எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 28, 2022

தமிழ்த் தாத்தாவுக்கு அஞ்சலி!

 தமிழ்த்தாத்தாவிற்கான அஞ்சலிக்கு முன்னால் சில விஷயங்களைப் பார்ப்போம். இப்போதுள்ள தனித்தமிழ் ஆர்வலர்கள் சுமார் நூறாண்டுகள் முன் வரையும்/அதற்கும் முன்னரும் பிராமணர்கள் யாரையும் படிக்க விடவில்லை என்றும் முக்கியமாய்த் தமிழ் படிக்க விடவில்லை என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் தெரியுமா? பிராமணரான தமிழ்த்தாத்தாவே பிராமணரல்லாதவர்களிடம் தான் தமிழ் பயின்றார் என்பது. முதலில் உ.வே.சா அவர்கள் தமிழ் பயின்றது தன் தந்தையின் நண்பரான சிதம்பரம் பிள்ளை என்பவரிடம். திருவிளையாடல் புராணத்தை அவர் தான் உ.வே.சா. அவர்களுக்குக் கற்பித்தார். மேலும் தமிழ் கற்பதற்காக அவர் அலைந்த அலைச்சல்கள். 

உ.வே.சா. அவர்களின்  குடும்பம் தீராத வறுமையில் வாடியது. தமது குடும்பம் பிழைப்பதற்கும் இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார்கள். அக்காலத்தில் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாகத் தங்குவதற்கு வசதியில்லாமல் ஊர்ஊராக  இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்துள்ள போதிலும், மனம் தளராமல், இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார். இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும், குடும்பத்தின் தியாகமும், விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது.தமிழாசிரியர் எங்குக் கிடைப்பாரோ என்று தேடித்தேடி, அதன் தொடர்ச்சியாகக் குடும்பம் முழுவதும் தமிழாசிரியர் இருக்கும் இடத்திற்குக் குடி பெயர்ந்து விடும். படித்த புலவர்கள் யாரைப் பார்த்தாலும் இவரிடம் தமிழ் கற்றுக் கொள்ள முடியுமா என்றுதான் தம் உள்ளம் ஏங்கியதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று உ.வே.சா. பதிவுசெய்கிறார்

அதன் பின்னரே அரும்பாவூர் நாட்டார் என்னும் பெரும் செல்வர் மூலம்  திருவாவடுதுறை ஆதீனத்தில் அப்போது இருந்த மஹா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்கச் சிபாரிசு செய்தார். இதற்கு நடுவில் உ.வே.சா. அவர்கள் விருத்தாசலம் ரெட்டியார் என்பவரிடம்  தமிழ் கற்கும்போது பாடல்கள் எழுதுவதின் நுணுக்கங்களைக் கேட்டறிந்து கொண்டார். அதன் பிறகே மஹாவித்வான் அவர்களிடம் தொடர்பு ஏற்பட்டது. அதிலும் ஆதீனத்துடன் ஏற்பட்ட தொடர்பும் அதன் மூலம் தமக்குக் கிடைத்த குருவையும் உ.வே.சா. அவர்கள் தாம் பெற்ற பாக்கியம் என்று எண்ணி மகிழ்ந்தார்.   ஆதினகர்த்தர்களும் அக்காலங்களில் தமிழில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் வடமொழி அறிந்தவர்களாகவும் சுயமாகப் பாடல் புனையும் தகுதி பெற்றவர்களாகவும் அமைந்தது உ.வே.சாவுக்குப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்திற்று.

இது ஒரு பக்கம் இருக்க அக்கால கட்டத்தில் அதாவது உ.வே.சா.விற்குப் பின்னரும் பல தமிழ் வித்வான்கள் பிராமணரல்லாதோராக இருந்திருக்கின்றனர். அவர்களில் சிலர்கீழே!

ஜே.எம்.நல்லுசாமிப் பிள்ளை 

சி.கே. சுப்ரமணிய முதலியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார்

பாரதி தாசன்

வையாபுரிப் பிள்ளை

 தாமோதரனார்

உமாமஹேஸ்வரனார்

வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலீயார்

சாமிக்கண்ணுப்பிள்ளை

பா.வே.மாணிக்க நாயக்கர்

கே.என்.சிவராஜபிள்ளை

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை

திருமணம் செல்வகேசராய முதலியார்

சி.வை.தாமோதரம் பிள்ளை

கே.என்.சிவராஜப்பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை

மஹாவித்வான் மீனாக்ஷி சுந்தரம்  பிள்ளை அருணாசலக்கவிராயர்

மாரிமுத்துப்பிள்ளை

முத்துத் தாண்டவர்

தாண்டவராய முதலியார்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

தாயுமான சுவாமிகள், 

ராமலிங்க வள்ளலார்,  

மஹாவித்வான் சபாபதி முதலியார், 

ஆறுமுக நாவலர், 

ஷோடசாவதானம். தி.க. சுப்பராய செட்டியார், 

அஷ்டாவதானம் சபாபதி முதலியார், 

சிதம்பரம் சபாபதி பிள்ளை ஆகியோர்/

 இன்னும் பலர் இருந்தாலும் நினைவிலும் தேடியதில் கிடைத்தவர்களையும் மட்டும் பட்டியல் இட்டிருக்கிறேன். 

