வீட்டில் சார்ட் பேப்பர்களின் துண்டுகள் இல்லை. ஆங்காங்கே வண்ண, வண்ணக் கறைகள் இல்லை. கிண்ணங்களில் தண்ணீருடன் பிரஷ் எதுவும் இல்லை. கை கழுவும் வாஷ்பேசினில் வண்ணக் கறைகளோ தண்ணீர் தேங்கியோ இல்லை. எல்லாம் சுத்தமாக இருக்கு. சாப்பாடு மேஜையில் எதுவும் இல்லாமல் இடம் நிறைய இருக்கு. மணிக்கணக்காக உட்கார்ந்து சாப்பிடும் நபரைக் காணோம். அவரின் அழுகையும், சாப்பிட மாட்டேன் என்னும் பிடிவாதமும் இல்லை. மொத்தத்தில் வீட்டில் சப்தமே இல்லை. நிசப்தம். எங்கோ ஓர் குழந்தை அழுதால் குஞ்சுலுவோனு நினைக்கும் மனம். பின்னர் அவள் தான் ஊருக்குப் போயிட்டாளே என்பது நினைவில் வரும். காலையில் திரும்பத் திரும்ப வந்து கட்டிக் கொண்டது இன்னமும் உணர்வில் தோய்ந்திருக்கு. படிக்க அடம் பிடிக்கும்/சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தை. கவலைப்படும் பெற்றோர்கள். ஊருக்குப் போய்விட்டது.
இந்த வருஷமும் லிட்டில் கிருஷ்ணாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவியா பாட்டி? எனக் கேட்டுக் கொண்டது. வாசலில் கோலம் போட்டுக் காலடிகள் வைச்சாச்சு என அவ அப்பா சொன்னதும் ஓடி வந்து பார்த்துக் கொண்டது. அக்கம்பக்கம் வீடுகளிலும் போடுவதைப் பார்த்தது. பூத் தொடுத்துக் கொண்டிருக்கையில் மாலையைத் தூக்கிப் பார்த்தது. பின்னர் சாயங்காலம் வாங்கிய பக்ஷணங்களோடு வீட்டில் பண்ணின பால் பாயசத்தையும், வடையையும் கூடவே தயிர், வெண்ணெய், பால், புதுசாய்க் காய்ச்சிய நெய், அவல், வெல்லம், தேங்காய், பழங்கள் எல்லாம் வைச்சு நிவேதனம் பண்ணி தீபாராதனை காட்டினேன். என்னவோ தெரியலை. அதனிடம் வழக்கமான உற்சாகம் தெரியலை. ஸ்ரீராம் சொன்னாப் போல் குழந்தை பெரிய பெண்ணாக ஆகிக் கொண்டு வருகிறாளோ? குழந்தைத் தனம் இன்னமும் இருக்கு. ஆனால் சந்தேகங்கள் கேட்கும். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கும். நானாகச் சொன்னேன். ஜெயிலில் பிறந்தான் குட்டிக் கிருஷ்ணன் என. அவன் சகோதரி யோகமாயா பற்றிச் சொல்லிவிட்டு, நீ தான் யோக மாயா என்றேன். சிரித்துக் கொண்டாள், புரியலைனு நினைக்கிறேன். மொத்தத்தில் இந்த வருஷக் கிருஷ்ண ஜயந்தியை ஒப்பேத்தியாச்சு. கீழே படங்கள். இனி செப்டெம்பர் ஐந்தாம் தேதி எங்க ஆவணி அவிட்டமும், ஏழாம் தேதி நம்ம நண்பரின் விழாவும் வருது. எப்படிச் செய்ய்ப் போகிறேன்னு தான் புரியலை.