எச்சரிக்கை
Have a great day.
Friday, May 28, 2021
வெங்காய சாம்பார் சாப்பிட்ட கதை!
Thursday, May 20, 2021
இந்திய நாடு என் நாடு!
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரமே இல்லை. ஹிட்லர் ஆட்சி. இது அனைவரும் சொல்லுவது/சொல்லிக்கொண்டு இருப்பதும் கூட. ஆனால் பிரதமரை எப்படி வேண்டுமானாலும் கேவலமாகப் பேசலாம். டிவிட்டர், முகநூல் போன்ற பொதுவெளியில் அவமானம் செய்யலாம். கொரோனாவைக் கொண்டு வந்ததே பிரதமர் தான் என்றும் இன்னமும் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவர முடியாமல் திணறுகிறார் என்றும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்/சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். என்றாலும் இதைச் செய்பவர்கள் தங்களுக்குச் சுதந்திரமே இல்லை என்றே சொல்லுவார்கள். சுதந்திரம் இல்லாதபோதே இப்படி எல்லாம் செய்யறவங்களுக்குச் சுதந்திரமும் கொடுத்துட்டால்? அதிலும் எதிர்க்கட்சிகள்! பிரதமரை அவமானம் செய்வதே தங்கள் கொள்கை என வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடினமான நேரத்தில் அரசுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்னும் எண்ணம் கூட யாரிடமும் இல்லை. ஊடகங்கள் உள்பட!
சிங்கப்பூர்-இந்தியா விமானப் போக்குவரத்தே ஒரு வருஷமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கான "வந்தே பாரத்" திட்டத்தின் விமானங்கள் மட்டும் தேவைக்கேற்பப் பறக்கின்றன. ஆனால் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு இது கூடத் தெரிந்திருக்கவில்லை. இல்லாத விமானங்களுக்கான போக்குவரத்தை நிறுத்தச் சொல்லி ஊடகங்களில் கைகளைக் குவித்துக் கொண்டு கெஞ்சி வேண்டுகோள் விடுக்கிறார். ஏனெனில் பாமர ஜனங்களுக்கு இப்போதிருக்கும் அவசர கால நிலைமையில் இதெல்லாம் மறந்திருக்கும். விமான சேவை இருப்பதால் தானே சொல்லுகிறார் என்றே நினைப்பார்கள். அந்த முதல் அமைச்சர் மக்களிடம் "நான் சொன்னதை மத்திய அரசு கேட்கவில்லை. எனக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவில்லை. சிங்கப்பூர் விமானங்களை அனுமதித்துவிட்டனர். அதனால் தான் கொரோனா பரவி விட்டது!" என்றும் சொல்லிக்கலாமே! தன் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க மற்றவர் மேல் பழி போட்டுடலாமே!
ஒருத்தர் அம்பேரிக்கக் குடிமகன்/சிங்கப்பூர்க் குடிமகன் எனில் அவங்க இந்தியாவில் தேர்தலில் நிற்க முடியாது/ நிற்கவும் கூடாது. ஓட்டுப் போடும் உரிமையும் அவங்களுக்குக் கிடையாது. ஆனால் இந்தியாவின் தேர்தல் கமிஷன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது. சென்ற தேர்தலில்/இடைத்தேர்தல்களில் சிங்கப்பூர்க் குடிமகன் ஒருத்தர் தேர்தலில் நின்றார். இப்போ அமெரிக்கக் குடிமகன் ஒருவர் இந்தியாவில் தேர்தலில் நின்று ஓர் மாநிலத்தின் அமைச்சராக ஆகி விட்டார். அவரால் இந்தியாவின் இறையாண்மையைக் கேலி செய்தும்/பிரதமரைக் கண்டபடி பேசவும் முடியும். யாரும் எதுவும் கேட்டுக்க மாட்டாங்க. இதை எல்லாம் தேர்தல் கமிஷனோ மத்திய அரசோ கண்டுக்கறதே இல்லை. அப்படி இருந்தும் இந்த அரசை/மத்திய அரசை ஹிட்லரின் ஆட்சி என்றே சொல்லுவாங்க.