சமீப காலத்தில் டாக்டர் மு.வரதராசனார், தெ.பொ.மீனாக்ஷி சுந்தரனார்

திரு வி.கலியாணசுந்தரனார்

ம.பொ.சி

ரசிகமணி டி.கே.சி

இவர்களுக்குப் பின்னர் வந்தவர்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி யார் இருக்கிறார்கள்? தேடிப் பார்த்துக் கொள்ளவும். இவர்களில் யாருமே பிராமணர்கள் அல்ல. உ.வே.சா. அவர்கள் இவர்களில் பலருடன் நெருங்கிய தொடர்பும் வைத்திருந்திருந்தார். தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவலில் பலரையும் தொடர்பு கொண்டு அவர்களுக்குத் தெரிந்ததைத் தாமும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். ஆகவே பிராமணர்களுக்கும் மற்றவர்கள் கல்வி கற்காமல் போனதுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பின்னால் வந்த ஆங்கிலேயன் ஆட்சியிலேயே இந்தப் பேதங்கள் எல்லாம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு இரு தரப்பிலும் துவேஷங்களைப் பரப்பி இருக்கின்றார்கள். ஆங்கிலேயன் வந்தான்; நம் கல்விக்கண்களைத் திறந்தான் என்பவர்கள் எல்லோருமே அதற்கு முன்பே நம் நாட்டில் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள், கோயில்கள், மாளிகைகள் மட்டுமில்லாமல் வைத்தியத்திலும் அறுவை சிகிச்சையிலும் கூட நம் மக்கள் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.  ஆங்கிலேயன் வந்து தான் அறுவை சிகிச்சை நம் நாட்டில் அறிமுகம் என்பவர்கள் அதற்குப் பல காலங்கள் முன்னரே சுஸ்ருதரால் அறிமுகம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை முறைகள் இருந்ததையும் அந்த அறுவை சிகிச்சை நிபுணர்களே பிற்காலங்களில் ஆங்கிலேயர்களால் ஒதுக்கப்பட்டுக் கடைசியில் நாவிதத் தொழில் மட்டும் செய்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதையும் அறிய மாட்டார்கள். ஆனால் அந்தக் காலங்களில் சுமார் நூறு ஆண்டுகள் முன் வரையிலும் அதன் பின்னரும் சில/பல ஆண்டுகள் பிரசவத்துக்கு மருத்துவச்சி/மருத்துவன் என்று அழைக்கப்பட்ட இந்த நாவிதர்கள் வந்தே பிரசவங்கள் நடைபெறும்/நடைபெற்றிருக்கின்றன.

இன்று தமிழ்த்தாத்தாவிற்கு நினைவு நாள்.இந்த நாளில் நாம் நமக்கு முன்னிருந்து தமிழ்த் தொண்டு செய்தவர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம்.

Monday, April 18, 2022

கடமையை ஆத்திட்டு வந்தாச்சு!

 இன்னிக்கு ஒரு முக்கியமான கடமையை ஆத்திட்டு வந்தோம். என்னங்கறீங்களா? பூஸ்டர் டோஸ்! வெள்ளி அன்றே மொபைலுக்குச் செய்தி வந்தது. வழக்கமாய்ப் போட்டுக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகளை விசாரித்ததில் ஒன்றில் இப்போப் போடுவதில்லைனு சொல்லிட்டாங்க. இன்னொன்றில் போடுவதாகச் சொன்னார்கள். சரினு நேற்று ஞாயிறன்று பதிவு செய்யத் தொலைபேசினால் தொலைபேசியே எடுக்கலை. அதுக்குள்ளே சிலர் ஜி..எச்.சில் போடுகிறார்களே என்றும் சொன்னார்கள். முதல் முறை போட்டுக்கொண்ட ஊசிக்கும் இரண்டாவதாகப் போட்டுக் கொண்ட ஊசிக்கும் ஜி.எச்சுக்குப் போகலை. ஏனெனில் அப்போக் கூட்டம் அதிகம் இருந்த காரணத்தால். இப்போக் கூட்டம் இல்லை போட்டுக் கொண்டு உடனே வந்துடலாம்  என்றார்கள்.

ஆனாலும் இன்னிக்குக் காலம்பரத் தனியார் மருத்துவமனைக்கே போக முடிவு செய்தோம்.  வந்து சமைக்க வசதியாக ஏற்பாடுகளைப் பண்ணிட்டு வேலை செய்யும் பெண்மணி வந்துட்டுப் போனதும் கிளம்பலாம்னு முடிவெடுத்தோம். இன்னிக்கு அந்தப் பெண்மணி தாமதமாக எட்டேமுக்காலுக்குத் தான் வந்தாள்.

அவங்க வேலையை முடித்துக் கொண்டு கிளம்ப ஒன்பதே கால் ஆகிவிட்டது. உடனடியாக நாங்களும் வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினோம். வாசலில் எப்போதும் ஆட்டோ நிற்குமிடத்தில் இப்போத் தடுப்புகள் போட்டிருப்பதால் ஆட்டோவே எதுவும் கண்களில் படலை. 

சென்றுகொண்டிருந்த ஒர் ஆட்டோவைக் கூப்பிட்டு பேரம் பேசி ஏறிக் கொண்டோம். தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் செல்லாமல் கோபுரத்தை நோக்கி ஆட்டோ செல்லவும் எனக்குள் சந்தேகங்கள். நம்மவரோ இப்படியும் போகலாம் போல என்றார். எப்படி? இது சுத்து இல்லையோ என்றேன். அவருக்கும் குழப்பம் தான். கடைசில் அந்த ஆட்டோகாரர் ஜி.எச்.சில் நிறுத்திவிட்டு இங்கே தான் போடறாங்க போங்க என்றார். நாங்க இறங்க மறுத்துவிட்டுத் தனியார் மருத்துவமனைக்கே போகச் சொன்னோம். சுத்த்த்த்த்தி வளைச்சுக் கொண்டு அங்கே கொண்டுவிட்டார்/எங்களைத் திட்டிக் கொண்டே என்பது உபரித்தகவல்.

அங்கே போகையிலேயே வாசலில் இருந்த செக்யூரிடி கிட்டத்தட்ட என் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றார். மறுத்துவிட்டு நானே உள்ளே போனேன். அங்கே ஊசி போடும் அறை முன்னாலேயே இருந்தது. வாசலில் ஒரு செவிலிப்  பெண்மணி நின்று கொண்டு மருந்துகள் கையிருப்பில் இல்லை என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார். எங்க இரண்டு பேருக்கும் பேஸ்து அடித்து விட்டது.


ஒரு மாதிரியாகச் சமாளித்துக் கொண்டு வெளியே வரும்போதே நான் ஜி.எச்.சில் போய்ப் போட்டுக் கொண்டு விடுவோம் எனச் சொல்ல அவரும் சம்மதித்து அங்கே அப்போது வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி ஜி.எச்.சில் கொண்டு விடச் சொன்னோம். அவருக்குச் சரியாக இடம் தெரியாததால் முக்கியக் கட்டிடத்துக்குப் போக, நாங்க அங்கே இல்லைனு சொல்லி ஊசி போடும் ஆரம்பசுகாதார நிலையக் கட்டிடத்தைக் காட்டினோம்.


பின்னர் அங்கே சென்று அவங்க கிட்டே ஆதார் கார்டு, இரண்டு ஊசி போட்டுக் கொண்ட சான்றிதழ், இப்போ வந்திருக்கும் செய்தி எல்லாவற்றையும் காட்டினோம். ஊசி போட்டு அனுப்பினாங்க.  வாசலிலேயே ஆட்டோ பிடித்து சரியாகப் பத்து/பத்துக்கு வீட்டுக்கு வந்து சமையல் தொடங்கியாச்சு! இதுவே வேறே ஏதானும் ஊர் எனில் குறைந்தது ஆட்டோ பிடித்துப் போய் வர ஒன்றரை மணி நேரமாவது ஆகி இருக்கும். இங்கே போகும் இடங்கள் மட்டும் பக்கம் னு இல்லை/ மற்ற ஊர்களைப் போல் கூட்ட நெரிசலும் இல்லை. 

ஆக மொத்தம் முதல் ஊசி ஒரு தனியார் மருத்துவமனையிலும் இரண்டாவது ஊசி இன்னொரு தனியார் மருத்துவமனையிலும், மூன்றாவது ஊசி அரசு செலவில்/தயவில்  ஓசியிலும்  போட்டுக் கொண்டாச்சு. 


Saturday, April 16, 2022

2 வருஷங்களுக்குப் பின்னர் பெருமாள் தரிசனம்!

 


இந்தப் படம் பழைய படம். கூகிளாரிடமிருந்து கடன் வாங்கியது. இன்றைய அலங்காரமும் கிட்டத்தட்ட இப்படித்தான் என்றாலும் இன்னும் எளிமையாக மாலைகள் குறைக்கப்பட்டுக் காணப்பட்டார். ஒரே இளைப்பு!!!!!!!!!!!!!!!!!!!!! ரொம்பவே துளியாகப் போய்விட்டது உடம்பு. அல்லது 2 வருஷத்திற்குப் பின்னர் பார்ப்பதாலா? தெரியலை. ஆனால் பெருமாள் இளைத்துத் துரும்பாய் இருப்பதாக எனக்குத் தோன்றியது எனில் நம்ம ரங்க்ஸுக்கும் அதே தோணி இருக்கு.

இந்த வருஷம் ஒரு மாதமாகவே கஜேந்திர மோக்ஷத்துக்கு அம்மா மண்டபம் மண்டகப்படி இருக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அதே போல் போன வாரம் அது பற்றி உறுதியான தகவல் கிடைச்சது. கோயிலுக்குத் தான் நம்மால் போக முடியலை. நம்மைத் தேடி வரும் பெருமாளையாவது பார்க்கலாம்னு ஆவலுடன் காத்திருந்தோம். நேற்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள் என்றாலும் இன்று காலை எழுந்தவுடன் அழகரைப் பார்க்கணும்னு நினைச்சது கூடப் பார்க்க முடியவில்லை. பெருமாளை எப்படிக் கீழே போய்ப் பார்ப்பது எனத் தோன்றியது. நம்ம ரங்க்ஸ் இலை வாங்கறதுக்காக நம்ம நண்பர் கோயிலுக்குச் சென்றார். அங்கே கோயில் வாசலில் எல்லாமும் கிடைக்கும். அப்போப் பெருமாள் இங்கே புலிமண்டபத்தில் மண்டகப்படி முடிந்து அடுத்ததுக்குப் போய்க் கொண்டிருந்திருக்கிறார். நல்ல திவ்ய தரிசனமாகக் கிடைச்சிருக்கு. காலை வேளை ஆகையால் அதிகம் வெயில் இல்லை. ஆகவே பெருமாள் திறந்த பல்லக்கிலேயே வந்திருக்கார்.

அதுக்கப்புறமா உள்ள பல மண்டகப்படிகளை முடித்துக் கொண்டு இங்கே வர ஒன்பதரையாவது ஆகும்னு எதிர்பார்த்தோம். நம்மவர் வெளியே இருந்து வந்ததுமே சொல்லிட்டார். நான் பெருமாளை ஆசை தீர நன்றாய்ப் பார்த்துட்டேன். கீழே நீயே போய்ப் பார்த்துக்கோ என அறிவிப்பு வந்து விட்டது. செக்யூரிடியைத் தொலைபேசியில் கேட்டதற்கு இன்னமும் புலிமண்டபத்திலேயே இருப்பதாகச் சொல்லக் கொஞ்சம் யோசித்த நான் தினம் தினம் பெருமாளுடனேயே பொழுதைக் கழிக்கும் எதிர்வீட்டு மாமியைக் கேட்டேன். அந்த மாமி புலி மண்டபத்தைத் தாண்டி இன்னும் நாலைந்து உபயங்களையும் முடித்துக் கொண்டு இன்னும் அரை மணி நேரத்தில் நம்ம பக்கத்து மண்டகப்படிக்கு வந்துடுவார்னு சொன்னாங்க. உடனேயே ரங்க்ஸ் கிட்டேக் கூடச் சொல்லாமல் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் சொல்லிட்டு/அவரிடம் தெரிவிக்கச் சொல்லிட்டுக் கீழே இறங்கினேன். ஹிஹிஹி லிஃப்டில் தான். ஆனால் கீழே 3,4 படிகள் உள்ளன. அதை எப்படிக் கடப்பது என்னும் பெரிய  கேள்வி ? இந்த வடிவிலேயே கண் முன்னால் நின்றது. லிஃப்டைவிட்டு வெளியே வந்ததும் அக்கம்பகம் யாருமே இல்லை. ஆகவே முதல் முதல் நடைபழகும் குழந்தையைப் போல் சுவற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்லக்கீழே இறங்கிவிட்டேன். ஹையா! ஜாலி!

