இந்த வருஷம் நவராத்திரிக்கு ஏதானும் எழுதணும்னு ஆரம்பிச்சுக் கடைசியில் ஒண்ணுமே எழுதலை. நேரம் சரியாகப் போய் விட்டது. அதோடு ஹோம்கேர் பெண்களுக்காகப் போட்டிருந்த கான்ட்ராக்டும் முடிஞ்சுடுத்து என்பதால் தாற்காலிகமாக மேல்கொண்டு கான்ட்ராக்டை நீட்டிக்கவில்லை. ஆகவே இப்போது பெண்கள் வருகையும் இல்லை. எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கேன். மருத்துவமனை செல்லும்போது மட்டும் ஹோம்கேரிடம் கேட்டுக் கொண்டு யாரானும் ஒரு நர்சிங்க் உதவியாளரை அனுப்பச் சொல்லிக் கூட்டிப் போகிறேன். இந்த அழகில் நவராத்திரிக்கு வருபவர்களைக் கவனிச்சு அனுப்பினாலே போதும்னு ஆயிடுத்து. தினமும் அநேகமாகச் சுண்டல் என்னமோ பண்ணினேன், அவருக்கு நல்லதாச்சே. வருபவர்களுக்கு மட்டும் வெற்றிலை, பாக்கு வைச்சுக் கொடுத்தேன் கொலு என்னும் பெயரில் என் தம்பி எப்போவோ பாண்டிச்சேரியில் இருந்தப்போ வாங்கின டெரகோட்டா பிள்ளையார்களை வைச்சுட்டேன். அயோத்தி ராமரும்,பழைய கொலு பொம்மையில் ஒரு இசைக்கும் மிருகமும் மட்டும் கிடைச்சது. இன்னமும் எடுக்கிறேன்னு வேலை செய்யும பெண் சொன்னார்தான்,. ஆனால் இடம் இல்லை. துவே தொலைக்காட்சிப் பெட்டியைக் கொடுத்துட்டோம் இல்லையா? அந்த இடத்தில் வைச்சேன். சரஸ்வதி பூஜை அன்னிக்குப் படத்தை வைத்துச் சில புத்தகங்கள் மட்டும் வைத்தேன். ரங்க்ஸால் உட்கார்ந்து பூஜை எல்லாம் பண்ண முடியாதே. ஆகவே பூவைப் போட்டுட்டு தீபாராதனை மட்டும் காட்டினேன். ரவிக்கை, புடைவை வைக்க மறந்து விட்டது. பூஜை தான் பண்ணலையேனு மனதை சமாதானம் செய்து கொண்டேன், வேறே வழி
நவராத்திரிக் கோலம்
பொம்மைகள்
சரஸ்வதி பூஜை
அடுத்து தீபாவளி வருதே! என்ன செய்யறது? காட்டன் புடைவைகள் 2,3 இருந்தது தான். ஆனால் அவை தினப்படிக்காக வாங்கினவை. தீபாவளிக்குனா நாங்க அநேகமா விஜயதசமி அன்னிக்குப் போய் வாங்குவதை வழக்கமாக வைச்சிருந்தோம், எனக்குக் காலில் பிரச்னை வந்ததில் இருந்தே அது முடியாமல் போச்சு. புடைவைக்காரர் வீட்டுக்கு வருவார்/அல்லது பக்கத்தில் இருக்கும் கடைக்கு முக்கி, முனகிக் கொண்டு நான் வர ரங்க்ஸ் அழைத்துப் போவார். பக்ஷணங்கள் செய்ய வேண்டாம்னு ஏற்கெனவே முடிவு பண்ணிட்டோம். ஏனெனில் என்னால் சாப்பாடு பண்ணும்போது நிற்பதே சிரமமாகப் போய் விட்டது. ஆகவே பக்ஷணங்கள் ஆர்டர் கொடுத்துட்டோம். எல்லாம் கால் கிலோ தான். வீட்டில் எண்ணெய் வைக்கணும்னு பஜ்ஜியும், மைசூர்ப்பாகும் மட்டும் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன். அதே போல் பண்ணிட்டு மருந்தும் கிளறிட்டேன்.