இப்போது பரவிக்கொண்டிருக்கும் இரண்டாம் அலை மத்திய அரசின் அலட்சியப் போக்கால் பரவுகிறது என்கிறார்கள். சரி! அப்படியே இருக்கட்டும். மக்கள் எப்படி இருந்தார்கள்? இப்போது ஊரடங்கில் மட்டும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களா எனில் இல்லையே! ஒரு மீன் வாங்கவும்/இறைச்சி வாங்கவும் தேர்த்திருவிழாவுக்குக் கூடும் கூட்டம் போல் இருந்தால்? அதுவும் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல்! கொரோனா பரவாமல் என்ன செய்யும்? அரசு கண்டிப்பைக் காட்டினால் மட்டும் மக்கள் அடங்கவா செய்கிறார்கள்? அதான் உரிமை இல்லை, சுதந்திரம் இல்லை என்று அடங்க மறுக்கிறார்களே! ஹிட்லர் ஆட்சி என்கிறார்களே! பின்னே ஒரு அரசு என்னதான் செய்யமுடியும்? யாருமே மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொள்கிறார்களா? இல்லையே!
130கோடி மக்கள் தொகை எனத் தெரிந்து/ ஆனால் தெரியாமல் 150 கோடிக்குக் குறையாத மக்கள் உள்ள ஒரு நாட்டில் இதை விட அதிகமாக/அல்லது இதைவிட நன்றாக எந்த அரசால் தேவைகளை நிறைவேற்ற முடியும்? ஒரே சமயத்தில் உத்திரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, தில்லி என ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் இருக்கும் ஆக்சிஜனைப் பகிர்ந்து தானே தரணும். எந்த நோயாளிக்கு முதலில் கொடுக்கணும் என்பதை மருத்துவர் முடிவு செய்துக்கலாம். ஆனால் அதனால் இழப்புகள் நேரிடத்தான் செய்கின்றன/நேரிட்டன. இதுக்கு மத்திய அரசு என்ன செய்ய முடியும்? நீதிமன்றங்கள் அதிகாரிகளையும் அரசையும் கன்னாபின்னாவெனத் திட்டுகிறது! ஒரே சமயத்தில் நாலைந்து மாநிலங்களின் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமெனில் அந்த அதிகாரிகளும் மனிதர்கள் தானே! அவங்களுக்கும் கொரோனா பயம் இருக்காதா? எல்லாவற்றையும் மீறித் தானே அவங்களும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர்? பேசாமல் இந்தக் கொரோனா காலத்து நிர்வாகத்தை நீதிமன்றங்களே ஏற்று நடத்தட்டும்னு விட்டுட்டால் நல்லதோ? போன கொரோனா அலையில் அம்பேரிக்காவில் ஒரு நாளைக்கு நாலாயிரம் பேர் இறந்ததே இதுவரை அதிகபட்சமாக (உலகளவில்) இருந்தது போய் இப்போது இந்தியாவில் நாலாயிரத்துக்கும் அதிகமாக வரவே அனைவரும் அதிலும்அதே அம்பேரிக்காவின் பத்திரிகை உட்பட இந்தியாவைக் கேவலமாய்ப் பேசுவது எந்த வகையில் நியாயம்? அம்பேரிக்காவின் மக்கள் தொகைக்கும்/இந்தியாவின் மக்கள் தொகைக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம். அதோடு அப்போது இத்தாலி, ஜெர்மனி, ப்ரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் தத்தளித்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்த நாடுகளின் எதிர்க்கட்சிகள் அரசோடு சேர்ந்து ஒத்துழைத்தார்கள். இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களைப் போல் அரசைக் கேலியோ/கிண்டலோ செய்யவில்லை. இவங்க ஆட்சியிலே இருந்திருந்தாலும் இப்படித் தானே நடந்திருக்கும்! இந்தச் சமயம் அனைவரும் ஒன்று சேர்ந்து நம் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம். அதை மறக்கக் கூடாது அல்லவா?
இனி வரும் நாட்களில் கொரோனாவின் இழப்பு நாளுக்கு ஐம்பதாயிரம் ஆகும் என்று கணித்திருக்கின்றனர். நினைக்கவே கவலையும் பயமுமாக இருக்கிறது. அந்த அளவுக்கு இழப்பு நேரிடாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒத்துழைத்தால் இதைப் பொய்யாக்கலாம். கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்பாட்டுடன் தகர்த்து எறிந்து விடலாம். அதற்கு ஆவன செய்வோம். அவரவர் அவரவர் மாநில/மத்திய அரசுடன் ஒத்துழைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுதாகக் கடைப்பிடிக்க முயல்வோம்.