மெதுவாக செக்யூரிடி இருக்கும் இடத்துக்குப் போனால் எனக்கு முன்னால் நாலைந்து பேர்கள். துணிகளை இஸ்திரி போடும் பெண்மணி வெளியே இருந்து வர அவரைக் கேட்டதில் பத்து நிமிஷத்துக்குள்ளாகப் பெருமாள் வந்துடுவார் எனத் தெரிந்தது. சற்று நேரத்தில் அந்தப் பெண்ணும் வாசலுக்குப் போங்க, பெருமாள் வந்து கொண்டிருக்கார் என்று சொல்ல நாங்களும் போனோம். நான் நிற்க முடியாதே என்பதால் உள்ளே மண்டகப்படி மண்டபத்தினுள் போக அங்கே இருந்த ஒரு பெண்மணி என்ன நினைத்தாளோ என்னை உட்காரச் சொல்லிட்டுத் தான் நின்று கொண்டார். அதன் பின்னர் அடுத்தடுத்து எங்க குடியிருப்பு வளாகப் பெண்கள் சிலர் வந்தன. சற்று நேரத்தில் சங்கு ஊதிக்கொண்டு, குடைகள் பிடித்துக் கொண்டு நகராவைச் சத்தப்படுத்திக்கொண்டு கோயில் பரிசனங்கள் வரக் கொஞ்ச நேரத்தில் பெருமாள் தெரியலானார். பல்லக்கு என்னமோ திறந்த பல்லக்குத் தான். ஆனால் அப்போவே வெயில் அதிகம் ஆனதால் திரை போட்டு மூடிக் கொண்டு வந்தார்கள். மேலே குடை. இருபக்கங்களிலும் விசிறியால் விசிறிக் கொண்டு இருந்தார்கள்.

மேலே போட்டிருக்கும் படத்தில் உள்ளது போல் ஆபரணங்கள். பாண்டியன் கொண்டை. எளிமையான பட்டில் உடை! அதிகம்மாலைகள் கூட இல்லை. பெருமாளைப் பார்த்தால் ரொம்பக் குட்டியாய்ப் போய்விட்டாற்போல் இருந்தது. கண்களில் தண்ணீர் கொட்டப் பெருமாளை வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். ஒண்ணும் வேண்டிக்கத் தோணலை. கண் நிறைய, மனம் நிறையப் பெருமாளை என்னுள் வாங்கிக் கொண்டு அவர் உருவை மனதில் நிறுத்த முயன்றேன். இம்முறை செல்/காமிரா எடுத்துச் செல்லவில்லை. ஏனெனில் ஃபோட்டோ எடுப்பதில் கவனம் போனால் பெருமாளை நன்கு பார்க்க முடியாது. ஆகவே என் முழுக்கவனமும் பெருமாள் மேல் தான். மனம் விம்மியது. பார்க்கமுடியலையேனு நினைத்து வருந்திக் கொண்டிருந்த என் போன்றோருக்காகத் தேடிக் கொண்டு வந்து தன் தரிசனத்தைக் கொடுத்திருக்கார் நம்பெருமாள். சற்று நேரத்தில் மண்டகப்படி மரியாதைகள் முடிந்து பதில் மரியாதை நடந்து மெல்லப் பெருமாள் கிளம்பினார். இந்த வருஷம் ஆடி மாசமும் வருவேன்னு சொல்லி இருக்கார். பார்ப்போம். அங்கே பெருமாள் பிரசாதங்கள் கொடுத்துக் கொண்டிருக்கக் கூட்டமாக இருப்பதால் நான் வந்துட்டேன். ஆனால் எங்க வளாகக் காரியதரிசி அவர் வாங்கிய பிரசாதத்தை எல்லோருடனும் பங்கிட்டுக் கொண்டிருந்தார். அங்கே போய் நானும் கொஞ்சம் போல் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு மேலே வந்தேன். பாலில் ஊறிய பாசிப்பருப்புப் பிரசாதம். ரங்க்ஸுக்கும் கொடுத்துட்டு நானும் எடுத்துக் கொண்டேன். ஏதோ சாதனை செய்த நிறைவு மனதில்.

Wednesday, April 13, 2022

மூன்றாவது புத்தகம் வெளியீடு!

 தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்

இங்கேயும்

போன வருஷம் இரண்டு புத்தகங்கள் வெளியிட்ட பின்னர் மறுபடி புத்தகங்கள் வெளியிட முடியாதபடி பிரச்னைகள். மோசமான உடல் நலக்குறைவு. தொகுத்துப் பிழை திருத்தம் பார்க்க முடியாமல் நேரமின்மை என்று இருந்துவிட்டது. இப்போத் தான் ஒரு பத்து நாட்களாக முனைந்து இந்தப் புத்தகத்தையும், "பாரம்பரியச் சமையல் பகுதி 2" ஆம் புத்தகத்தையும் தொகுத்துக் கொண்டேன். பாரம்பரியச் சமையல் புத்தகத்தில் வேலை இன்னும் மிச்சம் இருப்பதால் முதலில் பயணக்கட்டுரைகள் தொகுப்பை அனுப்பினேன். போன வாரமே வெளி வந்திருக்கணும். ஏதோ தொழில்நுட்பக் கோளாறினால் என் பக்கம் சரியாகச் செய்தி வரவில்லை. பின்னர் வெங்கட்டும் பயணத்தில் சென்று விட்டார். வந்துட்டாரா எனத் தெரிந்து கொண்டு இன்று மீண்டும் முயன்றதில் வெங்கட் இதை வெளியீடே செய்துவிட்டார். முன்னால் இரண்டு புத்தகங்களுக்கும் அவரே லிங்க் அனுப்பி இருந்தார். ஆகவே கொடுக்க வசதியாக இருந்தது. 

