டிக் கைகளை ஆட்டினோம். உடனே தம்பி பையரும் காரை விட்டு வெளியே வந்து கைகளை அசைத்துக் காட்ட, அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
அதன் பின்னர் கார் ஓட்டுநர் வந்து என்னை மட்டும் அழைத்துக் கொண்டு முன்னால் உட்கார்த்தி வைத்து விட்டுப் பின் எல்லோருமாய்ச் சாமான்களை ஏற்றிக் கொண்டு டிக்கியில் வைத்து விட்டு ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டோம். நூறு ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர். பேரமே பேசாமல் கொடுத்துட்டோம். பின்னர் வண்டி அங்கிருந்து கிளம்பி லக்ஷ்மண் ஸ்ருதி வழியாக வந்து சுற்றிச் சுற்றிச் சுற்றி மெயின் ரோடில் இருந்த ஓட்டலுக்குப் பின் வழியாகக் கூட்டி வந்து சேர்த்தார். ஒன்வே என்பதோடு மழைத் தண்ணீரைத் தவிர்க்கவும் வேண்டி அப்படி வர நேர்ந்தது. ஓட்டலில் வந்து கீழே இறங்கியதுமே வீல் சேர் வேண்டுமானு ஓட்டல் ஊழியர் கேட்க வேண்டாம்னு சொல்லிட்டு மெல்ல மெல்ல நடந்தேன். கூடவே தம்பி பையர் அறை எண்ணைச் சொல்லி என்னையும் ரங்க்ஸையும் அறையில் கொண்டு சேர்க்கச் சொல்லி ஊழியரிடம் சொல்ல அவர் எங்களை அழைத்துச் சென்றார். அங்கே தம்பியும், தம்பி மனைவியும் எங்களை வரவேற்றார்கள். நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். கொஞ்ச நேரத்தில் தம்பி பையர் சாமான்களை ட்ராலியில் ஏற்றி இன்னொரு லிஃப்ட் மூலம் எங்கள் அறைக்கு எடுத்து வந்து சேர்த்தார். தம்பி பையரிடம் சூடாய்க் காஃபி வாங்கிக் கொடுனு சொல்லிவிட்டு அங்கிருந்த படுக்கையில் கை,கால்களை நீட்டிப் படுத்துவிட்டேன். பின்னே? மத்தியானம் பதினோரு மணியில் இருந்து படுக்கை கொள்ளாமல் அங்கேயும் இங்கேயும் அந்த இருட்டில் போய்க்கொண்டும் பேசிக்கொண்டும், யோசித்துக் கொண்டும் சாப்பாடு என்னும் பெயரில் எதையோ கொரித்துக் கொண்டும் இருந்தாச்சு. இப்போத் தான் உடல் ஓய்வு கேட்டது. அசதி தெரிந்தது.
Sunday, November 21, 2021
கார்த்திகைக் கொண்டாட்டம்!
கார்த்திகையோ கார்த்திகை, மாவலியோ மாவலி!கார்த்திகை பதிவு. இங்கே சென்று பார்க்கவும்.
ஒரு பழமொழி சொல்லுவாங்க, ஏற்கெனவே மாமியார் பேய்க்கோலம் ; அதிலேயும் அக்லி புக்லி என்பார்கள். இல்லைனா ஏற்கெனவே துர்க்குணி, இப்போ அதிலும் கர்ப்பிணி என்பார்கள். அந்த மாதிரி நமக்கு ஏற்கெனவே உடம்பில் இல்லாத வியாதிகளே இல்லை எனலாம். அப்படி இருக்கையில் வியாழனன்று இரவு சாப்பிட்ட உணவால் வெள்ளியன்று காலை எழுந்திருக்கவே முடியலை. அப்படி ஒண்ணும் பெரிசாச் சாப்பிட்டுடலை. சாபுதானா கிச்சடி. எப்போவும் பண்ணுவது தான். அடிக்கடி சாப்பிட்டது/ சாப்பிடும் உணவு தான். இப்போ ஒத்துக்காமல் போனதுக்குக் காரணம் இந்த ஜவ்வரிசி நைலான் ஜவ்வரிசி. எப்போதும் போல் காலம்பரவே ஆழாக்குக்குக் குறைவாக ஜவ்வரிசி எடுத்து நனைத்து வைத்தாச்சு. சாயந்திரமாக, வேர்க்கடலை மைக்ரோவேவில் போட்டு வறுத்துச் சுத்தம் செய்து பொடி தயார் செய்து, உருளைக்கிழங்கைத் துருவித் தண்ணீரில் போட்டுனு எல்லாம் தயார் செய்து கொண்டு முறைப்படித்தான் பண்ணினேன். ஆனால் ஊறிய ஜவ்வரிசியில் மைதாமாவுப் பசை கிளறிய மறுநாள் ஒரு ஊசல் வாசனை வருமே அதுபோல் வந்தது. சரினு அதைக் கொட்டி இருக்கணும். இத்தனைக்கும் வெயில் கூடச் சுள்ளென்றெல்லாம் அடிக்கலை. எப்படி ஊசி இருக்கும்னு நினைச்சு, அதை மறுபடி சுத்தம் செய்து உப்புமாப் பண்ணிச் சாப்பிட்டாச்சு. அதனால் எல்லாம் வாசனை போகலை. அப்படியே இருந்தது. அதோடு தான் சாப்பிட்டோம். அதான் தப்பு. அன்னிக்கு (வியாழனன்று) இரவு படுத்ததும் தூங்கிட்டேன்.
இரண்டு, இரண்டரை மணி போல விழிப்பு வந்தது. வயிறு ஒரு மாதிரியாக உணர்ந்தேன். கல்லைப் போட்டாற்போல் கனமாக இருந்தது. ஜவ்வரிசியைச் சாப்பிட்டேனா கற்களாய்ச் சாப்பிட்டுவிட்டேனோ என எண்ணும்படி ஆயிற்று. என்ன செய்யறதுனு புரியலை. கழிவறை போகலாம்னு போனால் திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. கூடவே வாந்தியும் அப்போதில் இருந்து ஆரம்பித்துக் காலை சுமார் ஐந்தரை மணி வரை தொடர்ந்தது. இன்னிக்குத் திருக்கார்த்திகை ஆச்சே. விளக்குகள் ஏத்தணுமேனு மனசு பரபரத்தது. ஆனால் உடல் சொன்னபடி கேட்கலை. ஆனாலும் எழுந்து கொண்டு வாசலில் கோலமெல்லாம் போட்டு விளக்குகளை ஊற வைத்துக் காஃபி, கஞ்சி கடமை முடித்துக் கொண்டு குளித்துவிட்டுப் பின்னர் வயிற்றைக் காயப் போடுவோம் என நினைத்துக் காஃபி ஒரே தரம் தவிர்த்து பின்னர் குடிக்காமல் அடுத்தடுத்து வந்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். என்னோட வழக்கமான குடிநீரான சுக்கு, மிளகு, சோம்பு, ஜீரகம், லவங்கம், பட்டை, ஏலக்காய் சேர்த்துத் தட்டிப் போட்டக் குடி நீரைத் தயாரித்துக் கொண்டு அவ்வப்போது குடித்துக் கொண்டேன். மதியமும் வெகு குறைவாக உணவு எடுத்துக் கொண்டேன். மாத்திரை சாப்பிடணுமே அதுக்காக மட்டும். பின்னர் பொரியைப் பாகு செலுத்தி வைத்துக் கொண்டேன். காலையிலேயே வடைக்கு அரைத்து வைத்தாச்சு. மாமியார் வீட்டில் அப்பம் பண்ணுவதில்லை.
பின்னர் மாக்கோலத்துக்கு அரைத்துக் கோலம் போடப் போனால் தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வாசல் வராந்தாவிலும் நிலைப்படியிலும் மட்டும் கோலம் போட்டுவிட்டு விளக்குகள் வைக்கும் பலகைக்கு மட்டும் எப்படியோ போட்டு முடித்தேன். அதுக்குள்ளே ஓய்வு எடுத்துக்கொண்டு எழுந்து வந்த ரங்க்ஸிடம் விளக்குகளுக்குத் திரி போட்டுச் சந்தனம்,குங்குமம் வைக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். அவரும் செய்து கொடுத்தார். மெல்ல மெல்ல மணியும் நான்கரை ஆகிவிட்டது. பின்னர் மறுபடி உடல் சுத்தம் செய்து கொண்டு புடைவை மாற்றிக்கொண்டு நிவேதனப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு தேங்காயும் உடைத்து வைத்துக் கொண்டு நாலைந்து விளக்குகளை ஏற்றினேன். மற்றவை அவர் ஏற்றினார். வாசலில் ஒன்றிரண்டு விளக்குகளை மட்டும் கொண்டு வைத்தேன். மற்றவற்றை எல்லாம் நான் சொல்லச் சொல்ல அவரே வைத்தார். இப்படியாக ஒரு மாதிரியாகக் கார்த்திகைக் கொண்டாட்டம் முடிந்தது. எப்படியோ இதையும் ஒப்பேத்திட்டேன். இன்னிக்குத் தான் வயிறு சரியாச்சு. அதான் பதிவுக்கும் தாமதம்.
வீட்டு வாசலில் விளக்குகள். அதிகம் வைக்கவில்லை. இந்த வருஷம் குறைத்து விட்டோம். முடியலை இருவருக்குமே! :)
Friday, November 19, 2021
விடுதியில் இருந்து கிளம்ப முடியுமா?
காலையில் நாங்கள் டிஃபன் சாப்பிட்ட சிறிது நேரத்துக்குள்ளாக ஶ்ரீராம் மொபைலில் அழைத்தார். நிலவரம் இருவருக்குமே தெரிந்திருந்ததால் நான் எங்கள் விலாசத்தையும் கொடுக்கவில்லை. அவர் இருக்குமிடத்தில் இருந்து வெகு தூரம் மாம்பலம் இருப்பதால் அதைப் பற்றிப் பேசாமல் பொதுவாகப் பேசிக் கொண்டோம். சிறிது நேரம் பேசிவிட்டு ஶ்ரீராம் மொபைலை வைத்த அடுத்த கணம் மீண்டும் அழைப்பு! ஙேஏஏஏஏஏஏ! என்னடா, என மொபைலை எடுத்தால் இஃகி,இஃகி,இஃகி, அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஶ்ரீராமின் பாஸ் வந்து வந்து பார்த்திருக்கார். ஶ்ரீராம் பேசிட்டு அவரிடம் ஃபோனைக் கொடுப்பார்னு நினைச்சிருக்கார். ஶ்ரீராம் அவரிடம் எதுவும் சொல்லாமலே ஃபோனை வைச்சுட்டு நல்லா வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார் போல! ஏன்னா திரும்பக் கூப்பிடறச்சே ஶ்ரீராம் குரலில் அ.வ.சி. ஹிஹிஹி, நானும் கண்டுக்காதது போல் பாவனையுடன் ஃபோனை வாங்கி ஶ்ரீராமின் பாஸுடனும் பேசிவிட்டு வைத்தேன். கொஞ்ச நேரம் மொபைலை நோண்டியதில் எ.பி. வாட்சப் குழுமத்தில் நான் மாம்பலத்தில் இருக்கும் தகவலைப் போட்டேனோ இல்லையோ, உடனே அப்பாதுரையிடமிருந்து செய்தி. "நான் உங்களைப் பார்க்க மாம்பலம் வரலாமா?" என. இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கப் போவதாகவும் எங்களை வந்து பார்க்கலாமா என்றும் கேட்டிருந்தார். அவர் சென்னையில் இருப்பதே எங்களுக்குத் தெரியாது. எங்கே இருக்கார்னும் தெரியாது. வரட்டுமானு கேட்கிறாரே என நம்மவரைக்கலந்து ஆலோசித்தேன்.
இங்கே பக்கத்தில் இருந்தால் வரச் சொல்லலாம்; இல்லைனா கூப்பிடாதே என்றார். நானும் அவர் எங்கே இருக்கார் எனக் கேட்டதற்குப் பள்ளிக்கரணை என்றார். அங்கிருந்து இங்கே வர நேரம் எடுக்கும். காரில் வந்தால் காரெல்லாம் வருமானு சந்தேகமா இருந்தது. ஏற்கெனவே இவர் வெளியே செல்கையில் மக்கள் நாலைந்து பேர்களாகக் குடும்பம் குடும்பமாகத் தேவையான சாமான்களுடன் பாதுகாப்பான இடம் தேடிச் சென்று கொண்டிருந்திருக்கிறார்கள். மின்சாரம் இப்போதைக்கு வராது எனவும் நீர் எல்லாம் வடிந்ததும் தான் திரும்ப விநியோகம் என்றும் சொன்னார்கள். ஆகவே மக்கள் அவரவர்கள்வீட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். இந்த நிலைமையில் அப்பாதுரையைப் பள்ளிக்கரணையிலிருந்து இங்கேயா வரச் சொல்லுவது? அந்தச் சமயம் பார்த்துத் தான் தம்பி தொலைபேசி எங்களையும் தயார் நிலையில் இருக்கச் சொல்ல சாப்பாடு வருவதற்குள்ளாகச் சாமான்களைச் சேகரம் செய்து கொண்டு எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல வசதியாகத் தயார் நிலையில் வைத்தோம். தம்பியும் அவர்கள் குடும்பமும் டெம்போ ட்ராவலர் மூலம் சாமான்களை எடுத்துக் கொண்டு வடபழனியில் உள்ள சத்திரத்துக்குச் சென்று முதலில் சாமான்களைப் போட்டுவிட்டுப் பின்னர் எதிரே உள்ள "க்ரீன் பார்க்" ஓட்டலில் அறைகள் பதிவு செய்யப் போவதாயும், அவர்கள் யாரும் சாப்பிடவில்லை எனவும், சாப்பிட்ட பின்னர் தம்பியின் பெரிய பிள்ளை எங்களை அழைத்துச் செல்லக் காருடன் வருவார் என்றும் சொன்னார். உடனே அப்பாதுரைக்கு வாட்சப் மூலம் நாங்கள் க்ரீன் பார்க் ஓட்டலுக்கு மாறப்போவதைத் தெரிவித்துவிட்டுச் செவ்வாய் காலை வரை அங்கே இருப்போம் என்பதால் அவர் சௌகரியப்படி வந்து பார்க்கலாம் என்று சொன்னேன். ஆனால் அவருக்கு அங்கே சூழ்நிலை எப்படி இருந்ததோ! நல்லவேளையாக வரேன்னு சொல்லலை. பிடிவாதம் பிடிக்கலை. ஹிஹிஹிஹி!
நானும் தம்பியிடம் நாங்கள் தயாராக இருப்போம் னு சொல்லிட்டு அன்னிக்கு ராகுகாலம் வருவதால் நாலரைக்கு முன் வரச் சொன்னேன். அது முடியுமானு தம்பிக்கு யோசனை. ஆறு மணிக்கு வரச் சொல்றேன் என்றார். நானும் சரினு சொல்லிட்டேன். அது எவ்வளவு தப்புனு அப்போவே புரிந்தது. அப்போ மணி இரண்டாகிக் கொண்டிருந்தது. இதற்குள்ளாக என் மைத்துனர் மும்பையிலிருந்து தொலைபேசி மூலம் எங்கள் நிலவரத்தைத் தெரிந்து கொண்டிருந்தவர் தஞ்சாவூர் மெஸ்ஸில் சொல்லிச் சாப்பாடு கொண்டு வரச் சொல்றேன் என்று சொல்லிவிட்டு அங்கே பேசினால் அவங்க அந்தத் தண்ணீரில் சாப்பாடு எல்லாம் கொண்டு கொடுக்க ஆள் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதே போல் காமாட்சி மெஸ்ஸிலும் காலை ஆகாரத்துக்காகப் பேசினப்போவே நீங்கள் ஆள் அனுப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தனர். பல இடங்கள் திறக்கவே இல்லை. ஏனெனில் மின்சாரம் இல்லாததால் எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. எப்படிச் சமைப்பது? கடைகளுக்கு வேலைக்கு வந்திருந்த ஆட்களும் அவரவர் குடும்பத்தைக் கவனிக்கச் சென்று விட்டனர். தம்பி சாப்பாடு வந்ததா எனக் கேட்டு விசாரித்துக் கொண்டே இருந்தார். ஒரு வழியாக இரண்டேகால் மணிக்குச் சாப்பாடு வந்தது. அந்த மாமா சுமார் பத்துப் பேர் சாப்பிடும் அளவுக்குச் சமைத்துக் கொண்டு வந்திருந்தார். எங்களுக்கு ஏதேனும் ஒரு சாதம் போதும்னு ஏற்கெனவே சொல்லி இருந்தோம். ஆனால் அவர் வகை வகையாகக் கொண்டு வந்திருந்தார். அப்போதைய மனநிலையில் ஜாஸ்தி இறங்கவே இல்லை. சாப்பிட்டோம் எனப் பெயர் பண்ணிவிட்டுப் பாத்திரங்களைக் கொடுத்தோம். என்னிடம் மிச்சம் இருந்த பாலையும் அவரிடம் கொடுத்துவிட்டுப் பாத்திரத்தைத் தேய்த்து எடுத்து வைத்துக் கொண்டோம். அதுக்குள்ளே மழையும் ஆரம்பித்தது. நாங்கள் இருந்த ஹால் ஒரே இருட்டு. கொஞ்சம் போல் வெளிச்சம் படுக்கை அறையில். ஆகவே அங்கே போய் உட்கார்ந்தோம்.மற்ற இரு படுக்கை அறைகளும் கும்மிருட்டு.
அப்போத் தான் புரிந்தது இந்த இருட்டில் சாமான்களை எடுத்துக் கொண்டு தம்பி அனுப்பும் காரில் எப்படிச் சாமான்களை எல்லாம் ஏற்றப் போகிறோம் என்பதே. அவரும் சொன்னார், வெளிச்சத்தோடு வரச் சொல்லு. தெருவில் வெளிச்சம் இருந்தால் தான் சாமான்களை ஏற்ற முடியும். அதோடு காரை இந்தச் சின்னத் தெருவில் ரொம்ப நாழி நிறுத்தினால் பிரச்னை ஆகும் என்றார். நானும் தம்பிக்கு இதைச் சொல்லச்சாப்பிட்ட உடனே பிள்ளையை அனுப்புவதாகச் சொன்னார். மணி நான்கு, நான்கரை எனப் போய்க் கொண்டே இருந்தது. ஆனால் யாருமே கூப்பிடவில்லை. காரும் வரவில்லை. சுமார் ஐந்தரை மணி போல இருக்கும். தம்பி பிள்ளை அலைபேசி மூலம் அழைத்து அவர்கள் துரைசாமி சப்வே பக்கம் இருப்பதாகவும் அங்கே எல்லா வழிகளையும் மூடிவிட்டார்கள் எனவும் ஏற்கெனவே மாட்லி ரோடிலும் மூடி இருப்பதால் உள்ளே எப்படி வருவது என்பதே தெரியவில்லை எனக் கூறிவிட்டு என்ன செய்யலாம் என்றும் கேட்டார். எனக்கு ஒரே சமயம் படபடப்பும், இங்கிருந்து கிளம்பவே முடியாதோ என்னும் பயமும் வந்தது.
Wednesday, November 17, 2021
பெண்ணிற்குத் திருமண வயது 40?
எனக்கு முடியாமல் இருந்தப்போ எங்க வீட்டில் வீட்டு வேலைகளுக்கு உதவும் பெண் எனக்காக சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் அடிக்கடி சமயபுரம் போவார். போயிட்டு வந்து எனக்குப் பிரசாதம் கொடுப்பார். வாங்கிப்பேன். ஆனால் அவர் பிரார்த்தனை பற்றி என்னிடம் இப்போத்தான் சில நாட்கள் முன்னர் சொன்னார். அதுவும் நான் வெளியூர் போகும் அளவுக்குக் கிளம்புவது தெரிந்ததும் தான் சொன்னார். ஊருக்குப் போவதற்குச் சில நாட்கள் முன்னால் தான் சொன்னதால் ஊரில் இருந்து வந்ததும் போகலாம்னு நம்மவர் சொல்லிட்டார். இங்கே வந்ததில் இருந்து காலை வேளையில் சிறு தூற்றல், பெருந்தூற்றல், பெரிய மழைனு இருந்து கொண்டே இருந்தது. இப்போத் தான் திங்களில் இருந்து எதுவும் இல்லை. அதுவும் அவருக்கு சொப்பனத்தில் அம்பிகை வந்தாப்போல் கண்டதும் உடனே போயிட்டு வரணும்னு முடிவெடுத்தாச்சு. அதோடு இல்லாமல் ஒரு இரண்டு நாட்கள் கழிச்சுக்கிளம்பினாலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தாளாது. ஏற்கெனவே இன்னிக்குக் கார்த்திகை ஒண்ணு. மாலை போட்டுக்கும் நாள். அந்தக் கூட்டம் இருந்தாலே கொஞ்சம் சிரமம் தான். என்றாலும் போயிடலாம்னு முடிவு பண்ணி இன்னிக்குக் காலையில் ஐந்தரைக்குக்கிளம்பணும்னு எங்களுக்குத் தெரிந்த ஆட்டோக்காரரிடம் சொல்லி வைத்தோம். அவரும் வரேன்னு சொல்லிட்டார்.
ஆனால் பணம் அதிகம் கேட்டார். என்ன செய்ய முடியும்! பேரம் பேசவில்லை. இன்னொரு ஆட்டோக்காரர் இருக்கார் என்றாலும் அவரோடது இப்போ வர டிவிஎஸ் ஆட்டோ. அதில் என்னால் ஏறவே முடியாது. இது பழைய ஆட்டோ. ஏறுவது கொஞ்சம் சிரமம் என்றாலும் ஏறிடுவேன். காலையில் ஐந்தரைக்குக் கிளம்பி சமயபுரம் போய்ச் சேர்ந்தோம்.என்னதான் சாலைகள் விரிவாக்கத்தில் சாலைகளெல்லாம் நன்றாக இருந்தாலும் இதில் தூரம்கொஞ்சம் அதிகம் தான் தெரிந்தது. உள்ளே போவதற்கு நூறு ரூபாய்ச் சீட்டுக்குப் போனால் எங்களுக்குச் சீட்டுக் கிடையாதுனு உள்ளே விட்டுட்டாங்க. அந்த வரிசையில் யாருமே இல்லை/ இலவச தரிசனம்/20 ரூபாய் தரிசனத்தில் தான் அதிகக் கூட்டம் அந்தக் காலை வேளையிலேயே இருந்தது. கொஞ்சம் சுற்றிச் சுற்றிப் போக நேர்ந்தாலும் உள்ளே போய் அம்மனுக்கு மிக அருகே நின்று கொண்டு திவ்ய தரிசனம்/ அம்மன் அழகாய்ப் பேசுகிறாப்போல் உட்கார்ந்திருந்தாள். நாங்கள் கொண்டு போன பெரிய மாலையை (ஶ்ரீரங்கம் மாலைகளுக்குப் பிரபலம்) அம்மனுக்குச் சார்த்திவிட்டுக் கற்பூர தீபாராதனையும் காட்டி எங்களுக்கும் காட்டினார் குருக்கள். பூசாரியும் இருந்தார். பின்னர் மல்லிகைப் பூச் சரம் பிரசாதமாய்க் கிடைத்தது. அதை வாங்கிக் கொண்டு மறுபடி மறுபடி கண் குளிர அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு! சுமார் இரண்டரை வருடங்கள் கழித்துக் குலதெய்வம் கோயிலுக்குப் போனது போன மாசம். இப்போ சமயபுரம். எல்லாம் அவள் அருள்!
***********************************************************************************
பாட்டையா என அன்புடன் அழைக்கப்படும் திரு பாரதி மணி அவர்கள் காலமாகிவிட்டதாக முகநூலில் பெண்ணேஸ்வரன் போட்டிருந்தார். அதன் பின்னர் நம்ம ரேவதியும் பதிவு போட்டிருந்ததைப் பார்த்தேன். வயது ஆனாலும் உள்ளத்தால் இளமையான பாட்டையா எனக்கும் முகநூல் சிநேகிதர். திருமண நாள்/பிறந்த நாட்களில் மெசஞ்சர் மூலம் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவார். அவர் மாமனார் க.நா.சு. அவர்கள் தூரத்து உறவு. ஆனால் பாட்டையா அதை அறிவாரா இல்லையானு எனக்குத் தெரியாது. அவரின் நகைச்சுவையான கட்டுரைகளையும் விதம் விதமான நாகர்கோயில் சமையல்களையும் இனிக் காண முடியாது! அவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.
***********************************************************************************
காலையில் இன்னொரு அமர்க்களம் முகநூலில். யாரோ நம்ம ரிஷபன் சார் அவர்கள் நேற்றிரவு காலமாகிவிட்டதாகச் சொல்லி இரங்கல் பதிவைப் பெரிசாகப் போட்டதோடு அல்லாமல் யாரைத் தொடர்பு கொண்டால் அவங்க வீட்டோடு பேச முடியும்னும் கேட்டிருந்தார். இதைப் பார்த்த நண்பர் என்னைக் கேட்க எனக்கோ திக் திக்! என்னடாப்பானு பார்த்தால் நண்பர் மேலே சொன்ன முகநூல் பதிவின் சுட்டியைக் கொடுக்க அதைப் படிச்சுட்டு நானும் இரங்கல் தெரிவிக்கையிலேயே ரிஷபன் அவர்களே வந்து "நான் சாகலை. உயிரோடு தான் இருக்கேன்." என்றாரே பார்க்கலாம்! அப்படியே தொலைந்த சந்தோஷம் திரும்ப வந்தது. அவரை மனமாற வாழ்த்திவிட்டு வந்தேன். நீடுழி வாழட்டும்! சில திரைப்படப் பிரமுகர்கள் பற்றியும் இப்படி எல்லாம் வதந்தி பரவி இருந்தது தெரியும். நெருங்கிய வட்டத்தில் இப்போத் தான் முதல் முதலாக ரிஷபன் சார்! பதிவு போட்டவர் தீர விசாரிக்கலை. மன்னிப்பாவது கேட்டாரானு தெரியலை. :(
***********************************************************************************
தெரிந்த ஒரு சிநேகிதியின் பிள்ளைக்கு 39 வயதாகிவிட்டது. 40 இருக்கலாம்னு அனுமானம். ஆனால் இல்லை என்றார் சிநேகிதி. இப்போப் பிரச்னை அது இல்லை. இந்தப் பையருக்குப் பத்து வருஷங்களுக்கும் மேலாகப் பெண் தேடிக்கொண்டு இருக்கிறார் அந்த சிநேகிதி. என் தம்பி பையருக்கு ஆகிறாப்போல் கிட்டி முட்டி வரும்; நின்னுடும். பையர் ஐடியில் இருக்கார்.நல்ல சம்பளம். ஒரே தங்கை/ திருமணம் ஆகி அம்பேரிக்கா வாசம். பிக்குப் பிடுங்கல் இல்லை. நல்ல இடம் தான். ஆனால் ஏனோ தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போத் தான்சில நாட்கள் முன்னர் அந்த சிநேகிதி வந்து பையருக்குத் திருமணம் நிச்சயம் ஆகப் போவதைச் சொல்லிவிட்டுச் சென்றார். அதோடு இல்லாமல் நீங்க ஊருக்குப் போயிட்டு வந்ததும் தான் நிச்சயம் என்றும் சொன்னார். ஊரிலிருந்து வந்ததும் இந்த வாரம் ஞாயிறன்று நிச்சயம் எனக் கேள்விப் பட்டேன். ஆனால் சிநேகிதியைப் பார்க்கவில்லை. நானும் அதிகம் வெளியே செல்வதில்லை என்பதால் பார்க்க நேரவில்லை.
இன்று நம்பகமான ஒருத்தர் மூலம் தெரிந்த தகவல் அந்தப் பெண் இந்தப் பையரை வேண்டாம்னு சொல்லிவிட்டாளாம்.இத்தனைக்கும் இந்தப் பெண்ணையே இரு வருடங்கள் முன்னரே பார்த்துப் பிடிச்சுப் போய் ஆனால் பெண் தான் வேலை பார்க்கும் ஶ்ரீரங்கம் வங்கியிலேயே தொடர்ந்து இருக்கணும் என்றும் அப்பா/அம்மாவுக்கு வேறு யாரும் இல்லை என்பதால் அவங்களை விட்டுட்டு வரமாட்டேன் என்றும்சொல்லி விட்டாளாம். ஏற்கெனவே இரண்டு வருடங்கள் முன்னரும் இதே காரணம் தான் வேண்டாம்னு நிராகரிச்சிருக்காங்க. இப்போப் பெண் வீட்டிலே தானாக வந்து பையர் இரு வருடங்களாக இங்கேயே இருப்பது தெரிந்து பெண்ணைக் கொடுக்கலாம்னு வந்திருக்காங்க.ஆனால் பையர் முன் கூட்டியே சொல்லணும் என்பதால் எப்போ வேண்டுமானாலும் சென்னைக்குப் போக நேரிடும்னு சொல்லி இருக்கார். அதோடு இல்லாமல் அவர் ஒரே பையர் என்பதால் பெற்றோர் தன்னுடன் தான் இருப்பார்கள் என்பதையும் சொல்லி இருப்பார் போல!
அந்தப் பெண்ணுக்குச் சென்னைக்குப் போய் வேலை செய்யவோ மாமனார்/மாமியாருடன் கூட இருக்கவோ இஷ்டம் இல்லை. அதோடு தான் சென்னை சென்றுவிட்டால் தன் பெற்றோர் இங்கே தனியாகத் திண்டாடுவார்கள் என்றும் கவலையாம். ஆகவே வேண்டாம்னு மறுபடியும் நிராகரித்து விட்டாள். பெண்ணுக்கும் 37 வயது. பையரின் அம்மா/என் சிநேகிதி அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். உங்களுக்குத் திருமணம் ஆனால் பையர் இங்கேயே ஶ்ரீரங்கத்திலேயே இருந்தார் எனில் உங்க வீட்டுக்கு வந்துடட்டும். நாங்க இதே வீட்டிலே இருந்துக்கறோம். அப்படிச் சென்னை மாற்றல் ஆனாலும் நீ உன் பெற்றோருடன் போய் அங்கே எங்க பையருடன் இருந்து வாழ்க்கையை நடத்து. நாங்க வரவே மாட்டோம். வரச் சொல்லி அழைப்பதற்கு மட்டும் வருவோம். என்றெல்லாம் சொல்லிப் பார்த்துட்டாங்க. நீ எங்களுடன் குடித்தனம் நடத்த வேண்டாம்னு எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு. பெண்ணின் மனம் இளகவில்லை. நாளைக்கு மறுபடி போய்ப் பார்க்கப் போறாங்க. எனக்குக் கண்களில் ரத்தம் வருது! இந்த மாதிரிப் பெண்களை என்ன சொல்லித் திருத்த முடியும்?
இந்தப் பெண்ணிற்கு வயது தான் முதிர்ந்திருக்கே தவிர மனம் முதிர்ச்சி அடையலை. இதுக்குத் தான் அந்தக் காலத்தில் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணினாங்க. சிந்தனை வேறு பக்கமெல்லாம் போகாமல் இருக்கும். அதோடு பெண்களை அந்த வயதில் சுலபமாக வளைக்கலாம். இப்போல்லாம் இருபது வயதில் கல்யாணம் பண்ணினாலே குழந்தைக் கல்யாணம் என்கிறார்கள். அதனால் 22,25 வயதுக்குள்ளாகவாவது கல்யாணத்தைப் பெண்களுக்குக் கட்டாயமாய்ப் பண்ணிடணும். முப்பது வயதுக்கு மேல் அந்தப் பெண்களுக்கெனத் தனிக் கருத்துகள்/பிடிவாதங்கள்/ருசிகள்னு ஏற்பட்டு நிலைத்து விடுவதால் அனுசரிப்பு என்பதை எதிர்பார்க்கவே முடியாது. எங்கேனும் ஒரு சில பெண்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்த இரண்டு, மூன்று பெண்கள் அப்படி இருந்திருக்காங்க/இருக்காங்க. ஆனால் இப்போதைய பெண்களின் பொதுவான மனோநிலை இப்படித்தான் இருக்கு!
Tuesday, November 16, 2021
தண்ணீர்! தண்ணீர்!
உடனே விழித்துக் கொண்டு விட்டேன். அவரும் எழுந்து விட்டார். இடி எனில் பயங்கரமான இடி. ஜன்னல்கள் சார்த்திக் கண்ணாடிக் கதவு போட்டிருந்தது. அதையும் மீறிக்கொண்டு மின்னல் கிழித்துக் கொண்டு உள்ளே பாய்ந்த உடனேயே மீண்டும் ஓர் இடி.முன்னை விட அதிக சப்தத்துடன். இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் போருக்கு ஆயத்தம் ஆகிவிட்டான். ஆனால் வருணனும் வாயுவுமோ ஒருவரோடொருவர் போட்டி வேண்டாம் என நினைத்தோ என்னமோ அதிவேகக் காற்றுடனும், மழைப்பொழிவும் ஆரம்பித்துவிட்டது. மழையின் சப்தம் காதுகளை அறைந்தது. கதவுகள் சார்த்தி இருந்ததையும் மீறிச் சப்தம் கேட்டது. கொட்டித் தீர்த்தது என்பார்கள் அப்படி ஒரு மழை. இதுக்கு முன்னாடி மழை பெய்த அளவெல்லாம் தெரியாது என்பதால் பெய்தால் பெய்யட்டும்னு விட்டுட்டோம். கவலைப்பட்டுக்கலை. காலை ஐந்து மணிக்கே விழிப்பு வந்தாலும் எழுந்திருக்கலை. வாசல் தெளிக்கணுமா? கோலம் போடணுமா? ஸ்வாமி விளக்கேற்றணுமா? ஆகவே படுத்துக் கொண்டே இருந்தேன். மழையோ நின்றபாடில்லை. மெதுவாக ஆறரை மணி போல் மழை கொஞ்சம் குறைந்து தூற்றலாக இருந்தது. எழுந்து இயற்கைக்கடன்களை முடித்துக்கொண்டு பல் தேய்த்துக் காஃபி டிகாக்ஷன் போட்டேன்.