Tuesday, May 18, 2021
அஷ்வின் ஜிக்கு அஞ்சலி! :(
நண்பர், பிரியமான சகோதரர் கிட்டத்தட்டக் குடும்ப உறவினர் போன்ற திரு அஷ்வின் ஜி காலமாகி விட்டதாக எனக்கு சிபி(நாமக்கல் சிபி என்னும் ஜகன்மோகன் செய்தி அனுப்பி இருந்தார். ஒரு நிமிஷம் ஒண்ணுமே புரியலை. ஏதோ தப்பான செய்தி என்றே நினைத்தேன். உடனடியாக முகநூலிலும் போய்த் தேடினால் யாருமே எங்குமே இரங்கல் செய்தி தெரிவிக்கலை. குழப்பமாகவே இருந்தது. பின்னர் வீட்டில் அடுத்தடுத்து நேற்று இருந்த வேலைகளில் கவனம் சென்றாலும் அடி மனதில் இதன் எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. பின்னர் தற்செயலாக எங்கள் ப்ளாக் வாட்சப் பார்த்தால் அதில் கார்த்திக் (எல்கே) செய்தி கொடுத்திருந்தார். அப்போவும் செய்தி உண்மையா என்றே அவரைக் கேட்டேன். பின்னர் கார்த்திக் அதை உறுதி செய்தார். மேலும் "சஞ்சிகை" பத்திரிகையில் அஷ்வின் ஜி தன்னார்வலராக இருந்தமையில் அங்கே இரங்கல் கூட்டம் நடத்தப் போவதாயும் சொல்லி இருந்தார். நான் அதை எல்லாம் போய்ப் பார்க்கவில்லை. அதிர்ச்சி என்றால் அவ்வளவு அதிர்ச்சி.
அஷ்வின் ஜி இந்தச் சுட்டியில் சஞ்சிகை பத்திரிகையில் இரங்கல் செய்தியைப் பார்க்கலாம்.
சர்க்கரை நோயை உணவு மூலம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தவர் திரு அஷ்வின் ஜி. எனக்குச் சுமார் 13 வருடங்களாகத் தெரியும். அம்பத்தூரில் எங்க வீட்டுக்கு இரு முறை வந்திருக்கார். இங்கே திருச்சி ரயில்வேக்கு மாற்றப்பட்டபோது இங்கிருந்து மறுபடி சென்னை மாற்றலாகிக் கிளம்பும் முன்னர் இங்கே ஶ்ரீரங்கம் வீட்டிற்கும் வந்திருக்கார். அவங்க குடும்ப உறுப்பினர்களைப் பழக்கம் இல்லை. என்றாலும் இரண்டு மகன்கள் என்பதும், மனைவி குடும்பத் தலைவி என்பதும், மூத்த மகன் யு.எஸ். ஸில் வேலை செய்பவர் (ஐந்து வருஷங்கள் முன்னர் தான் யு.எஸ். சென்றார்.) என்பதும் தெரியும் பணி ஓய்வு பெற்றுத் திருவள்ளூரில் சொந்த வீடு கட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் மகன்களின் வசதிக்காக ரயில்வே குடியிருப்பில் இருந்து கொளத்தூருக்குக் குடியேறினார்.
நான்கைந்து வருஷங்கள் முன்னர் இதயத்தில் ஏற்பட்ட கோளாறினால் மிகவும் துர்ப்பலமாக ரயில்வே மருத்துவமனையில் டாக்டர் செரியனின் மேற்பார்வையில் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். முடியாமல் இருந்த அந்த நிலையிலும் பிள்ளையிடமிருந்து அலைபேசியை வாங்கி என்னைத் தொடர்பு கொண்டு பேசமுடியாமல் பேசினார். அவரைக் காணோமே என நினைத்துக் கொண்டிருந்த எங்கள் குழும உறுப்பினர்களுக்கு நான் தான் செய்தியைச் சொன்னேன். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். யோகாசனப் பயிற்சியையும், மூச்சுப் பயிற்சியையும் விடாமல் செய்வார். இயற்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் பங்கேற்றிருக்கிறார். அமர்நாத் குகை, வைஷ்ணவி கோயில், கேதார் நாத் போன்ற கடினமான மலைப்பிரதேசங்களுக்கெல்லாம் பயணம் செய்திருக்கிறார். அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மீண்டும் அமர்நாத் செல்லவேண்டும் என்னும் ஆவலுடன் இருந்தார்.