இந்தப்புத்தகத்திற்கு லிங்க் எப்படி எடுப்பனு எனத் தெரியாமல் (ஹிஹிஹிஹி, அ.வ.சி.) அமேசான் பக்கத்திற்கே போய்ச் சுட்டியைக் காப்பி செய்து கொண்டு வந்து போட்டிருக்கேன். சரியாய் இருக்கும்னு நினைக்கிறேன். இலவசமான தரவிறக்கம் உண்டா என்ன என்பது குறித்துத் தெரியலை. பைசா கொடுத்துத் தான் வாங்கணுமோ என்னமோ! அடுத்ததும் "பாரம்பரியச் சமையல்கள்! பகுதி 2" புத்தகமும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம். நண்பர்கள் அனைவரும் ஆதரவளிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

இதில் நாங்கள் சென்ற நவ திருப்பதிப் பிரயாணங்கள், நவ கயிலாயப் பிரயாணங்கள், மற்றும் குற்றாலம், தென்காசி, சங்கரன் கோயில் பயணங்கள், ஶ்ரீவில்லிபுத்தூர் சென்றது என எல்லாமும் இருக்கும். ஏற்கெனவே என்னோட "ஆன்மிகப் பயணம்" வலைப்பக்கத்தில் போட்டவை தான். அங்கேயும் போய்ப் படிச்சுக்கலாம். நன்றி.

Sunday, April 10, 2022

சுண்டல், பாயசம், பானகம், நீர்மோர் சாப்பிடுங்க!

 கலக்கல் படம்! மறுபடி, மறுபடி பார்த்து ரசித்தேன். 



தற்செயலாக விமரிசனம் வலைப்பக்கத்தில் காவிரி மைந்தன் மாயாபஜார் படத்தின் டிஜிடல் வண்ணப் படத்தின் இரு காட்சிகளை இணைத்திருந்தார். அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்து படம் பார்க்கலாம்னு போனேனா! காவிரி மைந்தன் இணைத்திருக்கும் பாடல் காட்சியை மறுபடி பார்த்துட்டு அதற்கு இணைப்புக் கொடுத்தேன். கூடவே நமக்கு ரொம்பப் பிடிச்சக் கல்யாண சமையல் சாதம். இதற்கெல்லாம் ஈடு, இணை ஏது இந்தக் காலத்தில்! விருப்பம் உள்ளவர்கள் பார்த்து மகிழுங்கள். 

இன்றைய ஶ்ரீராமநவமிப் படங்கள்! கீழே!



இன்றைய அலங்காரத்தில் ஶ்ரீராமர். மல்லிகைப்பூச் சரம் மட்டும் நான் கைகளால் தொடுத்தது. எப்போவும் கதம்பமும் தொடுத்து மாலையாக்கித் தான் போடுவது உண்டு. ஆனால் இப்போல்லாம் உட்காருவது சிரமமாக இருப்பதால் கட்டிய கதம்பமாகவே வாங்கிடறார். 


இந்த உம்மாச்சிங்கல்லாம் ரோஜாப்பூ வைச்சுண்டு இருக்காங்க.  தினம் தினம் எல்லா உம்மாச்சிங்களுக்கும் பூ வைச்சு முடிப்பதற்குள்ளாக ஒரு மணி நேரம் ஆயிடும். அதுக்கப்புறம் விளக்கேற்றி ஸ்லோகம் சொல்லிக் கொண்டே நிவேதனம். சில நாட்களில் ஸ்லோகம் ஷார்ட் கட் ஆயிடும். பசி மிகுதியால்! :) உம்மாச்சி கோவிச்சுக்க மாட்டாரே!


இன்றைய நிவேதங்கள். கோலப்பலகை பக்கத்துப் பாத்திரத்தில் பாசிப்பருப்புச் சுண்டல், பக்கத்தில் பாயசம், மஹாநிவேதனம் என்று சொல்லப்படும் அன்னம். பக்கத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், உடைத்த தேங்காய்களுடன் பச்சை மஞ்சள். அதர்குப் பின்னால் சொம்பில் பானகம், பக்கத்துக்கிண்ணத்தில் நீர் மோர். இன்னிக்கு வடை எல்லாம் தட்டலை. நேத்திக்கு அப்பாதுரை வந்ததாலே அவருக்காகச் சிறப்பு உணவு ஏதும் பண்ணணுமேனு  முருங்கைக்கீரை அடை பண்ணினேன்.  ஆகவே இன்னிக்கு நோ வடை. முருங்கைக்கீரை அடையை எங்கள் ப்ளாக் குழுமத்தில் போட்டிருந்தேன். யாருமே கண்டுக்கலை. சாப்பிட்ட அப்பாதுரையைத் தவிர்த்து! :( க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நெல்லை கூட வரலை. :(



அடுப்பிலே அடை வேகும் படம் கூட இருக்கு. ஆனால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு மாதிரிக்கு இந்தப் படம் மட்டும் போட்டிருக்கேன். 

Friday, April 08, 2022

கண்டு பிடிங்க! பார்க்கலாம்!

 


இந்த ராமர் படத்தையும் பாருங்க, கீழே உள்ள துணை விக்ரஹங்களையும் பாருங்க. கொஞ்சம் இடம் மாறி விட்டது. நடுவில் கொண்டு வர முடியலை எல்லாவற்றையும். ஆகவே அவை மட்டும் ஓரமாக ஒதுங்கி விட்டன. 


இங்கே கீழே வைச்சிருக்கும் விக்ரஹங்களையும் பார்த்துக்கோங்க.


இப்போ இங்கே ஶ்ரீராமரைப் பார்த்தீங்களா?



கீழேயும் பார்த்தாச்சா?

கடைசி இரு படங்களும் இப்போ இந்த (தமிழ்) வருஷப் பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்கு எடுத்தது.


