தினம் தினம் ஏதேனும் ஒரு வேலைக்காகக் கணினியை வைத்துக் கொண்டு அமர்கிறேன். முடிஞ்சப்போ சில/பல பதிவுகளையும் படிப்பேன். ஏனோ எழுதணும்னு தோன்றுவதில்லை. ஸ்ரீராம் சொன்னாப்போல் எழுதினால் எனக்குக் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் தான். ஆனாலும் மனசு என்னமோ பதியவே இல்லை. சென்ற மாதம் நம்ம ரங்க்ஸை மருத்துவரிடம் கூட்டிச் சென்ற பின்னர் 2 மாசம் கழிச்சுத் தான் வரச் சொல்லி இருக்காங்க. இம்முறை இத்தனை மாதங்கள் கழித்து ரத்தப் பரிசோதனை முடிவுகள் கொஞ்சம் சாதகமாக வந்துள்ளது, ஓரளவு எழுந்து உட்கார்ந்து கொள்கிறார்... ஆனால் நடப்பது என்பது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கிறது. இரு பக்கமும் உதவிக்கு ஆள் இருந்தால் கொஞ்சம் நடந்து வருகிறார். இன்னமும் தனியாக நிற்கவோ நடக்கவோ முடியலை.
இதுக்கு நடுவில் ஆரம்ப காலத்தில் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் திடீரெனப் போய்விட்டார்கள். அவங்களுக்குச் சம்பளம் இன்னும் அதிகம் தருவதாகச் சொல்லி முன்னால் வேலை செய்தவங்க கூப்பிட்டாங்களாம். அங்கே போயிட்டாங்க. வேறே பெண்கள் வருகின்றனர். இவர்களில் பகல் நேரத்துக்கு வரும் பெண் பரவாயில்லை. இரவு தான் சரியான ஆளாகக் கிடைக்கவில்லை இன்னமும். கேட்டிருக்கோம். கிடைக்கணும். இதெல்லாம் எழுதியே சில நாட்கள் ஆகிவிட்டன. இந்த மாதிரி சேவை செய்யும் பெண்களை ஏஜென்சி மூலம் எடுப்பதில் உள்ள சிரமங்களையும், முக்கியமாய் நமக்கும் நோயாளிக்கும் ஏற்படும் இன்னல்களையும் எழுதப் போனால் அடி விழும் எனக்கு. உனக்கு உதவி செய்ய வந்தவங்களைக் குத்தம் சொல்லலாமானு கேட்பாங்க எல்லோரும். மத்யமர் குழுமத்தில் ஒரு பெண்மணி இதை அக்கு வேறு ஆணி வேறாக அலசிப் பிழிந்து காயப் போட்டிருந்தார். சுப்புத் தாத்தாவும் அவர் அனுபவத்தைச் சொல்லி இருந்தார். அதான் நிஜம். :( ஒத்துண்டே ஆகணும். :
இப்போது ஆடி மாதம் பிறந்ததுமே பண்டிகைகள் வரிசை கட்டிக்கொள்ளுமே என்னும் நினைப்புத் தான், ஒரு வழியாக ஆடி வெள்ளிக்கிழமை அன்னிக்கு நெய்க்கொழுக்கட்டை பண்ணி நிவேதனம் செய்து பிள்ளையாரைச் சரிக்கட்டினேன். மாவிளக்குப் போட ஊருக்குப் போக முடியாதே! ஆகவே இன்னிக்குப் பௌர்ணமி என்பதாலும் விசேஷமான குரு பூர்ணிமா என்பதாலும் ரங்க்ஸ் இன்னிக்கே போடச் சொல்லிட்டார். காலை எழுந்து கொண்டு வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு இன்றைய சமையல் பொறுப்பையும் வைச்சுண்டு இருந்ததால் அதையும் முடித்துக் கொண்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு கொடுத்துட்டு மாவிளக்குக்கு மாவு அரைக்கவே பதினோரு மணி ஆயிடுத்து. அதன் பின்னர் வெல்லம் சேர்த்துக் கலந்து இரு உருண்டைகளாக உருட்டிக் கோலம் போட்ட இடத்தில் நுனி இலையைப் போட்டு எல்லாவற்றையும் வைத்துச் சந்தனம், குங்குமம் இட்டுப் பூ வைத்து வெற்றிலை, பாக்கு, பழம்,மஞ்சள் வைத்துப் பூவால் அலங்கரித்து மாரியம்மன் படத்தையும் வைச்சு மாவிளக்கு ஏற்றி இன்னிக்குச் செய்ய வேண்டியதையும் செய்தாச்சு. தப்போ/தவறோ அம்மன் பொறுப்புத் தான், எனக்கு இல்லை பொறுப்பு.
