நானும் எவ்வளவோ முயற்சி செய்து திருவாரூர்ப் பயணக் கட்டுரையைத் தொடர நினைச்சாலும் எழுத உட்காரவே நேரம் இல்லை. :( ஏப்ரல் மாதம் பதினைந்து தேதியில் இருந்து ஒரே வேலை மும்முரம். அதற்கு முன்னால் வீட்டில் கழிவறை மாற்றம், கதவுகள் மாற்றம், வெள்ளை அடித்தல், பெயின்டிங் செய்தல் என்று கிட்டத்தட்ட 20 நாட்கள் பிழிஞ்சு எடுத்துட்டாங்க. வேலை செய்தது என்னமோ அவங்க தான். அவங்க கேட்கும் நேரத்தில் கேட்டதை எடுத்து வைச்சு, ஒழிச்சுக் கொடுத்து, திரும்ப எடுத்து வைச்சு சமையலறைப் பொருட்களைக் கணினி அறைக்கு மாற்றி, அதைத் தற்காலிகப் பூஜை அறையாக மாற்றி, இன்னொரு படுக்கை அறையில் சமைச்சு, 2,3 நாட்கள் அங்கேயே குடி இருந்துனு எல்லாம் சரியாக மே மாதம் பதினைந்து தேதிக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின்னர் நாத்தனார் பேத்தி கல்யாணம். இங்கேயே எங்க குடியிருப்பில் இருந்து தெரியுமே! அதான் செண்டை மேளம் எல்லாம் வாசிச்சுக் காதையும், உடம்பையும் பாடாய்ப் படுத்துவாங்களே அந்தச் சத்திரம்.
நாத்தனார் பெண்ணிடம் கல்யாணத்தில் எந்த சங்கீதம் வைச்சாலும் இந்த லைட் ம்யூசிக்கும், செண்டை மேளமும் மட்டும் வைக்காதேனு கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். வைக்கலைனு உறுதிமொழிப் பத்திரமும் கொடுத்துட்டாங்க. ஆனாலும் ரிசப்ஷனில் சங்கீத் நிகழ்ச்சி, இந்தக் கால இளைஞர் பட்டாளங்கள் விரும்பியதால் வைச்சிருந்தாங்க. மெஹந்தியும் இருந்தது. ஆனால் நான் மெஹந்திக்கெல்லாம் போகலை. அதோடு வீட்டில் உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அவங்க இங்கே வரச்சே கூடவே வந்து உபசரித்து விட்டு அப்புறமாத் திரும்பச் சத்திரம் போய்னு ஒரு வாரம் போனதே தெரியலை. அதுக்கப்புறமாச் சரியாகும்னு நினைச்சால் இங்கே நம்ம வளாகத்தில் ஒரு கல்யாணம். அதற்குக் கல்யாணத்துக்குப் போவதா./ரிசப்ஷனுக்குப் போவதானு சீட்டுப் போட்டுப் பார்த்தோம். முதல்லே நான் அவரை மட்டும் போகச் சொன்னேன். அவரும் சரினுட்டுப் பின்னர் இரவு ரிசப்ஷனுக்குப் போவதெனில் தனியாகப் போக முடியாதுனு யோசிச்சார். சரினு அப்புறமா நானும் கிளம்பினேன். இங்கே ஓலா மாதிரி ஒரு ஆட்டோ ஓட்டுநர்கள் குழுவில் ஆட்டோவை வெயிட்டிங்கில் இருந்து கூட்டி வரமாதிரி ஏற்பாட்டில் அனுப்பி வைக்கிறாங்க. அவங்க கிட்டே ஆட்டோ முன்பதிவு செய்தோம். ரெட் டாக்சி எல்லாம் ட்ராப் தான் வெயிட்டிங்கோ பாக்கேஜோ இல்லைனு சொல்லிட்டாங்க. அப்புறமா அந்த ஆட்டோவில் போனோம். ஏழு மணிக்கு ரிசப்ஷன்னு போட்டிருந்தும் ஆரம்பிக்கையில் எட்டரை ஆகிவிட்டது. இங்கே சங்கீத் வேறே பெண்/பிள்ளை வரும்போதே எப்போவும் போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வந்தாங்களா. அது முடிஞ்சு நலுங்கு முடிஞ்சு ஆரத்தி எடுத்துப் பின்னர் ரிசப்ஷன் ஆரம்பிச்சது. அதன் பின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வரச்சே ஒன்பதரை. சாப்பாடு நன்றாக இருந்தாலும் நான் எப்போவும் போல் உணவுக்கட்டுப்பாடு! சாம்பார் இட்லியும் தயிர்சாதமும் மட்டும் சாப்பிட்டேன். ருமாலி ரொட்டி என்னும் பெயரில் மைதாவில் ரொட்டி போட அப்படியே ஒதுக்கிட்டேன். மற்றவை கொண்டு வரும்போதே நோ! நல்லவேளையாக இலைகளில் பரிமாறி வைச்சுட்டு ஈ மொய்க்கச் சாப்பிடச் சொல்லலை. உட்கார்ந்ததுமே பரிமாறினார்கள். நாத்தனார் பேத்தி கல்யாணத்திலும் அப்படியே. உட்கார்ந்தால் தான் பரிமாறினார்கள்.
மறுநாள் நெருங்கிய உறவினர் வருகை. அவங்களுக்காகச் சின்ன வெங்காயம்/முருங்கை போட்டு சாம்பார், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் போட்டு அந்தக் காலத்துக் காரக்கறி, பருப்பு ரசம், சதசதயம் என்னும் எங்க பக்கத்துப் பாயசம். (அரிசி தான் குழையவே இல்லை. திருஷ்டி) வாழைக்காய் வறுவல், மாங்காய்த் துண்டம் ஊறுகாய், தொக்கு எனச் சமைத்துச் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்ததில் நாள் ஓடியே விட்டது. நேத்திக்குப் பதினைந்து நாட்களாகக் கவனிக்காமல் விட்டிருந்த வேலைகளைச் செய்து முடித்துச் சாப்பிடும்போதே ஒரு மணி ஆகிவிட்டது. அதன் பின்னர் இணையத்தில் உட்கார்ந்தாலும் பதிவுகளில் இந்தக் கருத்துரைகள் போய் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடியதில் ஒரே வெறுப்பு. முந்தா நாள் வந்திருந்த உறவினர்கள் நான் வலைப்பதிவு ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து என் ஆதரவாளர்கள். ஆகவே புதுசா என்ன எழுதினேன்னு கேட்டதில் ரொம்பவே வெட்கமாக இருந்தது. சும்மாவானும் வெளியீடு செய்திருந்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன். பல பதிவுகளுக்கும் போகலை. என்னோட பதிவையும் கவனிக்க நேரமில்லை. என்னவோ இப்படி ஒரு சூழ்நிலை. ஒரு காலத்தில் நாலைந்து பதிவுகளிலும் எழுதிக் கொண்டு பெரிய வீட்டையும், பராமரித்துக் கொண்டு வருவோர்/போவோரையும் கவனித்துக் கொண்டு இருந்த நான் இப்போ இப்படி ஆயிட்டேன்! :(
பார்க்கலாம். போகப் போக எப்படி முடிகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க நினைச்சாலும் முடியலை. உடல்நிலையும் இடம் கொடுக்கணும்.