எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 28, 2026

தமிழ்த்தாத்தாவை நினைவு கூர்வோம். ஏப்ரல் 28/2026

சிந்தாமணியை அறிந்தது எவ்வாறு?



திருவாவடுதுறை ஆதினம் தண்டபாணித் தேசிகன் விரும்பியபடி உ.வே.சா., இராமசாமி முதலியாரைச் சென்று பார்த்தார். தமது அறிமுகத்தின் போது முதலியாரவா்கள் தாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் தமிழ் கற்றதைக் கூறியபின்பும், தம்மை அவர் பெரிதும் மதித்தாகத் தெரியவில்லை என்றும் தாம் படித்த நூல்கள் யாவை என்று அவர் வினவ, தாம் ஒரு பெரியபட்டியலிட்டதாகவும் பலவகை அந்தாதிகள், பிள்ளைத்தமிழ் நூல்கள் மற்றும் கோவை யடக்கமாகப் பல நூல் பெயர்கள் கூறியும் ”இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?” என்று முதலியாா் வினவினார் என்றும் அதனால் உ.வே.சா. பெரிய அதிர்ச்சியடைந்ததாகவும் கூறுகிறார். தாம் அனேக தமிழ் நூல்களை ஆழமாகக் கற்றிருந்தும் தம்மைச் சிறிதும் மதிக்காமல் இதனால் என்ன பயன் என்று கேட்டதை உ.வே.சாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் நைடதம், பிரபுலிங்கலீலை, சிவஞானபோதம் போன்ற பெயர்களைக் கூறியும் அவர் திருப்தியடையாமல் சரி அவ்வளவு தானே என்று கூறிவிட்டார். “இவைகளெல்லாம் பிற்கால நூல்கள், இவைகளுக்கு மூலமான நூல்களைக் கற்றுள்ளீர்களா? எடுத்துக்காட்டாகச், சீவக சிந்தாமணி என்று கூறியுளார். நூல் கிடைக்கவில்லை; கிடைத்தால் கண்டிப்பாகப் படிப்பேன் என்று கூறிய பின், முதலியாரவர்கள் சீவக சிந்தாமணி நூல் நகல் ஒன்றை உ.வே.சா.விடம் கொடுத்துக் கற்றுவரச் சொன்னதாகவும் அப்பொழுதுதான் சிந்தாமணி நூலின் அருமை உ.வே.சாவிற்குத் தெரிந்தது என்றும் பதிவு செய்கிறார். உ.வே.சா. சிந்தாமணியைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார். நச்சினார்க்கினியர் உரையுடன் மூலத்தையும் நன்கு படித்து அறிய முற்பட்டார்.


பல இடங்களில் பொருள் விளங்கவில்லை. முதலியாருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு. இருவரும் கலந்துரையாடிப் பொருளை அறிந்து கொள்ள முயற்சி செய்துவந்தனர். சிந்தாமணி சமண நூலாதலால் பல சமண கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலால் அங்கு வசித்து வந்த ஞானம் படைத்த சமணர்களை அணுகி தமது ஐயங்களைத் தெளிவாக்கிக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். உ.வே.சா. சமணர்களுடன் கலந்துரையாடிய போதும்; கர்ண பரம்பரைக் கதைகளைக் கேட்டுத்தெரிந்த போதும் நூலாராய்ச்சியில் புலப்படாத, பல செய்திகள் புரிந்ததாகவும் குறிப்பிடுகிறார். “ஒரு சொல் தெரியாவிட்டாலும் விடமாட்டேன்” என்கிறார் உ.வே.சா. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்கதேவர் வரலாறும் அவ்வாறு தான் அவருக்குத் தெரிந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.


உ.வே.சா. சிந்தாமணி நூலைப் பதிப்பிக்கும் போது இவர் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் தமது நூலில் வெளியிட்டுள்ளார்கள். இவர் பதிப்பித்த நூலின் தனிச்சிறப்பு இவைகள்தான். இது போன்று தீராத விடாமுயற்சியால் நூலை நன்கு விளக்குவதற்கு இவர் எடுத்த முயற்சியின் பயனாக அனேக பயனுள்ள தகவல்களும் கிடைத்தன. நூலைப் பதிப்பிக்கும் போது அத்துணை தகவல்களையும், சேர்த்தே தந்திருப்பது இவருடைய நூல்களைத் தனித்து நிற்க உதவியது. சமகாலத்தில் இதற்கு ஒப்பான முயற்சி இருந்ததாகத் தகவல் இல்லை. நூலைப் படித்தோரும் இந்தத் தகவல்களின் பயனை அறிந்து ஐயரவர்களின் சேவையையும் முயற்சியையும் நன்கு உணர்ந்து பாராட்டினர்.

No comments:

Post a Comment