எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 28, 2025

தாழ்மையான நமஸ்காரங்கள்!

 


உ.வே.சா. ”அரியலூரிலிருந்து இராமசாமி முதலியாரென்பவர் கும்பகோணத்திற்கு முன்சிபாக மாற்றம் பெற்று வந்தார்.

அவரிடம் என் நல்லூழ் என்னைக் கொண்டு போய்விட்டது. அவருடைய நட்பினால் என் வாழ்வில் ஒரு புதுத்துறை தோன்றியது. தமிழிலக்கியத்தின் விரிவை அறிய முடிந்தது” என்று இச்சந்திப்பைத் தமது வாழ்நாளில் ஒரு பெரிய திருப்புமுனை என்று அறிகின்றார். திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம், போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார்

முதலியார் அவர்களின் ”இதனால் என்ன பிரயோசனம்” என்னும் கேள்வி உ.வே.சா.வின் மனதில் பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. சீவக சிந்தாமணி நூலைப்படிக்கத் தொடங்கிய போது “ அது சீவகனைப் பற்றிய காவியம் என்பது மட்டும் எனக்குத் தெரிந்ததேயன்றி இன்ன வகையில் அது சிறப்புடையது என்பவற்றை அறியேன். தமிழ் நூற்பரப்பை ஒருவாறு அறிந்து விட்டதாக ஒரு நினைப்பு, அதற்கு முன் எனக்கு இருந்தது. நான் கண்ட நூற்பரப்பிற்குப் புறம் போயிருந்த சிந்தாமணி எனக்கு முதலில் பணிவை அறிவுறுத்தியது”. என்று பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.

பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

6 comments:

  1. உவெசா அவர்களின் பல நூல்களை வாங்கிப் படித்திருக்கிறேன், சுய சரிதை உட்பட. எப்போது படித்தாலும் ரசனையாக இருக்கும் (அந்தக் காலத்து நாவல்களை இப்போது படித்தால் ரசிக்க முடியாது. ஆனால் கல்கியின் பொ.செ. இப்போதும் ரசனையாக இருப்பதுபோல). அதற்குக் காரணம் அவரது மொழி நடை.

    ReplyDelete
  2. நானும் ஓலைச் சுவடியிலிருந்து படித்து பதிப்பித்தார். சரி.. ஓலைச் சுவடி கிடைக்க அலைந்திருக்கிறார். அவ்ளோதான் என்று முதலில் நினைத்திருந்தேன். பிறகு அதன் கஷ்டம் என்ன என்பதெல்லாம் புரிந்தது. 'பாட பேதம்', பல பக்கங்கள் இல்லாமை, எழுத்துப் பிழைகள் உண்டாக்கும் பொருள் மயக்கம், பழமொழி, நடைமுறைகள் நமக்குப் பரிச்சயம் இல்லாமை என்று பல கஷ்டங்களையும், தற்போதுள்ள கண்ணி மற்றும் பலவித உபகரணங்கள் இல்லாமல் குண்டு பல்பில் உட்கார்ந்துகொண்டு கோர்த்த கஷ்டங்களும் (இதைத்தவிர அவரது வாழ்க்கைப்பாட்டையும் கவனிக்கவேண்டும்) பிரமிப்பூட்டுபவை.

    நல்லவேளை அந்தக் காலத்தில் அவருடைய உழைப்பைப் புரிந்து பல்வேறு வெளிநாட்டவர், ஆங்கிலேயர்கள் பாராட்டினர். இல்லைனா, தமிழகத்தில் அவரது பெருமை பலருக்குத் தெரியவிடாமல் ஆக்கியிருப்பார்கள்

    ReplyDelete
  3. கும்பகோணத்தில் பக்தபுரி அக்ரஹாரம் போயிருந்தேன். அங்குதான் இவர் தன் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்.

    சிந்தாமணியைப் பற்றி என் கருத்தை எழுத நினைக்கிறேன். தவறாயிடுமோ என்பதனால் தவிர்க்கிறேன்.

    ReplyDelete
  4. உ வே சா இல்லையென்றால் பற்பல தமிழ் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்திருக்காது.  வாழ்க அவர் புகழ்.

    ReplyDelete
  5. "ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்" என்ன ஒரு ஆர்வம், முனைப்பு, ஆழ்ந்த பற்று. நிஜமாகவே உ வே சா அவர்கள் மிகப் பெரிய பணிஆற்றியிருக்கிறார். தாழ்மையான நமஸ்காரங்கள்!

    சரியான அழகான மிகவும் பொருத்தமான தலைப்பு, கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தமிழ் தாத்தாவை பற்றிய பல செய்திகளை அறிந்து கொண்டேன். அவரின் தமிழ் தொண்டை போற்றி பணிவோம். அவருக்கு என் தாழ்மையான நமஸ்காரங்களும். அவரை மறவாத தங்களின் நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete