எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 25, 2021

தியாகராஜனும், ரங்கராஜனும்!

திருவாரூர் தியாகராஜர். ரொம்ப ஆவலோடு உச்சிகால பூஜை பார்க்கச் சென்றிருந்தோம். ஆனால் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. :( 


இப்போ நடந்த வைகுண்ட ஏகாதசித் திருவிழாவின் ஒரு நிகழ்வான "திருக்கைத்தலச் சேவை!" வீடியோவாகவும் வந்தது. நம்பெருமாளை பட்டர்கள் தூக்கிக்கொண்டு  லயத்தோடு ஆடியபடியே இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பிக் காட்டுகின்றனர்.  பக்தர்கள் பரவசம் அடைந்து "ரங்கா! ரங்கா!" எனக்கூவுகின்றனர். இதை எல்லாம் பார்க்கும் நம்பெருமாள் சிரித்துக்கொள்கிறான். அவனோட வழக்கமான குமிண் சிரிப்பு. உள்ளடக்கிய சிரிப்பு. உதடுகளை மடித்துக்கொண்டு உள்ளுக்குள் சிரிக்கும் சிரிப்பு.  படம்/வீடியோ வாட்சப்பில் வந்தது. வீடியோ அப்லோட் பண்ண முடியலை. பார்ப்போம்.
 


புதன்கிழமை அன்று பையர் குடும்பத்தோடு நாங்கள் இருவரும் குலதெய்வம் கோயிலுக்குச் சென்றிருந்தோம். மார்கழி மாதம் என்பதால் மாவிளக்குப்போடவில்லை. அம்பிகைக்கு அபிஷேஹம்செய்து குழந்தை கையால் மணி வாங்கிக் கோயிலுக்குக் கொடுத்தோம். 2019/20 ஆம் ஆண்டில் நாங்கள் சென்றிருந்த போது குழந்தை முழு வாக்கியமாகப் பேசவில்லை. ஆனால் ரைம்ஸ் எல்லாம் சொல்லுவாள். பாடல்கள் பாடுவாள். தன்னைத் தொட்டுக் கொண்டு "மீ துர்கா" என்பாள். என்றாலும் சகஜமான உரையாடல் இல்லையே என வருத்தமாக இருந்தது. ஆகவே குலதெய்வமான மாரியம்மனிடம் விண்ணப்பம் வைத்திருந்தோம். அதை இப்போது நிறைவேற்றினோம். 

இம்முறை முதலில் கருவேலி சென்றுவிட்டோம். ஏனெனில் தனுர் மாதம் என்பதால் கோயில் பதினோரு மணிக்கே மூடி விடுவார்கள். அங்கே தரிசனம் முடித்துக் கொண்டு பின்னர் பரவாக்கரை பெருமாளைப் பார்த்துவிட்டு அங்கே இருந்து கடைசியாக மாரியம்மன் கோயிலுக்குச் சென்றோம். அங்கே அபிஷேஹம், ஆராதனைகளை முடித்துக்கொண்டு கிளம்ப மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. எல்லா இடங்களிலும் முடிந்த வரை இம்முறை படம் எடுத்தேன். வரும் வழியில் வயல்களை எல்லாம் கூட எடுக்க முயன்றேன். வண்டி விரைவாகச் சென்றதால் ஓரளவு தான் வந்திருக்கின்றன. ஆனால் நல்ல வளப்பமாக உள்ளன நெல் வயல்கள். என்றாலும் பரவாக்கரையில் உளுந்து, பயறு போட்டதில் மழையினால் பெரும் நஷ்டம் என்று சொல்கின்றனர்.  ஆனால் நெல் பிழைத்துவிட்டது என்றே நினைக்கிறேன். 

படங்களைத் தொகுக்கவில்லை. ஆகவே இரண்டொரு நாட்களில் போடுவேன். 

18 comments:

  1. குலதெய்வம் கோவிலுக்கு மகன் குடும்பத்தினருடன் சென்று வந்தது மகிழ்ச்சியாக இருக்கும். படங்கள் பின்பு போடுங்கள்.
    உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மாதேவி, படங்களைத் தரவிறக்கி வைக்க நேரம் கிடைக்கவில்லை. :(

      Delete
  2. அன்பின் கீதாமா,
    நலமுடன் இருங்கள்.
    மகன் குடும்பத்துடன் குலதெய்வம் கோவில் சென்றது அருமை. குழந்தை
    தெய்வ அருள் கூடி இனிமையாகப் பேசுவாள்.

    சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் அருள் கூடி வரும்.
    நல்ல படங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ரொம்ப நாள் கழிச்சுப் பார்க்கிறாப்போல் இருக்கு உங்களை! குழந்தை இப்போது நன்கு பேசுகிறாள்.

      Delete
  3. பையர் குடும்பத்தோடு சென்று, குகு வின் கையால் மணி வாங்கிக் கோயிலுக்குக் கொடுத்தது எல்லாம் குலதெய்வத்தின் ஆசியால் நன்றாக நடந்தது மகிழ்ச்சி.

    படங்களை எதிர்பார்க்கிறோம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தி/கீதா! கீ போர்ட் வேறே பிரச்னை! :))))

      Delete
  4. என்ன ஏமாற்றம் தியாகராஜர் உச்சிக்கால பூஜையின் போது? சொல்லவில்லையே கீதாக்கா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சில வருடங்கள் முன்னர் போயிட்டு வந்ததுமே சொல்லி இருக்கேனே வலைப்பதிவில். நீங்க அப்போல்லாம் எழுதவே ஆரம்பிக்கலைனு நினைக்கிறேன்.