கயிலை யாத்திரைக்கும் தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் போக முடியவில்லை. என்னை விட வயதில் சிறியவர் என்பதால் நான் அவரும் ஒரு தம்பி என்றே சொல்லி, எனக்குப் பட்டுப்புடைவை வேண்டும், நவரத்னமாலை வேண்டும் என்றெல்லாம் சொல்லி வம்பு பண்ணிக் கொண்டிருப்பேன். என் பிறந்த நாள், மண நாளுக்கு அன்றைய தினம் இல்லாமல் அவரிடமிருந்து மறுநாளே வாழ்த்துகள் வரும். ஏனெனில் ட்ராஃபிக் ஜாமாக இருந்தது எனக் கிண்டல் செய்வார். ஏதேனும் வம்பு வளர்ப்பது எனில் அவருக்கு என் நினைவு தான் முதலில் வரும். நான் அசரவில்லை எனில் தி.வா.விடம் போய்ச் சொல்லித் தூண்டி விடுவார். சொந்த அக்கா, தம்பி போல் சண்டையெல்லாம் போட்டிருக்கோம். இப்போது நினைவுகளில் மட்டும் அவர் என்பதை என்னால் சிறிதும் நம்பவே முடியலை.
மே மாதம் 13 ஆம் தேதி வரை முகநூலில் இருந்திருக்கிறார். கடைசியாக சித்த மருத்துவர் வீரபாகுவைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை. ஆகவே அவர் கொரோனாவால் தாக்கப்பட்டிருப்பது தெரியவில்லை. தெரிந்தால் மட்டும் என்னால் என்ன செய்திருக்க முடியும்? ஆனால் வீரபாகுவைப் பார்த்தாரா, பார்க்கவில்லையா என்பது தெரியவில்லை. மே 15 ஆம் தேதி விடியற்காலை மூன்றரை மணி அளவில் இறந்திருக்கிறார். அவரை முகநூலில் காணோமே என யோசித்த நண்பர்களில் சிலர் வீட்டு நம்பருக்குத் தொலைபேசிய போது இளைய மகன் தகவலைச் சொல்லி இருக்கிறார். ஆகவே அனைவருக்கும் அவர் இறந்து 2,3 நாட்கள் கழித்தே தெரிந்திருக்கிறது. அப்போவும் உண்மையா/பொய்யா என்னும் சந்தேகம் தான். நமக்கு நெருங்கியவர்கள் எனில் மனம் லேசில் சமாதானம் அடைவதில்லை. நல்ல மனிதர். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம். அஷ்வின் ஜியின் இயற்பெயர் ஹரிஹரன். ஆனால் அஷ்வின் ஜி என்னும் பெயராலே அறியப்பட்டார்.
Friday, May 14, 2021
உப்பு வாங்கலையோ உப்பு! மீள், மீள், மீள் பதிவு!
உப்பு வாங்கலையோ உப்பு!
அன்னக்கொடி விழா
அக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?
அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!
மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.
அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.
அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.
குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.
பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.
எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.
2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை. நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா! இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க. இதெல்லாம் தேவையா! எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை. எனக்குத் தெரிந்து இது கடந்த இருபது வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது. அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது. இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன. கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம். இன்று நம் வீட்டில் தயிர் சாதம், பால் பாயசம், கறுப்பு உளுந்தில் வடை செய்து நிவேதனம் பண்ணிக் குடி இருப்பு வளாகத்தில் சிலருக்குக் கொடுத்தேன். அதன் படங்கள் கீழே!
வடைகள் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கின்றன.
உருளியில் பால் பாயசமும், பக்கத்தில் தயிர் சாதமும்
ராமர் என்னவெல்லாம் நிவேதனம்னு பார்க்கிறார்.கீழே பெருமாளும் பார்க்கிறார்.
சொம்பில் தண்ணீர் வைத்திருந்த படம் தற்செயலாக இதைக் காப்பி, பேஸ்ட் பண்ணும்போது டெலீட் ஆகி விட்டது. :( என்ன செய்ய முடியும்? படம் இருக்கானு தேடிப் பார்க்கணும். அதுவும் எந்தக் கணினியில் இருக்கோ! :) எழுதினதை மட்டும் கீழே நீக்கவில்லை. அப்படியே கொடுத்திருக்கேன்.
சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது. தயிர் சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், உருளியில் பால் பாயசம், வடைகள். வடைகள் வெந்து கொண்டிருந்தன. ஆகவே நிவேதனத்துக்கு 2 மட்டும் எடுத்து வைத்தேன்.
Monday, May 10, 2021
என்ன என்ன யோசனைகளோ!
மார்கழி மாசத்திலே ஏன் வீடு மாறக்கூடாது? அந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் பண்ணுவார்களா? மார்கழியில் என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகின்றன?
சாம்பார் பரிபூர்ணா, மற்றும் கறி பருப்பு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? (யாருக்குத் தெரியும்?) சாம்பாருக்கு தேசிய உணவு என்ன? ஹிஹிஹி, சாம்பார் தேசிய உணவானு கேட்க நினைச்சிருப்பாங்களோ? அடுத்த கேள்வி சில ஓட்டல்களில் கொஞ்சூண்டு, சாம்பார், கொஞ்சூண்டு ரசம் தராங்களே அதைப் பத்தி யாரிடம் புகார் செய்வது?
அடுத்து மந்திரங்கள் பற்றியாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாயைத் தானாக வீட்டை விட்டு வெளியேற்ற என்ன மந்திரம்? அடுத்து பவித்ர மந்திரா என்றொரு ஹாலிவுட் படத்தின் உண்மையான பெயராம். மந்திரங்களிலேயே ஆச்சரியமும் மந்திர சக்தி அதிகம் உள்ளவையும் அவற்றைப் பேசும் நாடுகளும்.
***********************************************************************************
என்ன? முழிக்கிறீங்களா? இதெல்லாம் என்னோட டாஷ்போர்டில் பதிவு எழுதக் கொடுக்கப்பட்டிருக்கும் யோசனைகள்! நல்லா இல்லையா? விடுங்க. இந்தியாவில் கொரோனா நிலைமை ரொம்ப மோசமாக ஆகிக் கொண்டிருக்கு. பலரும் சிரமப்படுகின்றனர். நோயால்/மருந்துகள் சரிவரக் கிடைக்காமல்/மருத்துவமனைகளில் இடம் இல்லாமல்! அன்புக்குரியவர்களை இழந்து கொண்டிருக்கிறார்கள் பலரும். என்ன செய்வதுனு புரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு சில மாநில அரசுகளுக்கும் இதெல்லாம் மத்திய அரசின் தவறு எனச் சொல்ல முடிகிறது. ராஜஸ்தானிலும், தில்லியிலும் ஆக்சிஜனைப் பயன்படுத்தத் தெரியவில்லை. ஒரு ஓரமாக வைச்சிருக்காங்க என்று செய்திகள் கூறுகின்றன. இதுக்கு மாநில அரசோ, மத்திய அரசோ என்ன செய்ய முடியும்? வெளிநாடுகளில் இருந்து உதவிக்கரங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அவையும் விநியோகம் செய்யப்படுகின்றன. மத்திய அரசு பண உதவி மட்டுமின்றி ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஜெனரேட்டர்கள், மருந்துகள் எனக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் நோயின் தாக்கம் அதிகம். அதற்குக் காரணம் இன்னமும் மக்களின் பொறுப்பின்மை. நேற்று இங்கே திருச்சியில் மீன்/மாமிசம் விற்கும் கடைகளில் கூட்டம். டாஸ்மாக்கில் கூட்டம் அதிகாலையில் இருந்தே! சாமானிய மக்களால் இவற்றை வாங்கவெல்லாம் பணம் இருக்கு! ஆனால் அரசோ மேலும் மேலும் நிவாரணம் என்னும் பெயரில் பணத்தைக் கொடுக்கிறது. ஒரு பக்கம் பணத்தைக் கொடுத்துவிட்டு அதை டாஸ்மாக் மூலம் அரசே திரும்பப் பெற்றாலும் இலவசத்தை ஊக்குவிக்கலாமா? நம் தமிழர்கள் இதற்கு அடிமையாகி இருக்கிறாப்போல் வேறே மாநிலங்களில் பார்க்க முடியாது.