வழக்கம்போல் விவரணையுடன் குஞ்சுலுவுக்கு அனுப்பி வைச்சேன். அது இங்கே மடிப்பாக்கம் தாத்தா வீட்டில் தான் இருக்கு. அவள் அப்பா மட்டும் இங்கே வந்திருக்கார். உடம்பு சரியில்லை என்பதால் தூங்கிக்கொண்டே இருக்கார். குஞ்சுலு படங்களைப் பார்த்துட்டு நைஸ் பாட்டி என்று மட்டும் சொல்லி இருக்கு.
வாங்க கீதா அக்கா... ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பதிவு.... ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் நல்லபடி வந்திருப்பது சந்தோஷம். தொடர்ந்து முன்னேற்றம் வர பிரார்த்தனைகள்.
ReplyDeleteபிரார்த்தனைகளுக்கு நன்றி. ஸ்ரீராம், வீட்டுக்குள்ளேயே நடந்தாலே போதும்.
Deleteபதிவும் எழுதுங்கள்.. மற்றவர் பதிவுக்கும் வந்து கலந்துரையாடுங்கள் என்று சொல்வேன். சொல்வது எளிது. உங்கள் நிலையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது வேறு. கொஞ்சம் உச்சாக மனநிலை வரலாம். வாருங்களேன்....
ReplyDeleteநேரம், நேரம், நேரம், இப்போ இது கூட என் கைகளில் இல்லை. எப்போப் படுப்போம், எப்போ உட்காருவோம் என இருக்கு. கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் வரேன்,.
Deleteவெள்ளிக்கிழமை என் மருமகள் வீட்டில் அவர்கள் குலதெய்வத்துக்கு பிரார்த்தனை நிறைவேற்ற சோறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் மாவிளக்கு மாவு போட்டார்கள். ஆடிக்கு அங்கு சென்றிருந்த மகனும் மருமகளும் வெள்ளி இரவே சென்னை வந்தார்கள். மாவிளக்கு மாவும் கைக்கு (வாய்க்குக்)கிடைத்தது!
ReplyDeleteபட்டினியாக இருப்பவர்களுக்கு மாவிளக்கு சிறந்த உணவு, களைப்பைப் போக்கும்,. முன்னே எல்லாம் கோயிலுக்குச் சென்று மாவிளக்குப் போடும் நாட்களில் எனக்கு இதான் பகல் உணவு.
Deleteகுஞ்சுலு பெரிய குழந்தை ஆகி வருகிறார் போலும். இதில் சுவாரஸ்யம் குறைகிறதே....
ReplyDeleteஉண்மை தான் அதோடு அப்பாவிடம் தான் இதெல்லாம் கேட்டுக்கும், அப்போ இங்கே. குஞ்சுலு அங்கே. மேலும் அந்தத் தாத்தாவின் இன்னொரு மகளும் தன் பெண்ணோடு வந்திருப்பதால் குஞ்சுலு ரொம்ப பிசி விளையாட்டில்.
Deleteஉங்கள் பதிவை படித்தவுடன் உங்களை நேரில் கண்டது போல மகிழ்ச்சி.
ReplyDeleteமுடிந்த போது பதிவு போடுங்கள். உங்களுக்கு மன ஆறுதலை தரும்.
மாரியம்மனுக்கு மாவிளக்கு போட்டது மகிழ்ச்சி. அம்மன் அருளால் சார் விரைவில் நலமடைவார்கள்.
உதவி ஆள் நல்லபடியாக உதவினால் போதும் அதுவே நிம்மதியை தரும்.
துர்காகுட்டி வந்து இருப்பது மகிழ்ச்சி. விரைவில் உங்களை பார்க்க வருவாள்.
மகன் உடல் நிலை சரியாகும் ஊரிலிருந்து வந்த அலுப்பாக இருக்கலாம்.
