வீடு ஒரே அமைதியா இருக்கு. ஐந்தாறு நாட்களாக. சத்தமே இல்லை. வைச்ச சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. கம்ப்யூட்டர் அறை வெறிச்சோடிக் கிடக்கு. வாஷ் பேசினில் கை கழுவும் சோப் குறையவே இல்லை. விட்டு வைச்ச மாதிரி அப்படியே இருக்கு. வீட்டில் குப்பையும் இல்லை. ஹால் சோஃபாவில் படுத்திருக்கும் கு.கு.வின் பாப்பாக்கள் எல்லாம் கணினி அறையை விட்டே வெளிவரலை. கு.கு அதில் ஒன்றை எப்போவும் எடுத்துப் போகும். கூடவே வைச்சுக்கும். ஆனால் தோஹாவிலோ என்னமோ அதைப் பத்தி செக்யூரிடி கேட்டாங்களோ இல்லை வேறே காரணமோ தெரியலை. இப்போல்லாம் எடுத்துப் போவதில்லை. ஒருவேளை தான் பிக் கேர்ல் ஆகிக் கொண்டு வருவதாக அது சொல்லுகிறதே அதனாலோ என்னமோ. டைனிங் டேபிளில் பால் தம்பளரை வைச்சிருந்தால் உடனே வந்தெல்லாம் குடிக்காது. குடிச்சுட்டுப் பின்னர் ஓட்டமா ஓடிப் போய் சிங்கில் போட்டுவிட்டு ஓடும்.
கலர் கலராக வார்னிஷ் பேப்பர் அல்லது கலர் பேப்பர்களைக் கத்திரித்து அதுக்குத் தோன்றிய டிசைனில் வெட்டி ஒட்டிக் கொண்டு வீட்டில் காகிதக் குப்பைகளைப் போடும். கத்திரிக்கோல்கள் எல்லாம் அதன் அதன் இடத்தில் இருக்கு இப்போ. வண்ணக்கலவை குழைக்கும் கிண்ணங்கள் காய்ந்து கிடக்கின்றன. அதன் பாட புத்தகம் மட்டும் கையில் எடுத்துப் போயிருக்கு போல. மற்றபடி அதன் நினைவுகள் இந்த வண்ணக்கலவைகளிலும், வெட்டிப் போடும் காகிதக் குப்பைகளிலும் ஆங்காங்கே கிடக்கும் அதன் பேபி பொம்மைகளும் அது இல்லை ஊருக்குப் போயிருக்கு என்னும் உண்மையைச் சத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாது. இப்போத் தான் நாலைந்து நாட்கள் ஆகின்றன. அது அடுத்த மாதம் 10 அல்லது 15 தேதிக்குத் தான் வரும். தினம் ராத்திரி அதுக்காக உணவு வரவழைத்துக் கொண்டிருந்தேன். இப்போ நான் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொள்கிறேன். அமாவாசைக்கு அரைச்ச மாவு கொஞ்சம் மீதம். அதைப் பயன்படுத்துகிறேன்.
காகிதங்களைக் கத்திரித்து வெட்டி ஒட்டி ஒரிகாமி போலப் பற்பல டிசைன்களில் ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்கும். இல்லைனா படங்களை வண்ணம் குழைத்து வரைந்து வெட்டி அட்டையில் ஒட்டி வைச்சுக் கொடுக்கும். சில சமயம் வந்து காட்டிட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டு போயிடும். இப்போ! வெறிச். ஆச்சு, இன்னும் கொஞ்ச நாட்கள் தான். என்றாலும் ஒரு குழந்தை வீட்டில் மனிதர்களிடையே இத்தனை மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை நினைத்தாலே சந்தோஷமா இருக்கு. முன்னெல்லாம் ஓல்ட் மேன், ஓல்ட் லேடினு எங்களைக் கூப்பிடும். இப்போத் தாத்தா இல்லை என்னும் நிதர்சனத்தை ஒப்புக் கொண்டிருக்கு. ஆகவே என்னிடம் அதிகம் வந்து முன்னைப் போல் எதுவும் கேட்பதில்லை. என்றாலும் பாசமும் இருக்கு. அது இரண்டு வருஷங்களுக்கும் முன்னால் ரங்க்ஸ் எனக்கு வெண்டைக்காய் நறுக்கித் தரும்போது செய்த சில்லறை விஷமம். கீழே.
தாத்தா வெண்டைக்காய் நறுக்கும்போது அதன் காம்புகளைப் பொறுக்கித் தாத்தாவுக்கு ஆபரணங்களாக அணிவித்த படம் இது இரண்டும்.