அதுக்குள்ளே அவரும் எழுந்து முதல் நாளே பார்த்து வைத்திருந்த பால் கடையில் போய்ப்பால் வாங்கி வருவதாகச் சொன்னார். வாசல் கதவைத் திறந்தால் எதிரே நடைபாதையெல்லாம் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. அங்கே உள்ளே ஏற இருந்த மூன்று படிகளில் முதல் படி வரை நீர் வந்திருந்தது. ஒரு ராத்திரியில் இவ்வளவு தண்ணீரா என ஆச்சரியமாக இருந்தது. என்றாலும் அவர் உயரம் என்பதால் கவலைப்படாமல் இறங்கிச் சென்றார். அந்தப் பாதையெல்லாம் தண்ணீர் தேங்கி அங்கிருந்து வாசல் போர்ட்டிகோவுக்கு ஏறும் வழியெல்லாம் நீர். அங்கிருந்து தெருவில் இறங்கினால் அவருக்கே முழங்கால் தண்ணீர். மெல்ல மெல்லப் போனார். போகும்போதே பலரும் சப்தம் போட்டிருக்காங்க. ஆனால் பால் கடை நாலு வீடு தள்ளித் தான் என்பதால் போய் வாங்கி வந்துட்டார். பாலைக் காய்ச்சிக் காஃபி ஆளுக்கு ஒரு தம்பளர் எடுத்துக் கொண்டு மிச்சம் பாலைக் காஃபி குடிச்சுட்டு வந்துக் காய்ச்சலாம்னு இருவருமே காஃபியை எடுத்துக்கொண்டு நாற்காலிகளில் உட்கார்ந்தோம். மணி ஏழு இருக்கலாம். "பட்" என ஒரு சப்தம். சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறி நின்று விட்டது. அதிசயத்திலும் அதிசயமாக ஒரு காற்று அடித்தாலே கம்பளியைத் தேடும் நம்மவருக்கு வியர்த்து ஊற்றுகிறது. அத்தனை நேரம் மின்விசிறிக்காற்றுக் குளிரில் இருந்த எனக்கு அப்பாடா என்றிருந்தது. இப்படித் தான் நாங்க இரண்டு பேரும் எல்லாவற்றிலும் கிழக்கும்/மேற்குமாக இருப்போம்.
மின்சாரம் நின்று போனதுக்கு ட்ரான்ஸ்ஃபார்மரில் பழுது இருந்திருக்கலாம்/சிறிது நேரத்தில் வந்துடும்னு நாங்க அதைப் பெரிசா எடுத்துக்கலை. தம்பி வீட்டிலிருந்து தொலைபேசியில் அழைத்துக் காஃபி குடிக்கப் பால்கிடைத்ததா/மின்சாரம் இருக்கா என்றெல்லாம் விசாரித்தார் தம்பி. நாங்க காஃபி குடிச்சதையும் இன்னும் சிறிது நேரத்தில் போய்க் காலை ஆகாரம் வாங்கி வரப் போகிறார் என்பதையும் சொன்னேன். அங்கேயும் மின்சாரம் இல்லை எனவும்/பாலும் வரலை எனவும் தம்பி சொன்னார். மோட்டார் போட்டு நீரை மேலேற்ற முடியவில்லை. நாலைந்து குடித்தனங்கள் இருப்பதால் மேலே இருந்த டாங்கில் தண்ணீர் செலவாகி இருக்கிறது. இவங்களுக்குத் தண்ணீரும் கிடைக்கலை. மின்சாரம் வருமானு பார்க்கணும்னு சொன்னார். அந்த வகையில் நமக்குப் பரவாயில்லை. தண்ணீர் நிறையவே வருதுனு நாங்க நினைச்சோம். சிறிது நேரத்தில் இவர் காலை ஆகாரம்வாங்கி வரக் கிளம்பினார்.எனக்கு 3 இட்லி தவிர வேறே ஏதும் வேண்டாம்னு சொல்லிட்டேன். அவர் மறுபடி அதே போல் தூற்றலில் மழை நீரில் இறங்கிச் சென்றிருக்கிறார். நாங்க இருந்த தெருவில் இருந்து மாம்பலம் ஸ்டேஷன் ரோடு பக்கம் என்பதால் அங்கிருந்து ஏதேனும் ஒரு ஓட்டலில் காலை ஆகாரம் வாங்கலாம்னு நினைப்பு.
போகும்போது வழியில் பார்த்தவர்கள் எல்லாம் போகாதே/போகாதே என எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர். அங்கேயும் தண்ணீர் முழங்காலுக்கு மேல் இருந்திருக்கிறது. ஓட்டல்களில் எதுவும் திறக்கவில்லையாம். இவர் சாப்பிடணும்னு ஆசைப்பட்ட காமேஸ்வரி மெஸ் திறக்கவே இல்லையாம். ஏதோ ஒரே ஒரு ஓட்டல் மட்டும் திறந்திருக்க நல்லவேளையாக அது சைவ ஓட்டல் தான் என்பதால் அங்கிருந்து காலை ஆகாரம் வாங்கிக் கொண்டு வந்தார். மத்தியானத்துக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளியஞ்சாதம் எனக் கிடைக்கும் என்றும் சொல்லி இருக்காங்க. மத்தியானம் ஒரு மணிக்கு வரச் சொல்லி இருக்காங்க. சிறிது நேரத்தில் வந்துடும்னு நினைச்ச மின்சாரம் வரவே இல்லை. மின்சாரம் இல்லாமல் எப்படிச் சமைப்பது? ஆகவே திறந்திருந்த அந்த ஓட்டலையும் காலை ஒன்பது மணிக்கே மூடி இருக்காங்க. மழையோ விட்டு விட்டுப் பெய்கிறது. நீர் மறுபடியும் வெள்ளமாகப் பாய்கிறது. இதுக்கு நடுவே எங்க செர்வீஸ் அபார்ட்மென்ட் அருகே இருக்கும் ஒரு வீட்டில் அந்த நபர்கள் பேசிக் கொண்டதில் தெரிந்தது செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கப் போகிறார்கள் என்பது.
அதுக்குள்ளே அங்கே தம்பிக்கும் இந்த விஷயம் தெரிந்து நாங்க என்னசெய்யறோம்னு தொலைபேசினார். விஷயத்தைச் சொன்னோம். வெந்நீர் போட முடியாமல் குளிக்காமல் உட்கார்ந்திருந்தோம். சாப்பாட்டுக்கு வழியில்லை என்பதைச் சொன்னோம். அங்கே தம்பி மனைவி சாதமும், குழம்பும் ஏதோ ஒரு காயும் பண்ணி இருப்பதாகத் தம்பி சொன்னார். அதை வேணாக் கொடுத்தனுப்பவானு கேட்டதுக்கு இவர் வேண்டாம், இங்கே கடை ஏதேனும் திறந்திருந்தால் ப்ரெட் வாங்கிக் கொண்டு பால் கடை மாமா காஃபி, தேநீர் தருவதாய்ச் சொல்லி இருக்கார்னு சொல்லிட்டு அதை வாங்கிக்கறேன் என்றார். ஆனால் போனால் தெருவில் எந்தக் கடையும் திறக்கவே இல்லை.பால்கடையில் பாலும் இல்லை தீர்ந்துவிட்டது. ப்ரெடா? ஏது? கடை இருந்தால் தானே ப்ரெட்! ஒரே குழப்பம். மறுபடி விடுதிக்கு வந்தார். இரண்டு பேருமே தண்ணீராக இருந்தாலும் பரவாயில்லைனு குளிச்சோம். தேவையான துணிகளைத் துவைச்சோம். அதுக்குள்ளே தம்பியோட பெரிய பிள்ளை தொலைபேசியில் எங்களை அழைத்து மணி பனிரண்டு ஆச்சே, சாப்பாட்டுக்கு என்ன பண்ணினீங்கனு கேட்டார். கடை ஏதும் திறக்கலை/ப்ரெட் கிடைக்கலைனு சொன்னோம். உடனே தம்பியும் தொலைபேசியில் அழைத்துக் கேட்டுவிட்டு அங்கே அந்தத் தெருவிலேயே அருகே பத்து வீடுகள் தள்ளிக் குடியிருக்கும் நண்பர் ஒருவரை அழைத்து எங்களுக்குச் சாப்பாடு தர முடியுமா எனக் கேட்க. அவரோ சமைத்துத் தான் தரணும், இப்போச் சமைக்க ஆரம்பிச்சாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆகவே ஒன்றரை மணி இரண்டு மணிக்குத் தான் சாப்பாடு கிடைக்கும்னு சொல்லி இருக்கார். தம்பியும் அதுக்கு ஒத்துக்கொண்டு எங்களை அழைத்துச் சாப்பாடு இரண்டு மணிக்கு வரும் என்றார்.