மேலே உள்ள இரு படங்களும் வேறு சந்தர்ப்பத்தில் எடுத்தவை.  மேலே உள்ளவை எங்கே எடுத்த படங்கள்? கீழே உள்ளவை எங்கே எடுத்த படங்கள்? ஆறு  வித்தியாசங்களுக்கும் மேல் கண்டுபிடிங்க பார்ப்போம்! :)))))


நெல்லை, முக்கியமா உங்களுக்காகவேத் தேடி எடுத்துப் போட்டிருக்கும் ஶ்ரீராமர் படம். மேலே உள்ள ராமருக்கும்/கீழே உள்ள ராமருக்கும் என்ன வித்தியாசம் கண்டுபிடிங்க! பார்க்கலாம்.

Monday, April 04, 2022

கன்யாதானம் செய்வதென்றால் என்ன?

 




மத்யமர் குழுமத்தில் ஒரு சிநேகிதி (பெயரெல்லாம் நினைவில் இல்லை) அவருடைய மகள் தன்னைக் கன்யாதானம் செய்வதைப் பற்றிய கேள்வியைக் கேட்டிருந்தார். அவருடைய கேள்வியின் அர்த்தம் "பெண் என்ன பொருளா?" தானம் செய்ய! என்பதே ஆகும். பெண் ஒரு பொருள் அல்ல. மனுஷி தான். ஆனால் அவளுக்குத் தான் சக்தியே அதிகம். ஆதார சுருதி. பெண் இல்லாமல் சிருஷ்டி ஏது? எத்தனையோ கண்டு பிடித்த நம் விஞ்ஞானிகளால் இன்னமும் ஆண் தான் பிள்ளை பெற வேண்டும் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை. செயற்கைக் கருவானாலும் அதைத் தாங்க ஒரு பெண் தான் தேவைப்படுகிறாள். 

சுமார் நூறு, நூற்று ஐம்பது வருடங்கள் முன்னர் பெண் என்றால் பெற்றவர்கள் பாரம் என நினைத்த காலம் உண்டு. அதற்கு முன்னரும் அப்படி எல்லாம் பெண்ணை வளர்க்கவில்லை. அதன் பின்னர் தற்போதைய காலத்திலும் பெண்கள் அப்படி வளர்க்கப்படவில்லை. ஆனால் தற்காலத்தில் சொல்லும் சுதந்திரம் என்பது வேறு. உண்மையான சுதந்திரம் வேறு. அது தனியாக இன்னொரு சமயம் பேசிக்கலாம். இப்போக் கல்யாணங்களில் பெற்ற பெண்ணைப் பெற்றோர் தானமாகக் கொடுப்பது பற்றித் தானே பேசணும். பொதுவாக அன்னதானம் சிறப்பு என்றாலும் உயிருடன் உள்ள ஒரு பெண்ணை ஒரு ஆண்மகனுக்கு தானமாகக் கொடுக்கும் தந்தை மிகச் சிறப்பானவர். பெண்ணும் ஆணும் சேர்ந்தே இல்லறம் நடத்திக் குழந்தைகளைப் பெற்று அற வழியில் அவரவர் தர்மப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே திருமணத்தின் முக்கியக் குறிக்கோள். இன்றைய ஆடம்பர நவ நாகரிகத் திருமணங்களில் அப்படி இல்லை என்பது வேறு விஷயம்.

இப்போக் கன்யாதானம் குறித்த சில விபரங்களைப் பார்ப்போம். ஒரு பெண்ணை தானம் செய்து கொடுப்பதன் மூலம் தானம் செய்பவரின் முந்தைய பத்துத் தலைமுறைகள், பிந்தைய பத்துத் தலை முறைகள், அவருடைய தலைமுறை ஆக மொத்தம் 21 தலைமுறைகளுக்குக் கரை சேர்க்கும் என்பது அப்போது சொல்லப்படும் மந்திரங்கள் மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள். 

"தசானாம் பூர்வேஷாம்

தசானாம்பரேஷாம்,

மம ஆத்மனஸ்ச

ஏகவிம்சதி குல உத்தாரண" என ஆரம்பிக்கும் ஸ்லோகம் மேலும் நீண்டு மேலும் உன் குலத்து வம்ச விருத்திக்காகவும் நான் என் பெண்ணை என் குலவிளக்கை உனக்குக் கன்யாதானமாகக் கொடுக்கிறேன் எனப் பெண்ணின் தந்தை சொல்லுவார். இதே ஆண் பிள்ளை எனில் அவர் செய்யப்போகும் கர்மாவின் மூலமே அந்த ஒரு தலைமுறைக்கு மட்டுமே நிவர்த்தி. ஆனால் கன்யாதானமோ கொடுக்கும் குடும்பத்தின் 21 தலைமுறைகளை கரை சேர்த்து விடும்.

பொருளை தானமாகக் கொடுத்தாலோ, கால்நடைகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள், பூமி போன்ற எந்தப் பொருளை தானமாய்க் கொடுத்தாலும் பின்னாட்களில் நாம் அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். எவ்வகையிலேனும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் பெற்ற பெண்ணை தானமாகக் கொடுத்த பின்னர் அந்தப் பெண்ணை நாம் மீண்டும் நமக்கெனப் பெற முடியுமா? தந்தை/தாய்/மகள் என உறவு நீடிக்கும் என்பது வேறு. ஆனால் பெண்ணை நாமே திரும்பப் பெற முடியாது அல்லவா? எப்படி தானம் கொடுப்பார்கள் தெரியுமா?