தினம் தினம் காலை எழுந்ததில் இருந்து வேலைகளை ஆரம்பித்தால் நேரம் சரியாய் இருக்கு. அதிகமாகவோ/கூடுதலாகவோ வேறே எந்த வேலையும் செய்ய முடியறதில்லை. அது ஏன்? புரியவில்லை! எனக்கு முடியலையா? புரியலை. வேலை செய்யும் வேகம் குறைந்து விட்டதோ? தெரியலை. முன்னெல்லாம் வேலைக்காரப் பெண்மணி இல்லாதப்போ நானே எல்லாவற்றையும் செய்தப்போக் காலையில் சிறிது நேரம் கணினியில் உட்கார்ந்துட்டுத் தான் வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போவேன். இப்போதெல்லாம் அப்படி உட்கார முடிவதில்லை. வேகம் குறைந்து விட்டதுனு நினைக்கிறேன். அதே போல் முன்னெல்லாம் மத்தியானங்களில் எப்போவானும் படுப்பேன். இப்போது தினமும் சிறிது நேரமாவது படுக்க வேண்டி இருக்கு. கண்களுக்கு ஓய்வு கொடுக்கத் தான்! அது போக மிகுந்த நேரத்தில் தான் எல்லாமும் செய்யணும். பதிவுகள் பார்ப்பது/பதில் கொடுப்பது/பதிவு எழுதுவது என! அதனாலேயே இப்போதெல்லாம் பதிவு எழுதுவதைக் குறைத்துவிட்டேன்.
பி.வி.ஆரின் "ஆடாத ஊஞ்சல்" கதையைப் படிச்சதில் இருந்தே அந்தக் கதாநாயகி அடுத்து என்ன முடிவு எடுப்பாள் நம் யூகத்துக்கே விட்டுவிட்டாரே ஆசிரியர் என்று தோன்றியது. பாலக்காட்டுக் கல்பாத்தியில் வக்கீலின் பெண்ணான/ஐந்தாவது பெண்ணான துளசிக்குப் படிப்பு வரலை. அவள் அக்கா/தங்கைகள் கல்லூரிப் படிப்புப்படித்து மேல் நிலையில் இருக்க இவளோ வீட்டில் சமையல் பொறுப்பை எடுத்துக்கொள்ளும்படி ஆகிறது. வீட்டில் அப்பாவைத் தவிர்த்து அவள் நிலையைப் புரிந்து கொண்டவர் யாரும் இல்லை. அவள் அம்மாவும் தன் பெண்ணின் நிலையைப் புரிந்து கொள்ளவில்லை. இந்நிலையில் திருமணமே தனக்கு ஓர் விடுதலை என நினைக்கும் துளசி தானாக வந்த வரன் கீர்த்தியைத் திருமணம் செய்து கொண்டு சென்னை போகிறாள். அங்கே அவளுக்கு நேர்ந்த அனுபவங்கள்! அதன் பின்னர் அவள் எடுத்த முடிவு. அதனால் ஏற்பட்ட தாக்கங்கள்! கீர்த்தியை விட்டுவிட்டு மறுபடி கல்பாத்திக்கே வரும் துளசி கடைசியில் கீர்த்தியோடு சேர்ந்தாளா? புத்தகத்தில் படியுங்கள்! ரசிக்கும்/ருசிக்கும். ஆனால் முடிவை நாம் தான் யூகிச்சுக்கணும்.
Friday, May 07, 2021
இது ஒரு கொரோனா காலம்! :(
கொரோனா ஆட்டம் பார்க்கவும்/கேட்கவும்/படிக்கவும் கவலையும் பயமுமாக இருக்கிறது. நாட்கள் நகர்வதே பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. என்னதான் வெளியில் போகாமல் இருந்தாலும் வெளி ஆட்கள் வருவதையும் தவிர்க்க முடியாது. பால்காரர், பேப்பர்காரர், காய் கொண்டுவருபவர் என்று வரத்தான் செய்கிறார்கள். கடவுளை வேண்டிக் கொண்டு தான் ஒவ்வொரு நாளையும் நகர்த்த வேண்டி இருக்கு. இந்த அழகில் மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது எனவும் அது குழந்தைகள் முதல் அனைவரையும் தாக்கும் என்றும் சொல்கின்றனர். வரப் போகிறது எனக் கண்டுபிடிப்பவர்களால் அதைத் தடுக்கத் தெரியாமல் இருப்பது நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. எப்போத் தான் கடவுள் நம்மை இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுவிப்பாரோ? இதில் ஆக்சிஜன் கிடைக்காமல் இருப்பது இன்னமும் கொடுமை என்றாலும் அதற்கு அரசைக் காரணமாகச் சொல்லுவதும் சரியாகத் தெரியலை. திடீரென இத்தனை நோயாளிகள் பெருகக் காரணம் மக்களின் அலட்சியமே தான். அதற்காக அரசு நடவடிக்கை எடுக்காது என்றோ எடுக்கக் கூடாது என்றோ அர்த்தம் இல்லை. இதை எல்லாம் பார்த்தாவது மக்கள் இனியாவது பொறுப்பாக நடந்துக்க வேண்டாமா?