இதற்கு நடுவில் தம்பி வீட்டில் ஏற்கெனவே படிகள் வரை வந்திருந்த தண்ணீர் முதல் தளத்துக்கு வரலாமானு யோசிப்பதைப் பார்த்துட்டு அவங்க நான்கு பேரும் கூடிப் பேசி இப்போதைக்கு வீட்டைக் காலி செய்து கொண்டு கல்யாணத்துக்கு வேண்டிய முக்கிய சாமான்களோடு கல்யாண மஹாலுக்கு எதிரே இருக்கும் ஓட்டலில் போய்த் தங்கிடலாம்னு முடிவு செய்துட்டுத் தேவையான பொருட்களைச் சேகரம் செய்து கட்டி எடுத்துப் போக வசதியாகத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தனர். இவற்றுக்கு நடுவே தான் தொலைபேசி அழைப்புக்களும். அதோடு தம்பி நாங்க என்னதான் விடுதியில் உள்ளே நீர் வரலைனு இருந்தாலும் மின்சாரம் இல்லாததாலும் ஓட்டல்கள் எதுவும் இல்லை என்பதாலும் செம்பரம்பாக்கம் திறந்தாச்சு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டிருந்தது என்பதாலும் எங்களையும் ஓட்டலுக்கே அழைத்துச் செல்லப் போவதாகச் சொல்லி இருந்தார். ஆகவே எங்களை எப்போ வேண்டுமானாலும் கிளம்பத் தயாராக இருக்கச் சொன்னார்.
Saturday, November 13, 2021
ஒன்றும் பிரச்னை இல்லை!
அது வரை பெய்த மழையால் ஓரளவுக்குத் தண்ணீர் தேங்கி இருந்தாலும் வண்டிகள் வரவோ/போகவோஎந்தவிதமான பிரச்னையும் இல்லை. அதோடு விட்டு விட்டுத்தான் பெய்து கொண்டிருந்தது. தம்பி வீட்டில் நாங்கள் நுழைந்தபோது வைதிகர்கள் அப்போது தான் சமாராதனை வழிபாடுகளை முடித்துவிட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இது 2015 ஆம் ஆண்டில் எங்க வீட்டில் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்ற சமாராதனைப் படம்.
ஆகவே நாங்கள் சாப்பிட இன்னும் நேரம் எடுக்கும். அங்கேயே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம். ஶ்ரீராமுக்குத் தொலைபேசலாமா என நினைத்து ரங்க்ஸைக் கேட்டப்போ "யோசிச்சுக்கோ!" என்றார். ஏனெனில் ஶ்ரீராம் அதற்கு முதல் வாரம் தான் 2,3 நாட்கள் காய்ச்சலில் படுத்துவிட்டு எழுந்திருந்திருக்கிறார். அவரை இந்த மழையில் அலைக்கழிக்கலாமா என்பது ஒரு யோசனை. அதோடு அவர் இருக்கும் இடமும் மாம்பலத்தில் இருந்து தூரமாகவே இருக்கிறது. என்னதான் ஆட்டோவில் வந்தாலும் இந்த மழைக்காலத்தில் வருவதற்கும் போவதற்குமே இரண்டு மணி நேரம் எடுத்து விடும். அதோடு மழை பிடித்துக் கொண்டால் மீண்டும் அவருக்கு உடம்பு வந்துட்டால் என்ன செய்வது? ஆகவே பார்த்துக்கலாம் நாளைக்கு என முடிவெடுத்துக் கூப்பிடவே இல்லை.
அந்தக் காலத்து வெங்கடாசலபதி இப்படித் தான் இருப்பார். நாமம் நெற்றியை முழுக்க மறைக்க ஆரம்பித்தது பின்னாட்களில் தான். அப்பா வீட்டிலும் இதே போன்ற வெங்கடாசலபதி படம் தான் சமாராதனைகளுக்கு.
பிறகு அங்கே சாப்பிடும்போதே தி.நகரில் நாங்கள் சந்திக்க இருந்தவர்கள் வாட்சப் மூலம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே சாப்பிட்டு முடித்த உடனே சுமார் மூன்று மணி அளவில் தி.நகர் கிளம்பினோம். என் அண்ணா பையரும் தம்பியின் மூத்த பையரும் வங்கிக்கு வேலையாகச் சென்றிருந்தார்கள். வெகு நேரம் ஆகியும் அவர்கள் வரவில்லையே என வீட்டில் அனைவரும் கவலைப்படுகையில் நாங்கள் கிளம்பி வாசலுக்கு வரவும், அவங்க கார் வரவும் சரியாக இருந்தது. ஆட்டோ பிடித்துக் கொடுக்க வந்த அண்ணாவின் மருமகள் அத்தை,அத்திம்பேரைத் தி/நகரில் விட்டுவிட்டு வரும்படி தன் கணவனுக்கு உத்தரவு போட அவரும் அதை உடனடியாக மறுப்பே சொல்லாமல் ஏற்றுக் கொண்டார். வழிகாட்டியாகத் தம்பியின் மூத்த பிள்ளையும் ஏறிக்கொள்ளச் சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுற்றித் தி.நகருக்கு நாங்கள் போக வேண்டிய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதெல்லாம் துரைசாமி சுரங்கப்பாதை வழியாகவே சென்றோம். மாட்லி சாலை வழியாகச் சென்றால் கிட்டக்க என்றாலும் அங்கே பாலங்கள் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்ததால் அந்த வழியை ஏற்கெனவே அடைத்து வைத்திருந்தார்கள்.
தி.நகரில் நாங்கள் சென்ற வேலை முடிய ஆறரை மணிக்கு மேல் ஆகி விட்டது. அங்கே எங்களைச் சந்திக்க வந்திருந்த என் நாத்தனார் பெண் ஶ்ரீவித்யா வீரராகவன் (பிரதமரால் பாராட்டுப் பெற்றவர்) மற்றும் அவள் கணவர் இருவரும் அவர்கள் காரில் எங்களைத் தங்குமிடத்தில் கொண்டு போய் விட்டார்கள். சரிதான் இன்று நல்ல வாகன யோகம் என்றே பேசிக் கொண்டோம். இரவு உணவுக்காக தோசைகளை வார்த்துச் சட்னி/சாம்பாருடன் அனுப்புவதாகத் தம்பி மனைவி சொல்லி இருந்தார். கொஞ்சம் யோசிச்சாலும் காலை நான்கு மணிக்கு முன்னால் எழுந்திருந்து சென்னை வரை செய்த கார்ப்பயணம் அதன் பிறகு ஓய்வே இல்லாமல் அலைந்தது எல்லாம் சேர்ந்து எங்களுக்குச் சிரமம் ஜாஸ்தியாக இருந்ததால் வெளியே சாப்பிட ஓட்டலைத் தேடிச் செல்ல வேண்டாம், நாளைக்குப் பார்த்துக்கலாம் என்று தம்பி மனைவி சொன்னதுக்கு ஒத்துக்கொண்டோம். சுமார் ஏழரை மணி அளவில் இரவு உணவை எடுத்துக் கொண்டு தம்பியின் பெரிய பிள்ளை வந்தார். அவரிடம் சாப்பிட்டுவிட்டுப் பாத்திரங்களைக் கொடுத்துவிடுவதாகவும் சற்றுக் காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டுச் சாப்பிட்டோம். அவர் காலை உணவுக்கு என்ன வேண்டும் என்று கேட்க நாளைக்குச் சாப்பாடெல்லாம் கொண்டு வர வேண்டாம். இங்கேயே பார்த்துக்கறோம். காமேஸ்வரி மெஸ், ஸ்டேஷன் ரோடில் ஒரு மாமி கொடுக்கும் மதிய உணவை வாங்கிக்கறோம். அதுக்காகக் காரியர் எல்லாம் கொண்டு வந்திருக்கோம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் நாளை நடக்கப் போவது என்னனு அந்த ஈசனுக்குத் தானே தெரியும்.
விடுதியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தாலும் அதை ரீ சார்ஜ் செய்யவில்லை. சில ஓட்டல்களில் கூட இம்மாதிரி வைப்பார்கள். நாமே பணம் கட்டி ரீ சார்ஜ் செய்துக்கணும். அது போல இங்கேயும் வைச்சிருப்பாங்க போல. அநாவசியமாக இரண்டு நாட்களுக்காக எதுக்கு ரீ சார்ஜ் செய்துக்கணும்னு விட்டுட்டோம். தம்பி பையரும் தொலைக்காட்சிப் பெட்டியை ஆராய்ந்து விட்டு நாம் தான் ரீ சார்ஜ் செய்துக்கணும் போல என்றார். ஆகவே எட்டு/எட்டரைக்கெல்லாம் போய்ப் படுத்துட்டோம். அசதியில் இருவருமே நன்றாய்த் தூங்கி விட்டோம். சுமார் பதினோரு /பனிரண்டு மணி அளவில் பெரிய சப்தம். கடமுடா/கடமுடானு எல்லாம் இல்லை. அண்டமே விழுந்து விட்டது போல் தோன்றியது.