கல்யாணத்திற்கு வந்திருக்கும் நிறைந்த சபையில், பெரியோர்களின் முன்னிலையில் வேத மந்திரங்களின் கோஷத்தோடு நடைபெறும் கன்யாதானம். பெண் இருந்தாலே வீடு முழுமை பெறும் என்பது மறுக்கவோ/மறைக்கவோ முடியாத உண்மை.  இதைத் தான் மநுவும் சொல்லி இருக்கிறார்.  க்ருஹத்தில் முக்கியமானவள் க்ருஹணீ என்னும் பெண்ணுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கார்.  இருங்க, இருங்க, மநு அப்படி எல்லாம் சொல்லலைனு சொல்றவங்களுக்கு!  அதைத் தனியா வைச்சுப்போமா? மநு சொன்னதை யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை என்பதே உண்மை என்பதோடு இப்போ நிறுத்திப்போம். பெண்ணின் அப்பா பிள்ளையாரை வேண்டிக்கொண்டு மஹாவிஷ்ணுவைப் பூஜிப்பார்.  இங்கே இப்போது மாப்பிள்ளை தான் மஹாவிஷ்ணு சொரூபம்.  ஆகவே மாப்பிள்ளைக்குத் தான் ஆசனம் கொடுத்து வரவேற்று, பெண்ணின் அம்மா துணை செய்ய அவர் பாதங்களை அலம்பித் துடைத்து, பாலிட்டு, சந்தனம் குங்குமம் வைப்பார்கள்.  இதுக்கு எனப் பாலிடும் கிண்ணம்னு வெள்ளியிலே வாங்கி மாப்பிள்ளைக்குக் கொடுத்திருப்பாங்க. பின்னர் கிழக்கே பார்த்துப் பெண்ணின் அப்பா உட்கார்ந்து கொள்ளப் பிள்ளை எதிரே மாமனாரைப் பார்த்துக் கொண்டு நிற்பார். பெண் தந்தை மடியில் அமர்ந்திருப்பாள். பெண்ணின் அம்மாவும் அருகே இருப்பார்.


இப்போக் கன்யாதானம் நடைபெறுகையில் பெண்ணின் பெயரையும், பிள்ளையின் பெயரையும் தனித்தனியாக  மூன்று முறை சொல்லுவார்கள்.  மூன்று முறை சொல்வதன் மூலம் அது முழுமை பெறுகிறதாக ஐதீகம்.  அனைத்துப் பெரியோர்களுக்கும் தெரியும்படியாகப் பெண்ணின் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயரை வரிசைக்கிரமமாகச் சொல்வார்கள்.  உதாரணமாக எங்க பெண்ணின் கல்யாணத்தில், என் மாமனாரின் அப்பா பெயர் ஶ்ரீநிவாசன்.  ஆகவே ஶ்ரீவத்ஸ கோத்திர, ஶ்ரீநிவாச சர்மாவின் கொள்ளுப் பேத்தியும், குஞ்சிதபாதம் ஐயரின் பேத்தியும், சாம்பசிவ ஐயரின் பெண்ணும் ஆன என்று சொல்வார்கள்/சொன்னார்கள்.    அதே போல் பிள்ளை தரப்பிலும் பிள்ளையின் கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா ஆகியோரின் பெயர்கள் சொல்லி இன்னாரின் கொள்ளுப்பேரன், இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என அறிவிக்கப்படும்.  இவருக்கு எங்கள் மகளை முழு மனதோடு தாரை வார்த்துக் கொடுக்கிறேன்னு அப்பா சொல்வார்.  மாப்பிள்ளைப் பெண்ணை தானம் வாங்கிக் கொள்வார். பின்னர் புதுப்பாயில் அமர்ந்து கொண்டு அக்னி வளர்க்கச் செல்வார்கள்.  பெண்ணின் அப்பா மாப்பிள்ளைக்கு மதுபர்க்கம் என்னும் தயிரில் தேன் கலந்த திரவத்தைக் கொடுப்பார்.  பசுமாடு தானம் கொடுக்கணும்னும் ஐதீகம்.  ஆனால் கொடுக்கிறதில்லை.  இந்த மதுபர்க்கம் தான் மாப்பிள்ளைக்கு ஆகாரம்.  என்றாலும் சிலரோட சம்பிரதாயப்படி இதன் பின்னர் மாப்பிள்ளைக்குச் சாப்பிடவும் கொடுப்பாங்க. எங்களுக்கெல்லாம் பெரிய  நாமம் தான்! :)))) அடுத்து மாப்பிள்ளைப் பெண்ணுக்குச் சில சுத்தி சமஸ்காரங்கள் செய்யணும்.

இவ்வளவு அர்த்தங்களும் புனிதங்களும் நிறைந்த கன்யாதானம் இன்றைய நாட்களில் வெறும் தானமாக மட்டுமே பார்க்கப்படுவது என்பது காலத்தின் கொடுமை அல்லவா? நமக்குத் தெரியலைனாலும் தெரிந்த/அறிந்த பெரியோரிடம் கேட்டுக் கொள்ளலாமோ? இதன் மூலம் யாருடைய மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. கூடியவரை தெரிந்தவரை விளக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இதைக் குறித்துப் பல பதிவுகள் போட்டிருக்கேன். முக்கியமாக என் கல்யாணம் குறித்த பதிவுகளையும் இந்த வலைப்பக்கம் பார்க்கலாம். பொதுவான தென்னிந்திய பிராமணக் கல்யாணங்கள் குறித்தும் பார்க்கலாம். 

தென்னிந்தியக் கல்யாண நடைமுறைகள்  2013 இல் எழுத ஆரம்பித்து சப்தபதி வரை எழுதி முடிச்சிருப்பேன். 

கல்யாணமாம் கல்யாணம் 2011 ஆம் ஆண்டில் எழுதிய என்னோட கல்யாண நினைவுகளை இங்கேயும் பார்க்கலாம். 

Friday, April 01, 2022

குலபதி என்றால் என்ன அர்த்தம்? தெரியுமா?

