தேர்தல் முடிவுகள் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி உள்ளது. மோதிக்கு வெற்றியா எனில் தனிப்பட்ட முறையில் வெற்றி தான்,. ஆனால் பொதுவில் பார்த்தால் இம்முறை அவர் பிரசாரம் சரியில்லை, தனிமனிதத் தாக்குதல்கள் இருந்தன. பேச்சில் கொஞ்சம் கர்வம் தலைதூக்கி இருந்ததோ? அதோடு இல்லாமல் அயோத்தியில் பல பழமை வாய்ந்த ஆகம முறைப்படியான கோயில்கள் இடிக்கப்பட்டதில் மக்களுக்கு அதிருப்தி. மேலும் இம்முறை எதிர்க்கட்சிகள் கூட்டணியில் உ.பியின் அகிலேஷும், ராகுலும் நன்றாக உழைத்தனர். போதாததற்கு சோனியாவின் உணர்வு பூர்வமான பேச்சும் சேர்ந்து கொண்டது.
ராஜிவ் காந்தியைப் பற்றியும் இந்திரா காந்தியைப் பற்றியும் பேசியதை மக்கள் ரசிக்கவில்லை. ஆக இந்த வெற்றியானது கஷ்டப்பட்டுப் பெற்ற வெற்றியே அன்றி மோதிக்காக வந்தது இல்லை. அதோடு இல்லாமல் நிதிஷ்குமாரையோ, சந்திரபாபு நாயுடுவையோ எவ்வளவுக்கு நம்பலாம்? சந்தேகமே! இப்போதே நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அரசல், புரசலாகச் செய்திகள் வருகின்றன. ஒரே ஆறுதல் நிதிஷ்குமார் பிரதமர் ஆவதற்கு இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதும் அங்கே பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களும் தான்.
எல்லாவற்றையும் மீறிக் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஒரு வருடம் ஓடினாலே பெரிய விஷயம். என் டி ஏ கூட்டணியும் கூட இரு வருஷங்கள் தாக்குப் பிடித்தால் பெரிய விஷயம். கூடிய விரைவில் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டி இருக்குமோனு தோணுது. இப்போதைய தேர்தலில் பாஜக அதிக அளவில் மாபெரும் வெற்றி பெறாததுக்குக் காரணம் தேர்தல்கள் விட்டு விட்டு நடந்தவையும் ஒரு காரணம். ஒரு வாரத்துக்குள்ளாக அனைத்துப் பகுதிகளுக்கும் தேர்தல் நடந்திருந்தால் கருத்துக் கணிப்புகள் பலித்திருக்கும். இப்போது இடைவெளி நிறைய இருந்ததால் மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டிருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டைப் பற்றி ஒண்ணும் சொல்வதற்கில்லை. யானைக் கதை தான்.