      Delete
    2. https://aanmiga-payanam.blogspot.com/2010/04/blog-post.html என்னோட ஆன்மிகப் பயணம் வலைப்பக்கம் பற்றி நீங்கள் அதிகம் அறிந்ததில்லை. ஆகவே இம்முறை அங்கே போய்ப் படியுங்கள். திருவாரூர் பற்றிச் சுமார் நாலைந்து பதிவுகள் பார்க்கலாம். இந்தப் பதிவு தான் நான் ஏமாற்றம் அடைந்த பதிவு.

      Delete
  5. வணக்கம் சகோதரி

    நலமா? தங்கள் பேத்தி எப்படியிருக்கிறாள்? உங்கள் குட்டி குஞ்சுலுவுடன் நன்றாக பொழுது போகிறதா.? குழந்தையுடன் கூடி களித்து சந்தோஷமாக இருங்கள்.

    திருவாரூர் தியாகராஜர் படம் அழகாக உள்ளது. தேவேந்திரனின் ஆயிரம் கண் கூட படத்தில் தெளிவாக பார்த்து வரையப்பட்டுள்ளது.

    ஸ்ரீரங்கநாதர் ரங்கராஜனின் வீடியோ கிடைத்தால் அவசியம் பகிருங்கள். தற்சமயம் நீங்கள் கூறியவற்றை மானசீகமாக மனக்கண்ணில் கண்டு ஆனந்தம் அடைந்தேன்.

    நீங்கள் அனைவரும் குடும்பத்துடன் குலதெய்வ வழிபாட்டுக்குச் சென்று, பிரார்த்தனையை நிறைவேற்றி வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எடுத்த படங்களை பகிருங்கள். உங்களுக்கும், மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வரும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். பிறக்கப் போகும் 2022 நல்ல பலன்களை தந்து உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, வழக்கம் போல் உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துப் பாராட்டியதற்கு நன்றி. ரங்கநாதரின் வீடியோ எப்போவோ வந்து விட்டாலும் என்னால் அப்லோட் பண்ண முடியலை. :(

      Delete
  6. திருவாரூர்க் கோவிலை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கும்...   எம்மாம்பெரிய கோவில்.. !  இன்னும் நான் அந்தக் கோவிலை நிறுத்தி நிதானமாக சுற்றி பார்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் ஶ்ரீராம்.மாமாவுக்குச் சொந்தக்காரங்க இருந்ததால் கல்யாணம் ஆனப்போவே அங்கே போயிருக்கோம். ஆனால் அப்போல்லாம் நின்னு நிதானமாப் பார்க்கக் கொஞ்சம் இல்ல்ல்ல்ல்ல்லை நிறையவே பயம். மாமாவும் விரட்டிக்கொண்டு வந்துடுவார். அதன் பின்னரும் ஒரு முறை போனப்போவும் குழந்தைகளோடு போனதால் அதிகமாய்ச் சுத்த முடியலை. கடைசியாய்ப் போனப்போத்தான் நிதானமாய்ப் பார்த்தோம். நான் வேறே சிதம்பர ரகசியம் எழுதி இருந்தேனா! அதன் பாதிப்பும் கூட!

      Delete
  7. கு கு வுக்கான வேண்டுதல் நிறைவேற்றியது மகிழ்ச்சி.  மார்கழியில் மாவிளக்கு போடக்கூடாதா?  பெய்த பெருமழையால் எல்லா இடங்களும் பசுமையாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், மார்கழியில் முழுக்க முழுக்க பகவன் நாமாவையே சிந்தித்தாலும் மாவிளக்கு போன்றவை போடக் கூடாது. அதே போல் புரட்டாசியில் போட்டால் அது பெருமாளுக்கானது என்பார்கள். சுமங்கலிப் பிரார்த்தனை போன்றவையும் புரட்டாசி, ஐப்பசியில் செய்ய மாட்டார்கள். ஐப்பசியில் சுமங்கலிப் பிரார்த்தனை பண்ணினால் அது "காவிரிப் பொண்டுகள்" என்பார்கள். கார்த்திகை, தை, மாசி, சித்திரை, வைகாசி மாதங்கள் இதற்கு விசேஷமானவை. வீடு மாற்றுதல், கிரஹப்ரவேசம் போன்றவை கார்த்திகையில் செய்தால் சிறப்பு.

      Delete
  8. ஓடும் வண்டியிலிருந்து படமெடுத்தால் பிரிண்ட் ஆனவுடன் கையால் அழித்து விட்டது பல கலங்கலாக இருக்கும் பெரும்பாலான படங்கள்!  ஆனாலும் நீங்கள் நிறைய படங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எல்லாவற்றையும் அப்லோட் செய்து விட்டு எவை நன்றாக உள்ளனவோ (கொஞ்சமானும் பார்க்கும்படி) அவற்றைப் போடலாம் என்று எண்ணம். உட்காரத்தான் நேரம் இல்லை.

      Delete
  9. பயணம் மிக அருமையாக அமைந்து இருக்கிறது.
    மகன் அடுத்த முறை வரும் போது குலதெய்வ வழிபாடு செய்ய இறைவன் அருள்புரிய வேண்டும்.
    பேத்தி கையால் மணி கட்டி வந்தது மகிழ்ச்சி. இறைவன் அருளால் குழந்தை துர்கா நன்கு பேசுவது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள் துர்காவிற்கு.

    ReplyDelete