திருச்சியில் சிங்காரத்தோப்பு/சிந்தாமணிக் கடைகளில் முக்கியமாகத் துணிக்கடைகளில் பெரும் வெள்ளமாக மக்கள் குவிந்திருக்கிறார்கள். என்ன சொல்லுவது? இப்படி எல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு நோய் வந்தபின்னர் அதன் கடுமையைப் பார்த்த பின்னர் அரசு உதவி செய்யலைனு சொன்னால் என்ன அர்த்தம்? நாம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா? நீதிமன்றங்களும் அரசைத் தான் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றன. என்னவோ போங்க! எல்லாம் அந்த ஆண்டவன் தான் பார்த்துச் சரி செய்யணும்!
2,3 நாட்களாக வீட்டில் அலமாரிகளைச் சுத்தம் செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வீட்டு வேலை செய்யும் பெண் வரும்போது இதை எல்லாம் கவனிக்க முடியாது. அவங்க வரதுக்குள்ளே பாத்திரங்களை ஒழிச்சுப் போட்டு, வீடு சுத்தம் செய்யத் தயாராக்க வேண்டி இருக்கும். அலமாரிகளை ஒழிக்க உட்கார்ந்தால் காலை பத்து மணி வரை சரியாய் இருக்கும். மத்தியான நேரங்களில் உட்கார அலுப்பாக ஆகிவிடுகிறது. ஆகவே வேலை செய்யும் பெண்மணி வராத இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நாளைக்கு ஒரு அலமாரி என்னும் கணக்கில் சுத்தம் செய்து கொண்டிருக்கேன். இன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பதால் நோ சுத்தம் செய்யும் வேலை! நாளைக்குத் தான் மறுபடி!
இப்படிச் சுத்தம் செய்ததில் ஒரு சில/பல புத்தகங்களையும் ஒழுங்கு செய்தேனா! அதில் கண்டு பிடிச்சது ஶ்ரீராமோட எஸ்.ஏ.பி. கதைகள் அடங்கிய தொகுப்பு என்னிடம் இருக்கு. ஹிஹிஹி! ஶ்ரீராம் யாரோ "தேட்டை" போட்டுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கார். இருங்க இருங்க, இருங்க! நான் தேட்டை எல்லாம் போடவில்லை. முன்னொரு காலத்தில் எப்போவோ அவர் வீட்டுக்கு அதுவும் ஶ்ரீராமே ஆட்டோ அனுப்பி வரவைச்சப்போ அங்கே இருந்த புத்தக அலமாரியையும் புத்தகக் குவியலையும் பார்த்துட்டு மயக்கம் வந்து அந்த அரைகுறை மயக்கத்தில் எதை எடுப்பதுனு தெரியாமல் எடுத்து வந்தவை இவை! இன்னொரு புத்தகம் ரா.கி.ர.வோடது. ப்ரொஃபசர் மித்ரா இன்னும் ஏதோ ஒண்ணு! எஸ்.ஏ.பி.யின் மலர்கின்ற பருவத்தில் என்னிடம் இருக்கும் தொகுதியில் இருக்கு. மறுபடி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். என்ன? விமரிசனமா? ம்ஹூம்! அதெல்லாம் கிடையாது. ஆன்லைன் தயவில் நிறையப் புத்தகங்கள் தரவிறக்கிப் படிச்சுட்டு இருக்கேன்! ஆனால் நோ விமரிசனம். ஓகே! வீட்டு வேலைகள் அழைப்பதால் மத்தியானமாப் பார்க்கலாம்.