குலபதி என்றால் என்ன அர்த்தம்?  ஆசார்ய ஹ்ருதயம் வலைப்பக்கம்  2008 ஆம் ஆண்டு முடிந்து 2009 ஆம் ஆண்டு பிறக்கையில் எழுதியதன் மீள் பதிவு. இப்போதைய சூழ்நிலைக்கேற்பச் சிற்சில வாக்கியங்கள் மாற்றத்துடன்.  அதோடு இன்று தெலுங்குப் புத்தாண்டு. என் அப்பா வீட்டில் கொண்டாடுவாங்க. இப்போ எப்படினு தெரியலை. :)

 குலபதி என்றால் என்ன அர்த்தம்னு சிலர் நினைப்பாங்க. நம் நாட்டிலே திரு கே.எம். முன்ஷிஜி அவர்களுக்கும் குலபதி ஶ்ரீபாலகிருஷ்ண ஜோஷி அவர்களுக்கும் இந்தப் பட்டம் அவரவர் பெயருக்கு முன்னால் வரும்.   அதுக்கு பதில் எழுதி நிறைய நாட்கள் ஆகியும் போடமுடியலை. இன்னிக்குத் தெலுங்கு  புது வருஷப் பதிவாகவும், அதே சமயம் ஆசார்ய ஹ்ருதயத்திலே வலைப்பக்கம் வாராவாரம் வியாழனில் குருவைப் பற்றிய பதிவுகள் போடுவோம். ஆகவே அந்தக் குறிப்பிட்ட   வாரம் வியாழக் கிழமைப் பதிவுகள் தவறக் கூடாது என்பதாலும் அதிலே  போட்டிருந்தேன்

முன் காலத்தில் ஆசாரியர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பெயர்ந்து கொண்டே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். படகுகளிலே தங்கள் சிஷ்யர்கள் கூட்டத்தோடு போய்ச் சொல்லிக் கொடுத்திருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட நாட்டின் தலை நகரையோ, அல்லது முக்கிய நகரையோ அடைந்ததும் அங்கே தங்கி இருந்து கொண்டு அந்த நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும், தங்களால் இயன்ற கல்வி போதனை செய்திருக்கின்றனர். இம்மாதிரி ஒரு ஆசாரியரிடம் பத்தாயிரம், இருபதாயிரம் மாணாக்கர்களுக்கு மேல் பயின்றதுண்டு. இப்போ எல்லாம் இருக்கிற Residential System of Schools and Colleges ஏதோ அதிசயமா நினைக்கின்றோம். ஆனால் அந்தக் காலங்களில் அது தான் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது. எந்த ஆசாரியரிடம் மாணாக்கர்கள் கற்றுக் கொள்கின்றனரோ அவர்களே தங்கள் மாணாக்கர்கள் எத்தனை பேர் இருந்தாலும், உணவும், உடையும் கொடுத்துத் தங்கள் மாணாக்கர்களை அறிவிலும், வீரத்திலும், விவேகத்திலும் சிறந்த குடிமக்களாய் ஆக்கி இருக்கின்றனர். இதற்கெல்லாம் அந்த நாட்டின் அரசர்களும் உறுதுணையாய் இருந்திருக்கின்றனர். 

பள்ளியின் பிரின்சிபால் என்பவர் எல்லா வகுப்புகளுக்கும் தினமும் நேரிடையாய்ப் பாடம் எடுக்க மாட்டார் அல்லவா? அதுபோல் இங்கேயும் முக்கிய ஆசாரியராய் இருப்பவர் பல வருஷங்கள் படித்துத் தேர்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமே கடைசியில் குருகுல வாசம் முடியும் முன்னர் தன்னுடைய போதனையை நேரிடையாகத் தருவார். அது வரையில் அவரால் பயிற்றுவிக்கப் பட்ட சிஷ்யப் பரம்பரையினர் குருவாய் இருந்து பாடம் சொல்லித் தருவார். இம்மாதிரி சிஷ்யர்களுக்கு உணவும், உடையும் கொடுத்துக் கல்வியும் கொடுக்கும் ஆசாரியர்களே அக்காலத்தில் குலபதி என அழைக்கப் பட்டனர். வசிஷ்டர் ஒரு குலபதி என ரகுவம்சத்தில் சொல்லி இருப்பதாய்ச் சொல்கின்றார் நம் பரமாசாரியார். அதே போல் கண்வ ரிஷியையும் குலபதி என சாகுந்தலத்தில் சொல்லி இருக்கின்றார்களாம். இவை எல்லாம் பெரிய அளவிலான வித்யாசாலைகள். நமது பல்கலைக் கழகங்கள் மாதிரி இருக்குமோனு நினைக்கிறேன். இது தவிர சிறிய அளவிலான குருகுலங்களும் இருந்து வந்திருக்கின்றன


குலபதி திரு கே.எம். முன்ஷி. இவரால் எழுதப்பட்ட "கிருஷ்ணாவதாரம்" ஏழு/எட்டு பாகங்களையும் தான் நான் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி மாற்றம் செய்தேன். "பாரதிய வித்யா பவன்" ஆரம்பிக்கப்படக் காரணம் ஆனவர். பல பள்ளிகள், கல்லூரிகள் நடத்தியவர்.



குலபதி டாக்டர் ஶ்ரீ எஸ், பாலகிருஷ்ண ஜோஷி!

மிகப் பெரிய சம்ஸ்கிருதப் புலவர்/ தமிழகத்தைப் படிப்பில் முன்னேற்றம் காண வைத்ததில் பெரும்பங்கு இவருக்கு உண்டு. மஹாபெரியவர்/பரமாசாரியார் இவரைப் போற்றி இருப்பதோடு திரு ஜோஷி அவர்களும் பெரியவரிடம் ஈடுபாடு கொண்டவர். இவர் மூலம் வந்ததே தற்போதைய சிபிஎஸ்சி பாடத்திட்டம். 

"யோ அன்ன தானாதி போஷணாத் அத்யா பயதி" என்று ஆசார்ய லட்சணம் கூறுவதாயும் தெரிய வருகின்றது. இங்கே ஸ்ரீபாலகிருஷ்ண ஜோஷியையும், கே.எம். முன்ஷியையும் குலபதி என்றதற்குக் காரணமும் அவர்களால் நிறையப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வித்யாசாலைகள் ஏற்படுத்தப் பட்டதும், நல்ல முறையில் ஸ்ரீ ஜோஷி அவர்களால் தியாலஜிகல் பள்ளி ஆசிரியப் பதவி திறம்பட நிர்வகிக்கப் பட்டதாலும் கெளரவப் பட்டமாய்க் கொடுக்கப் பட்டது என்றும் தெரிய வருகின்றது. இது வே ஆசார்ய லட்சணம் என்று தெய்வத்தின் குரல் நாலாம் பாகத்தில் பரமாசாரியாரின் அருள் வாக்கில் இருந்து தெரிய வருகின்றது. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.