தினம் தினம் ஏதேனும் ஒரு வேலைக்காகக் கணினியை வைத்துக் கொண்டு அமர்கிறேன். முடிஞ்சப்போ சில/பல பதிவுகளையும் படிப்பேன். ஏனோ எழுதணும்னு தோன்றுவதில்லை. ஸ்ரீராம் சொன்னாப்போல் எழுதினால் எனக்குக் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் தான். ஆனாலும் மனசு என்னமோ பதியவே இல்லை. சென்ற மாதம் நம்ம ரங்க்ஸை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற பின்னர் 2 மாசம் கழிச்சுத் தான் வரச் சொல்லி இருக்காங்க. இம்முறை இத்தனை மாதங்கள் கழித்து ரத்தப் பரிசோதனை முடிவுகள் கொஞ்சம் சாதகமாக வந்துள்ளது, ஓரளவு எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்... ஆனால் நடப்பது என்பது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது. இரு பக்கமும் உதவிக்கு ஆள் இருந்தால் கொஞ்சம் நடந்து வருகிறார். இன்னமும் தனியாக நிற்கவோ நடக்கவோ முடியலை.
இதுக்கு நடுவில் ஆரம்ப காலத்தில் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் திடீரெனப் போய்விட்டார்கள். அவங்களுக்குச் சம்பளம் இன்னும் அதிகம் தருவதாகச் சொல்லி முன்னால் வேலை செய்தவங்க கூப்பிட்டாங்களாம். அங்கே போயிட்டாங்க. வேறே பெண்கள் வருகின்றனர். இவர்களில் பகல் நேரத்துக்கு வரும் பெண் பரவாயில்லை. இரவு தான் சரியான ஆளாகக் கிடைக்கவில்லை இன்னமும். கேட்டிருக்கோம். கிடைக்கணும். இதெல்லாம் எழுதியே சில நாட்கள் ஆகிவிட்டன. இந்த மாதிரி சேவை செய்யும் பெண்களை ஏஜென்சி மூலம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும், முக்கியமாய் நமக்கும் நோயாளிக்கும் ஏற்படும் இன்னல்களையும் எழுதப் போனால் அடி விழும் எனக்கு. உனக்கு உதவி செய்ய வந்தவங்களைக் குத்தம் சொல்லலாமானு கேட்பாங்க எல்லோரும். மத்யமர் குழுமத்தில் ஒரு பெண்மணி இதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பிழிந்து காயப் போட்டிருந்தார். சுப்புத் தாத்தாவும் அவர் அனுபவத்தைச் சொல்லி இருந்தார். அதான் நிஜம். :( ஒத்துண்டே ஆகணும். :
இப்போது ஆடி மாதம் பிறந்ததுமே பண்டிகைகள் வரிசை கட்டிக்கொள்ளுமே என்னும் நினைப்புத் தான், ஒரு வழியாக ஆடி வெள்ளிக்கிழமை அன்னிக்கு நெய்க்கொழுக்கட்டை பண்ணி நிவேதனம் செய்து பிள்ளையாரைச் சரிக்கட்டினேன். மாவிளக்குப் போட ஊருக்குப் போக முடியாதே! ஆகவே இன்னிக்குப் பௌர்ணமி என்பதாலும் விசேஷமான குரு பூர்ணிமா என்பதாலும் ரங்க்ஸ் இன்னிக்கே போடச் சொல்லிட்டார். காலை எழுந்து கொண்டு வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு இன்றைய சமையல் பொறுப்பையும் வைச்சுண்டு இருந்ததால் அதையும் முடித்துக் கொண்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு மாவிளக்குக்கு மாவு அரைக்கவே பதினோரு மணி ஆயிடுத்து. அதன் பின்னர் வெல்லம் சேர்த்துக் கலந்து இரு உருண்டைகளாக உருட்டிக் கோலம் போட்ட இடத்தில் நுனி இலையைப் போட்டு எல்லாவற்றையும் வைத்துச் சந்தனம், குங்குமம் இட்டுப் பூ வைத்து வெற்றிலை, பாக்கு, பழம்,மஞ்சள் வைத்துப் பூவால் அலங்கரித்து மாரியம்மன் படத்தையும் வைச்சு மாவிளக்கு ஏற்றி இன்னிக்குச் செய்ய வேண்டியதையும் செய்தாச்சு. தப்போ/தவறோ அம்மன் பொறுப்புத் தான், எனக்கு இல்லை பொறுப்பு.
வழக்கம்போல் விவரணையுடன் குஞ்சுலுவுக்கு அனுப்பி வைச்சேன். அது இங்கே மடிப்பாக்கம் தாத்தா வீட்டில் தான் இருக்கு. அவள் அப்பா மட்டும் இங்கே வந்திருக்கார். உடம்பு சரியில்லை என்பதால் தூங்கிக்கொண்டே இருக்கார். குஞ்சுலு படங்களைப் பார்த்துட்டு நைஸ் பாட்டி என்று மட்டும் சொல்லி இருக்கு.