இந்தப்புடைவை விவகாரமும், ரங்க்ஸுக்கு வேஷ்டி எடுப்பதும் மட்டும் தான் பிரச்னை. ரங்க்ஸ் காதியில் தான் எடுத்துப்பார். ஸ்ரீரங்கத்திலேயே காதி பண்டார் இருப்பதால் எடுத்துடலாம். ஆனால் யார் போவது? அவராலும் முடியாது. என்னாலும் முடியாது. வேலை செய்யும் பெண்மணி கை கொடுத்தார். அவங்க வீட்டில் அவங்க கணவருக்கு அவர் தான் போய் எடுத்து வருவாராம். அதே காதி கடையில். ஆகவே நீங்க சொல்லுங்க நான் எடுத்துட்டு வரேன்னு சொல்லிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து எடுத்து வந்துட்டார். அன்றே நான் கோ ஆப்டெக்ஸில் நெகமம் காட்டன் புடைவைகளைப் பார்த்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்தால் பேமென்ட் டிடெயில்ஸே வரலை. அப்புறம் யதேச்சையாகப் பெண்ணிடம் சொல்ல அவள் உடனே கோ ஆப்டெக்ஸ் வெப்சைட்டில் போய் அந்தப் புடைவையைத் தேர்ந்தெடுத்துப் பணத்தையும் கட்டி ஆர்டர் செய்து விட்டாள். நடுவில் ஒரு நாள் ஞாயிறு என்பதால் திங்களன்று புடைவை வரும் எனச் செய்தியும் வந்து விட்டது. அதே போல் திங்களன்று புடைவையும் வந்து விட்டது.
ஆக தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தயார். தீபாவளி அன்று காலை மூன்று மணிக்கே எழுந்து வாசலில் முதல் ஆளாகக் கோலமும் போட்டேன்.
சாமி இடமும் துடைத்துக் கோலம் போட்டுப் பலகையிலும் கோலம் போட்டு எண்ணெய் காய்ச்சி, சீயக்காய், மஞ்சள் பொடி கரைத்தும் எடுத்து வைச்சேன், வாங்கிய பக்ஷணங்களோடு என்னோட புடைவைகளையும், ரங்க்ஸோட வேட்டி, ஷர்ட், துண்டையும் வைச்சேன். நான் எப்போவும் ஒரே ஒரு புடைவையாக வைக்க மாட்டேன் என்பதால் காட்டன் புடைவைகளில் ஒன்றை எடுத்து வைச்சு இரண்டு புடைவையாக வைச்சேன். அந்த்க காட்டன் புடைவை தான் மேலே தெரியுது. நான் தீபாவளிக்கு எடுத்தது வலப்பக்கம் தட்டில் இருக்கு. தலைக்கு நானே எண்ணெய் வைத்துக் கொண்டேன். வெற்றிலை, பாக்கு, ப்ழங்கள் வைச்சுப் பின்னர் குளிச்சுட்டு வந்ததும்ம் ரங்க்ஸ் வரும்வரை காத்திருந்துவிட்டுப் பின்னர் புடைவை வைச்சுக் கொடுத்தார் வாங்கிக் கட்டிக் கொண்டேன். ஆனால் அவர் பார்க்கலை. தூங்கிட்டார். முடியலை. சிறிது நேரத்திலேயே புடைவையை மாற்றிக் கொண்டு விட்டேன். ஆனால் அன்று மட்டும் காலை ஒன்பதரைக்கு ஒருதரம், மத்தியானம் சாப்பிட்டதும் ஒரு தரம், இரவு ஏழரை மணிக்கு எனத் தூங்கிக் கொண்டே இருந்தேன். அவ்வளவு அசதி. மறு நாளும் அப்படித் தான் அடிச்சுப் போட்டாப்போல் தூங்கினேன். இதான் இந்த வருஷ தீபாவளிக் கொண்டாட்டம்,.