எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 19, 2025

பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு!

 ஆன்மிகம் அல்லது பக்திப் பதிவுகள் எழுதணும்னு தான் நினைச்சுக்கறேன். ஆனால் மனம் பதிவதில்லை. அடுத்தடுத்தப் பிரச்னைகள் தான் காரணம். புத்தி அதிலே போய் விடுகிறது. பொதுவாக நான் என்னை அவமானம் செய்தவர்களிடம் கூடக் கடுமையாக நடந்துக்கறதில்லை. நடந்து கொண்டதும் இல்லை. கடந்து போய்விடுவேன். அவங்க பேசினாலும் பேசாவிட்டாலும் நான் பேசுவேன். ஆனால் ஒரு சிலர் இதைப்புரிஞ்சுக்கறது இல்லை. ஏதோ நாம் அவங்களிடம் நட்புக் கொண்டாடுவதை விரும்புவதாக நினைச்சுப்பாங்க. அதையும் தாண்டி வந்துடுவேன். ஆனால் நம்மைப் பயன்படுத்திக் கொண்டு நம்மூலம் பலரின் நட்பைப் பெற்றுக் கொண்டு பலன் அடைந்தவர்கள் பின்னால் நம்மை யாரென்றே தெரியாதது போல் நடந்துக்கறது தான் விசித்திரமாக இருக்கும்.  இன்னும் சிலர் நம்மிடம் மிகவும் நெருங்கிப் பழகிவிட்டு நம் நேரத்தையும் அவங்களுக்காகச் செலவிட வைச்சுட்டுப் பின் திடீரென வேறொருவர் நட்புக் கிடைச்சதும். நம்மை யாரோ போல் பார்ப்பதோடு அல்லாமல் புதுசாய்ப் பழகறவங்களைப் பத்தி நாம் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லாமல் மழுப்பிடுவாங்க. இதை எல்லாம் இப்போத் தான் கடந்து  வந்திருக்கேன்,. போனது போகட்டும்.

கொஞ்ச நாட்களாக எனக்கு ஏதேனும் சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படுகின்றன. 15 ஆம் தேதி சனியன்று ரங்க்ஸை செக்கப்புக்குக் கூட்டிச் செல்லும் நாள். போயிட்டுத் திரும்பும்போது ஒரு மாதிரி, கவனிக்க, ஒரு மாதிரித் தான் ஆட்டோவில் ஏறிட்டேன். வலக்கால் உள்ளே வந்துடுத்து,, இடக்கால் தான் எப்போதும் பிரச்னை, அதைச் செல்லம் கொஞ்சி, தட்டிக் கொடுத்துக் கொண்டு வரணும். மெல்ல மெல்ல நான் முயன்று கொண்டிருக்கையிலேயே கூட வந்த அட்டென்டர் டக்கெனக் கீழே குனிந்து என் காலைப்பிடித்து, மடித்து உள்ளே தள்ளினாரே பார்ப்போம். அந்த இடமே களேபரம் ஆகிவிட்டது, என்னோட கத்தலினால். அவ்வளவு வலி. அதிலும் முழங்காலில் இருந்து கணுக்கால் வரை. எனக்கு ஊசி போட வரும் நர்ஸ் வெரிகோஸ் வெயின் நீளமாக அந்த இடத்தில் இருப்பதோடு ஆங்காங்கே சுருட்டிக்கவும் செய்யறது. ஆகவே அது சுருட்டிக்கும்போது வலி அதிகமாத் தெரியும் என்றிருக்கிறார். போறாததுக்குக் கால் முட்டி வேறே. தொட்டாலே கன்னாபின்னாவென நரம்புகள், எலும்புகள் பின்னிக்கொண்டிருக்கும்போல! ரொம்ப கவனமாய்க் கையாள வேண்டிய கால். இப்படிப் பண்ணிட்டாரேனு வேதனையா இருந்தது. வீட்டுக்கு வந்ததும் நர்ஸை அழை க்கலாமானு இருந்தேன், வேண்டாம்னு தோணித்து, 