Friday, November 12, 2021
மலை ஏற்றத்தில் ஜெயிச்சேன்.!
தம்பியின் இரண்டாவது மகனுக்கு ஏப்ரலில் திருமணம் நிச்சயமானது. அப்போவே நவம்பரில் கல்யாணம் என முடிவு செய்திருந்தார்கள். எனக்கு என்னமோ ஆரம்பத்தில் இருந்தே அது நல்ல மழைக்காலமே எனத் தோன்றியது. தம்பியிடம் சொல்லி ஜூலை, ஆகஸ்ட், செப்டெம்பருக்குள் திருமணத்தை முடிக்குமாறு சொன்னேன். ஆனால் முடியலை. அதோடு அப்போது என் உடல்நிலையும் மோசமாக இருந்ததால் எல்லோருக்குமே அப்போத் திருமணத்தை வைத்திருந்தால் என்னால் கலந்துக்க முடியுமானு யோசிச்சாங்க. ஆகவே நவம்பரில் தான் திருமணம் என்பது உறுதி ஆகிவிட்டது. இருந்தாலும் செப்டெம்பர் வரை என் உடல்நிலை பூரண குணம் அடையாததால் கல்யாணத்திற்குப் போக முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து இறைவன் அருளால் நான் ஓரளவுக்கு நடமாடவும் வீட்டு வேலைகளைக் கவனிக்கவும் ஆரம்பித்தேன்.
முதலில் தீபாவளி அன்றே சென்னை கிளம்பும்படி இருந்தது. ஆகவே அதற்கேற்றாற்போல் திட்டம் போட்டுக் கொண்டோம். தம்பி வீட்டில் தங்குவதற்கான வசதிகள் இல்லை. வீடு சின்னது. இருப்பது ஒரு கட்டில். கல்யாண சமயம் என்பதால் அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கும். அந்தச் சமயம் போய் நம்மையும் அவங்களே கவனிக்குமாறு உட்கார வேண்டாம் என்பதால் என் மைத்துனர் மூலம் அவர் அலுவலகத்தின் ஹாலிடே ஹோம்(உண்மையில் அது செர்வீஸ் அபார்ட்மென்ட்) ஏற்பாடு செய்து விட்டார். அதுவும் தம்பி வீட்டருகேயே ஒரு கிலோ மீட்டருக்குள் இருந்ததால் போய்வரவும் வசதியாக இருக்கும் என்று அதையே உறுதி செய்து கொண்டு தம்பிக்கும் தெரிவித்தோம்.
எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. ஆறாம் தேதி சனிக்கிழமை கிளம்புவதாகத் திட்டம். வெள்ளியன்றே வழியில் சாப்பிடுவதற்கான காலை உணவைத் தயார் செய்து கொண்டோம். மதியம் சாப்பிடத் தம்பி வீட்டிற்குப் போயிடலாம். அதோடு அன்று தான் வெங்கடாசலபதி சமாராதனை வைத்திருந்தார்கள். திங்களன்று சுமங்கலிப் பிரார்த்தனை. அப்போதே மழை சென்னையில் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுதும் ஆரம்பித்து விட்டது. என்றாலும் யாரும் இவ்வளவெல்லாம் மோசமாக ஆகும்னு நினைக்கவில்லை போல. ஆனால் இங்கிருந்து நாங்கள் கிளம்புகையில் எங்கள் குடியிருப்பு வளாகத்தில் எங்கள் தளத்தில் எங்களுடன் இருக்கும் அண்டை வீட்டார் என் உடல் நிலை குறித்து ரொம்பவே கவலையைத் தெரிவித்தார்கள். அதோடு மழையும் சேர்ந்து கொள்ளவே அனைவருக்கும் கவலை தான். பார்த்துப் போங்க,பார்த்துப் போங்க என்று திரும்பத் திரும்பச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் வீட்டு வேலைகளில் உதவும் பெண்ணுக்கும் கவலை. "மாமி! பத்திரமா இருங்க. கையில் ஸ்டிக் இல்லாமல் நடக்காதீங்க. மழைத்தரையில் பார்த்துக் காலை வைங்க. மேடு, பள்ளம் தெரியாமல் போயிடும்." என்றெல்லாம் சொல்லி எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.
நாங்க சென்னைக்குக் கிளம்புவது உறுதியானதுமே ஶ்ரீராமிற்கு வாட்சப் மூலம் தகவல் தெரிவித்தேன். நாங்கள் சனிக்கிழமை காலையே வரப் போவதால் அன்று மாலையோ அல்லது மறுநாள் ஞாயிறன்றோ பார்க்கலாம் எனச் சொன்னேன். என்னால் அவங்க குடியிருப்புக்குப் போக முடியாது. அது இருப்பது இரண்டாம் தளம் என்பதோடு லிஃப்ட் வசதி எல்லாம் இல்லை/ ஆகவே தான் அவரை வரச் சொன்னேன். கூடவே அவரோட பாஸையும் அழைத்து வருமாறு சொல்லி இருந்தேன். ஏன்னா ஶ்ரீராமை எனக்கு அடையாளம் தெரியணும் இல்ல? அதான்! எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது. நாங்கள் சர்வீஸ் அபார்ட்மென்டை அடைந்ததுமே ஶ்ரீராமுக்குத் தொலைபேசித் தகவல் தெரிவித்து ஞாயிறன்று வரும்படி சொல்லணும்னு முடிவு செய்து கொண்டேன். ஏனெனில் திடீரென சனிக்கிழமை தி.நகரில் ஒரு முக்கிய வேலை வந்து விட்டது. சனிக்கிழமை காலை ஐந்தரை மணியிலிருந்து ஆறுக்குள் கிளம்ப முடிவு செய்து கொண்டு Drop Taxi க்குத் தொலைபேசியில் நாங்கள் சென்னை செல்வதற்காக வண்டியை முன்பதிவு செய்து கொண்டோம். விமானத்தில் போனால் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்கே இருக்கும்/கிடைக்கும் டாக்சியை புக் செய்து கொண்டு தம்பி வீட்டிற்கூ மேற்கு மாம்பலம் வரணும். அதோடு இல்லாமல் இப்போதெல்லாம் விமானப் பயணச்சீட்டின் விலையை அதிகரித்து விட்டார்கள். ஒருத்தருக்கேப் பத்தாயிரம் ஆகும்போல! ஆகவே விமானத்தைத் தவிர்த்து விட்டோம்.
ரயில், பேருந்து எல்லாம் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. ரயில் எனில் திருச்சியில் நான்கு அல்லது ஆறாவது நடை மேடை. ஶ்ரீரங்கத்தில் முதல் நடைமேடை என்றாலும் ரயில் நிற்கும் 2 நிமிடங்களுக்குள்ளாக சாமான்களையும் தூக்கிக் கொண்டு ஏறணும். அப்படித்தான் போய்க் கொண்டிருந்தோம். ஆனால் இரண்டு வருஷங்களாகவே அப்படிப் போவதில்லை. இரண்டு பேருக்கும் சாமான்களைத் தூக்கிக் கொண்டு அந்த நடைமேடை முழுவதும் நடந்து சென்று ரயிலில் ஏறும் அளவுக்குத் தெம்பில்லை. ஶ்ரீரங்கத்தில் போர்ட்டர் என்பவரே இல்லை. திருச்சியில் கூப்பிட்டால் கூட வருவதில்லை. ஆகவே காரில் செல்வதே நல்லது என்று முடிவு செய்தோம். சனிக்கிழமை காலை எழுந்து குளித்துக் காஃபி குடித்துத் தயார் ஆனோம். வண்டியும் நேரத்தில் வந்து விட்டது. இங்கேயே அம்மா மண்டபம் சாலையில் இருக்கும் நம்ம ஃபேவரிட் பிள்ளையாருக்கு ஒரு சிதறு காய் போட்டு விட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
வழியில் கார் செல்லும்போதே காலை உணவை முடித்துக் கொண்டு கொண்டு சென்றிருந்த காஃபியையும் குடித்தோம். ஓட்டுநருக்குக் காலை உணவுக்காகப் பணம் கொடுத்துச் சாப்பிடச் சொல்லி விட்டோம். அவ்ர் சாப்பிட்டு வந்ததும் எங்குமே நிற்காமல் வண்டி சென்றது. நடுவில் ஒரே ஒரு முறை கழிவறை செல்வதற்காக ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தினார். அவ்வளவே. அச்சரபாக்கம் வரை ஆங்காங்கே தூற்றல் தான். அச்சரபாக்கத்தில் இருந்து போக்குவரத்தும் அதிகம். மழையும் பெய்து கொண்டிருந்தது. ஓட்டுநரும் அலைபேசியில் பேசிக் கொண்டே வந்தார். ஆகவே பத்து மணிக்கு அச்சரபாக்கத்தை அடைந்தாலும் மாம்பலம் போய்ச் சேரப் பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அங்கே போய் துரைசாமி சுரங்கப்பாதை அருகே இருந்த வெங்கடாசலம் தெருவில் உள்ள நாங்கள் தங்க வேண்டிய சர்வீஸ் அபார்ட்மென்டைக் கண்டுபிடித்தோம். நல்லவேளையாகத் தெரு முனையிலேயே இருந்தது. உள்ளே போனோம். நன்கு சுத்தம் செய்து வைத்திருந்தார்கள். படுக்கைகளுக்கெல்லாம் புதிய விரிப்புகள் போடப்பட்டு நன்றாகவே இருந்தது. பெரிய சமையலறை. அங்கேயும் அநேகமாக அடுப்பைத் தவிர்த்து, மளிகை சாமான்களைத் தவிர்த்து எல்லாப் பொருட்களும் இருந்தன.
