நான் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் செய்து கொண்டேன். அறிந்தவர், தெரிந்தவர், முகநூல் நண்பர்கள்/மத்யமர்கள்னு பலரும் அறுவை சிகிச்சை செய்துக்கப் போறாங்க அல்லது செய்து கொண்டிருக்காங்க. இன்னொரு கண்ணிற்கான அறுவை சிகிச்சைக்குப் போனால் மருத்துவர் சர்க்கரை சோதனையின் தற்போதைய நிலவரம் சரியாக இல்லை என்பதாலும், எனக்குக் கடுமையான இருமல் இருந்ததாலும் (இப்போதும் அவ்வப்போது இருக்கு) மருத்துவரே இப்போதைக்கு இன்னொரு கண் அறுவை சிகிச்சை வேண்டாம்னு சொல்லிட்டார். அதோடு இப்போ வெயில் வேறே தாங்கலை. உடல் முழுவதும் கொப்புளங்கள், கட்டிகள். அரிப்பு, வலி, எரிச்சல்! :( ஆகவே மறுபடியும் வேப்பிலை+குப்பைமேனி+மஞ்சள் கலவைக்குப் போகணும் இப்போதிருந்தே. இல்லைனா தாங்க முடியாது.
பெண்ணுக்கும் சாப்பாடு எல்லாம் இன்னமும் வழக்கமான முறையில் இல்லை. அது வேறே கவலை. இந்தியா வரச் சொல்லிண்டு இருக்கோம். 2015 ஆம் ஆண்டில் வந்தது. அப்புறமா வரவே இல்லை. என்ன செய்யப் போறாங்களோ தெரியலை. கு.குவுக்கு இப்போது ஈஸ்டர் விடுமுறை என்பதால் அவங்க யு.எஸ். போறாங்க. அங்கே தான் அவங்க மருத்துவச் சோதனைகள் எல்லாம் செய்து கொண்டு கண், பல் என எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொள்ளணும். இது அங்கே உள்ள நடைமுறைப்படி ஒவ்வொருவரும் கட்டாயமாய்ச் செய்துக்கணும். குஞ்சுலு நன்றாக வரைய ஆரம்பிச்சிருக்கு. அதுவாவே ஒரு லூடோ போர்ட் (அட்டை) வரைந்து வண்ணம் கொடுத்துட்டு அவங்க அப்பாவோட விளையாடியது. அது தோத்துப் போனால் அழுதிருக்கும் போல. அவங்க அப்பா "அழுமூஞ்சி துர்கா" என்று சொல்லுவாராம். ஆகவே இதுவும் அவ அப்பாவை "அழுமூஞ்சி அப்பா" என்று சொல்லிக் கொண்டு கையைத் தட்டிக் கொண்டு குதிச்சது. குழந்தைக்கு அடிக்கடி ஜூரம் வந்து விடுகிறது. அங்கே உள்ள சீதோஷ்ணம் காரணமா என்னனு தெரியலை.
எங்க எதிர் வீட்டு மாமியும் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாங்க போன வாரம். அவங்களுக்குக் கட்டெல்லாம் போடவில்லை. அன்னிக்கே ஒரு சாதாரண/அல்லது பவர் உள்ள கண்ணாடியைப் போட்டு அனுப்பிச்சுட்டாங்க. அறுவை சிகிச்சைக்காக நிறையப் பேர் இருந்ததால் காலை ஆறரைக்குப் போனவங்களுக்குப் பத்து மணிக்குத் தான் அறுவை சிகிச்சை நடந்திருக்கு. மகாத்மா காந்தி மருத்துவமனை, தென்னூரில் நடந்திருக்கு. இதே மாதிரித்தான் லென்ஸ்,மற்றவை எல்லாம். ஆனால் இவங்களுக்கு 20 நிமிடங்களில் சிகிச்சை முடிஞ்சிருக்கு. நாம தான் எல்லாத்திலேயும் சிறப்பானவங்க போல!
நாட்டு நிலவரங்கள் எதுவும் சரியாக இல்லை. அதைப் பற்றி எழுதப் போனால் பிரச்னைகள் தான் வரும். அதிலும் முக்கியமாகக் கோயில்கள்! நல்லவேளையாகத் திரைப்பட நடிகை காஞ்சனா தன்னுடைய சொத்தைத் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எழுதிக் கொடுத்தார். தமிழ்நாட்டின் அறநிலையத்துறையின் கைகளில் வந்திருந்தால்! நினைச்சாலே நடுக்கமா இருக்கு! பெண்கள் சுதந்திரம் அது இதுனு சொல்லிக் கொண்டு ஒரு பக்கம் பெண்களுக்கு வன்கொடுமைகள் நிகழ்ந்தால் இன்னொரு ப்க்கம் பெண்களே கண்வனைக் கொல்வது, தீயிட்டு எரிப்பது என்றெல்லாம் போய்க் கொண்டு இருக்கு. தமிழகத்தில் குடிப்பழக்கமும் அதிகரித்து இருப்பதை அதிகரித்து வரும் விபத்துக்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பக்கம் இலவசம் கொடுப்பது போல் கொடுக்கும் அரசு இன்னொரு பக்கம் அதை டாஸ்மாக் மூலம் திரும்பப் பெற்றுக் கொண்டு விடுகிறது.
கட்டுப்பாடின்றி வேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளது. இங்கே காவிரிப் பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் ஒரு சின்னப் பையர் ஸ்டன்ட் வேலை எல்லாம் செய்திருக்கார். அந்தப் பையரைப் பிடிச்சுட்டாங்களா என்னனு தெரியலை. இதை எல்லாம் வீடியோ எடுத்து முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொள்ளுவது இப்போதைய இளைஞர்களின் விருப்பம்.. அதோடு இல்லாமல் பேருந்தில் தொங்கிக் கொண்டு போறவங்களைக் கட்டுப்படுத்த ஓட்டுநர்/நடத்துநருக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. அதே போல் மின்சார ரயிலில் பயணம் செய்யும் இளைஞர்களையும் அடக்க ஒரு சிறப்புச் சட்டம்/அதிகாரம் ரயில்வே ஊழியர்களுக்குக் கொடுக்கணும். வேகமாகச் செல்லும் ரயிலில் தொங்கிக் கொண்டே போவதோடு அல்லாமல் பக்கத்தில் வரும் தூண்களின் மேலும் ஏறுவதற்கு முயற்சி செய்கிறார்கள், ரயில் ஓடும்போதே! இதை எல்லாம் சாகசம் என நினைக்கிறாங்க போல!
மீண்டும் சந்திப்போம்!