ஏனெனில் எப்படியும் திங்களன்று ஊசி போட வேண்டிய நாள் என்பதால் அவரே வருவார். நேற்றுக்காலையில் வழக்கமான வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு ரங்க்ஸுக்குக் கஞ்சிக்குக் கேழ்வரகை வறுத்தேன். அதை ஆற வைச்சுப் பையில் போட்டுவிட்டு அதில் சுக்கை இடித்துச் சேர்த்துப் பின்னர் மாவு மிஷினில் அரைக்கக் கொடுக்கலாம் எனக் குழவிக்கல்லை எடுத்தேன். அதான் தெரியும். அடுத்த நொடியே நான் குய்யோ, முறையோ எனக் கத்த ஹாலில் உட்கார்ந்திருந்தவருக்கு உடனே எழுந்தும் வர முடியலை. என்னனும் புரியலை, ஒரு நிமிஷம் எனக்கே புரியலை. அப்புறமாத் தான் புரிஞ்சது குழவிக்கல்லைக் காலிலே போட்டுக் கொண்டிருக்கேன் என்பதே. நல்லவேளையாகப் பாதத்தின் நடுவில் விழாமல் ஓரமாய் விழுந்திருக்கு. ஏற்கெனவே இடக்கால் பிரச்னை. இப்போ வலக்காலும் சேர்ந்து கொண்டது, ஒரு அடி எடுத்து வைக்க முடியலை. ஆனால் எப்படியும் வந்து தானே ஆகணும். மெல்ல மெல்ல வந்து ஹாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நர்ஸிடம் விஷயத்தைக் கூறி உடனே வரச் சொன்னேன்,. அவங்களும் அரை மணி நேரத்துக்குள் வந்துட்டாஅங்க. இரண்டு இடுப்பிலேயும் இரண்டு ஊசிகள். கடுமையான வலி, ஒரு ஊசி ஏறும்போதே வலி தாங்காது. வேதனை எல்லாப்  பக்கமிருந்தும். வலி அதிகமா இருந்தால் மாலை அழைக்கச் சொல்லி இருந்தார். அவ்வளவு வலி இல்லை. நேற்றும் வலி இல்லை. ஆனால் இன்று காலையிலிருந்து இடப்பக்கம் பூராவும் வலி. நரம்புகள் கன்னாபின்னாவென இழுத்துக்கொண்டு காலை வெட்டி வெட்டி இழுக்கிறது. கணுவைச் சுற்றிலும் வலி. பார்க்கலாம் என்றிருக்கேன். சுயப் பிரதாபத்தை முடிச்சுப்போமா

காடரிங் காரங்க சாப்பாட்டின் காரம் ஒத்துக்கறதே இல்லை. சுள்ளென்று மிளகாய்த் தூள் மட்டும் வத்தக் குழம்பில் போடுவாங்க போல. நல்லவேளையாக எனக்குக் குழம்பெல்லாம்  நிறைய விட்டுக் கொண்டு சாதம் பிசைந்து சாப்பிடும் வழக்கம் இல்லை. பிழைத்தேன் அரைக்கரண்டி குழம்பில் முடிஞ்சுடுஜ். ஆனால் இப்போதெல்லாம் ஒன்றைக் கவனித்தேன், சமையல் அடிப்படை தெரிஞ்சோ தெரியாமலோ எல்லோருமே பொடி மட்டும் போட்டுத் தான் செய்கின்றனர் அதிலேயே பிட்லை, சாம்பார், ரசவாங்கி எனப் பெ யரும் கொடுக்கிறாங்க. பிட்லையின் வறுத்து அரைக்கும் பழக்கம் இப்போ எந்தக் காடரர் கிட்டேயும் இல்லை. எல்லோருமே தானைப் போட்டுப் புளி ஜலம்,  பருப்பு, (சிலர் வேக வைக்காமல் ஊற வைச்சு அரைச்சும் சேர்க்கிறாங்க)பொடி போன்றவை சேர்த்துக் கொண்டு குக்கரில் ஒரு தட்டில் இதையும் இன்னொரு தட்டில் கூட்டுக்கான காயைப் போட்டு, அரைச்சு விட்ட விழுதைப் பாசிப்பருப்போடு சேர்த்து உப்புச் சேர்த்துக் கொழ கொழவென ஒரே விழுதாக இருக்கும் கூட்டையும் பண்ணிடறாங்க. கூட்டில் என்ன தான் எனத் தேடணும், அதிலும் கூட்டு எனில் வெறும் பாசிப்பருப்பு ;விழுதை மட்டும் போட்டுக் கூட்டுப் பண்ணணும்னு இல்லை, பருப்பே இல்லாமலும் பண்ணலாம். நாலைந்து விதங்களில் கூட்டுப் பண்ணலாம். ஆனால் இவங்க தினம் தினம் இந்தப் பாசிப்பருப்பு விழுதைத் தான் கூட்டு  என்னும் பெயரில் கொடுக்கிறாங்க. என்னிக்கானும் மோர்க்கூட்டுன்னா அன்னிக்கு மோர்க்குழம்புக்கு அரைக்கிறாப்போல் கடலைப்பருப்பு, ஜீரகம் எல்லாம் வைச்சு அரைச்சு விடுகிறாங்க. மோர்க்கூட்டின் தாத்பரியமே போயிடறது,,

இப்போ உள்ள இளைய சமுதாயம் இதான் பண்ணும் முறை போலிருக்குனு இதையே கடைப்பிடிக்கும் அபாயம் இருக்கு. கடைசியில் மூலம் தெரியாமலேயே போகப் போகிறது. தமிழைக் கொலை செய்திருக்கிறாப்போல் சமையலையும் கொலை செய்யறாங்க. இப்போதைய தமிழில் நமக்கு ஒண்ணும் புரியறதே இல்லை. அதிலும் வாய்ஸ் மெசேஜ் கொடுத்தால் வெறும் சத்தம் மட்டுமே வருது.