நாங்கள் கொண்டு போயிருந்த இன்டக்ஷன் ஸ்டவை அங்கே பொருத்தி வேலை செய்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டு மற்றச் சாமான்களையும் வைத்துவிட்டுத் தம்பிக்கு நாங்கள் வருவதைத் தொலைபேசிச் சொல்லலாம் எனில் அவங்க எல்லோருமே பூஜையில் மும்முரம் போல! சரினு ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு தம்பி வீட்டுக்குச் சென்றோம். அவர் இருப்பது முதல் மாடி. சுமார் 20 படிகள். நடுவில் வேறே சில,பல படிகள். எல்லாவற்றையும் எப்படி ஏறப் போகிறேனோ என்று எல்லோரும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆட்டோ போனதுமே வாசலில் பேசிக் கொண்டிருந்த தம்பி பையர்/கல்யாண மாப்பிள்ளை பார்த்துட்டுச் சாமான்களை வாங்கிக் கொண்டு மேலே போய்த் தெரிவித்தார். மேல் படியில் தம்பியின் பெரிய பிள்ளை, நடுவில் லான்டிங்கில் தம்பி, பின்னால் நம்ம ரங்க்ஸ் என நின்று கொண்டு என்னைக் கண்காணித்தார்கள். ஹிஹிஹி! எல்லோருக்கும் பயம்! விழுந்துடப் போறேனேனு. வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருந்தார்கள். இதுக்குள்ளே நம்மவர் படிகளில் நடுவில் காலை வை. ஓரத்தில் வைக்காதே என்றெல்லாம் நான் வாழ்க்கையிலேயே முதல் முதல் மாடி ஏறப்போவதாக நினைத்துக்கொண்டு சொல்லிக் கொடுத்தார். மெதுவாகப் படிகளில் ஏறினேன். இதுக்குள்ளே மேலே இருந்து யாரோ பிடிச்சுக்கோ என்று சொல்ல, நான் கடுமையாக மறுக்க ஒரு வழியாக அரை மணி நேரத்திற்குள்ளாக எல்லாப் படிகளையும் ஏறி விட்டேன். கயிலை யாத்திரையிலோ, அஹோபிலம் சென்றபோதே அல்லது கிஷ்கிந்தாவிலோ கூட இத்தனை சந்தோஷம் அடைந்ததில்லை. ஏனெனில் அதெல்லாம் மிகக் கடுமையான மலை ஏற்றம். இங்கே கயிலையை விட மோசமான மலை ஏற்றம் என நினைத்துக் கொண்டு அப்பாடா! ஜெயிச்சுட்டோம் என நினைத்த வண்ணம் வீட்டுக்குள்ளே போனோம்.
Friday, November 05, 2021
ஜெய் பீம் அண்ணாத்தே! :)
ஹாஹாஹா, நான் தான் திரை அரங்கிற்குப் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேனாக்கும்னு நினைச்சீங்கன்னா இஃகி,இஃகி,இஃகி/ அதெல்லாம் இல்லை. சிலர்/பலரின் விமரிசனங்களைப் பார்த்ததின் விளைவு இந்தப் பதிவு. தினமலர் தினசரியில் "ஜெய்பீம்" நன்றாக இருப்பதாக விமரிசனம் எழுதி இருந்தாங்க. ஆனால் பெரும்பாலோர் அதில் உள்ள குற்றம்/குறைகளைச் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.முக்கியமாய் எந்த இருளர் சமூகத்தை வைத்துப் படம் எடுக்கப்பட்டிருக்கோ அந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவரே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அது ஒரு பக்கம் இருக்கப் படத்திலும் ஏகப்பட்ட குறைகள் என்று சொல்கின்றனர். ஹிந்தி எதிர்ப்பும், இந்துக்கள் மேல் குற்றம் சாட்டுதலுமே திரைப்படத்தின் முக்கியக் கரு என்றும் சொல்கின்றனர். ஆனால் இதே படத்தை ஹிந்தியிலும் வெளியிட்டிருப்பது தான் மிக முக்கியமான ஒன்று. ஒரு இடத்தில் வடநாட்டுக்காரர் ஒருவர் தமிழகப் போலீஸ் அதிகாரியிடம் ஹிந்தியில் பேச, "தமிழில் பேசுய்யா!" என அந்தப் போலீஸ்காரர் சொல்கிறாராம். தெலுங்குப் பதிப்பிலும் "தெலுங்கில் பேசுய்யா" என்றே வருகிறதாம். ஆனால் ஹிந்திப் பதிப்பில் "உண்மையைப் பேசுய்யா" என அதே போலீஸ் அதிகாரி சொல்வதாய்க் காட்டி இருக்காங்களாம். அங்கே வடக்கே போய் ஹிந்தியை வேண்டாம்னு எப்பூடிச் சொல்லுவாங்க!
அதிலே வரும் ஒரு போலீஸ் அதிகாரி முக்கியமான வில்லன். நிஜத்தில் அவர் சார்ந்திருக்கும் மதம் வேறே. ஆனால் திரைப்படத்தில் அவர் பெயரை "குருமூர்த்தி" என்று மாற்றி அவரை வன்னியராகவும் காட்டுகிறார்களாம். சிவ பக்தராக இருக்கும் ஒருவரைக் (இருளர்கள் சிவபக்தர்கள். சிவனின் நேரடி வாரிசுகளாகச் சொல்லிக்கொள்வார்கள்.) கோமாளியாகவும் சித்திரித்து, "ஓம் நம சிவாய" என்னும் பஞ்சாக்ஷரத்தையும் கேலி செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைப் போல் பல்வேறு விதமான அடிப்படைத் தவறுகள். ஒரு கோடி நன்கொடை கொடுத்திருப்பதின் பின்னணியும் வருமான வரி விலக்கிற்காக என்று சொல்கின்றனர். எது நிஜம் என்பது தெரியவில்லை. ஆனால் வக்கீலாக நடித்திருக்கும் சூர்யா "கௌரவம்" ஜிவாஜி போலும் இல்லாமல் (ஜிவாஜி ரசிகர்கள் கவனிக்க) விதி "சுஜாதா" போலவும் இல்லாமல் அவர்களை விட நன்றாக நடித்திருக்கிறாராம். மிகவும் இயல்பாக இருக்கிறதாம். இஃகி,இஃகி,இஃகி!
அடுத்து அண்ணாத்தே! "பாசமலர்" படத்தின் உல்டா என்கின்றனர். அதையே இன்னமும் பார்த்த பாடில்லை. அண்ணாத்தேயை எல்லாம் எப்போப் பார்ப்பது! ஆனால் இதில் கொஞ்சம் கலாசாரத்திற்கு எதிராக வசனங்கள் வருகின்றன என்கிறார்கள். கணவனோடு வாழ்வதைப் பிடிக்கலைனா இன்னொருத்தரைத்தொடர்பு கொள்ளலாம் என்பதை நியாயப்படுத்தும்படியான வசனங்கள் வருவதாய்ச் சொல்கின்றனர். கலாசாரக் காவலர் என்று அறியப்படும் ரஜினியின் படத்திலா இப்படி? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ. கவனித்த வரையில் அண்ணாத்தே படத்தைப் பற்றி யாரும் நன்றாக இருப்பதாகச் சொல்லவில்லை. :(
இதுக்குக் கருத்துச் சொல்றவங்கல்லாம் அவங்க அவங்க கருத்தைச் சொல்லி வைங்க! நான் மெதுவா வந்து பார்த்துட்டு பதில் கொடுக்கிறேன். நன்றி. வணக்கம். :))))))