நன்றி கோமதி அரசு. மகனும் முழங்கால் வலிக்காகச் சிகிச்சை எடுத்துக்கப் போவதால் மருமகள் அடுத்த வாரம் வரலாம். இன்னும் சரியாகத் தெரியலை. எல்லாம் நல்லபடி முடிஞ்சு அவங்கல்லாம் அவங்க அவங்க இடங்களுக்குப் போய்ச் சேரணும்.இப்போ வரும் உதவிப் பெண்கள் இருவரும் பரவாயில்லை. அநாவசியத் தலையீடு இல்லை. ஆரம்ப காலத்தில் 2, 3 மாதங்கள் வரை ரொம்ப சிரமப்பட்டோம். எதுவும் சொல்லக் கூடாது/ சொல்ல முடியாது. எல்லாம் அவங்க சொல்வது/நினைப்பது தான். இப்போ நேரடியாகக் கூப்பிடாமல் ஹோம்கேர் மூலமாக் கூப்பிட்டிருப்பதால் ஒரு பிடிமானம் இருக்கு. அவங்க நேரடித் தலையீடு இருப்பதால் இவங்களுக்குக் கொஞ்சம் பயமும் இருக்கு. எல்லாம் எழுதினால் சினிமாக் கதையை விட மோசமாக இருக்கும்.
Deleteஎல்லாம் நலம் பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteThanks Killerji.
Deleteஇனிய காலை வணக்கம்.
ReplyDeleteமாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பது நல்ல செய்தி. அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.
Thanks Venkat. Srirangam or Delhi?
Deleteமாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது என்பது நல்ல செய்தி. விரைவில் பூரண நலம் பெறப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteThank You, Thank You.
Deleteரொம்ப மாதங்கள் கழித்து ஒரு பதிவை எழுதியிருக்கீங்க. இணையத்துக்குத் தொடர்ந்து வரணும் என்று விரும்புகிறேன். எல்லோரிடமும் ஒரு டச் இருந்துகொண்டே இருக்கும்.
ReplyDeleteகுஞ்சுலு ஊருக்கு வந்திருக்கிறதா?
விசேஷங்களைத் தொடர்ந்து விடாமல் கொண்டாடிவருகிறீர்கள். பாராட்டுகள்.
நெல்லை, என் அப்பா விடாமல் பண்டிகைகளைக் கொண்டாடணும்னு வற்புறுத்துவார். அண்ணா வேலைக்குப் போன புதுசில் தீபாவளி வந்தப்போ எங்களுக்கெல்லாம் அண்ணா இல்லையேனு வருத்தம். அப்பாவோ விடாமல் இங்கே நாம் பண்டிகையை நல்லபடியாய்க் கொண்டாடினால் அங்கே அவன் நன்றாக இருப்பான் என்பார். நாங்கல்லாம் *(நானும், தம்பியும்) சிரிப்போம். ஆனால் அதன் அர்த்தமே இப்போத் தான் புரிய ஆரம்பிச்சிருக்கு. ஆகவே தான் விடாப்பிடியாக எதையும் விடாமல் செய்து விடுகிறேன். Kunjulu will be here till September.
Deleteபட்டாபிஷேக ராமர் படம் இப்போல்லாம் ரொம்ப நல்லா எடுக்கறீங்களே..
ReplyDeleteஇது, இது, இதான் நெல்லை டச். படம் எடுக்கையில் உங்களைத் தான் நினைச்சுப்பேன். அதனால் பயந்துண்டு சரியாய் வருதுனு நினைக்கிறேன்.
Deleteஉங்கள் கணவருக்கு உடல் நிலை தேறி வருவது குறித்து சந்தோஷம். எதையும் விட்டுக் கொடுக்காமல் பிள்ளையாருக்கு நெய் கொழுக்கட்டை, அம்மனுக்கு மாவிளக்கு எல்லாம் செய்தது ஆச்சர்யம்+ஆனந்தம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? இப்போது தங்கள் கணவருக்கு உடல் நலம் தேறி வருவது மனதிற்கு மிகுந்த மகிழ்வை தருகிறது.தங்கள் மகன் மருமகள் வரவும், பேத்தி வரவும் அவருக்கு மிக மன மகிழ்ச்சியை தந்திருக்கும். அதிலேயே அவர் நல்ல திடமாக உடல்நலம் தேறி விடுவார்.
தாங்கள் விடாமல் தெய்வ நம்பிக்கையுடன் பண்டிகைகளை கொண்டாடுவதும் சிறப்பு. தெய்வ பலம் மனதிற்கு இதமாக இருந்து இன்னமும் பல நல்லதுகளை வாழ்வில் தரும். தங்கள் கணவர் பூரண சுகமடைந்து முன்பு போல் எழுந்து நடமாடி நல்லபடியாக இருக்க இறைவனை நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நான்தான் வீட்டின் பல வேலைகள் காரணமாக தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.